சிறுகதைகள்

ஜெஸ்ஸி – அருண் பாண்டியன்

சிறுகதை | வாசகசாலை

ரமான மலம் ஒட்டியிருந்த ஒரு சிறிய  கருங்கல்லானது ஜெஸ்ஸியின் கால்களுக்கு மிக அருகே கிடந்தது. கல்லில் ஒட்டியிருந்த மலமானது கடுகை ஒத்த அளவில் ஜெஸ்ஸியின் கருமைநிற கனுக்கால்களிலும் அப்பியிருந்தது. ஆனால் அதை யாவற்றையும் பொருட்படுத்தாது சிதறுண்டு கிடந்த சிறு   பாறைகளை   ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக்  கொண்டிருந்தாள் ஜெஸ்ஸி. ராணுவ வீரர்கள் ஒளிந்து கொள்ள மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவார்களே அதே போல் அந்த சிறு சிறு பாறைகளைக் கொண்டு சதுர வடிவிலான  அரணை அமைக்க வேண்டுமென்ற நோக்கோடு அவ்வாறு பாறைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். இந்த மறைப்பு தன்னை பல கண்களிடமிருந்து பாதுகாக்குமென்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது.

ஜெஸ்ஸியின் இந்த செயல்பாடுகளின் மீது துளியும் ஆர்வமில்லாமல் இருந்த பானு அந்த அதிகாலை வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவாறு கற்களை அடுக்கி முடித்த ஜெஸ்ஸி அருகிலிருந்த பானுவை தானமைத்திருந்த அரணுக்குள் அமரவைத்து விட்டு சற்று தூரம் தள்ளி  பாதைமேல் நின்று  பார்க்கத் தொடங்கினாள்.இயற்கையாய் அமைந்திருந்த சில பெரும் பாறைகள்,மூன்று திசைகளையும் மறைத்து நின்றது.இன்னொரு திசை  மட்டும் அப்படியான இயற்கை அரண்கள் ஏதுமின்றி திறப்பாய் இருந்தது.

அத்திசையில் வளைந்து நெளிந்து ஓடும் ஒத்தையடிப் பாதையொன்று தூரத்தில் அமைந்திருக்கும் பனைமரங்கள் நிறைந்த காட்டிற்கு அனைவரையும் அழைத்து சென்றது. அந்த ஒத்தையடிப் பாதையில் பெரும்பாலும் கள் குடிப்பவர்களின் நடமாட்டம்  ஓயாதிருக்கும். அனுதினமும் அதிகாலை  இங்கு உடல் கழிவுகளை வெளியேற்றும் அந்த ஐந்து நிமிடத்திற்குள்ளாக  நிறைய முறை எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஜெஸ்ஸிக்கு மட்டுமல்லாது அங்கு ஒதுங்க வரும் அத்தனை பெண்களுக்கும் இருந்தது. பாறையின் முனைகளிலிருந்து மறைந்து நின்றும்,பாறைமேல் ஏறி நின்றும்  ஒதுங்க வரும் பெண்களை ஓராயிரம் கண்கள் மொய்த்துக்  கொண்டே தான் இருந்தது.அதன் பொருட்டே ஜெஸ்ஸி இந்த ஏற்பாட்டைச்  செய்யத் தொடங்கினாள். ஆனாலும் அவள் நினைத்ததைப்போல் அந்த அரண் வரவில்லை.பானுவின் தலை துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது. ஆனால் ஜெஸ்ஸிக்கு பாதை மீதிருந்து பார்த்தால் அங்கே யாரும் இல்லாதது போல் தெரிய வேண்டும் என்றே எண்ணியிருந்தாள்.மேலும் சில சுற்று கற்களை அதன் மேல் அடுக்கி வைத்து விட்டு அவர்களிருவரும்  பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.

“ஏண்டி ஜெஸ்ஸி இப்ப எதுக்கு வேல மெனக்கெட்டு இத செஞ்சுட்டு இருக்க?”

“இல்லக்கா கொஞ்சூண்டு மறப்பா இருக்குமுல்ல”

“ஓ இப்புடியிருந்தா பாக்க மாட்டாங்கனு நெனைக்கிறியா?”

“தெரிலக்கா ஆனா எதும் இல்லாதுக்கு இதாச்சு இருக்கே”

“போடி மறப்பா இருந்தா தான் இவனுங்க கண்ண உறுத்தி தொலையும்”

“சீக்கிரம் லெட்டின் கட்டனுக்கா அப்பாட்ட சொல்லி”

“ஆமா உங்கப்பா தான் கக்கூஸ் கட்டறதுக்கு அலையா அலஞ்சுட்டு இருந்தாரே?”

“ஆமாக்கா இந்த மாசத்துக்குள்ள எப்படியும் கெடைச்சிரும்னு சொன்னாரு..இப்பக்கூட காசுக்குதான் போயிருப்பாரு நெனைக்கிறேன்”.

“ஜெஸ்ஸி நான் ஒன்னு கேட்டா நீ தப்பா நெனைக்க மாட்டியே?”

“சொல்லுக்கா!”

“உங்கூட்ல கட்டன ஒடனே நானும் ஒங்க லெட்டின பொழங்கிலாமா?நா போய்ட்டு வரப்பலாம் நல்லா கழுவி வுட்ருவன்  ஜெஸ்ஸி.”

“க்கா அது நம்ம லெட்டின்கா….நீ வா”

உயரமான கரட்டின் அடிவாரத்தில் ஜெஸ்ஸியின் வீடு அமைந்திருந்தது.வருடத்தின் எல்லா நாட்களிலும் அந்த கரடானது  ஈரப்பதம் அறவேயற்று உலர்ந்து போயும்,கரடெங்கும் பெரும் வறட்சியை தாங்கும் மரங்களும்,கள்ளி  செடிகள் நிறைந்தும் காணப்படும்.அவ்வுலர்ந்த கரட்டினை  போலவே ஜெஸ்ஸியின் வீடும் வாழ்வுமிருந்தது.சில ஆடுகளை வைத்துக் கொண்டு ஜெஸ்ஸி மற்றும் அவளது அப்பாவான சூசையும் வாழ்வைக்  கடத்திக்  கொண்டிருந்தார்கள்..யாருமற்ற அவர்களது வாழ்வில் பெரும்பாலான இரவும் பகலும் சோர்வாகவும் மந்தமாகவுமே இருக்கும்.காலங்காலமாய் ஜெஸ்ஸி அனுபவித்துக் கொண்டிருந்த பாத்ரூம் குறித்தான பிரச்சனைகள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே வந்தது அவர்களிருவரின் வாழ்வையும் இன்னும் சிக்கல்படுத்தி கொண்டிருந்தது.

ஏதேதோ முயற்சிகள் அரசாங்கத்தை, தெரிந்த மனிதர்களை எப்படியெப்படியோ அணுகிப் பார்த்தும் சூசையால் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவைக் கொண்டு வர இயலவில்லை. ஒவ்வொருமுறை வீட்டை விட்டு கிளம்பும் போதும் ஜெஸ்ஸியின் முகத்தை பார்க்க முடியாமல் நகர்ந்துக்  கொண்டிருப்பார்.சில நேரங்களில் ஜெஸ்ஸி எழும் முன்னே வீட்டை விட்டு கிளம்பிவிடுவார்..சில நேரங்கள் ஜெஸ்ஸி  சீக்கிரமே எழுந்து விட்டால் தூங்குவதுபோல் நடித்துக் கொண்டிருப்பார். அந்த சமயங்களில் ஜெஸ்ஸி வெளியே எங்காவது நகர்ந்தவுடனே அவசர அவசரமாய் எழுந்து வெளியே ஓடிப் போவார். உடல் உபாதைகளை கழிக்க செல்லும் தன் மகளுடன் சென்று அவளுக்கு காவலாய்  பாதை மேல் நின்று யாரும் பார்க்காமல் பார்த்துகொள்ள வேண்டுமெனவும்,மீறி பார்ப்பவர்களை  சிறு சிறு துண்டங்களாய் வெட்டி மற்றவர் பார்க்க அந்த ஒத்தையடிப் பாதையில் வீசி எறிந்து விட வேண்டுமெனவும் நினைத்து கொள்வார். இவ்வாறான எண்ணம் அவள் பருவமெய்திய காலம் தொட்டே  அவருள் எழத் தொடங்கியிருந்தது.ஆனாலும் அதையெல்லாம் சூசை தீர்வாக நினைத்திடவில்லை. பதினைந்து வயதான தன் மகளுக்காக வீட்டில் கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதொன்றையே அவர் சரியான தீர்வென கருதினார். அவ்வப்போது காவலாய் நின்று தன் மகளை பார்ப்பவர்களை வெட்டி வீழ்த்த வேண்டுமென்ற அவரது எண்ணம் சிறிது ஆசுவாசத்தை கொடுத்துக் கொண்டுதானிருந்தது. அந்த ஆசுவாச பொழுதில் கூட  அவர் சத்தம் செய்யாமல் அழுதுக்கொண்டே தான் இருப்பார். அவரின் இவ்வழுகையில் ஜெஸ்ஸின்  வேதனையும்  கலந்தே கிடந்தது.ஒருமுறை ஜெஸ்ஸியின் தொடைப்பகுதியில் இருக்கும்  மச்சம் குறித்து அவளையொத்த பயல்களின் சிலாகிப்பு பேச்சை அறிந்து கொண்ட ஜெஸ்ஸி  அன்று பெருங்குரலெடுத்து தன் முன் அழுதது சூசையால் மறக்க முடியாத துயரமாய் மாறியிருந்தது. தான் காதலித்து மணந்து கொண்ட மனைவியின் அகால மரணம் ஏற்படுத்திய துயரை விடவும் இது அவருக்கு  பெருந்துயராய் பட்டது. அன்று ஜெஸ்ஸி அழுது கொண்டே ’கையெடுத்து கும்படறேன் எப்புடியாவுது ஒரு கக்கூஸ் கட்டிட்டுப்பா தெனத்திக்கும் காலையில ஊரே என்ன பாக்குது’ என்ற ஜெஸ்ஸியின் வார்த்தைகள்  நினைவில் வரும் போதெல்லாம்  இரும்பினை பழுக்க காய்ச்சி அவரது இருதய குழல்களில் இறக்கியதைப்  போலொரு வலியை உணர்ந்தார்.

