சிறார் இலக்கியம்
Trending

வானவில் தீவு:13- சௌமியா தொடர்

இதுவரை…

தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக அந்த ஊர்ச் சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலின் ஓரிடத்தில் இருந்த பெரிய கதவைத் திறக்கும் முயற்சியில் கதவு கேட்ட விடுகதைக்குச் சரியாகப் பதில் சொன்னதால் கதவு திறந்தது.

இனி…

கதவு கேட்ட விடுகதைகளுக்கு சரியான பதில் சொன்னதும் கதவு திறந்து, எல்லோரும் உள்ளே சென்றனர். அங்கே அவர்களுக்கு பல அதிசயங்கள் காத்திருந்தன. அதுவரை கண்டிராத நிறைய நிறைய வண்ணங்கள், விதவிதமான மனிதர்கள், விலங்குகள், மீன்கள் என பலரும் உள்ளே இருந்தனர். இவர்களை விட மிக உயரமான மனிதர்களும் இருந்தனர்.

சிலைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. அது மட்டுமில்லாமல் அங்கு பல மனித சிலைகளும், அதன் ஒவ்வொன்றிலும் நாள், தேதியும் செதுக்கப்பட்டிருந்தன.

மகேஷ்: டேய் ராம், அங்க பாருடா, ஒவ்வொரு சிலைக்கு கீழயும் தேதி போட்ருக்காங்க. ஒரு வேலை அவங்க இங்க வந்து சிலையா மாறுன தேதியா இருக்குமோ? இப்பவே எனக்குப் பயமா இருக்குடா.

ராம்: ஏன்டா பயப்படுற? என்னதான் இருக்குதுனு உள்ள போய் பார்ப்போம்.

மகேஷ்: ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டா.

உள்ளே செல்லச் செல்ல, அந்த இடம் விரிந்துகொண்டே சென்றது. அங்கு ஒரு பெரிய ராஜ்ஜியமே அமைந்து இருந்தது.

கடலுக்குள் ஒரு பெரிய பாறை இருந்தது. அந்தப் பாறை மேல் ஒரு தோட்டம் அமைத்திருந்தது. பார்ப்பதற்கு கல் மேல் மரம் முளைத்தது போல் வித்தியாசமாகத் தோன்றியது.

பாலா: ஹேய் அங்க பாருங்கடா! பாறை மேல தோட்டம். செமயா இருக்குதுல்ல.

ராமும் மகேஷும் வாயைத் திறந்து ‘ஆ’வெனப் பார்த்தனர். மீன்கள் அனைவரும் சத்தமின்றி அமைதியாக படகு பக்கத்திலேயே நீந்திக்கொண்டு வந்தன.

இரும்பு மண்டையன்: எனக்கு ஏதோ வித்தியாசமாவே தோணுதுப்பா.

லூனா: ஆமா இரும்பு. எனக்கும்தான். தண்ணியே ஒரு மாதிரி இருக்குதுல்ல.

லூனா சொன்னதை எல்லா மீன்களும் ஆமோதித்தன.

இரும்பு மண்டையன்: என்ன அம்மு, எப்ப பார்த்தாலும் எதையாவது கண்டுபிடிச்சு சொல்லிட்டே இருப்ப. ஏன் அமைதியா வர?

அம்மு மீன்: சொல்றதுக்கு என்ன இருக்கு இரும்பு. எனக்கும் வித்தியாசமா தான் இருக்கு. என்ன தான் நடக்குதுனு பார்ப்போம்.

இரும்பு மண்டையன்: அப்போ இங்க சொல்லிக்கற அளவுக்கு எதுவுமில்லனு சொல்றியா?

அம்மு மீன்: அட அதத்தான்பா வேடிக்க பாத்துட்டு இருக்கேன். பேசிட்டு இருந்தா கவனிக்க முடியாதுல்ல. அதான் கவனிச்சுட்டு இருக்கேன். அப்போ தான் தேவையான அப்போ நினைவு படுத்திக்க முடியும்.

