சிறுகதைகள்

உயிரச்சம் – ரவிச்சந்திரன் அரவிந்தன்

சிறுகதை | வாசகசாலை

மேய்ச்சலுக்கு அவுத்துவிட்டிருந்த பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் புடிச்சிட்டு வர்றேன்னு போனாரு குருந்தாசலம். வாசல்ல நாய்கிட்ட விளையாடிகிட்டிருந்த மகன் கிரியை, “அப்பாகூடப் போயி கன்னுக்குட்டியப் புடிச்சிட்டு வா”னு அனுப்பிவிட்டா அம்மா. தூரத்தில ஆறு மணி ரயில் வர்ற சத்தம் கேட்டுது. ரயில் ரோட்டுக்குப் பக்கத்தில கயித்தை அவுத்துகிட்டு வந்த கன்னுக்குட்டி குதிச்சுகிட்டிருந்துச்சு. ஓடிவந்த கிரி, முதலில் அதைப் பாய்ந்து பிடித்துக்கொண்டான். அப்பா எங்கேயென்று பார்த்தான்.

மொளைக்குச்சியப் புடிங்கிட்டு ரயில் ரோட்டில் மேயவந்த பசுமாட்டோட கயிறும் மொளக்குச்சியும் தண்டவாளத்துல சிக்கிக்கிச்சு. குருந்தாசலம் அந்தக் கயித்தை விடுவிக்கப் போராடிகிட்டிருக்காரு. ரயில் கிட்ட வருவதற்குள் எப்படியும் கயிற்றை விடுவித்துவிட வேண்டும் என்கிற தவிப்பு. ஆனால், அவர் எதிர்பார்த்ததைவிட வேகமாக ரயில் வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் ஒரு மாடும் ஓர் ஆளும் நிற்பதைப் பார்த்த இன்ஜீன் டிரைவர், எப்படியும் விலகிப்போய்விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து நீண்ட சைரன் கொடுத்துக் கொண்டேவந்தார். சைரன் சப்தம் கேட்டு மிரண்ட பசுமாடு, துள்ளி ஓடியபோது அதன் கயிறு காலில் மாட்டிக்கொண்டதில், நீண்ட கயிற்றின் நடுப்ப குதியைப் பிடித்துக்கொண்டிருந்தவர், மாட்டோடு சேர்ந்து தண்டவாளத்தில் விழுகிறார். கன்னுக்குட்டியக் கையில் பிடிச்சுகிட்டு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கிரி, “ஐய்யோ அப்பா… ஐய்யோ அப்பா” என்று அலறிக்கொண்டே ஒடிவருவதற்குள், சக்கரத்தில் நசுங்கித் தெரித்த அவரது சதையும் ரத்தமும் கிரியின் முகத்திலும் சட்டையிலும் விசிறி அடித்து அப்பிககொண்டது.

தெளிவற்ற ஒலியில் ஏதோ அலறிக்கொண்டே படுக்கையில் உருண்டு கொண்டிருந்தான் கிரி. இரண்டு பக்கமும் படுத்து அசந்து தூங்கிக்கொண்டிருந்த விக்கியும் பீட்டரும், சப்தம் கேட்டு பயந்துபோய் அவர்களும் அலறியடித்து எழுந்து லைட்டைப் போட்டார்கள். வியர்த்து விறுவிறுத்துப்போய் திருதிருவென்று உட்கார்ந்திருந்தான் கிரி.

“என்ன நடந்துச்சு, ஏன்டா இப்படி அலறின?” என்று கேட்ட அவர்களிடம், “ஒண்ணுமில்ல கனாக் கண்டு பயந்துட்டேன்” என்றான். “லூசாடா நீயி? எருமை வயசாச்சு! கனவு கண்டு பயந்தா? அதுக்கு இப்புடியா சத்தம் போடுவ? ச்சே! நாங்க என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டோம்” என்றார்கள்.

அன்றைக்குத்தான் முதல்முதலாக அவனது அப்பா ரயில் விபத்தில் இறந்த சம்பவத்தை அவர்களிடம் சொன்னான். அதைக் கேட்ட இருவரும் தூக்கம் கலைந்துபோய் பிரமை பிடித்தவர்கள்போல அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். கிரி அவர்களிடம், “சாரிடா! பத்து வருஷத்துக்கும் மேல ஆச்சு. இருந்தாலும் எப்பவாவது அந்த சீன் அப்படியே கனவுல வரும்” என்றான். அவனுக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல், குடிக்கத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவனை உறங்கச் சொல்லிவிட்டு, அவர்களும் படுத்துக்கொண்டார்கள்.

ஒரு வாரத்து அழுக்குத் துணிகளையும் துவைத்து, மொட்டைமாடியில் காயப் போட்டுவிட்டு அறைக்குள் நுழைந்து, ‘உஸ்ஸ்ஸ்’ சென்ற பெருமூச்சுடன் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்தான் கிரி. தேவை ஏற்பட்டால் எப்படியும் வாழ்ந்துவிடுபவர்கள்தான் மனிதர்கள் என்கிற நம்பிக்கையில் கட்டப்பட்டது அந்த மேன்சன்? அதில் அந்தச் சிறிய அறை? அந்தப் பத்துக்குப் பத்தில்தான் மூன்று பேர்களுடைய படுக்கைகளும், ஏர்பேகுகளும். ஓர் ஓரத்தில் இண்டக்ஷன் ஸ்டவ் ஒன்றும், இரண்டு மூன்று அலுமினியப் பாத்திரங்களும். மேலே அறையின் குறுக்கே கட்டியுள்ள அந்த நைலான் கயிற்றில் எப்போதும் அம்பாரியாய்த் தொங்கும் அழுக்குத் துணிகளும், எப்போதும் மரண ஓலமிட்டு, போனால் போகிறதென கொஞ்சம் காற்றையும் கொடுக்கும் அழுக்கும் பிசுக்கும் பிடித்த அந்த மின்விசிறியும். பச்சையா நீலமா என்று சொல்ல முடியாத ரெண்டுங்கெட்டான் நிறத்தில் எந்தக் காலத்திலோ அடிக்கப்பட்ட சுவர் பூச்சில் ஆங்காங்கே இரவில் எரிச்சலுடன் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தமும், சுவரோடு அறையப்பட்ட கொசுக்களின் ரத்தமும் பளிச்செனத் தெரியும் பின்புலமும்.

ஒன்னிபாளையத்தில் அவனது வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் கீத்துக் கொட்டாயில் ஒரு சின்னக் கல்யாணமே நடத்திவிடலாம். சுத்தியிருக்கற புங்கைமரக் காத்தும், குளிர்ச்சியும் கயித்துக்கட்டல்ல படுத்தா கண்ணை அசத்திகிட்டு வரும். இந்த அறைக்கு வந்த புதிதில், ஒவ்வொருமுறை வெளியிலிருந்து அறைக்குள் நுழையும்போதும், அவனுக்கு மூச்சுமுட்டுவதுபோலவே இருக்கும். இருபத்தியாறு வயசு, நாற்பத்தைந்து கிலோ எடையோடு கச்சலா… கறுப்பா… களையாக இருக்கும் அந்த பையனுக்கு ஆறுக்கு ரெண்டடி இடம் போதாதா என்ன?

