சிறுகதைகள்

ஒரு நம்பியார் ரசிகையின் பிறழ்வுகள்…! – மோனிகா மாறன்

சிறுகதை | வாசகசாலை

சின்னப் பிள்ளையாக இருந்தபோது டென்ட் கொட்டாயில் படம் பார்ப்பது அவளுக்கு ரொம்பப் புடிக்கும். அப்பவெல்லாம் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, ராமராஜன், பாக்யராஜ், அர்ஜூன் இவங்க எல்லாம் நடிச்ச புதுப்படம் எதுவும் இவங்க ஊர் கூவல்குட்டைக்கு உடனே வராது. திருப்பத்தூர், கிஷ்ணகிரி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர்னு மத்த பெரிய ஊர்ல எல்லாம் ஓடிட்டு ஒரு வருஷம் கழிச்சுதான் இங்க வரும். அதனால இங்க நிறைய பழைய படம் போடுவாங்க. வாரத்துல ரெண்டு முறை, டென்ட் கொட்டாயில் படம் மாத்துவாங்க. ஞாயிற்றுக்கிழமை பழைய எம்ஜிஆர், சிவாஜி படம். புதன்கிழமை புதுப் படம்.

அவளுக்கு சின்னப் பிள்ளையில புடிச்ச ஒரே விஷயம் சினிமாதான். அதுவும் அவங்க வீட்டுல யாரும் படம் பார்க்கப் போக மாட்டாங்க . ஏன்னா அவங்க சர்ச்சில ஜெபம் பண்ற ஆபேல் பிரசங்கியார், ஜான் பிரமாணிக்கம் ஊழியக்கார் எல்லாரும் சினிமா பாக்கறது பாவம்னு சொல்லுவாங்க. இவ அம்மா செபஸ்தியா, எஸ்தர் சித்தி, சிலுவமுத்து மாமா, எமிலி அத்தை, ஆத்தா யாருமே சினிமா பார்க்க வரமாட்டாங்க.

ஆனாக்கா அக்கம்பக்கத்துல யார் சினிமாவுக்குப் போனாலும் இவ கூட சேர்ந்து போயிடுவா. ஜெபக்கனி அத்தை மட்டும் இவங்களோட சினிமாவுக்கு வரும். அதுவும் இவங்க சொந்தந்தான். அது தனியா ஒரு வீட்டில இருந்துச்சு. கூட யாரும் இல்ல. கல்யாணம் ஆகி புருசங்கூட வாழாத வந்துடுச்சின்னு அம்மாவும் எஸ்தர் சித்தியும் பேசிக்கறத இவ கேட்டுருக்கா.

அந்த அத்தை சர்ச்சில் இருக்கறவங்க எல்லாரையும் “போங்கடா இயேசுவானவர உங்களைவிட எனுக்கு நல்லாத் தெரியும்” அப்படின்னு சொல்லிட்டு சினிமாவுக்கு வரும். இவ ஜெபக்கனி அத்த எப்ப படத்துக்குப் போனாலும் கூடப் போயிடுவா. அப்படித்தான் இவ நம்பியாருக்கு ரசிகை ஆனது.

படத்துக்குப் போறதுன்னா எப்படியாவது அம்மாகிட்ட கெஞ்சி, எக்ச்டா நாலு கொடம் தண்ணி எடுத்துக் குடுத்து சில்ற தேத்திக்குவா. அவங்க தெருவுல இந்திரா அக்கா, சங்கீதா அக்கா, வளர்மதி டீச்சர், பொம்மி ஆயா எல்லாரும் என்ன படம் வந்துருக்குதுன்னு பார்த்துட்டு சினிமாவுக்குப் போக திட்டம் போடுவாங்க. அவங்க எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கற பெரியவங்கதான். இப்ப உள்ள பிள்ளைங்க மாதிரி ஆண்ட்டின்னு கூப்படற பழக்கமெல்லாம் அந்த ஊர்லயே இல்ல. அக்கம் பக்கத்துல குடித்தனம் இருக்கற எல்லாரையும் அக்கா அண்ணன்னுதான் பிள்ளைங்க கூப்பிடுவாங்க.

