தொடர்கள்

சொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;4 – காயத்ரி மஹதி

தொடர் | வாசகசாலை

ரீல் அண்ட் ரியல் பிம்பம்

பொதுவாக நாம் யார், நம் தகுதி என்ன, என்ன மாதிரியான செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம், நம்முடைய செயல்களில் உள்ள தனித்தன்மை என்ன என்பதைப் பற்றி பல இடங்களில் நாம் நிரூபிக்க முயற்சி செய்துகொண்டே இருப்போம். அதை யார் யாரிடம் எல்லாம் சொல்லிப் பாராட்டு வாங்க முடியும் என்று யோசித்து, அதை அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்போம்.

நம் மாணவப் பருவத்தில் நாம் படித்த கல்வி நிலையங்களிலும், நம் வீட்டிலும் அத்தனை எளிதாக பாராட்டுக்கள் எல்லாருக்கும் கிடைத்து இருக்காது. படித்து எடுத்த மார்க் இருந்தால் மட்டுமே அவர்களை பாராட்டியிருப்பார்கள். படிப்பு தவிர்த்த மற்ற திறமை உள்ளவர்கள் எல்லாம் அமைதியாகத்தான் இருந்து இருப்பார்கள். அந்த ஏக்கமும், ஆசையும் எல்லாருடைய அடிமனதிலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற இப்போது உள்ள சோசியல் மீடியா பலருக்கும் முழு உதவியாக இருக்கிறது. ஆனால் அதே விஷயம், மக்களுக்கு எந்த அளவுக்கு போதையாக மாறி இருக்கிறது என்பதுதான் இப்போது உள்ள சூழ்நிலையில் கேள்விக் குறியாக இருக்கிறது.

ஏன் போதையான விஷயமாக  மாறி இருக்கிறது என்பதற்கு, மிக அடிப்படைக் காரணமாக என்ன சொல்லலாம் என்றால், இந்த சோசியல் மீடியாவை வைத்து தான் ஒரு மிகப்பெரிய பிரபலம் என்கிற பிம்பத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதாகத்தான் இருக்கிறது. அதனால் தனக்கும், தன்னுடைய திறமைக்கும் இந்த சோசியல் மீடியாவை துணைக்கு வைத்து, அவரவர் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் ரொம்ப எனர்ஜிட்டிக்காக, ரொம்ப ஆக்டிவாக இருக்கும் பிரபலங்கள்தான் அவர்களுடைய ரோல் மாடலாக இருக்கின்றனர். அது போல் தானும் உருவாக வேண்டும் என்ற பிம்பத்தை கையில் எடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் வீட்டில் உள்ள பல தடைகளை உடைத்து, சோசியல் மீடியாவில் இருக்கும் பலவிதமான குழுக்களில் சேரவும் செய்கின்றனர்.

அதும் இந்த லாக்டவுன் காலத்தில் ஊரடங்கு என்று சொல்லி இருந்தாலும், சோசியல் மீடியா எல்லா நேரமும் ஓப்பன் ஆகத்தான் இருந்தது. இதனால் தன்னுடைய திறமையை புகைப்படங்கள் மூலமாகவோ, எழுத்தின் மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ அப்லோட் செய்யவும் ஆரம்பித்தனர். புதிதாக இணைந்த நபர்களில் இருந்து பிரபலமாக இருக்கும் பலரும் சோசியல் மீடியாவில் லாக்டவுன் காலத்தில் ஆக்டிவாக இருந்ததால், அவர்களுடைய எல்லா விஷயங்களும் பலருடைய பார்வைக்கு சென்றது.  அவரவர் திறமைக்கு ஏற்ப, செயல்களைப் பதிவு செய்யும் போது, அதை வெளிப்படுத்தும் விதங்களை வைத்து பலரது பாராட்டுக்கள் வரவும் செய்தன.

இது ஒரு கட்டத்தில் தங்களுக்கு வரும் கமெண்ட் மற்றும் எமோஜி சிம்பல் மூலம் தானும் ஒரு பிரபலம் என்றும், எந்த எந்த பிரபலங்கள் தங்களது போஸ்ட்க்கு கமெண்ட் பண்ணுகின்றனர் எனவும், அதை வைத்து ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்தவும் செய்ய ஆரம்பித்தனர்.

தங்களுடைய போஸ்ட்களுக்கு அறிவாளியாக இருப்பவர்கள் லைக் போடுகின்றனர், சினிமாத் துறையில் இருப்பவர்கள் பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் கமெண்ட் போடுகின்றனர் என்று தன் வட்டத்தில் என்ன மாதிரியான பிரபலங்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக பெருமையாக சொல்ல ஆரம்பிக்கின்றனர்.

அந்த இடங்களில் தங்களுடைய உண்மையான வாழ்க்கையின் வட்டத்தை மறந்து, தான் என்ன மாதிரி ஆசைப்பட்ட மனிதர்கள் வட்டத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அந்த வட்டத்திற்குள் வாழ ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் தங்களுடைய வீட்டில் உள்ள மனிதர்களை விட தான் பெரிய ஆள் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.