உண்மையில், அன்றைய தேதியில் அவனது நிலைமைக்கு அது மிகப்பெரிய வசதியாகவும், உதவியாகவும் இருக்கிறது என்பதை அவனது அறிவு சொன்னபோதும், பழகின பழக்கம் காரணமாக அவ்வப்போது அவனுக்கு மூச்சுமுட்டும். என்றாலும், அதுபற்றியெல்லாம் அவன் யாரிடமும் மூச்சுக் காட்டமாட்டான். அவன் பிறந்து வளர்ந்ததே அப்படித்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, கண்ணில் கண்ட வேலைகளுக்கெல்லாம் விண்ணப்பம் செய்துகொண்டேயிருந்தபோதுதான் இந்த வேலைக்கு அழைப்பு வந்தது. ‘ஊரு உலகத்துல எங்கயெல்லாமோயிருந்து கோயமுத்தூருக்குப் பொழைக்க வாறாங்க. நீ இந்த சீமை வேலைக்கு மெட்ராஸ் போகோணுமா?’ என்ற அப்புச்சியின் கேள்விக்குப் பொறுமையாக பதில் சொல்லவேண்டியிருந்தது. எப்படியோ அரை மனதோடு ஒப்புக்கொண்டார்கள்.

இந்த வேலைக்கு நேர்காணலுக்கு செல்வதற்கான செலவுக்கு இரண்டாயிரம் ரூபாய் புரட்டுவதே கண்ணாமுழி பிதுங்கியது. எப்படியோ வந்து நேரில் சந்தித்தபோது, என்னவோ கம்பெனி எம்.டி.க்கு அவனைப் பிடித்துப்போனதில் வேலை கிடைத்தது. உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் எங்கே தங்குவதென்பது பெரிய பிரச்னையானது. திக்குத் தெரியாது சென்னையில் முச்சந்தியில் நின்ற நேரத்தில், அவன்மீது அன்பும், அக்கறையும் கொண்ட முகநூல் அப்பா ஒருவர்தான் விக்கியை அறிமுகம் செய்துவைத்தார். அட்வான்ஸ்கூட வாங்கிக்கொள்ளவில்லை விக்கி. கடந்த ஒரு வருஷத்துக்கும் மேல விக்கியும் பீட்டரும்தான் அவனது நட்பு, உறவு, சொந்தம் எல்லாம்.

செலவுகள் எல்லாம் போக வீட்டுக்கு மாதம் ஏழாயிரம் அனுப்ப முடிகிறது. போன் பண்ணும்போதெல்லாம், ஆரம்பத்தில் அவனைப்பற்றி கவலையோடு புலம்பிக்கொண்டிருந்த அப்புச்சி, ஆத்தா, அம்மா மூவருமே இப்போது அமைதியாகிவிட்டார்கள். வீட்டுச் செலவுக்குத் தட்டுப்பாடில்லாமல் இருப்பதால், அவன் வேலையில்லாமல் இருந்தபோது ஏற்பட்ட சலிப்பு, கசப்பு, வெறுப்பு, எரிச்சல், கோபம் எல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, இருந்த இடம் தெரியாமல் போனது.

அவனது வேலைக்கு இருசக்கர வாகனம் அவசியம் வேண்டும் என்கிற சூழல் வந்தபோது, எம்.டி கொடுத்த சம்பள அட்வான்ஸில் பதினைந்தாயிரத்துக்கு பழைய ‘டிஸ்கவர் பைக்’ ஒன்றை வாங்கினான். இப்போதெல்லாம் கிரி பக்கா சென்னை பையன் ஆகிப்போனான். அவன் படித்த பிபிஏக்கு சரியான வேலை கிடைக்காமல், அப்படியே வேலை கிடைத்துப் போனபோதெல்லாம் ஒழுங்காக சம்பளம் கிடைக்காமல், படித்து முடித்து இரண்டு வருடத்தில், நான்கு இடங்களில் வேலை பார்த்தான்.

கோவை நகரத்திலிருந்து இருபத்தைந்து மைல் தொலைவில்தான் அவனது வீடு. எங்கு வேலைக்குப் போனாலும், ஒரு நாளைக்கு பஸ்ஸுக்கே எழுபது ரூபாய் செலவாகிவிடும். இதற்குக் காலையில் அஞ்சு மணிக்கே எழுந்து, அம்மா சமையல் செய்துகொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பட்டு அனுபவித்து நொந்துபோய், எப்போதும் நச நசவென்று பிரச்னைகள் நிறைந்த நீண்ட அந்த வாழ்க்கையில் கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்ள இடைவெளி கிடைத்தது இந்த ஒரு வருடமாகத்தான்.

ஆனால், அந்த நேரத்தில்தான் எல்லோரையும் அச்சுறுத்தும் அது வந்தது. கொரோனா அச்சத்தால் மார்ச் முதல் வாரத்திலிருந்தே ட்ரேவல் மார்ட்டில் பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. அரசு அறிவித்த ஒரு நாள் ஊரடங்கு அன்று பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. `பந்த்’ என்றால் ஒரு கொண்டாட்டம் இருக்குமே அதுபோலத்தான் இருந்தது அன்றைக்கு. அதன்பிறகு இரண்டு நாட்களில் யாருமே எதிர்பார்க்காத இடியொன்று இறங்கினது.

அறையில் இருந்த டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. மூன்று பேரும் கையில் வைத்திருந்த மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது, வழக்கத்துக்கும் மாறாக மிகையான இசை அதிர்வுகளுடன் அலறிக்கொண்டு வந்த செய்தியின் ஒலி, மூவரது கவனத்தையும் திருப்பியது.
“இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். விமானங்கள், ரயில்கள், பஸ், டாக்ஸி, ஆட்டோ என எந்தவிதமான போக்குவரத்து வாகனங்களும் ஓடக்கூடாது. திரையரங்குகள், பொதுநிகழ்ச்சிகள் என எங்குமே மக்கள் கூட்டமாகக் கூடக்கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களின்றி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது” என மத்திய அரசு அறிவித்தபோதுதான் எல்லாருக்கும் கிலி பிடிக்கத் தொடங்கியது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மெல்ல மெல்ல மக்களுக்கு உறைக்க ஆரம்பித்தது.

அடுத்த நாள் விக்கி, பீட்டர் இருவரையும் ஆஃபீஸ் வரத்தேவையில்லையென்று, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கிடைத்தது. இரண்டு பேருமே திருச்சியைச் சேர்ந்தவர்கள். அருகருகேதான் அவர்கள் வீடு. எனவே, அடுத்தநாள் காலை இருவரும் விக்கியின் பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்குப் புறப்படுவது என்று முடிவுசெய்தார்கள். “நீ என்னடா பண்ணப் போறே?” என்று அவர்கள் கேட்டபோது, கிரியினால் எந்தப் பதிலும் சொல்லமுடியவில்லை. “நாங்க ரெண்டு பேரும் மட்டுமல்ல, மேன்ஷன்ல எல்லாருமே அவங்கவங்க ஊருக்குப் போறதாத் தெரியுது. சரி, உங்க ஆஃபீஸ்ல என்ன சொன்னாங்க?’