கடத்தெருவுக்குப் போயி போஸ்டர் பார்த்து என்ன படம் மாத்தியிருக்குன்னு பாத்துட்டு வந்து சொல்றது இவளும் வேதவல்லியும் தான்.

விநாயகா டெண்ட் கொட்டாய் இவங்க வீட்ல இருந்து ஒரு மைல் தாண்டி மேட்டுப் பக்கத்துல இருந்தது. அதனால இவங்க தெருவுல பத்து பதினைந்து பேர் கும்பலா சாயந்திரம் அஞ்சரை மணிக்கே நடந்து போவாங்க. வேகமா நடக்கறதுல இவளுக்கு பாதி நேரம் மூச்சு வாங்கும். கோபால் டீக்கடை, சோப்புக்காய் மரம், மாதாக் கோயில், இந்தியன் பேங்க் எல்லாம் தாண்டி நடந்து போவாங்க. அனேகமா புளிய மரத்தடியிலே வேலு ஆச்சாரி இரும்பு பட்டறையத் தாண்டும்போது தியேட்டர்ல “விநாயகனேஏஏ வினை தீர்ர்ப்ப்பவனே….” பாட்டு போட்டுருவாங்க.’ நீ அல்லால் வேறு தெய்வமில்லை’பாட்டு முடிஞ்சு ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ பாட்டு போடும்போது இவங்க கொட்டா கிட்ட போயிடுவாங்க. வழி முடுக்க, சேர்ந்து சிரிச்சுகிட்டே நிறைய பேசிகிட்டே போவாங்க. இந்திரா அக்கா கதை சொல்றதுல சூப்பர் எக்ஸ்பர்ட். அவங்க ஊரு ஆரணி அக்ரா பாளையம், அவங்க மாமா ஊரு மருதாடு, அங்கயெல்லாம் படம் பார்த்தது, கோயிலுக்குப் போனதுன்னு நிறைய சொல்லும்.

டென்ட் கொட்டாயில் பொம்பளைங்க க்யூல நின்னு டிக்கெட் வாங்கும்போது ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ பாட்டு ஓடும். இந்திராக்கா பையன் பிரபு திட்டுவான், “இந்த கெயவனுங்க ரஜினி பாட்டுப் போடாத இந்த இழுவையப் போடறானுங்க பாரு.எங்க ஆர்ணில புதுப்பாட்டு தான் போடுவாங்க” ன்னு சொல்லுவான். இவளும் வேதவல்லியும் வாயத் தொறந்துகுனு கேப்பாங்க. அவங்க பள்ளத்தெருவுலயே எந்த ஊருக்கும் போவாத குடும்பம் அவங்க ரெண்டு வூடுதான். மே மாசம் லீவுக்கு கூட இவங்க எங்கயும் போனதில்ல.மத்தவங்க ஊருக்கு போய்ட்டு வந்து சொல்ற கதையெல்லாம் கேக்க இவங்களுக்கு ரொம்ப இஷ்டம்.

டெண்ட் கொட்டாய் என்பது பெரிய கூரை அவ்வளவுதான். பெரிய பெரிய பனைமர உத்தரங்களும், மூங்கில் வாரைகளும் கொண்டு உருவான ரெண்டு பனை உயரக் கொட்டகை. முன்புறம் பெரிய வெள்ளைத்திரை. அதுக்கு கீழ நாலஞ்சு செகப்பு இரும்பு பகிட்டுங்க ‘தீ’ அப்பிடின்னு எழுதி தொங்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு ரொம்ப நாள் இவ யோசிச்சிருக்கா. கூட வரவங்க கிட்ட கேட்டா இவளுக்கு எதுவுமே தெரியலன்னு கிண்டலடிப்பாங்கன்னு கேக்க மாட்டா. அதைத்தாண்டி கொஞ்ச தூரத்துல இருந்து தரை டிகிட் எடம் தொடங்கும். இரண்டு அடி உயர மண்சுவர் நடுவுல இருக்கும் சோத்துக்கைப்பக்கம் பொம்பளைங்க பீச்சாங்கை பக்கம் ஆம்பளைங்க உட்காருவாங்க.

