கட்டுரைகள்

சூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”

ஹரிஹரசுதன் தங்கவேலு

Writing is the painting  of the voice – Voltaire

உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியன் வின்சென்ட் வான் கோ கதை தெரியுமல்லவா? எல்லா தலை சிறந்த படைப்பாளிகளின், ஞானிகளின் வாழ்க்கை போலத் தான் வின்சென்ட் வான் கோவின் வாழ்க்கையும், என்ன, இரண்டுமே ஒரு சேர அமையப் பெற்ற ஒரு அசாத்திய திறமையாளன் வான் கோ, ஆகவே மற்றவர்களை விடத் துயரங்களும், வறுமையும், உளைச்சல்களும் சற்று மிகுந்தே இருந்தன. தன் அத்தனை உணர்வுகளையும் ஓவியங்களாக வரைந்து தள்ளினான் வான் கோ, தூரிகையும் வண்ணங்களும் வாங்க வசதியற்று தன் சகோதரரின் கடன் பெற்று வரைந்தான். எட்டு வருடங்கள் செயல்பட்டு, 2000 -த்திற்கும் மேற்பட்ட அதி அற்புத ஓவியங்களை வரைந்த வாங்கோவினால் தன் ஒரு ஓவியத்தைக் கூட விற்க முடியவில்லை, துயரம் தாளாமல், மன உளைச்சலால் தன் காதை அறுத்துக் கொண்டார் வான் கோ. ஒரு ஞானி, படைப்பாளி, அசாத்திய திறமையாளன், தன்னையே தண்டித்துக் கொண்ட துயரிலிருந்து மீண்டால் எங்குச் செல்வான், யாரிடம் சொல்வான், மீண்டும் படைப்பிற்கே செல்வான். ஆம் காதறுந்த தனது நிலையையும் ஓவியமாக வரைந்தான் வான் கோ . அதையும் யாரும் வாங்கவில்லை, ஒரு கட்டத்தில் கடுப்பான வான் கோ, போங்கடா மயிறு என ஒரு துப்பாக்கியை எடுத்து தன் நெஞ்சு பகுதியில் வைத்து ஒரே அழுத்து, புல்லட் நெஞ்சைத் துளைத்து முதுகுத் தண்டை உரசி நின்றுவிட்டது. வாங்கோ இறக்கவில்லை, அங்கிருந்த நடந்தே மருத்துவமனையை அடைந்த வாங்கோவிற்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லை, தன் புகை குழலை எடுத்துப் பற்ற வைத்த வாங்கோ அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த நிலையில் 30 மணி நேரம் கடந்து இறந்து போனார். இறப்பதற்கு முன் அவர் இறுதியாக உதிர்த்த வார்த்தைகள். ‘The Sadness will last forever ‘.

இவ்வளவு துயரில், உளைச்சலிலிருந்த ஓவியனின் படைப்பு எப்படியிருக்கும், மிக அடர்த்தியாக, வலி நிறைந்ததாக, சோகமே உருவாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. வாங்கோவின் ஓவியங்கள் பெரும்பாலும் வண்ண குவியலாக, எளிமையாக, நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் கண்களை அகல விரித்து உங்கள் மனதிற்குள் ரம்மியம் நிரப்பும். ஆம், வான் கோவின் சோகங்கள் கூட வண்ண மயமானவை. சரி இதற்கும் சூப்பர் டீலக்ஸ் விமர்சனத்திற்கும் என்ன தொடர்பு ?

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தேடிக் கொண்ட ஆரண்ய காண்டம் இயக்குநரின் இரண்டாவது படைப்பாக டீலக்ஸ் வெளியாகியுள்ளது. ஒரு தரப்பினரால் படம் தமிழில் ஒரு உலக சினிமா, வேற லெவல் எனக் கொண்டாடப்படுகிறது, மறு புறம் இதுவா கலாச்சாரம், காமம் பற்றிப் பேசலாமா, இழுவை, ஒன்னும் புரியலை என்ற ரீதியில் சாடப்படுகிறது, அப்படி என்ன தான் செய்கிறது சூப்பர் டீலக்ஸ,

