சிறுகதைகள்மொழிபெயர்ப்புகள்

கோணிய மரம் (மொழிபெயர்ப்பு சிறுகதை)

- ச.கோ. பிரவீன் ராஜ்

 

The Crooked Tree – by Ruskin Bond

 

நீ உன் பரீட்சைகளில் தேறி கல்லூரிக்கு போகணும் தான். ஆனா, தேறலைன்னா உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு வருந்தாதே.”

 

ஷாகஞ்ஜில் இருந்த என்னுடைய அறை மிகச் சிறியது. அடிக்கடி உலாத்தியதில் அதன் அளவுகளை துல்லியமாக அறிந்திருந்தேன். பன்னிரண்டுக்கு பத்து அடி. என் கட்டிலின் கயிற்றுக்கு இறுக்கம் தேவைப்பட்டது. அதன் நடுவில் இருந்த குறிப்பிடத்தக்க பள்ளத்தால் எப்போதும் காலையில் முதுகுவலியுடனே எழுந்தேன். ஆனால், சார்பாயின் கயிறுகளை இறுக்க முடியும் என எனக்கு நம்பிக்கையில்லை.

 

கட்டிலின் கீழ் என் தகரப்பெட்டி இருந்தது. பழைய, நிராகரிக்கப்பட்ட கையெழுத்து பிரதிகளில் இருந்து, துணிகள், கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் வரை அதில் இருந்தன. ஒரு நாள், ஒரு புத்தகத்தை எழுதி கொஞ்சம் காசு பார்த்தவுடன், இந்த தகரப்பெட்டியையும் மற்ற அனைத்தையும் ஜன்னல் வெளியே தூக்கி எறிந்து விட்டு ஷாகஞ்சிலிருந்து என்றைக்குமாக வெளியேறி விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். பெயரளவில் இருந்த வாடகை, ஜன்னல் வழியே பேருந்து மற்றும் ரிக்சா நிலையங்களை காணக் கிடைக்கும் காட்சி, மேலும் எனக்கு செல்வதற்கு வேறு இடங்கள் இல்லாமை ஆகியவையே அங்கிருந்ததன் காரணங்கள்.

 

நான் முற்றிலும் தனியாக வாழவில்லை. சில நேரங்களில் ஒரு யாசகன் பால்கனியில் இரவைக் கழித்தான். குளிர்ந்த, ஈரமான பருவங்களில், வழக்கமாக நடைபாதையில் உறங்கிய தேநீர்க்கடை சிறுவர்கள் அறைக்குள் முண்டியடித்தனர்.

 

தூக்கமானது ஒழுங்கற்று, அமைதியற்று, கனவுகளால் நிறைந்திருந்ததால் பொதுவாக  நான் அதிகாலையில் விழித்து விடுவேன். முதல் உள்நாட்டு பேருந்து தன் கொட்டகையில் இருந்து கிளம்பும் போது, எனக்கு மணி ஐந்தென்று தெரியும். பிறகு எழுந்து ரயில் பாதைகளுக்கு அப்பால் உள்ள வெளிகளில் ஒரு நடையை மேற்கொள்வேன்.

 

ஒருநாள் காலை, வெளிகளில் நடந்து செல்லும்போது, பாதையின் குறுக்கே யாரோ வீழ்ந்து கிடப்பதை கவனித்தேன். அவன் தலையும் தோள்களும் இளங்கரும்புத் தண்டுகளால் மறைக்கப்பட்டிருந்தன. அருகில் வந்தபோது, அவன் ஒரு பதினாறு வயதுப்பையன் என்பதைப் பார்த்தேன். அவனது உடல் வலிப்போடு இழுத்துக் கொண்டிருந்தது. மோவாய்க்கட்டையில் வடிந்த சிறிது ரத்தத்தைத் தவிர, அவன் முகம் மிகுந்த வெளுப்பாக இருந்தது. அவனது கால்கள் அசைந்தபடியும்கைகள் ஓய்வற்று, உதவியற்று படபடத்தபடியும் இருந்தன.

 

உனக்கென்ன பிரச்சினை?” அவனருகில் மண்டியிட்டபடி கேட்டேன்.

 

ஆனால் அவன் இன்னும் தன்னுணர்வற்று இருந்ததால் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. நான் நடைபாதை வழியாக ஒரு கிணற்றுக்கு ஓடிச்சென்று, என் சட்டைமுனையை ஆழமற்ற நீர்த்தொட்டியில் முக்கியெடுத்து, திரும்ப ஓடி வந்து அந்தப் பையன் முகத்தில் பிழிந்தேன். அவனது இழுப்பு தணிந்தது. இன்னும் மூச்சிரைத்துக் கொண்டிருந்தாலும், அவன் கைகள் அசைவற்றும் அவன் முகம் அமைதியாகவும் ஆகின. அவன் கண்களைத் திறந்து, உடனடியாக ஏதும் புரியாதவனாய் என்னைப் பார்த்தான்.

 

நீ உன் நாக்கை கடிச்சிட்டேஎன்றேன், அவன் வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்தபடி. “கவலைப்படாத. நீ நல்லா ஆகுற வரை உன் கூட இருக்கேன்.”

 

தற்போது அவன் எழுந்து உட்கார்ந்து கொண்டுநான் நல்லா ஆகிட்டேன். நன்றிஎன்றான்.

 

என்னாச்சு?” அவனருகில் அமர்ந்தபடி கேட்டேன்.

 

பெருசா ஒண்ணுமில்லை, அடிக்கடி நடக்குது, ஏன்னு தெரியலை. ஆனா என்னால கட்டுப்படுத்த முடியலை.”

 

மருத்துவரை பாத்திருக்கியா?”

 

நான் ஆரம்பத்துல மருத்துவமனைக்கு போனேன். அவங்க தினமும் எடுக்க வேண்டிய சில மாத்திரைகள் கொடுத்தாங்க. ஆனா, அது என்னை ரொம்ப சோர்வா உணரவும், தூங்கவும் வெச்சதால என்னால ஒழுங்கா வேலை செய்ய முடியலை. அதனால மாத்திரைகளை நிறுத்திட்டேன். இப்ப இது மாசத்துக்கு ஒருதடவை இல்லை ரெண்டுதடவை நடக்குது. அதனாலென்ன? இது முடிஞ்சப்புறம் நல்லா ஆகிடுறேன். நடக்கும் போது  எதுவும் தெரியிறதில்லை.”