இரும்பு மண்டையன்: அதுவும் சரி தான். ஆமா இந்த கரண்டு, லைட்டு பயலுங்க எல்லாம் இருக்கானுங்களா?

லைட்டு: என்ன இரும்பு, லொள்ளா? கண்ணுலயே லைட்டு அடிச்சுருவேன்.

கரண்டு: இரு உன் மூக்குலயே ஷாக் வைக்கிறேன்.

இரும்பு மண்டையன்: அடேங்கப்பா. இவனுக ரெண்டுபேரும் பயங்கரமான கோவக்காரங்களா இருப்பானுங்களோ?

இவர்கள் செய்வதைப் பார்த்து எல்லோரும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிட்டுக்குருவி வேகமாக இவர்களிடம் ஓடி வந்தது.

சி.குருவி: போச்சு… போச்சு! நீங்களும் இங்க வந்து மாட்டிக்கிட்டீங்களா? உடனே தப்பிச்சிடுங்க.

மகேஷ்: என்னது மாட்டிக்கிட்டோமா? டேய் என்னடா சொல்லுது இந்தக் குருவி? வாங்க திரும்பி ஓடிருவோம்.

சி.குருவி: ஏற்கெனவே இங்க நிறைய பேர் மாட்டியிருக்காங்க. அங்க பாருங்க பழம் பறிச்சுட்டு இருக்காங்களே. அவங்கல்லாம் போன மாசம் தான் வந்து மாட்டிக்கிட்டவங்க.

ராம்: அவங்களும் விடுகதைக்கு பதில் சொல்லி தான் உள்ள வந்து மாட்டிக்கிட்டாங்களா?

சி.குருவி: இல்ல… இல்ல. இந்த இடத்த கடக்கும்போது பெரிய புயல் வரும். அப்போ கதவு திறந்து, இவங்கள உள்ள தள்ளிடும். அவ்ளோதான்! அப்புறம் அவங்களுக்கு கொடுக்கற வேலைய செய்துட்டு இங்கயே இருக்க வேண்டியது தான்.

இதைக் கேட்ட மகேஷ் அழும் நிலைக்கு வந்துவிட்டான் .

பாலா: பயப்படாத மகேஷ். நாம அப்படி வந்து மாட்டிக்கல. புத்திசாலித்தனமா விடுகதைக்குப் பதில் சொல்லிதான் உள்ள வந்துருக்கோம். என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.

பாலா குருவியிடம், யாராவது எங்களைப் போல் இங்கு வந்திருக்கிறாரார்களா என்று விசாரித்தான்.

சி.குருவி: இங்க இருக்க எல்லோருமே தெரியாம வந்து மாட்டுனவங்க தான். நீங்க ஏன் இந்த பக்கம் வந்தீங்க?

ராம்: அடப்பாவிங்களா! தெரியாம வந்தவங்கள மட்டும் தான் உள்ள புடிச்சு போட்டுச்சா இந்த கதவு? எங்க கிட்ட மட்டும் ஏன் விடுகதை கேட்டுச்சு.

மகேஷ்: டேய் என்னடா இது? பயமா இருக்குடா.

ராம்: இவன் ஒருத்தன் உள்ள வந்ததுல இருந்து ஒரே டயலாக்க பேசிட்டு இருக்கான். எல்லாத்துக்கும் பதறாதடா.

பாலா: சரி குருவி, இங்க யார் தலைவர்?

சி.குருவி: அது ஒரு மனுஷப்பொண்ணு மாதிரி இருக்கும். பல விதமான பூக்கள்ல செய்த வண்ண ஆடைய அணிஞ்சிருக்கும்.

மகேஷ்: அப்போ அது தான் அந்த தேவதையா இருக்குமோ?

மகேஷ் சிட்டுக்குருவியிடம் அந்தப் பெண் எப்போது வருவாளென்று கேட்டான்.

சி.குருவி: எப்போதாவது தான் அவங்க வருவாங்க.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் யாரோ ஒரு பெண் தண்ணீர் மீது நடந்து வருவதை அம்மு மீன் பார்த்தது.

 

தொடரும்….

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close