சிறார் இலக்கியம்

ராசாத்தி- சிறார் கதை

- விழியன்

 

ஞாயிறுக்கிழமை. காலை எழுந்ததுமே தன் தந்தையை நச்சரிக்க ஆரம்பித்தாள் ரஞ்சனா. ஞாயிறு ஒரு நாள் மட்டும் தான் ரஞ்சனாவின் அப்பா சம்பத்திற்கு விடுமுறை நாள். வாரம் முழுக்க கடுமையான உடல் உழைப்பு வேறு. மற்ற நாட்களில் காலை ஏழு மணிக்கே கிளம்பி கடைக்கு போய்விடுவார். சில ஆண்டுகளாகத்தான் ஞாயிறு கட்டாய விடுமுறை விட்டுவிட்டார். அதுவும் குழந்தைகள் இருவரும் கண்டிப்பாக போகக்கூடாது என வற்புறுத்தலின் பெயரில் நின்றுவிட்டார். ஞாயிறு மட்டும் எட்டு மணிக்குத்தான் படுக்கையைவிட்டே எழுந்திருப்பார். விழிப்பு தட்டினாலும் சும்மாவே புரண்டுகொண்டு இருப்பார். அதே போல அம்மாவிற்கு சமையற்கட்டில் விடுமுறை. ஞாயிறு மதியம் சம்பத் தான் சமையல் செய்வார் குழந்தைகளுடன்.

 

“அப்பா, ஒரு சிக்கலாகிடுச்சுப்பா. என் பையும் டேவிட் பையும் மாறிட்டு இருக்கு” – ரஞ்சனா

“எந்த பை”

“ஸ்கூல் பைப்பா”

“ஏண்டா அது கூடவா தெரியாது”

 

பள்ளியில்  ஒரே மாதிரியான பைகளை வெளிநாட்டில் வாழும் நபர் ஒருவர் எல்லோருக்கும் வழங்கி இருந்தார். சென்ற வருடம் எல்லாம் இந்த சிக்கல் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களே பைகளை வாங்கிக்கொள்ள வேண்டும். எப்படியும் பையில் தங்கள் பெயரை குழந்தைகள் எழுதி வைத்திருப்பார்கள். ஆனாலும் எப்படியோ மாறிவிட்டிருந்த்து.

 

அம்மா குறுக்கிட்டார். “சனிக்கிழமை மதியம் வந்ததில் இருந்து பையையே திறக்கலையா? செவ்வாய் எக்ஸாம் இருக்குன்னு சொன்னியே கண்ணு”.                                                               

”சரி, ஏதோ மறந்துட்டா.”

“ஆனா, ஏதோ நேத்து சாயிந்திரம் எழுதிட்டு இருந்தாளே..”

“ரஞ்சனா, டேவிட் வீடு எங்க இருக்கு. அவன் அப்பா அம்மா ஃபோன் நம்பர் இருக்கா?”

”அவன் அவங்க பாட்டி கூட இருக்கான்பா. நம்பர் இருக்கு ஆனா அது என் ரஃப் நோட்ல இருக்கு”

 

காலை உணவு முடித்துவிட்டு ரஞ்சனாவும் அப்பாவும் டேவிட் வீட்டிற்கு பையுடன் செல்வதென முடிவு. ஞாயிற்றுகிழமை காலையில் பிள்ளைகள் ரஞ்சனாவும் அவள் தங்கையும் அப்பாவின் எல்.எம்.எல் வெஸ்பாவை துடைத்துக்கொடுப்பார்கள். அது அவர்களின் வாராந்திர வேலை. இன்றும் அப்படி செய்துவிட்டார்கள். ஏனோ இன்று வழக்கத்தைவிட படு சுத்தமாக இருந்தது. டேவிட்டின் வீடு ரஞ்சனாவிற்கு தெரியாது. அவர்கள் வகுப்பில் படிக்கும் ஹேம்நாத்தின் வீடு அவளுக்கு தெரியும். ஹேம்நாத்தின் வீட்டிற்கு அருகிலே தான் டேவிட்டின் வீடு இருக்கு.

