கட்டுரைகள்
Trending

தண்ணீர்… தண்ணீர்… தண்ணீர்…நீரியல் நிபுணர் பேரா.ஜனகராஜனுடன் தோழர் ஜி.செல்வா நேர்காணல்

தோழர் ஜி.செல்வா

பேராசிரியர் ஜனகராஜன். நாடறிந்த நீரியல் நிபுணர்.  சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) புகழ்பெற்ற பொருளாதார அறிஞரும் பேராசிரியருமான சி.டி.குரியனின் மேற்பார்வையில் ஆய்வு மாணவராக அவர் இணைந்திருந்த நேரம். அப்போது இரண்டு ஆண்டுகளாக ஆய்வுக்கான தளத்தைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கையில்  வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தின் அடிக்குறிப்பில் ஆய்வுப்பொருள் துலக்கம் பெற்றது. மாறிய வேளாண்மை பொருளாதாரத்திலுள்ள, மாறாத நிலப்பிரபுத்துவ தாக்கங்கள்‘. அதன் வழி ஆய்வுப்பணிகள் நகர 1980-களில் வேளாண்மையில் தண்ணீர் ஒரு சந்தைப் பொருளாக மாறிவிட்டதைக் கண்டு உணர்ந்தவுடன், தண்ணீரே அவரது எதிர்கால ஆய்வின் மையச்சரடாக மாறி விட்டது.  

வேளாண்மைப் பொருளாதாரம் மாற்றமடைந்திருந்தாலும் நிலப்பிரபுத்துவத் தன்மைகளும் தாக்கங்களும் மாறாமல் இருப்பதற்கு, அடிப்படையான காரணம் நிலம் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படாததே என உறுதியாகக் கூறுகிறார். நிலப்பிரபுத்துவத்தை வேரறுக்க நிலச்சீர்திருத்தம் தான் இன்றைக்கும் அடிப்படைத் தேவை என்பதை தர்க்க ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.  

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக காவிரி பாசனப் பகுதியில்  வேளாண்மை இயக்கங்களோடு இணைந்து செயலாற்றி வரும் பேராசிரியர் ஜனகராஜன், இன்றைய டெல்டா பகுதியின் துயரார்ந்த நிலைமையை வரலாற்றுப் பின்புலத்தோடு  பேசுகிறார்.

 

1977-78 ஆம் ஆண்டுகளில் கள ஆய்வுக்காக தஞ்சாவூருக்கு சென்ற போது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜி.வீரய்யன் உடனான தொடர்பு,  மதுரையில் தோழர் என். சங்கரய்யா, கோவையில் தோழர் ஆர்.வெங்கிடு போன்றவர்களுடனான  நட்பையும் சந்திப்பையும்  மகிழ்ச்சி பொங்க நினைவு கூர்கிறார் பேராசிரியர் ஜனகராஜன்.

தமிழில் தான் பிடித்த ஒரே புதினம் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனல் என்கிறார். “அதுவும் அப்போது வெண்மணி கிராமத்தில்  களஆய்வில் இருந்ததால் வாசித்தேன்.  வெண்மணி நிகழ்வுகளை மிகவும் கொச்சையாக பதிவு செய்த நாவல் இதுஎன்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியிலும் நாவல் வெளிவந்தவுடன் இந்த விவாதம் நடந்தது. ஆனால், அதுதான் வெண்மணி குறித்த  முதல் பதிவு எனக் குறிப்பிட்டவுடன் அதனால் தான் விமர்சிக்க வேண்டியுள்ளது.  இலக்கியத்தில்  போராட்ட வரலாற்றை முதல் பதிவே தவறாக சித்தரித்து சரியில்லை, அல்லவாஎன்கிறார்.

இன்று தமிழகம் எதிர்நோக்கியுள்ள தண்ணீர் பஞ்சத்திற்கான காரண, காரியங்களை எடுத்துரைத்து, அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அவரோடு உரையாடியதிலிருந்து

வளர்ச்சி எனப்படுவது யாதெனில்...:

இன்றைய உலகளாவிய தாராளமய சந்தைப் பொருளாதார யுகத்தில்  சமூக, பொருளாதார, நகர்ப்புறத் தொழில் வளர்ச்சி விரிவாக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.

