சிறுகதைகள்
Trending

வாடாமல்லி – கிருத்திகா கணேஷ்

சிறுகதை | வாசகசாலை

உள்ளுக்குள் இருப்பதை சலனமற்ற ஓர் பார்வையிலோ ஒரு கீற்றுப் புன்னகையிலோ மறைத்து விடுகிற சாமர்த்தியசாலிகளைப் போல… உள்ளே இருந்த பரபரப்புக்கும் சலசலப்புக்கும் சற்றும் பொருந்தாத வேகத்தோடு நகரத்தின் பெரு நெரிசலான சாலையில் ஒரு நத்தையைப் போல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த பேருந்து…

கூட்ட நெரிசலில் புழுங்கலான மனித வாசனை பிடிக்காமல் வீறிட்டு அலறிக் கொண்டிருந்தது மனதின் வாசனையை ஒளித்து வைக்க இன்னும் கற்றிராத ஒரு குழந்தை. “ஏம்மா.. இது யாரு பையி? இம்புட்டுப் பெரிய பையக் கொண்டு வாசல்ல வெச்சா வார ஆளுங்க எப்டி ஏறும்? எடும்மா” கண்டக்டரின் சத்தம் அடித்தொண்டையில் இருந்து உறுமலாய் வெளி வந்தது… கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களுக்கு இடையில் நீண்டு வந்த கையைத் தொடர்ந்து வந்தது ஒரு கிழவியின் குரல், “யய்யா.. ஏம்பையிதான்.. தாயி கொஞ்சம் நவுந்துக்கோ.. பைய எடுத்துருதேன்…” நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி பையை கிழவியின் பக்கமாக நகர்த்திக் கொடுத்து விட்டு தான் கொஞ்சம் வசதியாக நின்று கொண்டாள்… அதற்குள் கண்டக்டர் தன் கருமமே கண்ணாகியிருந்தார்…

இந்த சலனங்கள் எதுவும் தாக்காமல் பேருந்தின் முன்வாசல் படியை ஒட்டிய முதல் சீட்டில்  ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தாள் கீதா. காற்றில் பறந்து முகத்தில் வந்து விழுந்த தலைமுடியை அனிச்சையாய் ஒதுக்கி விட்டுக் கொண்டாள். அவள் ஒரே நேரத்தில் இரு வேறு காலங்களில் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள். ஒன்று முன்னோக்கி சென்று கொண்டிருந்த இந்த பேருந்துப் பயணம்.. இன்னொன்று எந்தப் பேருந்தும் செல்ல முடியாத நினைவுகளின் பின்னோக்கிய பயணம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த ஊருக்கு வருகிறவள் வேறு என்ன செய்ய முடியும்? அவ்வப்போது ஆழமாக மூச்சை இழுத்து கண்களை மூடித் திறந்து கொண்டிருந்தாள். எல்லாம் புத்தம் புதுசாக இருந்தது அவளுக்கு.

உயரமான கோபுரத்துடன் கம்பீரம் மாறாமல் நின்றிருந்த அந்த சர்ச்சை பேருந்து கடந்த போது அவள் பரபரப்பாகியிருந்தாள். அந்த சர்ச்சை ஒட்டிய பள்ளியை பேருந்து நெருங்கியபோது உட்கார்ந்திருந்த சீட்டின் நுனிக்கு வந்து எட்டிப் பார்த்தாள். பூட்டியிருந்த பள்ளியைப் பேருந்து கடந்த போது… தோள் வரையிலும் வெட்டி விட்டிருந்த முடியில் ரெட்டைப் பின்னல் போட்டுக் கொண்டு சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு ஒரு காலை பெடலிலும் இன்னொரு காலைத் தரையிலும் ஊன்றியபடி… சைக்கிள் கேரியரில் பேட்மிண்ட்டன் ராக்கெட்டொடு பள்ளிக்குள்ளிருந்து பேருந்திலிருந்த கீதாவை நோக்கி கையசைத்துச் சிரித்தாள் 16 வயது கீதா.