நான்கு கதைகள், இதில் மூன்றின் ஆரம்பம் தோல்வியடைந்த உறவுகள், ஏதோ ஒரு விதத்தில் தன் இணையை ஏமாற்றிப் பிரிந்து சென்ற/ வாழும் இவர்களை, போகிற போக்கில் அசால்ட்டாக மூன்று விடலைகள் தங்களுக்குத் தெரியாமல் இவர்கள் சேர்வதற்கு, அன்பை உணர்வதற்கு காரணமாக ஆவது தான் கதை. இதில் எவ்வளவு புத்திசாலித்தனத்தையும், பிரமிப்பையும் , வண்ண சேர்க்கைகளையும் ( வாங்கோவே தான் )கொடுக்க முடியுமோ அவ்வளவு தந்திருக்கிறார் தியாகராஜன். ஒரு பார்வையில் இது அத்தனையும் விளங்கக்கூடிய படைப்பல்ல இது, நிச்சயம் ஒரு பார்வையில் நாம் ஏற்று விடக் கூடிய கருத்துக்களும் அல்ல, முரண்படுவோம், லேயர்கள் புரியவில்லை, தியரிகள் பிடிபடவில்லை என்று பொய் பேசுவோம், படைப்பை நிராகரி என வன்மம் காட்டுவோம், ஆனால் மறு பார்வையில், அதைத் தொடர்ந்த பார்வைகளில் நிச்சயம் ஒரு பெரும் மாயம் நிகழும், நம் ஈகோ நூல் அறுபட்டு இந்த படைப்பின் மகத்துவம் புரியும்.

நான்கு கதைகளின் பிரதான மாந்தர்களும் தத்தம் ஆரம்ப காட்சிகளில் ஏதோ ஒரு பெரு மகிழ்ச்சிக்காக/ அனுபவத்திற்காகத் தயாராகிறார்கள். வேம்பு, காஜி பாய்ஸ், ராசுக்குட்டி, லீலா (டிவியில் ), அற்புதமாக மிஸ்கின். பேரனுபவத்திற்குக் காத்திருக்கும் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி நிகழ்கிறது. இவர்கள் அனைவருக்குமான இரண்டாவது நிகழ்வு இது. காதலன் இறந்து விடுகிறான், டிவி உடைகிறது, பார்ன் ஸ்டார் அம்மா, திருநங்கையாக மாறிய அப்பா தெரிய வருதல், விபத்தில் சிக்கிய மகன், என அத்தனை கதாபாத்திரங்களும் அதிர்ச்சியாகிறார்கள், பிறகு இதிலிருந்து மீள, அதை எதிர்கொள்ள இவர்கள் பயணம் துவங்குகிறது, அது அடுத்தடுத்த சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது, எல்லாம் அதன் உச்சம் அடையும் போது இந்த சிக்கல்கள் சேர்ந்தே அத்தனைக்கும் ஒரு தீர்வை வழங்குகிறது.

கதாபாத்திர உருவாக்கத்தில் முரண்களைக் கவனிக்க வேண்டும், ஆண்டவரே ஆண்டவரே என அனுதினமும் உருகித் துடிப்பவரின் மனைவி பார்ன் கதாநாயகி. தான் விரும்பியபடி பெண்ணாக தனை மாற்றி திரும்ப வரும் ஆணுக்கு,அப்பாவை பள்ளிக்கு அழைத்துச் சென்று காட்ட காத்திருக்கும் மகன், டிவியில் ஒரு துணுக்கு உடைந்ததிற்கே ஊளையிட்டு அழுகும் அப்பாவி, விஷத்தைத் துணிவாக டீயில் கலப்பது, நடிப்பு பயிற்சி பெறும் கணவனிடம், அசால்ட்டாக ஏமாற்றும் மனைவி. உலகின் ஆகக் கொடிய வக்கிரங்களைச் செய்து விட்டு, அட்டைப் பூச்சியைக் காப்பாற்றும் பெர்லின் எனத் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு முரண்பட்ட பாத்திர வடிவமைப்பு.

இதில் நடித்த பிரதான பாத்திரங்கள் ஒன்றை முடிவு செய்து விட்டே இதில் பங்கேற்றிருக்கிறார்கள், நம் திரை வாழ்வின் ஆகச் சிறந்த வாய்ப்பு இது, நம் திறமையின் உச்சத்தை , நம் ஆன்மாவின் சிறந்ததை இந்த இயக்குநர் வெளிக்கொணர்வார் என்ற உள்ளமெங்கும் நம்பிக்கை மின்ன நடித்திருப்பார்கள், நம்பிக்கை வீண் போகவில்லை, சில காட்சிகளில் மிரண்டு விட்டேன். கை தட்டவே மறந்து போனேன். ஷில்பா அத்தனை கோபத்தில் சாபமிடும் காட்சி, ”லீலா உங்க பிள்ளைக்குன்னா நான் கொடுத்திருப்பேன் தெரியுமா?” என மருத்துவமனை வார்டில் உதவி கேட்கும் காட்சி, விடலைகளின் அறிமுக காட்சியும் ” அந்தியிலே வானம் பாடல் “ பயன்படுத்திய விதம், சப்வே காட்சி, காரில் இருந்து இறங்கும் ஷில்பாவை கண்டவுடன் அவர் மனைவியின் அதிர்ச்சியும் கண்களில் வழியத் தயாராகும் கண்ணீருடன் நிற்கும் காட்சி, தன் Religious OCD யில் இருந்து விலகி, நம்பியது அறுபட்டு, கத்தி கதறி அதிலிருந்து விடுபட மிஷ்கின் முயற்சிக்கும் அந்த காட்சி, இதன் ஆரம்ப நொடிகளில், “ போச்சு.. இந்தாளு..ஆஊ ன்னா கேமரா பார்த்து கண்ண மூடாம ஐஞ்சு நிமிஷம் பேசியே இருப்பான் “ என மொபைல் நோண்ட துவங்கினார் பக்கத்துக்கு இருக்கை ஆள். மிஸ்கின், “ஆண்டவரே, மன்னியும் ஆண்டவரே என்று கதறும் பொது, ப்ச் என்று மேலும் தலையைக் குனிந்து கொண்டார், மிஸ்கின் விடவே இல்லை, தொடர்கிறார் , பதறுகிறார், கதறுகிறார், கிட்டத்தட்ட முழுமையாக மூன்று நிமிடங்கள் திரையரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையும் தன் நடிப்பால் மிரட்டுகிறார், விக்கித்து விட்டேன் , காட்சி முடித்ததும் அருகில் இருப்பவரைப் பார்த்தேன்.. த்தா ..என்னமா நடிக்கிறான் இந்தாள்..பயந்துட்டேன் என அவர் சொல்லவில்லை, ஆச்சரியத்தில் இன்னும் திறந்திறத்த அவர் வாய் புரிய வைத்தது.

