சிறுகதைகள்
Trending

தவனம்

பிரவின் குமார்

இப்போது ஏறிச் செல்லும் எந்த இரயிலும் சரியான நேரத்திற்கு என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. வேர்த்து விறுவிறுக்க நடந்து போவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்ததும் நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டேன். காலை நேரம் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்கள் முதுகில் அவ்வப்போது ஊசியைப் போல் குத்திக் கொண்டிருந்தது. சில கடைகளின் கதவுகள் மட்டும் மேல்நோக்கி மெல்ல திறந்து கொண்டிருந்தன. இரயில் நிலையத்திற்கு செல்ல எப்போதும் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பது தான் என் வழக்கம். நான் மட்டுமல்ல பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பதும் கூட அவ்வழியைத் தான். இரயில் பிளாட்பார படிகளில் ஏற சோம்பல்பட்டுக் கொண்டு பஜாரில் கடைகளுக்கு இடையில் அமைந்துள்ள சந்துகளின் வழியே இரயில் தண்டவாளங்களைத் தாண்டிச் செல்ல முனைந்தேன்.

எத்தனை துண்டுகளாக அவ்வுடல் சிதைக்கப்பட்டிருந்தது என்பதை அங்கு குழுமி இருந்தவர்களால் கூட சரியாகக் கணிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. பல வாகனங்களின் மிதியில் நசுங்கிப் போனதைப் போல் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றும் ஆங்காங்கே சிதறி, இரயில் தண்டவாளத்திற்கு இடையில் சகதியைப் போன்று காட்சியளித்தது. உடலில் இருந்து தலை நீட்டி வெளி வந்திருந்த உறுப்புகளையும், தசைகளையும் காக்கைகள் கொத்திச் செல்ல முயற்சித்தபடி இருந்தன. புடவை விலகி இருந்ததில் அது ஒரு பெண் உடல் என்பதை மட்டும் ஊர்ஜிதப்படுத்தமுடிந்தது. ஆனால் பெண் உடலுக்கான அங்கங்கள் முற்றிலுமாக அடையாளம் காணாதபடி சிதைந்து போய் இருந்தன. மிக அருகிலும் தொலைவிலும் இல்லாமல் இரயில் நிலையத்திற்கு போவோர் வருவோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்து பார்க்க அச்சம் கொண்டவர்கள் சிலர் நெருங்கி வராமலே இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். இன்னும் காவல் துறையினர் அவ்விடத்திற்கு வந்து சேரவில்லை. காற்று இல்லாமல் பந்தை போன்று சுருங்கி இருக்கும் முகத்தை வைத்துக்கொண்டு இவ்வுடலுக்கான நிஜப்பெயரை கண்டடைவதென்பது காவல் துறையினருக்கு ஒரு சவாலான காரியம் தான்.

இரயிலில் பயணம் செய்பவர்கள் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லாமல் பழகிக்கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. மாதத்திற்கு ஒருமுறையாவது இரயிலில் சிக்கும் பிணங்களை தெரிந்தோ தெரியாமலோ வேடிக்கை காட்சிகள் போல் பார்த்துக் கொண்டு நகர வேண்டும். இரயில் நிலையத்தை விட்டு தொலைவில் இருந்தும் கூட 9 மணிக்கு வர இருக்கும் அதிவேக இரயிலுக்கான அறிவிப்பு கேட்டது. இதையும் தவறவிட்டால் நிச்சயம் மதியத்திற்கு மேல் தான் நான் அலுவலகத்திற்கு செல்லும்படி நேரும். ஆனாலும் அதை நினைத்து எல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை சூப்பர்வைசர் என்னும் அதிகாரம் என்னிடம் இருக்கும்போது அதை என் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளவும் நான் பழகிக் கொண்டேன். கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். “ஏதோ ஒரு பொம்பள மாட்டிகிச்சு போல பாவம்….” இரயில் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தவர்கள் இவ்வார்த்தையை புலம்பியடி நடந்துகொண்டிருந்தார்கள். நானும் நீண்ட நேரத்திற்கு நின்றுகொண்டு வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. இறந்தவர் யார் என்று தெரியாதவரை மரணம் என்பது இவ்வுலகில் இருக்கும் அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தி தான். இன்று நான் அலுவலகம் செல்வதற்கு முன் என்னிடம் வந்து சேர்ந்த குறுஞ்செய்தி இதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் இரயிலைப பிடிக்க வேகமாக நடந்தேன். ஆனால் இரயில் தண்டவாளத்தில் பக்கவாட்டில் கிடக்கும் அந்த உடலின் மேல் பாதி மறைத்தும் மறையாமலும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த நீல நிறப் புடவை மட்டும் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. அந்நிறம் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நான் நிறுத்திய ஹவுஸ் கீப்பிங் வேலை செய்த அப்பெண்ணை நினைவூட்டியது.

