சிறார் இலக்கியம்
Trending

தேவையில்லாத பயம்

இரா.இராம்கி

ஒரு காட்டில், ஒரு குரங்குக் கூட்டம் வசித்து வந்தது. அவை மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அக்காடு மிகவும் செழுமையானது விதவிதமான மரங்கள்,  அவற்றில் விதவிதமான கனிகள் என்று வளமாய் இருந்த வனத்தில் குரங்களின் குதூகலத்திற்கு பஞ்சமே இல்லை. அவை பழங்களை பகிர்ந்து உண்ணும். சேர்ந்து மரக்கிளைகளில் தாவித் தாவி விளையாடும்.

அவ்வாறாக தாவித்தாவி விளையாடும் வேளையில் ஒரு குட்டிக்குரங்கு கீழே விழ இருந்தது. ஆனால் மயிரிழையில் உயிர் தப்பியது. அதன் தாய் குரங்கு ஒரு கையை கெட்டியாக பற்றிட, மற்றொரு கையை முறிந்து விழும் தருவாயிலுள்ள லேசான சிறு கிளையின் நுனியில் பற்றியிருந்தது. தாய்க்குரங்கு பலமாக பற்றி, குட்டிக்குரங்கை தூக்கி காப்பாற்றியது.இந்த காட்சிகளையெல்லாம் ஒரு கர்ப்பமான குரங்கு கண்டு கொண்டிருந்தது. அது நாளை நமது குட்டிக்கும் இதே நிலை வரலாம் அல்லவா என்று நினைத்து பயந்தது.

அந்தக்காட்டில் சனிக்கிழமைகளில்  விளையாட்டுகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடப்பது வழக்கம். மேலும்,உலகின் மற்ற வனங்ளிலுள்ள விலங்குகள் பற்றிய விளக்கப்படங்களையும் சிங்க ராஜாவிடம் அனுமதிப் பெற்று,  ஒளிபரப்பி வந்தனர். இவ்வாறாக, அனைத்து விலங்குகளும் ஒற்றுமமையாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

அன்று சனிக்கிழமை. விலங்குகள் யாவும் வனத்தின் மைய பகுதிக்கு வந்து,  கேளிக்கை அரங்கில் உற்சாகமாகக் கூடினர். கர்ப்பமான குரங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது.சிங்க ராஜா, முதலமைச்சர் புலி, துணை அமைச்சர்கள்- சிறுத்தை, கரடி அனைவரும் விஐபி இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

முதலில் குயில் வந்து கடவுள் வாழ்த்து கூவ, கிளி வரவேற்புரைத் தந்தது.முதல் நிகழ்ச்சி முயல்களின் குழு நடனம். அனைத்து விலங்குகளும் ஆர்வத்துடன் நடனத்தை கண்டு ரசித்தனர். பலமான கரகோஷங்கள் கிட்டின. இரண்டாவதாக மான்களின் மிமிக்ரீ. அற்புதம் என்று சிங்க ராஜாவே பாராட்ட அடுத்த நிகழ்ச்சியாக நரி ” அயல் நாட்டு வன விலங்குகள் பற்றிய” படமொன்றை ஒளிபரப்பியது.அன்று ஆஸ்ட்ரேலியா,  நியூசிலாந்து நாடுகளின் விலங்குகள் பற்றிய படத்தை நரி திரையிட்டது.கங்காரு மற்றும் வல்லாபிகள் பற்றி விரிவாக விவரித்தது அந்த விளக்கப் படம்.

அதனை அனைத்து விலங்குகளும் கண்டு மகிழ்ந்தன. கர்ப்பம் அடைந்துள்ளள குரங்கும் அப்படத்தை உன்னிப்பாக கண்டு ரசித்தது. அதன் மனதில் ஒரு விநோத எண்ணம் தோன்றியது.என்னதான் குட்டிக்குரங்குகள் தாய்க்குரங்கை பலமாகப் பற்றிக் கொண்டாலும், அவை தவறி விழுந்து விடக்கூடுமோ, என அஞ்சியது.மேலும் தனக்கும், கங்காருகளைப் போல் வயிற்றில் பை போன்ற அமைப்பு இருப்பின் பத்திரமாக தனது குட்டிகளை அதில் பாதுகாக்கலாம் என எண்ணியது.

சில மாதங்களில் அது ஒரு அழகிய பெண் குரங்கை ஈன்றது.அதன் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி. தனது குட்டிக்கு நேரத்திற்குத் தாய்ப்பால் தந்து, கவனமாகப் பார்த்துக் கொண்டது.குட்டியுடன்,மிகுந்த மகிழ்ச்சியாக தனது பொழுதைக் கழித்தது.