“எங்க எம்டி ‘மறுபடியும் போன் பண்ணி சொல்ற வரைக்கும் யாரும் வேலைக்கு வரவேண்டாம். என்னால் முழு சம்பளம் கொடுக்க முடியாது. உங்க நெலமையும் எனக்குத் தெரியும்’னு சொல்லிட்டாங்க. என்னை மட்டும் நாளைக்கு வீட்டுக்கு வா பேசலாம்’னு வரச் சொல்லிருக்கார்” என்றான் கிரி. “நாளைக்கு உங்க வீட்லயும் பேசிட்டு டக்குன்னு ஒரு முடிவு பண்ணு” என்று சொல்லி எல்லாரும் தூங்கப்போனார்கள்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே விக்கியும், பீட்டரும் புறப்பட்டார்கள். அவனைத் தனியே விட்டுச்செல்ல அவர்களுக்கு மனசேயில்லை. அதேநேரத்தில் வேறு வழியுமில்லை. “ஏதாவது அவசரம்னா ஒடனே போன் பண்ணுடா” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். காலையில் எம்டி வீட்டுக்குப் போனபோது, “கிரி என்ன பண்ணப்போறே? ஊருக்குப் போகலையா?” என்று கேட்டார்.

“இல்ல சார். ஊருக்குப் போனாலும் அங்கயும் ஒரு வேலையும் இல்ல. சும்மாதான் இருக்கணும். போன வாரம்தான் போயிட்டு வந்தேன். நான் மாசம் ஒரு தடவைதான் போயிட்டிருக்கேன். எனக்கு என்ன முடிவு பண்றதுன்னு தெரியல சார்.”

“ஓகே… அப்ப ஒண்ணு பண்ணு. ரெண்டு வருஷத்தோட பேரல்லல் அக்கவுன்ட்ஸ் எல்லாம் பாக்கி இருக்கு. இப்ப ஆஃபீஸ் ஓபன் பண்ண முடியாது. நீ நம்ம வீட்டுக்கு வந்துடு, நானும் எங்கயும் போக முடியாது. உனக்கு மட்டும் நான் ஃபுல் சாலரி கொடுத்திடறேன்.”

அப்படியே எம்டி வீட்டில் போய் வேலை செய்யத் தொடங்கினான். மதியம் அங்கேயே சாப்பிட்டுக்கொண்டான். ஹோட்டல், மெஸ் எதுவுமில்லாத நேரத்தில் ரொம்ப உதவியாக இரு.ந்துச்சு. காலை பொதுவாக எதுவும் சாப்பிட மாட்டான். காலையும் மாலையும் எம்டி வீட்டில் ஒரு கப் காஃபி கிடைக்கும். இரவு எதையாவது வைத்து ஒப்பேத்திக்கொள்வான்.

அந்தக் கட்டடத்தில் மொத்தம் எட்டு அறைகள். அது நவீன வசதிகள், செக்யூரிடி கொண்ட மேன்ஷன் எல்லாம் இல்லை. கீழ்தளம் கடைகளும் முதல் தளம் ஓர் அலுவலகமும், இரண்டாவது தளத்தில் எட்டு அறைகள். எட்டு அறைகளுக்கும் சேர்த்து நான்கு கழிவறைகள். இரண்டு குளியலறைகள். பல நேரங்களில் ஆண்கள் அவசரத்துக்கு மொட்டைமாடியில் நின்றுகொண்டே குளிப்பது சாதாரணமான காட்சி. விக்கியும் பீட்டரும் புறப்பட்டுப்போன இரண்டு நாட்களில் மொத்த அறைகளும் காலியானது. எல்லாருக்கும் உயிரச்சம். ஒவ்வொருவர் புறப்படும்போதும், “நீ இன்னும் கெளம்பலையா?” என்று துக்கம் விசாரித்துவிட்டுத்தான் போனார்கள். அப்படிக் கேட்கும்போதெல்லாம் ‘நாம் இங்கு இருப்பது சரியில்லையோ?’ என்று தோன்றியது.

அவ்வளவு பெரிய கட்டடத்தில் தனியாக இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு பிரச்னை ஒன்றுமில்லை. எப்படியோ பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. மாலை அறைக்கு வந்தபின் வீட்டுக்கு போன் பேசுவது, விக்கி பீட்டருடன் போனில் பேசுவது, அரைகுறையாக எதையாவது சமைத்து சாப்பிடுவது என்று போயிற்று. அதன்பிறகு திடீரென கெடுபிடிகள் தொடங்கின. ஒரு நாள் எம்டி வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, சாலையில் நான்கைந்து போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு இருசக்கர வாகனங்களை மறித்து நிறுத்தினர்.
“வெளியே வரக்கூடாது என்றுசொன்னாத் தெரியாதா? எத்தன சொன்னாலும் அடங்க மாட்டீங்க” என்று கண்டித்தனர். எட்டு பத்து பேர் சேர்ந்த பிறகு நடுரோட்டில் நின்று இருபது தோப்புக்கரணம் போடு என்று சொன்னார்கள். சிலர் தயங்கி நின்றனர். “வண்டி வேனும்ணா தோப்புக்கரணம் போட்டுட்டு எடுத்துட்டுப் போ. இல்லேன்னா வண்டிய விட்டுட்டுப் போயிட்டே இரு. கோர்ட்ல வந்து ஃபைன் கட்டிட்டு வண்டிய எடுத்துக்கோ” என்றதுதான் தாமதம்… எல்லாரும் தோப்புக்கரணம் போடத்தொடங்கினர். இதை ஏதோ ஒரு சேனல்காரன் படம் பிடித்துக்கொண்டிருந்தான்.

நடுரோட்டுல இப்படி ஒரு கேவலமான நிலமை வரணுமான்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமாகக் கெடுபிடிகள் அதிகமாயின. அறையைவிட்டு கொஞ்ச நேரம்கூட வெளியில் போகமுடியவில்லை. அப்படியே போக நினைத்தாலும் எங்கே போவதென்று தெரியவில்லை. டீவியைப் போட்டால் கொரோனா செய்திகளாக வந்தன. பார்க்கப் பார்க்க இன்னும் பயம்தான் அதிகமாகியது. இத்தாலியிலும், அமெரிக்காவிலும் பயங்கரமான பாதிப்பு மக்கள் கொத்துக் கொத்தாக சாகிறார்கள் என்கிற செய்தி வந்தது.

ஒருபுறம் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படவில்லையெனக் குற்றச்சாட்டுகள், இன்னொருபுறம் ஹெலிகாப்டர்களிலிருந்து மருத்துவத்துறை ஊழியர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்களாம். கொரோனாவை விரட்ட வெள்ளிக்கிழமை விளக்கேற்றுங்கள், சனிக்கிழமை கைதட்டுங்கள், ஞாயிறன்று கும்மியடியுங்கள் என்று கோமாளித்தனமாக என்னென்னவோ வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்கள். உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் நோய் தாக்கப்பட்டும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மடிந்துகொண்டுமிருந்தார்கள். இங்கே என்னவென்றால், ஆட்சியிலிருக்கும் அதிமேதாவிகள் இன்னும் மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று ஜோசியம் சொன்னார்கள். அவர்கள் சொல்லி இரண்டே நாளில் கோயம்பேடு கொரோனா உற்பத்தி மய்யமாகிவிட்டது என்கிற செய்தியும் வந்தது.

