சிறுகதைகள்

சில நிர்பந்தங்கள் – ஜீ. கணேஷ்

சிறுகதைகள் | வாசகசாலை

வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே எழுந்து எப்போதும் செய்கிற வேலைகளைச் செய்துவிட்டு, வரப்பில் உட்கார்ந்து கால் விரலினால் புற்களையும், சிறு செடிகளையும் மண்ணோடு தோண்டியபடி, நேற்றைய இரவில் அவள் சொன்ன விசயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் புற்கள் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு காலடியில் செத்துகொண்டிருந்தன. அவையும் உயிர்தான் என்ற எண்ணம் இருந்தும், என்னையறியாமலே அங்கு  அந்த வேலை நடந்துகொண்டிருந்தது. தோட்டத்தில் முளைத்திருக்கும் களைகளைப் பிடுங்கிப் போடுவதுபோல என எண்ணிக்கொண்டாலும் அதுவும் ஓர் உயிர்தான். அதற்கும் வலிக்கும், உணர்ச்சிகள் இருக்கும். நான் யோசனையில் இருக்கும் விஷயமும் உயிர் சம்பந்தப்பட்டதுதான். உலகத்தில் மனித உயிர் மட்டும்தான் உசத்தி மற்றதெல்லாம் முக்கியமில்லை என்ற எண்ணம் எப்படி மனிதனின் மனதுக்குள் வந்ததோ தெரியவில்லை.

எந்தவிதக் காரணமும் இல்லாமலா அங்கு புற்களும் செடிகளும் வளர்த்திருக்கும்? அதன் பலனை அனுபவிக்காமல் இதோ என் காலால் பிடிங்கி எறிந்திருக்கிறேனே… இதனை என்னவென்று சொல்வது? எளிதாக உயிர் மண்ணில் தோன்றி வளர்வதைப் போல மனிதர்களுக்குள்ளும் இருந்திருந்தால், எனக்கிருக்கும் இப்போதைய பிரச்னை இருந்திருக்காது. மண்ணில் உருவான புற்களும் செடிகளும் எப்படி உயிர்கொண்டன? யார் உருவாக்கினார்கள் என்றெல்லாம் எந்தவொரு மனிதனும் கவலைக்கொண்டது இல்லை. இதோ இப்போது பிடிங்கி எறிந்ததைக்கூட யாரும் கண்டுகொள்வதுமில்லை. அதைப்பற்றி கவலைகொள்வதுமில்லை. பின்னர் ஏன் மனிதன் தன்னால் ஓர் உயிரினை உருவாக்க முடியாவிட்டால், அதனை அவமானமாகவும் அசிங்கமாகவும் பார்க்கிறது இந்தச் சமூகம்.

நேற்றைய இரவில் படுக்கைக்கு செல்லும் முன் அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து ஒரே சிந்தனைதான். மாதந்தோறும் இதுதான் தொடர்கிறதென்றாலும் முடிவுதான் என்ன? நானாவது பரவாயில்லை, அவள் இன்னும் அதிகமாக உடைந்திருந்தாள். “நாளைக்கு மாதவிலக்கு ஆகிரும்போல” என்று சொல்லும்போதே பார்வை விரித்திருந்த பாயின் மேல்தான் இருந்தது. நானும் என்ன செய்வதென்று தெரியாமல், அவளின் முகத்தைப் பார்த்துகொண்டிருந்தேன். அப்படியே எதுவும் பேசாமல் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் விசும்பும் சத்தம் கேட்டது. அருகில் அமர்ந்திருந்த என்னால் எதுவும் செய்யமுடியாத நிலை. கடந்த இரண்டு வருடத்தில் செய்யாத ஆறுதலையா இப்போது செய்துவிடப்போகிறேன் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. முதுகு குலுங்குவது தெரிந்தது. அழுகிறாள். அதுவாவது அவளுக்கு ஆறுதல் தரட்டும் என்ற எண்ணத்தில் நான் தடுக்கவில்லை. எப்போது தூங்கிப் போனோமென்று தெரியாது. விடிந்தபோது அருகில் அவளில்லை. எழுந்து பார்த்தேன். வெளியில் அம்மாவும் அவளும் ஏதோ வேலையில் மும்முரமாக இருக்க, நான் தோட்டத்துக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.

