கட்டுரைகள்

திருநங்கைகளும் குற்றப்பரம்பரை பொதுபுத்தியும்

மு.ஆனந்தன்

ஒரு கடையில், திருமண அரங்கில், கூட்டரங்கில், ரயிலில், பஸ்ஸில், வேறு ஏதாவது ஒரு பொதுஇடத்தில் திருட்டு நடந்தால் நாம் யாரைச் சந்தேகப்படுவோம். அந்தக் கூட்டத்திலுள்ள ஆம்பள, பொம்பள, பெருசு, சிறுசு, நெட்ட, குட்ட, செவத்தவன், கருத்தவன் என எல்லோரையும் சந்தேகப்படுவோம். எல்லோரையும் சோதனை செய்வோம். அதே சமயம் அந்தக் கூட்டத்தில் ஒரு திருநங்கை இருந்தால் நாம் எல்லோரையும் சந்தேகப்படுவோமா ?. இல்லை. இல்லவே இல்லை. நாம் எல்லோருடைய பொதுப்புத்தியும் சொல்லி வைத்தாற்போல் சட்டென அந்தத் திருநங்கையை நோக்கிக் கூச்ச நாச்சமில்லாமல் கைநீட்டும். இதுதான் நமது பொதுப்புத்தியில் படிந்திருக்கிற திருநங்கைகள் குறித்த அடையாளம். பாலியல் தொழிலாளி என்ற அழுகிய பார்வையுடன் திருட்டுப் படிமமும் இணை சேர்ந்து விடுகிறது. ஒரு திருநங்கை மீது திருட்டுக் குற்றம் சுமத்துவதற்கு அவர் திருநங்கையாக இருப்பது ஒன்றே நமது சகலவித நியாய தர்மங்களுக்குப் போதுமான சாட்சியமாக இருக்கிறது.

குற்றப்பரம்பரையில் சிக்கிய சாதிகள்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளைப் போலீசுக்குப் பெரும் சவாலாக விளங்கிய பஞ்சாப், தக்காணப் பகுதிகளில் சுழன்று திரிந்த நாடோடிக் கொள்ளைக்குழுக்களை அடக்குவதற்காக 1871 இல் பிரிட்டிஷ் அரசு இயற்றிய கொடுஞ்சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம். இதன் துருப்பிடித்தப் பற்சக்கரங்களின் கொடும்பிடியில் இந்தியா முழுவதும் 213 சாதிகள் சிக்கின. 1911 இல் இச்சட்டம் தமிழகத்தின் மீது வலை வீசியது. அந்த வலையில் 89 சாதிகள் சிக்கி சீரழிந்தன. குறவர், நரிக்குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், கள்ளர், பிரமலைக்கள்ளர், மறவர், அகமுடையார், முத்தரையர், வலையர், எருகளா ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, புலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக்கவுண்டர், தொம்பர், கேப்மாரி, தொட்டியநாயக்கர், தெலுங்கம்பட்டிச் செட்டியார், தலையாசி, இஞ்சிக்குறவர் . . . எனப் பட்டியல் நீளும்.

குற்றப்பரம்பரையாக இப்படியாப்பட்ட சாதிகள், நாடோடிகள், பழங்குடிகள், தலித்துகள், அடிமைகள் அனுபவித்த கொடுமைகளின் கொடுங்கதைகளை ஓரளவாவது கேட்டுள்ளோம். பிரமலைக்கள்ளர் சமூகத்தின் மீது பிரிட்டிஷ் அரசால் குற்றப்பரம்பரை தார்ப்பாலின் போர்த்தப்பட்டு, சுருட்டப்பட்டு நையப்புடைத்தெடுக்கப்படுகிற காட்சிகளையெல்லாம் சாகித்திய அகாதமி விருது பெற்ற காவல்கோட்டம் நாவலில் எழுத்தாளர் சு.வெங்கடேசனின் கூரிய பேனா தத்ரூபமாகச் சித்திரித்துச்செல்லும். வேல. ராமமூர்த்தியின் கதைகள் அனைத்தும் குற்றப்பரம்பரைச் சாதியாக சித்திரிக்கப்பட்ட தேவரின மக்களின் வாழ்வியலை, ஆன்மாவைப் பேசும். குற்றப்பரம்பரை என்ற நாவலே படைத்துள்ளார். “இருளப்பசாமியும் 24 ஆட்டுக்கெடாயும்” என்ற சிறுகதை ஆடு திருடுகிற ஒரு குற்றப்பரம்பரைச் சாதியிலிருந்து ஒரு இளைஞர் படித்துப் போலீஸ் இன்ஸ்பெக்டராகிற கதையை உரக்கப்பேசுகிறது. சில சினிமாக்களின் சில காட்சிகளும் குற்றப்பரம்பரையின் துயரங்களைப் பட்டும் படாமலும் பேசியுள்ளன.

