தொடர்கள்

சொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி

தொடர் | வாசகசாலை

இன்றைக்கு நாம் வாழ வேண்டும் என்கிற சூழலில் சோஷியல் மீடியாவும் மிக அடிப்படையான தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நமக்குப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி நாம் எல்லாரும் சோஷியல் மீடியாவில் இருக்கிறோம் என்பதை வெளியே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

சோஷியல் மீடியாவுக்கு ஏற்ற மாதிரி வாழப் பழகவும் மாறி வருகிறோம். அதுவும் மிக முக்கியமாக மனதளவில் நாம் சோஷியல் மீடியவுக்குள் பேசிப் பழக ஆரம்பித்து விட்டோம். சோஷியல் மீடியா இல்லை என்றால் இந்த கொரோனா காலகட்டங்களில் இருந்து மீண்டு வந்து இருப்பது எல்லாம் மிகக் கடினம்… 

அப்படிப்பட்ட சோஷியல் மீடியாவுக்கும், நமக்கும் உள்ள விவாதங்களை பற்றித்தான் இத்தொடரில் படிக்கப் போகிறோம்…

 

(Display Picture) டிபியில் உள்ள டிஜிட்டல் உலகம்

இன்றைக்கு உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு டிபியும் ஒவ்வொரு கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டது. சந்தோசமாக ஒரு அழகான டிபி, குழப்பமாக தத்துவரீதியான டிபி, கவலையாக சோகநிலை கொண்ட டிபி இப்படியாக டிபிக்கள் மூலம் நாம் நம்மை வெளிப்படுத்தப் பழக ஆரம்பித்து விட்டோம். அதும் இந்த கொரோனா கால கட்டத்தில் எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் டிஜிட்டலில் கொண்டாடப் பழகி விட்டோம். எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தாலும் டிஜிட்டல் எதிர்ப்புதான்.

அப்படிப்பட்ட டிஜிட்டல் உலகில் சோசியல் மீடியா தளத்தில் 1.60 கோடி மக்கள் முகநூல் தளத்தில் டிபிக்களால் (Display Picture) தங்களுடைய ஆளுமையை நிரூபிக்க ஆசைப்படுகிறார்கள்.  University of Pennsylvania அலெக்ஸாண்டரா போகோமெலிவா என்பவரை வைத்து மக்கள் இந்த டிபிக்களால் என்ன மாதிரியான ஒரு சூழலை உருவாக்க முயல்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆராய்ச்சியில் டிபி மூலம் எத்தனை வகையாக மக்கள் தங்களது ஆளுமையை மாறுபட்ட விதத்தில் நிரூபிக்க முயல்கிறார்கள் என்பதை அலெக்ஸாண்டரா போகோமெலிவா தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

தாங்கள் மனம் திறந்து பேசக் கூடியவரா, பாசிட்டிவாக மற்றவர்களிடம் பேசுபவரா, அறிவாளியாக இருப்பவரா, திறமைசாலியா இவற்றையெல்லாம் ஒரு புகைப்படத்தின் மூலம் எளிதாகக் காண்பிக்க முடியும். சோசியல் மீடியாவில் புகைப்படங்களை முறையாக வைப்பதற்கு பல கார்ப்பரேட் நிறுவனங்களில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். மார்க்கெட்டிங் துறையில் ஒரு புகைப்படத்தில் எந்த அளவுக்கு முகம் இருக்க வேண்டும், வாயின் பகுதி, கண்ணின் தன்மை என ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு டைமன்ஷன் சொல்லி, அதன்படி மக்கள் அவர்கள் பயன்படுத்தும் சோசியல் மீடியாவில் புகைப்படங்களாக வைக்க ஆரம்பித்து விட்டனர்.

இதன் மூலம் தங்கள் நிறுவனம் ஊழியர்களையும், வருகின்ற கஸ்டமர்களையும் நல்ல விதமாக சரி சமமாக நடத்துவோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இது போக தனிப்பட்ட நபர்கள் பலரும் டிபியால் தங்கள் காதலை, தங்கள் வருத்தத்தை, கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவே பயன்படுத்துகிறார்கள்.

