கவிதைகள்

கவிதைகள் – சோ.விஜயக்குமார்

கவிதை | வாசகசாலை

கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

மாடோ, ஆடோ, யாதாயினும்
வெட்டும்போது அதன் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

மதம் கொண்ட யானையோ,
மதில் அமரும் பூனையோ எதுவாயினும்
மின்னும் அவற்றின் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

நிலவோ,விளக்கோ ஒளிர்வதை
அடர்ந்த இருளின் கண்களில்
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

பித்தன், யாசகன் யாராயினும்
எதிர்ப்படும்போது அவர் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

வசியமோ, அவசியமோ எனும் எண்ணத்தில்
அந்நியரின் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

நோயாளியோ, உடன்வந்தவரோ
மருத்துவரின் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

தேவைக்காக வாக்குறுதியோ,
தேர்தல் வாய்ப்பு கருதியோ
பேசும் போது மக்களின் கண்களை
அரசியல்வாதிகள்
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

மறைபொருளோ,முறைபொருளோ
யாதெனப் புரியாவிடினும் ஒரு படைப்பில்
படைப்பாளியின் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!!

பிரிவோ, பரிவோ எதுவென்றாலும்
நேசிப்போரின் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

சற்றே உற்றுப் பார்த்தால் உண்மையில்
இன்னும் உற்றுப் பார்க்காத
கண்களால்தான்
உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது!

*****

தன்னிலிருந்து தோண்டப்பட்ட கல்
தன்மீதே எறியப்படும் போது
நீரின் வளையங்களில் எல்லாம்
கர்ப்பப்பையின் சுவடுகள்!

*****

ரப்பர் வளையத்து
நீரில் விழும்
நல்லெறும்புக்கு
குக்கர் மூடி
குட்டி நீச்சல்குளம்!

பலர் புகைக்கும்
இடத்தில் ஊரும்
சிற்றெறும்புக்கு
சாம்பல் குவியல்
சிகரெட் காடு!

அறுவடை காலத்தில்
அலையும் காட்டெறும்புக்கு
வெட்டப்பட்ட கரும்பு
தொட்டபெட்டா மலை!

தேநீர்க்கடையில் திரியும்
கட்டெறும்புக்கு
பேரல் சிந்தும் நீர்
பேரடுக்கு சாரல் மழை!

பூக்கடை அருகே
வசிக்கும் புற்றெறும்புக்கு
வாசமலர்
வேறொன்றுமில்லை!
வசந்தகாலம்!

பேரண்டமெங்கும் போகும்
பேருயிர் எறும்புக்கு
மனிதன்
மற்றொரு சிற்றுயிர்!

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close