பரம்பரையே இல்லாத குற்றப்பரம்பரை.

ஆனால் இந்தச்சட்டம் திருநங்கைகள் மீதும் பாய்ந்து குதறியுள்ளது என்பது யாருக்காவது தெரியுமா?. இதைக் குறித்து யாராவது பேசியுள்ளார்களா? எழுதியுள்ளார்களா?. குறிப்பிட்ட சாதிகளைப் பரம்பரையாகக் குலத்தொழிலாகத் திருட்டுத் தொழில் செய்வதாகச் சொல்லித்தான் குற்றப்பரம்பரையாகச் சித்திரித்தார்கள். திருநங்கைகள் என்ன பரம்பரையாக திருட்டுத் தொழில் செய்பவர்களா ? முதலில் இந்தப் பாலினம் பரம்பரையானது அல்லவே. திருநங்கைகளுக்குக் கர்ப்பப்பை கிடையேதே, மகப்பேறு, இனப்பெருக்கம் கிடையாதே, குழந்தைகள் பிறக்காதே, வாரிசுகளே இருக்காதே. திருநங்கைகள் என்ற பரம்பரையோ, வம்சமோ, குலமோ எதுவுமே கிடையாதே. பரம்பரையே இல்லாத திருநங்கைகளை எப்படிக் குற்றப்பரம்பரையாகச் சித்திரிக்க முடியும். இருந்தாலும் அரவான், இஜரா, ஈனக் போன்ற ஒட்டுமொத்த மாறியபாலினச் சமூகமே குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது. அந்தக் கதைகளின் துவாரங்களில் வழிந்தோடும் வேதனைகளின் பெருமூச்சை பற்றிய பேச்சோ, எழுத்தோ, படைப்போ, நாடகமோ, சினிமாவோ எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

மற்றக் குற்றப்பரம்பரைச் சாதிகள் போல் இவர்களும் தினமும் தங்களைக் காவல் நிலையத்தில் பதிந்து கொள்ள வேண்டும், தினமும் கைரேகை பதிய வேண்டும். கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டும். பொது இடங்களில் பெண்களைப் போல் நகை, உடை அணிந்து நடந்தால், பாடினால், ஆடினால் கைது, இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை, அபராதம். உள்ளாட்சி நிர்வாகங்கள் அப்பகுதியிலுள்ள அரவான்களின் விவரங்களை, சொத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கெடுபிடிகளின் துரத்தல்களின் ஊடாக மூச்சுமுட்டி வாழ்ந்தார்கள்.

இச்சட்டப்படி ஒரு அரவான், இஜரா, ஈனக் போன்ற மாறியபாலினர் 16 வயதுக்குட்பட்ட ஆண் நபரைத் தனது பொறுப்பில் வைத்திருப்பது பெருங்குற்றம். அதற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை, அபராதம். அதுமட்டுமா ஆண் குழந்தையைத் தத்தெடுப்பது, மைனர் குழந்தைக்குக் கார்டியனாக பத்திரங்கள் எழுதுவது போன்ற சிவில் உரிமைகளும் தடுக்கப்பட்டது. இப்படித்தான் பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்கள் குடிமக்களாகக் கருதப்படவேயில்லை. மாறாகக் குற்றவாளிகளாகத்தான் சித்ரவதைகளை அனுபவித்தார்கள். மற்றவர்கள் மீது திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகள் தான் பாயும். ஆனால் மாறியபாலினர் மீது கூடுதலாக, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு, பாலியல் தொழில் போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளும் சூழ்ந்து அவர்களை வன்மங்களின் உச்சத்திற்கு நெட்டிச்சென்றது.