அவளை நான் கட்டாயப்படுத்திருக்கக் கூடாது, நண்பனின் அறையிலேயே நன்றாக உறங்கி ஒரு பத்து மணிக்கு மேல் கிளம்பி இருந்தால் நிச்சயம் அவளை நான் சந்தித்திருக்கவே மாட்டேன். எத்தனையோ நாட்கள் கல்லூரிக்கு மட்டம் அடித்து ஊர் சுற்றி இருக்கிறேன், இன்றும் ஏன் அதே போல் அமைந்திருக்ககூடாது. சாதாரண நாட்களிலும் கூட விடியல் என் உறக்கத்தைக் கலைத்தது இல்லை இன்று மட்டும் எப்படி? இரண்டு பீர் பாட்டில்கள் என்னால் காலி செய்யப்பட்டிருந்தன, கூடவே ஹெராயின் பவுடரும். நண்பர்களுடன் சேர்ந்து இரவெல்லாம் செக்ஸ் வீடியோஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தூங்கியதே இரவு இரண்டு மணிக்குமேல்  தான் அப்படி இருந்தும் யாருடைய உந்துதலும் இல்லாமல் நான்கு மணிக்கே நான் உறக்கத்தில் இருந்து எழுந்ததை நினைத்தால் எனக்கே வியப்பாகத் தான் இருக்கிறது. என்னை காதலிக்குமாறு நான் பின் தொடர்ந்து கொண்டிருந்த அந்த மாணவி வேறு ஒருவனை காதலிப்பதாக சொல்லி என் காதலை நிராகரிக்கிறாள். ஆனால் அவளை நான் விடப்போவதில்லை நிச்சயம் அவளைப் பழி தீர்த்தே ஆக வேண்டும். உறக்கத்தில் இருந்து விழித்ததும் நினைவில் தோன்றிய முதல் விஷயம் அது தான். ஆங்கரில் மாட்டி இருந்த என் சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். நண்பர்கள் இப்போதைக்கு உறக்கத்தில் இருந்து விழிப்பதாக இல்லை. என் செல்போனையும் பைக் சாவியையும் எடுத்துக் கொண்டு அவ்வறையை விட்டு வெளியே வந்தேன்.

பைக்கில் போய்க் கொண்டிருக்கும் போது சிறுநீர் வந்தது. தெருவில் எந்த ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச்  சென்றேன். இன்னும் போதை உடலை விட்டு நீங்கவில்லை என்பதை நிலைக்கொள்ளாமல் உடல் முழுதும் இயங்கிக் கொண்டிருந்த அதிர்வுகள்  உணர்த்தின. மீண்டும் பைக்கை எடுக்கச் சென்றபோது சற்று தொலைவில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். தெரு வீதியின் மின் கம்ப வெளிச்சத்தில் அவள் நீல நிறப் புடவை அணிந்து கொண்டிருந்தது தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது. அவ்வுடலின் முகத்தை பார்க்கும் ஆவலும் தொற்றிக் கொண்டது. அந்த முகம் அருகில் வரும் வரை பைக்கில் அமர்ந்து கொண்டே தீவிரமாக செல்போனில் ஏதோ தேடுவதைப் போல் பாவனை செய்து கொண்டிருந்தேன். அந்தப் பெண் என்னை கடந்து போகும் போது விழி அசையாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் நண்பர்கள் இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு என்னுள் நானே பேசிக் கொண்டேன் “சம்ம… ஐட்டம் டா…”. நான் சற்றும் எதிர்பாரா நேரத்தில் என்னை கடந்து சென்றவள் என்னை திரும்பி பார்த்து, “தம்பி” என்று அழைத்தாள். நான் திரும்பி பார்த்ததும் “ரயில்வே ஸ்டேஷனுக்கு எப்படி போகனும்… ஆட்டோ எதனா வருமா தம்பி?”. நண்பர்கள் பலர் அவர்களின் அனுபவங்களில் நடந்த பல கதைகளை எனக்கு சொல்லி இருக்கிறார்கள். இரவில் மேம்பாலத்திற்கு கீழ் நடக்கும் விஷயங்கள், ஈ.சி.ஆர் சாலைகளில் கடலுக்கு அருகில் நடக்கும் விஷயங்கள், எங்கேயாவது தனித்து நிற்கும் ஆட்டோ அல்லது ஓம்னி காருக்குள் நடக்கும் விஷயங்கள். இவை எல்லாம் அடுக்கடுக்காய் சட்டென்று நினைவில் தோன்றின. அவர்கள் தேவைகளுக்கான உரையாடலின் தொடக்கம் இப்படி தான் அமையுமாம். எல்லாம் தெரிந்திருந்தும் நம்மை அணுகுவதற்கான யுக்தி இப்படி தான் இருக்கும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கும் இச்சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று தோன்றியது.

“இந்த டைம்ல ஆட்டோ கிடைக்குமானு தெரில… ஆனா ஸ்டேஷன் இந்த பக்கம் இருக்கு நீங்க இப்படி போறீங்க”

அடுத்து என்ன செய்வதென தெரியாது அவள் முழித்தாள். அவள் பேசத் தொடங்குவதற்கு முன் நானே முந்திக்கொண்டேன்.

“நான் ஸ்டேஷன் வழியா தான் போறேன் வாங்க நான் டிராப் பண்ணுறேன்”

அவள் மறுத்தாள், இருந்தும் அவளுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்து இறுதியில் என் பைக்கில் அமரச் செய்தேன். இருபது கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல மனம் வரவில்லை. கிடைத்த கொஞ்ச நிமிடங்களை நீடிக்கச் செய்ய மனது திட்டம் வகுத்துக் கொண்டிருந்தது.

நான் கேட்கும் கேள்விகளுக்கு அவள் ஒற்றை வார்த்தையில் தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பஜாரில் குறுக்கு வழியாக இரயில் நிலையத்திற்கு செல்லும் சந்து வழியே வண்டியை நிறுத்தினேன். விடிவதற்குக் கொஞ்ச நிமிடங்கள் இருந்தும் தெருவே உறங்கிக் கொண்டிருந்தது.

“நன்றி தம்பி” என்று சொல்லி வண்டியில் இருந்து கீழே இறங்கியதும்  வேகமாக நடந்தாள். நான் வண்டியை நிறுத்திவிட்டு அவளைப் பின் தொடர்ந்தேன்.