இந்நேரம் அம்மாவுக்கு விஷயம் தெரிந்திருக்கும். இல்லையென்றாலும் கொஞ்ச நேரத்தில் மனைவியே சொல்லிவிடுவாள். இதுவரை சாதாரணமாக இருக்கும் அம்மா, தனது நிலையிலிருந்து மாறி வார்த்தைகளினால் அவளைக் குத்துவாள். இது மாதந்தோறும் அந்த மூன்று நாட்களில் நடக்கிற விஷயமென்றாலும் ஏற்கனவே மனைவி படும் வேதனையில் இன்னும் பிற்சேர்க்கையாக அமைந்துவிடும் என் அம்மாவின் பேச்சு. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்பதாய் இல்லை. கடமைக்கு நான்கு வார்த்தைகள் சொல்லிக்காட்டாமல், மூன்று நாட்களை அம்மா கடக்கவிட்டதில்லை. திட்டும் பாணியிலோ, குறை சொல்லும் பாணியிலோ இல்லாவிட்டாலும், அறிவுரை என்ற பேச்சில் அம்மா அவளிடம் சொல்லும் விஷயம்தான் மனைவியின் ரணத்தை இன்னும் அதிகமாக்கும். அம்மா ஆறுதலாக ஏதாவது சொல்ல நினைத்தாலும், மனைவிக்கு என்னமோ நம்மை இதற்குத்தான் குறையாகச் சொல்கிறார்கள் என்ற எண்ணம் எப்போதோ மனதில் பதிய ஆரம்பித்திருந்தது.

திருமணமான சில மாதங்களாகக் கேட்டுக்கொண்டிருந்த கிராமத்துக் காரர்கள், இப்போதெல்லாம் அவர்களுக்குள்ளே பேசிக்கொள்வதோடு சரி. இவளிடம் ஏதும் கேட்டுவைப்பதில்லை. நெருங்கிய உறவினர்கள் மட்டும் பாசம் பொழிகிறேன், அன்பாக இருக்கிறேன் என்ற நினைப்பில் கேட்பதுகூட இவளுக்கு ஒரு குற்ற உணர்ச்சியையே ஏற்படுத்தி வந்தது. அவர்கள் ஏன் பிள்ளை பெற்றுக்கொள்வதில் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்? நமக்குப் பிள்ளை பிறந்தால் அவர்களுக்கென்ன? பிறக்கவிட்டால் என்ன? என்றெல்லாம் மனைவி என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாகச் சிரித்துவிட்டு, “அதையெல்லாம் நீ கண்டுக்காதே. அவர்களுக்கு வேறு வேலையில்லை. அப்படித்தான் அவர்கள்” என ஆறுதல் சொல்வதோடு சரி.

நான் ஆம்பிளை என்பதால் இந்த மாதிரியான கேள்விகள் என்னிடம் வருவதில்லை. இந்தச் சமூகம் எத்தனை விசித்திரமானது. குழந்தைக்கு இருவரும்தானே பொறுப்பு? அதென்ன எல்லோரும் அவளிடம் மட்டுமே ஓர் அனுசரணை?அனுதாபம்? என்னிடம் கேட்டால் அதற்குச் சரியான பதிலை எப்போதுமே வைத்திருந்தேன். ஆனால், இதுவரை அந்த வகையில் என்னிடம் யாரும் கேட்கவில்லை.

காலை சாப்பாட்டுக்கு அமர்ந்தபோதுகூட அவளாக எதுவுமே பேசவில்லை. பரிமாறிவிட்டு எதுவும் நடக்காதது போலவே இருந்தாள். நானாகத்தான் கேட்டேன், “அம்மா எதுவும் சொன்னார்களா?” என்று. அடுப்பில் ஏதோ வேலை செய்துகொண்டே, “எல்லாம் வழக்கம்போல நடந்து முடிந்துவிட்டது. இனி நடப்பதற்கு ஒன்றுமில்லை” என்றாள். அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நிகழ்வுகளை என்னால் கற்பனை செய்துகொள்ள முடியும். ஏனென்றால், இது மாதாமாதம் நடக்கின்ற நிகழ்வுகள்தான்.

