இணைய இதழ்இணைய இதழ் 79தொடர்கள்

வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5

தொடர் | வாசகசாலை

கரிசலின் கனி

புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை  ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை அங்கங்கே ஊன்றி வட்டமான பட்டிகள் அமைப்பார்கள். ஆடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பட்டிகளின் அளவு இருக்கும். லாந்தர் விளக்குகள், கைத்தடிகள்,முரட்டு சால்வைகளுடன் இருப்பதே பட்டிக்காரர்களின் களை. சில நாட்களுக்கு ஒருமுறை அந்த தற்காலிகப் பட்டிகளை இடம் மாற்றுவார்கள். இப்படி வயல் முழுவதையும் வளப்படுத்தியப்பின் விதைப்புக்காலத் தொடக்கத்தில்  தங்களின் மேய்ச்சல் கோலுடன் ஆடுகளின் பின்னால் கிளம்பிவிடுவார்கள்.

சாயுங்காலமானால் ஆடுகளுக்கு தண்ணீர்க்காட்டி  ஆடுகளை பட்டிகளில் அடைப்பார்கள். குட்டியிட்ட ஆடுகள் பட்டிகளுக்கு வெளியே படுத்திருக்கும். கிணற்று மேட்டில் உள்ள தொட்டியில் குளிப்பார்கள்பட்டியின் முன் ஈன்றுகொண்டிருக்கும் ஆடு நிற்கும். அதை ஒரு கண்ணில் பார்த்தபடி, அதனுடன் பேசிக்கொண்டு, அதை தொட்டுத் தடவி ஆசுவாசப்படுத்தியபடி சமைப்பார்கள். சில ஆடுகள் நான்கு குட்டிகள் ஈனும். பால் காணாது. குழந்தைகளுக்கான பால் ரப்பர்களை வாங்கி கண்ணாடி பாட்டில்களில் கஞ்சியோ, பசும்பாலோ, இரண்டும் கலந்தோ தருவார்கள். ஆட்டுக்குட்டிகள் முன்னங்கால்களை மடக்கி மண்ணில் ஊன்றி  ஒரு நிமிடத்தில் பாட்டில் பாலை குடித்துவிடும். ஒரு பட்டிக்கு குறைந்தது  நான்கு ஆட்கள் இருப்பார்கள்.

மூன்றுகல் அடுப்பில் ஈயப்பாத்திரத்தை வைத்து பருப்பு அரிசி இரண்டையும் சேர்த்து சமைப்பார்கள். சமைத்ததும் ஈயத்தட்டில் சோற்றை போட்டுக்கொண்டு அடுப்பில் இன்னொரு உலை ஏற்றிவிட்டு சாப்பிட அமர்வார்கள் . அடுத்த பொழுதின் காலை மதியத்திற்கான ஆகாரம் அது. இடுப்பு வேட்டியில்  ஊருக்குள் இருந்து வாங்கி வந்த ஊறுகாயோ,வத்தலோ இருக்கும். இல்லை என்றால் சிறு வெங்காயம். வயல் ஓரத்து வீட்டில் இருந்து அம்மாச்சி எத்தனை சத்தம் போட்டாலும் கதைநேரம் வரை பட்டிக்காரர்களை விட்டு நகரமாட்டேன். சாயுங்காலத்தில் இருந்து இரவு தூக்கம் வரும் வரை தாத்தாவின் வயலில் உள்ள பட்டியில் இருப்பேன். அவர்கள்  அகப்பையில் எடுக்கும்  முதல் கவள சோற்றை எனக்கான தட்டில் வைப்பார்கள். அவர்கள் கதைசொல்லி முடித்ததும் எனக்கும் வாய்ப்பு தருவார்கள். அடுத்த வயலில் பட்டிப்போட்டிருக்கும் ஆட்களும் வருவார்கள். கதை சொல்வதும் கேட்பது அவர்களுக்கு ஒரு ஆசுவாசம். நான் Snow white,The last fire போன்ற பள்ளிக்கூட கதைகளை அவர்களுக்கு சொல்வேன். ஒரு நாள் The last fire கதை சொன்ன போது தாடிமாமா கண்கலங்கி, “எந்த அப்பனும் தான் செத்தாலும் பிள்ள பிழைக்கனுன்னு தானே நெனப்பான்,”என்றார். அந்தக்கதையில் வரும் அப்பாவிற்கும் தாடி இருக்கும். காட்டுத்தீயில் அது செந்நிறமாக மாறும். பட்டிக்காரர்களின்  உருவமும், தலைப்பா கட்டுக்களும், தோள்துண்டுகளும், மீசையும், சிரிப்பும் கைக்கம்புகளும், அவர்கள் சமைத்த சாயுங்காலங்களும், நிலவொளி கதைகளும் இன்னும் மனதில் இருக்கிறது. நான் சிறு பெண்ணாக இருந்ததால் ஆடு குட்டிப்போடும் போது வீட்டுக்கு துரத்திவிடுவார்கள். காலையில் விழித்ததும் குட்டிகளைப் பார்க்க ஓடுவேன். அவ்வளவு மகிழ்ச்சியான மேமாதம் முடிந்து வீட்டிற்கு கிளம்பி வரும் போது பட்டிக்கார மாமாக்களில் ஒருவர் சிரித்துக்கொண்டே  ‘ஆட்டுக்குட்டி ஒன்னு தாரேன்..வளத்துக்கிறியாஎன்றார்.

