சிறார் இலக்கியம்தொடர்கள்

வானவில் தீவு : 7 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்

சிறார் இலக்கியம் | வாசகசாலை

இதுவரை…

தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓரிடத்தில் வண்ணங்கள் கிடைத்ததை உறுதி செய்ய மீண்டும் பின்னோக்கிப் பயணிக்க முடிவு செய்தனர்.

இனி

இருண்ட வானம் விதவிதமான வண்ணங்களைக் காட்டி, பெரிய வாண வேடிக்கையை வானில் நிகழ்த்திக் கொண்டிருந்தது. எல்லோரும் வாயைப் பிளந்து பார்த்து ரசித்தனர்.

ராம்: சூப்பரா இருந்துச்சுல்ல!

பாலா: ஆமாடா. எவ்வளவு வண்ணம். இதெல்லாம் நம்ம ஊர்ல இருக்கிறவங்க பாத்து இருக்க மாட்டாங்கல்ல.

மகேஷ்: ஆமாடா. எப்படியாவது நம்ம ஊருக்கும் வண்ணங்கள் கிடைக்கணும்.

மூவரும் ஆச்சரியத்தில் இருந்தனர். கப்பலை விட்டு எட்டிப் பார்த்தால், அம்மு மீன் வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. அம்முவை பார்த்தால் ராமுக்கு எப்போதும் சிரிப்பாயிருக்கும். அப்பாவித்தனமாய் ஏதாவது பேசும். கொஞ்சம் பயந்த மீன் என்றாலும், ரொம்பப் பாசமாக இருக்கும். எல்லோருக்கும் அம்மு மீன் என்றால் தனி பாசம் தான்.

எல்லோரும் வந்த வேலையை மறந்துவிட்டு குதூகலத்தில் இருந்தனர். இன்னும் இருட்டாகவே இருந்தது. ஆனால் இவர்களோ விளையாடத் தொடங்கி விட்டனர். விளையாடி ஓய்ந்த பின், மீன்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்.

ராம்: இப்போ கப்பல ஓட்ட முயற்சி பண்ணலாமா?

மகேஷ்: நான் ஓட்டுறேன்.

திடீரென புயலடிக்க ஆரம்பித்தது. நடுக்கடலில் புயல் வந்தால் என்ன செய்வது? அதுவும் அந்தச் சிறிய கப்பலில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியும்? கப்பல் தாறுமாறாக தத்தளித்துக் கொண்டிருந்தது. உடனிருக்கும் மீன்களும் எதுவும் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தன.

ராம்: டேய் மகேஷ்! எல்லாம் உன்னால தான். நாம பாட்டுக்கு நல்லா போயிட்டு இருந்தோம். வண்ணம் கிடைச்சிருச்சு திரும்பப் போகனும்னு குழப்பி விட்டு இங்க வந்து மாட்டி விட்டுட்ட.

மகேஷுக்கு தான் அடம்பிடித்தது பற்றி வருத்தமாக இருந்தது.

மகேஷ்: சாரிடா. கிடைச்ச வண்ணத்த விட்ற கூடாதுனு தான் ஊருக்குப் போகலாம்னு சொன்னேன். கோச்சுக்காதீங்க.

மகேஷ் பேசுவதைக் கேட்ட ராமிற்கும், பாலாவிற்கும் கஷ்டமாக இருந்தது.

பாலா: சரி விடுங்க. முடிஞ்சதப் பேசாம நடக்கறத கவனிப்போம். முதல்ல ஏதாவது பாதுகாப்பான இடத்துக்குப் போகணும். அதுக்கு முன்னாடி, safety guard போட்டுக்கோங்க.

எல்லோரும் வேகவேகமாக safety guard அணிந்து கொண்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக புயல் ஓய்ந்தது. எல்லோரும் நிம்மதி அடைந்தனர்.

அப்போது ஒரு குரல் எங்கிருந்தோ கேட்டது,

“சலனபுரிக்கு வருக… வருக! இங்கு வந்த பிறகு யாரும் வெளியே செல்ல முடியாது. உங்கள் பொழுதுகளை மகிழ்ச்சியாகக் கழிக்க மகிழ்வுடன் அழைக்கிறேன்.”

யாரென்று தெரியாத அந்தக் குரல் பேசி முடிக்கும்போது கப்பலும், உடன் நீந்தி வந்த மீன்களும் வேகமாக உள்ளுக்குள் இழுக்கப்பட்டன. என்ன நடக்கிறது என்று தெரியாமல் அனைவரும் குழம்பி நின்றனர். அவர்களால் கப்பலைத் திருப்பவோ, நிறுத்தவோ முடியவில்லை.

அப்போது ஒரு மின்னல் பளீரென கப்பலுக்குப் பக்கத்தில் விழ, அதிலிருந்து பெரிய பெரிய இறக்கைகள் மட்டும் முளைத்து பறக்கத் தொடங்கின.

எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்கிற முயற்சியில் யோசித்துக் கொண்டிருந்த பாலாவிற்கு தாத்தா கொடுத்த இறகு நினைவுக்கு வந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

தொடரும்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close