கட்டுரைகள்

“பூதக் கதைகள்” – ‘தப்பாட்’ ஹிந்தி திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கிருஷ்ணபிரசாத்

கட்டுரை | வாசகசாலை

காதலன் காதலிக்குள் இருக்கும் கமிட் செய்யப்படாத காதலும், கணவன் மனைவிக்குள் இருக்கும் கமிட்டட் காதலும் ஒன்றுதானா? வெவ்வேறா? எது காதல்?

ப்ரேக்-அப் நடக்குற அன்னைக்கு எதுவுமே புதுசா முடிவாகுறது இல்ல. ஆறேழு சந்திப்புகளுக்கு முன்னாடியே அவளோட இனி பழகுறது toxicனு மனசுக்குப் புரிய ஆரம்பிச்சிருக்கும். அதன் பின்னான சடங்குக்காகச் சந்திக்கும் சந்திப்புகளில் சகஜமா பேசும்போது, ஒரு நாள் வரும் வாக்குவாதம் சண்டையில் முடியும், “நாம காதலிச்ச ஆள் இவ கிடையாது”னு திடீர்னு தோணும்.

வாக்குவாதங்களாக மாறும் உரையாடல்களில் எல்லாம் பெரும்பாலான ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்ள விருப்பமில்லை என்பதுதான் உண்மை. ஏன் புரிந்துகொள்ள விருப்பமில்லை? ஏனென்றால், அவன் போடும் ட்யூனுக்கு அவள் ஆட வேண்டும். ஆடாதவளிடம் முரண்படுகிறான். கருத்து மோதல் வலுத்து, காதல் அறுபட ஆரம்பிக்கிறது. காதலிக்கும்போது ஒரு ஆண் எப்படியெல்லாம் ரசித்து ரசித்து காதலிக்கலாம் என்று நினைக்கிறானோ, அதேயளவு ஆசைதானே பெண்ணுக்கும் இருக்கும்?

பரஸ்பர மதிப்பில்லாத, அடிப்படை புரிதலில்லாத, கண்டிஷனல் காதலை நிர்பந்திக்கும் ஓர் உறவு என்ன மயிருக்காக வாழ்க்கைத் துணையாக தொடர வேண்டும்? காதலென்னும் ஈடுபாட்டை உறவுக்கு வெளியே தூக்கிப்போட்டு மிதித்துவிட்டு, ஊர்கூட்டி செய்த ஒரு சடங்குக்காக எல்லோர் முன்பும் சந்தோஷமான தாம்பத்யம் கொண்டாடும் கணவன் மனைவிபோல் வாழ்நாள் முழுக்க நாடகமாடுவதற்கு ஒரு கேரக்டருக்கு என்ன அவசியம் இருக்கிறது?

thappad

`தப்பட்’ படம் கேட்கும் கேள்வி… உங்கள் வாழ்வில் காதலுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?

The first and foremost!

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்தும் தன்மை இருக்கிறது. சிலருக்குப் பொருட்களில், சிலருக்குப் புகழில், பணத்தில், ஊர் சுற்றுவதில், திரையரங்கில் பார்க்கும் படங்களில், மனிதர்களில், இலக்கியங்களில், போதைகளில், செக்ஸில், பாலுணர்வை கொண்டாடும் கேம்களில், அரசியலில், பொதுவாழ்வில் எனத் தனிபட்ட முறையில் காதலை வெளிப்படுத்துவது மாறுபடும். ஆனால், பொழுதின் முடிவில் தன்னுடைய வாழ்க்கைத் துணையின் மடியிலும் நெஞ்சிலும் சாய்ந்து சுயவாழ்வின் ரகசியங்களை பரிமாறும் பரஸ்பர காதல்.

நம்முடைய எல்லா திட்டங்களையும் பகிரும் நபர் ஒரு மனிதனுக்கு தேவை. நம்பிக்கையானவர். அந்தரங்க உணர்வுகளை அவளிடமும் அவளின் உணர்வுகளை நம்மிடமும் எனப் பகிர்ந்து நீட்சியாக எல்லாம் துறந்து, நிர்வாண நிலையில் நம் அந்தரங்க உறுப்புகளையும் பகிர்ந்து, உடல் பகிர்வில் முடியும் ஓர் ஓய்வுநிலை.