வளர்ச்சி என்பது நீடித்து, நிலைத்து முன்னேறுவதாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏழு சதவீத வளர்ச்சியடைந்துள்ளோம் என சொல்வதெல்லாம், பக்கச் சார்போடு சொல்லப்படும் கணக்கீடு. இந்தப் பொருளாதார உற்பத்தி – வளர்ச்சிக்காக இயற்கை வளங்கள் எவ்வாறு, எப்படி, எந்தளவு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என கணக்கீடு உள்ளதா? சுற்றுச்சூழல் கணக்கீடு, சூழலியல் தொகுப்பு மதிப்பீடு (Environmental accounting and Ecosystem  valuation) செய்யப்பட்டுள்ளதா? உத்தராகாண்ட், காஷ்மீர், சென்னை, கேரளம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழைவெள்ளம், வீசும் அனல்காற்று, வறட்சி ஆகியவை இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை. சுற்றுச்சூழலை  அழித்துக் கொண்டிருப்பதன் தாக்கத்தை விவசாயத்தில் அதிகமாக உணர முடிகிறது.

நவீனத் தொழில்நுட்பங்கள் புதுப்புது மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. நகரமயமாக்கல் மக்களின் தேவையை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் 1947இல் மக்கள்தொகை 35 கோடி. இதில்  20 சதவீத  மக்கள் நகர்ப்புறத்திலும் மீதி 80 சதவீதம் கிராமங்களிலும் வசித்தனர். 2019-லோ 130 கோடி மக்கள் தொகையில் 38 சதவீதம் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமயமான மாநிலம் தமிழகம். 52 சதவீதமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். எனவே, மற்ற மாநிலங்களைவிட நகர்மயமாக்கலின் தாக்கம் தமிழகத்தில் அதிகம். அதன் நேரடியான வெளிப்பாடுகளில் ஒன்று தண்ணீர் பிரச்சினை. சமுதாயம் மாறிக்கொண்டு தான் இருக்கும். ஆனால், மாற்றங்களில் இடையிட்டு முறைபடுத்தத் தவறிவிட்டோம்.

 

தவிக்க வைக்கும் தண்ணீர்க் கொள்கை:

இந்தியாவில் முதன்முதலில் தேசிய தண்ணீர் கொள்கை (National Water Policy) 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு அந்தக் கொள்கை மேம்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், இக்கொள்கையால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை. இக்கொள்கையை ஆதாரமாகக் கொண்டு எந்தவொரு நபரும் நீதிமன்றத்துக்குச் சென்று தன் உரிமையைக் கோர முடியாது.

1987ஆம் ஆண்டில் தண்ணீருக்கான முன்னுரிமை என்பது முறையே குடிநீர், வேளாண்மை, தொழிற்சாலை, நகர்ப்புறத் தேவை என்றிருந்தது. அதுவே 2012இல்  குடிநீர், தொழிற்சாலை,  நகர்ப்புறத் தேவை, வேளாண்மை என மாற்றி வரிசைப்படுத்தப்பட்டு விட்டது. வேளாண்மைக்கான தேவையை கடைசியானதாக மாற்றி விட்டது தேசிய தண்ணீர் கொள்கை. இது கேவலமாக இல்லையா?

விரயமாக்கப்படும் தண்ணீரும் வியாபாரமும்:  

தண்ணீர்த் தேவை  அதிகமாகும் போது தண்ணீர் விநியோகம் செய்யும் அரசு நிறுவனங்கள் (Chennai Metro Water, TWAD,  Etc  ) திறமையாகச் செயல்படுவதில்லை. பழைய தொழில்நுட்பங்களையே பயன்படுத்துகின்றன. மக்களுக்குத் தேவையான தண்ணீர் தேவைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதிலும் 20 முதல் 30 சதவீதம் கசிவு மூலமே வீணாகிறது. ஊழல், கடன் சுமையால் இந்த அமைப்புகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. இதைச் சமாளிப்பதற்காக உலக வங்கி, ஆசிய வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் வாங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழியாகவே இது நடைபெறுகிறது.