“நான் வேணும்னா ஸ்டேஷன் வரைக்கும் வந்து டிக்கெட் எடுத்து தரட்டுமா”

“பரவால தம்பி நானே பாத்துக்குறேன்”

சந்தின் இருளுக்குள் அவள் மறைந்ததும் சட்டென்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்.

“ட்ராப் பண்ணதுக்கு வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிட்டு போறீங்க… ஒரு ஹக் கொடுத்துட்டு போகலாம்ல”

“ஹக் னா?”

“கட்டிப்பிடிக்கனும்”

“என்னபா உதவி செஞ்சதுக்கு இப்படி எல்லாம் பேசுற”

இருளும், தனிமையும் என்னை அவசரப்படுத்தியது. சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தேன், எவ்வளவு இருக்கிறது என்பதை கணக்கிடும் மனநிலையில் எல்லாம் நான் இல்லை. நான் கொடுக்கும் பணம் நிச்சயம் அவள் மனதை மாற்றும் என்று நம்பினேன். அவளிடமிருந்து பதில் வருவதற்கு முன்பே அவளை கட்டிபிடித்தேன்.

“ப்ளீஸ்கா ஒரே ஒரு தடவ… கொஞ்ச நேரம் ப்ளீஸ்…”

சந்தின் சுவரோடு சாய்த்து அவளை மூர்க்கமாக அணைத்தேன். அவள் உடல் குளிர்ச்சியாக இருந்தது, பருத்தி பொம்மையை அரவணைத்ததைப் போல் உணர்ந்தேன். என் பிடியிலிருந்து விடுபட அவள் திணறிக் கொண்டிருந்தாள். அவள் கழுத்துப் பகுதியில் என் முகத்தை புதைத்துக் கொண்டே கீழிலிருந்து அவள் ஜாக்கெட்டை கழட்ட எத்தனித்தேன். சட்டென்று அவள் உடலின் பலம் மொத்தத்தையும் திரட்டி என்னைத் தள்ளினாள். நான் நிலை தடுமாறி கீழே விழுந்ததும் “பொறம்போக்கு நாயே” என்று சொல்லி கையில் இருந்த பணத்தை என் மேல் வீசி எறிந்து, பாதி திறந்திருந்த மார்பகத்தோடு அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்.

ரயில் நிலையம் வரை அவளை அழைத்துச் செல்ல எனக்கு மனம் வரவில்லை. பாதியிலேயே காரை நிறுத்தினேன். “பக்கத்துல தான் ஸ்டேஷன் இருக்கு நடந்து போ” அவளும் எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் இதற்காகவே காத்திருந்தது போல் காரில் இருந்து இறங்கியதும் விறு விறுவென நடக்கத் தொடங்கினாள்.

என் அறையில் என்னுடன் தங்கிய எந்த ஒரு பெண்ணும் இதுவரை என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் சென்றதில்லை. நீண்ட வருடங்களாக நான் தொடர்ந்து கொண்டிருக்கும் வழக்கம் நீல புடவை அணிந்திருந்த இப்பெண்ணால் இன்று தகர்ந்தது. ஆடையின் நிறமும் அதன் வடிவமும் தான் என் அறைக்கு அழைத்து வர இருக்கும் பெண்களுக்கான அடையாளம். புரோக்கர் சொன்ன அந்த பார்க்கிற்கு முன்னமே இரவு ஒன்பது மணியளவில் சென்று விட்டேன். காரில் இருந்து இறங்காமல் இன்று என்னுடன் தங்க இருக்கும் பெண்ணின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணி ஒன்பதைக் கடந்திருந்தது. என்னைச் சந்திக்க வரும் எந்த ஒரு கால் கேர்ளிடமும் என்னைப் பற்றிய விவரங்களும், என் தொடர்பு எண்ணும் கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எதன் ரூபத்தில்லாவது நான் செய்து வரும் ரியல் எஸ்டேட் பிசினஸ்சை பாதிப்புக்குள்ளாக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. புரோக்கர் சொல்லிய அதே நீல நிற புடவை பூங்காவின் வாசலில் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கத் தொடங்கியதும் காரை மெல்ல ஓட்டிச்சென்று அவள் அருகில் நிறுத்தினேன். அவள் பெயர் என்ன என்பதைக் கூட நான் கேட்கவில்லை “நீ தானா அது” அவள் “ஆமாம் ஸார்’ என்று மட்டும் பதிலளித்தாள். காரில் ஏறுமாறு செய்கை காட்டினேன். எந்த ஒரு எதிர்வினையும் கொடுக்காமல் பின் சீட்டில் அமைதியாக ஏறிக்கொண்டாள். இன்றிரவு என்னை சல்லாபிக்க வந்தவள் இவளாகத் தான் இருக்கும் என்று உறுதிபட நம்பினேன். ஆனால், அறைக்கு வந்த பிறகு தான் தெரிந்தது நான் எதிர்பார்த்து அழைத்து வந்தவள் இவள் இல்லை என்று. அவள் பின் சீட்டில் ஏறும் பொழுதே அவளை சங்தேகிக்கத் தவறியதை இப்பொழுது நினைக்கையில் என் மீதே எனக்கு கோவம் வந்தது.