பிரதான கதாபாத்திரங்களை விடுங்கள், சில நிமிடங்கள் வரும் இதர பாத்திரங்களைச் செம்மைப் படுத்தவே மாதக் கணக்கில் வருடக் கணக்கில் உழைத்திருக்கிறார் இயக்குநர். மப்டியில் விசாரிக்க ஆயத்தமாகும் ஏட்டையா, ‘நானே சாட்சி’ ராமசாமி, டிவிடி கடை ஆயா, Fuck Fuck சிறுவன், “ ஒரு நா தாலிய கட்டிட்டு, ஆயுசு பூரா தாலியறுக்கிறான்டா “ என கிழவரை வசைபாடும் கிழவி என நம்முடன் பயணிக்கும் சக மனிதர்களை, ஆனால் நாம் கவனிக்க மறந்த மனிதர்களை கொணர்ந்து நம் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர்.

இதன் உச்சம் எது தெரியுமா, GO GO GO என்று விடாமல் சொல்லும் தலைமையாசிரியர், எத்தனை நேர்த்தி, எவ்வளவு மாடுலேஷன் திரையரங்கில் இருந்தாலும் பள்ளியில் நின்று கொண்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்தார். இந்த படைப்பிற்கு ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது என்பதை காட்சிகளில், கதாபாத்திரங்களில் நிறைந்துள்ள இந்த துல்லியம் நமக்கு நிச்சயம் உணர்த்துகிறது.

நீங்கள் கதையாகப் பார்த்தாலும் சரி , காட்சி காட்சியாகப் பிரித்தாலும் சரி , திரைக்கதையில் ஒரு அசாத்திய புத்திசாலித்தனம் இழையோடுவது பிடிபடும், ஹைபர்லின்க் சினிமா, கேயாஸ் தியரி, Auterism, Queer theory எனப் பலகட்ட புரிதல்களை நிகழ்த்தும், இயக்குநரே இதெல்லாம் இல்லை என்று சொன்னாலும் படம் முடிந்த பின், ஒவ்வொரு பார்வையாளனிடத்தும் ஒரு கேள்வியை, ஒரு தேடலை விதைக்கிறது சூப்பர் டீலக்ஸ், அதைத் தேடிக் கண்டடைபவர்கள் படத்தைக் கொண்டாடுகிறார்கள், ஒரு படம் பாத்துட்டு அது புரிய பத்து கட்டுரை படிக்கணுமா, அது ஆகாது, படம் வேஸ்டு என ஒரே வார்த்தையில் சிலர் விடை பெறுகிறார்கள். இரண்டுமே தவறில்லை, நீங்கள் யாரென உங்களுக்கே காட்டும் ஒரு படைப்பு / படிப்பு, சூப்பர் டீலக்ஸ்.

படத்தின் ஆன்மா, உயிர், உணர்வு அத்தனையும் ஒளிப்பதிவு தான், ஒளிப்பதிவு என்பதை விட ஒவ்வொரு காட்சியும், கோணமும் ஒரு ஓவியம் என்றே கூறவேண்டும், வேம்பு காட்சிகளில் பச்சை மற்றும் அரக்கு, காஜிகளின் ஆரம்ப காட்சிகளில் மஞ்சள், ஷில்பாவின் வீடு முழுவதும் மிகை நீலம் மற்றும் சிவப்பு என வண்ணங்களால் நிறைத்திருக்கிறார்கள், இந்த நீல பின்னணி அனைத்துமே வாங்கோவின் ஓவியங்களை நினைவு படுத்தியது, நீங்கள் ஏற்றாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஷில்பாவின் புடவை கூட வாங்கோவின் Branches of an almond tree ஓவியத்தின் பாதிப்பாக இருக்கலாம் என்று தோன்றியது.