அவர்கள் அறுவடை முடிந்த நிலங்களை நோக்கி நடப்பவர்கள். அவர்களுக்கு மனிதர்களும், நிலமும், பிரிவும், அன்பும் பழகியவை.

கி.ராவின் கிடை குறுநாவலில் வரும் கீதாரி என்பவர் ஒரே ஊரில் நிலைத்து ஊர் ஆடுகளை கவனித்து கொள்பவர். ஒரு நிறுவனம் போலவே கிடைக்கான விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் மேய்ச்சலுக்கும், விவசாயத்திற்குமான  ஒரு ஒப்பந்தம். இரு தொழில்களையும் ஒழுங்குபடுத்தி ஒரே நிலத்தில் வாழும் ஒரு ஏற்பாடு.

இதே போன்ற பல ஒப்பந்தங்களால் ஆனது நமது வாழ்க்கை. அதை ஒரு வகையான லௌகீக அறம் என்று சொல்லலாம். அந்த அறம் தப்பிப்போகும் சில கதைகளை கீ.ரா எழுதியிருக்கிறார்.

 ஆண் பெண் உறவில் இருந்து [கண்ணீர்,வலி வலி] உடன்பிறந்தார்கள்[இவர்களைப் பிரித்தது? ,உண்மை] பெற்றோர்  பிள்ளைகள்[காய்ச்சமரம்,முதுமக்களுக்கு], ,ஊர்மக்கள் மற்றும் ஊர் பொது வேலைகளை செய்பவர்கள்[ஊர்க்காலி] போன்று உறவுகளுக்குள் மற்றும் சமூகத்திற்குள் அந்த ஒப்பந்தம் மாறிப்போகும் கதைகள் இவை.

கண்ணீர் கதையில் கருத்தைய நாயக்கர் காரணமே இல்லாது தன் மனைவி செவத்தம்மாவை அடித்து கொடுமை செய்கிறார். கணவன் மனைவி தகராறை  தட்டிக் கேட்க இயலாமல் ஊரே பதைத்து நிற்கிறது. ஒரு கோடையில் ஓடை மணலில் முழங்கால் அளவு குழிபறித்து  செவத்தம்மாவின் கால்களை புதைத்து   நிற்க வைக்கிறார். அவள் வேதனை தாங்காது வானத்தை நோக்கி கையுயர்த்தி அழுகிறாள். அதற்கு பின் அந்த வீட்டில் தலைமுறை தலைமுறையாக கால்குறையுடன்  பிள்ளைகள் பிறக்கிறார்கள். ‘அன்பே மனிதமாய்கதையில் மனம் பொருந்தாத கொத்துநாய்க்கர் தம்பதிகள் பேசுவதே  இல்லை. கோபம் என்றால் அடிதடி தான். அப்படியும் இந்த இரு  தம்பதிகளும் இணைந்தே வாழ்கிறார்கள். அருவியே இல்லாத குற்றாலம் உண்டு. குறும்பலா ஈஸ்வரரின் கோயிலின் வடமேற்கு மூலையில் குமந்தான் ஊற்று வற்றுவதில்லை. கடினமான மலைப்பாறைகளில் இடையில் இருந்து அன்பு கசிந்து வருவதைப் போல் இவர்களின் அன்பின் ஊற்று என்று கி.ரா அவர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்