செல்போன், ஹான்ட் பேக் என்று எதுவும் இல்லாததைப் பார்த்து வித்யாசமான கால் கேர்ள்ளாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். அறைக்கு வந்ததும் அவள் வீட்டையே சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். முன்னமே வாங்கி வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தை அவளிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னேன் “அவள் வேண்டாம் ஸார்” என்று மறுத்தாள். “உனக்காகத் தான் வாங்கி வைத்தேன்” என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்றேன். நான் திரும்பி வந்து பார்க்கும் போது ஜன்னலின் பக்கம் நின்றுகொண்டு எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் எதுவும் பேசாமல் அறையினுள் இருந்து மது பாட்டிலை எடுத்து வந்து ஹாலில் இருக்கும் மேசையின் மீது வைத்தேன். “நீ ட்ரிங்க்ஸ் பண்ணுவியா வா ஒரு ரவுண்ட் போடு” அவள் இரு கை விரல்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டிருந்ததைப் பார்க்கும் போது என் செய்கை அவளுக்குப் புரிந்து கொள்ளமுடியாத குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதை தெரிந்து கொண்டேன்.

“ஐயோ ஸார்…. இது எல்லாம் வேணாம் என் புருஷன எப்படி வெளிய கொண்டு வரதுன்னு சொல்லுங்க ஸார்… அதுக்காக தான் நான் உங்களப் பார்க்க வந்தேன்”

“புருஷன வெளிய கொண்டு வரணுமா? புரியல?”

“அதான் ஸார் அந்த கொல கேசு.. மதியானம் கூட கவுன்சிலரு இது விஷயமா உங்ககிட்ட பேசுனாரே…”

அவள் குரலில் பதற்றம் தெரிந்தது. அவள் சொல்வது எதுவும் விளங்கிக் கொள்ள முடியாமல் குழப்பமடைந்தேன். அந்நேரம் பார்த்து என் செல்போனிற்கு வேறொரு அழைப்பு வந்தது. புரோக்கர் என் எண்ணிற்கு அழைத்திருந்தான்.

நான் அழைத்து வர இருந்த கால் கேர்ள் நீண்ட நேரம் எனக்காகக் காத்திருந்து நான் வராததால் திரும்பிச் சென்று விட்டதை தெரிவித்தான். அப்போது தான் மெல்லக் குழப்ப நிலையில் இருந்து தெளிவடைந்தேன். நான் வேறொருத்தியை மாற்றி அழைத்து வந்ததை அப்போது தான் உணர முடிந்தது. பலரை ஏமாற்றிப் பிழைக்கும் எவர் ஒருவனாலும் தன் வாழ்வில் சந்திக்கும் ஏமாற்றத்தை ஒரு போதும் தாங்கிக் கொள்ள இயலாது. அது போன்ற நிலைக்குத்தான் நான் ஆளாக்கப்பட்டேன். உடலில் பரவிய சினம் எதையாவது உடைத்து எறிய தூண்டிக் கொண்டிருந்தது, புரோக்கரை கெட்ட வார்த்தைகளால் திட்டி செல்போனைத் தரையில் வீசி எறிந்தேன். ஏதோ தவறாக நடந்திருப்பதை அவளும் உணர்ந்திருக்கக் கூடும். என் செய்கையைப் பார்த்து அவள் பயந்திருந்தாள். நான் எதுவும் பேசாமல் ரம் பாட்டிலைத் திறந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக்கொண்டு மடமடவென்று குடித்தேன். “ஸார் கதவ திறந்துவிடுங்க ஸார் நான் போறேன்” நிமிடத்திற்கு நிமிடம் அதையே பாடிக் கொண்டிருந்தாள். மூன்று ரவுண்ட் அடித்ததும் சிகரட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். புகைத்துக் கொண்டே நடந்த விஷயத்தை அவளிடம் விவரித்தேன். முன்பைவிட அவள் பீதியடைந்திருந்தது அவள் முகத்தில் தெரிந்தது. அவள் கண் கலங்கிய நிலையில்

“என் மேலையும் தப்பு இருக்கு ஸார்… நான் பாக்க வந்த வக்கீலு நீங்கதானானு விசாரிக்காம ஏறிட்டேன்… என் கிட்ட போனு இல்ல கவுன்சிலர் தான் பூங்கா கிட்டவந்து காத்திருக்க சொன்னாரு. அவரோட வக்கீலு கார்ல வந்து கூட்டிட்டு போவாருன்னும் சொன்னாரு… நானும் நீங்க தான் அந்த வக்கீலுனு நம்பி ஏறிட்டேன். நான் கிளம்புறேன் ஸார் கதவ மட்டும் திறந்துவிடுங்க”

அவள் கண்ணீர் வடித்துக் கொண்டே மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவி செய்வதாக சொன்ன கவுன்சிலரை ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக எனக்கு முன்னமே நன்கு தெரிந்தவனாக இருந்தான். நிச்சயம் அவளுக்கு உதவும் எண்ணத்தில் எல்லாம் அந்த கவுன்சிலர் வக்கீலை பார்க்கும்படி இவளை அனுப்பி இருக்கமாட்டான். நான் பார்த்த வரையில் சதி திட்டம் இல்லாமல் எந்த ஒரு அரசியல்வாதியும் எளியவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களாக இருந்ததில்லை. அந்த கவுன்சிலரின் திட்டம் எதுவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் முதலாளித்துவ மனம் கொண்டவன் எவராக இருப்பினும் எந்த சந்தர்ப்பத்தையும்  தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவே விரும்புவான். நானும் இச்சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமாக்கிக் கொள்ள விரும்பினேன். அறையினுள் சென்று கொஞ்சம் பணத்தை எடுத்து வந்து மேசையின் மீது வைத்தேன். மதுவை கண்ணாடி கிளாசில் ஊற்றிக்கொண்டே

“வழக்கமா என் வீட்டுக்கு வர பொண்ணுங்களுக்கு கொடுக்குற பணத்த விட இதுல கூடுதலா இருக்கு. இன்னைக்கு நைட் நீ என் கூட தங்க விரும்புனா இந்த பணத்த எடுத்துக்கோ”

அவள் வாயடைந்து சட்டென்று எந்த பதிலும் சொல்ல முடியாதவளாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதை மாற்ற நான் மேலும் தொடர்ந்தேன்.