 

தன் உடையை தூசுதட்டிய படியும், என்னை நோக்கி புன்னகைத்துக் கொண்டும் மெல்ல எழுந்து நின்றான். அவன் மெலிதாக, நீண்ட கால்களுடன் எலும்பனாக இருந்தான். அவன் கன்னங்களில் கொஞ்சம் முடியும் அரும்பு மீசையும் இருந்தன.

 

நீ எங்க தங்கியிருக்கே?” என்று வினவினேன். “நான் உன்னோட திரும்பி நடந்து வர்றேன்.”

 

நான் எங்கயும் நிரந்தரமா தங்கலைஎன்றான். “சிலசமயம் கோவில்ல தூங்குவேன், சிலசமயம் குர்ட்வாராவில. வெயில் காலத்துல நகராட்சி பூங்காவில தூங்குவேன்

 

நல்லது, அப்ப நான் உன்னோட பூங்கா வரை வர்றேன்

 

அவன் என்னிடம் தன் பெயர் கமல் எனவும், ஷாகஞ் உயர்நிலைப்பள்ளியில் படிப்பதாகவும் சில மாதங்களில் நடைபெறவுள்ள தன்னுடைய தேர்வுகளில் தேர்ச்சி அடைய வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினான். அவன் தேர்வுகளுக்குக் கடுமையாக படித்துக் கொண்டிருந்தான். நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றால் கல்லூரிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். தோல்வியடைந்தால், நகராட்சி பூங்காவில் தொடர்ந்து வாழும் வாய்ப்பு மட்டுமே இருந்தது.

 

தோளைச்சுற்றிய வாரினால் தாங்கப்பட்ட விற்பனைப்பொருட்கள் அடங்கிய சிறு தட்டை அவன் எடுத்துச் சென்றான். அதில் சீப்புகளும் பொத்தான்களும் மலிவுவிலை பொம்மைகளும் வாசனைத்திரவிய புட்டிகளும் இருந்தன. நாளெல்லாம் சில்லறைச் சரக்குகளை பஜாரிலும் வீடுகளிலும் இருக்கும் மக்களிடம் விற்றபடி ஷாகாஞ்சில் பவனி வந்தான். சராசரியாக, நாளுக்கு இரண்டு ரூபாய் ஈட்டினான். அது அவனுடைய உணவுக்கும் பள்ளிக் கட்டணத்துக்கும் போதுமானதாக இருந்தது.

 

இவற்றையெல்லாம் நாங்கள் திரும்பி பேருந்து நிலையத்திற்கு நடந்த போது என்னிடம் சொன்னான். நான் ஏதாவது எழுத முயலும் பொருட்டு அறைக்குத் திரும்பிய போது, கமல் தன் பொருட்களை விற்க முயல்வதற்காக பஜாருக்கு சென்றிருந்தான். கமல் அகதியாக, அனாதையாக இருப்பதில் வழக்கத்திற்கு மாறாக பெரிதாக ஒன்றுமில்லை.  1947-இல் நடந்த மதவாதப் பேரழிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் தகர்க்கப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். கமலிடம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது என்னவென்றால் அவனுடைய உணர்திறன்.

 

எல்லை மாகாணங்களில் வெறுப்பாலும் வன்முறையாலும் ஆன காலத்தில் வளர்ந்த ஒரு பஞ்சாபி இளைஞனிடம் நான் அரிதாகக் கருதிய குணம். மேலும், அவனிடமிருந்த வாழ்க்கை குறித்த நேர்மறை அணுகுமுறையை விட அவனது கனிவு, சாந்தமான குரல், மகிழ்வோ துன்பமோ அவன் முகத்தில் மின்னும் அந்தப் புன்னகை ஆகியவையே என்னை பெரிதும் கவர்ந்தன. காலையில் கதவைத் திறந்த போது, படிகளின் மேற்புறத்தில் கமல் உறங்குவதைக் கண்டேன். அவன் தட்டு சில அடி தூரத்தில் கிடந்தது. அவனை மென்மையாக குலுக்கினேன். உடனே எழுந்து விட்டான்.

 

இராத்திரி முழுக்க இங்க தூங்கிட்டிருக்கியாஎன்று கேட்டேன். “ஏன் நீ உள்ளே வரலை?”

 

ரொம்ப தாமதமாகிடுச்சுஎன்றான். “உன்னை தொந்தரவு செய்ய விரும்பலை

 

நீ தூங்கும்போது யாராச்சு உன் பொருட்களைத் திருடியிருக்கலாம்

 

 “, நான் லேசாதான் தூங்குவேன். அதுவுமில்லாம, என் கிட்ட விசேஷ மதிப்பிருக்கிற பொருள் எதுவும் கிடையாது. ஆனா உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்னு வந்தேன்.”

 

உனக்கு பணம் ஏதாவது வேணுமா?”

 

இல்லை. நீ இன்னிக்கு ராத்திரி என் கூட சேர்ந்து உன் உணவை எடுத்துக்கணும்

 

ஆனா எங்க? உனக்குன்னு ஒரு இடமில்லை. உணவகத்துல அதிக செலவாகும்.”

 

உன் அறையிலஎன்றான் கமல். “நான் பொருட்களைக் கொண்டு வந்து இங்க சமைக்கிறேன். உன் கிட்ட அடுப்பு இருக்கா?”

 

ஏழு மணிக்கு வர்றேன்தன் தட்டின் வாரினை இறுக்கியபடி கமல் சொன்னான். “கவலைப்படாதே. எனக்கு சமைக்கத் தெரியும்.”

 

படிகளில் இறங்கி பஜாருக்கு விரைந்தான். நான் எண்ணெய் அடுப்பைத் தேடத் துவங்கி, என் தகரப்பெட்டியின் அடியில் கண்டடைந்தேன். பிறகு என்னிடம் பாத்திரங்களோ தட்டுகளோ கிண்ணங்களோ இல்லை என்பதை கவனித்தேன். இறுதியாக, இவற்றை தீப் சந்த் என்ற முடி திருத்துநரிடம் கடன்

வாங்கினேன்.

