சிறுகதைகள்
Trending

சுண்டைக்காய்

கமலதேவி

மீவெயில் காலத்தின் நடுப்பகல் மெல்ல நகர்ந்து சாய்வெயில் எழும் நேரத்தில் அந்த பிளாட்டினா நாற்சந்தியிலிருந்து மேற்கு சந்திற்குள் நுழைந்தது.வண்டி ஓட்டுபவனின் கண்கள் சுருங்கிய நேரத்தில் , சுண்டைக்காய் செடி அவர்களின் கால்களில் கீறி கீழே சாய்ந்தார்கள்.

விழுந்த இடத்திலேயே கிடந்து,“அந்தக் கொடுவாளை எடுத்துட்டு வாடான்னா..”என்ற கோட்டப்பாளையத்தானின் குரல் அமைவதற்குள், வண்டி ஓட்டிய சுப்ரமணி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு நாலு வீடுகள் தள்ளியிருந்த தன் வீட்டிலிருந்து கொடுவாளை எடுத்து வந்தான்.கிணற்றில் நீரிறைத்து அடிவாங்கிய ஈயவாளியைப் போன்ற பிளாட்டினா ஒருக்களித்துக் கிடந்தது.

சுண்டைக்காய்செடி தன் கிளை இலைகளை விரித்து தானும் ஒருவிருட்சம் என்று காட்டியபடி சந்தின் குறுக்கே விழுந்தது.சத்தம் கேட்டு வளியே வந்த சோலையம்மா சிறு வெண்பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், முற்றிக் காய்ந்த சில விதைக்காய்களுமாகக் செடி கிடப்பதைப் பார்த்து, “அய்யோ…பாவிங்களா…” என்றபடி கையிலிருந்த அரிவாள்மனையை குந்தானியின் கீழிருந்த பலகைக் கல்லில் போட்டபடி வந்தாள்.

“சந்துங்கறது ஆளுக போகவரதுக்குதான்..பாதையில நீ மரம் வளப்பியாம்மா..”

“பழிகாரப் பயலுகளா…அது செடிடா…”

“செடியோ.. மரமோ… யாரு உன்ன இங்க வளக்கச் சொன்னா…எங்காலப்பாரு…” என்று தன் காலில் இருந்த கீறலைக் காட்டினான்.இன்னொருவனும் தன் காலைக் காட்டினான்.

வாயைக் கோணியபடி,“க்கூம்..வெட்டிக்கிட்டு குத்திக்கிட்டு சாவற கழுதைங்களுக்கு இது ஒருகேடு..”என்று முனகிய சோலையம்மா, “எஞ்செடி காப்பாத்துச்சுன்னு சொல்லு..இன்னேரம் சுவத்துல இடிச்சு விழுந்திருப்பிங்கடா….இன்னிக்கி எம்பொழப்புதான் கெடச்சுதா..”என்றாள்.

“என்னது..என்ன சொன்ன..யாருக்கு வண்டி ஓட்டத்தெரியாது? நாங்க ரேசுக்கு போவத்தக்கன தலகீழா ஓட்டுவம்..பாக்கறியா?”

“ நீ எங்க போனா எனகென்னாடா..அய்யோ..எஞ்செடிய அடியோட     சாச்சுப்புட்டீகளேடா…..நல்லாயிருப்பீங்களா…நீங்களும் சாஞ்சுதாண்டா போவீங்க,”

“யாரு…நாங்களா..இங்கப்பாரு சாஞ்சு தான் நிக்கறோம்..நீ நில்லுபாப்பம்,”

கோட்டப்பாளையத்தான் மிகக்கோபமாக நெஞ்சில் கைவைத்தபடி , “எங்களுக்கு வாக்குசம் விடறியா…எம்மேல கருப்பன் இருக்கான்.நான் விடறேம் பாரு…அடுத்த வெய்யகாலத்துக்கு  நீ இருக்கமாட்ட..அவ்வளோதான் உங்கணக்கு முடிஞ்சுது..”என்றான்.