சுருங்கக் கூறினால் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மாநில அரசுகளிடம் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் என பன்னாட்டு நிறுவனங்கள்  வற்புறுத்துகின்றன. இந்த நிர்பந்தங்களுக்குப் பணிந்து, வேறுவழியில்லாமல் நாடு முழுவதிலும் உள்ள மாநில அரசுகள் மிக வேகமாகத் தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்கி வருகின்றன. ஆனால் , பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் தண்ணீரை விநியோகிக்கும் வேலையை மட்டும் தான் கருத்தில் கொண்டுள்ளனவே தவிர நீர் சுத்தகரிப்பு, மறுசுழற்சி செய்து நீரைப் பயன்படுத்துவது போன்றவற்றில் அவை ஈடுபடுவது இல்லை. இதுபோலத் தண்ணீரை லாபநோக்கத்தோடு வியாபாரப் பொருளாக ஆக்கக் கூடாது. ஆனால், இன்று தண்ணீர் விற்பனைப் பொருளாகிவிட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரெஞ்சு நிறுவனமான ‘சூயஸ்’ உடன் ரூ. 3,200 கோடி ஒப்பந்தம் இட்டது இதற்கு ஒரு சான்று. அதாவது  மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் சிறுவாணித் தண்ணீரை எடுத்து, அதாவது நம்முடைய இயற்கை வளமான தண்ணீரை எடுத்து நமக்கே வியாபாரம் செய்வதற்கு, எதற்குப் பிரெஞ்சு நிறுவனம்? ஏன் இதை  அரசே ஒழுங்காகச் செய்யக் கூடாது? அரசு நீர்வளத் துறை என்ன செய்கிறது?  திறமையான தொழில்நுட்பச் செயற்பாடுகளுக்காக தனியார் நிறுவனத்தை நம்பத் தொடங்கினால் நகர்ப்புறத்திலுள்ள 30 முதல் 40 சதவீத ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தண்ணீர் விநியோகத்தை தனியாருக்குக் கொடுத்துவிட்டால் அரசோ தனிநபரோ நீர் சேகரிப்பு, ஆழ்துளைக் கிணறு இட்டு நீரெடுப்பது போன்றவை இயலாத காரியமாகிவிடும். Water utility body அனைத்தும் தனியார்மயமாக்கப்படும். தண்ணீர் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு விலை நிர்ணயிக்கப்படுவது தவறு.

உருவாக்கப்படும் தண்ணீர்ப் பஞ்சம்:

கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆண்டு மழையளவு பெருமளவு மாற்றமடையாமல் இருக்கும்போது, வறட்சி ஏன் ஏற்படுகிறது?  2015இல் வரலாறு காணாத வெள்ளம், 2016இல் வரலாறு காணாத வறட்சி. இந்த ஆண்டு (2019இல்) சென்னை குடிநீர் வாரியம் மார்ச் மாதத்திலேயே குழாய் மூலமாக அல்லாமல், 7,600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. இனிவரும் காலத்தில் இது இரண்டு மடங்காக மாற சாத்தியமுள்ளது. சென்னை நகரத்துக்குத் தண்ணீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. வடகிழக்குப் பருவமழை வரை தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது புரியாத புதிராகவே உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள், உணவகங்கள் தங்கள் நிறுவனங்களை மூடத் திட்டமிட்டுள்ளன. சென்னையின் ஓராண்டு சராசரி மழையளவு 1,350 மில்லி மீட்டர். சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் 1,800 மில்லி மீட்டர் மழை பெய்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் நல்ல மழை பெய்யும் பகுதிகள். அவ்வாறு, மழை பெய்யும்போது தேக்கி வைத்துப் பராமரிக்கக் கூடிய எந்த நடவடிக்கையும் இல்லாத போது, தண்ணீர் பஞ்சம் ஏற்படத் தானே செய்யும். ஆறு, ஏரி, சதுப்புநிலம் போன்ற நீராதாரப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. நீர்வழித் தடங்கள் முழுமையாகப் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.  ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றும் அரசு , பெரும் அடுக்குமாடி குடியிருப்புகளை, நிறுவனக் கட்டிடங்களை ஒன்றும் செய்வதில்லை. சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வெள்ளமும் மனிதப் பிழையால் (Manmade disaster) ஏற்படுத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சென்னையில் இயற்கையாக இருப்பதைப் போன்று வெள்ள வடிகால் வசதி வேறு எந்த நகரத்திலும் இல்லை. சென்னை நகருக்குள் மூன்று ஆறுகள், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து கடலைச் சென்றடைகின்றன. வடபகுதியில் கொசஸ்தலை ஆறு, மத்தியில் கூவம் ஆறு, தெற்கில் அடையாறு உள்ளன. இந்த 3 ஆறுகளையும்  ஒருங்கிணைக்கும் பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இது தவிர ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், வேளச்சேரி, மாம்பலம் கால்வாய் போன்று 16 பெரும் ஓடைகள் சென்னையில் பாய்கின்றன. இவை அனைத்தும் இருந்தும் 2015இல் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது எப்படி?  500 பேர் மற்றும் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்கு அரசு செய்த தவறே காரணம்.

