சிறுகதைகள்
Trending

வேங்கை கடை இட்லி – ரமேஷ் கண்ணன்

சிறுகதை | வாசகசாலை

சனிக் கிழமைகளை ஏன் அவ்வளவு பிடிக்கிறது? அது ஞாயிற்றுக் கிழமைகளின் முதல் நாளாக இருப்பதால் மட்டுமே எனச் சொல்லி விடலாம். ஒரு வடிவியல் கணிதப் பிரதியின் உதவிப்படம் போல. கொடுக்கப்பட்டுள்ள புதிர்களிலிருந்து ஒரு பாதையை முன் தயாரிப்பது போல. இன்னும் பார்த்தேயிராத ஒரு காதலிக்குக் காதல் கடிதம் எழுதுவதற்குச் சனிக்கிழமை ஒரு தோதானன நாள். பிடித்தப் பாடல்களைப் பதிந்து வைத்த கேசட்டுகளால் தீர்க்கிற நாள்.

பால்யத்தில் எனக்குப் பிடித்த சனிக்கிழமைகளுக்கு வேறொரு காரணமுண்டு. அன்று எங்களின் வீட்டில் காலையுணவு சமைக்கப்படாது. அம்மா அழைத்துச் சொல்லும் வரை அந்தக் காத்திருப்பு ஒரு வரம்.

ஒரு சொருகு தூக்கு இரண்டு டிபன் பாக்ஸ்கள் இத்யாதிகளோடு ஒரு வயர் கூடை தயாராக இருக்கும். ஒருநடை தூரத்திலிருக்கும் வேங்கை கடைக்குத்தான் புறப்பாடு.

கடையென்றால் கடை அல்ல. வீட்டின் முன்புறம் காம்பவுண்டு. மேற்கு பார்த்த பிளாட் தெருமுனையிலிருந்து இரண்டாவது. வீட்டின் தலைவாசல் குறுகிய சந்தில் எதிர்ப்படும்.

வீட்டின் பக்கவாட்டுச் சுவரிலிருந்து காம்பவுண்டுக்கு இடைப்பட்டப் பகுதியில் ஆஸ்ப்பெட்டாஸ் சீட்டுகளால் கூரை மேவி ஒரு கடை தோரணை வந்து விட்டது. இடக்கைப் பகுதியிலும் முன் பகுதியிலும் கடப்பாக் கற்களைப் பதித்திருந்தார். அதனையொட்டி சின்ன மர மேசை. அவரது வீட்டின் வடபுறம் காலி இடம். அதில் பந்தல் போட்டு இரண்டு மர மேசை மூணு மூணு இருக்கைகள்.

சற்றுத் தள்ளி பார்சல் வாங்க வருபவர்கள் அமர்வதற்கான கல் திண்டு. ஒரு மர ஸ்டூலில் தினகரன் நாளிதழ்.

வேங்கை, பெயருக்கேற்றவாறு மிடுக்கானவரெனச் சொல்ல முடியாது. ஆனால், பேச்சில் படு கறார். எப்போதும் பெரிய கட்டம் போட்ட கைலி புதுசுமில்லாமல் பழசும் இல்லாமல் சற்றுக் கலர் மங்கியதையே உடுத்தியிருப்பார். சிவந்த நிறம். மேல் சட்டை அபூர்வம். முகத்தில் எப்போதோ வந்த அம்மையின் தழும்புகள். குட்டியான முகம்.

குரல் கத்திரி போலக் கிறீச்சென இருக்கும். பிரதான கட்சியொன்றின் ஆதரவாளர். கட்சியின் முக்கியத்துவம் பெற்ற தலைவர் ஒருவர் கட்சியை விட்டு வெளியேறியபோது இவரும் வெளியேறினார். ஆனால். தாய்க்கட்சியைப் பெரிதாக விமர்சனம் செய்ய மாட்டார். கடையில் பெரிதாக அரசியல் பேச மாட்டாரென்றாலும் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களோடு பேசுகையில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்  வேங்கைக்கு.

வேங்கை கடைக்கு மூன்று வீடுகள் தள்ளி இருந்த ஒரு தொழிற்சங்கக் கட்டிடத்திற்கு வரும் தோழர்களே பிரதான வாடிக்கையாளர்கள். நாள்தோறும் அலுவலகம் வந்து செல்பவர்களுண்டு. ஆனால் மருந்துப்பொருள் விற்பனை பிரதிநிதிகளின் சங்கத்தினர் ஒருவர் விடுபடாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் கூடுவார்கள். அவர்களின் துண்டு ஆங்கிலமும் டிரெஸ் கோடும் எப்போதும் எனக்குப் பிடித்தனமானவை. சுவரொட்டிகள், அறிவிப்பு பலகை, சங்கக் கொடி எனப் பார்ப்பதற்கே ஒரு கேரள நகரத்தில் நுழைந்து விட்டதைப் போலக் காட்சி.