“யாரது எங்கம்மாவுக்கு தேதி வக்கிறது,”என்று உள்ளிருந்து வந்த மோகனா அவர்களைப் பார்த்ததும் நிதானித்தாள்.

“யம்மா…போனா போவுது வுடு.பாதையில இருக்கவுந்தானே..”என்றாள்.

“என்னா ரிவர்ஸ்கீர் போடற..பேசேன்..பேசித்தாம்பாறேன்…பேசுங்கறனில்ல..” என்றவனைப் பார்த்து பற்களைக் கடித்தபடி திரும்பிக்கொண்டாள்.

“செடிய வெட்டிப்புட்டீங்களேன்னு பேசிப்புட்டேன்..போய்ப் படுங்கடா…”

சுப்ரமணி,“நீ இப்ப பேசியே ஆவனும்..என்னாத்துக்கு தண்ணி தெளிக்கற..பேசு..”என்று சிரித்தான்.

மெதுவாக தெருஆட்கள் வீட்டின் வாசலில் வந்து நின்றார்கள்.பேச்சு வளர்ந்து கொண்டேயிருக்க அந்த நாற்சந்தியை கூட்டம் வளைத்தது.சுண்டைக்காய் செடி மெதுவாக வதங்கி சோர்ந்தது. செடியை பார்த்துக்காண்டிருந்த குருவி இழுத்து சுவற்றின் ஓரமாகப்போட்டான்.அது தன் இலைகளை சுருக்கியபடி ஒடுங்கிக்கிடந்தது.

மேற்கிலிருந்து வெயில் வேலென பாய்ந்து வரவும் அவர்கள் மெதுவாக தெற்கு பக்கம் நகர்ந்து ஒருவர் குடும்பத்தை ஒருவர் வீதியில் வைது கொண்டிருந்தார்கள்.

வயல்களில் மாடுகன்றுகளுக்கு தண்ணீர்  காட்டிவிட்டு வீடுதிரும்பிய ஆட்களும் சேர்ந்துகொண்டார்கள்.மோகனா தன்பக்கத்து ஆட்களை தூலாவிக் கொண்டிருந்த நேரத்தில் மணியம்பட்டியார் தெற்குவயலிலிருந்து கையில் ஆட்டுடன், கோவணத்தை சரிசெய்தபடி வந்து கொண்டிருந்தார்.

“மாமா…கேக்க ஆளில்லாம போயிட்டமா..”என்றதும் அவர் வீட்டுசந்தில் ஆட்டை தட்டிவிட்டு விடுவிடுவென்று வந்தார். பின்னாலேயே அவர் மகன் மணியமுட்டி வந்தான்.

முன்னே சென்று,“என்ன சமச்சாரம்..”என்ற மணியமுட்டியை சுப்ரமணி கன்னத்திலறைந்து சுவரில் அவன் தலையை இடித்தான்.தடுத்த ஆட்களின்  கைகளிலிருந்து நழுவிநழுவி சுப்ரமணி  அடிப்பதிலேயே குறியாக இருந்தான்.

அடுத்தஅடி மகனின் மேல் விழுவதற்குள் மணியம்பட்டியார் சுப்ரமணியை கீழே தள்ளிவிட்டார்.அவன் அங்கு கிடந்த அரிவாள்மனையை எடுத்தபடி மணியமுட்டியை நெருங்கினான். அதுவரை வேடிக்கைப் பார்த்தபடியிருந்த பொம்பிளையாட்களில் சிலர் ஓடிப்போய் சுப்ரமணியின் தோள்களை, கைகளை, பின்னாலிருந்து உடலை இழுத்துப்பிடித்தும் அவன் திமிறிக்கொண்டிருந்தான். பெரியண்ணசாமியின் காலடியில் கிடக்கும் முறைத்து வாய்பிளந்த தலையைப்போல இருந்தது அவன்முகம்.

அவன் பெண்களின் கைகளிலிருந்து பாய்ந்து ஓடி மணியம்பட்டியாரின் கோவணத்தின் பின்வாலைப் பிடித்தான்.என்ன ஏது என்று புரியாமல் பெண்கள் சட்டென்று பார்வையை மாற்றி கண்களை, உடலைத் திருப்பிக் கொண்டார்கள்.