பேய் விரட்டுகிறேன் என்ற பெயரில் ஊர் பெண்களை தன் உடல் தேவைக்காகப் பயன்படுத்தும் கோடாங்கி ஒருவன், பேய்பிடித்த ஒரு பெண்ணால் தலைசிதைக்கப்பட்டு கோர மரணமடைகிறான். கிடை குறுநாவலிலும் எல்லப்பனுடனான தன் முதல் ப்ரியம் தவறிப்போகும் போது செவனி மனம்  தடுமாறிப் போகிறாள். அவன் பிரிவிற்கு பின்  ஆடு மேய்க்கும் அத்தாந்திர காட்டில் அனைத்தும் கானலாகி அத்தனை பெரிய நிலமும் அவளுக்கு  கானல் குளமாக தெரிகிறது. ஒரு ப்ரியத்தின் இழப்பு அந்த பிஞ்சு மனதை விக்கித்து போக வைக்கிறது. ஆடுகளின் பின்னால் ஓடியாடி திரிந்த பிள்ளை செயலற்று வன்னிமரத்தடியில் நினைவழிந்து விழுகிறாள். அன்பின் பிரிவும், ஏமாற்றமும், அதன் உச்சநிலையில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பதின்வயதில், தன் மனதையும் உடலையும் தொலைத்தவளிடம் பேயாக குடியேறுவது ஏமாற்றமும், பிரிவின் வலியும் தான். கோடங்கியின் உடுக்கை சத்தத்தில் அந்த பேய் ஊர் அறியாத தன் கதையை சொல்லத் தொடங்குகிறது. கிடை என்ற அமைப்பிற்குரிய வாழ்க்கை முறை முழுவதும் நுணுக்கமாக இந்தக்கதையில் உள்ளது.

நிம்மாண்டு நாயக்கர் [காய்ச்சமரம்] தம்பதிகள் தாங்கள் ஈட்டிய செல்வம், நிலம் அனைத்தையும் மிச்சமில்லாமல் பிள்ளைகளுக்கு பாகம் வைக்கிறார்கள். பிள்ளைகள் அவர்களை  கவனிக்காததால் அவமானம் தாங்காமல் மனம் நொந்து ஊரைவிட்டு வெளியேறி கோயில் வாசலில் பிச்சைக் காரர்களாகிறார்கள். பொய்யாளி நாயக்கர் தம்பதிகள் பிள்ளைகளுக்கு கொடுப்பதை கொடுத்துவிட்டு தமக்கும் ஒரு பாகம் வைக்கிறார்கள். பிள்ளைகள் அவர்களைத் தேடி வருகிறார்கள். இவர்களிடம் விலக்கம் இருக்கிறது. கசப்பில்லை. நிம்மாண்டு நாயக்கர் தம்பதிகளிடம் அந்த லௌகீக விவேகம் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை கசந்து போகிறது. எங்கே இப்படியாகிறது என்பது விந்தை தான். நிம்மாண்டு நாயக்கர் தம்பதிகள் தங்களை  மிச்சமின்றி வைக்கக்கூடிய இடமாக உறவுகள் இல்லை. தனக்கும் ஒரு பாகம் இருப்பதே இங்கு லௌகீக அறமாக இருக்கிறது.