 

கமல் இரவுணவிற்கு சிக்கன் எடுத்து வந்தான். இது ஷாகஞ்சில் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுத்துக் கொள்ளும் விலையுயர்ந்த ஆடம்பரம். அவன் அப்பறவையை மூன்று ரூபாய்க்கு வாங்கியிருந்தான். மிகவும் இளைத்திருக்காத அந்தப் பறவைக்கு அவ்விலை மலிவுதான். அவன் அதை வறுத்துக் கொண்டிருக்க, நான் பஜாருக்கு சென்று ஒரு பாட்டில் பியரை கடனில் வாங்கி வந்தேன். அது பசியூக்கியாக செயல்பட்டது.

 

நாம செலவு பிடிக்கிற சாப்பாடு சாப்பிட்டுட்டு இருக்கோம்.” என்று நான்  அவதானித்தை சொன்னேன். “சிக்கனுக்கு மூணு ரூபாவும் பியருக்கு மூணு ரூபாவும். ஆனா இதை நாம அடிக்கடி செய்யலாம்னு விரும்புறேன்.”

 

நாம மாசத்துக்கு ஒரு தடவையாச்சு இதை செய்யணும்.” என்றான் கமல். “நாம கடுமையா உழைச்சா இது சாத்தியமா தான் இருக்கணும்.”

 

 “உனக்கு எப்படி வேலை பாக்கணும்னு தெரியும். காலையில இருந்து இராத்திரி வரை வேலை பாக்குற

 

ஆனா நீ ஒரு எழுத்தாளர் ரஸ்டி. அது வேற. நீ தகுந்த மனநிலைக்கு  காத்திருக்கணும்.”

 

, மனநிலைகளுக்கு காத்திருக்க நான் ஒண்ணும் மேதை கிடையாது. இல்லை, நான் சோம்பேறியா இருக்கேன். அவ்ளோதான்.”

 

ஒருவேளை நீ தப்பான விஷயங்களை எழுதிக்கிட்டிருக்கியோ

 

எனக்கு தெரியும். ஆனா நான் எப்படி வேற விஷயங்களை எழுத முடியும்னு எனக்கு தெரியலை.”

 

நீ முயற்சி பண்ணியிருக்கியா?”

 

ஆமா, ஆனா அதுல பணம் பண்ண வழியில்லை. வேற வழியில பொழைக்கலாம்னு கூட தோணுது. மிதிவண்டிகளை பழுது பாத்தா கூட நான் அதிக காசு சம்பாதிப்பேன்.”

 

அப்புறம் ஏன் மிதிவண்டிகளை பழுதுபாக்கக் கூடாது?”

 

இல்லை, நான் மிதிவண்டிகளை பழுதுபாக்க மாட்டேன். ஒரு நல்ல மிதிவண்டி பழுதுபாக்குறவனா இருக்குறதை விட, ஒரு மோசமான எழுத்தாளனாவே இருந்துடுவேன். ஆனா நாம வேலையை பத்தி யோசிக்க வேணாம். அதுக்கு தேவையான நேரம் இருக்கு. நான் உன்னைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு விரும்புறேன்.”

 

கமல் தன் பெற்றோர் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்து விட்டனரா என்று அறிந்திருக்கவில்லை. அவன் ஆறு வயதிருக்கும் போது அவர்களை இழந்து விட்டான், அப்படியே. எல்லைக்கு அப்பாலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகளை தள்ளியபடி வரும் ரயில்களையோ அல்லது இரத்தத்தில் தோய்ந்து, பிணங்கள் சிதறிக்கிடந்து பாதி காலியான நிலையில் வந்து நிற்கும் ரயில்களையோ கொண்ட அம்ரிஸ்டர் ரயில் நிலையத்தில் அது நடந்தது.

 

கமலும் அவன் பெற்றோரும் அதிர்ஷ்டவசமாக அந்தப் படுகொலையில் இருந்து தப்பி விட்டனர். அவர்கள் முந்தைய ரயிலில் பயணித்தனர், இல்லையேல் அவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம். சூழ்நிலைகள் அச்சமயம் அவர்களுக்கு சாதகமாய் இருந்தன. ஆனால் அது சற்று நேரம் கழித்து மீண்டும் ஏமாற்றுவதற்கு தான்.

 

கமல் தன் தாயின் சேலையைப் பற்றிக் கொண்டிருந்தான். மிரட்சியான, குழப்பமான அகதிக்கூட்டத்தில் தன் முட்டியைக் கொண்டு முண்டியடித்த படி சென்ற கணவனை ஒட்டியவாறு அவள் இருந்தாள். ஏதாவது மோசமாக நடக்கலாமோ என்றெண்ணிய படியே, தரையில் வீழ்ந்து நெஞ்சிலடித்தபடி ஓலமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்ட கமல், ஓர் ஆஜானுபாகுவான சீக்கியனின் மேல் இடித்ததால், அவன் தாயின் சேலை மேல் கொண்டிருந்த பிடிப்பை இழந்து விட்டான்.

 

அந்த சீக்கியன் ஒரு நீண்ட வளைந்த வாளினைத் தன் இடுப்பில் வைத்திருந்தான். கமல் அவனை வியப்புடனும் வசீகரத்துடனும் உற்றுப் பார்த்தான். அவனது அவிழ்ந்து விட்டிருந்த நீண்ட முடி, காட்டுத்தனமான கருப்பு தாடி, அவனது வெண்சட்டையில் இருந்த இரத்தக் கறைகள் ஆகியவற்றை நோக்கினான். அந்த சீக்கியன் அவனை வழியிலிருந்து தள்ளி விட்டபின், கமல் சுற்றிமுற்றி தன் தாயை தேடியபோது, அவளைக் காணவில்லை. பல்வேறு திசைகளில் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த ஓய்வொழிச்சலற்ற மக்கள் திரளால் அவள் மறைக்கப்பட்டிருந்தாள். அவனால் அவள் குரலை கேட்க முடிந்தது, “கமல், எங்கே இருக்கே கமல்?” குரல் வந்த திசையில் கூட்டத்தின் வழியே முண்டியடித்துச் செல்ல முயன்றான். ஆனால், எதிர் திசையில் எடுத்துச் செல்லப்பட்டான்.