 

“ஏம்மா, கூட படிக்கிற பசங்க வீட்டுக்கு எல்லாம் போக மாட்டீங்களா. இந்த காலத்து பசங்க சரியே இல்லை” என சலித்துக்கொண்டார் அப்பா. “நாங்க எல்லாம் படிக்கும்போது ஒவ்வொரு நாள் சாய்ந்திரம் ஒருத்தங்க வீட்டுக்கு எப்படியாச்சும் போயிடுவோம்” என பழைய கதை பேச ஆரம்பித்துவிட்டார்.. ”பையில இருந்து புத்தகம் எதுவும் வெளிய எடுக்கலையே ரஞ்சனா” என பையை முன்னே வைக்கும்போது விசாரித்தார். ரஞ்சனாவிற்கு வெஸ்பா வண்டியில் முன்னே அமர ரொம்ப பிடிக்கும். வண்டியில் முன்னர் எல்லாம் அவள் தான் அமருவாள். இப்போது தங்கை போட்டிக்கு வந்துவிட்டாள். தனியாக அப்பாவுடன் செல்லும்போது முன்னே அமர கேட்பாள் ஆனால் “நீ வளர்ந்துட்டடா அப்பாவுக்கு தலை மறைக்கும் இல்ல” என்று சொல்லிவிடுவார். இன்று ரஞ்சனா முன்னே அமரகேட்கவில்லை. ஹேம் அவன் வீட்டில் இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள்.

 

பத்து நிமிடத்தில் ஹேம் வீட்டிற்கு போயிருக்கலாம். ஆனால் வழியில் வண்டிக்கு காற்று அடிக்க காத்திருக்க வேண்டி இருந்தது. “அப்பா, வரும்போது அடிச்சிக்கலாமேப்பா” என்றாள். ஏற்கனவே இரண்டு முறை ஹேம் வீட்டிற்கு சென்று இருந்ததால் எளிதாக கண்டுபிடித்தாள். ரஞ்சனாவை மட்டும் வீட்டிற்குள் அனுப்பி ஹேமை அழைத்து வரச்சொன்னார் அப்பா. ரஞ்சனா உள்ளே சென்ற சில விநாடியில் ஹேமின் அம்மா வெளியே வந்தார் “வாங்க ரஞ்சனா அப்பா. வீட்டுக்குள்ள வந்து உட்காருங்க. ஹேம் மேல குளிச்சிட்டு இருக்கான் ரெண்டு நிமிஷத்தில் வந்திடுவான். எப்பவும் காக்கா குளியல் தான்”. வெளியவே நிற்பதாக சம்பத் தெரிவித்துவிட்டார். ஐந்து நிமிடத்தில் ரஞ்சனாவும் ஹேம்நாத்தும் வெளியே வந்தனர். “அங்கிள் நாங்க ரெண்டு பேரும் சைக்கிள்ள வரோம். நீங்க பின்னாடியே வாங்க” என கட்டளையிட்டான். புன்னகைத்தபடி பின் தொடர்ந்தார் சம்பத்.

 

