இணைய இதழ்இணைய இதழ் 52கவிதைகள்

சு.ராமதாஸ் காந்தி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஊர்ப்பொறணிசில நாக்குத்தாளங்கள்

கடைக்காரர் முத்தையா மாமன் மனைவி கனகம் தவறிப் போனாள்
தனது வழக்கமான கஞ்சத்தனத்தால் வைத்தியம் பார்க்காமல்
மனைவியைக் கொன்றுவிட்டதாக ஊரெல்லாம் முத்தையா மாமனைப் பற்றிப் பேச்சு
ஆனால் ஊர் மைதானத்தில் ஆம்புலன்ஸில் சவம் வந்து இறங்குகையில்
எல்லோரைக் காட்டிலும் அதிகமாகவே கதறினார் மாமன்
ஓடிப்போய் கல்யாணம் முடித்துக் கொண்ட மகனைச் சேர்க்காமல் மகளோடும் மருமகனோடும் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்
ஆறு மாதத்தில் மகளுக்கும்
அப்பன் சுபாவம் கசந்து போக
தின்பதற்குக் கூட அப்பன் கணக்குப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டி
போயே விட்டாள் மகள் புருசன் வீடு
எஞ்சிய காலத்தில் கோயிலில் அன்னதானம் சாப்பிட்டுச் சலித்துப் போன முத்தையா மாமனைக் குறித்து சமீபத்தில் ஊருக்குள் உலவுவது  சற்று சுவாரஸ்யமானது
அறுபதைக் கடந்துவிட்ட மாமன்
எங்கேயோ ஒரு விதவையான
சத்துணவு டீச்சரைக் கல்யாணம் முடித்து ரகசியமாக வைத்திருப்பதாகவும் விரைவில் வீட்டிற்கு அழைத்து வரப் போவதாகவும் பேச்சு
ஊராரின் எல்லா நாக்குகளுக்கும் அப்பால் முத்தையா மாமன் தினமும் கடை திறந்து வரிசை மாறாமல் தின்பண்ட பாட்டில்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்.

****

வேறொருவனுடன் இருந்த
மனைவியைக் கண்கூடாகப் பார்த்துவிட்ட நாளில் வீட்டை விட்டு வெளியேறியவராய் ஊருக்குள் அறியப்படும் அய்யஞ்சாமி பார்ப்பதற்கு முகவெட்டும் தாடியுமாகத் திருவள்ளுவரைப் போலவே இருப்பார் வியாழக்கிழமை அன்னதான நாளில் பருப்பு சாதம் சாப்பிட வரும் பள்ளி மாணவர்களின் டவுசர் பாக்கெட்டிலிருந்து உருளும்
அவிச்ச முட்டையைப் பார்த்து மெலிதாகச் சிரிக்குமவர் வீதிகளில் நடந்து போகையில் ரோட்டோரம் வெளிக்கிருக்கும் பிள்ளைகள்
“சாமி திண்ணீறு” என்று கேட்டால்
“பேளும்போதாடா திண்ணீறு கேப்ப” என்றபடியே அதே சிரிப்புடன்
கடந்து விடுவார்
சூரிய அஸ்தமனத்தைப் பள்ளிக்கூடம் முழுதாக மறைத்துவிட்ட அந்தியில் கைக்குழந்தையுடன் கோயில் வாசலில்
தாயொருத்தி நிற்கிறாள்
இதுவரை அப்படி யாரும் உள்ளே சென்று பார்த்திராத
வில்வமரத்தோடு இருளும் அடர்ந்திருக்கும் கோயிலினுள்ளிருந்து வெளியேறும் அய்யஞ்சாமி வாய் எதையோ முணுமுணுக்க
துண்டால் மந்திரிக்கிறார்
எப்படியும் அவரிடம் கைவசம் இருக்கும்
ஒரு சிவப்புக் கயிறோ அல்லது
கறுப்புக் கயிறோ.

****

தொட்டுவிட்டால் மறுகணமே உங்களைத் தொடாமல் ஓயாத
ரஜாக் அண்ணனை எங்கள் ஊருக்கு வந்தால் நீங்கள் பார்க்கலாம்
ஆரம்பத்தில் சின்னப்பையன்கள் விளையாடிக் கொண்டிருந்ததை இப்பொழுது பெரியவர்களும் சிறிதும் கைகூசாமல் செய்கிறார்கள்
ரேசன் கடையிலும் டீக்கடையிலும்
சரியாகப் பேசத்தெரிந்த ரஜாக் அண்ணன் சின்டெக்ஸ் பைப்பைத் திறந்துவிட்டு வெகுநேரம் கை கால்களைக் கழுவிக் கொண்டேயிருப்பார் பின்னாலிருந்து வந்து முதுகில் தட்டி ஓடி மறைபவனை எப்படியும் இன்றைக்கு இல்லையேல் நாளையேனும் தொடாமல் விடமாட்டார்.

****

பழக்கடைத் தெண்டபாணியைத் தெரியாதவர்கள்
ஊரில்
யாரும் இருக்க முடியாது
பேருந்துக்காகக் காத்திருப்பவர்கள்  எவரும் அவரிடம்
“தெக்க எந்த வண்டிண்ணா”
எனக் கேட்காமல் பேருந்து ஏறியதில்லை
எத்தனை வியாபார நெருக்கடியிலும்
பேருந்து நேரத்தை மாத்திரம்
முகஞ் சுழிக்காமல் சொல்லிவிடுவார்
முகத்திற்கு நேரே காசைக் குறைத்து ஏமாற்றும் இளந்தாரிப் பையன்களிடம் சிரிப்பு மாறாமல் காசை வாங்கிக் கல்லாவில் போடுவார்
பகல் நேரங்களில் மகன் வாங்கி வந்த சாமானங்களில் உள்ள குறைகளை
கடைக்கு வருவோரிடம் சொல்லிப் புலம்புவார்
ஊரிலுள்ள எல்லாக் கிழிந்த நோட்டும்
அவர் கடைக்கே வரும்
நைசாக மடித்துக் கொடுக்கும்
சின்னப் பையன்களிடம் வாங்கி
நோட்டை நேர் செய்து திருத்தமாகக் கிழிசலைப் பார்வையிட்டுக் கல்லாவில் போடுபவரை அதிசயமாகப் பார்ப்பார்கள்
நேற்று எளந்தாரியான எல்லாப் பயல்களும் அதிகாரத் தோரணையில் அவரிடம் அதட்டியே சிகரெட் கேட்கிறார்கள்
அவர்களது அப்பன்களுக்கும் சிகரெட் கொடுத்த அதே கைகளால்
சிரிப்பு மாறாமல் எடுத்துக் கொடுத்துவிட்டு
கண்ணாடி பாட்டிலைத் தட்டி அடுத்த வியாபாரத்தைப் பார்க்கப் போய்விடுவார் தெண்டபாணி அண்ணன்.

******

thagappansamy2000@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button