சிறுகதைகள்
Trending

சுவரின் மீதிருக்கும் அந்தத் தடம்- வெர்ஜீனியா வூல்ஃப்

தமிழில் - கயல்

சுவரின் மீதிருந்த அந்தத் தடத்தை நான் முதன்முதலில் பார்த்தது ஜனவரி மாதத்தின் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். ஒரு தேதியை நிர்ணயிப்பதற்கு தான் என்ன பார்த்தோம் என்பதை ஒருவர் நினைவு வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே நான் தீயை, என் புத்தகத்தின் பக்கங்களின் மீது நிலைத்து ஒளிர்கிற மஞ்சள் நிறக் கீற்றை, சமையலறையின் கணப்பு அடுப்பின் மாடத்திலுள்ள வட்ட வடிவக் கண்ணாடிக் குடுவையில் உள்ள மூன்று சிகப்பு வண்ணச் சாமந்திப் பூக்களை இப்போது நினைக்கிறேன். ஆம். அது ஒரு குளிர்காலமாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் அப்போதுதான் தேநீரைக் குடித்து முடித்து இருந்தோம். ஏனெனில் நான் அப்போது சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. புகைத்தபடி நிமிர்ந்த நான் சுவரில இருந்த அந்தத் தடத்தை அப்போதுதான் முதன்முதலில் பார்த்தேன். புகையின் ஊடாக அதைப் பார்த்த என் கண்கள் எரிகிற நிலக்கரித் துண்டுகளின் மீது ஒரு கணம் நிலைத்தன. கோட்டை கோபுரத்தின் மீது சிகப்பு வண்ணக் கொடி படபடக்கிற அந்தப் பழைய பிரமை என் நினைவுக்கு வந்தது.

கறும்பாறைக்கு அருகே சிகப்பு வண்ண ஆடையணிந்த வீரர்கள் குதிரைகளின் மீதமர்ந்து செல்லும் அணிவகுப்பை நினைத்தேன். அந்த அடையாளத்தின் காட்சி என் பிரமையைக் குறுக்கிட்டது எனக்கு ஒருவகையில் நிம்மதி தருவதாக இருந்தது. ஏனெனில் அது மிகப் பழைய, தன்னிச்சையாக நிகழும் ஒரு பிரமை. ஒருவேளை அது என் சிறு பிராயத்ததாக இருக்கலாம். அந்த அடையாளம் சிறிய வட்ட வடிவத்தில், வெண்மையான சுவரின் மீது கறுப்பாக, ஆறு அல்லது ஏழு இன்ஞ்ச்சுகள் அளவில் கணப்பு அடுப்பு மாடத்துக்கு மேல் இருந்தது. (1)

வைக்கோற் புல்லின் ஒரு தாளை வெகு தீவிரமாக எடுத்துச் செல்கின்ற எறும்புகள் பிறகு அதை அங்கேயே  போட்டு விட்டுச் செல்வதைப் போல நம்முடைய நினைவுகள் எப்படி உடனடியாக ஒரு பொருளின் மீது திரண்டு அதைச் சிறிது நேரம் மட்டுமே சுமக்கின்றன? அந்தத் தடம் ஒரு ஆணியால் ஏற்பட்டது என்றால் அது நிச்சயமாக ஒரு புகைப்படத்தை அங்கு மாட்டுவதற்காக ஏற்பட்டதாக இருக்க முடியாது. வெண்துகள்களால் சுருள் முடி, துகள்களின் மென்தூசுகளால்  கன்னங்கள், சிவந்த மலர்களைப் போன்ற உதடுகள் இவற்றாலான ஒரு பெண்ணின் சித்திரத்தை அங்கு வைப்பதற்காக ஏற்பட்டிருக்கும். எங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் பழைய அறைக்கான ஒரு பழைய ஓவியம் என்கின்ற முறையில் இந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பது நிச்சயமாக ஒரு மோசடி. அவர்கள் அப்படிப்பட்ட வகையைச் சேர்ந்த மிக சுவாரசியமானவர்கள்தான். அவர்களை வினோதமான  இடங்களில் நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் அவர்களை மறுபடி ஒருவரால் சந்திக்க இயலாது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. தங்களுடைய மரச் சாமான்களின் பாணியை மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த வீட்டை விட்டுச் செல்வதாக அவர் கூறினார். தன்னைப் பொருத்தவரை நாம் வாழ்க்கையால் துண்டாடப்படும்போது கலை நம்மைக் காக்கும் உத்திகளைத் தருவதாக இருக்க வேண்டும். வயதான பெண்மணி கீழே சிந்தும் தேனீரிலிலிருந்து ஒருவர் தப்பிப்பது போல, புறநகரின் பின்புறத் தோட்டத்தில் விளையாடும் இளைஞன் எட்டித் தொட்டுவிட முயற்சி செய்யும் டென்னிஸ் பந்து போல, புகைவண்டியில் நம்மை வேகமாகக் கடந்து செல்கிற ஒருவரைப் போல அதிவேகத்துடன் அது இருக்கவேண்டும் என்று எனக்கு விளக்கிக்கொண்டு இருந்தார். (2)