வேங்கை கடை இட்லியை எப்படி உங்களுக்கு விளக்குவது. அவை ஒவ்வொன்றிற்கும் எப்போதும் தும்பைப்பூ நிறம். இலவம்பஞ்சு போன்று மென்மையானவை. ஒவ்வொரு விள்ளலுக்கும் பின்பு மீண்டும் மீண்டுமென உள்ளிழுப்பவை.

வேங்கையின் ஸ்பெஷல் தேங்காய் சட்னி, மிளகாய் சட்டினி, மணக்கும் சாம்பார் மூன்றும் ஒன்றுக்கொன்று சுவையில் போட்டி போடும்.

இட்லியை ஒரு துண்டு எடுத்து ஒவ்வொன்றாய்த் தொட்டுத் தொட்டு வலம் வந்து சற்றே நாவினில் சுவைத்தால் அந்தக் காம்பினேஷன் கிட்டத்தட்ட இளையராஜா, வைரமுத்து, பாலச்சந்தர் காம்பினேஷன்தான். அதோடு துணை வரும் ஆமை வடையும், உளுந்த வடையும் பாலு மகேந்திராவின் கேமரா கை கோர்த்தது போல.

ஏரியால அடிச்சிக்கவே முடியாத இந்தச் சுவையால் வேங்கை எப்போதும் ஒரு கெத்தோடே வலம் வருவது போலத் தோன்றும். இருந்தால்தானென்ன!.

வேங்கை கடையில் இட்லி வாங்க நீங்கள் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். ஓர் அசைவில் வேங்கையின் வெறுப்பைச் சம்பாதித்து  விட்டீர்களென்றால் இட்லி இல்லை எனச் சொல்லித் திருப்பி விடுவார்.

பொறுமை அவசியம். பார்சல் வாங்க வருபவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள். சாப்பிட வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

வேங்கை கடையில் போடப்படும் வாழை இலையே அசத்தி விடும். முதல் நாள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்குவார். டிபன் என்று சிறியதாக நறுக்காமல் இலை சற்றே தாராளமாக இருக்கும்.

சில நேரங்களில் பார்சலுக்குக் காத்திருப்பவர் இலையைப் போடுண்ணே என்று உட்கார்ந்து விடுவர். வேங்கையின் மனைவி உள்ளேயிருந்து இட்லிகளையும் வடைகளையும் அனுப்பியபடியே இருப்பார்.

கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்து நிற்கும் பெண்கள் ஒரு கிண்ணத்தில் ரெண்டு எண்ணம் வாங்கிக் கொண்டு அதிலேயே சாம்பாரையும் ஊற்றச் சொல்லி வாங்கிக் செல்வார்கள். இப்படி வாங்க வரும் பெண்கள் ஏன் மெலிந்து ஒடிசலாக நோவு கொண்டவர்கள் போலவே இருக்கிறார்கள். அவர்களது தலைமுடி உண்மையில் வாரப்படவில்லை. நேற்றிரவு நடந்த சண்டையின் கோரங்களை அவர்களது கண்களில் காணமுடிகிறது. இவர்களையெல்லாம் வேங்கை காக்க வைக்க மாட்டார்.

டோக்கன் என்ன டோக்கன்  வேங்கை அண்ணனின் கண்கள் கடைக்கு வரும் ஆட்களை அளந்தபடியே இருக்கும். அவர் மனசுக்குள் ஒரு வரிசையெண்ணை மளமளவென உருவாக்கி வைத்து விடுவார்.

உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் முடிக்க முடிக்கக் காத்திருப்பவர்களை வேங்கை அழைக்கும் அழகே அழகு. ஒரு காதலியின் சமிக்ஞைக்கு நீங்கள் இங்கே பழகி விடலாம். இடம் கிடைத்தவன் எஞ்சியுள்ளவர்களைப் பார்க்குற பரிகாசப் பார்வையிருக்கே…

ஒரு காலை சிற்றுண்டி கடையில் இத்தனை பாவனைகளா என்று இப்போது நினைத்தாலும் எண்ணத் தோன்றுகிறது.

வேங்கையின் மகன் அவ்வப்போது கடைக்குள் தலைகாட்டுவான். ஆனால், வேங்கைக்கு அதில் அவ்வளவு பிடித்தமில்லை. ஒரு சக்கரம் போல, தான் சுழன்றபடியே இருப்பதை ரசிக்கத் தொடங்கி விட்டார்.

கணக்கு பார்ப்பது, மீதி சில்லறை கொடுப்பது இலைகளைக் கவனிப்பது, பார்சல் கட்டுவது எனச் சொல்லி வைத்தாற் போல நொடிப் பொழுது தாமதியாது இயங்கிக் கொண்டே இருப்பார்.

சாப்பிட்டு முடித்தவர்கள் இலையைக் கொண்டு போய் டிரம்மில் போட்டு விட்டு அங்குள்ள பிளாஸ்டிக் வாளியிலுள்ள நீரை மொண்டு கழுவ வேண்டும்.

