தொடர்கள்
Trending

சோமாலியா எனும் கவிதைகளின் தேசம்.. ! – 3

நிர்மல்

இனக்குழு அரசியல் அதிகாரம்:

சோமாலிகளின் இரத்தத்தில் தங்களது இனக் குழுவின் உணர்வே முழுக்க முழுக்க நிறைந்திருக்கிறது.

எனக்கு சொர்க்கமே கிடைத்தால் கூட என் இனத்தை விடமாட்டேன் என்பதே அவர்களின் உணர்வாக இருந்தது. ஆனால் சோஷியலிச அரசின் கொள்கை இதற்கு நேர் எதிராக இருந்தது . அது ‘ஒற்றை சோமாலியா’ என்கிற அடையாளத்தை முன் வைத்தது. அது இனக்குழு உணர்வு சோமாலியாவின் முன்னேற்றத்திற்கு தடையென கருதியது.

இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இங்கு இனக்குழுக்கள் பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு மட்டும் காட்டும் தனி முக்கியத்துவமும், மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்களாயிற்று.

சர்வாதிகார அரசியல் அதிகாரத்தை பெற்ற குறிப்பிடத்தக்க சில இனக்குழுக்களும், அதைச் சார்ந்த மேட்டுக்குடிகளும் மற்றவர்களை ஒதுக்கிவிட்டு மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சோறும் நீரும் இல்லாத பலர் ஒருபுறம், லேண்ட் க்ரூசரும் ஆடம்பர வாழ்க்கையுமாக சிலர் மறுபுறம். அங்கே இனக்குழு அடையாளங்களை பொருத்தே கல்வி, உயர் பதவி என எழுதப்படாத இனக்குழு அரசியல் அரங்கேறியது.

அங்கே பகைமையும் வெறுப்பும் வளர்ந்து பெரும் வன்முறையாகும் சூழல் உருவாகியது.  எத்தியோப்பிய போரால் ஏற்பட்ட தோல்வி, நிலவளம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் கொண்டு வரப்பட்ட சோஷியலிச தேச முனைப்புகள் என எல்லாம் சேர்ந்து சோமாலிய இனக்குழுக்களிடயே தீரா பகையை உருவாக்கியது. அகண்ட தேசம் படைக்க ஒன்று கூடிய இனக்குழுக்கள், அதே இனக்குழுக்களுக்காக தேசத்தை பலியிட வேண்டியதாகிப் போனது.

இனக்குழுக்கள் தங்களிடையே நீர், நில வளங்களுக்காக சண்டையிடுவதும் பின்னர் சமரசமாவதும் மிக வழக்கமான செயல். இச்சண்டைகள் பெரும்பாலும் இரு இனக்குழுவின் தலைவர்களாலும், மூத்தவர்களாலும் தீர்க்கப்படும். இனக்குழுக்களிடம் இருந்த பகை தொன்று தொட்டு வந்து கொண்டிருந்த வழமையான ஒன்றுதான். ஆனாலும் அதை அவர்கள் தங்களுக்குள் தீர்த்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இப்படியான பகை உணர்வை அகற்றி ஒரே சோமாலி என்கிற உணர்வுக்குள் கொண்டு வர  கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தையும், குரானையும் கலந்த Scientific Socialism என்கிற ராணுவ சர்வாதிகார அரசு முயன்றது. அந்த அரசு தன் தவறான புரிதலாலும், கொள்கை செயல்படுத்திய விதத்தினாலும், அதில் அங்கம் வகித்தவர்களின் பேராசையினாலும் அவர்கள் முன்னெடுத்த நிர்வாக பொருளாதார மற்றும் வெளியுறவு முடிவுகளாலும் அரசாட்சியை தொடர முடியாமல் வீழ்ந்தது.