அம்மா வழக்கமாகச் சொல்வதுதான், “என்ன வைத்தியம் பார்த்து என்ன செய்ய? கொடுப்பினை இருந்தால்தானே தங்கும். நான் யாருக்கு என்ன பாவம் செய்தேனோ? எனது குடும்பத்துக்கு இந்த நிலைமை” – இதுதான் அவளின் மனப்பாட வசைபாடல். இதனைச் சில நேரங்களில் கேட்டும் கேட்காமலும் நகரும் என் மனைவி, சில நேரங்களில் எதிர்த்து சண்டை போடுவதுமுண்டு. அந்தச் சூழ்நிலையில் நானிருந்தால், தலையிட்டு சமரசம் செய்துவைப்பேன். அவளுக்கு மட்டும் பிரச்னை இருக்காது. எனக்கும் சேர்த்துதான் இருக்கும். ஏன் அவளை மட்டுமே திட்டுகிறாய் என்ற கேள்வியினால் அம்மா அமைதியாகிவிடுவாள். இந்த விஷயத்தில் மனைவியை ஒருபோதும் நான் விட்டுக்கொடுத்ததில்லை. அவளும் எங்கள் இருவரில் யாருக்குக் குறையென்று பிரித்துப் பார்க்காமலே எல்லாப் பழியையும் அவளே தாங்கிக்கொண்டிருந்தாள்.

திண்ணையில் உட்கார்ந்திருந்த எனதருகில் வந்து அமர்ந்தாள். சோர்வும் வருத்தமும் எதையோ இழந்த முகபாவனையும் என்னை ஏதோ செய்தது. சேலையால் முகத்தைத் துடைத்தபடி என்னைப் பார்த்து மெல்ல சிரித்தாள். இது அவளின் சந்தோஷ சிரிப்பில்லை. எனக்கு நன்றாகவே தெரியும். என்னதான் பிரச்னை இருந்தாலும், எங்கள் இருவருக்குள்ளும் ஒருவித ஆழ்ந்த புரிதல் இருக்கவே செய்தது. அதுதான் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் இன்னும் எங்களைப் பிரிக்காமல் வைத்திருக்கிறது.

“வருத்தப்படாதே நமக்கும் நல்ல காலம் பிறக்கும்” என்றேன் அவளின் முகத்தைப் பார்க்காமலே.

“அது எப்போன்னு தெரிந்தால் நல்லா இருக்கும். இப்படியிருக்கிறது நரகத்தைவிட மோசமா இருக்கு எனக்கு” என்றாள் உடைந்த குரலில்.

“நீ வேண்டுமானால் அம்மா வீட்டுக்குப் போய் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வாயேன்?”

“வேண்டாம்! எதுனாலும் இங்கேயே சமாளிக்கிறேன். இதே கேள்விகள்தான் வேறென்ன புதுசா இருக்கப் போகிறது அங்க மட்டும்?”

“அதுவும் சரிதான்” என்றேன்.

“இந்த மாதம் டாக்டர் வரச் சொல்லியிருந்தார். போய்ப் பார்த்துவிட்டு வந்திருவோம். ஒரு அஞ்சு நாள் கழிச்சு” என்றேன்.

“என்னத்த பார்த்து என்ன ஆகப்போகிறது? எனக்கு நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சிட்டு வருது. கடவுளாவது பார்த்து உதவி செய்யவேண்டும். அதும் இல்ல, இந்த மருத்துவமும் கை கொடுக்கல. இனி என்னதான் மீதியிருக்கு பாக்க? இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். ”

“குறை உனக்கு மட்டுமில்லை எனக்கும்தானே இருக்கும்? என்ன இப்போதைக்கு உன்னிடம் உள்ள கர்ப்பப்பை நீர்க்கட்டி ஒரு காரணமா இருக்கு. அது சரியாகிடுச்சுனா அடுத்து என்னிடம் குறையிருந்தால் வெளியே தெரிய வரும்ல?”

“அப்படியிருக்காது! எனக்கு ஆறுதல் சொல்கிறதுக்காக உங்களைக் குறை சொல்லி சமாளிக்காதீங்க. சரி, கண்டிப்பா ஆஸ்பத்திரி போய்தான் ஆகணுமா?”

“போவோம். எதையும் முயற்சித்துப் பாக்காமல் விட்டுட்டோம் என்ற குறை இருந்துடக்கூடாது இல்லியா?”

“சரி, இந்த வட்டமும் சரியாகாமல் போனால் என்ன செய்வது?”

“சரியாகும் நம்பிக்கை வை. அப்படியே ஆனாலும் நமக்கென்ன அவ்வளவு வயசா ஆகிருச்சு? இன்னும் காலம் இருக்கு பிள்ளை பெத்துக்க.”