உள்ளே ஆற்றுமணலைக் கொட்டி வைச்சி இருப்பாங்க. மணல சேர்த்து குவிச்சு வச்சு உக்காந்துகிட்டு படம் பார்ப்பாங்க. தர டிகிட் எடம் முடிஞ்சு கொஞ்ச உயரத்துல தடுப்பு செவுர் தாண்டி பெஞ்ச் டிகிட் இருக்கும். ஒரு பத்து பெஞ்ச் போட்டு வச்சிருப்பாங்க. அதுக்கும் மேல இன்னும் கொஞ்ச ஒயரத்துல சேர் டிகிட். அங்கெல்லாம் ஸ்கூல் வாத்தியாருங்க, டீச்சருங்க, பஞ்சாயத்து ஆபீஸ் ஆளுங்க குடும்பங்க எல்லாம் ஒக்காந்து படம் பார்க்குவாங்க. தரை டிகிட் 75 காசு பெஞ்சு டிகிட் ஒரு ரூபா 50 காசு, சேர் டிகிட் ரெண்டு ரூபா 50 காசு. இவளுக்கு எப்படியாவது காசு சேர்த்து பென்ச் டிகிடுக்கு போவனும்னு ஆச.

ஆறு மணிக்கு இருட்டத் தொடங்கும் போது கூட்டம் சேர்ந்ததும் கொட்டாயில லைட் போடுவாங்க. அப்புறம் அந்த குண்டு பல்பு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமா குறையும். அப்படிக் குறைஞ்சா படம் போட போறாங்கன்னு அர்த்தம். கொட்டா முழுக்க விசில் சத்தம் தூள் பறக்கும். அப்புறம் குண்டு பல்பு அணைந்ததும் படம் ஓடத் தொடங்கும். படத்துல ஒரு இடவேளதான் வரும். ஆனா இவுங்க ஊர்ல மூனு இடவேள உடுவாங்க. அப்ப ‘போண்டா, முர்ரே….’ன்னு கூவிக்கிட்டு சின்ன பசங்க மூங்கில் தட்டுல வட, முறுக்கு, போண்டா எல்லாம் விப்பாங்க. கொட்டா முழுக்க பீடி பொகை நாத்தந்தான் .வெத்தலை எச்ச வேற துப்பி வச்சிருப்பாங்க. அவ எல்லாப் படத்தையும் அந்த மணலில் உட்கார்ந்துதான் பார்த்திருக்கா. படத்தோட ரீல்னு சொல்ற ஸ்டில் வந்தாலே அவ மனசு பறக்கும். பேர் ஓட ஓட ஓடச் சுத்தி இருக்குற அழுக்குல இருந்து அப்புடியே அந்த சினிமாவுக்குள்ள நொழஞ்சிடுவா.

அப்ப எல்லாம் படம் பார்க்கும்போது சுத்தி இருக்கிற பொம்பளைங்க, கெளுவிங்க எல்லாரும் நெஜமா கதை நடக்கிற மாதிரி ஏதாவது சொல்லிக்கிட்டேதான் படம் பாப்பாங்க. வில்லன் வந்தா நல்லாத் திட்டுவாங்க. “பாவி… அடப்பாவி… பெத்த ஆத்தாவ பையரையே… உன்ன பாம்பு வந்து புடுங்க…”அப்டின்னு சாபன உடுவாங்க. புஷ்பாவுக்கும், இவளுக்கும் இப்படியெல்லாம் யாராவது திட்டினா, படம் பார்க்கும்போது அழுதா அதப்பாத்து சிரிப்பு வரும். அப்படித்தான் ஒருமுறை ஜெயலலிதா நடித்த ஒரு படம், அதுல மாமியாக்காரி நிறைய வேலை செய்ய வச்சு கொடுமப்படுத்துவா. அதப் பாத்துட்டு இவங்க பக்கத்துல உட்கார்ந்து இருந்த ஜம்படியா அக்கா அழுதுச்சு. இவங்க ரெண்டு பேரும் சிரிச்சாங்க.