அந்த இக்கட்டிற்கே உரிய வேகத்தால் மணியம்பட்டியார் கீழே ஓரமாக குவிக்கப்பட்டிருந்த அடுப்புசாம்பலை அள்ளி அவன் முகத்தில் அடித்தார்.அவன் பிடி நழுவியதும்,அவர் அவனை கீழேத்தள்ளி நெஞ்சில் ஓங்கிமிதித்து காலால் தள்ளிவிட்டு, மீண்டும் காலை ஓங்கினார். அவரின் கையைப்பிடித்த அழகனை உதறி நடந்தார்.அவரின் மகன் அவரின் பின்னால் ஓடினான்.

தரையிலிருந்து எழுந்த சுப்ரமணியின் முகத்தைப் பார்த்து பப்லுவும், விச்சும் சிரிக்க கூட்டதிலிருந்த பெண்களும் சிரித்தார்கள்.

அழகன், “நேரங்காலந் தெரியாம என்ன கெக்கலிப்பு..கொலப்பழிய கூட்டிறாதீங்க..எல்லாம் வூட்டுக்கு போவுல,”என்று அதட்டினான்.

“அய்ய…இல்லன்னா மட்டும் வேலமுடிச்சு வந்து பதுவுசா  பட்டஞ்செஞ்சு விட்டுக்கிட்டு இருப்பீங்களோ…சாயங்காலமா ஊரத் தாண்டி நடந்தா தெரியும்..” என்று முறைத்த விஜயாவை செங்கம்மா கிழவி, “இப்பிடிதாண்டி வாயில போடனும்..நம்ம இப்பிடி சிரிச்சுப்பிட்டா போதும்  பொறுக்காது..”என்று வாயைக் கோணிக் காண்பித்தாள்.

“அவங்கிட்ட பேசலாமில்ல…”என்ற அழகர் திரும்பிக்கொண்டான்.

சாம்பல் முகத்துடன் எழுந்தவன் அவர்களை பின்தொடர்ந்து ஓடினான்.வழியில் கட்டிலில் உட்கார்ந்து வெற்றிலை மடித்துக்காண்டிருந்த பொம்மன் தாத்தாவின் கட்டிலை ,செங்குத்தாக வலதுகையால் சுப்ரமணி தூக்கவும், சரிந்த தாத்தாவை பேரன்  பிடித்துக்கொண்டான்.

“சோலிய முடிக்கப்பாத்தியேடா..”என்றவரின் பேரன், “நீ ஒக்காரு தாத்தா…ஐஞ்சு நிமிசம்..ஆளு ஒக்காந்திருக்கறது தெரியாத அவங்கண்ண என்ன பண்றேன்னு பாரு,”என்றான்.

“டேய்….வேணாண்டா வாடா..”என்றவரின் குரலை கேட்காமல் ஓடினான்.

பின்னாலிருந்து, “ஒருத்தன் இத்தன பண்றான்…அவன..”என்ற குரல்கள் எழுந்தன.

வேகவேகமாக வீட்டிற்கு ஓடிய சுப்ரமணியின் அப்பா வேட்டியை மாற்றி நீண்ட கால்சட்டையில் வந்து தொடையில் தட்டி குதித்தபடி, “எத்தன பேருடா வாங்க..”என்று கைத்தட்டினார்.தென்னை போன்ற உடல்வாகு அவருக்கு.அங்கு நின்ற தருமன் தன்னிச்சையாக பின்னால் நகர்ந்தான்.சத்தம் கேட்டு வேலையிலிருந்து எழுந்து வந்திருந்த அவன் கையிலிருந்த வெட்டிரும்பை   வேட்டிக்குள் வைத்து மடித்துக்கட்டினான்.

பகலவன் கொல்லிமலையின் பின்னே மறைந்து ஔியை விரித்துப்போட்டிருந்தான்.அந்த நேரத்தில் அது  இரண்டுதெருவிற்குமான சண்டையாக மாறியிருந்தது.