ஆனால் அந்தத் தடத்தைப் பொறுத்தவரை நான் அதைப் பற்றி அவ்வளவு நிச்சயமாக இல்லை. ஏனெனில் அளவில் மிகப் பெரிய வட்ட வடிவத்தில் இருந்த அந்தத் தடம் ஒரு ஆணியால் ஏற்படுத்தப்பட்டது போல் தோன்றாததால் நான் அதை நம்பவில்லை. நான் எழுந்து நின்று அதைப் பார்க்கலாம். பார்த்து பத்துக்கு ஒன்று என்பதாக அதைப் பற்றி மிக நிச்சயமாக என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் ஒரு விஷயம் நடந்து முடிந்த பிறகு அது எவ்வாறு நடந்தது என்பது யாருக்கும் எப்போதும் தெரியாது. வாழ்வின் மர்மம், சிந்தனைகளின் துல்லியமின்மை! மானுடத்தின் அறியாமை! நம்முடைய உடைமைகள் மீது நமக்கு எவ்வளவு சிறிய கட்டுப்பாடு இருக்கிறது!நம்முடைய இந்த வாழ்வென்பது எல்லா நாகரீகங்களுக்குப் பிறகும் என்னவொரு தற்செயலான நிகழ்வு. ஒரு வாழ்நாளில் நாம் இழந்திருக்கிற சில விசயங்களை மட்டும் நான் எண்ணிச் சொல்கிறேன். முதலாவதாக மர்மமான ஒரு இழப்பாக எப்போதும் எண்ணப்படும் ஒன்று – பூனை எதை மென்று தின்னும், எலி எதைக் கொறிக்கும் – புத்தகபைண்டிங் செய்யப் பயன்படும்  மூன்று வெளிர்நீல உருளைக் கருவிகள்.

பிறகு பறவைக் கூண்டுகள், இரும்பு  வளையங்கள், எஃகு பனிச் சறுக்குக் கட்டைகள், ராணி ஆன் (ANNE) வகைமையான வேகமாக நிலக்கரியைத் தள்ளும் செவ்வக வடிவக் கருவிகள், கைப்பகுதிகள், நகைகள் உட்பட எல்லாம் போய்விட்டன. மாணிக்கக் கற்களும் மரகதங்களும் கிழங்குகளின் வேர்களின் மீது கிடக்கின்றன.  மனதைக் கூர்மைப்படுத்தும் ஒரு விசயமாக இது நிச்சயமாக இருக்கக் கூடும். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் என் கையிருப்பில் துணிகள் ஏதுமின்றி உறுதியான மரச்சாமான்கள் சூழ நான் இப்போது அமர்ந்திருக்கிறேன். ஒருவர் வாழ்க்கையை எதனுடனாவது ஒப்பிட வேண்டுமெனில் அவர் அதை ஒரு குழாயில் அடைத்து ஒரு மணி நேரத்துக்கு ஐம்பது மைல்கள் வேகத்தில் அதைப் பறக்கவிட வேண்டும். அது அடுத்த முனையைச் சென்று சேரும்போது தலை முடியில் ஒரு ஒற்றைக்  கொண்டை ஊசி கூட இருக்காது. இறைவனின் காலடியில் முழு நிர்வாணமாக வீழ்தல்.  அஞ்சலகத்தில் விழுவதற்குத் தயாராக இருக்கும் பழுப்பு நிறப் பொட்டலங்களைப் போல தலையோடு காலாக அல்லிக்கொடி நந்தவனத்தில் புரள்கிறது. பந்தயக் குதிரையின் வாலைப் போல ஒருவரின் தலைமுடி பின்புறமாகப் பறப்பது. ஆம். அது வாழ்வின் விரைவுத்தன்மையையும் அழிக்க இயலாத தேவையற்ற கழிவையும் பழுதையும் வெளிப்படுத்துவதாகத்  தோற்றமளிக்கிறது. எல்லாமே வெகு இயல்பாக, எல்லாமே அவ்வளவு எதிர்பாராதவிதமாக நிகழ்கிறது. (3)

ஆனால் இறப்புக்குப் பின்னான வாழ்வு, அடர்த்தியான பசுந் தண்டுகள் மெல்ல கீழ் இழுக்கப்பட்டு மலர்களின் கிண்ணம் எனத் தோற்றங் காட்டும் பகுதி தம்மைக் காண்பவரைத் தன் ஊதா மற்றும் சிகப்பு வெளிச்சத்தால் மூழ்கடிக்கிறது. கையறு நிலையில், பேச்சற்று, தன்னுடைய பார்வையை எதன் மீதும் கவனத்துடன் குவிக்க இயலாது, புல்லின் வேரை இருட்டில் தடவுவது போல பேராற்றல் வாய்த்தவர்களின் கால்களைத் தொழுபவராக இங்கு ஒருவர் பிறந்திருப்பதைப் போல அங்கும் ஏன் ஒருவர் பிறந்திருக்கக் கூடாது?  எவையெல்லாம் மரங்கள்; எவர் ஆண்கள், பெண்கள் அல்லது அப்படியான பொருட்கள் உள்ளனவா என்பதை ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் வரை ஒருவரால் கண்டறிய முடியாது. இருளும் ஒளியும் ஆன வெளியை ஊடறுக்கும் தண்டுகள் தவிர வேறு எதுவும் மிஞ்சி இருக்காது. ஒருவேளை அதற்கும் சற்று மேலே உயரத்தில் ரோஜா வடிவிலான தெளிவற்ற நிறத்திலிருக்கும் அந்தக் கறை – இளஞ்சிவப்பும் நீலமுமாக இருக்கும் அது – நேரம் செல்லச் செல்ல உறுதியாக வரையறுக்கப்பட்ட ஒன்றாக மாறும். அது என்னவாக மாறும் என்பது எனக்குத் தெரியாது. (4)

