கவிதைகள்
Trending

மொழிபெயர்ப்பு கவிதைகள்- நந்தாகுமாரன்

ஒகிவாரா செய்சென்சுய்: மஞ்சள் மலர்கள் பூத்த செடி* – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்

குளிர்கால வானம் பிரகாசிக்கிறது
குழந்தைகளின் குரல்கள்
வட்ட வட்டமாக

*****

கெண்டை மீன்கள் ஒன்று கூடுகின்றன
மௌனத்தில், இலையுதிர்காலம் முன்னேறுகிறது
ஒவ்வொரு திசையிலும்

*****

ஒரு நாளின் வெறுமை
வறட்சியை மீறிக் கடந்து செல்கிறது
ஒரேயொரு வெள்ளைப் பட்டாம்பூச்சி

*****

ஒரு கல்லும் இன்னொரு கல்லும்
நிலா ஒளியேற்றிய இந்த இரவில்
ஒன்றையொன்று தழுவிக் கிடக்கின்றன

*****

ஒரு நண்பன் பனியை விட்டு வெளியே வர
நான் காத்துக் கொண்டிருக்கிறேன் பனியில்

*****

மஞ்சள் மலர்கள் பூத்த செடிகள்*
மணற் கடற்கரையெங்கும்
வசந்தகாலம் தன் கண்களைத் திறக்கிறது

*****

வானில் நடந்தபடி
தெளிந்த நிலவு
தனிமையில்

*****

“ஏய்” என்றான் ஒரு தனிமையான மனிதன்
“ஏய்” என்றது ஒரு தனிமையான மலை

*****

நான் எங்கு பார்த்தாலும்
வசந்தகால மேகங்கள், மலைகளில்
சேன்டோகா** நடந்த இடமெல்லாம்

*****

ரகசியமாக
நான் வசந்தகாலத்திற்கு ஏங்குகிறேன்
எனக்கு வயதாகிவிட்டது

*****

வசந்தகாலம் ஆவியாகிறது
கடந்து செல்லும் ஒரு எருது வெறுந்தரையை நக்கிப் பார்க்கிறது
ஒரு நிழலோவியம்

*****


* Dandelion – சீமைக் காட்டுமுள்ளங்கி

** தனேதா சேன்டோகா (Taneda Santōka) – செய்சென்சுய்யின் மாணவர். (சகே*** குறித்த ஹக்கூக்கள் நிறைய எழுதியவர்)

*** ஜப்பானிய அரிசி மது


ஆசிரியர் குறிப்பு:

ஒகிவாரா செய்சென்சுய் (Ogiwara Seisensui) – (16 ஜூன் 1884 – 11 மே 1976)

இயற்பெயர்: ஒகிவாரா டோக்கிச்சி (Ogiwara Tōkichi)

ஜப்பானில், டாய்ஷோ மற்றும் ஷோவா காலங்களில் வாழ்ந்த ஒரு ஹைக்கூ கவிஞர். சுதந்திர வடிவ ஹைக்கூ இயக்கம் தோன்ற மூல காரணமாக இருந்தவர். செய்தோகு இளையோர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்தில், பள்ளியின் கல்வி முறைகள் மற்றும் நிர்வாகத்தை விமர்சித்து மாணவர் செய்தித்தாளில் கட்டுரை வெளியிட்டதால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். பிறகு அசாபு இளையோர் உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது, தன் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தை விட்டு, தீவிரமாக படிப்பில் ஈடுபட்டு, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெற்றார். அங்கே மொழியியலில் பயின்ற போது, ​​ஹைக்கூ எழுதுவதில் நாட்டம் கொண்டார்.

1911 ஆம் ஆண்டில் சக ஹைக்கூ கவிஞர் கவாஹிகாஷி ஹெகிகோடோவுடன் (Kawahigashi Hekigoto) இணைந்து பரிசோதனை முயற்சிகளுக்கான இலக்கிய இதழாக, ‘சௌன்’ (“அடுக்கு மேகங்கள்” என்று ஜப்பானிய மொழியில் அர்த்தம் வரும்) என்ற இதழை நிறுவினார். செய்சென்சுய், ஹைக்கூ மரபுகளை கைவிடுவதற்கான ஒரு வலுவான ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக தகாஹாமா கியோஷியால் (Takahama Kyoshi) என்ற ஹைக்கூ கவிஞரால் மிகவும் விரும்பப்பட்ட, ஜப்பானிய பாரம்பரிய ஹைக்கூவின் முக்கிய அடையாளமான “பருவம் சார்ந்த குறிப்புச் சொற்கள்”, மற்றும் “5-7-5 எழுத்து விதிமுறைகள்” ஆகியவற்றை நிராகரித்தார்.

அவரது மாணவர்களில் ஓசாகி ஹொசாய் (Ozaki Hōsai) மற்றும் தனேதா சேன்டோகா (Taneda Santōka) ஆகியோர் முதன்மையானவர்கள். அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் கணிசமான செல்வமும் ஆசீர்வாதங்கள் போல அமைந்திருந்ததால் சுதந்திர ஹைக்கூ வடிவத்தை அவரால் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. மேலும் அவரால், ஊடகங்களை, குறிப்பாக, தேசிய வானொலியில் விரிவுரைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள் ஆகியவற்றை, தன் பணியையும், தன் பாணியையும் விளம்பரப்படுத்த உபயோகித்துக் கொள்ளவும் முடிந்தது.

செய்சென்சுய் தன் வாழ்வின் பிற்பகுதியில் ஜப்பான் முழுவதும் நிறைய பயணங்களை மேற்கொண்டார். அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்தபோது, இருநூறுக்கும் அதிகமான ஹைக்கூக்கள், கட்டுரைகள், பயணக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதி முடித்திருந்தார்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close