“காலம் இருக்கு இல்லைனு சொல்லல. அதுவரைக்கும் இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எனது உயிர் இருக்குமா தெரியலேயே…”

“எல்லாம் சரியாகிவிடும் ஒருநாள்” என்றேன் சிரித்தபடி.

“நீங்கள் எதை நம்புறீங்கன்னு எனக்குத் தெர்ல? ஆனா, எனக்கு நம்பிக்கையில்லை.”

“எப்பவும் அதைப்பற்றியே யோசிச்சுட்டு இருக்காம, சாதாரணமா இரு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொல்லியபடி அவளருகில் சென்றேன்.

நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் எப்போது வேண்டுமானாலும் கண்ணீர் வரலாம். தோள்பட்டையில் தட்டினேன். “போய் வேலையைப் பார். மனசைக் குழப்பிக்காதே” – சொல்லிவிட்டு நான் நகர்ந்து விட்டேன். அவள் இன்னும் அங்கு உட்காந்தபடி தரையைப் பார்த்து யோசித்துகொண்டிருந்தாள். இதற்குமேல் அங்கிருந்தாலும் இதைப் பற்றியேதான் எங்கள் பேச்சு இருக்குமென்பதால் நான் நகர்ந்திருந்தேன்.

அவள் பேசியதை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தடவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது ஒரு பெரிய போராட்டமாகத்தான் இருக்கப்போகிறது. விரக்தியின் விளிம்பிலிருந்த அவளின் பேச்சே இதை உணர்த்தியிருந்தது. போனமுறை மருத்துவர் உறுதியாகச் சொல்லியிருந்தார். நல்ல முன்னேற்றம் இருக்கிறது, கண்டிப்பாக இந்த மாதம் நல்ல விஷயத்தை எதிர்பார்க்கலாமென்று. ஆனால் எல்லாமே மாறியிருந்தது. இந்தமுறை போனாலும் அதையே சொல்லி எங்களை அனுப்பி வைக்கலாம். எங்களுக்கும் வேறு வழியில்லை. இந்தமுறை எனக்கும் சோதனை எடுத்துப் பார்க்கலாமென்று யோசித்திருந்தேன்.

உடலிலுள்ள சிறு குறைகளினால் மனது எந்தளவுக்குப் பாதிப்படையும் என்பதை முதன்முதலாக மனைவியின் மூலமாகப் பார்க்கிறேன். திருமணமான புதிதில் அப்படியொரு சந்தோசமான பெண்ணை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. எப்போதும் ஒரு சிரிப்பு கலந்த பேச்சு, நானோ அம்மாவோ ஏதாவது கோபமாகத் திட்டினாலும் கண்டுகொள்ளாமல் சிரித்துக்கொண்டே நகர்ந்துவிடுவாள். தனக்கான வீடு, தன்னுடைய புருசன் என்றெல்லாம் அவளின் மனதின் எண்ணங்களை என்னோடு அதிகமாகப் பகிர்ந்திருக்கிறாள். இந்தப் பிரச்னை ஆரம்பித்ததிலிருந்து என்னை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. அடுத்த மூன்று மாதங்களில் அவளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்திருந்தது. அவளே தன்னையறியாமல் வேறுவிதமாக மாறியிருந்தாள். சிரிப்பு இருந்த இடத்தில் கவலை வந்திருந்தது. கோபமும் இயலாமையும் எதிலும் ஒரு வெறுப்பை வெளிப்படுத்த, அவளை வேறுவொரு மனநிலைக்குத் தள்ளியிருந்தது. நானும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் தோற்றுப்போயிருந்தேன். நான் சொல்லும் ஒவ்வொரு ஆறுதலுக்கும் அவளிடம் பதில் கேள்வி இருக்கவே செய்தது. அந்தக் கேள்விக்கான விடைகள் என்னிடம் இல்லாததால் எப்போதுமே தோல்விதான். இந்த விஷயத்தில் அவள் பேசி வெற்றிபெறுவதென்பது அவளுக்கான ரணம்தான் என்பதை ஒருபோதும் அவள் உணர்ந்திருக்கவில்லை.