மீண்டும் இரண்டாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் ரூமுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, மாலை நான்கு மணி இருக்கும். திடீரென ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. நடுரோட்டில் வண்டியிலிருந்து நான்கு போலீஸ்காரர்கள் கையில் லாத்தியுடன் குதித்தவர்கள், தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் விரட்டி விரட்டி கண்மூடித்தனமாக அடிக்கத் தொடங்கினார்கள். “தா****ங்களா… வெளிய வராதீங்கன்னா கேக்க மாட்டீங்களாடா?” என்று திட்டிக்கொண்டே… நல்லவேளை அவனுக்கு பின்புறம் ஒரே அடிதான் விழுந்தது. அதற்குள் எப்படியோ சுதாரித்து வண்டியை வேறு வழியாக ஒடித்து திருப்பிக்கொண்டு அறையை நோக்கிப் பறந்தான்.

அடுத்த நாள் விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்டி, ஒரு மாத சம்பளத்தைக் கையில் கொடுத்து, “நிலைமை சரியில்லை. நீ ஊருக்குப் போவதாக இருந்தால் போ” என்று சொல்லிவிட்டார். அறைக்கு வந்து யோசித்துப் பார்த்தான். என்ன செய்வதென்று புரியவில்லை. கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல, இல்லை…. இல்லை கை கால்களையெல்லாம் கட்டி கிணற்றுக்குள் வீசினதுபோல இருந்தது. வீட்டுக்கு போன் பேசுவதுகூட குறைந்துபோனது. விக்கி, பீட்டரோடும் பேச்சு குறைந்தது. நாள், தேதி, கிழமை எதுவும் தெரியவில்லை, தெரிந்துகொள்ளவும் அவன் விரும்பவில்லை.

எப்போதும் அவன் தன்னைப்பற்றி பெருமையாக நினைத்துக்கொள்வான். “நான் யாருக்கும் எப்போதும் எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன். என்னைச் சுற்றியுள்ளவர்களின் சந்தோஷம்தான் எனது சந்தோஷம். இந்த வாழ்க்கைய மத்தவங்களுக்காக வாழும்போதுதான் அதுக்கு உண்மையான அர்த்தம் இருக்கு”னு நண்பர்களிடம் தத்துவம் பேசுவான். அப்போதெல்லாம் பல நேரங்களில் சில நண்பர்கள், “நீ இப்படியே இருந்தீன்னா, நீதான் ஒன்னா நம்பர் இளிச்சவாயனா இருப்பே. எல்லாரும் உன் வாயில வச்சு தேய்ச்சுட்டுப் போயிட்டே இருப்பாங்க. ரொம்ப சுயநலமா இருக்கணும்னு சொல்லலே. கொஞ்சம் உன்னோட சௌகர்யத்தையும் பாத்துக்கோடா. இல்லேன்னா வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்படுவே. கடைசிவரைக்கும் கஷ்டப்பட்டுட்டேயிருப்பே” என்று சொன்னபோதெல்லாம் அதன் உண்மையான அனுபவம் எப்படியிருக்குமென்பது அவனுக்குத் தெரியவில்லை.

முதன்முதலாக அது புரியத்தொடங்கியது. விக்கி, பீட்டர் ரெண்டு பேரும் ஊருக்குக் கிளம்பினபோதே தானும் ஊருக்குக் கிளம்பிப் போயிருக்க வேண்டும். மாசா மாசம் முழு சம்பளம் கிடைக்கும்போது, அதை விட்டுவிட்டு வீட்டுக்குப் போயி பாரமா இருக்க வேண்டாம்னு இப்படி வடிகட்டின முட்டாள்தனமா ஒரு முடிவெடுத்துவிட்டு, இப்படி தீப்பிடித்த காட்டின் நடுவில் சிக்கிக்கொண்டதுபோல ஆயிட்டோமேன்னு நினைத்து நினைத்துக் குமைந்தான். செய்வதற்கு வேலை எதுவுமில்லை. பேசுவதற்கு ஆளுமில்லை, நல்ல சாப்பாடுமில்லை, நாளை என்ன நடக்கும் என்பது நிச்சயமுமில்லை. எல்லாவற்றையும்விட தொலைக்காட்சிகளில் காட்டப்படும் செய்திகள் வயிற்றில் பீதியைக் கிளப்பின. அறையில் கிடந்த பழைய மேகசின்களை எல்லாம் வரிவிடாமல் படித்து முடித்தான்.

ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களுக்கே போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. அமைச்சர்களுக்குள் பனிப்போர். சுகாதார அமைச்சர் தினமும் எல்லா சேனல்களிலும் லைவில் இருக்கிறார் என்பதால், தனக்கு இருக்கும் இமேஜைவிட தனக்குக் கீழே இருக்கும் ஆளுக்கு பாப்புலாரிடியா என்கிற எரிச்சலில், பேட்டிகள் எல்லாம் மருத்துவத்துறை செயலாளர்தான் கொடுக்கவேண்டுமென ரகசிய உத்தரவுகள் பறந்தன. உள்ளூர் செய்திகள், மாநிலச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள் எல்லாவற்றிலும் ‘கொரோனா…. கொரோனா… கொரோனா….’ பைத்தியம் பிடித்து டீவி ஸ்க்ரீனை உடைத்துவிடலாம் என்று தோன்றியது. `ஐயோ… இது என்ன கொடுமையான நரகம்? இப்படியே இந்த மாடியிலிருந்து குதித்துவிடலாமா?’ என்று தோன்றியது அவனுக்கு.

ஒரு மாறுதலுக்காக டீவியில் படம் பார்க்கலாமென்றால், அது அதைவிடக் கொடுமையான அனுபவமாக இருந்தது. சாப்பாட்டுப் பிரச்னை இன்னும் மோசமானது. எப்போதுமே அவன் சமையலில் பெரிய ஆளெல்லாம் கிடையாது. பஞ்சத்துக்கு ஆண்டி! எதையாவது செய்து எப்படியாவது ஒப்பேத்திவிடுவான். இப்போ தனியாக ஓர் ஆளுக்கு சமைப்பது கொடுமையான தண்டனை. அதுவும் இருக்கிற ஒன்றிரண்டு பாத்திரங்கள், குறைவான மளிகை சாமான்கள். பல நாட்கள் இருக்கிற சோற்றில் தண்ணீரையும் உப்பையும் போட்டுக் கரைத்து, ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு எப்படியோ உள்ளே தள்ளிவிட்டுப் படுத்துக்கொள்வான். நடு ராத்திரியில் பசியால் வயிற்றுக்குள் இன்ஜீன் ஓடும். அப்போதுதான், வீட்டிலிருக்கும்போது என்றைக்காவது அவன் கோபித்துக்கொண்டு இரவு சாப்பிடாமல் படுத்தால். “டேய், உன் கோவத்தையெல்லாம் மூட்டைகட்டி வெச்சுட்டு ரெண்டு வாயி சோறு திண்ணுட்டுப் படு. குத்துப்பட்டடவனுக்குத் தூக்கம் வந்தாலும் வரும். கொலப் பட்னிக்காரனுக்குத் தூக்கம் வராது”னு அவனது அம்மா சொல்வது நினைவுக்கு வந்தது.