ஆனாலும் சுவரின் மீதிருந்த அந்தத் தடம் ஒரு துளையே இல்லை. ஒருவேளை கோடை விட்டுச்சென்ற ரோஜா இலை போன்ற  சிறிய வட்ட வடிவமான பொருளொன்றால் கூட அது உருவாகியிருக்கலாம். அத்துடன் நான் மிக அக்கறையாக வீட்டை வைத்துக் கொள்கிற ஆளில்லை. கணப்பு அடுப்புமாடத்துக்கு மேல் படிந்திருக்கிற அந்த தூசியைப் பாருங்கள். உதாரணத்திற்கு சிலர் சொல்வதைப் போல் இது போன்ற மூன்று மடங்கு புழுதியில்தான் ட்ராய் புதையுண்டிருக்கலாம். துண்டுகளான பானைகள் மட்டுமே முற்றிலுமாக நிர்மூலமாக மறுத்தன என்று ஒருவர் நம்புவதற்கு இடமிருக்கிறது. (5)

ஜன்னலுக்கு வெளியே இருந்த மரம் ஜன்னல் கண்ணாடியை மென்மையாகத் தட்டியது….. நான் அமைதியாக சிந்திக்க, எனக்கான ஒரு வெளியில், எந்த இடையூறும் ஏற்படுத்தப்படாது, என்னுடைய நாற்காலியில் இருந்து எப்போதும் எழ வேண்டியிராது, எந்தப் பகையுணர்வோ தடையோ இன்றி ஒரு விசயத்திலிருந்து இன்னொன்றுக்குள் நழுவ விரும்புகிறேன். மேற்பரப்பின் கடினமான பிரிவுபட்ட உண்மைகளிலிருந்து வெளியேறி ஆழத்துக்குள், வெகு ஆழத்துக்குள் நான் மூழ்க விரும்புகிறேன். என்னை நிலைப்படுத்திக்கொள்ள என் மனதில் தோன்றும் முதல் சிந்தனையைக் கையகப்படுத்துகிறேன்…. ஷேக்ஸ்ப்பியர்…. ஆம்..அவரும் வேறு இன்னொருவரும் கூட ஏற்றவராக இருப்பர். கைவைத்த நாற்காலியில் திடமாக அமர்ந்து நெருப்பைப் பார்த்துக்கொண்டு இருக்கும் அந்த மனிதன் – எங்கோ மிக உயர்ந்த சொர்க்கத்திலிருந்து தொடர்ந்து மழை போல் அவனுடைய மனதில் சிந்தனைகள் பொழிகிறது. தன் முன்நெற்றியைக் கைகளில் புதைத்தபடி அமர்ந்திருக்கும் அவனைத் திறந்திருக்கும் கதவின் வழியாக மக்கள் பார்க்கின்றனர் – ஏனெனில் இந்தக் காட்சி ஒரு கோடைக் கால மாலையில் நிகழ வேண்டியது – ஆனால் இது எவ்வளவு சலிப்பானது,  இந்த வரலாற்றுப் புனைவு! இது என்னைக் கவரவே இல்லை. என் மனதிற்கு உகந்த, என்னுடைய வெற்றிகளை மறைமுகமாகக் குறிக்கும் ஒரு பாதையில் என் சிந்தையைச் செலுத்தலாம் என நினைக்கிறேன். ஏனெனில் அவையே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய சிந்தனைகள். தற்புகழ்ச்சியைத் தாங்கள் கேட்க விரும்புவதில்லை என உண்மையிலேயே நம்புகிற சுண்டெலியின் நிறத்திலுள்ள தன்னடக்கமுள்ளவர்களின் சிந்தனையிலும் கூட இது அடிக்கடி நிகழும். அவை ஒருவரை நேரடியாகப் புகழும் சிந்தனைகள் அல்ல; அதுதான் அவற்றின் அழகு. அச்சிந்தனைகள் இது போன்றவை: (6)