எங்கிருந்தோ வரும் மாசாணம் [நிலை நிறுத்தல்] மழை வர வேண்டி ஊர்க்கோவிலில் வயனம் காக்கிறான். தன்னை அந்த சமூகமக்களுடன் பிணைத்துக் கொள்கிறான்தன்னை அந்த மண்ணில் நிலைநிறுத்திக் கொள்கிறான். ஊர் ஆடு மாடுகளை மேய்க்கும் ஊர்காலியான கொத்தாளிக்கு ஊரைவிட காடும் கரடுகளுமே மனதிற்கு ஒத்துப்போகிறது. அத்தனை சொத்துடைய நிம்மாண்டு நாயக்கர் ஊரைவிட்டு வெளியேறுகிறார். செவனியின் வெடித்த பஞ்சு போன்று காற்றில் பறக்கும் மனம் ஏமாற்றத்தால்  கண்ணீரில் நனைந்து மண்ணில் விழுகிறது. ஜானுவுக்கு [இல்லாள்] சோமய்யா மீதான காதல் இருபத்தைந்து ஆண்டுகளாக நிறம் மாறாமல் இருக்கிறது. ரோசம்மா [அரும்பு] என்ன ஆனாள் என்று தெரியாமல் நாற்பது ஆண்டுகளாக அவளை மனதில் சுமந்து திரிகிறார் ரங்கசாமி

இந்தக்கதைகளில் உள்ள புன்செய் நில வாழ்க்கைக்குள் ஒரு அழகுண்டு. காவிரிக்கரை வாழ்க்கை போல. நன்செய் நிலத்தில் பசுமையும், நீர்மையும், பசுக்களும் ,ஆறும் சங்கீதமும், கோயில்களும், ஒரு வித சொகுசும் அழகும் உடையவை. இந்தக்கதைகளில் கரிசலும், வெக்கையும், அவ்வப்போது பெய்யும் மழையும், கிடைஆடுகளும், காளைகளும்,காலையில் எழும்போதே உக்கிரத்துடன் எழும் சூரியனும் அழகு. கி.ரா எழுதி எழுதி சுவையாக்கிய மண்ணும் மக்களும் வாசிப்பவர் மனங்களில்  நிறைகிறார்கள்.

பருத்தி கனிகளுக்குரிய எடை கொண்டதில்லை. அது விதைகளுடன் காற்றில் பறக்கும் கனி. விழும் நிலத்தில் முளைத்து வளர்வது. அதபை் போலவே இந்த கரிசலில் வந்து விழுந்து முளைத்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப்பாடுகளை கொண்ட கதைகள் இவை. எந்த நிலமும் விழும் விதைக்கானது. அதில் எந்த விதை விழுந்து முளைக்க முடிகிறதோ அதை இந்த நிலம் ஏந்திக்கொள்கிறது

எனது ஊரையும் என் மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்து அழுததும் இந்த மண்ணின் மடியில் தான். இந்தப்புழுதியை நான் தலையில் வாரி வாரிப் போட்டுக்கொண்டும்,என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்த கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண்என்று கி.ரா சொல்வார்.

 கதைசொல்லிகள் தங்கள் கதைகளுக்காக சாகசங்களை தேடுவதில்லை. அவர்கள் வாழ்க்கையின் நுண்ணிய தளங்களுக்குள் மண்ணில் நுழையும் வேரைப்போல பயணிக்கிறார்கள். மனித ஆழங்களில் உள்ள வெப்பத்தை, நீரை தொட்டுணர்கிறார்கள். கி.ரா கரிசல் மனங்களின் ஆழத்தை தொட்டவர். வெங்கரிசலை தங்கள் உழைப்பால் மலர்த்திய மக்களின் வாழ்க்கை இந்தக்கதைகளில் உள்ளது. மண்ணின் ருசி உள்ள கதைகள் இயல்பாகவே வாழ்வின் ருசியையும் கொண்டவை. கி.ராவின் கதைகள் நமக்கு கையளிப்பது வாழ்வின் சுவையை. அதைத் தேடித்தானே இலக்கியம் என்ற செயல்பாடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயணிக்கிறது. அந்தப்பயணத்தில் ஒரு நூற்றாண்டின் ஒரு நிலப்பகுதியின் மக்களின் கதைகள் இவை.

(தொடரும்…)

kamaladevivanitha@gmail.com – 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close