தொடர்கள்

சோமாலியா எனும் கவிதைகளின் தேசம்.. ! – 1

நிர்மல்

நமது கொடுங்கனவே இவர்களின் அன்றாட வாழ்வாகிப்போனதுஇந்த தேசத்தின் மக்கள் குறித்த எல்லா செய்திகளையும் என்றும் கூர்ந்து நோக்கியது கிடையாது. சிறிய அளவு கருணை மனதை ஈரமாக்கும், ஆனால் அது அடுத்த கட்டத்திற்க்கு நகரும் முன் வேறு ஏதேனும் ஒன்றில் மனதை செலுத்தி, இன்னொரு காலம் மற்றுமொரு வெளிக்கு கடத்தி விடுவேன். இதைக் குறித்து எதையும் பார்க்கத் தயங்குவேன். யதார்த்த நிகழ்வுகளிலிருந்து மெல்ல என்னை நானே பிரித்துக் கொள்வேன்

ஆப்பிரிக்க கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் செங்கடலும் இருபுறம் சூழ மற்ற நிலப்பகுதியை லிபியா, எத்தியோபியா, கென்யா நாடுகள் சூழ, ஆப்பிரிக்காவின் கொம்பாகத் திகழும் இந்த நிலப்பரப்பேசோமாலியா.” மற்ற ஆப்பிரிக்க நிலப்பகுதி போல் வெளியுலக  தொடர்பு இல்லாத நிலப்பகுதி அல்ல சோமாலியா. பண்டை காலம் முதல் கடல் வணிகத்தின் இணைப்பு சங்கிலியாக இருந்திருக்கிறது இந்த நிலப்பரப்பு. அரேபியர்கள் நிர்வகித்து வந்த  இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சோமாலியா நிலப்பரப்பு மிக முக்கியமானது. பின்னர் இங்கிலாந்து, ஃபிரான்சு மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இந்த நிலப்பரப்பை தங்களுக்குள் பிரித்து காலனியாக்கி சக்கையாக்கினர்.

ச்சூஎன்றால் போ (ச்சூ என நாம் விலங்கினத்தை விரட்ட பயன்படுத்தும் ஒலி), மால் என்றால் பால், அதாவது போய் பால் கற என்கிற அர்த்தம்.. இந்த சூமால் தான் பின்னர் சோமாலியாவானதாம். கால் நடைகள் செழித்து வளரும்  நிலப்பரப்பு இன்னும் அகண்ட பாலை பகுதி, செங்கடலும் இந்திய கடலும் தரும் வளமான கடல் மீன்கள்பன்னெடுங்காலமாக இந்த இயற்கை வளத்தை அளவாக பகிர்ந்து வாழத்தெரிந்த  அறிவான வலுவான மக்களை கொண்டது இந்த சோமாலியா. The most tall and handsome people எனக் குறிப்பிடப்பட்ட இனக்குழு கூட்டமே சோமாலி மக்கள். மொழி சோமாலி. நபிகளுக்கு பிறகு முழுக்க முழுக்க இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள். மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல பல மதங்கள் மொழிகள் என்கிற நிலைக்கு மாறாக…. 

ஒரே மொழி 

ஒரே மதம்

ஒரே மதப் பிரிவு

ஒரே கலாச்சாரம் 

பல இனக்குழு

இன்னும் பல உட்பிரிவு இனக் குழு உட்பிரிவுகள் கொண்ட நாடு  இந்த சோமாலியா.
       
அரபிய வழித்தோன்றல்கள் என கருதப்படுகிறவர்கள். அரேபிய கூட்டமைப்பில் உறுப்பினரும் கூட. காலனி ஆதிக்கத்தில் சக்கையாக்கப்பட்ட சோமாலியா 1960ல் சுதந்திரம் அடைந்தது. தன்னைக் குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டு தனக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கியது. நிலப்பரப்பைப் பிரிக்கும் பொழுது சோமாலிய மேற்கு நிலப்பகுதி எத்தியோப்பியாவிடம் சென்றது. எத்தியோப்பியாவின் ஆட்சி அதிகாரத்தில் அது இருந்ததால் யாரும் அந்த நிலப்பகுதியை சோமாலியாவிடம் ஒன்றிணைக்க வேண்டுமென நினைக்கவில்லை. யாரும் ஆதரவு தரவும் இல்லை. இந்த நிலையில் அடைந்த இந்த சுதந்திரத்தை  சோமாலிய தேசியவாதிகள் கோபத்தோடும் முணுமுணுப்போடுமே ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் மேற்குப் பகுதியில் வாழும் தங்கள் சகோதரர்கள் இன்னும் அடிமையாக இருக்கிறார்களே என்கிற எண்ணத்தோடு தான் சுதந்திரக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டன. விடுதலையின் போதே மேற்கு பகுதியிலிருந்து சோமாலியாவுக்கு பலர் குடியேறினர். தங்களுக்கென ஒரு தேசம் படைக்க ஆரம்பித்தனர்.

Abdirashid Ali Shermarke 

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு Abdirashid Ali Shermarke என்பவர் பிரதமராகினார். இவர் தங்களின் நில வளமான கால் நடை வளர்ப்பு மற்றும் அவைகளை ஏற்றுமதி செய்வதில் புரட்சி செய்தார்பனிப்போர் காலம் அது. அக்காலத்தில்  ஆப்ரிக்க கண்டத்திலே எத்தியோப்பியாவில் மட்டுமே மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அது  அமெரிக்காவுக்கு ஆதரவு தேசமாக இருந்தது. அதனால் புதிய சோமாலியாவுக்கு ரஷ்யா ஆதரவானது. பல ராணுவத் தளவாடங்களை சோமாலியாவில் நிறுவியது ரஷ்யாதேசக் கட்டமைப்பை உலக நாடுகளின் உதவியோடும் ரஷ்யாவின் உதவியோடும் மெல்ல மெல்ல கட்டத் துவங்கியது சோமாலியா எனும் தேசம்

சோமாலியா கவிஞர்களின் தேசம்.

கவிதைகளின் தேசம்.

வாய்வழி மொழி கொண்டே கவிதை புனைந்து

சரித்திரம் கடத்திய தேசம்.

இங்கு எல்லாமே கவிதை தானாம்.

நிகழ்வுகளை கவிதைகளாக்கி,

உணர்வுகளை வார்த்தைகளுக்குள் பூட்டி

கவிதைகளையே வரலாற்று ஆவணமாக்கிக் கொள்வார்களாம்

அதை மனனம் செய்து தலைமுறை தலைமுறையாக கடத்துவார்களாம். இவர்கள் எழுதிய கவிதைகள் ஏராளம். இவர்கள் எழுதிய தேசமெனும் கவிதையோ துன்பியல் வரலாற்றுக் கவிதை !!

தொடரும்..

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close