அன்றிலிருந்து  பணம் தேடிக் கொண்டிருக்கும் சூசைக்கு கக்கூஸ் எட்டாகனியாகவே இருந்து வருகிறது. அதன் பொருட்டே அவர் நினைத்த நேரங்களில் அழுது தீர்ப்பார்,  அவ்வாறு அழுகின்ற தருணங்களில் கடவுளை உலகில் அத்துணை கெட்ட வார்த்தைகளைச் சொல்லியும் வசை பாடுவார். சில நேரங்களில் தன்னையும் தன் மகளையும் விட்டு இறந்து  போயிருந்த தனது மனைவியின் பாதங்களை இறுக்கி கட்டிக்கொண்டு அழுவார். சூசையின் உலகில் அவரது மனையின் ஆன்மா  சாகாவரம் பெற்றதாக இருந்தது.

“சென்டு தீந்து போனா வாங்கி வக்க மாட்டியா இப்ப எப்படி வெளியப் போறது நா”

“இல்லீங்க அந்த கடையில தீந்து போச்சான்.அடுத்த வாரதான் வருமா.”

“நாந்தான் சொல்லியிருக்கனே ஒன்னு ரண்டு சேத்து வாங்கி வச்சுக்கோனு..”

“வேணா என்னோட சென்டு இருக்கு அதா ஒரு நா போட்டுட்டு போங்க….நா நாளைக்கு டவுனுக்கு போய் வாங்கி வச்சுடுறேன்.”

“என்னோடது மாறி உன்னோடுது இருக்காது அரமணி நேரத்துல வாசம் போயிரும்.”என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு டேவிட் கண்ணாடி மேசையின் மீது வைத்திருந்த கணக்கு வழக்கு நோட்டை எடுத்து தனது மோட்டார் வண்டியில் வைத்துக் கொண்டு அருகில் உள்ள டவுன்னிற்கு  சென்று நான்கைந்து வாசனை திரவிய டப்பாக்களை வாங்கி  கொண்டான். அதில் ஒரு பாட்டிலை திறந்து  பாதியை தன் மீது தெளித்தக் கொண்ட போதுதான் டேவிட் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டான்..பின்னர் அதே நிம்மதியுடன் தேவாலயத்தில் தனக்காக காத்திருக்கும் பங்கு தந்தையை சந்திக்க கிளம்பினான்.

அப்போது வெய்யில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.ஜெஸ்ஸி பானுவுடன் தனது வீடமைந்திருந்த மேட்டில் மிக மெதுவாக ஏறிக் கொண்டிருந்த போது அவளது காட்டுடம்பில் வேர்வை அருவியென பெருக்கெடுத்து  தண்டுவடங்களின் வழியே பயணித்து  பிருஷ்டங்களின் பிளவுகளில் போய் நின்றது,மலம் கழித்து கழுவாமல் இருந்தபடியால் ஒரு வகையான எரிச்சல் ஏற்ப்பட்டு அவளுக்கு ஆசூயையாய் இருந்தது.வேகமாக தனது வீட்டிற்கு சென்று நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது அதன் காரணமாய் அவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

அப்பாவின் சைக்கிள் வீட்டின் சுவர் மீது சாய்த்து வைக்கப்பட்டதை பார்த்துக் கொண்டே தென்னங்கீற்றுகளால் நிறுவப்பட்டிருந்த பொடக்காலிக்குள் சென்று நன்கு கழுவிக்கொண்டாள் அத்தனை நேரமாக அவள் உணர்ந்திருந்த ஒருவகையான எரிச்சல் உணர்வு அப்போது இல்லாமல் போயிருந்தது. வெளியில் கட்டுதாரையில் சூசை பேரமைதியுடன் தனது ஆடுகள் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஒன்றிரண்டு   எருமை மாடுகள் அந்த கட்டுதாரையில் வசித்து கொண்டிருந்தது.ஆனால் இப்போது மிச்சமிருப்பது இந்த நான்கைந்து வெள்ளாடுகள் தான். ஜெஸ்ஸி   அவர் பின்னே அமைதியாக  வந்து நின்றாள்.

சூசை நீண்ட நேரமாய் ஏதும் பேசாமல் தனது ஆடுகளையே பார்த்து கொண்டிருந்தார். ஆனாலும் தனது பதிலுக்காக காத்து கொண்டு தன் மகள் பின்னால் நிற்பதை அவர் எப்போதோ உணர்ந்து கொண்டிருந்தார்.  இன்றும் கடனாக பணமேதும் கிடைக்கவில்லையென்று ஜெஸ்ஸியிடம் கூறுவதற்கு தைரியமற்றவராய் சூசை அமர்ந்திருந்தார். சூழலை தெளிவாக புரிந்து கொண்ட ஜெஸ்ஸி அங்கிருந்து நகர்ந்து வீட்டிற்குள்  சென்று சமைக்கும் பணியை செய்யத் தொடங்கினாள். அவளுக்கு அது வழக்கமான ஒன்று தான். சிறிது நேரத்திற்கு பின் சுவற்றில் சாய்த்து வைத்திருக்கும் மிதிவண்டியின் சப்தம் கேட்க வெளியே வந்து பார்த்தாள். அப்போது ஒரு கையில் மிதிவண்டியையும் மறு கையில் ஆடுகளையும் பிடித்து கொண்டு பள்ளத்தில் இறங்கி கொண்டிருந்தார் சூசை. நான்கைந்து ஆடுகள் மட்டுமே வாழ்ந்து வந்திருந்த அந்த கட்டுதாரை இப்போது காலியாக இருந்தது. ஆடுகள் சாப்பிடுவதற்காக கட்டி தொங்க விடப்பட்டிருந்த நீண்ட செடிகளும் காய்ந்த தண்டுகளும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

இரண்டு புறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்டு போயும் ஆங்காங்கே சில பனைமரங்களும் அமைந்திருந்த அந்த உலர் நிலத்தின்  நடுவே பெயர்ந்து கிடந்த தார் சாலையில் தனது மிதிவண்டியை தள்ளிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்த சூசைக்கு தான் கையில் பிடித்திருந்த ஆடுகளில் கட்டப்பட்டிருந்த சிறுமணிகளில் இருந்து எழுந்த  ஓசை மிகவும் நாரசமாக ஒலிப்பதாய் தோன்றியது. இதற்கு முன்னம் பெரும்பாலான நேரங்களில் அவை இனிய கானமாகவே இருந்து வந்தது.இன்று அது அவ்வாறாக இல்லை. எப்போதும் நடந்தால் சீக்கிரம் முடிந்துவிடும் அந்த சிதைந்து போயிருந்த தார்சாலை இன்று முடிவில்லாது நீண்டு கொண்டிருப்பதாய் அவர் உணர்ந்து கொண்டிருந்த வேளையில் பனையேறியான அந்தோனி அந்த பொட்டல் நிலத்திலிருந்து தார்சாலைக்கு சூசை கையிலிருந்த ஆடுகளை பார்த்துக் கொண்டே வந்தான்..

“என்னா மாமா வேவாத வெயிலு ஆட்டெல்லாம் புடிச்சுட்டு எங்க போயிட்ருக்க.”

“சந்தசாரிக்கு தா மாப்ள”

“செரி மாமா நானே ஒன்ன பாக்க பொழுதோட வூட்டுக்கு வரலான்னு பாத்தேன்..”

“சொல்லு மாப்ள “

“ஒனக்கே தெரியும் இத்தெட்டாநாளு சாமி உசுரு பொழச்ச நோம்பி வருது. கோயிலு பணமெல்லாம் கோயிலுக்கேபோய் சேரனும் டேவிட்  குடுத்த காசெல்லாம் இன்னம் ரெண்டு மூனு நாக்குள்ள திரும்ப வாங்க சொல்லிட்டாரு மாமா. அதான்  ஒங்கிட்ட சொல்லலாம்னு பாத்தே” என்று சொல்லி முடித்தான் அந்தோனி.

சூசைக்கு அப்பொழுதுதான் கடனாக வாங்கிய திருசபையின் பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய நாள் வந்துவிட்டதென  நியாபகத்தில் வந்தது. தேவாலய பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு டேவிட் வசமிருந்தது. அடிப்படையில் கள் விற்பனை செய்யும் அந்தோணி டேவிட்டுக்கு உதவியாக  கடன் தொகையை ஊர் மக்களுக்கு தருவது பின் மீண்டும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதை திரும்ப பெற்று மீண்டும் டேவிட்டிடம் சேர்ப்பதையும் செய்து வந்தான்.

சிறிது நேரம் ஏதும் பேசாது தனது ஆடுகளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த சூசை

“சேரி மாப்ள நாளைக்கு வூட்டுக்கு வா காச திருப்பி கட்டிரேன்… “

“சேரி மாமா வேல முடிச்சுட்டு பொழுதோட வரேன்.”.

“மாப்ள ஒனக்கு தெரிஞ்ச தறிப் பட்ற இருந்தா சும்மா ஒரு வருசத்துக்கு அடையாளா என்ன சேத்து வுட்றியா”

“ஏ மாமா என்னாச்சு”

“இல்ல மாப்ள நீ இருந்தா சொல்லு..”