வாழ்க்கையை ஒவ்வொரு இன்ச்சும் நகர்த்துவதென்பது கொடுமையாக இருந்தது. வெறுத்துப்போய் கொஞ்ச தூரம் நடந்துபோய் கிடைக்கும் நேரங்களில் அம்மா உணவகத்தில் போய் சாப்பிடத் தொடங்கினான். இந்த நேரத்தில் ருசி கௌரவமெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. கையிலிருக்கும் ஒவ்வொரு பைசாவும் முக்கியம். காசு தீர்ந்துபோனா… ஒண்ணு பிச்சையெடுக்கணும். இல்லேன்னா பட்னி கெடந்து சாகணும். இது ரெண்டு வழிதான். அம்மா உணவகத்தில் சாப்பிடுவதிலும் பிரச்னை வந்தது. ஆளும் கட்சியினர் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார்கள். அதே எதிர்க்கட்சியினர் கேட்டபோது, அரசு அதை மறுத்தது. இலவசமாக சாப்பிடுவது என்பது பிச்சையெடுப்பது போன்று தோன்றினாலும் வேறு வழியில்லை. சின்னச் சின்ன ஹோட்டல்கள்கூட இன்னும் திறக்கவில்லை.

இப்படித்தான் ஒரு நாள் அம்மா உணவகத்தில் மதிய சாப்பாட்டுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்தான். இவனுக்குக் கொடுத்ததோடு சாப்பாடு தீர்ந்துபோனது. பின்னால் ஏழெட்டு பேர் வரிசையில்… வயதானவர்கள், சிறுவர்கள் எல்லாமாக. யாருடைய சோற்றையோ திருடித் திண்பதுபோல ஒரு குற்றயுணர்வு. இரண்டு பேருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பெரியவர் ஒருவரின் முகத்தில் பசி, கோபம், சோறு கிடைக்கவில்லையே என்கிற ஆத்திரம் எல்லாமாக வெடிக்கிறது.

“நல்லா தீவிட்டி தடிமாடுக கணக்கா இருக்கானுங்க. கல்யாண வூட்டுல எச்செலிக்கு அட்ச்சுக்கறா மாதிரி இங்க வந்தர்றானுங்க. இல்லாதப்பட்டவங்க சாப்படட்டும்ணு தோணுதா பாரு” என்று இவன் காதுபடவே சொன்னார். ஒரு நிமிஷம் அப்படியே கூனிக் குறுகிப்போனான். தனது நிலையை எண்ணித் தானே அவமானம் கொண்டான். ஏமாற்றத்தோடு போய்க்கொண்டிருந்த அந்தப் பெரியவரின் பின்னால்போய், சாப்பாட்டை அவரிடம் கொடுத்து, “ஐயா இந்தாங்க. நீங்க சாப்பிடுங்க” என்று சொன்னான்.

ஒரு நிமிஷம் குற்றயுணர்வோடு அவனது முகத்தைப் பார்த்தவர், “ஐய்யோ! தம்பி கோச்சுக்காதப்பா. இன்னிக்கு காலைலேயும் ஒண்ணும் துண்ணல, வயசாயிடுச்சா, பசி வந்தா ரொம்பக் கோவம் வருது. வாணாம் வாணாம் நீ துண்ணு போ” என்று சோற்றை ஒதுக்கினார்.

“ஐயா… நானும் கோவிச்சுகிட்டு குடுக்கலீங்கய்யா. எங்க வீட்ல எங்க தாத்தா உங்கள மாதிரிதான் இருப்பாரு. அப்டி நெனச்சுதான் குடுக்கறன் வாங்கிக்கோங்க” என்று வற்புறுத்தி, அவர் கையில் திணித்துவிட்டு நடக்கத் தொடங்கினான். அலங்கார வார்த்தைகளில் நன்றி சொல்லத் தெரியாத அந்தப் பெரியவர், நன்றி உணர்வு நிறைந்த கண்களோடு, அவன் கொடுத்த சோற்றை கையில் வைத்துக்கொண்டு, அவன் போகிற திசையையே பார்த்துக்கொண்டு நின்றார்.

அழுகையா அவமானமா? தன் மீதே கோபமா வெறுப்பா? கழிவிரக்கமா, விரக்தியா என்று புரியாத கலவையான உணர்வோடு பசியோட நடந்து வந்துகொண்டிருந்தான். எதிரில் பைக்கில் வந்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவனை வழிமறித்து, “பாஸ் சாப்ட்டீங்களா?” என்று கேட்டபோது, `இவர்கள் எதற்காக தன்னைக் கேட்கிறார்கள்? என்ன பதில் சொல்வது’ என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தபடி நின்றுகொண்டிருந்தான். இல்லை என்கிற பாவனையில் தலையை மட்டும் குறுக்காக ஆட்டினான்.
வண்டி டேங்க் மீது வைத்திருந்த பையிலிருந்து ஒரு சாப்பாடுப் பொட்டலத்தை எடுத்து அவன் கையில் வைத்துவிட்டு, “இன்னிக்கு இந்த ஏரியாவில சப்ளை. நாலஞ்சு பொட்லம் மீதியாயிடுச்சு. அதான் உங்களைக் கேட்டோம் தப்பா எடுத்துக்காதீங்க” என்றான். முகம்கூடத் தெரியாது முகக் கவசம் அணிந்திருந்த அந்த இளைஞன்தான், அந்த நேரத்தில் கடவுளாகத் தெரிந்தான். கண்கள் கலங்க சாப்பாட்டை கையில் வாங்கிக்கொண்டு அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அவர்கள் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும்போல இருந்தது.

இந்தக் கொரோனா நேரத்தில் யாரையும் தொடக்கூடாதே என்கிற நினைவு வந்தபோது, “ரொம்ப நன்றிங்க. நானும் ஏதாவது ஹோட்டல் இருக்குமான்னுதான் தேடிப் போயிட்டிருந்தேன்” என்றான். “பரவால்லங்க, இது வீட்ல நாங்க செஞ்சதுதான். பேச்சிலரா? டேய் அவருக்கு இன்னோரு பேக்கெட் கொடுத்துரு நைட்டுக்கு சாப்டட்டும்” என்றார் பின்னால் அமர்ந்திருந்த இன்னொரு இளைஞர். கொடுத்த இன்னொரு பேக்கெட் சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு கையெடுத்துக் கும்பிட்டான் அந்த இளைஞர்களை. “அடப் போங்க பாஸ்…” என்று சிரித்துகொண்டே கையை அசைத்தபடியே பைக்கில் பறந்தனர் இருவரும்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு யுகமா கடந்துபோகிறது. மனஇறுக்கம், விரக்தி, மனச்சோர்வு, சலிப்பு, பயம்… சில நாட்கள் தனியே படுத்து வாய்விட்டு அழத்தொடங்கிவிடுவான். கதறி அழுதால் பாரம் குறையும் போல இருந்தது. ஒட்டுமொத்த கட்டடத்திலும் யாரும் இல்லாததால், அவன் கதறிக் கதறி அழுதாலும், ஏன்? தற்கொலை செய்த கொண்டாலும்கூட யாருக்கும் தெரியப்போவதில்லை. அவ்வளவு பெரிய சென்னை நகரத்தில், அந்த அறை ஒரு மோசமான நரகம் போலவும், இருண்ட குகை போலவும், மனித வாசனையே இல்லாத மாயாலோகம் போலவும் தோன்றியது.