“என் குடும்பம் எல்லாம் ஊர்ல இருக்கு, இந்த வீட்ல நான் தனியா தான் இருக்கேன் இந்த வீட்லியே வேல செஞ்சுட்டு இங்கியே இருக்குறதா இருந்தாலும் உன் இஷ்டம். அந்த கேஸ் விஷயமா என்னால முடிஞ்ச உதவிய நானும் செய்யுறேன் என்ன சொல்லுற?”

அவள் மூளையை சலவை செய்து அவள் மனதை மாற்ற முயற்சித்தேன் ஆனால் தன் முடிவில் இருந்து அவள் பின் வாங்குவதாக இல்லை. “எனக்கு எதுவும் வேண்டாம் கதவ திறந்து விடுங்க நான் போறேன்” அதை மட்டுமே  சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் யோசித்து முடிவு செய்யட்டும் என்று குடித்துக் கொண்டே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தன்னை சுவரோடு பொறுத்திக் கொண்டு கீழே அமர்ந்த நிலையில் அழுது கொண்டிருந்தாள். மணி ஒன்றை கடந்து கொண்டிருந்தது. பலரை தன் வசப்படுத்தி நிலத்தை வாங்கச் செய்யும் சாதுர்யமான பேச்சு இவளிடம் மட்டும் எடுபடாமல் இருந்தது. வலுகட்டாயமாக இவளை அனுபவித்தால் தான் என்ன? என்று தோன்றியது. ஆனால் அடுத்து நான் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள் நினைவில் எழ என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளின் சம்மதத்திற்காகக் காத்திருந்தேன். இரவின் நேரம் கழிந்துகொண்டே போனது இதற்கு மேல் இவளை கட்டாயப்படுத்துவதில் எந்த ஒரு பலனும் இல்லை என்பதை உணர்ந்ததும் அவளை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தேன். இந்நேரத்தில் பஸ் எதுவும் கிடைக்காது என்பதால் அருகில் இருக்கும் எதாவது இரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடும்படி கேட்டுக் கொண்டாள். இவளுடன் இன்று இரவு சல்லாபிக்க முடியும் என்று காத்திருந்ததின் பயன் இப்படி வீணாகும் என்று நான் நினைக்கவில்லை. வெறுப்பையும், கோவத்தையும் எப்படி இவளின் மேல் காட்டுவதென்று தெரியாமல் காரின் ஸ்டியரிங்கை கரத்தால் அடித்துக்கொண்டேன். என் விருப்பத்தை நிராகரித்ததற்காக, என்னை காக்க வைத்ததற்காக எதன் வகையிலாவது இவளை பழிதீர்க்க வேண்டும் என்று உள்மனம் உசுப்பேற்றியது. காரை பாதியிலே நிறுத்தினேன். நிச்சயம் இங்கிருந்து இரயில் நிலையம் வரை செல்ல ஒரு மணி நேரமாவது நடக்க வேண்டும் திறமை இருந்தால் வீடு போய் சேரட்டும் என்று அவளை இறக்கிவிட்டேன். மீதமுள்ள கொஞ்சம் நேரத்திற்காவது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று தோன்றியது. காரை வேகமாக செலுத்திக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.

என்னைத் தவிர அவள் கணவனை வேறு எவராலும் காப்பாற்ற முடியாது என்று மூன்று மாதங்களாக நாய் குட்டியை போல் என்னையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். லாபகரமில்லாத எந்த ஒரு காரியத்திற்கும் நான் நேரம் ஒதுக்குவதாக இல்லை. இறுதியாக நான் கேட்ட பணத்தை இன்று தான் அவள் எடுத்து வந்தாள். இரண்டு மணியளவில் என் கட்சி அலுவலகத்திற்கு வந்து காத்திருக்கும்படி சொன்னேன் என்னால் ஐந்து மணிக்கு மேல் தான் கட்சி அலுவலகத்திற்கு வர முடிந்தது, ஆனால் அவள் இவ்வளவு நேரம் காத்திருந்ததற்காக வருத்தப்படும் மனம் எல்லாம் என்னிடம் இல்லை. நான் எதிர்பார்த்தது என் கைக்கு வந்து சேர்ந்ததும் இவ்விரவைக் கொண்டாடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வேறொருவரின் நிலத்தைக் கையகப்படுத்த என் மூத்த அரசியல் தலைவர்களை சந்திக்கச் சென்றேன். இரண்டு மணிக்கே அவள் கட்சி அலுவலகத்திற்கு வந்து எனக்காகக் காத்திருப்பதாக செய்தி வந்தது. என் உதவியாட்களிடம் அவளுக்கு சாப்பிட எதையாவது வாங்கிக் கொடுக்கும்படி சொல்லி சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக காத்திருக்கச் சொன்னேன்.

தொண்டர்களைத் தன் வசம் திருப்புவதற்காகவே சாதுர்யமான பேச்சுக்களை வளர்த்துக் கொள்ள அவ்வப்போது பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கட்சி தொண்டர்களை ஈர்க்கும் பேச்சுக்கள் மட்டுமே கட்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் தொண்டர்களை உருவாக்கும். அப்படி என் பேச்சின் மூலமாக நான் உருவாக்கியவனின் மனைவி தான் இப்போது என்னை சந்தித்துவிட்டு செல்கிறாள். அரசியல் சூட்சமங்களின் வித்தைகள் சிலரிடம் எடுபடுகிறது சிலரிடம் எடுபடுவதில்லை.

