கட்டுரைகள்
Trending

திருக்கார்த்தியல்- நாரோயிலுக்கு அழைத்துச்செல்லும் சிறுவர்கள்

அபிநயா ஸ்ரீகாந்த்

நாகர்கோவில் மட்டுமல்லாமல் கன்னியாகுமாரி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள தெருக்கள், கிராமங்கள், தோட்டங்கள், மலைகள், ஆறுகள், வழி நம்மை கைபிடித்து அழைத்துச்செல்கின்றார்கள் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பின் கதாநாயகர்கள்.  அவர்கள் அனைவருமே பெரும்பாலும் சிறுவர்களாகவும் பதின்பருவத்தை எட்டப்போகும் பொடியன்களாகவும் இருப்பதால் அவர்களை அலைக்கழிக்கும் வாழ்வியலும், வாட்டி எடுக்கும் பசியும், வலியும் குபுக்கென்று அழுகையுடன் சோகத்தையும் பதட்டத்தையும் வரவழைத்து விடுகின்றன.

உலகின் ஆகச்சிறந்த அன்பு பரிமாற்றம் கலவி. காதல் இல்லாத கணத்தில் கொடுமையான தண்டனையாக நம் உடலையே அருவருக்க வைக்கும். பாலியல் துன்புறுத்தலை அனுபவித்த அனைவருமே இந்த சொற்றொடருன் உடன்படுவார்கள். எல்லாரும் மறக்க நினைக்கும் அந்த வலியை நம்முள் கிளறிவிட்டு யாரும் தொந்தரவு செய்ய முடியாத இடத்துக்குச் சென்றுவிடுகிறாள் ‘ஊழிற்பெருவலி’ சுமதி. முள்அகழி, காய்கறிகள், பழத்தோட்டங்கள் சூழ்ந்த பெரிய நாடார் வீட்டை கற்பனை செய்து பார்ப்பதே பேரானந்தம். செவிவழிக்கதைகளாக கேட்கப்பட்ட இசக்கி கதைகளை உயிர்பித்து மிரட்சியுடன் காட்சிப்படுத்திக்கொள்கையில் உடல் நடுங்கி அடங்குகிறது.

லிங்கம் வயிராற சாப்பிட ஒரு அடுமனையிலேயே வேலைகிடைத்துவிட்டது என்ற போது கிடைத்த நிறைவு, ஆசையாய் எடுத்த முந்தரி பருப்பிற்கான தொகையை அவன் கல்லாப்பெட்டியில் சேர்த்துவிட மனம் கூடுதலாக நிரம்புகிறது. லிங்கத்துடைய பாட்டியின் கண்களில் தெரிந்த வெளிச்சத்தை நம்மில் உணர முடிவது ஆசிரியரின் அழகான கதை சொல்லல் முறைக்குச்சான்று. பெரும்பாலான  கதைகளில் பசி, வறுமையின் கொடுமைகளை, சின்ன சின்ன ஏக்கங்களையும் ஆசைகளையும் எளிய சிறுவர்களின் வழியாய் பகிர்ந்து இருப்பதாலேயே இரக்கமும் மனமாற்றமும் வலிந்து திணிக்கப்பட்டதாக அல்லாமல் தன்னளவிலேயே சூரந்து விடுகின்றன.

காணி வாத்தியார் தாத்தா, டாக்டர் அக்கா, பானி கதாப்பாத்திரங்கள் துளி சுயநலமில்லாமல் தன்னைச்சுற்றி உள்ளவர்களுக்கு தன்னாலான ஏற்பாடுகளை செய்து வரும் மனிதர்களை ஞாபகப்படுத்திச்செல்வதுடன் நம் வாழ்வில் நீங்காத நினைவுகளுடன் கலந்து விடுகின்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டது போல் அலைபவர்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களது உளவியலைத் தாண்டி இந்த சமூகத்தினால் தான் என்பதற்கு உதாரணம் தான் பானி சிறுதையில் வரும் இளைஞன். பால்ய காலத்தில் பெயர் இடப்படாது பொங்கி வரும் அன்பை சிலரிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செலுத்தி வருவோம். அதே அன்பு அவர்களிடமிருந்து பிரதிபலனில்லாமல் நம்மை நீரூற்றாக நனைக்கும் தருணங்கள் சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. அப்படியொரு அன்புச்சாரலாய் டாக்டர் அக்காவின் வாஞ்சையை வசப்படுத்திக்கொள்ள நமக்கும் ஆசையாய் தான் இருக்கிறது.