இரு அணிகளை இணைக்கிறேன் என அதிகாரத்தால் கட்டிப் போடப்பட்டிருந்த இனக் குழுக்கள் இந்த அரசு வீழ்ந்த பிறகு மீண்டும் தங்களுக்குள்ளேயே தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த முறை இருவரிடமும் துப்பாக்கிகள் இருந்தன, மோட்டார்கள் இருந்தன, AK47கள் இருந்தது, Sting Missile Gunள்  இருந்தன, ராணுவ தளவாடங்களும் இருந்தது…. விளைவு…. சோமாலியா மூன்றாய் சிதறியது. இத்தேசம் மனித வரலாற்றின் கருப்புப் பக்கமாக இன்றும் விளங்குகிறது.

விலங்குகள் மேய சிறு மேய்ச்சல் வெளி இல்லை இங்கு….

இங்கும் அங்குமாய் சிறு முட்புதர்களை பிடுங்கி தின்கிறது விலங்குகள்….

இங்கு பயனில்லா வெட்டவெளி இது…

வாயால் மெல்ல

புல் இல்லா நாடு இது

– பஞ்சத்தின் தேசம்

-சையது மொஹமத் அப்துல்லா ஹசன்

-Sayyid Maxamed Cabdulle Xasan.

சோமாலியாவில் வறட்சியும் பஞ்சமும் புதியதல்ல. கால்நடை மேய்ச்சல் நிலத்தை நம்பி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட சோமாலியர்களுக்கு பஞ்சத்தை எளிதாக கடக்க முடியும். ஆனாலும் சோமாலியா எனும் நவீன தேசியம் உருவாகிய பின் எதிர் கொண்ட அனைத்து மழை குறைவான காலங்களிலும் அது பசி பஞ்சம் வறுமையை எதிர் கொள்ள முடியாமல் இன்று வரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு வெவ்வேறு காரணங்களை அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறினாலும் இதுதான் காரணமென யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.

1977ல் ‘அகண்ட சோமாலியா’ கனவால் உந்தப்பட்டு, அது எத்தியோப்பியா மீது தொடுத்த போர்தான் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த போரால் அடைந்த பொருளாதார இழப்புகள், போரால் எத்தியோப்பியாவில் வாழ்ந்து வந்த சோமாலி அகதிகளின் வருகை என இவை அனைத்தும் சர்வாதிகாரி சாத் பர்ரேயின் சோஷியலிச சோமாலிய கனவை முறித்துப் போட்டது.

சாத் பர்ரேயின் ஆட்சியில் கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டம் பல்லாண்டு கால நில உரிமை வழமையை சிதைத்து பெரும் குழப்பத்தையும் இனக் குழுக்களிடையே தீராத வன்மத்தையும் உருவாக்கியது. போரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து சோமாலியா எதிர்கொண்ட மழை பொழிவு அற்ற பருவகாலம் மற்றும் அனைத்து பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் சாத் பர்ரே கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தோல்வியையே சந்தித்தன. மேய்ச்சல் நிலங்கள் இல்லாத கால் நடைகள் செத்து மடிந்தன. பயிர்கள் கருகி பெரும் உணவு தட்டுப்பாட்டைக் கொண்டு வந்தன. பறிபோன நில உரிமை, குறுகிப் போன மேய்ச்சல் நிலம், அருகிப் போன வேளாண்மை நிலம், அதிகரிக்கும் மக்கள் தொகை, அகதிகளின் எண்ணிக்கை என இவையாவும் ஒன்றாய் சேர்ந்து சோமாலியாவை  உலுக்கிப் போட்டது. வளம் குறுக, போட்டி பெருக, பகை மூழ, எதிர்ப்பு வலுக்க, அதை இரும்புக் கரம் கொண்டு அடக்க அடக்க திமிரி எழுந்தது சோமாலிய உள்நாட்டுப் போர். இதனால் மெல்ல மெல்ல வலுவிழந்த அரசு நிறுவனம் 1991ல் மொத்தமாக சிதைந்து போனது.

Somalia as a Nation ended in a failed state.