லேசாகச் சிரித்தபடி மீண்டும் ஆழமான ஒரு பெருமூச்சோடு கண்களை மூடி உள்ளே தள்ளி உட்கார்ந்து சீட்டில் கீதா தலையைச் சாய்த்துக் கொண்ட போது மொபைல் சிணுங்கிற்று. பர்ஸைத் திறந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது சித்தி அழைத்துக் கொண்டிருந்தாள். கால் அட்டெண்ட் செய்து, ”சொல்லு சித்தி… வந்துட்டேன்… ஸ்கூல் தாண்டி வரேன்… ம்.. சரி” என்றபடி ஃபோன் காலை கட் செய்த போது கண்டக்டர் அவளிடம், ”அடுத்த  ஸ்டாப்க்கு அடுத்த ஸ்டாப் நீங்க எறங்கணும்” என்றார். ”நா இந்த ஊர்க்காரிதான் “என்று சொல்லத் தோன்றியதை மறைத்துக் கொண்டு தலையசைத்துச் சிரித்தபடி, “ம்.. தேங்க்ஸ்” என்றாள்.

பள்ளியின் கிரவுண்டைத் தாண்டியதும் தியேட்டர் வரும் என்று ஆவலாகப் பார்த்துக் கொண்டு வந்தாள்.. ”டைனோசர்னா என்னட்டி?” என்று ஒருமுறை அந்த தியேட்டருக்குப் படம் பார்க்க கிளம்பும் போது மொட்டையாச்சி கேட்டாள். “அது யான மாரி பெருசா இருக்குமாம் ஆச்சி.. ஆனா மனுசங்கள தின்ருமாம்.. முன்னாடி காலத்துல இருந்துச்சாம்” என்று பாட்டிக்கு கதை சொன்னபோது, “ஏல கண்ணா…என்னயும் கூட்டிட்டு போயேன்” என்று சித்தப்பாவிடம் கேட்டாள் ஆச்சி.. “அதுவோ சின்ன புள்ளேளு.. உனக்கு கண்ணும் தெரியாது.. கடயும் தெரியாது.. சும்மா வீட்ல கெட” என்ற சித்தப்பாவிடம் ஆச்சிக்காக சிபாரிசு செய்து கீதா தான் அனுமதி வாங்கினாள்.. மறுநாள் காலையில் தகரக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளிக்குப் போன ஆச்சி வெளியில் வந்த பிறகு சித்தியிடம், “ஏ வேலம்மா.. உம்புருசன்ட்ட சொல்லி அந்த கக்கூசுக்கு மேக்கூர போடச் சொல்லுட்டி.. டைனோசர் வந்து கவ்வுத மாரியே இருக்கு.” என்ற போது எல்லோரும் சிரித்தார்கள்..

இப்போதும் சிரித்தபடி பேருந்திலிருந்து திரும்பிப் பார்த்த கீதாவுக்கு திக்கென்றிருந்தது. தியேட்டர் இருந்ததற்கான அறிகுறியே இல்லை.. தியேட்டர் கட்டிடம் உடைந்து செங்கல் செங்கலாய் அவள் மனதிற்குள் விழுந்தது போல பாரமானது மனது.. கண்களை மூடிக் கொண்டாள். மீண்டும் அவள் கண்களைத் திறந்த போது நவாப்பழ மரங்களற்ற வெற்றுச்சாலை அவள் முன்னே நீண்டிருந்தது.. அந்த ஊருக்கும் அவளுக்குமான பந்தங்களை யாரோ வெட்டி வீசிவிட்டாற் போலிருந்தது அவளுக்கு.