இந்த நேரத்தில்தான் ஒரு நாள் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தபோது, `புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால், கால்நடையாக நடந்துபோகிற காட்சிகள் காட்டப்பட்டன. இது என்ன கொடுமை என்று தோன்றியது. இன்னொரு நாள் சொந்த ஊருக்குச் ரயில்வே ட்ராக்கில் நடந்து சென்றுகொண்டிருந்த சிலர் நடந்து நடந்து சோர்ந்துபோய் அசதியால் மேற்கொண்டு நடக்க முடியாமல் ஓய்வெடுக்க எண்ணினர். ரயில்கள்தான் ஓடுவதில்லையே என்கிற எண்ணத்தில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் 16 பேர்கள். அந்தத் தடத்தில் வந்த கூட்ஸ் ரயில் ஏறி மாண்டுபோனார்கள். அந்தச் செய்தி அவனை என்னவோ செய்தது. வாட்ஸப்பில் வந்த வீடியோவை வேறு பார்த்துத் தொலைத்துவிட்டான்.

இனி என்ன ஆனாலும் சரி, இந்தப் பாழும் நரகத்தில் இருக்கக் கூடாது என்று முடிவுசெய்து, கோவை போவதற்கான எல்லா வழிகளையும் முயற்சி செய்து பார்த்தான். தனியார் டாக்ஸியில்தான் போயாக வேண்டும். ஓர் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் கேட்டார்கள். அதிர்ந்துபோனான். அதுவும் ‘இ- பாஸ்’ வாங்கித்தான் போகமுடியும் என்றார்கள். `இது என்னடா கொடுமை? சொந்த மாநிலத்திலேயே, தனது சொந்த ஊருக்குப் போக அரசின் அனுமதி பெற்றுத்தான் போகவேண்டுமாம். சரி, ஆனது ஆகட்டும்’ என்று முடிவு பண்ணி அளவான துணிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

ரோடு வழியாகச் சென்றால் போலீசிடம் அடிவாங்க வேண்டிவரும் என்பதால், ரயில் ரோட்டில் நடக்க முடிவுசெய்தான். நடந்துகொண்டேயிருந்தான். வெய்யில் சுட்டெரித்தது. ரொம்பவும் முடியாதபோது ஓரத்திலிருக்கும் மர நிழலில் கொஞ்ச நேரம் இளைப்பாறினான். மீண்டும் நடந்தான். நடந்துகொண்டேயிருக்கையில் திடீரென அவனது கால் செருப்பு தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. அவசரமாக காலை எடுத்தபோது காலே சிக்கிக்கொண்டது. என்ன முயன்றும் காலை விடுவிக்க முடியவில்லை.

“ஐயோ… யாராவது வந்து கப்பாத்துங்களே!”னு அலறினான். ஆனால், அவனது சப்தம் யாருக்குமே கேட்கவில்லை. யாருமே வரவில்லை. ஆனால், தொலைவில் ஒரு ரயில் வந்துகொண்டிருந்தது. `சரி, அப்பாவுக்கு நேர்ந்த அதே முடிவுதான் தனக்கும்’ என்று கதறினான். “ஐயோ அப்பா…! ஐயோ அப்பா…!’

சட்டென முழிப்பு வந்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். வியர்த்து தொப்பலாக நனைந்து போயிருந்தான். நெஞ்செல்லாம் படபடவென்று அடிக்கும் சப்தம் அவன் காதுகளுக்குக் கேட்டது. எழுந்துபோய் ரெண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தான். இரவு மணி இரண்டு. இத்தனை சோகங்களையும், இத்தனை துன்பங்களையும், இத்தனை உயிர் அச்சங்களையும் சுமந்துகொண்டு எதுவுமே நடக்காததுபோல அந்தச் சென்னை மாநகரமே பெரியதொரு அனகோன்டா போல உறங்கிக்கொண்டிருந்தது. அவனைப் போலவே தூக்கத்தில் கெட்ட கனவுகண்ட தெரு நாய் ஒன்று மட்டும் தூரத்தில் ஊளையிட்டு ஒற்றையில் அழுதுகொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை வண்டியை எடுத்துக்கொண்டு எம்டி வீட்டுக்குப் போய் சொன்னான், “சார், இங்க என்னால தனியா இருக்க முடியல சார். இனி இருந்தன்னா எனக்கு பைத்தியம் புடிச்சிரும். ஊருக்குப் போறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ‘இ-பாஸ்’ வாங்கிட்டுத்தான் போகணும்னு சொல்றாங்க” என்றான்.

அவரது சிஸ்டத்தில் அவரே அப்ளை பண்ணினார். “வெயிட் பண்ணிப் பார். போறதுக்கு டிரான்ஸ்போர்ட்டுக்கும் நானே பேசிப் பார்க்கிறேன். உனக்கு பாஸ் வந்ததும் மறக்காம எனக்கு போன் பண்ணு” என்று சொல்லியனுப்பினார். “சம்பளம் வாங்கின பணம் ஏதாவது மிச்சம் வெச்சிருக்கியா?” என்றபோது, பந்தாவாக “அதெல்லாம் இருக்குங்க சார்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். அறைக்கு வரும் வழியிலேயே வண்டி வாங்கிக்கொடுத்த வொர்க் ஷாப் வேலு அண்ணனைப்போய்ப் பார்த்தான். நிலைமையை எல்லாம் எடுத்துச் சொல்லி, “இ-பாஸ் கெடச்ச ஒடனெ எங்க ஊருக்குப் போகணும்ண்ணா. எப்ப திரும்பி வருவேன்னு தெரியல. அதனால எப்படியாவது இந்த வண்டிய முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல விலைக்கு வித்துக் குடுங்க” என்று சொன்னான்.

அவரோ, “தம்பி! வசதியானவன் எவனும் பழைய வண்டி வாங்க மாட்டான். எல்லாம் ஒன்றரை லட்சம், ரெண்டு லட்சம் போட்டு புது வண்டிதான் வாங்குவான். இது கொடுமையான கொரோனா காலம் வேற. செகனேன்ட் வண்டி வாங்கறவன் எல்லாம் உன்னைய மாதிரி இல்லாதப்பட்டவன்தான். இந்த நேரத்துல அவனவன் சோத்துக்கே கஷ்டப்பட்டுட்டு இருக்கப்போ, யாருப்பா வண்டி வாங்குவாங்க? சரி, எதுக்கும் உன் போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போ. ஏதாவது பார்ட்டி வந்தா நான் உன்னைக் கூப்பிடறேன். அப்ப நீ வண்டிய எடுத்துட்டு வந்து காமி. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்” என்று சொல்லியனுப்பினார்.