கட்சிக்காக எதையும் செய்யத் துணியும் தொண்டன் தான் இவளின் கணவன். அரசியலுக்காக செய்யப்படும் குற்றங்கள் குறைவதும் இல்லை அதே சமயம் அரசியல் தலைவர்களுக்காக சிறைக்குச் செல்லும் தொண்டர்களின் எண்ணிக்கையும் குறையப் போவதில்லை. எதிர் கட்சிகள் எங்கள் தலைவரின் பேனரைக் கிழித்ததற்காக கட்சி நிர்வாகமே வருத்தத்தையும், கோபத்தையும், வசை சொற்களையும் உமிழ்ந்துகொண்டிருந்தது. நானும் எனது கட்சி கொண்டர்கள் சூழ பொய்மையை வெளிப்படுத்தாத பேச்சுகளை வகுத்துக் கொண்டு அவர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்திற்குள் வெகுண்டு அனைவருக்கும் கேட்கும்படி உரக்க “தலைவா நம்ம தலைவரோட பேனர கிழிச்சவனுக்கு கூடிய சீக்கிரம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்க வைக்குறேன்” என்றான். ஜாதி, மதம், கௌரவம். ஏழ்மை எதுவாக இருப்பினும் பற்றி எறியும் நெருப்பில் எவர் பார்வைக்கும் தெரியாமல் சருகுகளை எரியவிடுவதில் தான் அரசியல்வாதிகளின் தந்திரம் மறைந்திருக்கிறது. எரியும் நெருப்பில் மேலும் அனலைக் கூட்டச் செய்யும் நேரமிது. பல வருடங்களாகப் பயிற்றுவிக்கப்பட்டவனாய் தொண்டர்களை பார்த்து நரம்புகள் புடைக்கப் புரட்சியாக பேசினேன். அடுத்து இரண்டு நாட்களில் “அரசியல் பிரமுகர் வெட்டி கொலை” என்று செய்தித்தாள்களில் புன்னகை தவழ எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் பலர் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கொன்றவன் இன்னார் கட்சியை சேர்ந்தவன் என்பது மட்டும் அப்பத்திரிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதுவும் அரசியல் சாணக்கியத்தனங்களில் ஒன்று.

அவள் கணவன் சிறைக்குச் சென்றதிலிருந்து என்னையும், எங்கள் கட்சி அலுவலகத்தையும் உதவி கேட்டு திரிந்து கொண்டிருந்தாள். தன் தேவைக்காக அரசியலில் இயங்குபவர்கள் பிறரின் மீது பரிதாபமும், கரிசனமும் காட்டமாட்டார்கள் அப்படி இரக்க குணம் கொண்டவர்கள் அரசியலில் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கவும் முடியாது. கணவனை இழந்து அனாதரவாய் திரியும் அவளைப் பார்த்து பரிதாபம் ஏற்படவில்லை மாறாக என் தேவைக்கு அவளை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்றே சிந்திக்கத் தொடங்கினேன். சென்ற மாதம் அவள் என்னைச் சந்திக்க வரும் போதும் உன் கணவனை வெளியே அழைத்துவர வேண்டுமென்றால் நிச்சயம் திறமையான ஒரு வக்கீலை வைத்து வழக்கை நடத்தினால் மட்டுமே உன் கணவனை சிறையில் இருந்து வெளியே எடுக்க முடியும் என்று சொன்னேன். அவள் சக்திக்கு மீறின தொகை தான் ஆனாலும் உழைப்பதற்கும், முயற்சி செய்வதற்கும் ஏழைகள் எப்போதும் தயங்கியது இல்லை. அடுத்த ஒரு மாதத்தில் நான் கேட்ட பணம் தயார் ஆனதும் என்னைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தாள்.

கருப்பு நிற பாலிதீன் கவருக்குள் சுற்றப்பட்டுக் கொடுக்கப்பட்ட பணத்திற்கு பின் எத்தனை விதமான அவமானங்களும், புறக்கணிப்புகளும் இருக்கிறதென்பது எனக்குத் தெரியாது ஆனால் பணத்தைக் கரத்தில் தாங்கிய அந்நிமிடம் உள்மனது போதையில் தத்தளிப்பதாய் உணர்ந்தேன். மாதம் கடந்தாலும் நினைத்த காரியம் எப்படியோ நிறைவேறிவிட்டது. என் வக்கீல்  எண்ணிற்கு அழைத்தேன். வழக்கைப் பற்றி தீவிரமாகப் பேசுவது போல் அவள் கண் முன் பாவனை செய்தேன். பல அரசியல்வாதிகளின் நடிப்பை மெச்சும்படி தான் என்னுடைய நடிப்பும் இருக்கும். அவள் என்னை நம்பினாள். நீ தனியாக பணத்தை எடுத்துச்செல்வது நல்லதல்ல என்றும், நானே வக்கீலை நேரில் சந்தித்துப் பணத்தைக் கொடுத்துவிடுவதாக சொன்னேன். வக்கீலை நேரில் சந்தித்து வழக்கின் நிலவரத்தை முழுமையாக சொல்லும்படி அவளை அனுப்பி வைத்தேன்.

அவள் சென்றபின் என் வக்கீலிடம் மறைமுகமாகப் பேசி என் திட்டத்தை விவரித்தேன். கட்சி அலுவலகத்திற்கு சென்று பணத்தை நுகர்ந்து பார்க்கும் பொழுது அதில் வியர்வை நாற்றம் அடித்தது.

