இணைய இதழ்இணைய இதழ் 59கட்டுரைகள்

தெரிந்த மனிதர்களின் தெரியாத மனங்கள் – பர்வீன் பானு

கட்டுரை | வாசகசாலை

‘எப்போதுமே பேச்சைப் புரிந்துகொள்வதை விட அமைதியைப் புரிந்துகொள்வது கடினம். அமைதி ஒரு வெளிச்சம். அது நமக்கு வழி காட்டுகிறது’ என்பார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைத் தொகுப்பொன்று நாம், நமது அன்றாட நிகழ்வுகளில் பார்க்கத்தவறிய கோணங்களின் மீது புது வெளிச்சம் பாய்ச்சியது. 

நாம் தினந்தோறும் கடந்து செல்லும் நிகழ்வுகளை, எளிய மனிதர்களின் உணர்வுகளை, அவர்களின் வாழ்க்கைச் சூழல்களை, அந்தந்த நேரத்து நியாயங்களைத் தான், தனது ‘ஏதோ ஒரு வரிசையில் நிற்பவன்’ தொகுப்பில் கதைகளாக்கியிருக்கிறார் ரபீக் ராஜா. அதீதக் கற்பனைகளோ, மாயவாதப் புனைவுகளோ இல்லாமல், வாசலில் நின்று தெருவைப்பார்க்கும் உணர்வைத்தான் இக்கதைகள் நமக்குக் கடத்திச் செல்கின்றன. ஆனால், வழக்கமாக நாம் பார்த்துப் பழகிய தெருக்கள் இன்று புதிதாய்த் தெரிகின்றன. வழக்கமாக நாம் கடந்து சென்ற மனிதர்களை நின்று நிதானித்துப் பார்க்கும் ஆர்வத்தை இக்கதைகள் கொடுக்கின்றன. 

தெருவில், பணியிடத்தில், அங்காடியில், திரையரங்குகளிலெல்லாம் நீங்களோ, நானோ தினமும் சந்திக்கிற எளிய மனிதர்களைக் கதை மாந்தர்களாக்கி உலவ விட்டதாலேயோ என்னவோ இத்தொகுப்பின் கதைகளை நமக்கு அவ்வளவு நெருக்கமாக உணரமுடிகிறது. கலைத்துப்போட்டுக் கதை சொல்வது, முன் பின்னாக நகர்த்திச் செல்வது என்றெல்லாம் எந்த முயற்சியும் செய்யாமல் ஆரம்பநிலை வாசகர்களுக்கூட எளிதாகப் புரியும்படி நேர்கோட்டில் கதை சொல்லிய விதம் பாரட்டுக்குரியது. கதைகளின் வடிவத்தை விட சொல்ல வந்த நோக்கத்திற்கு போதிய முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ரபீக்குக்கு ஒரு சபாஷ். 

பாசாங்கற்ற தனது மொழியால் வாசகனை லாவகமாகக் கவர்ந்திழுப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் ஆசிரியர். தொய்வின்றி வழுக்கிச்செல்லும் வகையிலான தன்னுடைய எழுத்து நடை மூலம் நமது கைகளைப் பற்றிக் கொண்டு பயணிக்கிறார். கதைகளின் துவக்கமும் முடிவும் நாம் எதிர்பாராத கோணங்களில் அமைந்து விடுவது இதன் பலம். ‘படுக்கை’ சிறுகதையை வாசிக்கும் போது எழுத்தாளரின் மனநிலையை நாம் சந்தேகிக்கத் தோன்றினாலும், கதையின் போக்கு, நிகழ்வின் இன்னொரு பக்கத்தை படம் பிடித்து காட்டும்போது மனம் ஆசுவாசமடைந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குமான சுய மதிப்பீடும், சுயமரியாதையும் எவ்வளவு முக்கியம் என்பதை ‘பொதுக்கிணறு’ கதை மூலம் சொல்லிச் செல்கின்றார். தொகுப்பில் மிகவும் மனதைத் தொட்ட கதையாக ‘ஓனர்’ கதை அமைந்தது. ஓனரின் குட்டி முதலாளித்துவச் சிந்தனை, குறு நிறுவணங்களில் தொழிலாளிகளுக்கும் முதலாளிக்குமான உறவு, பணியிடத்தில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிற பெண்களின் நிலைமை என்பதையெல்லாம் கதையின் போக்கில் நகைச்சுவையோடு சொல்லிச் செல்கிறார். புரிந்து கொள்ளப்படாத பருவத்திற்கு துரத்தப்படாத வாழ்வும், இடமும் அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். பலநேரங்களில் பக்குமில்லாதவர்களிடம் இருந்து நாமும் பக்குவத்தைக் கற்கின்றோம் என்கிற எளிய உண்மையை கதை சொல்லிச் செல்கிறது. ‘எடைக்கு எடை’ கதையில் அன்றாடம் நாம் பார்க்கும் மளிகைக்கடை அண்ணாச்சிகளையும், பரபரப்பான வியாபாரச் சூழலையும், மளிகைக்கடை நெடியையும் ததும்பத்ததும்ப நாசிக்குள் வீசச்செய்திருகிறார் ஆசிரியர்.