அதுக்கு சின்னு கெழவி, துளசி எல்லாம் இவங்களத் திட்டுனாங்க. “ஏன்டி சிரிக்கறீங்க? உங்குளுக்கும் நாளைக்கு மாமியாக்காரி வந்து குத்தனா தெரியும்”னு அவங்க சொல்லச்சொல்ல அதுக்கும் சேத்து இவங்க சிரிச்சாங்க.

“ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தப்போ இப்படித்தான், நம்பியார் வரும்போது “நீ எல்லாம் நல்லா இருப்பியாடா? இந்தப் பொண்ண ஜாட்டயால அடிக்க சொல்றியே… உங்கூட்டுப் பொம்மனாட்டி மேல கை வச்சா உடுவியா?” ன்னு சாபனிட்டுனு இருந்தாளுங்க.

அப்பத்தான் ஜெபக்கனி அத்த இவகிட்ட சொல்லுச்சு. “இவளுங்களுக்கு இன்னாடி தெரியும்? நம்பியார் இல்லன்னா இந்தக் கதையே இல்ல தெரியுமா? சும்மா படத்துக்குத்தான்டி அடிக்கிறான். நெஜமா அவன் ரொம்ப நல்லவன் அப்பிடின்னு. அதிலிருந்துதான் இவளுக்கு நம்பியாரைப் புடிக்க ஆரம்பிச்சுச்சு. எப்பவுமே இவளுக்கு எம்ஜிஆர் கடவுள் மாதிரி. அவர்தான் அப்ப முதலமைச்சர். அவங்க ஊருல அல்லாரும் ரட்ட எலைக்குதான் ஓட்டுப் போடுவாங்க. இவளுக்கு எம்ஜிஆர் படம், பாட்டுன்னா ரெம்ப பிடிக்கும். இப்ப அத்த சொன்ன பின்னால் நம்பியாரயும் புடிக்குது.

அடுத்தநாள் விளையாடும்போது பிரேமா, வளரு, அமுதா, ஜானகி எல்லாம் படத்தப் பத்தி பேசும் போதுதான் இவ சொன்னா… “நம்பியாரு நல்லவன்டீ எம்ஜிஆரு இப்பிடி நடின்னு சொன்னதாலதான் அப்புடி நடிக்கறான்”னு. அதுல இருந்து இவள நம்பியார் பொண்டாட்டின்னு கூப்பிடறாங்க. அதுக்கப்புறம் எல்லா படத்திலேயும் இவளுக்கு நம்பியாரை ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சுச்சு.

ஜெபக்கனி அத்த கூட சேந்து இவளும் நிறைய சினிமா தகவலெல்லாம் தெரிஞ்சிகிட்டா. அத்த சொல்லும், “ஜெயலலிதா எம்ஜிஆர் கூட நடிக்கறத விட சிவாஜி கூட நடிக்கறப்பதான் நல்லா இருக்கும். நல்லா கவனிச்சுப் பாரு. சிவாஜி படத்துல துள்ளிக்கிட்டு சந்தோஷமா இருக்கும்.” அப்படின்னு. அப்பறம் “இந்த ஷீலாவும் ரவிச்சந்திரனும் டைவர்ஸ் பண்ணிட்டாங்க தெரியுமா?”ன்னு சொல்லுவா. சினிமாவுல மத்தவங்களுக்குத் தெரியாத எம்.வி ராஜம்மா, சீதாலட்சுமி, ராஜசேகர்னு நெறய சைட் ஆக்டர்ஸ் பத்தியெல்லாம் சொல்லுவா. இவளும் ஜெபக்கனி அத்தையும் பேசுறதப் பாத்து அம்மா சித்தி எல்லாம் திட்டுவாங்க. “அவ சொல்றதை எல்லாம் கேட்காதடீ. நீயும் அப்பிடியே ஆயிடுவ.” அப்படின்னு சொல்லுவாங்க.