கோபங்களை பகிர்ந்துகொள்ள. Imperfectionசை பகிர்ந்துகொள்ள, எமோஷனல் insecurityக்களைப் பகிர்ந்துகொள்ள, ரத்தமும் சதையும் கொண்ட இன்னொரு உயிர் தேவை. எல்லாம் மறந்து தூங்கும் தூக்கம்போல பேரன்பை பகிர்கிற ஒரு துணை மனிதனுக்கு தேவை. யாருக்கும் தீங்கு விளைவிக்காத, ஒரு மனிதனின் தனிமைக்குள் தலையிட்டு, ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’, ‘ஒரு நேரத்தில் ஒரு காதல்’, ‘ஒருவனை மட்டும் காதலிப்பவள்தான் ஒழுங்கான பெண், பரஸ்பர தெளிவுடன் இருவரை ஒரே நேரத்தில் காதலித்தால் அது ஒழுங்கின்மை’ போன்ற மாறல் பாலிஸிங் சட்டமியக்கும் கட்டமைப்புகள் வருங்காலங்களில் தகர்க்கப்படும். சாய்ஸ் ஆஃப் செக்ஷுவல் ஒரியேண்டேஷன்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெறுவதுபோல், நாளை relationship orientation என்பதும் மாறி கட்டமைப்புகள் உடைபடும்.

thappad

தனிமையைக் கொண்டாட துணை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் இன்ப துன்பம் கடந்து, குதூகலமான பாதையில் பயணிக்கும் துணை. சரி! வாழ்க்கை இவ்வளவு சுலபமான சாகசமா? இல்லவே இல்லை. இவையெல்லாமும் நினைத்தபடியே, குதூகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருப்பதற்கு ஜோடி இருவருக்குள் காதல் என்னும் உணர்வு எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். “இஸிட்? அவ்வளவுதானே உயிர்ப்புடன் வச்சுட்டா போச்சு. தினமும் `ஐ லவ் யூ’ சொன்னால் போச்சு” என்னும் மெக்கானிக்கல் கலாச்சாரத்துக்குள் அடங்காதது ஆக்சிடாஸின். தினம் வெவ்வேறு மனிதர்களாக upgrade ஆகிக்கொண்டிருக்கும் ஜோடிகளுக்குள் இருக்கும் காதல், தேக்கநிலை காணும்போதெல்லாம் அந்தத் தேக்கத்தின் காரணம் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். பரஸ்பர முயற்சியெடுக்க வேண்டும். ஏன் என்றால், இவர்களுக்குள் காதல் இருந்தால்தான் குழந்தைகளுக்கும் பிரதிபலிக்கும். பின்பு, ‘அன்பு குறைப்பாட்டுடன்’ அந்தக் குழந்தை வளரும். அப்பா அம்மாவுக்குள் இருக்கும் அன்பும், அதையொட்டிய பாசமும்தான் குழந்தைகளின் emotional வாழ்வை பாதிக்கும் எரிபொருள். நாளை குழந்தைகளின் வாழ்க்கையில் சக மனிதர்களினூடே அவர்கள் காட்டும் அன்பை இது நிச்சயம் பாதிக்கும். தாம்பத்ய காதலின் முக்கியத்துவம், தாம்பத்யம் தாண்டி everlasting காதலாக நிலைக்க, நிச்சயம் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் பெருமதிப்பு மிக முக்கியம். இதை நன்குப் புரிந்துகொண்டிருப்பவள் தாப்ஸி.

எமொஷனல் நெக்லிஜன்ஸ் ஒரு அர்ரகன்ஸாக தொடரக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவள். அப்படித் தொடரும்பட்சத்தில் அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அதைத்தான் மௌனமாக இருப்பதன் மூலம், தன் மீதான மதிப்பையும் காதலையும் சின்னாபின்னம் ஆக்கிய கணவன், தான் செய்த தவறை உணர்ந்து தன்னிடம் பேச சில நாட்கள் அவகாசம் கொடுக்கிறாள். ஆனால், அந்தத் தத்தி கணவனோ, தன்னைப் பற்றி சுய தம்பட்டம் அடித்தவாறே தாப்ஸியை வெறுப்பேற்றவே, அவனுடைய self centrist தனத்தின் அருவருப்பு தாங்கமுடியாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் தாப்ஸி.