“கவலை படாதீங்கனா… கூடிய சீக்கிரம் அவரக் கூட்டிட்டு வந்துடலாம்”

சற்று நேரத்திற்கு முன்தான் அவள் கணவன் என்னிடம் சேமித்து வைத்துக் கொடுத்த பணத்தை வாங்கிச் சென்றாள். ஆனால் அந்த பணத்தில் பாதி என் தேவைக்காக நான் செலவழித்த விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைவிட முக்கியமானது அவள் கணவனால் செய்யப்பட்ட அந்த கொலை என் சுயநலத்தின் சதி என்பது எவருக்கும் தெரியாது.

கண்ணாடிக் கம்பெனியில் வேலை செய்த அந்த இடைப்பட்ட காலத்தில் தான்  அவன் எனக்கு பழக்கமானான். உழைப்பை ஜீரணிக்க முடியாத எந்த ஒரு உடலாலும் தொடர்ந்து வேலை செய்ய இயலாது. உழைப்பின் வலியைத் தாங்கும் சக்தி என் உடலில் இல்லை. வேலையில் இருந்து நின்றபின் கையில் காசில்லாத நிலையிலும் கூட வேறொரு வேலையை தேடிக் கொள்ள மனம் வரவில்லை. கட்சிக் கூட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் ஓசி சரக்கும், பிரியாணி பொட்டலமும் எனக்குப் போதுமானதாக இருந்தது. அரசியல்வாதிகளின் புட்டத்திற்கு பின்னே சுற்றிக் கொண்டிருந்தால் நிச்சயம் அந்நாளுக்கான நேரத்தை எப்படியேனும் கடத்திவிடலாம். கொஞ்ச மாதங்களாக அதைத்தான் செய்து கொண்டிருந்தேன்.

முன்பைவிட அவனது நெருக்கம் இப்போது அதிகரித்திருந்தது. அரசியல் சாயத்தின் வண்ணங்களைக் கூட அறிந்திராதவனை நான்தான் அரசியல் இருளுக்குள் அழைத்து வந்தேன். என் சொல் கேட்டுத்தான் அவன் கட்சிக்குள் இணைந்தான். சிறந்த தொண்டனாகப் பெயர் எடுக்க வேண்டுமென்பதே அவனது எண்ணமாக இருந்தது. அவனுடன் இருக்கும் பல பொழுதுகளில் அவன் துணிச்சலை அதிசயித்துப் பார்த்திருக்கிறேன். மதுபானக்க்கடைக்கு குடிக்க செல்லும் போதும், கட்சி மாநாட்டிற்கு செல்லும்போதும் அவனை சீண்டுபவர்களின் உதட்டை கிழித்து அனுப்புவதை அவன் ஒரு பழக்கமாக வைத்திருந்தான். அவனது வீரத்தை எனக்கு சாதகமாக்கி நான் வன்மம் கொண்டவர்கள் மீது அவனை ஏவவிட்டு பலமுறை வெற்றி கண்டிருக்கிறேன். கட்சிக்கு அவனது துணிச்சலும் வீரமும் தேவைப்பட்டது.

குடிக்கும் நேரங்களில் மட்டும் பல வருடங்களாக தனக்குக் குழந்தை இல்லாததை நினைத்து சிறுவனைப் போல் அழுதுகொண்டிருப்பான். என்னால் அதிகபட்சமாக அவனுக்குக் கொடுக்க முடிந்தது நம்பிக்கை வார்த்தைகள் மட்டும் தான். “நீ தான்டா என்னோட உயிர் நண்பன்” என்று என் கன்னத்தை கிள்ளி முத்தம் வேறு கொடுப்பான். அடிக்கடி அவன் செலவில் குடிப்பது அவமானமாக இருந்தது. வங்கிக் கணக்கு ஒன்று தொடங்க இருந்தவனை நான் தான் தடுத்து நிறுத்தி என்னிடம் கொடுத்தால் பணம் பத்திரமாக இருக்கும் என்று வற்புறுத்தினேன். கட்சிக் கூட்டங்களுக்கு செல்லும்போது கிடைக்கும் பணம், கம்பெனியில் கூடுதல் நேர வேலைக்காக கிடைக்கும் பணம் என்று என்னிடம் கொடுத்து சேமித்து வந்த விஷயம் அவன் மனைவிக்கும் தெரியும். அவனுடைய பணத்தை எச்சரிக்கையாகத்தான் செலவு செய்துவந்தேன். எப்போதும் என்னிடம் பணம் இருக்கிறது என்பதே உள்ளுக்குள் எனக்கு பெருமையாக இருந்தது.

அவன் சிறையில் இருக்கும் இந்நேரத்தில் அவன் என்னிடம் கொடுத்து சேமித்து வைத்த பணம் எவ்வளவு என்று இவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உன் கணவன் என்னிடம் கொடுத்து சேமித்து வைத்த பணம் இவ்வளவு தான் என்று கொடுத்ததும் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக வாங்கிக் கொண்டு இங்கிருந்து நகர்ந்தாள்.