மத்தவங்க எல்லாரும் யாரையாவது திட்டுனா இவளுக்கு அவங்க மேல பாசம் வரும். அதுக்குக் காரணம் இவளுக்கு எப்பவுமே யாரும் பெருசா பாசம் காட்டுனதில்லை. இவ வீடு ஒரு பெரிய கும்பலாயிருக்கும். நாலு சித்தப்பா, பெரியப்பா, அத்தைங்க, அவங்க பிள்ளைங்க அப்படின்னு எல்லாரும் ஒண்ணா இருந்தாங்க. அப்பா மேஸ்திரி வேலைக்குப் போயிட்டு, திரும்ப வரும்போது குடிச்சிட்டுத்தான் வரும். அம்மாவுக்கு கயனி வேலைக்குப் போயிட்டு சமையல் பண்ணிப் போடவே நேரம் சரியாக போயிடும். வீட்டுல எப்பவும் நிறைய சின்னப் பசங்க அழுதுக்கிட்டே இருக்கும். அத்த சித்தி யார் பசங்க யாருன்னே அடையாளம் தெரியாத அளவுக்கு கூட்டம். வீடே ஒரு பெரிய கடத்தெருதான்.

இவளுக்கு சின்ன வயசுலருந்தே நிறையப் பேசுறதுக்கு புடிக்கும். புதுசு புதுசா ஏதாவது கேள்வி மனசுல இருந்துகிட்டே இருக்கும். ஆனா அதைப் பத்தி எல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க.

ஏழு எட்டு வயசுல இருந்தே சாணியும், சாக்கடைகளும், குப்பைகளும் நெறஞ்சு மாடுகளும், எருமைகளும், பன்றிகளும், நாய்களும் சுத்தற அவங்க சேரிய விட்டுட்டுப் பக்கத்துல இருக்கிற கடலக்கொல்லியிலயும், கம்பங்கொல்லியிலும் போயி உக்காந்துட்டு இருப்பா. அங்க இருக்கிற சின்ன தும்பி, அடைக்கலாங்குருவி, செகப்பு கீரைத்தண்டு, பூசணிக்கொடி, கூழாங்கல் எல்லாத்துகிட்டயும் பேசிக்கிட்டு இருப்பா.

அவ மனசுல அப்பவே நிறைய கனவுகள் இருந்தது. சினிமா படத்துல வர்ற மாதிரி பெரிய பெரிய ஊருங்களுக்கு எல்லாம் போகணும், கடல் பீச் பாக்கணும், அருவியைப் பார்க்கணும், பனி கொட்டுற இமயமலைக்குப் போகணும் இப்படி அவளுக்கு நெறய ஆச.

இதை எல்லாம் யார்கிட்டயும் சொல்ல முடியல. அவ சொன்னாலும் யாரும் காதில வாங்க மாட்டாங்க. ஜெபக்கனி அத்தகிட்ட மட்டும் எதையாவது சொல்லுவா. அவளுக்கு எட்டு ஒன்பது வயதிலேயே நிறைய கவலைகள், புலம்பல்கள் இருந்துச்சி. “இந்த வயசிலே உனக்கு என்னடி இவ்ளோ கஷ்டம்?”னு அத்த கேக்கும்.