அவளோடு சேர்ந்து நானும் பாதிக்கப்பட்டிருந்தேன் என்றாலும், முழுவதுமாக நான் உணர்ந்தது என்னவோ இருவருக்குமான அன்பில் ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தியதிலிருந்துதான். எப்போதும் எங்களிடம் நிறைந்திருக்கும் ஆழமான அன்பு கலந்த உறவு அவளிடம் இல்லை. அதற்கு அவளை மட்டுமே என்னால் குறை சொல்லிவிட்டு நான் தப்பிக்க முடியாது. அவளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நானும் ஒத்துதான் போயிருந்தேன். ஏற்கனவே அதிகமான கவலையில் இருக்கும் அவளுக்கு என்னுடைய எதிர்ப்பு காட்டாதநிலை ஓரளவுக்கு நிம்மதியைத் தருமென்ற நம்பிக்கை எனக்கிருந்ததுதான் காரணம். பெரும்பாலான பேச்சுக்கள் குழந்தையைப் பற்றியே இருப்பதால், செல்லமான காதல் கலந்த அன்பினாலான வார்த்தைகளை நான் கேட்டே பல நாள்கள் ஆயிருந்தது. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய கடமை அவளுக்கு இருந்ததால், வெறுமனே  அவளின் பேச்சு என்னிடம் இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். ஏதோ கடமைக்காகப் பேசிக்கொண்டிருப்பாள். மிகுந்த துக்கத்தில் தாளாமல் புலம்பும்போது, என்னுடைய பழைய மனைவியை அவளிடம் பார்க்கலாம். அவளுக்குத் தேவையான ஆறுதலுக்கு என்னிடம் தஞ்சம் அடையும்போது, உண்மையான காதல் வெளிப்படுவதை எதனாலும் தடுக்க முடிந்ததில்லை. என்றைக்காவது நடக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அவளுக்குத் துணையாக எப்போதும் நானிருக்கிறேன் என்பதை உணர்த்தியே வந்திருக்கிறேன்.

அவளின் சந்தோசம் எதிலுமே நீண்ட நேரம் நீடித்திருந்ததில்லை. நன்றாகப் பேசிக்கொண்டிருக்கையில் அம்மா இடையில் நடந்து சென்றாலோ, அல்லது யாரவது வீட்டுக்கு வந்தாலோ, எழுந்து அறைக்குள் சென்றுவிடுவாள். அவளுக்கான தனியுலகம் அந்த அறைக்குள் இருந்ததா எனத் தெரியாது. அதன்பின் அதே கவலை தோய்ந்த முகமும், நாடகமான பதிலும்தான் தொடரும். எந்தளவுக்கு மனதளவில் பாதிப்படைந்திருந்தாள் என்றால், உடலுறவுகூட ஒரு கடமையாய்ச் செய்யும் நிலைக்கு அவளது மனது மாறியிருந்தது. எதில் அன்பிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த விஷயத்தில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் அப்படித்தான் இருந்தாள். அவளுக்குத் தேவை குழந்தை. அதற்கு உடலுறவு முக்கியம் அவ்வளவுதான். விவரமாகப் பேசியும் பார்த்தாகிவிட்டது. என்னால் முடியவில்லை என்ற பதிலே வந்தது. உடலுறவு நாடகமும் மாதவிலக்கு முடிந்து இத்தனையாவது நாளில் மருத்துவர் சொன்னபடி மட்டுமே. மற்ற நாள்களில் அதுவுமில்லை. மனம்விட்டுப் பேசும்போது இந்த விஷயத்தைப் புரியவைக்கப் போராடித் தோற்றிருக்கிறேன். ஏதோ நாடகம்போல் நடந்தேறும் அந்த உறவின் நோக்கம் ஒன்றுதான்… குழந்தை. அதற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டிய காதலும், காமமும், அன்பும் விலகிப் போய்ப் பல நாட்கள் ஆகியிருந்தது.

எப்போதாவது விரக்தியின் பிடியில் சிக்கி தவறான முடிவுக்குச் சென்றுவிடுவாளோ என்ற பயம் என்னுள் இருந்ததை உணர்ந்தவள், “என்மேல் விழுந்த கரையைத் துடைக்காமல் நான் சாகமாட்டேன் கவலைப்படாதீர்கள்” என்பாள். இப்போதெல்லாம் அவளின் மன ஓட்டங்களைப் புரிந்துகொள்வதென்பது சிக்கலான விஷயமாக இருந்தது. அவளின் மனதும் நிலையானதாக இல்லை. எப்போதும் ஒரே நினைப்பு, பிரச்னையிலிருந்து நமக்கான விடுதலை எப்போது? எப்படி இவர்களுக்கு இழந்த மரியாதையை நிரூபிப்பது? இவர்களின் கேள்விக்கான விடையை எப்போது நான் சொல்லப்போகிறேன்? போன்ற எண்ணங்களும் அதற்கான பிரதிபலிப்புகளுமே அவளை வழிநடத்திக் கொண்டிருந்தது.