இறங்கத் தயாராக தன் காலுக்கடியில் இருந்த பையை அவள் இழுத்த போது பேருந்து வளைந்து திரும்பி பாலத்தின் அடியில் போய் நின்றது.. அவளுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது.. சீட்டிலிருந்து எழுந்து நின்று அவள் திரும்பிப் பார்த்த போது கண்டக்டர் பின் வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்தார். இறங்கவும் ஏறவுமாய் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது.. கண்டக்டர் பேருந்தின் முன்வாசலுக்கு வந்து ஜன்னல் வழியாக அவளிடம், “இன்னும் கொஞ்ச தூரம் தள்ளிப் போய் வண்டி நிக்கும். நீங்க அங்கன எறங்கிகிடுங்க” என்ற போது இது அவள் ஊர் இல்லை என அவர் சொல்லாமல் சொன்னது போல் தோன்றியது.

பேருந்து கிளம்பி மறுபடியும் ஊர்ந்தபடி கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்றது. தன் பையை எடுத்துக் கொண்டு அவள் படியிறங்கும் போது சித்தி ஓடி வந்து பையை வாங்கியபடி,”ஏட்டி.. எப்டி இருக்க? ஆளே மாரிப் போய்ட்டியேளா” என்றாள்.. கீதா பேருந்திலிருந்து இறங்கி சித்தியைக்  கட்டிக் கொண்டு, ”உங்கண்ணு சிரிக்கிது சித்தி” என்றாள்.. “போட்டி.. ஒனக்கு வேற வேலயில்ல” என்ற சித்தியின் சிரிப்பு முழுக்க வெட்கம் நிறைந்திருந்தது.. கீதாவை இறக்கி விட்டு மெதுவாய் ஊர்ந்து பேருந்து நகர்வதைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள் இருவரும்.

பேருந்து நகர்ந்த பின் எதிரே புதிதாய் எழும்பியிருந்த கட்டிடங்களைப் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டபடி “ஊரு எவ்ளோ மாரிப் போயிருச்சு சித்தி.. நம்ம ஊர் மாரியே இல்ல.. அந்த வாசனயே மாரிப் போய்ட்டு” என்றாள்.. “ஆரம்பிச்சிட்டியா ஊர்ப்பொராணத்த.. அப்டி என்ன வாசனயோ? எப்பம் பேசுனாலும் ஊரு ஊருன்னுகிட்டு.. அப்றம் எப்டிட்டி இந்த ஊர விட்டு இத்தன வருசமா இருந்த?” “நீ செங்கொளத்த விட்டுட்டு இருக்கல்லா.. அப்டித்தான்” என்றதும் சித்தியின் முகத்தில் ஏக்கம் படருவதை கீதா உணர்ந்தாள்.. “ஹும்.. சரிதான்..எங்காலமும் ஓடிப் போச்சு.. உங்க சித்தப்பா இப்டி ஆளா இருப்பாவன்னு நா என்ன கனாவா கண்டேன்.. எங்க அம்ம செத்ததுக்கு கூட போவ கூடாதுன்னுட்டாவளே.. அதான் எம்மனசு ஆறவேயில்ல.. அதவுடு.. வா.. அப்டியே ரோட்ட க்ராஸ் பண்ணி ஆட்டோவ புடிப்போம்” என்று நகர்ந்த சித்தியோடு நடக்கத் தொடங்கினாள் கீதா.

ரோட்டை அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியவில்லை. இடது பக்கம் வருகிற வண்டிகளைப் பார்க்கத் திரும்பிய போது தெரிந்த சித்தியின் முகத்தில் வாழ்வைக் கடப்பதும் தான் என்றொரு பதில் ஒளிந்து கிடந்தது. எல்லாரும் மறைத்துக் கொள்ள எவ்வளவு முயன்ற போதும் விர்ரென கடக்கும் வாகனங்களின் வேகம் சுயநலத்தின் ஆழத்தைச் சொல்லிவிட்டே போயிற்று. நின்று பார்த்து பொறுமையிழந்து கையைக் காட்டியபடியே தலையைத் திருப்பாமல், “வா கீதா” என்றபடி போன சித்தியின் பின்னால் அவளையே பார்த்தபடி போனாள் கீதா.. ரோட்டைக் கடந்து வந்ததும் “ச்சை.. பேதில போறவனுவோ.. என்னா போக்கு போறானுவோ.. இப்டி போவேண்டியது.. எங்கனயாச்சும் போயி முட்டிகிட்டு நிக்க வேண்டியது. தன்னப் பத்தியும் யோசிக்காம அடுத்த மனுசங்கள பத்தியும் நெனப்பே இல்லாம என்ன சென்மங்க” என்றபடியே திரும்பி பார்த்தாள். அவள் சித்தப்பாவையும் சேர்த்து திட்டுகிறாளோ என நினைத்தபடியே நடையில் வேகம் கூட்டி சித்தியோடு சேர்ந்து நடந்தாள் கீதா.