 

இரவில், ரயில்நிலைய நடைமேடை காலியாக இருந்தபோது, இன்னும் தன் தாயை தேடிக் கொண்டிருந்தான். இறுதியில், சில சிப்பாய்கள் அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள் கமலின் பெற்றோரை தேடி, வெற்றி கிட்டாமல் போக, முடிவாக அவனை ஓர் அகதி முகாமிற்கு அனுப்பி விட்டனர். அங்கிருந்து ஓர் அனாதை ஆசிரமத்திற்கு சென்றான். ஆனால் எட்டு வயதான பின், தன்னை ஓர் ஆண்மகனாக உணர்ந்தபோது, அங்கிருந்து ஓடி விட்டான்.

 

சிலகாலம் தேநீர்க்கடையில் உதவியாளனாக வேலை பார்த்தான்; ஆனால் இவனுக்கு காக்காய் வலிப்பு வரத் தொடங்கியபோது, கடைக்காரர் கிளம்பச் சொல்லி விட்டார். பின்பு அவன் தெருக்களில், வாழ்க்கைப்பாட்டிற்கு பிச்சை எடுப்பவனாய் இருந்தான். ஒரு வருடம், நகரம் நகரமாக பிச்சையெடுத்த படி நகர்ந்தவன், இறுதியில் ஷாகஞ்சில் வந்து சேர்ந்து விட்டான். அந்த சமயம், பன்னிரண்டு வயதாகி, பிச்சை  எடுக்க வயதானவனாய் ஆகி இருந்தான். ஆனால், கொஞ்சம் பணம் சேமித்து வைத்திருந்ததால் அதை வைத்து சிறு பங்கு சீப்புகள், பொத்தான்கள், மலிவுவிலை திரவியங்கள் மற்றும் வளையல்கள் ஆகியவற்றை வாங்கினான். தன்னை ஒரு நடமாடும் அங்காடியாக மாற்றிக்கொண்டு, வீடு வீடாகத் தன் பொருட்களை விற்றபடி சென்றான்.

 

ஷாகஞ் ஒரு சிறிய நகரம் என்பதால் கமல் விஜயம் செய்யாத எந்த வீடும் அங்கில்லை. அனைவரும் அவனை அடையாளம் கண்டு கொண்டனர். சிலர் அவனுக்கு உணவும் நீரும் அளித்தனர். அவனது நகர உலாக்களின் போது, ஒரு சிறிய குழலை வாசித்தபடி சென்றதால், குழந்தைகள் அவனை நன்கு அறிந்திருந்தனர். குழல் கேட்பதற்காக அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

 

நான் கமலின் இருப்பை எதிர்பார்த்திருக்கத் தொடங்கினேன். அவன் என்னுடைய தனிமையைக் கொஞ்சம் போக்கினான். நான் தனியாக வேலை செய்ய வேண்டியதில்லை எனும்போது, இன்னும் சிறப்பாக வேலை செய்ய முடியும் என்று கண்டறிந்தேன். அது மட்டுமின்றி, கமல் என்னை நோக்கி வந்தான். ஒருவேளை நான் அவனது வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் பற்று கொண்ட முதல் மனிதனாக இருந்ததால் இருக்கலாம். நான் அவனுடைய நோவில் அச்சமூட்டக் கூடியதாய் எதையும் காணாததால் இருக்கலாம். ஷாகஞ்சில் பெரும்பாலானோர் வலிப்பு நோயை பரவக் கூடியதாய் நினைத்தனர். சிலர் அதை பூர்வஜென்ம பாவத்திற்கு கிடைத்த தெய்வாதீன தண்டனையாகக் கருதினர். குழந்தைகளைத் தவிர, அவனது நோய்மையை அறிந்தோரெல்லாம், அவனிடமிருந்து குறிப்பிடத்தக்க தூரத்தை  வைத்திருந்தனர்.

 

பதினாறு வயதில் ஒரு சிறுவன் இளங்கோதுமையைப் போல் வளர்கிறான். அந்தத் துள்ளல் வேகத்தில், அவனுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறியாதவனாய் இருக்கிறான். அவன் மனம் வேகமெடுக்கிறது, சைகைகள் தன்னம்பிக்கை மிகுந்ததாய் மாறுகின்றன. முடி இளம்புள்ளினை போல், முகத்திலும் நெஞ்சிலும் முளைக்கிறது. அவனது தசைகள் முதிர்ச்சியடையத் தொடங்குகின்றன. இனி எப்போதும் இவ்வளவு மாற்றமும் வளர்ச்சியும் இத்தனை குறுகிய காலத்தில் காண மாட்டான். அவன் நீரோட்டங்களாலும் எதிர்நீரோட்டங்களாலும் நிறைந்திருக்கிறான்.

 

கமல் இளமையின் மலர்ச்சியும் குறுவாழ்வின் அழகும் இணைந்தவனாய் இருந்தான். அவனது வெளிரிய, மெலிந்த உடலை பார்க்கக் கூட எனக்கு வருத்தமாக இருந்தது. அவன் கண்களை நேருக்குநேர் பார்ப்பது என்னை புண்படுத்தியது. வாழ்வும் சாவும் அதன் ஆழங்களில் எப்போதும் போராடிக் கொண்டிருந்தன.

 

நான் தில்லிக்கு போய் ஒரு வேலையைத் தேடிக்கணுமா?” என கேட்டேன்.

 

ஏன் கூடாது? நீ எப்பவுமே அதைப்பத்தி தான் பேசிட்டு இருக்கே.”

 

ஏன் நீயும் வரக்கூடாது? ஒருவேளை அவங்க உன் வலிப்பை நிறுத்தலாம்.”

 

நமக்கு அதுக்கு பணம் தேவைப்படும். என்னோட பரீட்சையில் தேர்ச்சி அடைஞ்சதுக்கப்புறம் நான் வருவேன்.”

 

அப்ப நான் காத்திருக்கேன்என்றேன். நான் இருபத்திரண்டு வயதினன். அப்போது எனக்கு மொத்த உலகமும், எல்லாவற்றுக்குமான நேரமும் இருந்தன.                     