ரஞ்சனா சொன்னபடியே இரண்டு தெரு தள்ளி தான் டேவிட் வீடு இருந்தது. இந்த வீட்டில் டேவிட்டின் பாட்டி வந்து உள்ளே அழைத்தார். அவரால் மறுக்கமுடியவில்லை. ரஞ்சனா, டேவிட் மற்றும் ஹேம்நாத் மூவரும் அறைக்கு உள்ளே சென்றுவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர். சில விநாடிகளில் “அங்கிள் பை ! அம்மா கடைக்கு போகச்சொல்லி இருந்தாங்க, போயிட்டு வரேன்” சம்பத் ஹாலில் அமர்ந்தார். தண்ணீர் சொம்பினை நீட்டியபடி “டேவிட்டோட அம்மாவும் அப்பாவும் ஒரு விபத்தில் இறந்துட்டாங்க. ஸ்கூல்ல அவங்க அப்பா அம்மா ஊர்ல இருக்கிறதா சொல்லி இருக்கான். அவன் மாமா வெளிநாட்ல வேலை செய்றான். அவன் தான் படிக்க வைக்கிறான். வெளிநாட்ல ரொம்ப சிரமப்பட்றான். இவனை எப்படியாச்சும் நல்லா படிக்க வெக்கணும்னு தான் இந்த ஸ்கூல்லையே சேர்த்திருக்கான்” மேலும் சில விசாரிப்புகள் “பை எல்லாம் ஒண்ணு போலவே இருக்கிறதால மாறிடுச்சு போல இவனும் கொஞ்ச நேரம் முன்னாடி தான் பார்த்து சொல்லிட்டு இருந்தான்”

 

“ரஞ்சனா.. போலாமாம்மா” என்று கூறியதற்கு பின்னர் சில நிமிடங்களில் வெளியே வந்தாள்.

 

பாட்டியும் டேவிட்டும் வெளியே வந்து வழி அனுப்பினர். வண்டியை கிளப்பும் முன்னர். “ராசாத்தி முன்னாடி வந்து உட்கார்ந்துக்கோ” என்றார். “மறைக்குமேப்பா” என்றதற்கு “பரவாயில்லை, வா!” என்றார். ராசாத்தி என்பது சம்பத்தின் அம்மாவின் பெயர். ரஞ்சனாவின் பாட்டி. அவர் இறந்துவிட்டார். ரஞ்சனா அவள் பாட்டி போலவே இருப்பதாக அடிக்கடி அப்பா சொல்லுவார். ரொம்ப பிரியமாக இருக்கும்போது ரஞ்சனாவை ராசாத்தி என்பார். அவள் தங்கையையும் அப்படி அழைப்பதுண்டு.

 

மூன்று மாதமாக ஒரு கடையில் பஃலூடாவை (ஒரு வகை ஐஸ்கிரீம்) கேட்டுக்கொண்டு இருந்தாள் ரஞ்சனா. சரியாக அந்த கடையில் வண்டியை நிறுத்தினார். “என்னப்பா எனக்கா?”. “இங்க ஒண்ணு சாப்பிட்டுக்கோ. வீட்ல போய் அம்மா தங்கச்சிக்கூட இன்னொன்னு சாப்பிட்டுக்கோ” என்றார். “என்னப்பா செம குஷி மூட்ல இருக்கீங்க போல”. மகள் ரசித்து ரசித்து அந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதை ரசித்தார் சம்பத். மீண்டும் வண்டியை கிளப்பும்போது அவளை முன்னே அமரச்செய்தார். டேவிட்டின் வீட்டில் சன்னமாக கேட்ட உரையாடல் நினைவிற்கு வந்தது.

 

“ஹே ரஞ்சனா நான் எழுதாம விட்டிருந்த நோட்ஸ் எல்லாம் எழுதிட்டு இருக்க போல. டேங்ஸ்ப்பா”

“டேய் ஒழுங்கா செவ்வாய்கிழமை எக்ஸாமுக்கு படி”

ஹே. என் பை கீழ கிழிஞ்சு இருந்துச்சே அதையும் தெச்சிட்டியே. ரொம்ப டேங்ஸ்ப்பா”

 

பை எதேர்ச்சையாக மாறவில்லை, மாற்றி இருக்கின்றாள் உதவுவதற்காக. ரஞ்சனா தன் அப்பாவின் மனதில் உயர்ந்து நின்றாள். தன் மகளின் அன்பினையும் பரிவினையும் எண்ணியதில் அவர் கண்களில் கண்ணீர் தளும்பியது.

“என்னப்பா மறைக்குதா”

“இல்ல ராசாத்தி…”

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close