வரிசையாக நின்றிருந்த ஆட்டோக்களைப் பார்த்தபடியே போன சித்தி ஒரு ஆட்டோ டிரைவரின் அருகில் போய், ”ஏ முத்து.. வீடு வரைக்கும் கொண்டு விட்ருதியா?” என்று நின்றாள்.. ஆட்டோக்குள் உட்கார்ந்திருந்த முத்து தலையை மட்டும் வெளியில் நீட்டி,” யக்கா.. வாங்க.. வண்டில ஏறுங்க..” என்றதும் சித்தி ஆட்டோவினுள்ளே ஏற.. கீதாவும் சித்தியைத் தொடர்ந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.. வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டே “சாப்பிட போணும்னு கெளம்பிட்டு இருந்தேன்.. நல்லவேள.. ரெண்டு நிமிசம் ஆயிருந்தா கெளம்பிருப்பேன்” என்ற முத்துவிடம், “மணி என்னாவுது? இந்நேரம் தான் சாப்ட போறேனு சொல்லுத?”என்று கேட்டாள் சித்தி.. “என்னக்கா செய்ய? பொழப்ப பாக்க வேண்டிருக்குல்லா? மொரப்பநாடு வரைக்கும் ஒரு சவாரி போயிட்டேன்”  என்ற முத்துவின் பதிலுக்குப் பிறகு வேறெதுவும் கேட்டுக் கொள்ளவில்லை சித்தி.. அவள் கண்கள் வெறித்தபடி இருந்தன.. சித்தப்பாவைப் பற்றித் தான் அவள் நினைத்துக் கொண்டு வருகிறாள் எனத் தோன்றியதால் கீதாவும் ஒன்றும் பேசவில்லை. அவளுக்கும் சித்தப்பாவின் நினைவு வந்தது.

”அவன பாம்புன்னு நெனச்சு தாண்டவும் முடியாது.. பளுதுன்னு நெனச்சு மிதிக்கவும் முடியாதுத்தா.. உங்க சித்திக்காரியா கண்டு குடும்பம் நடத்திட்டு இருக்கா.. என்னா வரத்து வாரான்” என்று சொல்லிக் கொண்டே இருப்பாள் பக்கத்து வீட்டு எசக்கி ஆச்சி. சித்தப்பா அப்படித்தான் நடந்தும் கொண்டார். சித்தி யாரோடு பேச வேண்டும்.. என்ன பேச வேண்டும்.. என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. சில நேரங்களில் அவர் சொன்னால் மட்டும் தான் சித்தி சாப்பிடவே முடியும்.. அம்மாவோ அப்பாவோ சொன்னாலும் கூட, “இல்லத்தான்.. உங்க தம்பி சண்ட போட்டு போயிருக்காவோ.. நா சாப்டுகிட்டிருக்கும் போது வந்துட்டாவன்னா.. அவ்ளோதான் வேற வெனையே வேண்டாம்.. மனசு வேதனைல பசி எங்க எடுக்கு? உங்க தம்பி வந்துரட்டும்.. நா சாப்ட்டுகிடுதேன்” என்று மறுத்து விடுவாள். சில நாட்களில் சித்தப்பா வந்து, ‘ஏட்டி நாந்தான் முட்டாத்தனமா ஏதோ கோவத்துல பேசிட்டு போயிட்டேன்.. அதுக்குன்னு திங்காம கெடப்பியாட்டி.. கிறுக்கு மூதி..” என்பார்.. இதை மனதில் வைத்துக் கொண்டு மறுமுறை சித்தி சாப்பிட்டு விட்டால், “புருசன் கோவத்த விட சோறு அவ்ளோ முக்கியமா போச்சு.. சோத்துக்கு செத்த மூதி” என்று சோற்றுப் பானையை விசிறி அடிப்பார். என்ன நடந்தாலும் சிரித்த முகம் மாறாத சித்தியை கீதாவுக்கு அவ்வளவு பிடித்துப் போனது.. “என்ன நடந்தாலும் எப்டி சித்தி சிரிச்சிட்டே இருக்க?” என்று கேட்ட போதும் சித்தி சிரித்தாள். ஆனால் சித்தப்பா செத்துப் போன போது அவள் அழவே இல்லை.. எல்லோரும் அழுதுரு அழுதுரு என்று அவளைப் பிடித்து உலுக்கினார்கள்.. அவள் அசையாமல் சித்தப்பாவை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