மழைநீர் சேகரிப்பு (Rain water harvesting) என்பது பெய்யும் மழையை ஏரி, குளம், கண்மாய் போன்றவற்றில் தேக்கி வைப்பது தான். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போதுள்ள 3,600 முதல் 4 ஆயிரம் ஏரிகளைப் பாதுகாத்து வலுப்படுத்தினால்  150 டி.எம்.சி. முதல் 200 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்க முடியும். சென்னை மாநகரத்துக்கு ஒரு மாத குடிநீர்த் தேவை ஒரு டி.எம்.சி. தண்ணீர். ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர். எனவே, தண்ணீர் பிரச்சினையை மிக எளிதாகத் சமாளிக்க முடியும். வறட்சி எட்டியே பார்க்காது.

நிலைமை இவ்வாறு இருக்க, சென்னையை வறட்சியான பகுதியாக அறிவித்து கடல்நீரை  குடிநீராக்கும் மோசமான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே இரண்டு தொழிற்சாலைகள் மூலம் ஒவ்வொரு நாளும் 20 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கி வருகின்றனர். இன்னும் புதிதாக இரண்டு தொழிற்சாலைகளைக் கட்டி அதன்மூலம்   ஒவ்வொரு நாளும் 35 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கத் திட்டமிட்டுள்ளனர்

தண்ணீர் தேவைக்கு வேறுவழியே இல்லாத இஸ்ரேல், சவுதிஅரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியகிழக்கு நாடுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தேவைக்கேற்றாற்போல் மழை பெய்து கொண்டிருக்கும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மிக மோசமான, சோம்பேறித்தனமான தீர்வு. இதன் மூலம்  கடற்கரையோர சூழலியல் தொகுப்பு (Coastal Ecosystem) கடுமையாகச் சேதமடையும்.

பேராசிரியர் ஜனகராஜனுடன் தோழர் செல்வா
பேராசிரியர் ஜனகராஜனுடன் தோழர் செல்வா

ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? ஏரிகள் எங்கே? மணல் எங்கே?:

கடந்த 25-30 ஆண்டுகளாக ஆறு, ஏரி, கண்மாய் போன்றவற்றைத் தூர்வாருவதற்காக உலக வங்கி, ஐரோப்பிய யூனியன், ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் போன்றவற்றிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி அரசு செலவழித்துள்ளது. சமீப காலத்தில் தமிழக அரசு IAMWARM  project மூலம் ஏரிகளைப் பராமரிக்க நான்காயிரம் கோடி ரூபாய் செலவழித்து உள்ளது.

இப்படித் தூர்வாரப்பட்ட, பராமரிக்கப்பட்ட ஏரிகளின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். எப்படி பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். புதிதாக 500 பேருந்துகள் வாங்கியதை எப்படி மக்களுக்குக் காண்பிக்கிறார்களோ, அதுபோல தூர்வாரப்பட்ட ஏரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.