சென்னை கொஞ்சம் கொஞ்சமாக விஷமயமாகிக்கொண்டே வந்தது. அவனது ‘இ-பாஸ்’ என்ன ஆனதென்று இரண்டு நாட்கள் வரையில் எதுவுமே தெரியவில்லை. கோயம்பேடு ஏரியா முழுக்க ‘ரெட் ஸோன்’ ஆயிடுச்சு. கோடம்பாக்கம், காசிமேடு, பெரம்பூர் எல்லாம் வேக வேகமாகப் புதிய கேஸ்கள் அறியப்படுகின்றன. தொழில் இல்லாதததால் மனம் உடைந்து மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை என்றும், வீட்டு வாடகை கேட்டு துன்புறுத்தினார்கள் என்கிற கோபத்தில் வீட்டுக்காரரைக் கொன்ற குடித்தனக்காரர். மனநிலை சரியில்லாத தாய்க்கு உணவளிக்க வேண்டி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்டுச் சென்ற பதினான்கு வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆறு காமக் கொடூரன்கள் ’போக்சோ’ சட்டத்தில் கைது, கொரோனா பாதிப்பில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் மனம் உடைந்து தப்பிவந்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று எல்லாம் மனதை உலுக்குகின்ற செய்திகளாக. நாளுக்கு நாள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் கொடிய நரகமாகிக்கொண்டே வருகிறது.
வீட்டில் போன் பண்ணினபோதெல்லாம் அவர்கள் பயந்துவிடக்கூடாதே என்று, “நான் இருக்கிற பகுதியில் ஒன்றும் பிரச்னை இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று சொல்லி வந்தான். ஆனால், ஒரு கட்டத்தில் அவனுக்குப் பயம் அதிகமாகிக்கொண்டே வந்தது. மீண்டும் எம்டிக்கு போன் பண்ணி, “எனக்கு இங்கேயிருக்க பயமாக இருக்கு. ‘ம் அப்ளை பண்ணின பாஸ் ‘ரிஜக்டட்’னு வந்திடுச்சு சார். எப்படியாவது உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி எனக்கு ‘இ-பாஸ்’ வாங்கிக் கொடுத்தா நான் யாரையாவது கையைக் காலைப் பிடிச்சு ஊர் போய் சேர்ந்துவிடுவேன் சார்” என்று அழுதான்.

“சரி, விசாரித்துவிட்டு நாளை சொல்கிறேன்” என்ற மனிதர் அடுத்த நாள் போனில் அழைத்தார். “ஏம்ப்பா… எனக்குத் தெரிஞ்ச ஆளு ஒருத்தன் இருக்கான். அவன் பணம் செலவாகும்னு சொல்றானே? அஞ்சாயிரம் கேக்கறான்” என்றார். “பரவால்ல சார் குடுத்தறலாம் சார்!” என்றவனிடம், ஒரு போன் நம்பரைச் சொல்லி, “நாளை காலை பத்து மணிக்கு போனில் அந்த ஆளிடம் பேசு. அவர் விபரம் எல்லாம் சொல்வார்” என்றார்.
அதேபோல அடுத்த நாள் காலை பேசினபோது, ஓர் இடம் சொல்லி தன்னை அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நேரில் வந்து சந்திக்கச் சொன்னார். “வழக்கமா ஒரு பாஸ்க்குப் பத்து ரூபாபா ஆகும். உங்க எம்டி நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட மனுஷன். அதனால அவர் சொல்லச் சொல்லி அஞ்சு ரூபால முட்ச்சுக் கொடுக்குறன் வா. வர்றப்ப மறக்காம துட்டு எட்துட்டு வந்துடு” என்றான் அந்த ஆள்.

அதேபோல ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்… இன்னும் என்னவெல்லாம் கேட்டானோ, அதையெல்லாம் எடுத்துச்சென்று அந்த ஆளைப் பார்த்து, ஐந்தாயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டு வந்தான். அடுத்த நாள் மாலை ஏழு மணிக்கு போன் வந்தது. “ரொம்ப கஷ்டப்பட்டு ஒங்க மொதலாளி மூஞ்சிக் கோசரம் இதை செஞ்சி குடுத்திருக்கேன். ச்சே! என்ன எழவு இது? தாவு தீந்து போச்சிப்பா. நாளைக்கு டேட் போட்டு பாஸ் கெட்சிருக்குது. உங்க தாத்தாவுக்கு ரொம்ப ஒடம்பு முடியலேன்னு சொல்லித்தான் வாங்கியிருக்கு. இன்னும் ரெண்டு ரூபா சேத்திக் குடுப்பா” என்று மேலும் ரெண்டாயிரத்தைக் கறந்துவிட்டான்.

வீட்டுக்கு போன் பண்ணி சொல்லக்கூட நேரமில்லை அவனுக்கு. முதலில் எம்டிக்கு போன் பண்ணி நன்றி சொன்னான். விக்கிக்கு போன் பண்ணி ரூம் சாவியை எங்கே கொடுக்க வேண்டும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, வொர்க் ஷாப் வேலு அண்ணன் கிட்டப்போயி, “பைக்க வித்துட்டு கார்ல போனா பத்தாயிரம் காருக்கே குடுக்கணும். அதனால பைக்லயே ஊருக்குப் போயிடறேன்”னு சொன்னபோது, “ஆமாப்பா… ஒரு ஃபைனான்ஸ்கார நாயி ஐயாயிரம் ரூபாக்கு வாங்கிக்கறேன்னான். நீ மூடீட்டுபோன்னு சொல்லிட்டேன். பொணத்து வாயில இருக்கற வாக்கரிசியைக்கூட வழிச்சிட்டு போயிருவானுக. போ” என்றார்.
ராத்திரி ரூமுக்கு வந்து கொண்டுபோக வேண்டியதெல்லாம் பேக் பண்ணி வெச்சிட்டு, ரூமை சுத்தம் பண்ணிட்டு படுக்கும்போது இரவு மணி பதினொன்று. `வீட்ல இந்நேரம் எல்லாரும் தூங்கியிருப்பாங்க. சரி, காலைல புறப்படும்போது சர்ப்ரைஸா வீட்டுக்கு போன் பண்ணிக்கலாம்’னு முடிவுசெஞ்சு படுத்தப்போ தூக்கமே வரல அவனுக்கு.

எப்ப நெனச்சாலும் அன்ரிசர்வ்டு கம்ப்பார்ட்மென்ட்ல காலைல ஏறித் தொத்திகிட்டு 200 ரூபாய் செலவுல ஏழு மணி நேரத்துல வந்த சென்னையும் கோவையும், இன்னிக்கு இரண்டு எதிரி நாடுகள் போலவும், கடும் சோதனைகளுக்குப் பிறகு, ‘பாஸ்போர்ட்’ வாங்கிக்கொண்டு எப்படியோ உயிர் பிழைப்பதற்காகத் தப்பிப் பிழைத்து அடுத்த நாட்டுக்கு ஓடிப்போவது போலவும் தோன்றியது அவனுக்கு. அந்த டென்ஷனில் இரவு முழுவதும் சரியாகத் தூங்க முடியவில்லை.