சித்தப்பா செத்துப் போன ஒரு வாரம் கழித்து கீதாவைக் கூப்பிட்டு, “ஏட்டி.. எனக்கொரு கரும்புச்சாறு வாங்கிட்டு வாரியா?” என்ற சித்தி மிகவும் விநோதமாய்த் தெரிந்தாள். ஆனால் எதுவும் பேசாமல் போய் கரும்புச்சாறு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தபோது ஒரே ஒரு மடக்கைக் குடித்து விட்டு ஓவென்று கதறி அழுதாள்.. கீதா பதறிப் போனாள்.. “சித்தி.. என்ன சித்தி? என்ன சித்தி?” என துடித்துப் போனாள்.. ஒரு கட்டத்தில் சித்தியின் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியாமல் அழுது முடிக்கட்டும் என காத்திருந்தாள். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து இயல்புக்கு வந்தாள் சித்தி. ”இவ்ளோ வலிய மனசுக்குள்ள வெச்சிகிட்டு எப்டி சித்தி அழாம இருந்த?”  “அவரு நெனச்சத அவரு நெனக்கிறப்போ அவரு சொல்றப்போ தான் நா செய்யணும். நெனச்சத நெனச்ச நேரம் சாப்பிட விட்ருப்பாரா, தூங்க விட்ருப்பாரா, ஒரு மக்க மனுசரோட பேச விட்ருப்பாரா.. நா ஆசப்பட்ட மாரி ஒரு பொட்டு கூட வெச்சிகிட்டதில்ல.இப்போ இவரு செத்துப் போனா ஒடனே அழணுமா? அப்டி என்ன ஒரு மனுசனுக்கு பிடிவாதம். சாவுல கூட.. அதான் நா நெனச்சப்போ தான் அழுவேன்னு இருந்துட்டேன்.. என்னால அவருக்கு குடுக்க முடிஞ்ச தண்டன இதான்” என்றாள்.

”அதுக்கு ஏஞ்சித்தி கரும்புச்சாறு கேட்ட?” என்று கேட்டாள் கீதா.  “உங்க சித்தப்பா கூட  வெளிய போகும் போது கரும்புச்சாறு குடிப்பமான்னு நா கேட்டா எனக்கு வேண்டாம்னு நிக்காம போயிகிட்டே இருப்பாரு. ரெண்டு நாள் களிச்சு சும்மான்னாலும் கெளப்பி வெளிய கூட்டிட்டு போயி கரும்புச்சாறு கடைல நிப்பாரு.. இன்னொன்னு குடி இன்னொன்னு குடின்னு ரெண்டு மூண வாங்கித் திணிப்பாரு.. அம்புட்டு எரிச்சலா இருக்கும்.. ஆனா சண்ட வந்துருமேன்னு குடிச்சிட்டு வருவேன்.. ஒருதரம் ரெண்டு தரம்னா பரவால்ல.. வாழ்க்க பூரா வருசம் பூரா எல்லா விசயத்துலயும் இதாங் கத.. கலியாணம் முடிஞ்ச 10 வருசத்துல நா ஆசப்பட்டு ஒரு விசயம் நெனச்ச ஒடனே கெடச்சிருக்குன்னா அது இன்னைக்குத்தான்.” என்று சிரித்தாள் சித்தி.. ஆனால் அன்று அவள் கண்கள் சிரிக்கவில்லை.