அந்த பிம்பத்தை வைத்து தனக்கு என்று ஒரு உருவகத்தைக் கொடுக்கவும் செய்கின்றனர். அந்த உருவகம் நிஜம்தான், ஆனால் அந்த உருவகம் வைத்து வேலை செய்து, சம்பாதித்தால் பரவாயில்லை. தன்னுடைய அறிவுக்கும், திறமைக்கும் சரியான இடம் கிடைக்கவில்லை என்று சொல்லவும் பழகி விட்டனர். ஏன் என்றால் அவர்கள் சோசியல் மீடியாவில் செய்யும் செயலுக்கும், நேரில் செய்யும் வேலைக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கும். எல்லாமே நிஜமாகத்தான் இருக்கிறது. ஆனால் எந்த நிஜம் நம் வாழக்கைக்கும், வீட்டிற்கும் முக்கியாமானது என்ற குழப்பம்தான் அதிகமாகி விட்டது.

இந்தக் குழப்பங்களுடன் ஒரு கட்டத்தில் சோசியல் மீடியாவில் உள்ள நண்பர்கள் வட்டத்தில் யாரை விட யார் முக்கியம் என்ற கேள்வியை வைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏன் என்றால் உண்மையில் நம்முடைய செயலை வைத்து அவர்களுடைய நெருங்கிய உறவுக்குள் இருக்கின்றோமா, இல்லை இது வெறும் கமெண்ட் மட்டும்தானா என்ற கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க சோசியல் மீடியா நட்பை உறவாக மாற்ற நெருங்கிய உறவுகளுக்குள் செல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

இதனால் தங்களுக்கு லைக் போடுபவர்கள், வேறு யார் யாருக்கு எல்லாம் போடுகின்றனர் என்று ஆழமாக பார்க்கவும், அதைக் கேள்வி கேட்கவும் செய்கின்றனர். ஊரடங்கு பிரச்சனை ஒரு மாதிரி இருந்தது என்றால், சோசியல் மீடியா பிரச்சனை வேறு மாதிரி உருவாகி இருந்தது. தனக்கான அங்கீகாரம் கிடைத்தாலும், அதே மாதிரி அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் கிடைக்கும் போது இதில் யார் உண்மையில் பெரிய பிரபலம் என்கிற உளவியல் அழுத்தத்திற்கு சிக்க ஆரம்பித்தனர்.

இதனால் தன்னுடைய உண்மையான பிம்பத்துக்கும், தாங்கள் உருவாக்கிய பிம்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியாமல் இருக்கின்றனர். அதாவது சோசியல் மீடியாவில் இவர்கள் உருவாக்கிய இடத்தில் மிக நல்லவர்களாக, நிதானமாக எதையும் சொல்லக்கூடியவர்களாக இருந்த இடத்தில் தன்னுடைய கோபத்தையும், வெறுப்பையும் காட்ட முடியாமல் மனதிற்குள் புளுங்க ஆரம்பித்து விட்டனர். அந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் சரிவர சாப்பிடாமல், தூக்கம் இல்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

இந்த சோசியல் மீடியா பிம்பம் மட்டுமே போதும் என்ற எண்ணத்துக்குள் வரும்போது மட்டுமே, வெளியே எங்கும் நம்மை வெளிப்படுத்த தயங்க ஆரம்பிக்கின்றோம். அந்த இடத்திலதான், தன்னை நிரூபிக்க வந்த இடத்தில் தன்னைத் தொலைத்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

உண்மையில் திறமை வைத்து பிரபலம் ஆக வேண்டும் என்றால் சோசியல் மீடியா ஒரு தளம், அதை வைத்து உங்களுக்கான துறையில் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே உண்மையான திறமைக்கு வெற்றியை, பதவியை, செல்வாக்கை அடைய முடியும்.

Audience listens to the lecturer at the conference hall

சமூகத்தில் நம் திறமைக்கு, படிப்புக்கு, வேலைக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ, அதை சோசியல் மீடியாவில் பதிவாக, டாகுமெண்ட்டாக அப்லோட் செய்துகொண்டு இருக்கின்றோம்.

அத்தகைய செயலை வைத்து, பதிவுகளை வைத்துதான் யாராக இருந்தாலும் பிரபலம் என்கிற அடையாளத்துக்குள் வர ஆரம்பித்து இருப்பார்கள். சோசியல் மீடியா பிரபலம் என்பது உங்களுக்கான அடையாளத்தை வெளியே சொல்வதுதான் என்பதை முழு மனதாக ஒப்புக்கொள்ள வேண்டும். நம் இந்திய நாட்டில் சோசியல் மீடியாவில் இல்லாத மனிதர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களும் உங்களைத் தொடர்பு கொள்ள வைக்க உண்மையான நிஜ தளத்திலும் உங்களை நிரூபிக்க முயலுங்கள்.

மக்கள் என்றுமே திறமைகளை கொண்டாடத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பல தளங்களில் உங்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு வெளி சமுகத்தையும், டிஜிட்டல் சமூகத்தையும் ஒரே தராசில் வைத்து செயல்பட வேண்டும்.

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close