காலையில் ஏழு மணிக்கெல்லாம் புறப்பட்டு ரூமை பூட்டிவிட்டு, வண்டியை எடுத்துக்கொண்டு ஓட்டத் தொடங்கினான். பெட்ரோல் பங்க்கில் டேங்க் ஃபுல் பண்ணிட்டு, ஒரு சிறிய ஹோட்டலில் போய் காலை டிஃபனை முடித்துகொண்டு, வழியில் சாப்பிட கொஞ்சம் பிஸ்கட், சிப்ஸ், தண்ணீர் பாட்டில் என எல்லாம் வாங்கிக்கொண்டான். வீட்டுக்கு போன் போட்டான்.

“அம்மா, நான் புறப்படறேன்.”

“எங்கப்பா போறே? எங்க பொறப்படற?’’

“என்ன வெளையாடறையா? நான் எங்க போவன்? அங்க நம்ம ஊட்டுக்குத்தான் வர்றேன்.”

“ஐய்யோ… என்னடாப்பா சொல்ற? அங்க மெட்ராசெல்லாம் பயங்கரமாக் கொரானா புடிச்சிக் கெடக்குது. அங்கிருக்கறவங்க ஆருமே ஊரை வுட்டு வெளிய போகக்கூடாதுன்னு கெவெருமெட்ல சட்டம் போட்டிருக்காங்கன்னு தெனம் தெனம் டீவில சொல்லிட்டிருக்கறாங்க. இந்த நேரத்துல நீ எதுக்குப்பா இங்க வாரை?”

ஒரு நிமிஷம் அவனுக்கு திக்கென்றது. `கொஞ்சம் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மாதம் ஊருக்குப் போகவில்லையென்றால், போனில் அழுகின்ற அம்மாவா இது? எனக்கு இங்கு என்ன நிலைமை என்பதையோ, ஒவ்வொரு நாளும் சோத்துக்கு பிச்சைக்காரனைவிடக் கேவலமாக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, யாருமில்லாத அநாதையைப் போல நான்கு மாதம் ஒரு நரக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, எப்படியாவது இங்கிருந்து தப்பித்து சொந்தக் கூட்டுக்குப் போய்விடலாம் என்று தவியாய் தவித்து…’
“கிரி …. கிரீ… இதா அப்புச்சி பேசுதாமா.. இந்தா குடுக்கறனிரு.”

போன் அப்புச்சி காய்க்கு மாறியது.

”ஏனப்பா… நீ இங்க வாரதுன்னா மின்னாடியெ கேக்க வேண்டாமா? இங்க ஊரே கிலி புடிச்சுக் கெடக்குது. ஒரு வாரத்துக்கு மின்னாடி நம்ம மணியகார்ரு மகன் பம்பாயிலிருந்து, அதான் அந்தப் பையன் நாகராசு கொரானாவோட ஊருக்குள்ள வந்துட்டானுன்னு சொல்லி, அக்கம் பக்கமெல்லாம் ஊடேறி சண்டைக்குப் போயி, ஏகப்பட்ட பிரச்னையாயிடுச்சு. அப்புறம், போலீஸ் வந்து அந்தப் பையனைக் கூட்டீட்டுபோயி நாலு நாளு ஆஸ்பத்திரில வெச்சு, என்னென்னமோ டெஸ்ட்டெல்லாம் எடுத்தாங்க. பதனஞ்சு நாளைக்கு ஊட்டை உட்டு எங்கயும் வெளிய போகக் கூடாதுன்னு கண்டிசன் போட்டு, முந்தா நாளுதான் வந்தான். அவங்கூட்டு வாசல்ல நோட்டீசெல்லாம் ஒட்டீருக்கறாங்க. ஒரு சனம் அவங்க ஊட்டுக்குப் பக்கமே போறதில்ல. இத்தனை அக்கப்போர்ல நீ எதுக்கு இத்தனை அவசரமா சொல்லாம கொள்ளாம பொறப்பட்டு வாரை? கம்முன்னு அங்கயே இருக்க வேண்டியதுதான?”

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு. போனை அணைத்து பாக்கெட்டில் போட்டான். தன் வீட்டிலேயே தன்னை வரவேண்டாமென்று சொன்னால் தான் எங்கு போவது? இவர்களை விட்டால் உறவென்று சொல்வதற்கு தனக்கு யாரிருக்கிறார்கள்? இதற்குத்தான மூன்று மாதமாக எந்தத் துன்பத்தையும் யாரிடமும் சொல்லாமல் தானே கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுகொண்டிருந்தோம்? ஒரு வாரமாக நாயாய்ப் பேயாய் அலைந்து ஏழாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பாஸ் வாங்கினோம்? அவன் கால்களுக்கு அடியிலுள்ள பூமி அப்படியே நழுவதுபோல கால்களிரண்டும் தடுமாறின.

இப்போது என்ன செய்வது? உயிர் பயம்! ரத்த சம்பந்தமான உறவுகளைக்கூட கொன்றுவிடுகிறதே என்கிற கசப்பான உண்மை அவனுக்குள் என்னென்னவோ செய்தது. போன் தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருந்தது. போனை எடுத்து என்ன பேசுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. எதுவும் பேசவும் பிடிக்கவுமில்லை. வயிற்றைக் கலக்குவது போலவும் வாந்தி வருவதுபோலவும் இருந்தது. பைக்கை ரோட்டோரமாகத் தள்ளிக் கொண்டுபோய், ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவிட்டு தலையைப் பிடித்துக்கொண்டு, தரையில் குத்துக்காலிட்டு அப்படியே உட்கார்ந்துகொண்டான். தலைதலையாய் அடித்துக்கொண்டு, `ஓவென்று’ வாய்விட்டு அழவேண்டும் போல இருந்தது. ‘அப்பா அன்னிக்கே உங்களோட சேர்ந்து நானும் செத்துபோயிருக்கலாம்ப்பா’ என்று அவனது வாய் முணுமுணுத்தது.

தூரத்தில் வந்துகொண்டிருந்த போலீஸ் ஜீப் ஒன்று, அவன் தெருவில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு வேகத்தைக் குறைத்து நின்றது. வண்டிக்குள்ளிருந்த இன்ஸ்பெக்டர், பாதி அதிகாரத் தொனியிலும், பாதி நக்கலாகவும், “டேய்… என்ன காலங்காத்தாலயே மப்பைப் போட்டுட்டு ரோட்ல உக்காந்து கெடக்கிறியா?’ என்றதும், பதறியடித்து, “அப்படியெல்லாம் இல்ல சார்… இதோ போயிடறன் சார்” என்று பவ்யமாக எழுந்து நின்றான். வண்டியில் ஏறி உட்கார்ந்தவனுக்கு எங்கு போவது என்றுதான் தெரியவேயில்லை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button