இங்கு கதைகளின் கதாநாயகர்களின் பெயரை விட கதைமாந்தர்களும் கதைக்களமும் சொல்வளமும் உரையாடலும் நம்மையும் கதைமாந்தர்களாக மாற்றி கதைக்குள் உலவ விடுகின்றது. ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நம்மை நாமே அடையாளம் கண்டு கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. வாழ்வின் எதார்த்தத்தை, நூலாம்படையாய் மனிதர்களைச் சூழ்ந்துள்ள சிக்கல்களை, எதிர்கொள்ளும் சம்பவங்களை, எதார்த்தம் சிதையாமல் நகைச்சுவையுடன் கூறியிருப்பது இன்னும் பலம் சேர்க்கிறது. விறுவிறு எழுத்து நடையும் ஆசிரியருக்கு கை கொடுக்கின்றது. ‘அப்பா’வை வாசிக்கும் போது ‘படுக்கை’ சிறுகதையும் நினைவுக்கு வந்து இரண்டையும் பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மாற்று பாலினம், சாதிப்பெருமை, புதுப்பணக்காரனின் பரிதவிப்பு, அஸிஸ்டண்ட் டைரக்டரின் கதை, அதன் முயற்சிகள், எளிய மக்கள் பணக்கார வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பு, தகப்பனின் தோல்வி மற்றும் வலி என எந்த உணர்வுகளாக இருந்தாலும் மிகைப்படுத்தாத காட்சிகள் கதைகளுக்கு வலு சேர்க்கின்றன. அரை விநாடி உரையாடலின் முடிவில் நமது கதையையும் எழுதி விடுவாரோ என்ற குறுகுறுப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

‘ஏ நில்லாவே’, ‘கருத்துப்படம்’ போன்ற கதைகள், எந்தச் சலனமும் இல்லாத மனிதனைக்கூட புறச்சூழல் எப்படியெல்லாம் தூண்டி விடுகிறது என்பதை உடைத்துக் காட்டுகிறது. பிரார்த்தனையும் இறுதியில் தாலாட்டும் மனதை தொடுகின்றன. இறுதியில் அந்த தாயுடனேயே நாமும் ஆம்புலன்சில் பயணிக்கிற உணர்வு. ‘மனிதர்களே.. நீங்கள் இவ்வுலகின் மதிப்பு மிக விருந்தாளிகள். ஒரு பிச்சைக்காரனைப்போல அற்ப விசயங்களுகாக ஏன் அழுது புலம்புகிறீர்கள்?’ என்கிற ரூமியின் வார்த்தைக்கேற்ப மனிதர்களின் மதிப்புமிக்க வாழ்க்கை, எதிர்பாராத சம்பவங்களால் புகைவண்டி போலத் தடம் புரண்டு விடுகிறபோது மனிதர்கள் அடையும் பதற்றத்தையும் உளவியல் சிக்கல்களையும் எளிய மொழியில் பேசுகிற இதுபோன்ற நூல்களை அங்கீகரிப்பதும், அதன் படைப்பாளியைக் கொண்டாடுவதும் அறிவார்ந்த சமூகத்தின் கடமையாகவே நினைக்கிறேன். 

தரமான தாள்களில் புத்தகத்தை வெளியிட்ட இக்றா பதிப்பகத்தினர்க்கும் வாழ்த்துக்கள். இது போல் வளரும் எழுத்தாளர்களின் ஆக்கங்களையும், வளர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் வெளியிட சிறப்பு வாழ்த்துக்கள். 

நூலின் பெயர்: ஏதேனும் ஒரு வரிசையில் நின்றவனின் கதைகள்
விலை: ₹. 200
வகைமை: சிறுகதைத் தொ குப்பு
பக்கங்கள்: 180
ஆசிரியர்: கா. ரபீக் ராஜா .
வெளியீடு: இக்றா பதிப்பகம் ,
முகவரி: 2, கென்னடி ஸ்கொயர் மெயின் ரோடு, பெரம்பூர், சென்னை – 11
தொலைபேசி: 8220658318.

*******

banuanas78@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close