அதன் பிறகு நான் அறைக்குள் வந்து விட்டேன். அவர்கள் தாவரவியலைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். கிங்க்ஸ்வே பகுதியில் ஒரு பழைய  வீட்டினருகே இருந்த புழுதிக் குவியலின் மீது ஒரு பூ எப்படி மலர்ந்து கொண்டிருந்தது என்று நான் பார்த்ததைப் பற்றிச் சொன்னேன். “முதலாம் சார்லசின் ஆட்சிக் காலத்தில் அந்தப் பூவிற்கான விதை விதைக்கப்பட்டு இருக்கலாம். முதலாம் சார்லசின் ஆட்சிக் காலத்தில் எந்த விதமான மலர்கள் மலர்ந்தன?” என்று கேட்டேன் (ஆனால் எனக்கு அதற்கான பதில் நினைவில் இல்லை). ஒருவேளை ஊதா நிற அலங்காரக் குஞ்சங்களுடன் காணப்பட்ட உயரமான மலர்களாக இருந்திருக்கலாம். இந்த நேரம் முழுதும் நான் காதலுடன், திருட்டுத்தனமாக என்னுடைய உருவத்தைப் பற்றிய ஒரு சித்திரத்தை என் மனதுக்குள் வரைந்து கொண்டிருந்தேன். ஆனால் அதனை வெளிப்படையாகப் புகழவில்லை. ஏனெனில் நான் அப்படிச் செய்தால்  அதனை உடனடியாகத் தடுத்து என்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு என் கைகளை நீட்டி நான் ஒரு நூலைத் தேட வேண்டியிருக்கும்.

சொல்லப்போனால், ஒருவர் தன் பிம்பத்தை தனிமனிதத் துதியில் அல்லது வேறுவகையில் கையாளுவது என்பது ஒன்று, விசயத்தை அபத்தமாக்குகிறது அல்லது,  உண்மை அதற்கு மேல் நம்பத் தகுந்ததாக இல்லாமல் போகிறது. இது ஆர்வத்தை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. அல்லது ஒருவேளை அது அவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லையோ? இது மிக முக்கியமான ஒரு விசயம். முகம் பார்க்கும் கண்ணாடி நொறுங்கிவிட்டால் காடுகளின் பசுமைகொண்ட ஆழமான காதல் நிறைந்த உருவம் அங்கு இல்லாமல்  மறைந்து மற்றவர்களுடைய கண்களுக்குத் தெரியக்கூடிய ஓடு மட்டுமே இருக்கிறது. இது எப்படிப்பட்ட புழுக்கமான, ஆழமற்ற, தட்டையான, முக்கியமான ஒரு உலகமாக மாறிவிடுகிறது. வாழக் கூடாத ஒரு உலகம். புறநகர்ப் பேருந்துகளிலும் பாதாளப் புகைவண்டி நிலையங்களிலும் நாம் சந்தித்துக் கொள்ளும் போது நம் கண்களின் தெளிவற்ற தன்மைக்கும் வழுவழுத்த மினுமினுப்புக்கும் காரணமான அந்தக் கண்ணாடிக்குள் நாம் பார்க்கிறோம். எதிர்காலத்தில் புதினங்கள் எழுதுபவர்கள் இந்தப் பிரதிபலிப்புகளின் முக்கியத்துவத்தை மிக அதிகமாக உணர்வார்கள். ஏனெனில் ஒன்று அல்ல, கிட்டதட்ட எண்ணிக்கையில் அடங்கா பிரதிபலிப்புகள் உள்ளன. எழுத்தாளர்கள் தாம் செய்கிற ஆய்வின் ஆழங்கள், தொடர்ந்து செல்கிற கற்பனை உருவங்கள் ஆகியவற்றால் நிதர்சன உலகின் எல்லா விளக்கங்களையும் தங்கள் கதைகளில் புறந்தள்ளி அவற்றைப் பற்றி தாம் எல்லாம் அறிந்ததாகத் தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள். இது கிரேக்கர்களும் ஷேக்ஸ்பியரும் செய்தது போலவே இருக்கிறது. ஆனால் இந்தப் பொதுமைப்படுத்தல்கள் மிகப் பயனற்றவை. இச்சொல்லின் ராணுவத்தன்மை கூடப் போதுமானது.  முன்னணிக் கட்டுரைகளை, மந்திரிகளை, சிறு பிராயத்தில் உண்மையானது, தரமானது என ஒருவர் நினைத்த  இன்னும் பற்பலவற்றை, பெயரற்ற மீளாநரகத்தின் ஆபத்திலிருந்து தப்பித்து ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ள முடியாத விசயங்களை அது நினைவூட்டுகிறது. லண்டனின் ஞாயிற்றுக்கிழமையை, ஞாயிறின் மதியநேர நடையை, மதிய உணவை, இறந்து போனவர்கள் பற்றிப் பேசும் முறையை, உடைகளைப் பற்றிய பேச்சை, பழக்க வழக்கங்களை, யாரும் விரும்பாவிடினும் குறிப்பிட்ட சில மணி நேரம் வரை ஒரே அறையில் அனைவரும் அமர்ந்திருக்கும் பழக்கத்தை என அனைத்தையும் எப்படியோ பொதுமைப்படுத்துதல்  மீளக் கொண்டு வருகிறது.