`காதலித்து மணந்த கணவன் எல்லோர் முன்னும் அறைந்துவிட்டான்’ என்பதுவரை யதார்த்தம், “அதைப்பற்றி அக்கறையாக என்னிடம் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் தூங்கிவிட்டான். நான் என்ன செய்யப்போகிறேன்?” என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது படத்தின் கதையும் கற்பனையும், கருத்தும் விழிப்புணர்வும். உணர்வுப்பூர்வமான பிரச்னையை எப்படிச் சரிசெய்து? தன்னுடைய சுயமரியாதையை எப்படிக் காப்பாற்றி போலியான காதலை தூக்கிப்போடுகிறாள் என்பதுதான் திரைக்கதை. அவன் கொடுக்கும் அறைதான் படத்தின் முதல் plot twist. இங்கேயே ஒரு சுவாரஸ்யமான முரண் இருக்கிறது. கணவனின் (லண்டன்) வேலை பொசிஷனிங்கில் நடந்த அரசியல்தான் படத்தின் plot twistடா? இல்லை, அவளுக்கு விழுந்த அறைதான் படத்தின் plot twistடா என்று இந்தத் திரைக்கதையின் inciting incidentடை ஒருவன் அணுகுவதிலேயே அவன் சாவனிச விரும்பியா இல்லை சமத்துவ விரும்பியா என்பதை முடிவுசெய்துகொள்ளலாம். ‘மனைவியின் மீது விழுந்த ஒரேயொரு அறை எப்படி அவளுக்கு பல லட்சங்களை கொடுக்கும் சொகுசான வெளிநாட்டு வாழ்க்கையைவிட முக்கியத்துவம் பெறுகிறது?’ என்பதை உரையாடுவதே ‘தப்பட்’ படத்தின் நோக்கம். ஏதோ ஒரு தத்தி நடிக்காமல், சிவகார்த்திகேயன்/தனுஷ் மற்றும் நயன்தாரா/த்ரிஷா நடித்து, தியாகராஜா குமாரராஜா/ வெற்றிமாறன் போன்றவர்கள் இயக்கி, ‘நேர்கொண்ட பார்வையை’ போல தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, டொமஸ்டிக் வயலன்ஸை பற்றிய விழிப்புணர்வை பேச வேண்டியதொரு படம்.

thappad

காதலை சாகடித்துவிட்டு, தனக்கான மதிப்பை இழந்துவிட்டு, ஒரு பிணம்போல குடும்பம் நடத்தி, தண்டக்கருமாந்திரமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதில், பிரச்னைகளை சரிசெய்துவிட்டு உண்மையான காதலுடன் வாழ்க்கையை மறுபடி ஆரம்பிக்கலாம். இல்லை, பிரச்னையை சரிசெய்ய முடியவில்லையா? பேசாமல் பிரிந்துவிடலாம். இதுதான் படம் பேசுகிறது. இதுதான் நியாயமும்கூட.

திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை/ பையனை காதலிப்பது என்பதே நிறைய பேருக்கு இங்கு சிம்மசொப்பனம். இதில், கல்யாணமாகி ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு டைவர்ஸ் வாங்கி, இன்னொரு பெண்ணை/ஆளை தேடுவது எங்கே? (பல தடிமாடு) ஆண்களுக்கு அதைவிடப் பெரிய பிரச்னையாக வீட்டு வேலைகள் செய்வது, பெரியவர்களை கவனிப்பது, குழந்தைகளை கவனிப்பது, சமைப்பது இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? இப்படியெல்லாம் போராடுவதற்கு, மனைவியிடம் காதலில்லாமல் சர்வைவாவது செய்து சமாளித்துவிடலாம் என்று யோசிப்பான். அல்லது வாரிசு காரணம் காட்டி அடிமை வேலை செய்ய வேறொரு பெண்ணை கட்டுவதற்கு தேட வேண்டும். வீட்டு வேலை செய்வதென்பது மிகப்பெரிய skill set. வளரும்போது பெரும்பாலும் எந்த வீட்டு வேலையும் செய்யாத (பல) ஆண்கள், எப்படி திடீரென்று சமாளிப்பார்கள்? அதேபோல் வெளியேபோய் கடைகளில் பொருள் வாங்குவது, ஸ்கூலுக்குச் செல்வது, கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது, கல்லூரிக்கு அப்ளிகேஷன் போடுவது, கல்லூரியில் சீட்டு வாங்கி படிப்பது, உற்றார் உறவினர் கல்யாணத்துக்குச் செல்வது, திரையரங்கு, திருவிழா, வெளியூர் வேலை, பேச்சிலர் அறை, லேடீஸ் ஹாஸ்டல் என அத்தனை வெளிவேலைகளையும் ஆணுக்குப் பெண் நிகராக செய்தவண்ணம்தான் வளர்கிறாள். அதனால், தமிழ்/இந்திய சமூகத்தில், டைவர்ஸ் ஆனபின் எதிர்கொள்ளப்போகும் தனிமையில், பெரும்பாலும் பெண்ணைவிட ஓர் ஆணுக்குத்தான் பிரச்னைகள் அதிகம். பிரிந்து தனிமையில் இவன் திணறிக்கொண்டு இருக்கும்போது, அங்கே அவள் வெகு எளிதாக தனியாக வாழத்தொடங்கியிருப்பாள். “எப்படி அவ்வளவு எளிதாக வாழமுடியும்?” என்றும், “ஆணில்லாமல் எப்படி ஒரு பெண்ணால் துணையின்றி தனியாக வாழமுடியும்?” என்ற பூதக்கதைகள் சொல்ல ஆரம்பிக்கும் சமூகம், அவளைத் தனியாக வாழ வக்கற்ற ஓர் இனமாக கட்டமைக்க ஆரம்பிக்கும்.

தாப்ஸியின் கேரக்டரான அம்ரிதா எப்படிபட்டவள்? இதற்குமுன் வாழந்ததெல்லாம் வாழ்க்கையே இல்லாததுபோல, ஓர் அறைக்கு எல்லாம் உடனே அத்துகிட்டு போகும் பெண் அல்ல அம்ரிதா. ஏன் என்றால் அம்ரிதா நடந்ததை பற்றி ரீகலெக்ட் செய்துகொள்ள ஒரு இரவை எடுத்துக்கொள்கிறாள். அந்த இரவை தூங்கிக் கடக்காமல் நடந்த சம்பவத்தையே நினைத்துக்கொண்டு இருப்பாள். அடித்தவனோ ஒன்றுமே நடக்காததுபோல தூங்கிக்கொண்டிருப்பான். அதைத்தான் இவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்றே அவள் ஏன் பெற்றோர் வீட்டுக்கு ஓடவில்லை. அவள் சுயமாகச் சிந்திப்பவள். காதலித்து மணம் செய்தது அவளுடைய முடிவு. அவளின் முடிவுக்கு அவள் சுயமாக response காட்டவேண்டும். அதற்கு அவர்கள் இருவரும் முதலில் பேசித் தீர்க்க முடிவு செய்யவேண்டும். அதுதான் தன் காதல் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பு. இவளுடைய மதப்பீடுகளை தலைகீழாகத் தூக்கிப்போட்டு அசைத்துப் பார்த்த சம்பவமாக அந்த இரவு நீள்கிறது. இருவருக்குமிடையேயான காதல், கோமாவில் இருப்பதையே இந்த இரவுதான் அவள் உணர்வாள்.

thappad

எழுந்து அந்தச் சம்பவத்தை பற்றி பேசி, தன் தவறை சொல்லி மன்னிப்பும் கேட்டு, இனிமேல் இதுபோல் நடக்கவே நடக்காது என்ற உத்தரவாதமும் கொடுத்து, தன் மீதுல்ல அக்கறையை வெளிப்படுத்துவான் என்றுதான் நினைப்பாள். ஆனால், ஒரு நாள் முழுவதும் அவன் பக்கமிருந்து எந்தவித வருத்தமும் தெரிவிக்காதபோதுதான் உண்மையிலேயே தன் காதல் செத்துவிட்டதோ என்பதை உணர்வாள். இப்போது என்னால் உன்னை காதலிக்க முடியவில்லை என்ற உண்மையை உணர்ந்து, அவனிடம் சொல்லியும்விடுவாள். இந்திய சினிமாவில் இதுபோன்ற காதலை உள்ளது உள்ளபடி போட்டு உடைக்கும் தருணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஏனென்றால், அதுதான் உண்மை.