ஒரு தேசம் என்பது நிலப்பரப்பல்ல, அது அங்கு வாழும் மனிதர்களின் கனவு. அந்த கனவை மிக நேர்த்தியாக எடுத்துச் செல்ல முடியாமல் உடைந்து போனது சோமாலியா. இவர்கள்

மீண்டும் பழங்குடி இனக்குழுவாக பிரிந்து சோமாலியா நிலப்பரப்பை வன்முறையின் பூமியாக மாற்றினார்கள். இனக்குழு உணர்வோடு இஸ்லாமிய தீவிரவாதமும் கை குலுக்கியது. இக்குழுக்கள்  குறுகிய வளங்களை தனதாக்கிக்கொள்ள போட்டி போட்டன. இவர்கள் கிடைத்த வளங்களை காக்க கொலை செய்தனர். அடுத்தவர் வளங்களை பறிக்க அடுத்த இனக்கூட்டங்களை கொன்று குவித்தனர்.  அடுத்த  இனக்குழுவின் அழிவிலேயே தங்களின் வாழ்வு அடைங்கியிருக்கிறதென போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் தங்களுக்குள் இன ஒழித்தலை மேற் கொண்டார்கள்.

மழையை நம்பியிருக்கும் மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சல் நிலங்களை நம்பியிருக்கும் கால்நடைகள், கால்நடைகளை நம்பியிருக்கும் சோமாலிய மக்கள் என இருக்கும் இவர்களுக்கு வறட்சியை எதிர் கொள்ளத் தெரியும். வறட்சி அவர்களுக்கு ஒன்றும் புதியதில்லை. 1991க்கு முன் எதிர் கொண்ட எல்லா வறட்சி காலங்களையும் சரியாகவே எதிர் கொண்டார்கள். ஆனால் தேசம் சிதறிப் போன சூழலில், உள்நாட்டு போரும், வறட்சியும் சேர்ந்து தாக்கிய போது அது இவர்களுக்கு எதிர் கொள்ள முடியாத பேரழிவாகிப் போனது.

முறையான அரசு வீழ்ந்த பின் சோமாலி தேசத்து வளங்கள் அக்கரையின்றி சூரையாடப்பட்டன. வறண்ட நிலங்களில் வளரும் மரங்களை வெட்டி அவற்றை கரியாக்கி ஏற்றுமதி செய்தனர். இந்த கரி ஏற்றுமதிக்கு சாத் பெர்ரே அரசு விதித்திருந்த தடைகளை தூக்கி எறிந்தனர். வறண்ட நிலத்தில் எப்படி புதியதாக மரங்களை வளர்க்கலாம் என்கிற சிந்தனைக்கு மாறாக மரங்கள் எந்த முறையுமின்றி கரி ஏற்றுமதிக்காக வெட்டி வீழ்த்தப்பட்டன.

முறையான அரசும் பொதுவான சட்ட ஒழுங்கும் இல்லாத நிலையில் கால்நடை ஏற்றுமதி தொழிலும் எந்த முறையுமின்றி நடக்க ஆரம்பித்தது. மேய்ச்சல் நிலத்தின் மீது கனரக வாகனம் செல்வது போன்ற செயலால் மேய்ச்சல் நிலத்து புல் வெளிகள் மெல்ல அழிந்தன.

சோமாலியாவின் கடற்பகுதிக்குள் பன்னாட்டு மீன் பிடி கப்பல்கள் உட்புகுந்து சோமாலியாவின் மீன்களை வாரிச் சென்றன. அரசு இல்லாத நிலையில் மீனவர்களும் ஆயுதங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். ஒருமுறை இவர்கள் தங்கள் எல்லைக்குள் வரும் கப்பல் ஒன்றை சிறை பிடித்தனர். கப்பலை மீட்க பன்னாட்டு நிறுவனம் இவர்களுக்கு பணம் தந்தது. இதுவே மெல்ல மெல்ல சோமாலியர்களை கடற்கொள்ளையர்களாக மாற்றியது.

முறையான அரசு இல்லை , உதவ விரும்பும் நாடுகளாக கூட் உதவ முடியாத வன்முறை சூழலை உருவாக்கினர். புதிய புதிய குழுக்கள் முளைத்தன. பன்னாட்டு உதவிக்கு அளித்த பொருட்கள் சூரையாடப்பட்டன. ஒரே சோமாலியா என முழுங்கிய அதே மனிதர்கள் அதே நிலப்பரப்பில் வாழும் மனிதர்களை பட்டினியாலே கொன்றார்கள்.

