சிறார் இலக்கியம்
Trending

சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா

 

1 . காகமும் முத்துமாலையும்

ஆலமரம் ஒன்றின் கிளையில்

அழகாய் கூடு கட்டியே

அருமை காகம் ஒன்றுமே

அமைதியாக வாழ்ந்து வந்தது..

 

திங்கள் தோறும் முட்டையிடும்

அங்குமிங்கும் பறந்து சென்று

திரும்பி வந்து கூட்டினை

பார்த்து காகம் அதிர்ந்திடும்

 

காகம் பறந்து சென்றபின்

கூட்டில் இருக்கும் முட்டைகளை

நாகம் ஒன்று விழுங்கியே

நாளும் உடலை வளர்த்தது

 

செல்ல முட்டைகள் காணாது

உள்ளம் வாடி அழுதது

மெல்ல தலையை நீட்டிடும்

பாம்பைக் கண்டு அஞ்சியது

 

கலங்கி நிற்கும் காகத்தை

காரணம் கேட்டது நரியுமே

நடந்த துயரம் சொல்லியே

நலிந்து நின்றது காகமே

 

கவலை வேண்டாம் தோழியே

கவனமாய் ஒன்றைச் செய்திடு

உனது துயர் நீங்கிடும் உவகை உன்னைச் சேர்ந்திடும்

என்ற நரியின் சொல்கேட்டு

நடக்க விழைந்தது காகமும்..

 

குளத்தில் ராணி குளிக்கையில்

கரையில் வைத்த முத்துமாலையை

கவர்ந்து கொண்டு பறந்தது

கண்ட ராணி கத்திடவே

 

விரைந்து பறக்கும் காகத்தை

வீரர் துரத்தித் தொடர்ந்திட

புற்றில் மாலையை போட்டது

காட்டில் மறைந்து கொண்டது

 

மரத்தில் ஏறி முத்து

மாலை எடுத்த வீரர்கள்

நாகம் இருக்கக் கண்டனர்

நான்கு துண்டாய் வெட்டினர்

 

தொல்லை நீங்கி விட்டதால்

தொடர்ந்து குஞ்சு பொரித்துமே

இல்லம் மிழ்ச்சி பொங்கிட

இன்பமாய் வாழ்ந்தது காகமே!

 

நஞ்சு மிகுந்த நாகத்தை

வென்றிட யோசனை சொல்லிய

நல்ல நண்பனை போற்றியே

நன்றி கோடி கூறிற்று

 

கெடுவான் கேடு செய்திடுவான்

கேட்டோர் அறிந்து கொள்ளுங்கள்!

உயிர் காப்பான் தோழன்

உணர்ந்து கொள்வோம் யாவருமே!

************************

2. இரண்டு பூனைகளும்

ஒரு ரொட்டித்துண்டும்…

 

இரண்டு பூனைகள் சேர்ந்து

புரண்டு விழுந்து எழுந்தன

ரொட்டித் துண்டு ஒன்றிற்கு

வெட்டி சண்டை போட்டன

 

மரத்தில் ஆடிய குரங்கொன்று

வலிந்து சென்று பூனைகளிடம்

பாதிப் பாதியாய் பிரித்து

பகிர்ந்து அளிப்பதாய் சொன்னது..

 

ஓடிச் சென்று தராசினை

எடுத்து வந்து ரொட்டியை

இரண்டு பாகமாய் பிட்டு

தட்டில் வைத்து நிறுத்தது..

 

ஒன்று பெரிதென சொல்லியே

ஓரமாய் கொஞ்சம் கடித்தது

மீண்டும் நிறுத்துப் பார்த்திட

மறுபக்கம் எடை கூடிற்றென்று

மகிழ்ந்து கொஞ்சம் தின்றது..

 

சமமாய் பிரித்துத் தருவதாய்

சாக்கு சொல்லிச் சொல்லியே

சிறிது சிறிதாய் ரொட்டியை

சீக்கிரம் குரங்கு தின்றது..

 

தின்று முடித்த குரங்கு

தாவி மரத்தில் ஏறியது

தட்டில் ரொட்டி இல்லாமல்

தவித்துப் போயின பூனைகள்

 

மட்டில்லாத கவலை யுடன்

மரத்தை நிமிர்ந்து பார்த்தன

விட்டுக் கொடுக்காத குணத்தினால்

வெறுங் கையுடன் சென்றன

 

நீதி:

ஊர் இரண்டு பட்டால்

கூத்தாடிக்குக் கொண்டாட்டம்..

யார் கொஞ்சம் குறைந்தாலும்

ஏற்றுக் கொள்வோம் பொறுமையுடன்..

************************

3. எறும்பும் வெட்டுக்கிளியும்…

 

வயல்வெளி ஒன்றின் ஓரத்தில்

வெட்டுக்கிளி ஒன்றும் எறும்பும்

நல்ல நண்பர்களாய் வசித்தன

நாளும் கூடி மகிழ்ந்தன…

 

வசந்த காலம் வந்ததும்

வான ஒளியில் தனைமறந்து

ஓடியும் ஆடியும் பாடியும்

விளையாடியும் கழித்தது வெட்டுக்கிளி

 

எறும்போ சோம்பிக் கிடக்காமல்

எப்போதும் உழைப்பு உழைப்பு

என்றேதான் உணவைத் தேடி

எங்கெங்கும் அலைந்து திரிந்தது

 

எறும்பு நண்பா,இப்போது

என்னோடு வந்து விளையாடு

எழில் நிறைந்த காலமிது

என்றே அழைத்தது வெட்டுக்கிளி

 

மழைக்காலம் வந்து விட்டால்

சாப்பிட எதுவும் கிடைக்காது

உழைத்துச் சேமித்து வைத்தால்தான்

உட்கார்ந்து உணவை உண்டிடலாம்

 

எனவே ஓடுகிறேன் நண்பனே

உன்னோடு வரமுடியாது இப்போது

என்று சொல்லி நகர்ந்தது

என்றும் சுறுசுறுப்பு எறும்புதான்

 

கால மாற்றம் நிகழ்ந்தது

கனத்த மழைத் தொடர்ந்தது

உணவைத் தேடி வெட்டுக்கிளி

வெளியில் சென்றிட முடியவில்லை

 

தானியம் ஒன்றும் கிடைக்காமல்

தவித்துத் துடித்தது வெட்டுக்கிளி

பட்டினிக் கிடந்து வாடியதால்

பலத்தை இழந்து போனது

 

செயலில் கவனம் வைத்ததால்

செம்மை யான மழையிலும்

சேமித்த உணவை உறவுகளுடன் சேர்ந்தே உண்டது எறும்பு..

 

நீதி:

சும்மாக் கிடந்து சோம்பலுற்றால்

சோறு கிடைத்திடல் கடினமே!

எதிர்காலத்தை மனதில் வைத்தே

சேமித்து வைப்போம் இப்போதே!

 

************************

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close