“பள்ளிவோடம் போற புள்ளைய வச்சுகிட்டு அடையாளா போவ போறியா? அதும் பொட்ட புள்ள..சொல்லு மாமா என்ன ஆச்சு..?”

“வூட்ல ஒரு கக்கூஸ் இல்லாத இருக்குய்யா… அன்னாடும் எம்புள்ள அழுவுறா?”

“ஏ மாமா நம்மூர்ல நெறய வூட்ல கக்கூஸ் இல்ல.அதுக்குன்னு எல்லாம் புள்ளைகளும் அழுதுட்டா கெடக்கு.”

“அப்படியில்ல மாப்ள எல்லா புள்ளகளும் ஆய் அப்பன்டசொல்லாம தனியா அழுவுதுங்க..எம்புள்ள எங்கிட்ட சொல்லி அழுவுறா.”

‘சேரி மாமா அப்புடினா ஒரு கக்கூஸ் கட்டிபோட்ற வேண்டியது தானே.அதுக்கு ஏன் கலங்கிட்டு கெடக்குற…”

“கட்டறதுக்கு தான் காசு வேனும்ல மாப்ள..”

“நீ ஏன் மாமா காசுப்பத்தில்லாம் கவல பட்டுக்கிற.இப்பதான் எதோ புரியாத பாஷையில அரசாங்கம் திட்டமெல்லாம் வச்சுருக்கே.. நம்ம வனவாசியான் கூட அப்புடி தான் கக்கூஸ் கட்டிருக்கான்..”

“இல்ல அவன்ட கேட்டு பாத்தேன்.மொத நாம காசுப் போட்டு கட்டி போட்டா புடிச்சு அனுப்புனா காசு குடுப்பாங்களா மாப்ள.. அந்த வல்லளவு தான் எங்கிட்ட இல்லயையே மாப்ள.”

“சேரி மாமா நாஞ்சொல்றேன்’என்று அங்கிருந்து நகர்ந்தான் அந்தோனி. சூசை சந்தை நோக்கிய தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தான்.

நகரத்திலிருந்து டேவிட் தேவாலயத்திற்கு வந்து கொண்டிருந்தான். டேவிட் எப்பொழுது தெருவில் வந்தாலும் ஏதோ புது மனிதனைப் பார்ப்பதுப்போல் ஊர் சனம் மொத்தமும் நின்று வேடிக்கை பார்க்கும் அந்தளவிற்கு அவனது தோரணை இருக்கும் நன்றாக சவரம் செய்யப்பட்ட சிவப்பும் வெண்மையும் கலந்த முகம். கழுத்தில் சன்னமான தங்க சங்கிலியுடன் சிலுவை இணைக்கப்பட்டிருக்கும். கழுத்தில் கிடக்கும் தங்கத்தை மற்றவர்கள் பார்க்க வசதியாக அவனது சட்டையின் மேல் பொத்தான்கள் எப்பொழுதும் போடப்படமலே இருக்கும். டேவிட் எப்பொழுதுமே இறுக்கமான சட்டைகளை அணிந்து கொள்வான். ஊரில் உள்ள மற்ற இளைஞர்களெல்லாம் அவனால் ஏற்பட்ட தாக்கத்தால் டேவிட் மாதிரியே தங்களை அலங்கரித்துக் கொள்ள அவ்வப்போது முயற்சித்துப் பார்ப்பார்கள். ஆனால் டேவிட்டின் அம்சம் அவர்களுக்கெல்லாம் ஒருப் போதும் அமையவேயில்லை. தேவாலயத்தின் பணம் குறித்தான பொறுப்புகளும் அவன் வசம் இருந்தப்படியால் மொத்த ஊரும் அவனை சினிமாவில் இடம்பெறும் கதாநாயகனைப் போல் பார்த்தது. . டேவிட்டிடம் இருக்கும் கோவில் பணம் அந்தோணி வழியாகத்தான் அங்கு வாழ்ந்த மக்களுக்கு சென்று சேர்ந்துக் கொண்டிருந்தது. அதுவும்  அந்த கத்தோலிக்க திருசபையின் பணம் கத்தோலிக்க குடும்பங்களுக்கு மட்டுமே சென்று சேருமாறு டேவிட்டும் அந்தோணியும் பார்த்துக்கொண்டார்கள். டேவிட்டிற்கு எந்த வகையான தவறான பழக்க வழக்கங்களும் இல்லையென்று ஊரும் தேவாலயத்தை சேர்ந்தோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஊருக்கு வெளியே அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் கள்  குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான் டேவிட். அவன் குடிக்கும் கள் அந்தோணியால் மரத்திலிருந்து இறக்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் டேவிட் வசம் வந்து சேரும். இது பல வருடங்களாக நடந்து கொண்டே தானிருக்கிறது ஆனாலும் விசயம் வெளியில் கசிந்ததில்லை,அதன் பொருட்டே டேவிட்டின் நம்பிக்கைகுரிய ஆளாக அந்தோணி உருவெடுத்திருந்தான்.

டேவிட் தேவாலயத்திற்குள் நுழையும் போது பங்குதந்தை ஆலயத்திற்கு வெளியே இருந்த பூச்செடிக்களுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். நேராக பாதிரியாரிடம் சென்றான் டேவிட்.

“வா டேவிட் கால்ல வருவேன்னு பாத்தேன்” என்றார் பாதிரியார்.

“இல்ல பாதர் காத்தால டவுன்ல வேல இருந்துச்சு அதான்”

“செரி டேவிட் பணம்எல்லாத்தையும் வசூல் பண்ணியாச்சா பிரச்சன. ஒன்னுமில்லியே.”

“இல்ல நாள மக்கியானாத்துக்குள்ள கோவில் காசு பூராத்தையும் சனங்ககிட்ட இருந்து வாங்கிபுடலாம் பாதர்.”

“செரி டேவிட் பாத்துக்கோ.. நீ போய் ஈஸ்டர்க்கு தேவையான வேலையை பாரு’என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பாதிரியார்..

சுவர்கோழிகள் சத்தமிட்ட தொடங்கின.காலையில் ஆடுகளை பிடித்துக்கொண்டு வெளியே சென்ற தன் அப்பாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள் ஜெஸ்ஸி.வெளியே மிதிவண்டியை நிறுத்தும் சப்தம் கேட்டது. அப்பா வந்ததை உணர்ந்து கொண்ட ஜெஸ்ஸி வேகமாக வெளியே வந்து பார்த்தப்போது தொன்டுப்பட்டி அருகே நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த சிமெண்ட் தொட்டியிலிருந்த நீரால் முகத்தை கழுவிக் கொண்டிருந்தார் சூசை. அருகேயிருந்த கல் மீது ஒரு துணிப்பை வைக்கப்பட்டிருந்தது. ஜெஸ்ஸிக்கு உள்ளூர ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது அந்த துணிப்பை பார்க்கும் போது.கொடியில் காய்ந்து கொண்டிருந்த துண்டினால் முகத்தை துடைத்துக் கொண்டே பையுடன் வீட்டிற்குள் நுழைந்தார் சூசை. அவர் அப்போது வரை ஜெஸ்ஸியிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அவரை தொடர்ந்து உள்ளே சென்ற ஜெஸ்ஸி சமையற்கட்டிற்காக போடப்பட்டிருந்த மூங்கிலான தடுக்கை பிடித்துக் கொண்டு சூசையைப் பார்த்துக் கொண்டே நின்றாள். கொஞ்சம் நிமிடத்திற்கு அங்கே வார்த்தைகள் எதும் புழங்கப்படவில்லை. சூசை தனது மனைவியின் படத்திற்கு கீழ் சுவற்றின் மீது சாய்தமர்ந்திருந்தார் அவரது கால்களில் அந்த துணிப்பை கிடந்தது. ஜெஸ்ஸி அந்த துணிப்பையையும் விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த சூசையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள். இப்படியே அந்த இரவில் சில மணி நேரங்கள் கடந்திருந்த போது சூசை.

“ஜெஸ்ஸி சோறு போடும்மா”

“ப்பா ப்ரேயர்’என்றாள் சன்னக் குரலில்

“சோறு போடாயா மொத”

ஜெஸ்ஸியும் சூசை ஏதும் பேசாமல் உணவருந்தினார்கள். அந்த துணிப்பை அதே இடத்தில் அப்படியே கிடந்தது.ஜெஸ்ஸி அடிக்கடி அந்த துணிப்பையை நோட்டமிட்டு கொண்டிருப்பதை சூசை பார்த்துக் கொண்டே உணவருந்தி முடித்தார். இரவு உணவிற்குப் பின் ஜெஸ்ஸி சாப்பிட்ட இடத்தை நன்றாக சுத்தம் செய்தாள். ஜெஸ்ஸி இடத்தை சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போது சூசை கையில் வழக்கமாக அவர் படுத்துறங்கும் பாயை வைத்திருந்தார். அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் பாயை விரித்து படுத்துக் கொண்டு மீண்டும் விட்டத்தை பார்க்கத் தொடங்கினார். கீழே கிடந்த துணிப்பையை கையில் எடுத்த ஜெஸ்ஸி உள்ளே பார்த்தாள் ஐந்நூறு ரூபாய் தாள்கள் இருந்தது.

“ஜெஸ்ஸி இருவதாயிரம் இருக்கான்னு செரிய எண்ணி பத்தரமா பொட்டிக்குள்ள வை. கோவில் காசு அந்தோணிட்ட நாளைக்கு குடுக்கனும்” என்று சொல்லிவிட்டு மீண்டும் விட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தார். ஜெஸ்ஸி கையில் வைத்திருந்த பணத்தின் மீது இரண்டு மூன்று கண்ணீர் துளிகள் உருண்டோடியது.