அவளுக்கு முதலில் புடிக்காதது அவ பேருதான். அவளோட அம்மாச்சி, அய்யம்மா ரெண்டு பாட்டிங்க பேரையும் சேர்த்து ஜாக்குலின் எழிலரசி அப்படின்னு பிரமாணிக்கம் மிஷ்னரிதான் இவளுக்குப் பேரிட்டது. அவங்க தெருவுல, ஸ்கூலுல யாருக்குமே அப்பிடி பேரு வைக்கல. ராஜேஸ்வரி, சுமதி, அமுதா, கவிதா, வேதா விக்னேஷ்வரி, ஆனந்தி, உஷா, லதா இப்படி எல்லாந்தான் பேர் இருந்துச்சு. இவ பேர எல்லாரும் கிண்டல்தான் பண்ணாங்க.ஸ்கூலுல சுரேசு, தாஜுதீன் ரெண்டு பேரும் இவள எப்பவும் கேலி பண்ணுவானுங்க. ஆனா அவங்ககிட்ட பேசுறதுக்கு இவளுக்குப் புடிக்கும். கொட்டாயில வர புதுப்படத்தை எல்லாத்தையும் அவனுங்க மொத நாளே பாத்திருவானுங்க. அந்த கதையைக் கேட்பா. அவனுங்கதான் இவள ஜக்கு, எலி அப்படின்னு கூப்பிடுவானுங்க.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்கூல் புல்லா அதுவே பேராயிடுச்சி. முபீன் டீச்சர் கூட, “என்னாடி உன் பேரு இவ்ளோ பெருசா இருக்கு? அட்டணன்சிலயே எழுத முடியல.” அப்படின்னு சொல்லுவாங்க.ஆறுமுகம் சார், “பரிச்ச காசு ரெண்டு ருபா தர முடியல பேரு மட்டும் பெரிய இங்லாண்ட் குயின் மாறி ஜாக்குலின்…” அப்டின்னு திட்டுவார். இவளுக்கு அழுகையா வரும்.

“கூவல்குட்ட மாதிரி ஊருல இருந்துகிட்டு ஏன் நமக்கு இந்த மாதிரி பேர் வச்சாங்க.இந்த மாதிரி இங்கிலீஷ் பேர் எல்லாம் பெரிய பெரிய டவுன்ல, கான்வென்டில படிக்கறவங்களுக்கு நல்லா இருக்கும். இங்க பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்ல படிக்கறதுக்கு எதுக்கு இப்படி பேரு?”ன்னு இவ சொல்றதயெல்லாம் வீட்ல யாரும் காதுல கூட வாங்கிக்க மாட்டாங்க.

பேர் மட்டும் இல்ல எல்லா விஷயத்திலும் ஜாக்குலின் மத்தவங்களை விட வேற மாதிரிதான். எல்லாரும் பழைய சோத்துக்கு பச்சமொளகா கடிச்சிகிட்டா இவ மட்டும் வெல்லக்கட்டி தேடுவா. இவங்க ஊரு கொளத்து மீனுக்கு எட்டு ஊரும் அலையும். கொறவையும் ஜிலேபியுமா மீங்கொழம்ப எல்லாரும் திங்கையில இவ மட்டும் தொடக்கூட மாட்டா. கவுச்சி புடிக்கலன்னு கஞ்சி காய்ச்சி குடிப்பா.

பஞ்சாயத்து போர்டு லைப்ரரியில் இருந்த சம்முகம் அண்ணன்கிட்ட கேட்டு நெறய புக்ஸ் வாங்கிட்டு வந்து படிச்சிகிட்டு இருப்பா. இவ படிக்கிறது பேசறது எல்லாத்தையும் பாத்துட்டு எஸ்தர் சித்தி சொல்லும், “இவளுக்கு மட்டும் ஒரு நரம்பு கூட இருக்குடி. எல்லாத்துலயும் வேறமாதிரி யோசிக்கிறா.”அப்பிடின்னு.