 

நாங்கள் அவனது சிறு வருமானத்திலிருந்தும் எனக்கு அவ்வப்போது கிடைக்கும் தொகையிலிருந்தும், கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம் என்று முடிவு செய்தோம். தில்லி செல்லவும், சம்பாதிக்கத் தொடங்கும்வரை அங்கே வாழவும் எங்களுக்கு பணம் தேவைப்படும். நாங்கள் ஒரு வாரத்தில் இருபது ரூபாய் எடுத்து வைத்தோம். ஆனால் அடுத்த வாரம் மிதிவண்டி ரிக்சா கடை வைத்திருந்த நண்பன் ஒருவனுக்கு கடன் கொடுத்தபோது அதை இழந்து விட்டோம். ஆனால், இதனால் நாங்கள் அவன் சைக்கிளை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஒரு அதிகாலையில், கமல் குறுக்குக் கம்பியில் உட்கார்ந்திருக்க, நான் ஷாகஞ்சை விட்டு வெளியே ஓட்டிச் சென்றேன்.

 

இரு மைல்கள் மிதிவண்டியோட்டிய பிறகு, நாங்கள் இறங்கி மிதிவண்டியை சாலையின் பக்கத்தில் வைத்துவிட்டு, ஒரு நெல்வயலின் வழியாக பாதையெடுத்து சென்று, ஓர் இளஞ்சோள வயலைக் கடந்து, தொலைவில் ஒரு பழைய கிணற்றின் பக்கத்தில் வளர்ந்திருந்த ஒரு கோணிய மரத்தைக் காணும் வரை சென்றோம்.

 

எனக்கு அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. இதற்குமுன் அப்படி ஒன்றை எப்போதும் பார்த்ததில்லை. அது கோணிய அடிமரம் மற்றும் கோணிய கிளைகளைக் கொண்டிருந்தது. மேலும் அது தடித்த, அகன்ற, கோணிய இலைகளை தரித்திருந்தது. பஜாரில் உணவு பரிமாறப்படும் இலைகளைப்  போல.        

 

அதன் அடிமரத்தில் ஓர் ஓட்டை இருந்தது. நாங்கள் மிதிவண்டியை எடுத்து வந்து அதில் மோதியபோது ஒரு ஜோடி பச்சைக்கிளிகள் மரத்திலிருந்து புறத்தே பறந்து, வெளிகளின் குறுக்கே உலவித் திரிந்தபடி சென்றன. கிணற்றை சுற்றி, மேயும் கால்நடைகளால் ஒட்ட நறுக்கப்பட்ட புற்கள் இருந்தன.

 

நாங்கள் கோணிய மரத்தின் நிழலில் உட்கார்ந்தோம். கமல் நாங்கள் உணவு கொண்டு வந்திருந்த சிகப்புத் துணிப்பையை அவிழ்த்தான். சாப்பிட்ட பிறகு, புல்வெளியில் கட்டையை நீட்டினோம். நான் கண்களை மூடியதும், ஏகப்பட்ட  வெவ்வேறு விதமான உணர்ச்சிகளுக்கு உள்ளானேன்.

மரத்தில் பாடிக் கொண்டிருக்கும் சிள்வண்டு, பழைய கிணற்றின் சுவர்களிலிருந்து ஒலிக்கும் புறாக்களின் கொஞ்சல், கமலின் அமைதியான சுவாசம், மரத்திற்கு திரும்பும் கிளிகள், விமானத்தின் தூரத்து ரீங்காரம் ஆகியவற்றை கேட்டேன். புற்களையும், கிணற்றைச் சுற்றியிருந்த பழைய செங்கற்களையும், மழைக்கான சாத்தியத்தையும் முகர்ந்தேன். கமலின் விரல்கள் என் கையில் முட்டிக் கொண்டிருப்பதையும், சூரியன் என் கன்னத்தில் ஊர்ந்து கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். நான் கண்விழித்தபோது அடிவானத்தில் மேகங்கள் இருந்தன. கமல் கண்கூசும் ஒளியை மறைக்க தன் கையை முகத்தின் குறுக்கே போட்டபடி உறங்கியிருந்தான்.

 

நான் கிணற்றுக்கு சென்று என் தோள்களைக் வலுவைக் கொண்டு பழைய கைப்பிடியால் சக்கரத்தை சுற்றிய போது, குளிர்ந்த தூய நீர் கற்களின் மேலிருந்து பீறிட்டு கால்வாய் வழியாக வயல்களை நோக்கிப் பாய்ந்தது. என்னால் ஒரு வயலுக்கு நீர்பாய்ச்ச முடியும்; எனக்கு பொருட்களை வளரச் செய்யும் சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தது, திருப்தியுடன் கூடிய சிலிர்ப்பை தந்தது. அது உண்மையின் உணர்வைக் கொண்ட ஒரு கதையை எழுதுவது போல் இருந்தது. நான் தட்டுகளில் ஒன்றிலிருந்து குடித்தேன்; தண்ணீர் காலத்தால் இனிப்புமிக்கதாய் மாறியிருந்தது.

 

கமல் வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

 

மழை வரப் போகுதுஎன்றான்.

 

நாங்கள் வீடு நோக்கி மிதிவண்டியோட்டத் தொடங்கினோம். ஆனால், ஷாகஞ்சிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும்போது மழை வரத் தொடங்கியது. பலமாக வீசிய காற்று மழையை எங்கள் முகத்தை நோக்கி அடித்தது. ஆனால் நாங்கள் அதில் பேருவகை அடைந்தோம். ஷாகஞ் பேருந்து நிலையத்தை அடையும் வரை எங்கள் குரல்களின் உச்சஸ்தாயில் பாடிக் கொண்டே இருந்தோம்.

 

ரயில் பாதைகளுக்கும் காய்ந்த ஆற்றுப்படுகைக்கும் குறுக்கே சோள வயல்கள் நீண்டுகொண்டே போயின. அவை பூமியானது ஜிக்ஸா புதிரைப்போல சீரற்று பிளந்து, முட்புதர்களும் உண்ணிச்செடிக் காடுகளும் கொண்ட வறண்ட நிலப்பகுதி வரும் வரை தொடர்ந்தன. அந்நிலத்தின் மேல் புள்ளி வைத்தாற்போல் பழைய, கைவிடப்பட்ட செங்கல் சூளைகள் இருந்தன. பெருமழை பெய்தபோது, பள்ளங்கள் நீரால் நிரம்பின.