அந்த எளிய வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டிருந்தது. இரவு கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருந்தது. எங்குமிருள் பரவிக் கிடந்த அந்த வீட்டிற்குள் தூங்காமல் அமர்ந்திருந்தாள் ஜெஸ்ஸி. பலமாக காற்று வீசத் தொடங்கியது. வெளியில் காய்ந்த தென்னங்கீற்றுகளால் அமைக்கப்பட்டிருந்த குளியலறையின் கதவுப் பகுதி வேகமாக அடித்துக் கொண்டு சப்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சூசைக்கும் விழிப்பு தட்டியதால் எழுந்து அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்தார். ஜெஸ்ஸி அப்போது வரையிலும் தூங்காது கதவில் மேல் சாய்ந்து அமர்ந்திருந்ததைப் பார்த்த சூசை ஏதும் பேசாமல் திரும்ப படுத்துக் கொண்டார்.ஆனால் அவர் உறங்க முயற்சி செய்யவில்லை..

 

விடிந்தவுடன் ஜெஸ்ஸியின் கண்கள் சூசையை தேடியது. ஆனால் அவர் படுத்திருந்த பாய் மடித்து வைக்கப்பட்டிருந்தது.மேலும் சுவற்றின் மேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மிதிவண்டியும் இல்லாமலிருந்தது. தூரத்தில் எங்கோ ஓர் மூலையிலிருந்து விவிலிய வசனம் மெல்லமாக ஒலிக்க தொடங்கியப் போது வீட்டிற்குள் சென்ற ஜெஸ்ஸி வரகாப்பியை தயார் செய்துக் கொண்டிருந்தாள்.  அப்போது   பானு அங்கே வந்து சேர்ந்தாள். சூடான வரகாப்பியை இருவரும் அந்த சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டே உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி ஜெஸ்ஸிக்கு காற்று பிரிந்து கொண்டே இருந்தது. அது அழுகிய முட்டையின் மனத்தை கொண்டிருந்தாக இருந்தது.

கட்டிட வேலை செய்பவர்கள் சிலர் மிக பெரிய கலவை இயந்திரம் ஒன்றை நான்கு சக்கர ஆட்டோ ஒன்றின் பின் முரட்டு தனமாக கயிற்றினைக் கொண்டு பிணைத்துக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் சிமெண்ட் அப்பியிருந்த துணியினை தங்களது தலைகளில் இறுக்கி கட்டிருந்திருந்தார்கள். அருகே இருந்த சிறிய தேநீர் கடையில் அப்பொழுதுதான் சூடான பலகாரங்களை அடுக்கி வைத்திருந்தார்கள் அதிலிருந்து எண்ணெய் வடிந்துக் கொண்டிருந்ததது. தேநீர் கடையில் நான்கைந்து நபர்கள் அமர்ந்து சப்தமாக பேசி சிரித்துக் கொண்டே இருந்தார்கள். ஒன்றிரண்டு சிறுமியர்கள் ஒரு கையிலுள்ள தேநீரும் மறுக்கையில் தேநீரில் நனைத்து சாப்பிட உப்பு ரொட்டியையும் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அந்த காலை வேளையில் மக்கள் வயிற்றிற்காக பரப்பரத்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த பெரும்பாலான மனிதர்கள் அழுக்கடைந்த உடையை தான் உடுத்தி கொண்டிருந்தார்கள். அவ்வளவு சப்தங்களுகிடையில் சூசை அமைதியாக டேவிட்டின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தார். டேவிட் தனது கனமான மோட்டார் வாகனத்தின் மேல் அமர்ந்து ஆவிப் பறக்கும் தேநீரை மெல்லமாக பருகிக் கொண்டிருந்தான். அருகில் அந்தோணி.

“நீ எதுக்கும் ரண்டு மூனு நா கழிச்சு வா சூச நா பாத்துட்டு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு ஒரு மிடறு தேநீரை விழுங்கினான்.

“இல்லீங்க பணம்உறுதியா கெடைச்சா நல்லா இருக்குமுங்க”

“அதா சூச பணம் வசூல் ஆவுறத வச்சு பாத்துக்கலாம்.. நீ வா பாத்து பண்ணிக்கலாம்.”

அந்த வார்த்தை சூசை மனதை சமதானம் அடைய செய்யாததால் வாய் திறவாது நின்று கொண்டிருந்தார். டேவிட் அப்பொழுதிற்கெல்லாம் தேநீரை குடித்து முடித்து திரும்பி பார்த்தப் போது டீக்கைடையில் இருந்த ஒரு பொடியன் வேகமாக ஓடி வந்து அந்த காலி தேநீர் டம்ளரை பெற்றுக் கொண்டான். டேவிட்டும் அங்கிருந்து கிளம்புவதற்காக தயாரானான். அப்பொழுதும் சூசை அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“ஏ சூச இப்பதாம் நம்ம நாடு சுத்தமா இருக்கும்னு கவுர்மண்டே கக்கூஸ் கட்டி தருதே இப்படி கடன் கேட்டுட்டு நிக்கறதுக்கு அப்படி பண்ணலாம்ல” என்றான் டேவிட்.

“இல்லீங்க அதுக்கு கவுர்மெண்ட் காரங்க பணென்டாயிரம் தராங்க..அதுலயும் நாலாயிரத்த பஞ்சாயத்து போர்ட்ல எடுத்துக்குறாங்க.கைக்கு எட்டாயிரம் தான் நிக்கும்” என்று டேவிட்டின் கேள்விக்கு பதிலளித்தார் சூசை

“பின்ன என்ன அதான் எட்டாயிரம் வருதுல்ல”

“அந்த காசு கக்கூஸ் கட்றதுக்கு மிந்தியே தரமாட்டாங்க. நாம கை காசு போட்டு கட்டி போட்டா புடிச்சு அனுப்புனா தான் தருவாங்க. செத்தப்பறம் பால் ஊத்துற கணக்கு தான் அது.

“நீ சொல்றதும் செரிதான் சூச. போச்சாது போ அந்தோணியே சொல்லிடாப்புல அப்புறம் அப்பீலே இல்ல காசெல்லாம் வசூல் ஆகட்டும் நா தரேன். ரண்டு மூனு நா கழிச்சு வா” என்று நம்பிக்கையாய் பேசிவிட்டு அந்தோணியுடன் அங்கிருந்து தனது மோட்டார் வாகனத்தில் கிளம்பினான் டேவிட். சூசை சற்றே ஆசுவாசத்துடன் நகர்ந்தார்.

கீழே பள்ளத்தில் கிடந்த தனது வறண்ட கிராமத்தை ஜெஸ்ஸி வீட்டின் மேட்டிலிருந்து பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள் பானு. பொடகாலியில் அமர்ந்திருந்த ஜெஸ்ஸி குளிர்ந்த நீரை ஒடுங்கிய பாத்திரத்தில் எடுத்து தனது யோனியின் மீது இறைத்தாள். அவளுக்கு சுற்றியுள்ளவற்றின் ஒலிகள் எதுவும் கேட்வில்லை. அவளது உயிரில் இடைவிடாது எரிந்து கொண்டிருந்த வேதனை அவளது கண்களில் அப்போது அப்பட்டமாக வலிந்து கொண்டிருந்தது. அவள் மெனக்கெட்டு அடுக்கி வைத்திருந்த பாறை அரண்கள் யாவும் இடிந்து போய் கிடந்தது. அதை மௌனமாக பார்த்துவிட்டு ஏதும் செய்யமுடியாமல் வந்திருந்த அவளுக்கு பாறைகள் இடிந்து விழுகின்ற போது ஏற்படும் ஓசை ஓயாது கேட்டுக்கொண்டே இருந்தது. அவளால் யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் தன்னை நொந்து கொண்டிருந்தாள். பானு அவளுக்காக வெளியே காத்து கொண்டிருந்தாள்.ஜெஸ்ஸியின் அப்பா பழைய சினிமா பாடலொன்றை உரக்க பாடிக் கொண்டே அந்த பொட்டல் பரப்பில் மிதிவண்டியில் தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

“ஏண்டி ஜெஸ்ஸி பாறையை யாருடி இப்படி தட்டி உட்றுப்பா “

“தெர்லக்கா அதா உழுந்துருக்கலாம்…இல்லேண்ணா எவனாது உதச்சு வுட்றுக்கலாம்”

“செரி வுடு அப்பாவுக்கு   கண்டிப்பா காசு கெடச்சுடும் நீவொண்ணும் கவல பட்டுக்காத”

“பாக்கலாக்கா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சூசை அந்த மேட்டில் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டே வந்தது ஜெஸ்ஸிக்கு பெருமாச்சிரியத்தை கொடுத்திருந்தது. ஏனென்றால் அவர் எப்போது பார்த்தாலும் சோர்வாக அந்த மேட்டில் மிதிவண்டியை தள்ளி வருவதையே ஜெஸ்ஸியால் பார்க்க முடிந்திருந்தது. ஆனால் இன்று அவர் இவ்வளவு தெம்பாக மிதிவண்டியை ஓட்டி வருவது ஜெஸ்ஸிக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. சூசை மிதிவண்டியை சுவற்றின் மேல் சாய்த்து நிறுத்தியுடனே அவருகே போய் நின்றாள் ஜெஸ்ஸி.

“இன்னும் ரண்டு மூனு நாள்ல பணம் கெடச்சுரும்னு நெனைக்கிறேம்மா”

அப்பாவின் இந்த வார்த்தைகள் அப்பொழுது வரை அவளுள் நிலவி வந்த வலியை, கசப்புணர்ச்சியை அடித்து விரட்டியது. அருகில் நின்ற பானு சூசையைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்தாள்.

“அப்பா கக்கூஸ் எங்க கட்டலாம்” அங்குமிங்கும் கண்களை அலையவிட்டபடி கேட்டாள் ஜெஸ்ஸி.