ஒரு மனிதன் அடைகிற ஆசுவாசத்தை அங்கே உணரலாம். ஒரு நாளை இப்படி  துவங்கினால் போதுமென்றே ரெகுலர் கஸ்டமர்கள் நினைப்பார்கள்.

பார்சல் வாங்க வருபவர்களின் பொறுமையைப் பெரும்பாலும் சோதிப்பார் வேங்கை. தனது இட்லியை விரும்பித் தேடி வந்துள்ளவர்களை இனம் கண்டு கொள்வார். சில துடுக்கானவர்கள் காத்திருந்து வெறுத்துப் போய் ஊர்ல இல்லாத இட்லியெனச் சொல்லி வேங்கையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வர்.

வணிகத்தில் தனது உற்பத்திப் பொருளின் தரத்தின்மீது உற்பத்தியாளன் கொள்கிற பெருமிதம் அது. அந்த அழகை நான் பார்த்துப் பார்த்து வியந்து ரசிப்பேன்.

காலம் மாறிக் கொண்டே இருந்தது.

வயர் கூடையும் தூக்குப் போணியும் காணாமல் போயிருந்த காலத்தில் வேங்கை கறார் தன்மையோடு பார்சல் வாங்க வருபவர்கள் கையை வீசிக் கொண்டு வருவதைப் பெரும் உதாசீனமாகக் கருதினார்.

பெரும்பாலும் அவர்களுக்குப் பார்சல் இல்லையென்று சொல்லி அனுப்பி விடுவார். ரொம்ப பரிச்சயமானவர்கள் என்றால் போப்பா வீட்டிற்குப் போய் பாத்திரம் எடுத்துட்டு வான்னு சொல்லுவார். அப்போதும் நான் சொருகு தூக்கோடு சென்று விடுவேன்.

அந்த எவர்சில்வர்  தூக்குக்கு வேங்கைக் கடை தூக்கு என்றே பெயர் வைத்துக் கொண்டோம். ஒரு வேளை தனது உற்பத்தி பொருளின் மீதான பெருமிதமும் மமதையும் பிறருக்கு இருந்து திருப்பியிருந்தால் இவ்வுலகில் இத்தனை பிளாஸ்டிக் பைகள் மட்காமல் சூழலைக் கெடுத்திருக்காதோ என்னவோ.

தான் சேர்ந்த கட்சி பொய்த்ததோடு அரசியல் பேசுவதை வேங்கை குறைத்துக் கொண்டார். ஆனாலும் குறிப்பிட்ட நாளிதழ் கடைக்கு வந்து கொண்டே இருந்தது.

ஒரு சமயம் வேங்கை கடை தொடர்ந்து ரெண்டு மூணு நாள்கள் திறக்காமல் இருந்தது. கடை திறக்கவில்லையென்றால் பெரிய தட்டியைக் கொண்டு கடை முகப்பை அடைத்திருப்பார். அதுதான் கடைக்குக் கதவு போல அடையாளம்.

பின்னர் தான் தெரிந்தது. அவருக்கு உடல் நோவு கண்டதென. ஒரு நாள் அந்த வழியாகப் போகையில் வேங்கை மகன் தென்பட என்ன ஏதென்று விசாரிக்கையில் ஹார்ட் அட்டாக்காம். மெடிக்கல் ரிப்பரசன்டேடிவ் தோழர்கள் தான் உதவினார்களாம். மீனாட்சி மிஷனில் ஆபரேஷன் நல்லபடியாக முடித்து வந்து விட்டாரெனச் சொன்னான்.

மூணு மாசம் கழிச்சு ஒரு நாள் வேங்கை, கடையைத் திறந்தார். அதற்குப் பின்பு அளவான வாடிக்கையாளர்கள். மருத்துவ பிரதிநிதிகள் சங்கக் கட்டிடம் வேறிடத்திற்குச் சென்று விட்டது. தோழர் ரவி மட்டும் ரெகுலாராக வந்தார். மற்றவர்கள் சனிக்கிழமை காலை மட்டும் வந்தார்கள்.

நானும் கூட சனிக்கிழமைகளில் தான் செல்வதுண்டு. அவர் உடல்நலம் பெற்றுத் திரும்பிய பின்பொரு நாள் அவரது கடைக்குச் செல்வதற்கான சூழலை நானே உருவாக்கிக் கொண்டு சென்றேன்.

நாற்காலியில் அமர்ந்தேன். நாளிதழ் மேசையில் இருந்தது. எப்போதும் போலப் பார்த்துப் பார்த்து வாங்கிய வாழை இலை. டம்ளரிலிருந்த தண்ணீரைத் தெளித்து நீவி விட்டு நாற்காலியில் முதுகைச் சாய்த்தபடி நிமிர்ந்தேன். சுவரில் பெரிய அளவிலான பிடரி மயிரோடு சிலிர்த்துக் கொண்டிருந்த சிங்கம். நன்கு கண்ணாடியில் ஃபிரேம் செய்யப்பட்டு இருந்தது. அதனுச்சியில் “கெட் வெல் ஃசூன்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close