சுப்ரமணியின் மனைவி அவனைத் தன் தெருவிற்குள் வைத்துக்கொள்ள படாதபாடுபட்டாள்.மணியமுட்டியானின் மனைவி அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

கிளம்பி தெருமுனைக்கு வரும் ஆண்களையும் அவர்களைத் தொடர்ந்து வரும் மகன்களையும் ஏதோ ஒருபெண் இழுத்து தடுத்துக் கொண்டிருந்தாள்.வசவுகளை விச்சுவும் பப்லுவும் வாய்க்குள் சொல்லி சிரித்துக் கொண்டுமிருந்தார்கள்.சொற்கள் மேலும் வலுவான சொற்களால் அடித்து வீழ்த்தப்பட்டன.பெரும்பாலும் அது மனிதன் தன்னையே தான் கொச்சைப்படுத்திக் கொள்ளும் தன்னைப் பற்றிய தன் ஆழத்து சொற்கள்தான்.

விச்சு பப்லுவுடன் சிரித்துக் கொண்டிருக்க அருகில் வந்த விச்சுவின் அம்மா, “இருடி வீட்டுக்கு வா .வாயில சூடுவச்சது மறந்துருச்சா..”என்றபடி அவனை இழுத்துக் கொண்டு சென்றாள். அவன் பப்லுவையும் தன்னுடன் பிடித்தபடி சென்றான்.

நடைப்பயிற்சியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வாத்தியாரை தூரத்திலேயே அவர்மகன் பிடித்துக்கொண்டு வந்திருந்தான்.நாற்சந்தியின் முனைவீட்டில் அவரைக் கொண்டு சேர்க்க படாதபாடுபட்டுக் கொண்டிருந்தான்.

கூட்டத்தை அவர் மழங்க மழங்க விழித்த விழிகளால் தேடிக்கொண்டிருந்தார். ஆட்கள் அவரைக் கண்டதும் வழிவிட்டு பின் சேர்ந்து கொண்டார்கள்.

“என்ன..என்ன..”என்றவரிடம் , “நீங்க உள்ள வாங்க..”என்ற மகனிடமிருந்து  திமிறி மீண்டும் தெருமுனைக்கு வந்தார். தன்முன் வந்தவர்கள் அனைவரையும் சுப்ரமணியும் அவன் நண்பனும் அடித்துக் கொண்டும் அடி வாங்கிக் கொண்டுமிருந்தார்கள்.

கூட்டம் சண்டைக்கு ஏற்ப தள்ளுமுள்ளாகிக் கொண்டிருக்க, “சார்..சார்..” என்றவர்கள் அவரப்பிடிச்சு உள்ளப்போடுங்க..குறுக்கால போனா தள்ளிப்பிடுவானுங்க..என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிந்தார்கள்.வாத்தியார் யார் பேச்சும் உள்நுழையாதவராக சுப்ரமணியை பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரை மெதுவாக நெட்டித் தள்ளியபடி வாசலில் நிறுத்தியிருந்த மகனிடம், “நான் ஆசிரியர்..நான் சொன்னா கேப்பான்..”என்றார்.

அவன் சிரித்தபடி,“அப்பறம் சொல்லலாங்ய்யா…”என்றான்.

“அவன் நல்லப்பையன்..சொன்னாக்கேப்பான்..”

“சரி..”

“அவன இங்கவரச்சொல்லு ..”என்றபடி வாத்தியார் படிகளில் அமர்ந்தார்.

வாயை கைகளால் பொத்தியபடி ஒருபுறமாக சரிந்து தள்ளாடிக்கொண்டு அவரிடம் வந்த ராசு , “மாமா..நீ பேசப்பிடாது..உள்ள போ..”என்றார்.

வாத்தியார், “நீ வீட்டுக்கு போ..”என்றதும் ராசு தலையாட்டிவிட்டு நடந்தார்.அவரின் மனைவி முழங்கால் வலியால் தாங்கி நடந்தபடி அவர் செல்லுமிடமெல்லாம் பின்னால் சென்றுகொண்டிருந்தாள்.