“ஒ இஸ்டம் டா ஜெஸ்ஸி”

“ப்பா அப்புடினா கட்டுதார பக்கத்துல்ல கட்டிக்கலாம்பா.அங்க தண்ணி பொழங்கறத்துக்கு செரியா இருக்கும்”

“சேரிடா கண்ணு நீ சொல்ற தாவுலையே கட்டிடலாம்”என்று சொல்லிவிட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு உள்ளே சென்றார் சூசை.

ஜெஸ்ஸி கட்டுதாரையை ஆசையுடன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அவளருகே இருந்த பானு அமைதியா அங்கிருந்து நகர முற்பட்ட பானுவின் வலது மணிக்கட்டை பிடித்து தன்னருகே இழுத்து”இன்னம் ஒரு வாரம் பத்து நாளைக்குதான் நாம காட்டுக்குபோவோம் அப்றமேட்டு நமக்கொரு கக்கூஸ் வந்துரும்” என்று சிரித்துக் கொண்டே கூறி முடித்தாள் ஜெஸ்ஸி. பானுவின் கண்கள் நீரால் நிறைந்து போயிருந்தது…அப்படியே அவள் ஜெஸ்ஸியை கட்டியணைத்துக் கொண்டாள். ஜெஸ்ஸியின் கைகள் பானுவின் முதுகை ஆறுதலாய் தட்டி கொடுத்துக் கொண்டிருந்தது. வீட்டினுள் அப்பா கடவுளை நோக்கிய தன் பிரார்த்தனையை மேற்கொண்டிருந்தார்.

இரவு மெல்ல கவிந்து கொண்டிருந்தது. தனது கூரை கொட்டாயில் துணியால் மூடி வைத்திருந்த பானையிலிருந்த கள்ளை ஒரு போத்தல் முழுக்க நிரம்பிக் கொண்டு ஊருக்கு வெளியேயுள்ள கல்லறை தோட்டத்திற்கு கிளம்பினான் அந்தோணி. டேவிட் அந்த இரவில் காத்து கொண்டிருந்தான். அவன் இவ்வாறு கள் சாப்பிடுவது அந்தோணிக்கும் டேவிட்டின் குடும்பத்திற்கும் தவிர ஊரில் வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மொத்த ஊரும் அடங்கிய பின் அந்தோணி கல்லறை தோட்டம் வந்து சேர்ந்திருந்தான். போத்தலில் நிரம்பியிருந்த கள்ளை டம்ளரில் ஊற்றி கல்லறையில் மீதமர்ந்திருந்த டேவிட்டிடம் நகர்த்தினான். கள்ளுக்கு துணைப்பொருளாய் சில காரமான பயிறு வகைகளையும் உடன் எடுத்து வந்திருந்தான் அதைப் பிரித்து டேவிட் முன் வைத்தான். டேவிட் கள்ளை அருந்திக் கொண்டே அன்று வசூல் செய்த பணம் குறித்த கணக்கு வழக்குகளை அந்தோணி படித்துக் காட்ட டேவிட் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு டம்ளரை குடித்து முடித்து விட்டு பயிறு வகைகளை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே..

“முன்ன மாறி ஒன்னும் போத ஏற மாட்டீங்கது“இது’என்றான் டேவிட்

“அதுவொண்ணுமில்ல டேவிட்டு மாத்திரை கொஞ்சம் கம்மியா தான் போட்ருக்கேன்”

“அப்படியா ஆனா ருசியும் மிந்தி மாறி இல்லியே”

“ஆமா டேவிட் மிந்தில்லாம் பொழுதோட கள் இறக்கி ராத்திரி ஒனக்கு தருவேன்…இப்ப வசூல் வேல இருக்கிறதுனால பொழுதோட இறக்கறது இல்ல… காத்தால இறக்கின கள்ளுதான் ஒனக்கு இப்போ தரேன்”

“அதான் ருசி இப்புடி இருக்குதா”

“ஆமா டேவிட்”

“குடிச்ச மாறியே இல்லடா அந்தோணி”

“இல்லேண்ணா ஒன்னு பண்ணு.தெனத்திக்கும் வெடியகாத்தால நீ மேட்டாங்காட்டுக்கு வந்துரு…நா அப்பவே எறக்கி குடுக்குறேன்”

“எதுக்கு நா போத போடறது எல்லாத்துக்கும் தெரியவா?”

“அட நீ கால்ல சீக்கிரம் வந்துட்டு போய்டு”

“அதெல்லாம் செரிப்பட்டு வராது அந்தோணி ராத்திரி குடிச்சா போய் அக்கடானு படுத்துக்கலாம்”

“செரி வுடு நா பொழுதோட எறக்க பாக்கறேன். போச்சாது போ இந்த சூச மாம காசு கேட்டுச்சே அனசரிச்சு பண்ணிக் குடு.”

“உறுதியா அவனுக்கு தரன்டா.. நீ பாத்து திரும்பி கட்டீட சொல்லு. சல்லையாயிறப் போது”என்று சொல்லிக் கொண்டே டம்ளரில் உள்ள மீதி கள்ளை கீழே ஊற்றிவிட்டு கல்லறை மீதிருந்து எழுந்தான் டேவிட்..

“அதெல்லாம் ஒன்னும் சல்லையாகுது நா பாத்துக்குறேன்” என்றான் அந்தோணி.

ஏதும் பேசாமல் தலையாட்டிய டேவிட்”கல்லு வர வர நல்லால” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனது வண்டியுடன் நகர்ந்து சென்றான் டேவிட். டேவிட்டின் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அந்தோணி போத்தலில் மீதமுள்ள கள்ளை குடித்து பார்த்தான். அதன் சுவை எதோ மாதிரி இருந்தப்படியால் அதன் விழுங்காமல் பொளிச்சென்று வேகமாக துப்பிட்டு அந்த கல்லறை தோட்டத்தை விட்டகன்றான்.

நேராக வீட்டிற்கு சென்ற டேவிட் நன்றாக குளித்து முடித்து விட்டு தலையை சீவி முகத்தில் பவுடர் பூசிக்கொண்டான். பின் வாசனை திரவியத்தை தெளித்துக் கொண்டு வந்தவன் தன் மனைவியை தேடினான். அவள் பட்டாசாலையில் இல்லை இரண்டு மூன்று முறை பெயர் சொல்லி அழைத்தப் போதும் பதிலில்லை. உணவு மேசையின் மீது தயாராக வைக்கப்பட்டிருந்த உணவை முழுவதுமாய் சாப்பிட்டு முடித்த டேவிட் பட்டாசாலையின் இடது மூலையிலுள்ள அறையை எட்டி பார்த்தான். அறையில் மிக குறைவான வெளிச்சம் மட்டுமே இருந்தது. அறையில் உள்ள சுவற்றில் இயேசு கிறிஸ்துவின் திருவுருவப் படம் மாட்டப்பட்டிருந்தது. படத்தின் கீழே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அதன் முன்னே டேவிட்டின் மனைவி தலைமீது சேலையால் முக்காட்டிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் அவள் முகத்தின் மீது படிந்திருந்தது. சத்தம் செய்யாமல் அவளருகே சென்ற டேவிட் அவளின் பின் மண்டியிட்டு அமர்ந்து அவளை கட்டியணைத்துக் கொண்டான். விருக்கென்று விழித்தவள் சட்டென திரும்பி பார்த்தாள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் டேவிட்டின் முகம் அழகாய் தெரிந்து கொண்டிருந்தது. அவள் தன் மீது படர்ந்திருந்த டேவிட்டின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள படாதப்பாடு பட்டு கொண்டிருந்தாள். அவள் அவனது கைகளை கிள்ளிப் பார்த்தாள், கடித்துப் பார்த்தாள் ஆனால் அது எதுவும் அந்த பிடியை தளர்த்தவில்லை.

’வுடுங்க சாமி முன்னாடி’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அதே போராட்டம்….

’இப்போ சாமிக்கு கண்ணு தெரியாது’ என்று சொல்லிவிட்டு எரிந்து கொண்டிருந்த அந்த ஒற்றை மெழுகுவர்த்தியின் மீது தனது ஆள்காட்டிவிரலை வைத்து மென்னையாக ஒரு அழுத்து அழுத்தினான் டேவிட் அறை முழுதும் இருள் பரவியது…

சுவற்றின் மேல் சாய்ந்தப்படியே தூங்கியிருந்த சூசைக்கு தீடீரென விழிப்பு தட்டியது. எதிரே அவரது பாயில் போர்வை கலைந்து கிடந்தது. நேற்றைய இரவின் செயல்பாடுகள் எதுவும் அவரது நியாபகத்தில் இல்லை. அருகே ஜெஸ்ஸி இன்னும் உறங்கி கொண்டிருந்தாள். டேவிட் சொன்ன மூன்று நாட்கள் முடிந்துப் போயிருந்தது. சூசையின் மனதில் ஒரு மெல்லிய பயம் இழையோடிக் கொண்டே தானிருந்தது. ஆனால் அதை யாவற்றையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் டேவிட் சந்திக்க ஆயத்தமானார் சூசை. வானம் நன்கு விடிந்து போயிருந்தது அந்த இறக்கத்தில் சூசை மிதிவண்டியை வேகமாக இயக்கி கொண்டிருந்தார். காலை நேரத்தின் குளிர்ந்த காற்றும் கரைந்துக் கொண்டிருந்த காகங்களின் சிறகசைப்பும்,கூடுகளிலிருந்து  இருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த தையற்சிட்டுகளின் விளையாட்டுகளும் அவரை சற்று இதமாய் வைத்திருக்க உதவியது. ’நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது’ என்ற விவிலிய வசனத்தை ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டார் சூசை. அப்போது அவரது அகத்திலும் புறத்திலும் ஒரு அசைக்கமுடியா நம்பிக்கையொன்று ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. நேராக அந்தோணியின் வீட்டிற்கு சென்ற சூசை அவனை உடன் அழைத்துக் கொண்டு டேவிட்டை பார்க்க சென்றான்.