“காதலில்லை என்பதை சொல்வதன் மூலம், என் எதிர்கால ஃபினான்ஷியல் செக்யுரிட்டி அடிப்பட்டாலும், வெளிநாட்டு சுகபோக வாழ்க்கை சிதறினாலும், என்னால் போலியாக உன்னை காதலிப்பது போலவும், என் மேல் உனக்கு காதல் இருப்பதுபோல் நினைத்துக்கொண்டு, நீ ஆபீசுக்கு கிளம்பும்போது, உனக்கு லேட்டாகக்கூடாது என்பதற்காக உன் ப்ரேக்ஃபாஸ்ட்டை வெளியில் எடுத்துக்கொண்டு, கார் வரை வந்து எல்லாம் இனிமேல் என்னால் ஊட்டிவிட முடியாது. அதெல்லாம் என் மனதில் காதல் இருந்ததால் செய்தது. உனக்கும் என் மேல் அப்படியொரு பரஸ்பர காதல் இருப்பதாக நம்பிக்கொண்டு செய்தது. ஆனால், இனிமேல் காதல் இல்லாமல் உனக்கு டீ போட்டுக் கொடுக்க ஒரு லெமன் க்ராஸை வெட்டக்கூட என்னால் ஒரு கத்திரியை ஈடுபாட்டுடன் தொட்டு எடுக்க முடியாது. காதல் இல்லாததால் இனி உனது வியர்வையின் நெடி என்னிடத்தில் காமத்தை தூண்டப்போவதில்லை”

“You slap me. You disrespect me. You don’t have regrets. You don’t apologise. You don’t care to ask about my feelings, you prioritise your career over my self respect, you interpret your career as my happiness and you ask for a relationship by not giving a damn about mutual love. You know what? Fuck off!”

காதலை எதற்கு இந்தளவுக்கு போட்டு உருட்ட வேண்டும்? காதலை தவிர வாழ்க்கையில் வேறெதுவும் வேலை இல்லையா? முழு நேரமும் காதலைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்துவிட்டால், இந்த உலகில் சர்வைவ் செய்துவிடமுடியுமா? ஒருவன் செய்யும் தொழிலில் எவ்வளவு போட்டி இருக்கிறது, ப்ரெஷர் இருக்கிறது? சமூகத்தில் இவ்வளவு டென்ஷனுடன் வாழ்பவன், எப்படி எல்லா நேரங்களிலும் காதல் செய்துகொண்டு இருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை ஒருவர் கேட்பாராயின், அவர் மனதில் காதலுக்கான அடிப்படை ஆர்வமே இல்லையென்று என்று அர்த்தம்.

தனிப்பட்ட காதலில் ஆர்வமில்லாத தத்தி ஆண்களும் தண்டக்கருமாந்திர பெண்களும் சமூகத்தின் கேன்சர் செல்ஸ். தாம்பத்யத்தின் இருத்தலைப் புறக்கணிக்கும் மனிதனால் என்ன பெரிய காதலை செய்துவிட முடியும்? இவர்களைப் பொறுத்தவரை, பிடிக்குதோ இல்லையோ வாழ்க்கைத் துணையாக ஒருவள்/ஒருத்தி கடைசிவரை வரவேண்டும். அதுதான் இவர்களுக்கு காதல். அதனால்தான் இவர்கள் தொடர்ந்து, `ஒருமுறை வந்தால்தான் காதல்’ என்பதை தன் சுற்று வட்டத்துக்குள் திணித்த வண்ணம் இருப்பார்கள். ஒருமுறை வருவதற்கு பெயரா காதல்? அதனால்தான் சொன்னேன் காதலை ஒருமுறை மட்டும் நிகழும் தியாகப் புனிதமாக கட்டமைக்கும் ஒவ்வொரு மனிதனும் ஜடம்.