எல்லாவற்றுக்கும் ஒரு விதி இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் மேசைத் துணிகள் திரைச் சீலை செய்யப் பயன்படும் துணியால் உருவாக்கப்பட்டு அவற்றின் மீது மஞ்சள் நிற அடுக்குகளால் குறியிடப்பட்டு இருக்க வேண்டும். அவை நமக்கு புகைப்படங்களில் காணக் கிடைக்கும் அரசர்களின் அரண்மனை நடைபாதைக் கம்பளங்களைப் போன்றதாக இருக்கும். வேறு வகையான மேசைத் துணிகள் அசலான மேசைத் துணிகள் கிடையாது. நிஜமான விசயங்களான  ஞாயிறின் மதிய விருந்து, ஞாயிறு நடை,  பண்ணை வீடுகள், மேசைத் துணிகள் ஆகியவை முற்றிலும் நிஜமான விஷயங்கள் இல்லையென்றும், அவற்றில் பாதி கற்பனைகள் என்பதையும் கண்டடைகிற போது அது ஒரே நேரத்தில் எவ்வளவு அதிர்ச்சியாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. அத்துடன் அவற்றின் மீது நம்பிக்கையற்றவர்கள் மீள முடியா நரகத்தில் உழல்வர் என்பது முறைகேடான ஒரு சுதந்திர உணர்வு மட்டுமே. அந்த உண்மையான, தரமான பொருட்களின் இடங்களில் இப்போது எவை இருக்கும் என்று நான் வியப்படைகிறேன். நீங்கள் ஒருவேளை பெண்ணாக இருந்தால் ஆணாக மாறி இருக்கலாம். நம் வாழ்வை நிர்வகிக்கிற, தரத்தை நிர்ணயிக்கிற, விடேகர் அட்டவணை நூல் என அனைத்தையும் நிறுவுகிற ஆணின் கண்ணோட்டமானது போருக்குப் பின்னான காலத்தில் நிறைய ஆண்கள் மற்றும் பெண்களின் மனதில் அதன் ஒரு பாதி கற்பனை என்ற எண்ணம் உருவாகியிருப்பதாக நான் நினைக்கிறேன். வழக்கமாக குப்பைக் கூடைகளுக்குள் கிண்டலான சிரிப்புடன் இடப்படும் கற்பனைகள், கருங்காலியாலான உணவுக்கூட நிலை அடுக்குகள், நாயின் காலடித் தடங்கள், கடவுள்கள், பிசாசுகள், நரகம் இன்ன பிறவற்றுடன் விரைவில் ஆணின் கண்ணோட்டமும் போடப்படும் என்று நாம் நம்பலாம். அது நம் அனைவரையும் மயக்கமுறவைக்கும். முறைகேடான ஒரு சுதந்திர உணர்வில் ஆழ்த்திச் செல்லும். சுதந்திரம் என்ற ஒன்று இருந்தால்…(7)

சில விளக்குகளின் வெளிச்சத்தில்  சுவரின் மீதிருந்த  துளை உண்மையில் சுவரில் இருந்து தெறிப்பதாக இருந்தது. அது முழுவதும் வட்ட வடிவிலும் இல்லை. எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அது உணரக்கூடிய ஒரு நிழலை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. அது நான் என் விரலை சுவரின் மீது சுழற்றினால் ஏதோ ஒரு புள்ளியில் உயர்ந்தும் இறங்கியும் சமாதிகள் அல்லது கூடாரங்கள் என அழைக்கப்படுகிற சவுத் டவுண்ஸ் மலைகளில் இருக்கிற மென்மையான கல்லறை போன்ற ஒன்றை வெளிக் காட்டலாம் என்று எனக்கு சுட்டிக்காட்டியது. பெரும்பாலான ஆங்கிலேயர்கள் துக்கத்தை  விரும்புவதைப் போல அவை இரண்டுக்கிடையே நான் சமாதியையே தேர்வு செய்ய வேண்டும். நாம் நடைபயிற்சி செய்யும்போது புல்தரையின் கீழ் நீட்டிக்கொண்டு இருக்கிற எலும்புகளைப் பற்றி நாம் நினைப்பதை இயல்பான ஒன்றாகக் கருதியபடி…. இதைப் பற்றி நிச்சயமாக ஏதாவது ஒரு நூல் இருக்கும். சரித்திர அகழ்வாராய்ச்சியாளன் யாராவது அந்த எலும்புகளை அகழ்ந்தெடுத்து அவற்றுக்கு ஒரு பெயரிட்டு  இருக்கலாம். அகழ்வாராய்ச்சியாளன் என்பவன் என்ன மாதிரியான ஒரு மனிதன்? என நான் வியக்கிறேன்.

