கட்டுரைகள்
Trending

தேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்

அசோக் குமார் முருகேசன்

இந்திய சினிமாவின் மகத்தான கலைஞன் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே சில மாதங்களாக திரைத்துறையில் 60 ஆண்டு சாதனைப் பயணத்தைக் கொண்டாட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கே நடிகர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கலைஞன் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். நடிகர், இயக்குநர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், நடன இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா, பாடகர், கவிஞர், தொழில்நுட்பக் கலைஞர் என்று அவரது கலை அவதாரங்களையும், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என அவரது மற்ற அவதாரங்களையும் கணக்கில் எடுத்தால் இந்த 65 ஆண்டுகாலத்தில் மிகவும் அடர்த்தியானதொரு வாழ்வை வாழ்ந்திருக்கிறார்.

இங்கே தொழில்நுட்பக் கலைஞர் என்று ஒற்றைக் குறிப்பில் சொன்னாலும் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒப்பனை, ஒலிப்பதிவு, மிமிக்ரி என சினிமாவின் அனைத்து துறைகளிலும் கைதேர்ந்த கலைஞர். இதுதவிர மிருதங்கம், பியானோ என பல இசைக் கருவிகளிலும் கைதேர்ந்தவர். இவற்றையெல்லாம் யோசிக்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. இவற்றைக் கற்று கைதேர்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை. National Geographic சேனல் Mega Icons என்கிற தொடரில் கமலின் இந்தத் திறமைகளை Polymath என்கிற தலைப்பில் ஆய்வு செய்து ஆவணப்படம் வெளியிட்டது.

https://www.hotstar.com/1770018918

புகழ்பெற்ற வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தாலும் அவரது இந்த வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. உதவி நடன இயக்குநர், உதவி இயக்குநர், துணை நடிகர் (‘மேடை அமைப்பு -கமல்ஹாசன்’என்றெல்லாம் டைட்டில் கார்டில் பெயர் வந்திருக்கிறது) என்று படிப்படியாக உயர்ந்து 25 வயதிற்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெள்ளி விழா கொண்டாடிய படங்களின் நாயகன். அவரது இந்தி மார்க்கெட்டை காலி செய்ய நினைத்து இந்தி நடிகர்கள் அவரது படத்தின் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி காலியான திரையரங்குகளோடு ஓடச் செய்த நிகழ்வுகள் உண்டு. கமலுக்குப் பெயர் வந்துவிடும் என்று கமலும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்த படத்தை அமிதாப் பாதியில் நிறுத்தினார் என்ற செய்தி இப்போதுதான் வெளிவருகிறது. கமல் இதுவரை இதை எங்கேயும் சொன்னதில்லை. அவர் மீண்டும் முழுநேரமாக தமிழ் சினிமாவிற்கு வந்த காரணங்கள் இவையாக இருக்கலாம்.

ஆனாலும் இத்தோடு அவர் நின்றுவிடவில்லை. அவருக்குள்ளே இருந்த தேடல் அவரை உந்தித் தள்ளவே புதிய பரிசோதனை முயற்சிகளை தொடங்கினார். முழுக்க முழுக்க வியாபாரிகளின் கையில் இருந்த சினிமாவைக் கொஞ்சம் கொஞ்சமாக கலை மற்றும் ரசனை சார்ந்து மாற்ற முயன்றார். தனது பணம், புகழ், வியாபார எதிர்காலம் என அனைத்தையும் வைத்து சூதாடினார் என்றே சொல்லலாம். சில சமயங்களில் வெற்றி கண்டார்; பல சமயங்களில் தோல்வியே. இருந்தும் இத்தனை வருடங்கள் இந்த சினிமா வியாபார உலகில் நிலைத்து நிற்கிறார் என்றால் தனது திறமை மீதிருந்த அசாத்திய கர்வமும், துணிச்சலும்தான்.