வடக்கால வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பார்கவியிடம் அவளின் அப்பாயி, “பாத்தியா…ஒருசுண்டக்கா சண்டய..சொல் பேச்சுக் கேக்காம அவங்கவூட்டு பயலோட பேசிக்கிட்டு திரியற..தூக்கத்துல வாயச் சப்பிக்கிட்டிருக்கற வயசுல உனக்கெல்லாம்…அது என்ன எழவு…ம்…காதலு,”என்றார்.

“ அப்பாயி…எங்கிட்ட பேசாத” என்று பார்கவி முறைத்தாள்.

“அவம் பின்னாடி போன உன்னிய அவவீட்டு கழுனித் தண்ணிபானைக்கிட்டதான் ஒக்காரவப்பா..ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு போயி படிக்கற வேலயப்பாரு..” ஒருகூரையிலிருந்து பற்றும் தீயென சொற்கள் கூட்டத்தில் பரவிக்கொண்டிருந்தன.

பார்கவி திரும்பி அமர்ந்து சாவகாசமாக காலை நீட்டிப்போட்டுக் கொண்டு கூட்டத்தில் விழியோட்டி வாயில் கைவைத்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

நீண்ட அந்தி விலகி  இருள்கவிந்தது.புழுக்கம் அதிகரித்து மனிதஆவியின் கெடுமண நெடியடித்துக் கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து ஆட்கள் கலையத்தொடங்கினார்கள்.சோலையம்மா சோறு தின்றுவிட்டு  திண்ணையில் அமர்ந்து முகவாயில் கைவைத்தபடி கண்ணயரத் தொடங்கினாள்.

அவர்களில் சிலர் கூட்டு சேர்ந்துகொண்டு தெற்கே வயல்களின் பக்கமாகச் சென்றார்கள்.பசியாறியவர்கள்  திண்ணைகளில் சாய்ந்தார்கள். யார்யார் எப்பொழுது சென்றார்கள் என்று அறியாத சோலையம்மா விழித்து தெருவைப் பார்த்தாள்.செடிக்கருகில் குருவி நிற்பதைப் பார்த்ததும், “என்னடா…”என்றாள்.

“வெதசுண்டக்கா பொருக்குனேன். நல்ல தெடமான வமுசம்..வயல்ல போட்டம்ன்னா ஜம்முன்னு வரும்,”என்று கையை நீட்டிக் காண்பித்தான்.

எழுந்தமர்ந்த சோலையம்மா, “…இதவச்சு சுண்டக்கா காட்டையே உண்டு பண்ணிறலாம்..போ ,”என்றாள்.

“கேசு குடுக்க உப்பிலியபுரத்துக்கு வண்டி போட்டுட்டு போயிருக்கானுங்க,”

“ம்..போய்த்தூங்குடா.பொழுது மொளச்சா மாடுகன்ன ஓட்டனும்..”என்றபடி படுத்தாள்.

நாற்சந்தியிலிருந்து நான்கு கைகளாய் விரிந்திருந்த தெருக்களில் அங்கங்கு வாசல்களில் கட்டில் போட்டு வயசாளிகள் கண்ணயர்ந்திருந்தார்கள்.கூட்டத்தின் கால்களில் அகப்பட்டு நசுங்கிய சுண்டைக்காய்களைப் பார்த்தபடி குருவி வீட்டிற்கு நடந்தான்.தெற்கிலிருந்து நான்கு ஆட்கள் நடந்து வருவது தெருவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.

அவர்களைப் பார்த்து வாலைக்குழைத்தபடி சென்ற குருவியின்  நாயை ஒருவன் காலால் எத்தினான் மற்றவன் அதை நோக்கிக் கல்லை விட்டெறிந்தான்.குருவி யாரையும் பார்க்காத பார்வையோடு வீட்டின் முன் வாசலில் விரித்திருந்த பாயில் படுத்தான்.பப்லுவை தன்நெஞ்சில் போட்டு தட்டிக்கொடுத்தபடி, “ ச்ச்சுசூ”என்றழைத்ததும் நாய் வந்து படுத்தது. நிலா சிவந்திருப்பதை பார்த்தபடி விழித்திருந்தன அவன் கண்கள்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close