காம்ப்ரமைஸ் செய்யாமல், பிடிவாதமாக இருந்ததால், அம்ரிதா என்ற பெண் சாதித்த விஷயங்கள் என்னென்ன? Ex. மாமியார் மாமனாரின் பிரிவு சரிப்பட்டு இருவரும் இணைவர். அவளின் தம்பி தப்பாக நடத்தியதை பற்றி வருந்தி, தன் காதலியிடம் மன்னிப்பு கேட்டு, “உனக்கு லாயக்கனாவன் இல்லை, என்னை மன்னித்துவிடு” என்று சொல்ல, அவள் அவனைப் புரிந்து மன்னித்தபோது, அவர்களின் காதல் இன்னும் ஆழமாகிறது. தன்னை மதிக்காமல் விருப்பமின்றி வன்புணரும் கணவனை பிரிய முடிவெடுத்த வக்கீல் சுனிதாவின் வாழ்க்கை அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறது.

thappad

படத்தில் தாப்ஸியின் கணவன் ஒரு flawed கேரக்டர். அப்படிப்பட்ட ஆண்கள் இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறார்கள். ஆனால், தாப்ஸீ போன்ற கதாபாத்திரம் அப்படிப்பட்ட தத்தியை காதலித்திருப்பார்களா என்னும் எண்ணம்தான் கன்வின்சிங்காக இல்லை. இரண்டாவது இதுபோன்ற பிற்போக்கு மனநிலைகொண்ட ஒரு கேரக்டருக்கு cast பண்ணும்போது, ஒரு சுவாரஸ்யமான நடிகரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியிருக்கும்பட்சத்தில் கேரக்டரின் செயல்களும் சரி, ‘விக்ரம்’ கேரக்டரை ஏற்று நடித்த ‘பவைல் குலாட்டி’யின் நடிப்பும் சரி, தட்டையிலும் மெல்லிய தட்டையான தகடாக இருந்தது.

இன்னொரு பக்கம் தாப்ஸியின் நடிப்பு. அம்ரிதா கேரக்டர் அட்டகாசமான முறையில் எழுதப்பட்டிருந்தாலும், அதை ஏற்று நடித்த தாப்ஸியின் நடிப்போ மிகவும் மோசமான, மீளமுடியாத மயக்கத்தை கொடுக்கும் சுவாரஸ்யமில்லாத நடிப்பாக இருந்தது. தாப்ஸியிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள வேண்டும். என்னவென்றால், அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும் படங்களும் நிச்சயம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. ஆனால் எப்படி? எந்தளவுக்கு அந்தப் படைப்பு வெகுஜனத்தை சென்றடைகிறதோ, அந்தளவுக்கு விழிப்புணர்வு வலுபெறும். விழிப்புணர்வெனும் நோக்கம் முழுமையடையும். அப்படியிருக்கும்போது, காஸ்டிங்கில் தாப்ஸியின் கணவன் கேரக்டருக்கு `புரியாத புதிர்’ ரகுவரனை நினைத்துப் பாருங்கள். யாருமே சுவாரஸ்யமற்ற கலைக்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு ரசிகர்களல்ல. அனைவரும் தரமான கலையம்சத்தோடு பரந்த மானப்பான்மை அரசியல் பேசும் சுவாரஸ்யமான உணர்வுப்பூர்வமான கதையும் காட்சியமைப்புகளும்கொண்ட படங்களுக்குதான் ரசிகர்கள். கலைக்கும் கமர்ஷியலுக்கும் இங்கே போட்டியே கிடையாது. உணர்வுப்பூர்வமான சுவாரஸ்யத்துக்கும் உணர்வு செத்துப்போன த்ராபைகளுக்கும்தான் இங்கே போட்டியே! கருத்தாக ஒரு படத்தை எடுத்துவிட்டதால் மட்டுமே நல்ல படம் எடுத்துவிட்டோமேன இயக்குநர்கள் தேங்கிவிடக்கூடாது. அந்தக் கருத்து வெகுஜனத்துக்கும் சென்றடைய உழைக்க வேண்டும். அதுதான் முக்கியம்!

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. முதலில் மக்கள் மனோபாவம மாற வேண்டும், ஒரு உறவை கட்டாயத்தின் பேரில் கொண்டாட வைக்கும் சமூகத்தின் மனோபாவம் மாறவேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close