கவிதைகள்
Trending

சுசித்ரா மாரன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

தற்கொலைக் குறிப்பு

குற்றவுணர்வில்
சிலரைத் தள்ளவும்… மீட்கவும்…
அதிர உடையும்
ஆழித்தேரின்
இறுதிச்சுற்று

நிரந்தர தொலைதலுக்கென
மனிதன் மட்டுமறிந்த உபாயத்தை
உறுதிப்படுத்தும்
சோதனைக்குறிப்பு

கடந்த ஜீவனின்
கடைசி நொடிகளை
பதைபதைக்க வாழ்ந்து
பார்க்க வைக்கும்
சாகசக்கட்டுரை

விடுதலை விடையாகும்
உடல் உதிர்த்தது
உயிர் விரும்பியா..?
தேடிக்கொண்டதா…?
தேடி வந்ததா.. ? என்ற
கொள்குறிவினாக்களின்
சுமூகத்தீர்வு

கவிஞனின் நினைவஞ்சலியில்
சிரஞ்சீவியாக
சிலாகிக்கப்படும்
கடைசி கவிதை

யாரையோ தண்டிக்க…
யாரையோ பழிதீர்க்க…
காலத்தின் மீதேறி

சாடும் ஒரு வசைச்சொல்
தண்டனையை..
பழி தீர்க்கப்பட்ட
வலியை…நொடி நொடியாய்
பெயர்த்து சமப்படுத்தி
தன்னை விஞ்சிய
தற்கொலைக் குறிப்பை
பழிதீர்த்துக் கொள்கிறது காலம்

ஆணின் தற்கொலை
கடனாலானது
பெண்ணின் தற்கொலை
கற்பாலானது
எனும் கற்பிதங்களுக்கு
கொஞ்சம்
நீரூற்றவும்
நிறைய
தீயூற்றவும்
அவசியமாகிறது
தற்கொலைக்கு முன் ஒரு
தற்கொலைக் குறிப்பு.

*** *** ***

வக்கிர ஆறுதல்

சாலையில் வீசப்படுகிறது
குற்றுயிர் சுயம்

கொத்தியுண்ணும் அனுதாபக் காகங்கள்
வாகனச்சீற்றத்தில் தசைபிய்த்துப் பறக்கின்றன

பெருகும் கழிவிரக்க கௌரவத்தை
வாழ்த்துகிறது ஆழ்மன வக்கிரம்

ஆறுதலடைந்ததாய்
பாவனை செய்கிறது வீசிய கரம்.

*** *** ***

 

விடமாகும் தொடர் தீண்டல்

உன் விரல் நுனியில்
தேங்கியிருக்கிறது
எனக்கான பெருங்கருணை

அது சிறுவருடலோ
தட்டச்சும் சில
சொற்களோ

கசிந்து விடக்கூடாதென்ற
உன் பிரயத்தனங்கள்
கொடுக்குகளாக
காவலிருக்கின்றன

கருணைக் கதவுகளை
தட்டும் போதெல்லாம்
கொட்டப்படுகிறேன்

தொடர்தீண்டலில்
விடமாகிறேன்
மேலும் கவனம்கொள்
தவறிச் சிந்திவிடப்போகிறது

துளிக் கருணை
குடம்நிறை விடத்தையும்
கவிதையாக்கிவிடும்

அந்த தண்டனையை
உனக்குத் தர விரும்பாது
என் காதல்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. சுசித்ரா மாரனின் கவிதை தற்கொலைக்குறிப்பில் “ஆணின் தற்கொலை கடனாலானது, பெண்ணின் தற்கொலை கற்பாலானது எனும் கற்பிதங்கள் சுடர் சிறப்பு.
    தீயூட்டப்படவேண்டியதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button