சிறு சிறு விஷயங்களுக்காக அவன் வீரத்தை எனக்கு சாதகமாக்கி பலரிடம் சண்டை பிடித்திருக்கிறேன். ஆனால் கடந்த கால வாழ்வில் அழிய முற்படாத அவ்விஷயம் மட்டும் அவ்வப்போது மனதில் தோன்றி என்னை வதைத்துக் கொண்டிருந்தது. அன்று நேர்ந்த அவமானம் இன்று வரை என்னை துரத்திக் கொண்டிருப்பதுமாக இருந்து வருகிறது. அவ்வோட்டத்தை நிறுத்த வேண்டும். கட்சித் தலைவரின் பேனரைக் கிழித்த சம்பவத்தை பற்றி அவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இதை செய்தது எதிர் கட்சியை சேர்ந்தவன் என்று நான் தான் அவனிடம் பொய்யாக வேறு ஒருவனை அடையாளம் சொன்னேன். மேலும், அவனுக்கு சரக்கை ஊற்றி அவன் சினத்தை மேலெழும்பச் செய்தேன். உண்மையில் இரவோடு இரவாக கிழிக்கப்பட்ட அந்த பேனர் யாரால் நடந்ததென்பது எனக்கு மட்டுமல்ல எவர் ஒருவரும் அறிந்திராத விஷயம். ஆனால் நான் உறுதிபட நான் வன்மம் கொண்டிருந்தவன் தான் அதற்குக் காரணம் என்று அவனுக்கு அடையாளம் சொன்னேன். போதையில் மிதந்து கொண்டிருந்தவன் என் வார்த்தையை உண்மை என்று தீர்க்கமாக நம்பத் தொடங்கினான். இப்பவே அவன் கதையை முடிக்கறேன் என்று கிளம்பினான். என் தேவைக்காக என் நண்பனையே நான் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொண்டேன்.

நான் அடையாளம் காண்பித்த அந்த நபரால் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு அவமானப்படுத்தப்பட்டேன். வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்காததால் என் வீட்டின் வாசலில் பலருக்கு முன் என் முகத்தில் காறி உமிழ்ந்து என்னை அவமானப்படுத்தினான். அந்த ரணம் இன்று வரை ஆறாமல் இருந்து வந்தது. அவன் செல்வ செழிப்பாக வாழ்ந்துகொண்டிருந்ததும் எனக்கு வெறுப்பை அதிகரித்தபடி இருந்தது. கொலை நடந்த மறு நாள் அவன் புகைப்படத்தை செய்தித்தாளில் பார்த்த பொழுது தான் அவமானத்தால் பல நாட்களாக என் உடலில் இருந்து விலகி இருந்த உறக்கம் மீண்டும் என் உடலில் வந்து ஐக்கியமானது.

நண்பன் சிறைக்குச் சென்ற துக்கத்தை விட என் எதிரி கொல்லப்பட்டான் என்னும் செய்தி தான் கொண்டாட்டத்தின் உச்சிக்கு என்னை அழைத்துச் சென்றது அந்நாள் முழுக்க குடித்துக்கொண்டே இருந்தேன்.

இவ்வுலகில் நான் சந்திக்கும் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே இத்துன்பத்தில் இருந்து என்னை மீட்டெடுக்கும் என்று நினைக்க வைக்கிறது. தனி ஆளாய் என் கணவனை வெளியே கொண்டு வர எல்லா விதமான முயற்சியும் செய்து கொண்டு தான் இருக்கிறேன் இருந்தும் பிறரின் உதவி இல்லாமல் என் முயற்சிகள் எதுவும் சாத்தியப்படப்போவதில்லை.

கணவனை சிறையில் இருந்து மீட்க பல இடங்களுக்கு  அலைந்து கொண்டிருந்ததில் செய்து கொண்டிருந்த ஹவுஸ் கீப்பிங் வேலையும் மூன்று மாதத்திற்கு முன்பு பறிபோனது. சொந்தங்கள் என்று உதவ எவரும் இல்லாத இந்நேரத்தில் எனது உடல் மட்டுமே என் நம்பிக்கை. மாத சம்பளத்திற்காகக் காத்திருப்பதால் எந்த ஒரு காரியமும் அவ்வளவு சுலபத்தில் நிறைவேறப் போவதில்லை. கூலி வேலை செய்து தினமும் கிடைக்கும் பணத்தை சேமித்தால் மட்டுமே சிறையில் இருக்கும் என் கணவனுக்கான விடுதலை. கூலி வேலை செய்து, தெரிந்தவர்களிடம் கடன் பெற்று, கடைசியில் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை விற்று கவுன்சிலர் சொன்ன பணத்தை எப்படியோ புரட்டிவிட்டேன். தூங்கி எழுந்ததும் வாழ்வின் மீதான நம்பிக்கை இன்று மட்டும் மேலோங்கி இருந்தது. தனிமையில் பிழைத்துக் கொண்டிருக்கும் என்னோடு கொஞ்ச மாதங்களாக உறவாடிக் கொண்டிருந்தது உப்பு பூத்த இந்த வியர்வை வாசம் தான். இன்று அதனை உடலில் இருந்து விடுவித்தாக வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு உடலில் இருக்கும் அழுக்கு ஒவ்வொன்றும் நீங்கும் வரை குளித்தேன். என் கணவன் கடைசியாக வாங்கிக் கொடுத்த அந்த நீல நிறப் புடவையை அணிந்து கொண்டேன். முகத்திற்கு பவுடர் அடித்தும், நெற்றிக்கு குங்குமம் வைத்தும் ஒப்பனைகள் செய்து கொண்டேன். இன்று நான் சந்திக்க இருக்கும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் உதவியால் என் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை வந்தது. வீட்டை சாத்திக் கொண்டு வெளியே வந்தேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் கருவுற்றிருப்பதைக் கொண்டாடுவதற்காகவாவது என் கணவனை சிறையில் இருந்து மீட்க வேண்டும். நிச்சயம் மீட்பேன்.November

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close