ஏரியின் கொள்ளளவு, மண், வண்டல் போன்றவற்றின் தன்மை, வரத்துக் கால்வாய் ஆகியன குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டு பராமரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், தூர்வாரப் போவதாக சொல்லி ஜே.சி.பி. இயந்திரங்களை ஏரிகளுக்குள் இறக்கி நல்ல மண் கிடைக்கும் இடத்தில் மட்டும் மண் எடுக்கிறார்கள். இப்படி கண்மூடித்தனமாக மண் எடுக்கப்பட்டு இயற்கைவளம் சீரழிக்கப்படுகிறது. கணக்கு வழக்கில்லாமல் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. உள்ளபடியே கூறினால், பணத்தையும் செலவழித்து ஏரிகளின் வளத்தையும் இழக்க வைத்து நடைபெறும் இந்தப் பணிகள், எதுவும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு பதிலாக ஆறு, ஏரிகளில் உள்ள மண், வண்டல் போன்றவற்றை தூர்வாரி விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டே பராமரிப்புப் பணிகளைச் செய்துவிடலாம்.

நகரமயமாக்கலில் செய்ய வேண்டியது என்ன?:

நகரமயமாக்கல் – மெதுவாகவும் சீராகவும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான். 1990-களுக்குப் பிறகு இது வேகமெடுக்க ஆரம்பித்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு  தாராளமயமாக்கல், நவீனத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பச் சந்தைகள் ஹைதராபாத், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பெருக ஆரம்பித்தன. நகர்ப்புற விரிவாக்கம் நடக்கும் போது அந்த இடத்தின் புவியியல் அமைப்பு குறித்துப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, தற்போதுள்ள சென்னைப் பெருநகரம் 1,190 சதுர கிலோ மீட்டர். விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள சென்னையின் பரப்பளவு 8,800 சதுர கிலோ மீட்டர்.

இப்படி விரிவுபடுத்தும் போது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் (Ecological Hotspot) எவை என்று எல்லை வரையறுக்கப்பட வேண்டும். நீர்நிலைகள், மரம் செடிகொடிகள், சதுப்புநிலம், காடுகள் என அடையாளப்படுத்தப்பட்டவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வரையறுக்க வேண்டும். இவற்றை அழித்தோ சேதப்படுத்தியோ சாலை, மேம்பாலம், கட்டிடங்கள் கட்டுவது கூடவே கூடாது. இதுபோன்றே தமிழகமெங்கும் உள்ள நீர்நிலைகளை அடையாளம் கண்டு பாதுகாத்தாலே தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் உருவாவதைத் தடுத்து நிறுத்தி விட முடியும்.

இதுபோல நகர விரிவாக்கப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்பு ஏரி, குளம், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள், மரம் செடிகொடிகள், காடுகள், சதுப்பு நிலப்பகுதி போன்றவற்றைப் பாதுகாக்க ஆளும் அரசுகள் முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளனவா?

பாலைவனமாகும் டெல்டா! செய்ய வேண்டியது ன்ன?

டெல்டா என்பது என்ன?

கடலுக்கு அருகில் உள்ள ஒரு பரந்து விரிந்த நிலப்பகுதி (plain sheet of the land on the coast) தான் டெல்டா (பாசனப் பகுதி) என அழைக்கப்படுகிறது. டெல்டா என்பது மேடு பள்ளமான பகுதியாக இருக்காது. இன்றைய கடல் மட்டத்திலிருந்து பத்து  மீட்டர் உயரத்தில் மட்டுமே இருப்பதால் கடல்மட்ட உயர்வு, கடல்நீர் நிலத்துக்குள் வருவது, கடலரிப்பு எனப் பல பாதிப்புகள் இப்பகுதியில் ஏற்படும். எனவே, காவிரி பாசனப் பகுதி முழுவதையும், (திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம்)  Low Elevation Coastal Zone (LECZ) என்று அறிவிக்க வேண்டும். இப்படி வரையறுக்கப்பட்ட இடம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற (Vulnerable Zone) நிலப்பகுதி.