ஒரு படைப்பு பிடித்துப் போனால் இப்படித்தான், எதையோ எதையோ இணைக்கத் தோன்றும், எல்லாவற்றையும் ரசிக்கத் தோன்றும்.

படத்தில் ஒரு காட்சியில் போஸ்டர்கள் நிறைந்த ஒரு சுவரின் ஒரு ஓரத்திலிருந்து மறு ஓரத்திற்கு ஷில்பாவும் அவர் மகன் ராசுக்குட்டியும் பேசியபடியே நடந்து வருவார்கள், ஷில்பா புடவை தலைப்பு மகன் தலை மீது படர்ந்திருக்கும், தலையை அதனுள் நுழைத்து நடந்து கொண்டே ராசுக்குட்டி கேட்கும் கேள்விகள், அந்த புடவையின் வழவழப்பை, அது தரும் வருடலின் சுகத்தை, அதனுள் கலந்திருக்கும் ஒரு அன்னையின்/தந்தையின் அரவணைப்பை மனமெங்கும் பரவச் செய்தது. காட்சிகளில் பல கதை சொல்லியிருக்கிறார்கள், கவிதை சொன்னது இதுவே முதல் முறை. One of the best scene of Tamil/World cinema.

சிறிது தயக்கத்துடனே கேட்கிறேன், இப்படியொரு அற்புதங்கள் நிறைந்த படைப்பை ஏன் சாடுகிறீர்கள்? செக்ஸ் இதில் ஒரு ஆரம்ப கருவி மட்டுமே அதைத் தொடர்ந்த சிக்கல்களில், பிரிந்து கூடும் மனங்களில், உன்னை எனக்கு என பிடிக்கலை என கணவன் மனைவி இருவரும் மனம் திறக்கும் இடங்கள் சமூகத்திற்கு தேவையே இல்லையா, கதைக்கே உண்டான ஒரு இயல்பான தொய்வு இரண்டாம் பாதியிலிருந்தது, ஏற்கிறேன். ஆனால் நீங்கள் சற்று புரண்டு அமரும் போதெல்லாம், தமிழ் சினிமா கனவில் கூட நினைத்துப் பார்க்காத காட்சிகள் வந்து உங்களைப் பிரமிக்க/ நடுங்க வைக்க வில்லையா, படம் பிடிக்கவில்லை எனக் கொந்தளித்தால் நியாயம், புரியவில்லை என்று நிராகரிப்பது, படு துரோகம். சோகங்கள் முடிவதே இல்லை என்று சொல்லி இறந்த வின்சென்ட் வாங்கோவில் ஓவியங்கள், அவர் இறப்புக்குப் பின் 100 மில்லியன் டாலர்களில் விலை போனது, வாழ்ந்த போது அவர் படைப்புகளை மதிக்காத உலகம், அவர் இறந்த பிறகு அவை விலை மதிக்க முடியாதவை என்று கொண்டாடியது. வான் கோ நிறைவு செய்யாமல் பாதியில் நிறுத்திய ஓவியங்களை எத்தனை மில்லியன்கள் கொடுத்தாலாவது வாங்க அலைந்தது ஒரு கூட்டம், இறந்த பிறகு படைப்பாளிகளைக் கொண்டாடுவது என்ன நியாயம்? இருக்கும் போதே கொண்டாடுங்கள்.

என்னைப் பொறுத்தவரை ஷில்பா தான் தியாகராஜன் குமாரராஜா, பத்து வருடங்களாகக் காணாமல் போன திறமையாளனுக்காக காத்திருக்கும் ராசுக்குட்டிகள் ரசிகர்கள், பட அறிவிப்பு செய்தி வந்ததும், Welcome TK போர்டு மாட்டி கண்கள் விரிய இணையக் கதவுகளைத் திறந்து பார்த்திருப்போம். எத்தனை வருடங்கள் ஆனாலும் சார், தியாகராஜன் எப்படி வந்தாலும் சரி, யாராக வந்தாலும் சரி, டிங் டாங் என்ற விளி கேட்டதும், கதவைத் திறந்து, கையை தட்டி, பரிபூரண அன்பில், கண்கள் பனிக்க கட்டியணைத்துச் சொல்லுவோம்,

“ப்பா , சூப்பருப்பா நீ ….வாய்ப்பே இல்ல” .

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

3 Comments

  1. “ப்பா , சூப்பருப்பா நீ ….வாய்ப்பே இல்ல

Back to top button