நான் அச்சமின்றிச் சொல்வேன். இங்கிருக்கிற முன்னணிக் கட்சிகளின் வயது முதிர்ந்த பாட்டாளிகள் முதல் கட்சியின் மேல் மட்டத்திலிருப்பவர், ஓய்வுபெற்ற படைத்தலைவர் என அனைவரும் நிலத்தையும் மண்ணாங்கட்டியையும் ஆராய்ந்து அண்டை நாட்டு மதகுருக்களுடன் கடிதப் போக்குவரத்தின் மூலம் அவற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அதைத் தம் காலைச் சிற்றுண்டி நேரத்தில் பிரித்துப் பார்க்கிறபோது அவர்களுக்கு தாம் முக்கியமானவர்கள் என்கிற ஒரு உணர்வை அது தருகிறது. அம்புக் குறிகளுக்கிடையே ஆன ஒப்பீடுகள் செய்வது பல அந்நிய நாடுகளுக்குப் பயணிப்பதைப் போலவே தம் நாட்டின் நகரங்களுக்கும் செல்வதை  அவசியமாக்குகின்றன. ப்ளம் பழத்தாலான ஜாம் செய்வதை அல்லது படிக்கும் அறையைச் சுத்தப்படுத்துவதை விரும்புகிற அவர்களின் வயதான மனைவிகளுக்கும் அவர்களைப் போலவே இது அவசியமான ஒன்று. அது சமாதியா அல்லது கூடாரமா என்கிற கேள்வியை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதற்கு அவர்களுக்கு எல்லா காரணங்களும் இருந்தன.   கேள்வியின் இரண்டு தரப்புக்குமான ஆதாரங்களைத் திரட்டுவது என்பது ஒப்புக்கொள்ளக் கூடிய தத்துவார்த்தம் என படைத் தலைவனே உணர்கிறான். இறுதியில் அதைக் கூடாரம் என்று அவன் நம்பும்படி அமைந்தது உண்மைதான். அதைத் துண்டுச் சீட்டு ஒன்றில் எழுதி உள்ளாட்சி மன்றத்தின்  கூட்டத்தில் அவன் படிக்க முயன்றபோது கிளம்பிய எதிர்ப்பில் ஒரு மெல்லிய அடியில் வீழ்த்தப்பட்ட போது அவனுடைய இறுதி யோசனை தன்னுடைய மனைவியைப் பற்றியோ குழந்தையைப் பற்றியோ இல்லை. மாறாக அந்தக் கூடாரத்தைப் பற்றியும் அங்கிருக்கிற அம்புக்குறியைப் பற்றியுமே இருந்தது. அது இப்போது உள்ளூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சீனக் கொலைகாரியின் பாதம், எலிசபெத் மகாராணி காலத்திய ஒரு கையளவு ஆணிகள், டூடர் அரசகாலத்தைச் சேர்ந்த நிறைய களிமண் குழாய்கள்,  ரோமானியப் பானையின் ஒரு சிறு துண்டு, நெல்சன் அருந்திய ஒரு மதுக் குப்பி ஆகியவற்றின் இடையில் இருந்தது – இவையெல்லாம் எவற்றை நிரூபிக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. (8)

இல்லை! இல்லை! எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எதுவும் அறியப்படவில்லை. இந்த நொடியே நான் எழுந்து சுவரின் மீதுள்ள அந்தத் தடம் உண்மையில் என்னவென்று நிச்சயிக்க வேண்டுமெனில் நாம் என்ன சொல்ல வேண்டும் – இருநூறு ஆண்டுகளுக்கு முன் உட்செலுத்தப்பட்ட பூதாகரமான ஒரு பழைய ஆணியின் தலைப்பகுதி, பொறுமையாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட பல தலைமுறைப் பணிப்பெண்களின் காரணமாக, இப்போது சுவர்ப் பூச்சுக்கு மேலே தன் தலையை நீட்டி கணப்பு அடுப்பு ஏற்றப்பட்ட வெண்ணிறச் சுவராலான இந்த அறையில் நவீன உலகத்தை முதன் முதலில் பார்க்கிறது – இதில் எனக்கு என்ன பயன்?

அறிவா அல்லது  மேற்கொண்டு யூகம் செய்வதற்கான விசயமா? என்னால் அசையாது அமர்ந்தும் நின்றுகொண்டும் சிந்தனை செய்ய முடியும்.  அறிவு என்பது என்ன?

சூனியக்காரர்களின் வழித்தோன்றல்களை, குகைகளிலும் காடுகளிலும் பதுங்கி வாழ்ந்து மூலிகைகளைக் காய்ச்சிக்கொண்டு, மூஞ்சூறுகளை விசாரித்தபடி  விண்மீன்களின் மொழியை எழுதிக் கொண்டிருந்த துறவிகளைக் காத்து வந்தது அதிகக் கல்வியறிவு பெற்றவர்களே. நம்முடைய மூடநம்பிக்கைகள் குறையும்போது அவர்களுக்கு நாம் தரும் மதிப்பு குறைந்து அழகின் மீதும் மன ஆரோக்கியத்தின் மீதும் மரியாதை எழுகிறது…..ஆம். ஒருவர் மிக இனிமையான ஒரு உலகைக் கற்பனை செய்துகொள்ளலாம். பரந்த, அமைதியான ஒரு உலகம். அதன் திறந்த வயல்களில் சிகப்பு ஊதா வண்ணப் பூக்கள் மலர்ந்திருக்கும். பேராசிரியர்கள், வல்லுநர்கள், காவலர்களின் தோற்றத்தில் இருக்கிற பணியாளர்கள் இல்லாத ஒரு உலகம். ஒரு மீன் தன் செதில்களால் நீரை வெட்டுவது போல ஒருவர் தன் எண்ணங்களால் வெட்டக்கூடிய ஒரு உலகம். நீர் அல்லியின் தண்டுகளை மேய்ந்துகொண்டு வெண்கடலின் முட்டைகள் கொண்ட கூடுகளின் மீது தொங்கியபடி…… உலகின் நடுப் பகுதியில் வேர் பரப்பியுள்ள இந்த இடத்தில் அழுக்குத் தண்ணீரின் மீது திடீரெனத் தோன்றும் ஒளிக்கற்றைகளையும் பிரதிபலிப்புகளையும் பார்த்துக் கொண்டு மூழ்குவது எவ்வளவு மன அமைதியைத் தருகிறது – விடேக்கரின் ஆல்மனாக் இல்லாமல் இருந்தால், ப்ரெசிடண்சி அட்டவணை இல்லாமல் இருந்தால்…(9)