நிலவும் இந்த கொடும் சூழலை ஆபத்தான இரசாயன கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக சில பன்னாட்டு நிறுவனங்கள்

பயன்படுத்த ஆரம்பித்தன. இன்னும் சிலர் அனு உலை கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக்கினர்.

மனிதர்களின் அத்தனை வெறியாட்டங்களும் பெரும் அளவில் நடக்கும் பூமியாகி போனது.

மரம் அழித்தல், புல்வெளிகளை அழித்தல், கடல் வளம் பறிபோதல் , இரசாயன அனு கழிவுகளை கொட்டுதல்  என சோமாலியாவின் இயற்கை வளங்கள் எந்த முறையுமின்றி சிதைக்கப்பட்டன. சோமாலியர்கள் இருப்பை ஏகே47 களும் சிறு இனக்குழுக்களுமே முடிவு செய்தன. மழை பொழிவு இன்னும் இன்னும் குறைந்தது. வறட்சியை எதிர் கொள்ள முடியாமல் மக்கள் திணறினர். இதன் விளைவு பட்டினி சாவுகள் அதிகரித்தன. பட்டினி சாவுகளுக்கும் உள் நாட்டு போருக்கும் இடையில் சிக்கி தீர்க்க இயலாத சுழற்சியில் சிக்கிக் கொண்டது சோமாலியா என்னும் கவிதைகளின் தேசம்.

1991ல் இருந்து ஆரம்பித்த இந்த சூழல் மனித வரலாற்றிலே இதுவரை காணாத மனித அழிவை கொண்டு வந்தது. இதை யாராலும் தீர்க்க முடியாத ஒரு சூழலாகவே இன்றும் திகழ்கிறது இந்த “ஆப்ரிக்காவின் கொம்பு” என்றும் “கவிஞர்களின் தேசம்” என்றும் அழைக்கப்படும் சோமாலியா !!

இவர்களின் மொழி இந்தச் சாவுகளை தடுக்கவில்லை…

இவர்களின் மதம் இந்தச் சாவுகளை தடுக்கவில்லை…

இவர்களின் கலாசாரம் இந்தச் சாவுகளை தடுக்கவில்லை….

இவர்களின் கவிதைகள் இந்தச் சாவுகளை தடுக்கவில்லை….

இவர்கள் யாராலும் தடுக்கமுடியாத கொடுங்கனவை தங்களின் யதார்த்த வாழ்வாக்கிக் கொண்டார்கள்.

தங்களை சபிக்கப்பட்ட பூமியாக்கிக் கொண்டார்கள்.

சோமாலிய தேசத்து குடிகளுக்கிடையில் ஏன் இவ்வளவு வன்முறை என்று இதுவரை யாராலும் சரியான காரணம் கூற இயலவில்லை. இவர்கள் ஒரே மொழி, மதம், கலாசாரம், ஒரே இனமாக இருந்தாலும் கூட எப்படியாவது பெரும் சிரமப்பட்டு தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை கண்டுபிடித்து அடித்து கொள்கிறார்கள் என்கிறார்கள்.

மீண்டும் அவெஞ்சர்ஸ் கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. வளங்களை பெருக்காது அதை நொறுக்கத் துடிக்கும் மனித இன பெருங் கூட்டம் உருவாக்கும் சமநிலையற்ற சூழலில் தேனோஸ் என்கிற அழிப்பு தவிர்க்க முடியாதுதான் போல!!

எனவே வளங்களை காப்போம். நம் அரசியல் வளங்களை குறித்ததாக ஆக்குவோம்.

அகண்ட நாடு மொழிவெறி, இனவெறி,சாதிவெறி,மதவெறி அரசியலுக்கு மாற்றாக வளங்களை காத்தல், அதை பெருக்குதல், முறையாக நுகர்தல் என்கிற அரசியலை முன்னெடுப்போம்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close