கண்டுகொள்ளாதா போராட்டங்கள்.

தேசிய அளவில் அம்பேத்கர் தமிழ்நாட்டில் பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கம், ரோசாப்பூத் துரை ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு நாயுடு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுப்பாராவ், அரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, கம்யூனிசத் தலைவர்கள் ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி போன்ற பல தலைவர்கள் இச்சட்டத்தை முழுமையாக நீக்கவும் சில தலைவர்கள் இச்சட்டத்திலிருந்து சில சாதிகளை நீக்கவும் போராடினார்கள். ஆனால் யாரும் இச்சட்டத்திலிருந்து திருநங்கைகளை நீக்கச்சொல்லி குரல் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. இந்தக் கால கட்டத்தில் கூட நாம் யாரும் திருநங்கைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வராத போது ஒரு நூற்றாண்டிற்கு முன் நாம் அதை எதிர்பார்க்க முடியாது.

மாறிய அடையாளங்களும் மாறாத பொதுப்புத்தியும்.

சுதந்திரத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் கொடுஞ்சட்டங்கள் சில ரத்து செய்ப்பட்டது போல் குற்றப்பரம்பரைச் சட்டமும் 1949 இல் ரத்து செய்யப்பட்டது. இச்சட்டத்தால் இந்தியாவில் சுமார் 6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் கோரப்பிடியில் இருந்த அனைத்துச் சமூகத்தினரும் விடுவிக்கப்பட்டனர். இச்சட்டம் விலக்கப்பட்ட பின்பும் இவர்கள் சுதந்திர இந்தியாவின் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்தச் சட்டத்தின் படி சிறையிலடைக்கப் பட்டிருந்தவர்கள் அனைவரும் 1961 இல் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிறகு நிலைமை படிப்படியாக மாறத்துவங்கியது. தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அவர்களைக் குற்றப்பரம்பரை என்றழைப்பது நின்றது. மாற்றாக, குற்றமரபினர், பட்டியலில் நீக்கப்பட்டவர் அல்லது சீர்மரபினர் என்று அழைக்கப்பட்டனர். அதுவும் ஆவணங்களில் மட்டும் தான். பொதுவெளியில் புழக்கத்தில் இல்லை.

இன்று நாடோடிகள், பழங்குடி இனங்களைச் சார்ந்த 313 சமூகப் பிரிவினரும் 198 பட்டியலில் நீக்கப்பட்ட மற்ற சீர்மரபினர் சமூகங்களும் இந்தியாவில் இருக்கின்றனர். நரிக்குறவர் போன்ற நடோடி, அரைநாடோடிச் சாதிகளைத் தவிர இந்தச் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்துச் சமூகத்தினரின் மீது படிந்திருந்த குற்றப்பரம்பரை முத்திரை, அடையாளங்கள், தளும்புகள், சுவடுகள் அனைத்தும் மறைந்துவிட்டது. மாறிவிட்டது. அவர்களை அரசும் பொதுச் சமூகமும் குற்றவாளிகளாகப் பார்க்கிற நிலை முற்றிலும் மாறிவிட்டது..

ஆனால் திருநங்கைகள் உள்ளிட்ட மாறியபாலினர் மீது பூசப்பட்ட இந்தக் குற்றப்பரம்பரை சாயம் மட்டும் இன்றும் நீடித்து நிலைத்து நின்று தனது விணையைச் செய்து வருகிறது. சட்டம் ரத்துசெய்யப்ப்பட்டு 70 ஆண்டுகள் வழிந்தோடோடியும் பொது வெளியில், நமது பொதுப்புத்தியில், காவல்துறை, அரசு இயந்திரங்களின் நிர்வாகப் புத்தியில் அவர்கள் மீதான குற்றப்பரம்பரைச் சாயப்பூச்சு நீடிக்கிறது. நமது அரசு அவர்களைக் குடிமக்களாகப் பாவிக்கிற நிலையோ நமது சமூகம் அவர்களைச் சகமனிதர்களாக உணர்கிற நிலையோ இன்னும் ஏற்படவில்லை. திருநங்கைகளை, மாறிய பாலினத்தாரை திருடர்களாகப் பார்க்கிற நமது நேர் கொண்ட பார்வை எப்போதும் மாறும், மாற்றுவதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close