அடுத்து, டெல்டாவைப் பொறுத்தவரை 70 சதவீதமான நிலப்பகுதி களிமண் பூமி.  அது சாதாரண களிமண் அல்ல, plastic clay. அந்த களிமண்ணில் ஒரு சொட்டு, ரெண்டு சொட்டு தண்ணீர் விட்டால் அப்படியே இருக்கும், உள்ளே போகாது. அந்த அளவுக்கு தண்ணீர் உறிஞ்சக்கூடிய தன்மை (infiltration) மிகக் குறைவு.

கரிகாலன் கல்லணையைக் கட்டியது, நீர் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காகத் தான்.  கல்லணை இல்லாத போது வெள்ள நீரால் டெல்டா பகுதி சூழப்பட்டிருந்தது. கல்லணை நீர் சேகரிப்பு மையம் அல்ல. வெள்ளநீர் சூழாமலிருப்பதற்காக கொள்ளிடத்திலிருந்து திருப்பி விடுவதற்கு ஏதுவாகக் கட்டப்பட்டது  கல்லணை.

டெல்டா நிலப்பகுதியில் நெல் மட்டுமே முதன்மைப் பயிராக பயிரிட முடியும். வேறு பயிர் பண்ணுவது  சாத்தியமில்லாது இருந்தாலும் சமீபகாலமாக பருப்பு, பருத்தி பயிர்களை விளைவிக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர். ஆனால், களிமண் மிகுந்த நிலத்தில் நெற்பயிருக்கு மாற்று இல்லை என்பதே உண்மை.

இன்றைக்கு தமிழகம் உணவுப் பாதுகாப்பில் (food security) தன்னிறைவோடு இருப்பதற்கு தஞ்சை டெல்டா பகுதியே காரணம்! இப்பகுதியில் உள்ள பெரும்பாலான  மக்களுக்கு வேளாண்மை தவிர்த்து வேறு தொழில் எதுவும் தெரியாது. இங்கு வேளாண் தொழில் பாதிக்கப்பட்டால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது நிதர்சனம்.

1900ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களின் படி கல்லணையின் கீழே ஆறுகள், முதன்மைக் கால்வாய், கிளைக் கால்வாய், பாசனக் கால்வாய்கள் உள்ளிட்ட மொத்த கால்வாய்களின் நீளம் மொத்தம் 42,000 கிலோ மீட்டர். ஆனால், தற்போது அனைத்துக் கால்வாய்களும் ஆறுகளும்  சுருங்கி, தூர்ந்துபோய், புதர் மண்டிக்  கிடக்கின்றன. பல பகுதிகளில் கால்வாய்கள் நிலத்துக்குப் பல அடி கீழே உள்ளன. இதன் காரணமாக ஆறுகள், கிளைக் கால்வாய்கள், பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவதில்லை. பல இடங்களில் கால்வாய்கள் முழுவதும் மறைந்து விட்டன. மேலும், கல்லணைக்கு கீழே காவிரித் தண்ணீர் தேவைப்படும் ஏரிகள் தற்போதும் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் தூர்ந்துபோய் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. வரத்துக் கால்வாய்கள் முழுவதும் புதர்மண்டிக் கிடக்கின்றன. எனவே, வெள்ள காலத்தில் கூட இந்த ஏரிகள் நிறைவதில்லை. ஆனால், உலக வங்கி, ஆசிய வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் காவிரி மேம்பாட்டுக்காக அரசு கடன் வாங்கியுள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் காவிரிப் பாசனம் மேம்பாடு அடையவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், பெரும் கடனாளியாகிக் கொண்டு இருக்கிறோம்.

டெல்டா பகுதியின் நீர்ப்பாசன முறை மிகத் தொன்மையானது. அத்தகைய நீர்ப்பாசன முறையை நவீனப்படுத்தி, தற்சமயம் டெல்டா பாசனத்துக்காக கர்நாடகத்தில் இருந்து 21 லட்சம் ஏக்கருக்கு கிட்டத்தட்ட 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பெய்யும் மழையின் மூலமும் வேளாண்மைக்கு நீர் கிடைக்க வாய்ப்புண்டு. தற்போது ஒரு டி.எம்.சி. தண்ணீரில் 5,000 ஏக்கர் பயிர் செய்யப்படுகிறது. ஆனால், பாசன முறையை நவீனப்படுத்தி ஒரு டி.எம்.சி. தண்ணீரில் 10 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை செய்ய முடியும்.