நண்பர்களுக்குள் பிறந்தநாள் வந்தால் குழுவாக டிபியில் அவர்களது படங்களைப் பதிவேற்றுவதும், சண்டை வந்தாலோ டிபியில் அவர்களது படங்களைத் திட்டி, பதிவேற்றி திருப்திப்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். காதலர்களுக்குள் ஏதும் கொண்டாட்ட மனநிலை  இருந்தால் அதற்கேற்றாற் போல் கிரீட்டிங் கார்டு மூலம் வரும் படங்கள் மாதிரி டிபியில் பதிவேற்றி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

அதுவே பிரிவாக இருந்தால் டிபி இல்லாமல் வெறும் கறுப்பு நிற வட்டம் மட்டும் தெரிவது போல் வைத்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்துகிறார்கள். இப்படியாக தங்கள் மனநிலையின் எண்ண ஓட்டத்தினைப் பிரதிபலிக்கும் ஊடகமாக டிபியை மாற்றி விட்டார்கள்.

ஆனால் சில நேரங்களில் டிபி என்பது சோசியல் மீடியாவின் அடிப்படையான, மிகவும் அங்கீகாரமாக நினைக்க கூடிய விசயமாக தற்போது மாறி வருகிறது. இந்த டிபி மூலம் தான் யார், தான் என்ன மாதிரியான ஸ்டேட்டஸில் வாழ்பவர் என்பதை சொல்லக் கூடிய இடமாக வைத்து இருக்கிறார்கள். தன்னைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தான் சாதி சார்ந்தவரா, மதம் சார்ந்தவரா, மிருகங்கள் மீது பிரியம் கொண்டவரா, ஆன்மீகவாதியா இல்லை என்றால் மதவாதியா என்பதையும், இயற்கையின் மீது பிரியம் கொண்டவரா, கட்சியின் பாசிசத் தொண்டரா, சினிமாவின் ரசிகரா, வரலாற்று தலைவர்களின் வாரிசா என்று தன்னை ஒரு டிபி மூலம் சொல்ல பலரும் ஆசைப்படுகிறார்கள். ஒரு புகைப்படம் மூலம் தன் எண்ணத்தை மிக எளிதாக, மிகத் தெளிவாக சொல்லக் கூடிய டிஜிட்டல் சமூகத்தில்தான் நாம் நம்மை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இந்த டிபி விஷயத்தை நாம் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் சில நேரங்களில் இந்த டிபியை கூட்டம் கூட்டமாக மாற்றி சக மனிதர்களிடம்  மிகப் பெரிய வன்மத்தைக் கொட்டத் தயாராக இருக்கிறார்கள். அவரவர்க்குப் பிடித்த மாதிரி புகைப்படம் வைக்கும் போது, நீ இந்த அமைப்பு சார்ந்தவரா, நீ இவர்களுடைய ரசிகரா, நீ இந்த மாதிரி சாமி கும்பிடும் மனிதனா என்று சொல்லிவிடும் சூழல்தான் அதிகமாக வளர்ந்துகொண்டு வருகிறது. தனிப்பட்டு யாரிடமும் பேசிப் பழகாமல் எளிதாக ஒருவரை ஜட்ஜ் பண்ணிவிட்டு அவர்களது டிபி வைத்து கிண்டல் அடிப்பதும், ஒதுக்கி வைக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

’சாதி, மதம் பார்த்துப் பழகாதே’ என்று சொல்லும் சமூகத்தில் டிபியை வைத்து சக மனிதனை கிண்டல் செய்தும், ஒதுக்கி வைத்து செயல்படும் டிஜிட்டல் அரசியலுக்குள்ளும் நாம் மெதுமெதுவாக சிக்கிக் கொண்டு வருகிறோம்.