நானே துள்ளி எழுந்து சுவரின் மீதிருக்கும் அந்தத் தடம் உண்மையில் ஆணியா, ரோஜா இலையா,மரத்தில் ஏற்பட்டுள்ள விரிசலா என்பதைப் பார்க்க வேண்டும் (10)

இங்குதான் இயற்கை தன்னுடைய பழைய விளையாட்டான தற்காப்பை விளையாடுகிறாள். அவளுடைய எண்ணவோட்டத்தில் இந்த சிந்தனையின் நீட்சி, ஆற்றல் அழிப்பு என்ற வெற்று அச்சத்தையும்  மெய்த் தன்மையுடனான மோதலையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் விடேக்கரின் ப்ரெசீடென்ஸ் அட்டவணையை நோக்கி யாராவது தங்களுடைய சுட்டு விரலை எப்போதாவது நீட்ட முடியுமா? கேண்டர்பெரியின் பேராயரை பிரித்தானியாவின் உயராட்சித் தலைவர் பின்பற்றுகிறார்.  பிரித்தானியாவின் உயராட்சித் தலைவரை நியூயார்க்கின் பேராயர் பின்பற்றுகிறார். ஒவ்வொருவரும் யாரையாவது பின்பற்றுகிறார்கள். விடேக்கரின் தத்துவமும் அதுதான். இதில் உயர்வான விசயம் என்னவெனில் யார் யாரைப் பின்பற்றுகின்றனர் என்று அறிவது. விடேக்கர் அறிந்திருக்கிறார், இயற்கை நம்மை ஆத்திரமூட்டாது ஆலோசனையும் ஆறுதலும் தருகிறது. உங்களால் ஆறுதல் அடைய முடியவில்லையெனில் இந்த மணித்துளியின் அமைதியை நொறுக்கிவிட்டு சுவரின் மீதுள்ள அந்தத் தடத்தைப் பற்றி யோசிக்க வேண்டியது தான். (11)

செயல்படத் தூண்டுகிற எந்த எண்ணத்தையும் அது கிளர்ச்சியையோ அல்லது வலியையோ தரும் என்ற அச்சத்தை ஊட்டுவதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வருகிற இயற்கையின் விளையாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே செயல்படுகிற ஆண்கள் மீது, சிந்திக்காது செயல்புரிகிறவர்கள் என நாம் கருதும் ஆண்களின் மீது நமக்கு ஒரு சிறிய இகழ்ச்சி தோன்றுகிறது. ஏற்பில்லாத சிந்தனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க சுவரின் மீதுள்ள ஒரு தடத்தைப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. (12)

இப்போது என் கண்கள் அதன் மீது நிலைத்திருக்கும்போது கடலின் மீது மிதக்கும் மரப் பலகையை நான் பற்றிக் கொண்டதாக உணர்ந்தேன்.  மெய்த்தன்மை குறித்த மனநிறைவு தரும் ஒரு உணர்வு எழுந்து உடனே அது இரண்டு பேராயர்களையும் பிரித்தானியாவின் உயராட்சித் தலைவரையும் நிழல்களின் சாயைகளாக மாற்றுகிறது. இங்கிருப்பது நிச்சயமான மெய்யான ஒன்று. நல்லிரவில் அதிபயங்கரக் கனவு கண்டு எழுந்து கொண்ட ஒருவன் அவசரமாக விளக்கைப் போட்டு அமைதியாக படுத்துக்கொண்டு பெட்டிகளின் பேழைகளை, மனதின் உறுதித்தன்மையை, மெய்ம்மையை, பச்சாதாபமற்ற உலகைத் தொழுவது என்பது நம்மைத் தவிரவும் இவ்வுலகில் சில விஷயங்கள் இருக்கின்றன  என்பதற்கான சாட்சி. அதைத்தான் உறுதியான ஒன்று என ஒருவன் நினைக்க விரும்புகிறான். மரச் சட்டம் என்பது நினைத்துப் பார்க்க இனிமையான ஒன்று. அது மரத்திலிருந்து வருகிறது; மரங்கள் வளர்கின்றன, அவை எவ்வாறு வளர்கின்றன என்று நமக்குத் தெரியாது. அவை நம்மைக் கவனியாது பல வருடங்களாக  நந்தவனங்கள், காடுகள், நதிப்புறங்கள் என ஒருவருக்கு எவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கப் பிடிக்குமோ அங்கெல்லாம் வளர்கின்றன. வெப்பமான மதிய வேளைகளில் பசுக்கள் தங்கள் வாலைச் சுழற்றி விசிப்பொலி ஏற்படுத்துகின்றன;  நதிக்குள் குதிக்கும் காட்டுக்கோழி நீருக்கு வெளியே வரும்போது அதனுடைய இறகுகள் பச்சை நிறமாக மாறிவிடும் என ஒருவர் எதிர்பார்க்கும் அளவுக்கு நதிகளுக்கு அதீத பச்சை வர்ணம் பூசி இருக்கிறார்கள். ஓடை நீரில் மீன்கள் தம் சமநிலை இழக்காது எதிர்த்து நீந்துவது கொடிகள் வெடித்துச் சிதறுவது போலிருப்பதாக நான் நினைத்துக்கொள்ள விரும்புகிறேன். நீர் வண்டுகள் நதிப்படுகைகள் மீதுள்ள குவிமாடங்களின் மீது மெதுவாக சவாரி செய்கின்றன. நான் மரத்தைப் பற்றியே நினைக்க விரும்புகிறேன்:-