அம்மாவே தனக்கு ஆதரவாக இல்லாத வருத்தத்துடன் பறவையாய் வீட்டை விட்டு வெளியேறும் ராஜீவை விட இரண்டு பிள்ளைகளையும் திருப்திப்படுத்த எத்தனித்து ஒரு பிள்ளையாயவது மகிழ்ச்சியாக வைத்திருப்போம் என்று முடிவுக்கு வரும் ‘விரிசல்’ கதையில் வரும் லெட்சுமியின் நிலைமை தான் பரிதாபமாய் தோன்றியது. தேவை உள்ளவனுக்குப் பயன்படாமல் போகும் போதுதான் சட்டத்தின் கோட்பாடுகளின் மீதும் இடஒதுக்கீடுகளின் மீதான அவநம்பிக்கையும் மேல் எழுகின்றது. ‘உடற்றும் பசி’யின் கார்த்திக்கை போன்று இன்னும் எத்தனை எத்தனைச்சிறார்களின் எதிர்காலம் கண்கள் எட்டா தூரத்திற்கு சென்றுவிட்டன என்பதற்கு எந்த குறிப்புகளும் நம்மிடம் இல்லை. காவல் அதிகாரிகளின் மீதான நம்பிக்கை முடிவடையும் நேரத்திலும் துளிர்க்கும் சிறு நம்பிக்கையாய் சில காவல் அதிகாரிகள் சிறுகதைகளில் வந்து போகின்றார்கள்.

மாட்டிறைச்சிக்கடை, பழச்சாறுக்கடை, பேக்கரி கடை, பெயிண்டர்களின் உதவியாளர்கள், சைக்கிள் கடை, டெய்லர் கடை, ரேசன்கடைகளில் எடுபடி வேலை செய்யும் பையன்கள் என்று இனி யாரைப் பார்த்தாலும் இத்தொகுப்பின் கதைமாந்தர்களாகத்தான் நம் கண்களுக்குத் தெரிவார்கள். அப்படித்தெரியும் சிறார்களிடம் சாப்டியா?…உனக்கு எதாவது வேணுமா?…உனக்கு என்ன பிடிக்கும்? என்று கேட்க மனம் அலைபாயும்.

காம்பிப்போன அல்வாவாயினும் அதை சாப்பிடுவது, மூத்திரம் பெய்த இடத்தில் கிடைத்த கொடுக்காப்புளியை துடைத்து வாயில் போட்டுக்கொள்வது பசி, ஏக்கத்தின் வருத்தமளிக்கும் நீட்சியே. சிறுகதைத் தொகுப்பில் வரும் சிறுவர்களது அனுபவங்கள் அனைத்தும் யதார்த்தமானவை. அவை அனைத்தும் உண்மைதான் என் நம்பவைக்கக்கூடியவை. கற்பனைகளாக, புனைவுகளாக அல்லாமல் வேலைக்குச் செல்லும் சிறார்களின் பாடுகளை பக்கத்திலிருந்து பார்த்து,கேட்டு உணர்ந்தால் ஒழிய இத்தனை உருக்கமான மொழியும், சிறுகதைகளும் சாத்தியமில்லை.

‘எனக்கொரு கொழுக்கட்டை தராத இந்த ஊரு , அழிஞ்சி போகட்டும்’ என வெறுப்பின் உச்சத்தை சாபமாக்கும் சிறுவனின் வார்த்தைகள் பலித்து விட அதிக வாய்ப்பிருப்பதால் சுயநலம் கருதியாவது அவர்களை பசியின் பிடியிலிருந்து இழுத்துவர பதட்டமடைகின்றது. இப்படி பசியின் கொடுமையால் பாதை மாறிச்செல்பவர்கள் தானே சமூகத்தை அச்சுறுத்தும் பிள்ளைகளாக வளர்ந்து நிற்பார்கள். ஆரம்பத்தில் அவர்களை அரவணைக்காமல் பின்னர் அவர்களைக்குறை சொல்வதில் நியாயம் ஏதும் இல்லை தானே…

பனஓலைக்கொழுக்கட்டை செய்முறையை செந்தமிழுக்கு விவரிக்கும் பொழுது அதை எடுத்துச்சாப்பிட கை பரபரக்கிறது. ராம் தங்கத்தின் வட்டார மொழியும், கெட்டவார்த்தையாகினும் பயன்படுத்தப்படும் எதார்த்தமான சொற்பிரயோகங்கள் அந்த மக்களின் உரையாடலை நம்முடன் நகர்த்திச்செல்கின்றன. வினோத் தடவிக்கொடுக்கும் கன்றுக்குட்டி கனநேரத்தில் அவனைப் பிரிந்து செல்லும் பொழுது அவனுடனேயே அழுது தீர்க்கின்றோம். கதையின் முடிவில் அவன் கால்களை நாய்கள் நக்கும் பொழுதோ, சட்டையை பிடித்து இழுக்கும் பொழுதோ வினோத் உடலில் சிறு அசைவாவது ஏற்பட வேண்டும் என்று ‘கடந்து போகும்’ கதையைச் சட்டென்று கடந்து போக முடியாமல் மனம் இறைஞ்சி நிற்கின்றது.

வம்சி புக்ஸ்

பக்கங்கள் – 208

விலை – 170

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close