பிறகு ஒரு நாள்,  அது தனக்கு முன்பு தோன்றிய எண்ணத்தை(குரங்குகளுக்கும் வயிற்றில் பை போன்ற அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை) சில வயதான குரங்குகளிடம் சொன்னது. ஒரு வயதான பாட்டிக் குரங்கு சொன்னது, “இருந்தா நல்லாதான் இருக்கும் ஆனா இல்லயே” என்றது.

மற்றொரு பாட்டிக் குரங்கு சொன்னது,  அதற்கு அவசியமில்லை,நம்மை படைத்த இயற்கையோ இறைவனோ, அதை நமக்கு தர வில்லை எனவே அது தேவையில்லை என்றது. மேலும், குரங்குகளாகிய நாம், நமது குட்டிகள் நம்மை இறுக பற்றிட, சுமந்து செல்கிறோம், பல விலங்குகளால் அதன் குட்டிகளை இது போல் கூட சுமக்க இயலாது என்றது. அதற்குத் தாய்க்குரங்கோ, “இயற்கையா இல்லன்னா என்ன, செயற்கையா செய்துட்டா என்ன” என்றது.பாட்டிக் குரங்கோ, “நீ உன் மகள் மீது கொண்ட அன்பைக்கண்டு நெகிழ்கிறேன். ஆனால் உன் மனதில் தோன்றிய பயமே தேவையில்லாத ஒன்று நீ அதற்காகத் தேடும் தீர்வும் தேவையில்லாத ஒன்று” என்றது. “இல்லை,இல்லை நான் வித்தியாசமாக சிந்திப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றது. உடனே, வயதான குரங்கோ உன் இஷ்டம் என்றது.

நரியாரிடம் சென்று தன் யோசனையை சொன்னது.நரியாரும் இது தேவையில்லாத பயம் என்றது.இல்லை நான் முடிவு செய்து விட்டேன் என்று சொல்லி சென்றது.  சிறிது நேரம் கழித்து வந்தது. இரு முனைகளிலும் துளையிட்ட ,ஒரு சிறிய துணிப்பையை நரியாரிடம் கொடுத்து அதன் துளைகள்வழி ஒரு கயிற்றை விட்டு, பை, வயிற்றுக்குக் கீழ் தொங்கும் படியாக,முதுகில் கட்ட சொன்னது.நரியாரும் என்னமோ போ, உன் இஷ்டம் என்று கட்டி விட்டது

தாய்க்குரங்கு நன்றியை நரியாரிடம் தெரிவித்து விட் டு,  தனது குட்டியைப் பைக்குள் போட்டுக் கொண்டது. அதற்கு பூரிப்பு தாங்கவில்லை.அது மரத்துக்கு மரம் தாவியது. பழங்களை ருசித்தது. தனது குட்டி பைக்குள் உள்ளதா என பார்த்துக் கொண்டது.அதன் மனதில் யாருக்கும் தோன்றா யோசனை நமக்கு தோன்றியுள்ளது என கொஞ்சம் கர்வமும் வந்து விட்டது.

மறுநாள் வனத்தில்,  தாய்க்குரங்கு ,கொய்யா மரத்திலிருந்து மாமரத்திற்குத் தாவிய பொழுது,  கயிறு அறுந்து, குட்டியுடன் இருந்த பை கிளை நுனியில் மாட்டிக்கொண்டது. குட்டிக்குரங்கு கதறியது. அதனால் பையிலிருந்து வெளியே வரமுடியவில்லை.உடனடியாக, அதே மரத்தில் வேறு கிளையில் இருந்த வயதான குரங்கு வந்து , பையைப் பலமாகப் பற்றி குட்டியை வெளியே எடுத்து காப்பாற்றியது. மாமரத்தில் குதித்த அடுத்த விநாடி, ஐயோ என் மகள் என பதறிய தாய்க்குரங்கோ, மேற் சொன்ன காட்சிகளைக் கண்டு கண்ணீர் மல்கியது.

தன்னுடைய தேவையில்லாத பயமும் தேவையில்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமே தனது குட்டியின் உயிரைப் பறிக்க இருந்ததை எண்ணி வருந்தியது. வயதான குரங்கிடம் நன்றியும் மன்னிப்பும் தெரிவித்தது. மற்றவர்களிடமும், நரியாரிடமும் மன்னிப்புக் கேட்டது.

நம் வாழ்வில் நாம் மூத்தோர் சொல் கேட்டாலே நமக்கு தேவையில்லாத துன்பங்கள் வராது என நரியார் சொல்ல, தாய்க்குரங்கும் நிச்சயமாக நீங்க கூறியது, மிகச்சரி என்றது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close