கவிதைகள்

வரவர ராவ் கவிதைகள் : தமிழில் – சௌம்யா ராமன்

கவிதைகள் | வாசகசாலை

தெலுங்கு : வரவர ராவ் 
தமிழில் : சௌம்யா ராமன்

பிரதிபலிப்பு

நான் வெடிமருந்து வாங்கிக் கொடுக்கவில்லை
வாங்கிக் கொடுக்கும் யோசனையும் எனக்கில்லை
எறும்ப்புற்றை உதைத்தழித்தது
உங்கள் வலுத்த கால்கள்தான்
மிதித்த புற்றினில் விதைக்கப்பட்ட
வேட்கைக்கும் நீங்களே காரணம்

உங்கள் தடித்த லத்தி தாக்கிச்
சரிந்தது தேன்கூடு
இப்போது ரௌத்திர தேனீக்களின் ரீங்காரத்தில்
படபடத்துச் சிவந்து கிடக்கிறது உங்கள் முகம்

மக்கள் நெஞ்சில் எழுந்த வெற்றி முழக்கம்
ஓரிடத்தில் எழுவதாய்
ஒருவனால் எழுவதாய்
உங்கள் துப்பாக்கிகளைத் தயார்செய்தீர்கள்
அதனாலேயே
எங்கெங்கிருந்தும் புரட்சி முழக்கம் எழும்பும் இனி!

*****

பெயர் சூட்டு விழா

1

ஊரும் பேரும் அற்றவர்களை
வீரனாக்கும் புரட்சிதனை
பேரரசுகளால் ஏற்கவியலுமா?
முடியாது – அவர்களின் மாவீரர்களுக்கு சாதி பரம்பரை இருக்கவேண்டுமல்லவா…

வனமக்கள் ஒன்றுகூடி
கல்லும் மண்ணும் சேர்த்துக் கட்டுவதைக்
கோட்டை என ஏற்பார்களா அவர்கள்?
மாட்டார்கள் – வரலாற்றுக்கு அடித்தளம் கோருபவர்கள் அவர்கள்…

மலையுச்சியில் கோணி அணிந்து
தோட்டாக்கள் சுமந்து, சாய்ந்த கோண்டு பழங்குடியினருக்கு
ஒரு அகல் விளக்கேனும் ஏற்றப்படுமா?
மாட்டாது – வலியவர்களுக்கு மட்டுமே அவர்கள் விளக்குகள் ஒளிரும்.

2.

என் மனதில் சுழன்றுகொண்டிருந்த
அந்தக் காட்டின் மலர் வாடைக் காற்று
இப்போது மலை முகடுகளில் வீசிக்கொண்டிருக்கிறது
காட்டை சுற்றுலாத் தலமாக மாற்ற உரிமம் பெற்ற நிறுவனம்
காட்டின் மண்ணை ‘தூசி’ எனத் துடைத்தெறிந்து கொண்டிருக்கிறது
இதைப் பார்க்க விரும்பாத கோதாவரி
விழுந்து, படுக்கையின் மறுபக்கம் செல்கிறது…

*****

வார்த்தைகள்

என் மூளையின் இடுக்குகளில்
சிக்கிக்கிடக்கும் சொற்களைத்
திரட்டி எடுக்க வேண்டும்
காலுடைத்து முடமாக்கப்பட்ட
என் வார்த்தைகளுக்குப் புதுச்சிறகு கொடுத்து
வானில் பறக்கச் செய்ய வேண்டும்

பெரும் வறட்சிக்குப் பின்னான முதல் மழை போல்
என் செவிகளுக்கே அந்நியமான
என் வார்த்தைகளை மீட்டுருவாக்க வேண்டும்

தான் தொலைத்த மழைமேகங்களைத்
தேடிப்பிடிக்கும் வானம் போல்
இந்த கூக்கூச்சல் பூமியில்
என் வார்த்தைகள் வேர்விட வேண்டும்

மீண்டும் ஒருமுறை
பள்ளிகளிலிருந்தும் மன்றங்களிலிருந்தும்
மாணவர்களிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும்
நான் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்
வரலாற்றின் வாய்க்கால்களிலிருந்து
வார்த்தைகள் கோர்த்தெடுக்க வேண்டும்

பெருங்கூச்சல் இல்லாமல்
இத்துணை நாள் அடைபட்ட என் மௌனம்
வெளிவருவது சாத்தியமில்லை

பெரும் அதிர்வில்லாமல்
கண்களில் அடைபட்ட காட்சிகள்
வெளிவரச் சாத்தியமில்லை

மீண்டும் ஒரு முறை
நான் மக்களிடம் பேசவும்
அவர்களைக் கவனிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்
வார்த்தை தவறாமலிருக்கக் கற்க வேண்டும்
தன் வார்த்தைகளுக்குப் புறம்பானவனுக்கு வரலாறில்லை!

என் வார்த்தைகளின் வீச்சை எதுவும் குறைக்கமுடியாது
கனன்றுகொண்டிருக்கும் காலச் சக்கரத்தையும்
தலையில் அடிக்கும் சுத்தியல் அடிகளையும்
கடந்து
நான் என் வெளிப்பாடுகளைத் தொடர்வேன்.

—-

ஆசிரியர் குறிப்பு :

தெலுங்குக் கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், கடந்த 22 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 81 வயதான இவர் தன் வாழ்நாள் முழுதும் பழங்குடி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கவிதைகளை எழுதியவ பேராசிரியரும் எழுத்தாளருமான இவர் மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது,

“என் இதயம் துடிப்பதை நிறுத்திவிடவில்லை
என் கைகள் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை
விடியலை நோக்கிப் பயணிக்கும் என்னை உங்களால் தடுக்கவியலாது!’

எனப் புரட்சிக் கவிதைகள் எழுதியவர்.
கவிஞர் வரவர ராவை விடுவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close