அதே இடம், அதே பரபரப்பு, அன்று போல் டேவிட் முன் பேரமைதியுடன் சூசை ஏதும் பேசாது தேநீரை பருகிக் கொண்டிருந்த டேவிட் சிறிது நேரம் கழித்து

“நோம்பிக்கு மொத நா ஊட்டுக்கு வந்து காச வாங்கிக்க ஆனா சீக்கிரம் அடைச்சுடு கோயிலு காசத்தான் எடுத்து தரேன்”

“நன்றிங்க டேவிட். நாஞ்சீக்கிரம் அடைச்சறேங்க’ என பதிலளித்தார் சூசை அந்தோணிக்கும் ஒரு நன்றியை தெரிவித்துவிட்டு வந்ததை விடவும் வேகமாக வீட்டிற்கு திரும்பி சென்றார் சூசை.

ஜெஸ்ஸியும் பானுவும் கட்டுதாரையில் ஒரு கயிற்றுக் கட்டிலை போட்டு படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். மேலே இருந்த கீற்றுகளின் சிறு சிறு இடைவெளிகளில் வெளிச்சம் உள்ளிறங்கி அவர்களுது முகத்தில் விழுந்து கொண்டிருந்தது. ஜெஸ்ஸி கட்டிலில் படுத்துக்கொண்டே கட்டுதாரையின் மண்ணை கையால் தடவிக் கொண்டிருந்தாள். அம்மண்ணில் ஆடுகளின் ரோமங்கள் கலந்து கிடந்தது. கழனித் தொட்டிகள் காய்ந்து போய் கிடந்தது.

“பரிட்ச லீவுல வெள்ளாடங்குட்டியாலதா பொழுது போச்சு.. இப்ப அதுக இல்லாம சலுப்பா இருக்கு’ என்றாள் ஜெஸ்ஸி

“அடுத்த வருசம் வாங்கிலாம்” என்றாள் பானு.

“ச்சீ இந்த கக்கூஸ் வூட்ல கட்டிருந்தாங்கன்னா.. ஆடுக வூட்ட வுட்டு போயிருக்காதுக.”

“போச்சாது போ .நமக்கு கக்கூஸ் வேணும்னா ஆட்ட வித்துதான ஆகனும்”

“இல்லக்கா ஆட்ட வித்து கக்கூஸ் கட்டலாம்.போறதுக்கு கக்கூஸ் கெடக்கு ஆனா நாம சாப்ட எது இருக்கு”

“ஏய் ஜெஸ்ஸி நீ அய்ஸ்கூல் வந்ததுல இருந்து நல்லா பேச கத்துகிட்ட”

“நா உண்மையதா சொல்றக்கா.நீயே சொல்லு பொழப்புகிருந்த ஆட்ட வித்து கக்கூஸ் கட்டுனா, நாம சாப்ட என்னா பன்றது.அது ஆட்ட வித்து லெட்டின் கட்டியிருந்தாக்கூட பரவால்ல அதயும் கோயிலுக்கு கட்டியாச்சு.”

“நீ வொன்னும் வெசனப் படாத அப்பா இன்னைக்கு காசடோதான் வருவாரு”

“செரிக்கா பாப்போம்” என்று ஜெஸ்ஸி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சூசை அங்கு வந்து சேர்ந்தார். சூசையின் கண்களில் அளவற்ற மகிழ்ச்சி தென்பட்டதை ஜெஸ்ஸி பரிபூரணமாய் உணரத் தொடங்கினாள். சூசை பணம் கிடைக்க போவதைக் குறித்து ஜெஸ்ஸியிடம் சொல்லியப்போது அங்கிருந்த மூவரின் கண்களிலும் நீர் பெருகி நின்றது. அவர்கள் அப்போது புதியதொரு உலகை, தாள முடியா சந்தோசத்தை, புரையோடிப்போன அவர்களது வாழ்வானது தங்கள் கண்முன்னே குணமடைவதை அப்போது தரிசித்துக் கொண்டிருந்தார்கள். பானு அவர்களிருவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு திரும்பினாள்.

அன்றிரவு கள்ளில் போதையேற்றும் மாத்திரைகள் சிலவற்றை வழக்கத்திற்கு அதிகமாக கலந்து எடுத்துக்கொண்டு கல்லறைத் தோட்டத்திற்கு சென்றான் அந்தோணி. அங்கு ஏற்கனவே டேவிட் காத்துக் கொண்டிருந்தான். எப்பொழுதும் போல் அந்தோணி ஊற்றி கொடுக்க டேவிட் கணக்கு வழக்குகளை கேட்டுக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தான். இன்றும் அவனுக்கு அந்த கள் பிடிக்காமலிருந்தது.

“டே எப்பதான்டா நல்ல கள்ளு கொண்டாந்து குடுப்ப?”

“டேவிட் அதான் நேத்தே சொன்னனே!”

“செரி இப்ப என்ன பண்ணலாம் அதுக்கு”

“நீ விடிய காத்தால அந்தல்லைக்கு வா அப்பவே இறக்கி தரேன்.போதைக்கு ரெண்டு மாத்திரை கலந்துக்கலாம்”

“இல்லடா அந்தோணி நா அப்புடி வந்தன்னா போத போடறது தெரிஞ்சு போயிடும்.நம்ம வாங்கி வச்சுருக்குற பேரு என்னாவறது.”

“அப்புடி பாத்தா நீ எங்கூட இருக்கறத ஊரு சனம் எப்புடி பாக்கும்”

“ம்ம கள்ளெறக்குவ கூட சுத்தியும் போத போடாதவ இந்த டேவிட்னு சொல்லும்.”

“செரி அத வுட்டு தள்ளு நீ வெடிய காத்தால வா யாருக்கும் தெரியாது நா பாத்துக்குறேன்”

சிறிது நேரம் யோசித்த டேவிட் ‘செரி நா வரேன் நீ தா பொறுப்பு’

“அட வா டேவிட்டு இத்தன வருசம் தெரியாததா இப்ப தெரிய போவுது.”

“நாளைக்கு காத்தால எத்தன மணிக்கு வரட்டும்”

“ஒரு அஞ்சு அஞ்சரைக்கு வா”

“வாய்திறவாது தலையை மட்டும் ஆட்டிவிட்டு வீட்டிற்கு சென்றான் டேவிட்.

 

தரையெங்கும் பௌர்ணமி வெளிச்சம் பரவிக் கிடந்தது.சூசையும் ஜெஸ்ஸியும் இரவு உணவிற்கு பின் அமர்ந்து பேசியப்படி இருந்தார்கள்.

“ப்பா காசு வந்தவுடனே லெட்டின் கட்ட ஆரம்பிச்சரலாம்பா.”

“செரிடா கண்ணு..”

“அப்படியே கையோட கவுர்மெண்டல எழுதிப் போட்றலாம். நமக்கு கெடைக்குற போற பணத்த வச்சு நல்லா லெட்டின் கட்டிக்கலாம்.கட்டி முடிச்சவுடனே கைக்கு ஒரு எட்டாயிரம் வரும்பா அத வெச்சு கடன அடச்சரலாம்பா…”

“அதான் சாமி நானு நெனச்சேன்.. வனவாசியான்ட கேட்டு நாளைக்கே எழுதி போட்றேன்.”

நீண்ட நாட்கள் கழித்து சூசையும் ஜெஸ்ஸியும் இரவில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்கள். பேசிக்கொண்டே வெளியில் அப்படியே தூங்கியும் போனார்கள்.

நோம்பி நாட்களை தவிர வேறெந்த எந்த நாட்களிலும் சீக்கிரம் எழுந்து கொள்ளாத டேவிட் அன்று சீக்கிரம் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டான். ஒரு லுங்கியை கட்டிக்கொண்டு தனது மோட்டார் வாகனத்தில் கள் குடிக்கும் இடத்திற்கு சென்றான். டேவிட் அவ்வாறு லுங்கி கட்டிக்கொண்டு வெளியே போவது அதுவே முதல் முறை அதுவும் அதிகாலை மக்கள் நடமாட்டம் இல்லையென்பதால் அவ்வாறு கிளம்பி சென்றான் டேவிட். ஆனாலும் டேவிட்டின் மனதில் சற்று பயமிருந்து கொண்டே தான் இருந்தது.யாரும் பார்க்காமல் அங்கு சென்று சீக்கிரம் திரும்பிவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு வேகமாக சென்று கொண்டிருந்தான்.

தனக்கும் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் குறித்து பானுவிடம் விளக்கிகொண்டே வந்தாள் ஜெஸ்ஸி. அவளும் வெகு ஆர்வமாய் கேட்டுக்கொண்டே நடந்து வந்தாள். நிலவின் வெளிச்சம் அந்த இருள் சூழ்ந்த அதிகாலையை பகல் போல் காட்சியளிக்க செய்தது. இருவரும் ஜெஸ்ஸி வீட்டின் பள்ளத்தை விட்டிறங்கி காட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஜெஸ்ஸி பானுவிடம் கழிப்பிடம் எப்படி இருக்க வேண்டுமென்ற தனது எதிர்ப்பார்ப்பை மூச்சை இழுத்துப் பிடித்து சொல்லிக் கொண்டிருந்தாள். பானுவிற்கு இனிமேல் தனக்கும் கஷ்டமிராது என நினைத்துக் கொண்டே

“ஜெஸ்ஸி நா ஒன்னுக் கேட்டா…!”