 

கமலும் நானும் இந்தப் பள்ளங்களுக்கு குளிக்கவும் நீச்சலடிக்கவும் வந்தோம். அதன் நடுவே ஒரு தீவு இருந்தது. இந்த சிறிய மேட்டில் செங்கல்சூளைகளை பார்த்துக் கொண்டிருந்த ஓர் இரவுக்காவலாளி வாழ்ந்த குடிசையின் இடிபாடுகள் இருந்தன. பள்ளத்தின் கரையிலிருந்து சில அடிகளிலேயே இருந்த அத்தீவுக்கு நாங்கள் நீந்திச் செல்வோம். அந்தக் குடிசையின் முன் புற்களால் ஆன சிறு நிலம் ஒன்று இருந்தது. அதிகாலையில், அதிக வெப்பமாவதற்கு முன், நாங்கள் புற்களின் மேல் குஸ்தி செய்வோம்.

 

நான் கமலை விட கனத்திருந்தாலும், என்  மார்பு புதுப்பேரிகையைப் போல் உறுதிமிக்கதாய் இருந்தாலும், அவன் வலிமையான, மெலிந்த, நெகிழ்வான கைகளும் கால்களும் கொண்டிருந்தான். அடிக்கடி அவனது சதையற்ற முட்டியினால் என் இடுப்பை சுற்றி இறுக்கிக் கட்டி விடுவான். தற்போது, நாங்கள் புதுப்பருவப் புற்களின் மேல் குஸ்தி செய்து கொண்டிருக்கும் போது, அவன் உடல் இறுக்கமடைவதை நான் உணர்ந்தேன். அவன் விறைத்தான், அவன் கால்கள் என் உடலுக்கு எதிராக திடீரென வெட்டி இழுத்தன, மேலும் ஒரு நடுக்கம் அவன் உடல்வழியே பாய்ந்து சென்றது. அவனுக்கு வலிப்பு வரப் போகிறது என்று அறிந்திருந்தேன். ஆனால், என்னால் அவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

 

அவனை வலிப்பு ஆட்கொண்டபோது, இன்னும் இறுக்கமாக என்னை பிடித்துக் கொண்டான். போராடுவதற்கு பதில், நான் அசைவற்று இருந்தேன், அவனது உளைச்சலை கொஞ்சம் உறிஞ்சிக் கொள்வதற்கும் அவனது  கிளர்ச்சியை கொஞ்சம் இழுத்துக் கொள்வதற்கும் முயன்றேன். அவனின் வலிப்புகளோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம், அவற்றை போக்கலாம் என்ற விசித்திர கற்பனை எனக்கு இருந்தது.

 

நான் கமலை எதிர்த்து அழுத்தினேன், அவன் காதுகளில் சாந்தமாக கிசுகிசுத்தேன்.பின்னர், அவனது வாய் வேலை செய்வதை பார்த்தபோது, அவன் நாக்கை கடித்து விடுவதை தடுக்க, என் விரல்களை அவன் பற்களின் இடையே செருகினேன். ஆனால் வலிப்பு மிகத் தீவிரமாக இருந்ததால், அவனின் பற்கள் என் உள்ளங்கை சதையைக் கடித்து, விரல்மூட்டுகளை நொறுக்கி விட்டன. நான் வலியில் கத்தி, என் கைகளை இழுக்க முயன்றேன். ஆனால் அவன் தாடைகளின் பிடிப்பை தளர்வாக்க முடியவில்லை. அதனால் என் கண்களை மூடிக்கொண்டு எண்ணினேன்ஏழுவரைஅவனது தன்னுணர்வு திரும்பும்வரையும் அவன் தசைகள் தளரும் வரையும்.

 

என் கைகள் குலுங்கிக் கொண்டும், இரத்தத்தில் தோய்ந்தவாறும் இருந்தன. அதை என் கைக்குட்டையால் கட்டி கமலிடமிருந்து மறைத்து வைத்தேன்.

 

நாங்கள் பெரிதாக ஏதும் பேசாமல் அறைக்கு திரும்பி நடந்தோம். கமல்  பலவீனமாகவும் மனச்சோர்வுடனும் காணப்பட்டான். நான் என் கையை சட்டையின் அடியில் வைத்திருந்தேன். கமல் எதையும் கவனிக்க இயலா வண்ணம் மிகவும் மனம் தளர்ந்து போயிருந்தான். இரவில்தான், அவன் வகுப்புகளிலிருந்து திரும்பி வந்தபோது, வெட்டுகளை கவனித்தான். நான் அவனிடம் சாலையில் வழுக்கியதாகவும் உடைந்த கண்ணாடியில் கையை கிழித்துக் கொண்டதாகவும் கூறினேன்.

 

ஷாகஞ்சில் மழை. மழை நிற்கும்வரை ஷாகஞ் புதியதாகவும், சுத்தமாகவும், உயிர்ப்புடனும் இருக்கும். குழந்தைகள் தங்கள் துகிலிலாக் கோலத்தில் களித்தபடி வீடுகளை விட்டு ஓடுகின்றனர். சாக்கடைகள் அடைக்கின்றன, குறுகிய தெருவானது பெருவெள்ளமாய் உருவெடுத்து, மகிழ்வுடன் பேருந்து நிலையத்தை நோக்கிப் பாய்கிறது. அது நகரத்தின் மரங்களையும் கூரைகளையும் சுழன்றோடுகிறது. பின்னர், வறண்டபூமி அதை உறிஞ்சி , ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வரும் ஒரு நறுமணத்தைக் கசிகிறது. தாகந்தணிந்த பூமியின் நறுமணம், மணங்களில் எல்லாம் மிகவும் களிப்பூட்டக் கூடிய ஒன்று.