வீட்ல எல்லாரும் இப்படி சொல்லிச் சொல்லியே இவளுக்கு முதலிருந்தே மத்தவங்களுக்குப் புடிச்சது நமக்கு பிடிக்காது அப்படின்னு மனசுல பதிஞ்சு போயிடுச்சு. அவங்க வீட்டில எல்லாரும் ரொம்ப பக்தியான ஆளுங்க. அய்யம்மா காலையில் எழுந்ததும் ‘இயேசுவின் நாமமே…’ என்று பாட்டுபாடி அதற்குத் தெரிந்த பைபிள் வசனங்களை சொல்லுவா. எல்லாருமே சிலுவை போட்டுட்டுத்தான் எதையும் செய்வாங்க. சித்தப்பா, மாமா, அப்பா எல்லாரும் குடிச்சிட்டு வந்தாலும் ஜெபம் சொல்லிட்டுதான் சாப்பிடுவாங்க. சின்னக் குழந்தைங்களில் இருந்து எல்லாரும் ரொம்ப பத்தியா ஏசப்பான்னு வணங்குவாங்க. இவளுக்கும் சர்ச்சில் போயி ஜெபம் பண்ணப் பிடிக்கும். ஆனால் அங்கு ஜான் பிரமாணிக்க உபதேசியார் கத்திக் கத்தி பிரசங்கம் பண்றது இவளுக்குப் பிடிக்காது. மெதுவான குரலில் ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா அவர் குரல் உயரும். “எங்களுக்குள் இறங்கும் ஆண்டவரே. சாத்தானின் எல்லா கிரியைகளையும் அப்புறப்படுத்திப் போடும் ஆண்டவரே…” என்று அவர் உச்சஸ்தாயியில் கத்தும்போது இவளுக்கு பயமாக இருக்கும். “பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியிலே அசைவாடிக் கொண்டிருக்கிறார்…” என்று அவர் கைகளை ஆட்டி ஜெபிக்கையில் பக்கத்தில் ஏதாவது அசையுதான்னு கண்ண லேசாத் திறந்து பார்த்திருக்கிறாள். எல்லாரும் ஜெபத்தில் அழுவது இவளுக்கு சிரிப்பாயிருக்கும்.

அதெல்லாம் பரவாயில்லை. “சினிமாங்குறது என்ன? அது உங்களைப் பாவத்தில் இழுத்துப் போட லூசிபரின் தூண்டுதல். அதுல போயி விழுந்தீங்கன்னா பாவ மன்னிப்பே இல்லை”ன்னு ஆபேல் உபதேசி சொல்றத இவளால் ஏத்துக்கவே முடிஞ்சதில்லை. இப்ப முப்பது வருசங்கழிச்சு அதையெல்லாம் யோசிக்கையில சிரிக்கறா. இப்ப எந்த உபதேசியார் சினிமா பாக்காதேன்னு சொல்லுவான். எல்லா ஊழியக்காரனும் தனியா சேனல் வச்சி நடத்துறானுங்க. அப்புறம் சினிமா பாவம்னு எப்படி சொல்றது?

அவளுக்கு அந்த வயசுல சினிமா மட்டும்தான் பிடிச்சது. முதல்ல நம்பியாரை ரசிக்க ஆரம்பிச்சு அதுக்கப்புறம் அசோகன், ஜெய்சங்கர், சத்யராஜ், ரகுவரன், ராதாரவி, மன்சூர் அலிகான், ஆனந்த் பாபு, ஆனந்தராஜ், பொன்னம்பலம் அப்பிடின்னு எல்லா வில்லன்களையும் ரசிச்சா. மத்தவங்க எல்லாம் திட்டுவதனால அவளுக்கு வில்லன்களைப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதுமட்டுமில்லாம லாஜிக்காகவே அவளுக்குப் பிடிச்ச பெரிய வீடு, நீச்சல்குளம், பணம், நகை, காரு, ஏரோப்ளேன் எல்லாமே வில்லன்கள்கிட்டதான் இருந்தது. எம்ஜிஆர் ல இருந்து விஜயகாந்த், ரஜினி, ராமராஜன் அப்படின்னு எல்லா ஹீரோவும் நேர்மையா இருந்தாக்கூட ஏழ்மையிலும், குடிசை வீட்லயும்தான் இருந்தாங்க. அவங்க நல்லவங்களா இருந்தாலும் அவங்க இருக்கிற வீடு இவளுக்குப் புடிக்கல.