இடைமறித்த ஜெஸ்ஸி ‘அக்கா ஒரு பத்து பாஞ்சு நாளு அப்றம் நாம இந்நேரத்துக்கு இங்க நடக்க தேவ இருக்காது ஆனா இப்போ வெசையா நட எனக்கு வவுறு வலிக்குது’ என்றாள்.

பானு சிரித்துக் கொண்டே வேகமாக நடக்க தொடங்கினாள். இருவரும் தங்களுக்குள் வேகமாக நடப்பது என்று போட்டி போட்டுக் கொண்டு நடக்கத் தொடங்கினார்கள்.

பனைமரங்கள் நிறைந்த பகுதிக்கு முன்னே பாறைகள் நிறைந்த பகுதி ஒன்றிருந்தது அதன் மையத்தில் ஒரு ஒத்தையடிப்பாதை இருந்தது. அந்த ஒத்தையடிப்பாதை தான் அந்த பனைமரங்கள் நிறைந்த பகுதி செல்லும் ஒரே பிரதான வழியாக இருந்தது. அந்த பாறைகள் நிறைந்த ஒத்தையடிப் பாதையில் மோட்டார் வாகனம் செல்ல முடியாததால் அதை மறைவாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அவ்வொத்தையடிப் பாதையில் இறங்கி நடக்க தொடங்கினான் டேவிட். அப்பகுதியே குளிர்ந்து கிடந்தது ஆனால் மனித கழிவின் கெட்ட நாற்றம் சகித்து கொள்ள முடியாததாய் இருந்தது. ஆள் நடமாட்டமென்று ஏதுமில்லை. கள் குடிப்பவர்களின் வருகை கூட நன்றாக விடிந்தவுடன் தான் இருக்கும். ஆகவே எவ்வித பயமுமின்றி சற்று ஆசுவாசமாக நடக்கலானான் டேவிட். ஜெஸ்ஸியும் பானுவும் அவ்வொத்தையடிப் பாதையின் ஆரம்பத்தில் காலை வைத்தப் போது டேவிட் பனைமரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தான். புதிதாக இறக்கப்பட்ட கள்ளை ஒரு மண்பானையில் ஊற்றி டேவிட்டிற்கு பருக கொடுத்தான் அந்தோணி. கள்ளில் சற்றே போதை ஏற்படுத்துவதற்காக சில மாத்திரைகளை மட்டும் கலந்திருந்தான் அந்தோணி. அதை ஓரே மூச்சில் குடித்து முடித்தான் டேவிட்.

“இப்ப சொல்லு எப்புடி இருக்கு “

“டே அந்தோணி கள்ளுனா இது கள்ளுடா நா தெனமும் இங்கயே வந்துறேன்”.

“செரி செரி யாராவது பாத்துற போறாங்க நீ சட்டுனு கெளம்பு.பொம்பளையாள் ஒதுங்குற எடம் இருக்கு அங்கு யாராவது பாத்துற போறாங்க பாத்து போ டேவிட்..”

“செரி நீ போ நா பாத்து போய்கிறேன்“என்று சொல்லிவிட்டு டேவிட் அங்கிருந்து ஒத்தையடிப்பாதை வழியே நடக்க தொடங்கினான். ஜெஸ்ஸியும் பானுவும் உடல் உபாதையை கழிக்க அப்பொழுதான் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த மூன்று திசைகளையும் பாறை அடைத்துக் கொண்டிருந்தது. பனைக்காட்டிலிருந்து நடந்து வரும் போது பார்த்தால் வெறும் பாறைகள் தான் தெரியும். ஒத்தையடிப் பாதை வழியாய் பெண்கள் ஒதுங்குமிடத்தை கடக்கும் போது எந்த பாறையும் மறைப்பாய் இருக்காது யார் அமர்ந்திருக்கிறார்கள் என தெளிவாக பார்க்கலாம். டேவிட் பனைக்காட்டிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்த வந்த போது பாறைகளுக்கு பின்னிருந்து கொலுசுகளின் சப்தமும், வளையல் சப்தங்களும் கேட்க தொடங்கிய படியால் சட்டென பாதையிலிருந்து விலகி பாறைக்களுக்கு பின்னால் சென்று மறைந்து கொண்டான். தன்னை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் அவன் அவ்வளவு கவனமாக இருந்தான். பாறைகளின் மீது காதை வைத்து கேட்டது மிகவும் சன்னமாக கிசுகிசுப்பு குரல் கேட்டது. அது குரல் அத்தனை இனிமை வாய்ந்தாக இருந்ததை போல் டேவிட் உணரத் தொடங்கியப் போது பாறையில் இருந்த இயற்கையான பிளவுகளின் வழி எட்டி பார்த்தான். இளம் பெண்ணின் பிருஷ்டம் பாதி தெரிந்தது அவனுக்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியது. முழுவதையும் பார்த்துவிடமென்ற ஆவலில் அந்த பிளவில் தன் முகத்தை நன்கு பொருத்தி பார்க்க முற்பட்டான் டேவிட் அப்பொழுதும் கூட முழுதாய் தெரியவில்லை. அந்த நேரத்திற்கெல்லாம் அவனது குறிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தொடங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் பார்த்தப்போது பக்கவாட்டில் அமைந்த பாறையில் நிற்பதற்கான இடமும் முன்னும் பார்த்து விடுவதற்கான சாத்தியக்கூறு அதிகமிருந்தபடியால் அங்கு மெல்லமாக நகர்ந்து சென்றான் டேவிட். இது பற்றி தெரியாமல் உடல் உபாதையை கழித்து கொண்டே கையில் ஒரு சிறு கல்லை வைத்து தரையிலிருந்த இன்னொரு கல்லின் மீது கொட்டி கொண்டு அமர்ந்திருந்தாள் ஜெஸ்ஸி. வேலையை முடித்துவிட்டு சற்று தூரம் தள்ளி நின்றுக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பானு. பக்கவாட்டிற்கு வந்த டேவிட்டிற்கு ஜெஸ்ஸியின் முகம் நன்றாக தெரிந்தது. அவளது யோனியிலிருந்து வழிந்து கொண்டிருந்த ஒரு சில மூத்திர துளிகள் பாறை மேல் பட்டு தெறித்ததை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட். அவனது ஆண்குறி விரைத்து நின்றது. அதுவரை அந்த இடத்தில் நிலவி வந்த கெட்ட வாசனை அப்பொழுது அவனுக்கு சுகந்தமாய் மாறிப்போயிருந்தது. இமைகளை போல் மிருதுவாய் அவளது யோணியின் மேல் முளைத்திருந்த மயிர் கற்றைகளை வருடிவிட வேண்டும் பின் அதை தன் எச்சில் கொண்டு நனைத்திட வேண்டுமென நினைத்து கொண்டே தனது ஆண்குறியை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே இருந்தான். பின் அவளிடம் நகர முற்பட்ட போது ‘ஏய் ஜெஸ்ஸி எவ்ளோ நேரன்டி சீக்கிரம் வா’ என்ற பானுவின் குரல் அவனை திடுக்கிட செய்து பின்வாங்க வைத்தது. அவளது கண்களை ஏக்கமாக பார்த்துக் கொண்டே பாறைக்கு பின் சென்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சுயமைதுனம் செய்ய தொடங்கினான் டேவிட். அவ்வப்போது கேட்ட கொலுசின் ஓசைகள் அவனை மேலும் கிறங்க செய்தது .ஜெஸ்ஸி தன் கையில் வைத்திருந்த அந்த சிறு கல்லை வைத்து அவளது மலத்துவாரத்தை அழுத்தி துடைத்தெறிந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். மீண்டும் ஒத்தையடிப் பாதைக்கு வந்து சேர்ந்த டேவிட் அந்த இருப் பெண்கள் நடந்து செல்வதை பார்த்துக் கொண்டே தன் விரல்களில் அப்பியிருந்த விந்தினை நாவால் சுவைத்து பார்த்தான். அது கள்ளை விட சுவையாய் இருப்பதாய் அவனுக்கு பட்டது. இவ்விந்தினை சுவைத்தது போல் நாளை அப்பெண்ணையும்   எப்படியேனும் சுவைத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

அதிகாலையின் இருள் விலகி பிரகாசமான வெளிச்சம் ஊடுருவி பாய்ந்து கொண்டிருந்தது ஜெஸ்ஸியும் சூசையும் ஈஸ்டர் மாதத்தின் வெள்ளிகிழமைகளில் நடைப்பெறும் சிலுவை பாதை பிரார்த்தனையில் கலந்து கொள்ள தேவாலயத்திற்கு சென்றார்கள். வழக்கமான தேவாலயம் மிகுந்த உற்சாகமாய் இருக்கும் ஜெஸ்ஸியும் சூசையும் சோர்வாக உணர்வார்கள். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. அவர்களிருவரும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் பதினாங்கு நிலைகளை அமைதியாக கடந்து தேவாலயத்தை விட்டு வெளியேறினார்கள். சூசையின் கண்கள் டேவிட்டை தேடியது. ஆனால் டேவிட் அங்கில்லை. அந்தோணி மட்டும் தான் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். சூசை டேவிட் குறித்து அந்தோணியிடம் கேட்டதற்கு சரியான பதலில்லை. டேவிட் இருந்தால் அவனிடம் பணம் குறித்து நியாபகப்படுத்திவிடலாம் என்ற நோக்குடனே சூசை டேவிட்டை தேடினார். ஆனால் அவன் அங்கு இல்லாதிருந்தான். வெய்யிலின் தாக்கம் வேறு அதிகரித்துக் கொண்டிருந்தப்படியால் ஜெஸ்ஸியும் சூசையும் அங்கிருந்து கிளம்பினார்கள். தேவாலயம் அமைந்திருந்த தெருவை தாண்டி இன்னொரு தெருவிற்குள் சூசையும் ஜெஸ்ஸியும் நுழைந்தப் போது டேவிட் தனது மோட்டார் வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்தான். சூசை டேவிட்டை நிறுத்தி தன் தேவையை நியாபகப்படுத்திக் கொண்டிருக்கும் அருகிலிருந்த ஜெஸ்ஸியை இனம் கண்டு கொண்டான் டேவிட். இன்று காலை அந்த குறைந்த ஒளியில் மின்னிக் கொண்டிருந்த அந்த ஒளிப்பொருந்திய கண்கள் அவன் நினைவை விட்டு அகலாதிருந்தது. ஜெஸ்ஸி அவன் முன் ஆடையின்றி நிற்பதைப் போலொரு காட்சி அவன் முன் வந்து சென்றது. டேவிட் தன் மகளை பார்ப்பதை உணர்ந்துக் கொண்ட சூசை, ஜெஸ்ஸியை டேவிட்டிற்கு மேலோட்டமாக அறிமுகப்படுத்தி விட்டு அவளை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றான் சூசை. அவர்களிருவரும் அந்த தெருவை விட்டு மறையும் வரை டேவிட் விடாது பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். பின் நேராக தேவாலயத்திற்கு சென்று அந்தோணியை சந்தித்த டேவிட் கணக்கு வழக்குகளை சரிப்பார்த்துவிட்டு கிளம்பும் நேரத்தில்..