சித்தப்பா செத்துப் போன விசேஷமெல்லாம் முடித்து எல்லோரும் கிளம்பிப் போன பிறகு வயதான காலத்தில் மகனைப் பறிகொடுத்து விட்டுத் தளர்ந்து போயிருந்த ஆச்சியோடும், கைக்குழந்தையோடும் சித்தி தனியாக  இருப்பாளென கீதாவை சித்தியின் வீட்டில் விட்டுப் போனாள் அம்மா..  இரண்டு நாட்கள் கழித்து நடு இரவில் பீரோவில் இருந்த அத்தனை புடவைகளையும் இழுத்து கீழே போட்டு விட்டு அந்த அறையின் நிலைவாசலில் உட்கார்ந்து அவற்றையே பார்த்துக் கொண்டிருந்த சித்தியைப் பார்த்து பயந்து போனாள் கீதா. மெதுவாக சித்தியின் பக்கத்தில் வந்து, ” என்ன பண்ணுதீங்க சித்தி?” என்றவளிடம் புடவைகளை கைகாட்டியபடியே, “இதுல ஒண்ணு கூட எனக்குப் புடிக்காது. எல்லாமே அவுகளுக்கு புடிச்சது.. வாசன வருது பாத்தியா? உங்க சித்தப்பா வாசன.. எல்லாத்தையும் தூக்கிப் போட்டு எனக்கு புடிச்ச வாடாமல்லிக் கலர்ல ஒரு சேலயாச்சும் வாங்கணும்” என்று சித்தி சொன்ன போது தான் சித்திக்கு வாடாமல்லிக் கலர் பிடிக்கும் என்பதையும் அங்கு கிடந்த சேலைகளில் ஒன்று கூட அந்தக் கலரில் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டாள் கீதா.. சித்தப்பா இறந்து ஒரு வருடம் கழித்து கோயிலுக்குப் போன போது வாடாமல்லிக் கலரில் தான் சித்தி புடவை கட்டியிருந்தாள். “இந்தக் கலர் நெசமாவே ஒனக்கு நல்லாருக்கு சித்தி” என்று ரகசியமாய்ச் சொன்ன கீதாவைக் கட்டிக் கொண்டாள்..

இப்போது ஆட்டோவில் அருகில் இருந்த சித்தியை கீதா திரும்பிப் பார்த்தாள்.. அதே வெறுமை இப்போதும் சித்தியின் கண்களில் படிந்திருந்தது.. எதிர்பாராமல் சித்தியும் திரும்பி பார்க்க சித்தியின் கைகளை அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டு, “கரும்புச்சாறு குடிப்போமா சித்தி?” என்றாள். ”முத்து அந்த கோயில் முக்குல இருக்க கடைல நிப்பாட்டுதியா? ஒரு சாறு குடிச்சிட்டு போயிருவோம்“ என்றாள் சித்தி.. ஆட்டோ இரண்டு வினாடியில் அந்தக் கடையில் நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கியபடி, “யய்யா.. ஒனக்கும் சொல்லவா.. சாப்புட போறேன்னியேன்னு கேக்கேன்.. வேற எதும் நெனச்சிராத” என்ற சித்தியிடம், “யக்கா.. உங்கள இன்னைக்கு நேத்தா பாக்கோம்.. இப்புடிப் பேசுதியளே.. நீங்க குடிங்க.. இப்பம் குடிச்சா எனக்கு பசி அமந்துரும்” என்றான் முத்து.