 

மழை கதவின் வழியாக வீசியடித்தபடி உள்ளே வந்து கட்டிலை மூழ்கடித்தது. நான் கதவை அடைப்பதில் வெற்றியடைந்தபோது கூரை ஒழுகுவதை கண்டேன். நீரானது சுவர்களில் வழிந்தபடி, பிளவுறும் பூச்சில் புதுப்படங்கள் வரைந்து கொண்டிருந்தது. கதவு மீண்டும் அடித்துத் திறக்க, கதவருகே கமல் நனைந்த நாயினைப் போல் தன்னை உதறிக்கொண்டு நின்றிருந்தான். உள்ளே வந்து, துணிகளைக் கழட்டி தன்னை உலர்த்திக் கொண்டு மெத்தையில் அமர, நான் மீண்டும் கதவை அடைக்க தீவிரமாய் முயன்று கொண்டிருந்தேன்.

 

உனக்கு கொஞ்சம் தேநீர் வேணுமா?” என்றேன்.

 

அவன் சிரிக்க மறந்தபடி தலையசைத்தான். அவன் மனம் வேறெங்கோ இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அவன் கனவுகளிலிருந்த நூறு  இடங்களில் எங்கோ.

 

ஒரு நாள் நான் ஒரு புத்தகம் எழுதுவேன்“, வேகமாக தேய்ந்து கொண்டிருந்த அந்தியில் திடமான தேநீரைப் பருகியபடி சொன்னேன். “ஒரு  உண்மையான புத்தகம், உண்மையான மக்களை பத்தி. அநேகமா அது உன்னையும் என்னையும் ஷாகஞ்சையும் பத்தி இருக்கும். அப்புறம் நாம ஷாகஞ்சை விட்டு ஓடி கருடனின் சிறகுகள் கொண்டு பறப்போம். அப்ப நம்ம பிரச்சினைகள் எல்லாம் முடிஞ்சு புதுப் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கும். நாம சிரமங்களை ஏன் பொருட்படுத்தணும், அவை புதிய சிரமங்களா இருக்கிற வரை?”

 

முதல்ல நான் என் பரீட்சைகள்ல தேறணும்என்றான் கமல். “இல்லைனா என்னால எதுவும் பண்ண முடியாது, எங்கேயும் போக முடியாது.”

 

பரீட்சைகளை ரொம்ப தீவிரமா எடுத்துக்காத. இந்தியாவில அது தான் எந்தப் பணிக்கும் கடவுச்சீட்டுன்னும், பட்டம் பெறாத வரை நீ குமாஸ்தா ஆக முடியாதுன்னும் எனக்கு தெரியும். ஆனா நீ அறிவைப் பெற படிக்கிற; குமாஸ்தா ஆக படிக்கலைங்கிறதை மறக்காத. நீ குமாஸ்தாவோ பேருந்து நடத்துனரோ ஆக விரும்பலை, இல்லையா? நீ பரீட்சைகளில் தேறி கல்லூரிக்கு போகணும்தான், ஆனா தேறலைன்னா உன்னால எதுவும் பண்ண முடியாதுன்னு நினைக்காத. ஏன், நீ சொந்தமா பொத்தான்கள் தயாரிக்கலாமே மத்தவங்க கிட்ட வாங்கி விக்கிறதுக்கு பதிலா!”

 

நீ சொல்றது சரிதான்என்றான் கமல். “ஆனா ஏன் ஒரு படிச்ச பொத்தான் தயாரிப்பாளரா இருக்க கூடாது?”

 

அதான் ஏன் இருக்க கூடாது? அதையே தான் நானும் சொல்ல வர்றேன். நீ பரீட்ச்சைக்கு படிக்கும் போது நான் என் புத்தகத்தை எழுதிக்கிட்டிருப்பேன். இன்றிரவு தொடங்குவேன். இது ஒரு மங்களகரமான இரவு. பருவக்காற்றின் தொடக்கம்.”

 

இன்னும் வெளிச்சம் வரவில்லை. ஒரு மரம் மின்கம்பிகளின் குறுக்கே விழுந்திருக்க வேண்டும். நான் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி சன்னலின் அடிக்கட்டையில் வைத்தேன். மெழுகுவர்த்தி வெப்பமும் ஈரப்பசையும் கொண்ட காற்றில் குழப்பத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்க, கமல் புத்தகத்தை திறந்து, ஒரு கையை புத்தகத்திலும் மறு கையை கால்விரல்களிலும் வைத்தபடி(இது மனதை ஒருமுகப்படுத்த உதவியது), அல்ஜீப்ராவை நோக்கி தன் கவனத்தை குவிக்கத் தொடங்கினான்.

 

நான் ஒரு இங்க் குடுவையை அலமாரியில் இருந்து எடுத்து, அது காலியாக இருக்கவும், அடியில் கெட்டித்தட்டிய உட்பொருட்களுடன் கொஞ்சம் மழைநீர் சேர்த்தேன். பிறகு கமல் அருகே அமர்ந்து எழுதத் தொடங்கினேன். ஆனால் பேனா பயனற்றுப் போய் தாள் முழுக்க இங்க் அடித்தபடி இருந்தது. நான்  அச்சமயம் தான் எழுதும் மனநிலையில் இருந்திருந்தாலும், எனக்கு என்ன எழுதுவது என்று புரியவில்லை. அதனால் மாறாக நான் கமலை நோக்கத் தொடங்கினேன்; நிழலில் மறைந்திருந்த அவன் கண்களை; மெழுகுவர்த்தி ஒளியில் அமைதியாயிருந்த அவன் கைகளை; மேலும் அவனுடைய மூச்சையும், உதடுகளின் லேசான அசைவையும் அவன் தனக்குத்தானே மென்மையாக படித்துக் கொண்டிருந்தபோது பின்தொடர்ந்தேன்.

 

என்னுடைய புத்தகத்தை தொடங்குவதற்கு பதிலாக, நான் உட்கார்ந்து கொண்டு கமலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

சிலசமயம், நான் இரவில் விழித்திருக்கும் போது கமல் குழல் வாசிப்பான். நான் உறங்கியபின்னும் என் கனவுகளில் குழல் கேட்கும். சில சமயம் கமல் அதனை கோணிய மரத்திற்கு கொண்டு வந்து பறவைகள் பயன் பெறுவதற்காக வாசிப்பான். ஆனால் கிளிகள் கரடுமுரடான இரைச்சல்களை மட்டும் எழுப்பி விட்டு பறந்து சென்று விடும்.