உருக்குலைக்கப்படும்  துணையாறுகள்

தமிழ்நாட்டில் காவிரிக்கு பவானி, அமராவதி, நொய்யல், கொடகனாறு ஆகிய நான்கு பெரிய துணையாறுகள் இருக்கின்றன. இவற்றோடு மிகப்பழமையான காளிங்கராயன் கால்வாயும்  உள்ளது. இந்த ஐந்துமே ஆற்று மணல் இல்லாமல் பெருமளவு மாசுபட்டு மிகக் கேவலமான நிலையில் உள்ளன. காவிரியில் தண்ணீர் வராத காலத்தில் இந்த துணையாறுகளைப் பார்த்தால், அவற்றின் உண்மை நிலை புரியும்.

திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றுக்குக் குறுக்கே ஒரத்துப்பாளையம் கிராமத்தில் கட்டியிருக்கும் ஒரத்துப்பாளையம் அணையை 1992இல் அன்றைய முதல்வர்  ஜெயலலிதா திறந்து வைத்தார்.  உலகத்திலேயே ஒருமுறை கூட வேளாண் பாசனத்துக்குத் திறக்கப்படாத அணை ஒன்று இருக்கிறது என்றால், அது இது தான்.  அணையிலோ ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். ஆனால், சிவப்பு நிறத்திலிருக்கும்.  இந்த மாசடைந்த நீர் முழுவதும் திருப்பூர், அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 8 முதல் 10 கோடி லிட்டர் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்தக் கழிவுநீரை முழுவதும் சுத்தகரித்துத் தான் வெளியேற்ற வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், நடைமுறையில்  சட்டம் பின்பற்றப்படுவது இல்லை.  நிறைந்துவிட்ட ஒரத்துப்பாளையம் அணையை வேறு வழியில்லாமல் திறக்கும் போது, மாசடைந்த நீர் கடைசியாகக் காவிரியில் கலக்கிறது. இவ்வாறு காவிரியில் கலக்க வரும் நச்சு நீரை வழியில் ஆடு மாடுகள் குடித்து இறப்பதும் உண்டு.

கரூர் மாவட்டத்தில் அமராவதி பாய்கிறது. ஆயிரக்கணக்கான சாயப்பட்டறை களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக அமராவதி ஆற்றில் விடப்படுகிறது. அதுபோல ஈரோடு மாவட்டத்திலுள்ள  காகித ஆலை, சர்க்கரை ஆலை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக பவானி ஆற்றில் கலக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலை களிலிருந்து  வரும் கழிவுநீர் கொடகனாற்றில் விடப்படுகிறது.

திருப்பூர் துணி ஏற்றுமதித் தொழில் மூலம் கிடைக்கும் ரூ. 28,000 முதல் 30 ஆயிரம் கோடி அந்நியச் செலவாணியை, வேலைவாய்ப்பைப் பற்றி மட்டும் பேசுவது சரியா? தொழில்வளம் வேண்டும். அதேநேரம் ஆறுகளும் வேண்டும். அதற்கான எந்தத் திட்டமிடுதலும்  இல்லாதது பெரும் குறைப்பாடு. கண்மூடித்தனமாகச் செயல்படுத்தப்படும் தாராளமயமாக்கல், நிலைத்த வளர்ச்சி (sustainable development) அடைவதற்கு பாதகமாகவே அமையும்.

கொல்லப்படும் காவிரியாறு

பல்வேறு விதமான கழிவுகள் காவிரியாற்றில் கலக்கப்படுவது, வரைமுறையற்று மணல் அள்ளுவது, ஆற்றின் கரைகளில் அதிகாரவர்க்கம் உருவாக்கும் ஆக்கிரமிப்புகள் ஆகியவை காவிரி ஆறு பாழடைந்துள்ளதற்கு மிக முக்கியமான காரணம்.