முதலில் மனதுக்கு நெருக்கமான கிளர்ச்சியூட்டும் காய்ந்த மரமாக மாறுவது; அடுத்தது புயலால் அரைபடுவது; பிறகு சுவையான வண்டல் மண்ணிலிருந்து மெல்ல வெளிவரும் தளிர். எல்லா இலைகளையும் ஒடுக்கி மூடிக்கொண்டு, மென்மையான எதையும் நிலவின் இரும்புத் தோட்டாக்களுக்கு வெளிக்காட்டாமல், பூமியின் மீது ஒரு நிர்வாண பாய்மரமக் கம்பம் இரவு முழுக்க உருண்டபடி இருப்பதையும் குளிர்கால இரவுகளில் வெட்ட வெளியில் நின்றபடி நான் நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். பறவையின் பாடல்கள் ஜூன் மாதத்தில் மிகவும் சத்தமாகவும் வினோதமாகவும் ஒலிக்கும். கடும் முயற்சியுடன் மரப்பட்டைகளின் மீது மெல்ல மெல்ல முன்னேறிச் செல்லும் பூச்சிகளின் குளுமை வாய்ந்த பாதங்களோ அல்லது மென் பச்சை இலைகளைப் பந்தலாக அணிந்திருக்கிற மரத்தை வைரத்தை வெட்டியது போன்ற சிவந்த  கண்களால் நேர்கொண்டு பார்க்கிற சூரியனோ எப்படியெல்லாம் தாக்கும்…… பூமியின் பரந்த குளிர் அழுத்தப் பிரதேசத்தின் கீழ் ஒவ்வொரு இழையாக முறிந்து விழுகிறது. பிறகு இறுதியில் வீசும் புயல் மிக உயரமான கிளையை முறித்து பூமியின் ஆழமான பகுதியில் அதை மறுபடி புதைக்கிறது. அதன்பிறகும் வாழ்வு முடிந்து விடவில்லை. படுக்கை அறைகளில், கப்பல்களில், நடைபாதைகளில், ஆண்களும் பெண்களும் தேனீர் அருந்திய பிறகு தங்களுடைய சிகரெட்டைப் புகைத்தபடி இளைப்பாறும் அறைகளில் என உலகம் முழுதும் காணக் கிடைக்கிற பொறுமை நிறைந்த வாழ்க்கை மரத்துக்கு இன்னமும் கோடிக்கணக்கில் மீதமிருக்கிறது.  முழுக்க அமைதியான மகிழ்ச்சியான நினைவுகளால் நிரம்பியது இந்த மரம். தனித்தனியாக ஒவ்வொன்றைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன். ஆனால் இடையில் ஏதோ ஒன்று குறுக்கிடுகிறது. நான் எங்கிருந்தேன்?
இவையெல்லாம் எவற்றைக் குறித்து? ஒரு மரம் ? ஒரு நதி? தி டவுண்ஸ்?  விடேக்கரின் ஆல்மனாக்? ஆஸ்ஃபோடல் பயிரிடப்பட்ட வயல்கள்? எனக்கு எதுவும் நினைவில் இல்லை. எல்லாப் பொருட்களும் நகர்ந்து, விழுந்து, நழுவி, மறைந்து கொண்டிருக்கின்றன…. எல்லா விஷயங்களிலும் பரந்துபட்ட கேடான ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. யாரோ ஒருவர் என் மீது நின்றுகொண்டு சொல்கிறார் (13)

“நான் செய்தித்தாள் வாங்குவதற்காக வெளியே செல்கிறேன்” (14)

“சரி” (15)

” செய்தித்தாள் வாங்குவதால் எந்த நற்பயனுமில்லை. அதனால் எதுவும் ஆகப்போவதில்லை… இந்தப் போரைச் சபிக்கிறேன். நாசமாய்ப் போக! அதுபோலவே நம்முடைய சுவரின் மீது ஏன் ஒரு நத்தை  இருக்கிறது என்கிற காரணம் எனக்குப் புரியவில்லை” (16)

ஓ! சுவரின் மீது இருக்கிற அந்தத் தடம்! அது ஒரு நத்தை!.

எழுத்தாளர் குறிப்பு :

வெர்ஜினியா வூல்ஃப் ஒரு ஆங்கில பெண் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் பதிப்பாளர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். Mrs.Dollaway (1925) மற்றும் To the Lighthouse(1927) ஆகிய இரு நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close