 

ஒருமுறை கமல் ஒரு குழந்தைப் பட்டாளத்திற்கு குழல் வாசித்துக் கொண்டிருந்தபோது அவனுக்கு வலிப்பு வந்தது. குழல் அவன் கையிலிருந்து கீழே விழ, அவன் சாலையோரப் புழுதியில் உருண்டோடத் தொடங்கினான். குழந்தைகள் பயந்து ஓடி விட்டனர். ஆனால், அடுத்தமுறை கமல் குழல் வாசித்தபோது அவர்கள் வழக்கம்போல் கேட்க வந்தனர்.

 

கமல் வலிமையடைந்து கொண்டிருக்கிறான் என்பதை, நாங்கள் பழைய செங்கற்சூளை அருகே மல்யுத்தம் செய்தபோது, அவன் என்னை மல்லாக்க கவிழ்த்தி அமுக்கிய விதத்திலேயே தெரிந்து கொண்டேன். நானாக அவனிடம் விட்டுக் கொடுக்க இனி அவசியமில்லாமல் போனது. அவனுடைய வலிப்புகள் திரும்பத் திரும்ப அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும்(அவை தொடரும் என்று நாங்கள் அறிந்திருந்தோம்), பின்னாட்களில் அவன் அவ்வளவு மனச்சோர்வுடன் காணப்படவில்லைபதற்றமும் மரணச்சாயலும் அவன் கண்களை விட்டுச் சென்று விட்டன.

 

தேர்வுகள் நெருக்கத்தில் வரவும், அவன் மும்முரமாக தயார் செய்து கொண்டிருந்தான். நான் இனிதான் என் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை தொடங்க வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்க வேண்டிய தேவை இருந்ததால், அவனுக்குப் படிக்க அதிக நேரம் கிடைக்கவில்லை. ஆனால், அவன் நள்ளிரவு தாண்டியும் புத்தகங்களோடு புழங்கிக் கொண்டிருந்தான். அரிதாகவே அவனது குழலை நான் கேட்டேன்.

 

தேர்வுகள் நடந்தபோது, அவனது சில்லறைச் சரக்குகள் அடங்கிய தட்டினை தள்ளி வைத்துவிட்டு, அதற்கு பதில் தேர்வு மையத்திற்கு சென்றான். இரு வாரங்களுக்குப் பிறகு, எல்லாம் முடிந்த சமயம், தன் தட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் நகரை வலம்வரத் தொடங்கினான். நான் திடீரென்று கிளைத்த படைப்பூக்கத்தில், என்னுடைய நாவலில் மூன்று பக்கங்கள் எழுதினேன்.

 

தேர்வு முடிவுகள் வரவிருந்த காலை வேளையில், நான் சீக்கிரம், கமலுக்கு முன் எழுந்து, செய்தி முகமைக்கு சென்று விட்டேன். மணி ஐந்து. செய்தித்தாள்கள் அப்போதுதான் வந்திருந்தன. ஷாகஞ் தொடர்புடைய கட்டங்களை வரிசையாக வாசித்தேன், ஆனால் கமலின் பதிவெண்ணை வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியலில் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பதிவெண்ணை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்திருந்தேன். சரியாக மற்ற எண்களுடன் ஒப்பிட்டிருக்கிறேனா என்று உறுதி செய்து கொள்ள அதனை மீண்டும் நோக்கினேன். மறுபடியும் செய்தித்தாளை ஒருமுறை வாசித்தேன்.

 

அறைக்குத் திரும்பியபோது, கமல் வாசற்படியில் அமர்ந்திருந்தான். அவனிடம் அவன் தேறாததை சொல்ல வேண்டியிருக்கவில்லை. என் முகத்திலிருந்த பார்வையை வைத்தே அவன் அதை கண்டுகொண்டான். அவன் பக்கத்தில் அமர்ந்தேன். கொஞ்ச நேரத்திற்கு இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

 

ஒண்ணுமில்லை விடுமுடிவாக கமல் சொன்னான். “நான் அடுத்த வருஷம் தேறிடுவேன்

 

அவனை விட நான் அதிக மனச்சோர்வுடன் இருப்பதை உணர்ந்தேன். அவன் என்னை ஆற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தான்.

 

உனக்கு மட்டும் அதிக நேரம் இருந்திருந்தாஎன்றேன்.

 

எனக்கு இப்போ எக்கச்சக்க நேரமிருக்கு. இன்னுமொரு வருஷம். உனக்கும் உன் புத்தகத்தை முடிக்க நேரமிருக்கும். அதுக்கப்புறம் நாம கெளம்பி போயிடலாம். ஷாகஞ்சில் இன்னொரு வருஷம் ஒண்ணும் அவ்ளோ மோசமா இருக்காது. உன்னோட நட்பு இருக்கிற வரைக்கும் மத்த எல்லாத்தையும், ஏன்  என்னோட நோவைக் கூட என்னால பொறுத்துக்க முடியும்

 

பிறகு, என்னை நோக்கி திரும்பிதீவிர மகிழ்ச்சியுடன் கூடிய முகபாவனையில் சொன்னான், “நேத்து நான் சோகமா இருந்தேன், நாளைக்கு திரும்பவும் சோகமா இருக்கலாம், ஆனா இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்கேன்னு எனக்கு தெரியும், . நான் வாழ்ந்துட்டு போயிட்டே  இருக்கணும்னு விரும்புறேன். என்னை திருப்திப் படுத்துற அளவு வாழ்க்கை நீளமா இல்லைன்னு தோணுது.”

 

அவன் எழுந்து நின்றான். தட்டு தோள்களிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது.

 

நீ என்ன வாங்கணும்னு நினைக்கிற?” என்றான். “என் கிட்ட உனக்கு தேவைப்படுற எல்லாமே இருக்கு

 

படிக்கட்டுகளின் அடிப்புறத்தை அடைந்தபோது, அவன் திரும்பி என்னைப்  பார்த்து சிரித்தான். என்னுடைய கதையை எழுதி விட்டேன் என்று எனக்கு தெரிந்தது.

 

(எழுத்தாளர் Ruskin Bond யின் ‘No man is an Island’  என்ற ஆங்கில சிறுகதைத் தொகுப்பில் வந்த ‘The Crooked Tree’ கதையின் மொழியாக்கம் இது )

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close