“டே அந்தோணி நீ எப்பயும் போல கல்றைக்கே எடுத்துட்டு வந்துடு”

“ஏன்டா? அப்போ காத்தால வேணாமா?”

“வேணான்டா எதுக்கு அனாவசியமான பிரச்சன”

“செரி ஓ இஷ்டம்.நா கல்றைக்கே வந்தறேன்’என்றான் அந்தோணி.

அன்றிரவு சூசையும் ஜெஸ்ஸியும் சாப்பிட்ட உடனே தூங்கி போயிருந்தார்கள். டேவிட் தன் வீட்டில் தூக்கம் பிடிக்காமல் தவித்துக் கொண்டிருந்தான். ஜெஸ்ஸியை நினைத்துக் கொண்டு தன் மனைவியுடன் அவன் கலவிக் கொண்டிருந்தும் அவனால் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை. அவன் மனம் கேட்டது ஜெஸ்ஸியை மட்டும் தான். அதனால் அதிகாலை நேரம் எப்போது வருமென தூங்காது காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு நேரமானது பாதி உறைந்த பனியாற்றினைப் போல் நகர்ந்து கொண்டிருந்தது. எப்படியேனும் அவள் காலில் விழுந்தாவது அவளை தன் வசமாக்கிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டான். ஆனால் இதைப்பற்றிய யாதொன்றும் அறியாத ஜெஸ்ஸி அமைதியாக தூங்கி கொண்டிருந்தாள்.

ஜெஸ்ஸி வரூவதற்கு சில மணி நேரங்கள் முன்னரே அந்த பக்கவாட்டு பாறையின் அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட்.. அவள் வருவதற்குள் அவளை நினைத்து இரண்டொரு முறை சுயமைத்துனம் செய்து தனது இச்சையை தற்காலிகமாக தீர்த்துக் கொண்டான். நிமிடத்திற்கு நிமிடம் அவன் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போனது.

ஜெஸ்ஸியின் பானுவும் நடக்க போவதைப் பற்றி அறியாமல் காட்டை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். எப்போதும் இல்லாத அளவிற்கான வேகம் அவர்களிருவர் நடையிலும் அப்போதிருந்தது. டேவிட் அங்கே பக்கவாட்டு பாறைக்கு பின் தயாராக நின்று கொண்டிருந்தான். ஜெஸ்ஸி ஒத்தையடிப்பாதையில் முன்னே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பின்னே பானு நடந்து வந்தாள். சற்று தொலைவில் கொலுசொலி கேட்க தொடங்கியதும் டேவிட் குஷியானான். சப்தம் காதுக்களுக்கு மிக அருகில் வந்து கொண்டேயிருந்தது. ஜெஸ்ஸியும் பானுவும் அமர்ந்தார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த டேவிட்டிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஜெஸ்ஸி மட்டும் வந்திருந்தால் தனக்கு வசதியாக இருந்திருக்குமென்று நினைத்துக் கொண்டான். பார்க்கும் வரை பார்த்துவிட்டு உடனிருப்பவளை அடித்துக் கொன்று விட்டு ஜெஸ்ஸியை புணர்ந்து விட வேண்டுமென டேவிட் நினைத்துக் கொண்ட வேளையில் பானு வேலையை முடித்துக் கொண்டு எழுந்து ஒத்தையடிப்பாதை பக்கம் போய் திரும்பி நின்று வேடிக்கை பார்த்து நின்றாள். ஜெஸ்ஸி கீழே குனிந்து கல்லைக் கொட்டி கொண்டே இருந்தாள். தனக்கேற்ற தருணம் வாய்த்ததென நினைத்துக் கொண்ட லுங்கியை அவிழ்ந்து தனது முகத்தில் முகமூடியை போல் கட்டிக் கொண்டு அவளை நோக்கி சற்று முன்னேற நினைத்த போது பாறை இடறி அவள் முன் கீழே விழுந்தான் டேவிட். சப்தம் கேட்டு திடுக்கிட்ட பானுவும் ஜெஸ்ஸியும் பயங்கரமாக அலறினார்கள். பானு டேவிட்டை நோக்கி கல் எடுத்து வீசினாள். கீழே விழுந்த டேவிட் பதற்றத்தில் ஜெஸ்ஸிக்கு அருகே சென்றான். ஜெஸ்ஸியும் கீழே கிடந்ததை எடுத்து அவனது முகத்தின் மேல் வேகமாக வீசியெறிந்தாள்.முகத்தில் லூங்கி கட்டியிருந்தபடியால் ஜெஸ்ஸியாலும் பானுவாலும் அவனின் முகத்தை பார்க்கமுடியவில்லை. அதற்குள்ளாக சப்தம் இரண்டு மூன்று ஆண்கள் பனைக்காட்டிலிருந்து வந்தபடியால் சுதாரித்துக்கொண்ட டேவிட் பக்கவாட்டு பாறையின் அருகே குதித்து வேகமாக ஓடிச்சென்று மறைந்தான்.

ஜெஸ்ஸிக்கு பயமும் பதற்றமும் ஒரு சேர இருந்தப்படியால் அவளால் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தாள். கையில் ஏதோ பிசுப்பிசுப்பாக இருந்ததை உணர்ந்த ஜெஸ்ஸி கைகளை பார்த்தாள் கை முழுக்க மலம் ஒட்டிக்கிடந்தை பார்த்து ஓவென கதறி அழுதாள். பானு அவளை சமாதானப்படுத்தி கைகளை பெரிய பெரிய இலைகளை கொண்டு நன்கு சுத்தம் செய்து வீட்டை நோக்கி கூட்டிச் சென்றாள்.

டேவிட் கண்களுக்கு கீழ்பகுதி மூக்கு மேலுதட்டு பகுதி முழுவதும் பிசுபிசுவென மலம் ஒட்டிக் கிடந்தது. டேவிட்டால் அந்த நாற்றத்தை சகித்து கொள்ளவே முடியவேயில்லை. குட்டை தண்ணீரில் முகத்தை தொடர்ந்து கழுவிக்கொண்டே இருந்தான் டேவிட். பின் மண்ணை அள்ளி முகத்தில் தேய்த்து கழுவினான் டேவிட். ஆனாலும் அவன் மேலிருந்து அந்த கெட்ட நாற்றம் விடாது வீசிக்கொண்டே இருந்ததாய் அவனுக்கு தோன்றியது. ஜெஸ்ஸி மீது தீரா கோபத்துடன் டேவிட் முகத்தை நன்றாக தேய்த்து கழுவிக் கொண்டே இருந்தான்.

ஜெஸ்ஸி உறைந்து போயிருந்தாள். பானு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே வீட்டிற்கு கூட்டி வந்தாள். ஜெஸ்ஸி தன் கைகளை அடிக்கடி முகர்ந்து பார்த்து அழத் தொடங்கினாள். அதற்குள் பானு

”நீ ஏண்டி அழுவற. நீ இன்னைக்கு நரவல கையில தொட்டத நெனச்சு அழுவாத. நீ அடிச்சவன் இனிமே அந்த பக்கம் வர நெனைக்க மாட்டான். யாரையும் பாக்க நெனைக்க மாட்டான்.

பானு ஜெஸ்ஸிய வீட்டிற்கு கூட்டி வந்து அவளது கைகளை சோப்பு கொண்டு நன்றாக கழுவி விட்டாள். பின் இருவரும் ஜெஸ்ஸி வீட்டின் மேட்டுப்பகுதியின் மேல் நின்று கொண்டு கீழே படர்ந்திருந்த கிராமத்தை பார்க்க தொடங்கினார்கள். அப்போது அவளருகே வந்த சூசை

”ஏஞ்சாமி சோறாக்காம இங்க நின்னு என்ன பாத்துட்டு இருக்க? நீ போய் செஞ்சு வை டேவிட் இன்னைக்கு காசு வாங்க வூட்டுக்கு வர சொல்லியிருக்காரு. நா போய் வாங்கிட்டு, அப்படியே வனவாசியான பாத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லி விட்டு மிதிவண்டியில் சென்றார் சூசை.

’பாத்தியா இன்னிக்கு டேவிட் அண்ண காசு குடுத்துரும்.சீக்கிரம் வூட்ல லெட்டின் கட்டீலாம் நீ வெசனபடாம இரு’ என்றாள் பானு.

ஜெஸ்ஸி ஏதும் பேசாமல் சூசை தூரத்தில் செல்வதையே பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button