இவற்றோடு மிக முக்கியமாகப் பிச்சாவரம் முதல் வேதாரண்யம் வரை சுமார் 150 கிலோ மீட்டருக்கு காவிரியிலிருந்து பிரிந்து கடலில் கலக்கும் நூற்றுக்கணக்கான கால்வாய்கள்  வறண்டு தூர்ந்து மண்மேடு ஆகியுள்ளன. இந்தக் கால்வாய்கள் மூலம் காவிரியின் நன்னீர் கடலில் கலப்பது முற்றிலும் நின்று விட்டதால் கடல்நீர் நேரடியாக உள்ளே வருகிறது. இதன் காரணமாக மண்வளமும் நிலத்தடி நீரும் மிக வேகமாக உப்பாக மாறிவிடுகின்றன. கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக நிலத்தடி நீர் ஏராளமாக உறிஞ்சப்பட்டு விட்டதால் கடல்நீர் கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் உள்ளே வந்துவிட்டது. இதன் காரணமாக Central ground water board கணக்கீட்டின்படி நாகை மாவட்டத்தில் நூறு சதவீதம், திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீதம், தஞ்சையில் 40 சதவீதம் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது.

காணாமல் போகும்  நிலங்கள்

1971 ஆம் ஆண்டு Survey of India map-பை 2014 ஆம் ஆண்டு National remote sensing center dataவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது,  நான்காயிரம் ஏக்கர் நிலம்  கடலரிப்பால் (Erosion) கடலுக்குள்ளே சென்றுள்ளது. 500 ஏக்கர் கடற்பகுதி நிலமாக (accretion) மாறியுள்ளது.

தமிழ்நாட்டின் 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரைப் பகுதியில் புதிய துறைமுகம் கட்டுவது, அனல் மின்நிலையங்கள் தொடங்குவது, பொழுதுபோக்குக் கேளிக்கை பூங்காக்கள் கட்டுவது, பொங்கி வரும் கடலை கற்களைக் கொண்டு தடுப்பது போன்ற செயல்பாடுகள் காரணமாக ஓரிடத்தில் தடுக்கப்படும் கடல் நீர் வேறு வழியாக நிலத்துக்குள் ஊடுருவுகிறது.

பிச்சாவரம், முத்துப்பேட்டையிலுள்ள பகுதிகளை  செயற்கைக்கோள் படங்கள் மூலம் பார்க்கும் போது அலையாத்திக் காடுகள் அதிகமாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், உண்மை என்னவென்றால் அலையாத்திக் காடுகள் கடலின் ஒரு பகுதியாக மாறி விட்டன. சாதாரணமாக அலையாத்தி காடுகளின் தண்ணீர்-நன்னீர்-உவர்நீர் கலப்பாக (Brackish water)  இருக்க வேண்டும். ஆனால், நன்னீர் வரத்து முழுவதும் தடைப்பட்டு விட்டதால் கடல்நீர் மட்டுமே அங்கு மேலோங்கியுள்ளது. இதே நிலைமையை முத்துப்பேட்டை, வேதாரண்யம் ஏரி போன்ற பகுதியிலும் பார்க்கலாம். இவையனைத்தும் கடலின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன.

கடலுக்குள் போய்விடுமோ நாகை?

பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து டெல்டா பகுதியிலுள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இப்படியே போனால் அடுத்த 40 ஆண்டுகளில் நாகப்பட்டினம் மாவட்டம் கடலுக்குள் போனால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பூமிக்கடியில் டெல்டா பகுதிகள் அமுங்கி விடும். இதன் காரணமாக வேளாண்மை, வாழ்விடங்களுக்கு உள்ளே கடல்  நுழையும். இதே நிலை நீடித்தால் காவிரி டெல்டா நிலப்பகுதி இப்போது இருக்கிற கடல்மட்ட அளவை விட இன்னும் கீழே செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

செய்ய வேண்டியது என்ன?

தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி பாசனப் பகுதியை  ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக  அறிவிக்க வேண்டும். அதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். உடனடியாக ஒரு உயர்மட்ட குழு அமைத்து டெல்டா நிலப்பரப்பில்  ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் இயக்கங்கள், ‘டெல்டாவை பாதுகாப்போம்’ (Save delta movement) என்ற இயக்கத்தை உருவாக்கித் தொடர்ந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

**********

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close