கரும்புச்சாறு மெஷின் ஓடத்தொடங்கியது. ”ஏஞ்சித்தி.. ஒனக்கு எம்மேல கோவமே வர்லியா?” சித்தி அழுத்தமாய் கீதாவைப் பார்த்தபடி, “கோவம்லாம் இல்ல.. நீ அவங்கூட போயிட்டன்னு உங்கம்மா சொன்னப்போ.. நம்ம மேல இந்தப் புள்ளைக்கி நம்பிக்க இல்லாம போச்சேன்னு ரொம்ப வருத்தமாயிருந்துச்சு.. எங்கருந்தாலும் நீ நல்லாருக்கணும்னு தான் வேண்டிகிட்டே இருந்தேன்.. அத்தன நாள் களிச்சு நீ வெளிநாடு போறோம்னு மொத மொத ஃபோன் பண்ண அன்னைக்கு கூட கோயிலுக்கு போய் உம்பேர்ல அர்ச்சனைக்கு குடுத்தேன்.. என்னோட வேண்டுதல கேட்ரவே கூடாதுன்னு அந்த கடவுள் முடிவு பண்ணிருக்கான் போல.”

ஆளுக்கொரு சாறை வாங்கிக் குடித்து முடித்தபோது, “என்ன சித்தி இன்னொன்னு குடியேன்” என்ற கீதாவோடு சேர்ந்து சித்தியும் சிரித்தாள். இப்போது சித்தி கீதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.. “ஒரு 5,6 வருசத்துக்கு முன்ன நம்ம செல்வி மவ கலியாணத்துல பாத்தப்பம் கூட நீ வாயத் தொறக்கலியேட்டி. ரொம்ப பதங்கொலய வெச்சிட்டானோ எம்புள்ளய..” என்ற சித்தியைப் பார்த்து சிரித்தபடி, “கடவுள் இன்னும் மூச்சு விட்றத புருஷன் கட்டுப்பாட்ல குடுக்கல சித்தி” என்றாள்.. சித்தி ”ஹூம்” என்றபடி ஒரு பெருமூச்செறிந்தாள். “அம்மா அங்க வீட்டுக்குத்தான் வரச் சொன்னாவளாம்.. எனக்கு சித்திய பாக்கணும் போல இருக்குன்னு வந்துட்டியாமே.. ஏன்?” ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு சித்தி திரும்பிப் பார்த்து கேட்டாள்  “அன்னைக்கு அத்தன பேரு இருந்தாலும் எந்த நம்பிக்கைல எந்த உரிமைல கரும்புச்சாறு வாங்கித்தான்னு என்னயக் கேட்ட.. அதே நம்பிக்கைலயும் உரிமைலயும் தான்.” என்ற கீதாவிடம் ”இன்னமும் வாசன மாறாத நெலமும் காத்தும் இருக்கத்தாம்ட்டி செய்யுது. என்ன அத தெரிஞ்சிக்கிடுத யோகம் தான் எல்லாத்துக்கும் கெடைக்க மாட்டேங்கு” என்ற சித்தியைப் பார்த்து சிரித்தபடி,”ஒனக்கு வாடாமல்லி புடிக்கும்னு எனக்கு மட்டும் தெரிஞ்ச மாரி” என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள் கீதா.. ”ஏட்டி உங்கண்ணு சிரிக்கி” என்ற சித்தியின் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.. “நா ஒங்கூடவே இருந்துரட்டா சித்தி?” சித்தி கீதாவின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். ஆட்டோ குலுங்கியபடி ஓடத் தொடங்கிய போது வீசிய காற்றின் வாசனை அவர்களுக்குப் பழக்கப்பட்டதாகவே இருந்தது.

 

 

 

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close