அவள் எல்லாத்துலயும் தன் குடும்பத்தில் இருந்து வேறுபட்டே இருந்தா. பள்ளியில் சுமாராகப் படித்தாலும் எப்படியாவது பாஸ் பண்ணி விடுவாள். அவங்க வீட்டில இவள்தான் பத்தாம் வகுப்பு அட்டை இல்லாமல் பாஸ் பண்ணியது. மத்த எல்லாருமே ஒன்னு, ரெண்டு அட்டம்ப்ட் எழுதித்தான் இங்கிலீஷ் பாஸ் பண்ணாங்க.

அப்புறம் ஒரு வழியா பாலிடெக்னிக் குரூப்ல சேர்ந்து செங்கல்பட்டுல படிச்சா. அப்பத்தான் அவளுக்கு வெளி உலகம் தெரிய ஆரம்பிச்சது. சினிமால பார்த்த பெரிய பெரிய வீடு, டிரஸ் எல்லாத்துக்கும் பணம் அதிகமா வேணும். அதுக்கு வேண்டிய பரம்பரை, அதிகாரம் எதுவுமே நம்மகிட்ட இல்ல அப்படி உணர ஆரம்பிக்கிறா.

நாம என்ன தான் படிச்சாலும் பணம் இல்லனா எதுவுமே பண்ண முடியாது அப்படின்ற எதார்த்தம் புரியுது. படிப்பு முடிஞ்சு சென்னையில ஒரு கம்பெனில வேலை செய்யும் போதுதான் ஜேக்கப் உடன் அறிமுகம் கிடைச்சுச்சு. அவன் அந்த கம்பெனியில இவளுக்கு சீனியர். வேலையெல்லாம் நிறைய சொல்லிக் கொடுத்தான். கம்பெனியில் இருக்கிற எல்லாப் பொண்ணுங்ககிட்டயும் ஜாலியா பேசுவான். இவகிட்டயும் ரொம்ப அக்கறையாப் பேசினான். அவனப் பத்தி கம்பெனியில அக்காவுங்க, மத்த பொண்ணுங்க எல்லாரும் தப்புத் தப்பா சொன்னாங்க. தமிழரசி அக்கா கூட பழகி அவள ஏமாத்திட்டான். நிறைய பேர்கிட்ட காசு வாங்கிக்கிட்டு திரும்ப கொடுக்கல. குடிகாரன் அப்படின்னு எல்லாம் சொன்னாங்க. ஆனா கம்பெனியில எல்லா வேலையும் அவனுக்குத்தான் தெரியும். நல்ல திறமையானவன். அதனாலதான் அவனை வேலையை விட்டு யாராலயும் அனுப்ப முடியல. இதையெல்லாம் கேட்கும்போது ஜாக்குலின் மனசுக்குள்ள, “ஆஹா இவன் ரொம்ப நல்லவன். இவனப் பத்தி எனக்கு மட்டுந்தான் புரியும்.” அப்பிடின்னு நினைச்சா.

அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சா. அப்புறம் வீட்டில எல்லாரும் திட்டத் திட்ட வழக்கம்போல இவ பிடிவாதம் பிடிச்சு அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா.

பாவம் அவளுக்கு சினிமாவுல வர வில்லனுங்க எவ்வளவோ பரவாயில்லைனு புரிய ஆரம்பிக்குது. நெஜ வாழ்க்கையில நம்பியார் கூடவும், ரகுவரன் கூடவும் குடித்தனம் பண்றது எத்தனை கொடுமையானதுன்னு தெரியுது.

அப்பத்தான் அவ கனவுல எம்ஜிஆர் வர ஆரம்பிக்கிறார். அப்படியே மனசுக்குள்ள பிறழ்ந்து போயி சின்ன வயசுல போன டென்ட் கொட்டாய்க்கு போறா. அடிக்க வர்ற சாட்டையைப் பிடுங்கி திரும்ப அடிக்கிறா.

இப்பவும் எல்லாரும் அவளை மனம் பிறழ்ந்து போயிருக்கிறான்னுதான் சொல்றாங்க. அப்பவும் அவளுக்கு மத்தவங்க சொல்றது எல்லாமே தப்பாத்தான் தெரியுது. அவளுக்கு வாய்த்தது எப்பவும் நம்பியார் மட்டுமே.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close