நார்மல் நாட்களில் இப்படி என்றால், விசேஷ நாட்களில் கேட்கவே வேண்டாம். சினிமா ரீலீஸ் ஆன நாட்கள், அமைப்பு ரீதியாக கொண்டாடப்படும் நாட்கள், வரலாற்றுத் தலைவர்களைக் கொண்டாடும் நாட்கள் என வரும்போது கூட்டம், கூட்டமாக டிபியை மாற்றி அதுவே ஒரு மிகப்பெரிய திருவிழா போல் கொண்டாடப் பழகி விட்டார்கள். ஏன் இத்தனை கூட்டம் கூட்டமாக மாற்ற வேண்டும் என்றால், சமூகத்திற்கு அவர்கள் சொல்லும் விஷயம் மிகவும் முக்கியமானது என அவர்கள் கருதுவதுதான். ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் அங்கமாக தங்கள் மீது ஒரு முத்திரையைக் குத்தி அதைப் பொதுவெளியில் படங்கள் மூலம் உறுதிப்படுத்தவும் செய்கிறார்கள்.

இதை வைத்து நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் கூட, சில நேரங்களில் இந்த டிபி பஞ்சாயத்தால் பிரிந்தவர்களாக ஆகி விடுகிறார்கள். அது போக தங்களுடன் இருந்துகொண்டே எதிரிகளாகவும், துரோகிகளாகவும் நட்பின் பெயரில் வன்மத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். டிபியை வைத்து நட்பாகவோ, குழுக்களாகவோ இருந்துகொண்டு அந்த முத்திரையின் மீது வெறித்தனமாக ஒரு நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

இவ்வாறாக தங்களைத் தாங்களே தொண்டர்கள், ஆன்மீக நபர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த மாதிரி ஒரு முத்திரைக்குள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்குள் இருக்கின்றனர்.

இதன் மூலம் கூட்டம் கூட்டமாக இருக்கும் நபர்களது பதிவுகளையும், கொள்கைகளையும் எளிதாகக் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்கும் போது கூட்டமாக கமெண்ட் மூலம் எவ்வளவு கேவலமான வார்த்தைகளால் தாக்குதல் நடத்த முடியுமோ, அந்த அளவுக்கு தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறார்கள். இதற்கு உடல் பலமும், மூளை பலமும் தேவை இல்லை. அவர்கள் நம்பும் விஷயத்தை யார் எதிர்த்தாலும் அத்தனை முட்டாள்தனத்துடன் கூடிய மிருகத்தனத்தைக் காண்பித்து விடுகின்றனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து நடத்த பலருக்கும் விருப்பம் இருப்பதால் டிபியில் பூ, பறவை, இயற்கை காட்சி சொல்லி தங்களின் அடையாளங்களை மொத்தமாக மறைத்துக்கொண்டு பேசவும் செய்கின்றனர். இதனால் எந்த இடத்தில் இருந்து, யார் பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் பலவிதமான புது புது அழுத்தங்களை மனிதர்களிடையே இந்த டிபி கலாச்சாரம் உருவாக்கி வருகிறது.

இந்த டிபி கலாச்சாரம் காரணமாக மக்கள் மெதுமெதுவாக தங்களைத் தாங்களே வெளியே, ’இந்த மாதிரி’ என்று சொல்லிக் கொண்டு (Self Polishing), மனதிற்குள் ஏதும் சொல்லத் தெரியாமல் புழுங்கும் மனிதர்களாக இருக்கிறார்கள். இதனால் உண்மையில் தான் யார், தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லத் தெரியாமல் டிபியில் இருக்கும் பிம்பத்தையே நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி டிபியில் ஏதும் இல்லாமல் இருந்தால் தனக்குப் பிடித்தமானவர்கள் என்ன ஏது என்று கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவதும், கேட்கவில்லை என்றால் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு தங்களுடைய நேரத்தையும், சிந்தனைகளையும் விரயம் செய்யும் அளவுக்கு இந்த டிபி மனிதர்களை மாற்றி இருக்கிறது.

“ஒவ்வொரு மனிதனும் ஒரு பாடப் புத்தகம், அவனிடமிருந்து என்ன கற்றுக் கொள்வது, எப்படி கற்றுக் கொள்வது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியதுதான் சரியான முயற்சி” என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறுகிறார். எந்த ஒரு புகைப்படமும் யாரையும் முழுமையாக பிரதிபலிக்காது. அந்தந்த நிமிடங்களின் வெளிப்பாடு என்பதைத் தவிர வேறு எதுவும் அதில் இல்லை என்பதை யதார்த்த வாழக்கையோடு புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close