இளம்கலைஞர்களை ஊக்குவிப்பதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. வழக்கம்போல காழ்ப்பில் கரித்துக்கொட்டுவதுதான் இதுவும். பாரதிராஜா, மணிரத்னம், சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர், கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குநர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்தபோது அவர்கள் இளம் இயக்குநர்களே. எழுத்தாராக இருந்த மகேந்திரனை முள்ளும் மலரும் படத்தில் இயக்குநராக்கி தயாரிப்பிலும் உதவி செய்தார். தயாரிப்பாளர்களும், யூனியன்களும் பாலு மகேந்திராவிற்கு எதிராக இருந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்து வாய்ப்புகள் கொடுத்ததோடு பொருளாதார ரீதியாகவும் உதவி செய்தார். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் சத்யராஜுக்கு வாய்ப்பளித்தார்.

பேரா. தொ. பரமசிவன், சுஜாதா, கவிஞர் புவியரசு, பாலகுமாரன், கார்ட்டூனிஸ்ட் மதன், ஜெயமோகன், பேரா. ஞானசம்பந்தன், சுகா என பலரது பங்களிப்பை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார். பசுபதி, வடிவேலு, கிரேசி மோகன், மகேஷ் மாகாதேவன், ஜிப்ரான் என பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தார். அவரது விஸ்வரூபம் திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் இப்போது வெவ்வேறு மொழிகளில் இயக்குநர்களாகிவிட்டனர்.

ரசிகர்களை மண்சோறு தின்னும், பால்காவடி எடுக்கும், பேனர் கட்டும் கூட்டமாக்கி கேலிக்கூத்தாக்காமல் நற்பணி மன்றங்களாக மாற்றியதும், அவர்களுக்காக தனியாக பத்திரிகை நடத்தி இலக்கியம் முதல் உலக அரசியல் வரை அறிமுகப்படுத்தி வைத்ததும் என யாரும் செய்யத் துணியாத விஷயங்களைச் செய்தார். இன்று ரசிகர் மன்றம் துவங்கும் எவரும் நற்பணி என்கிற வார்த்தையைச் சேர்த்துக் கொள்வதும் அங்கிருந்துதான்.

பிறமொழி படங்களைத் தழுவிய அவரது பல படங்களிலும் திரைக்கதை அடுக்குகள், சமூக நிகழ்வுகள், நேட்டிவிட்டி, சமகால அரசியல், பாத்திர வடிவமைப்பு என்று கமலின் தனித்துவம் இருக்கும். தனது அரசியலை, கருத்தியலை பிரச்சாரமாக திணிக்காமல் திரைக்கதையோடு கலந்து கலையாகக் கொடுக்கும் திறமை கமலுக்கு உண்டு.

அவரது படங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது ஒரு புது விஷயத்தைக் கவனிப்போம். தன்னைத்தானே எழுதிக் கொள்ளும் கவிதை போல ஒவ்வொருமுறையும் அது விரிவடைந்து கொண்டே போகும். அதுவே அவரது படங்கள் காலம்கடந்து நிற்கவும் காரணமாக இருக்கின்றன. கலையும் ஒரு ஆராய்ச்சியைப் போலத்தான். பல இடங்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்தே கலையும் இங்கே நிகழ்கிறது. அதேசமயம் ஆராய்ச்சி முடிவுகள் எல்லா நேரமும் சாதகமாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. சறுக்கவும் செய்யும்.

அவரது படங்களை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் வசனத்தையோ, ஒரு தரப்பு நியாயத்தையோ எடுத்து வைத்துக் கொண்டு சலசலப்பார்கள். இவர்கள் சினிமா பிரச்சார தொனியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். கூர்ந்து கவனித்தால் கமலின் கதாபாத்திர வடிவமைப்புகள் பெரும்பாலும் absolute நல்லவர்களாகவோ, absolute கெட்டவர்களாகவோ இருக்காது. அதைப் புரிந்துகொண்டாலே இந்த சலசலப்புகள் அடங்கி, அவரது படைப்புகளை ரசிக்கலாம்.

இதைவிட அபத்தமான ஒரு அறிவுரை அடிக்கடி கமலுக்கு வழங்கப்படுவதுண்டு. அதாவது மற்ற துறைகளில் தலையிடாமல், கமல் தன்னை ஒரு நடிகனாக இயக்குநருக்கு அர்ப்பணித்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பது. நடிப்பை மட்டும்செய்ய கமல்ஹாசன் எதற்கு?

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close