அவள் நினைப்பதுபோல் இதுவொன்றும் நீங்காத கரையொன்றுமில்லை. மற்றவர்களுக்கு நிரூபிப்பதற்காகக் குழந்தை பெற்றுக்கொள்வதென்பது போட்டியொன்றுமில்லையே என்பதை பலமுறை எடுத்துச் சொன்ன போதும், அப்போதைக்கு `ம்ம்ம்’ கொட்டிவிட்டு, மீண்டும் அவளின் மனச் சிறைக்குள் சிக்கிவிடுவாள். குழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் சுகமாக இல்லியா? இப்போதைய மருத்துவத்தில் இதுவொன்றும் பெரிய காரியமில்லையென்று சொல்லி முடிக்கும் முன்பே அவளுடைய ஒற்றைக் கேள்வியான, “பின்ன ஏன் எனக்குக் குழந்தை பிறக்கவில்லை?” என்பதை கேட்டிருப்பாள். என்னிடம் பதிலில்லை என்பதாலோ, அல்லது நான் சொல்லும் எந்தவொரு பதிலாலும் அவளைத் திருப்திப்படுத்து முடியாதென்பதாலும் அமைதியாகவே இருந்துவிடுவேன்.

புரியவைத்தபின் ஒருவழியாக மருத்துவமனை வரச் சம்மதித்தாள். இந்தமுறை எனக்கும் சோதனை செய்யப்போவதாகச் சொல்லியிருந்தேன். அதற்கு மறுப்புத் தெரிவித்தவள், “எனக்கு மட்டும் நிலைமை என்னவென்று பார்ப்போம். அதற்குப் பிறகு உங்களுக்குச் சோதனை செய்யலாம்” என்ற முடிவுக்கு வந்திருந்தாள். இந்தமுறை சோதித்த மருத்துவர், “எல்லாம் சரியாக இருந்தும் ஏன் தங்கவில்லை” என்ற கேள்வியை எங்களிடமே கேட்டார்.

சிறியதாக இருந்த கட்டியும், இன்ன பிற பிரச்னைகளும் முழுதும் தீர்ந்து தடையேதும் இல்லாமல் இருந்தும், எப்படி நிற்காமல் போனதென்பது மருத்துவருக்கே விடையறியா கேள்வி. வேறு வழியில்லாமல், “இந்த மாதம் முயன்று பாருங்கள். சில மாத்திரைகள் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுத் திருப்பி அனுப்பினார். அவளிடம் ஒரு நக்கலான புன்னகை இருந்தது. அதன் அர்த்தம் புரியாமல் இல்லை. இரண்டு வருடம் நடக்காததா இந்த மாதம் மட்டும் நடந்துவிடப்போகிறது. மருத்துவரும் என்னைப்போலவே மன ஆறுதலுக்குச் சொல்லி அனுப்பிவைக்கிறார் என்ற எண்ணமே அந்தச் சிரிப்புக்குக் காரணம்.

இன்னும் கொஞ்ச நாளில் குழந்தைக்கான உடலுறவு நாடகம் நடந்தேறும். என்னதான் உடல் ஒரு பக்கம் இருந்தாலும், மனதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். மனதை சந்தோசமாக வைக்காமல் இயந்திரத்தனமான ஓர் உறவில் உயிரை எதிர்பார்ப்பது அபத்தமென்று புரியவைக்க மீண்டும் மீண்டும் முயன்றேன். முடியாமல்போனது. அவளது மனது கல்லாக மாறியிருக்க வேண்டும் இந்த விசயத்தில். ஒரே முடிவு குழந்தை வேண்டும். அதற்கு என்ன செய்யவும் தயாராக இருந்தாள். அதற்கு அவள் இழந்த விஷயங்கள் அநேகம். அவளின் சுயபுத்தியே மாறிவிடும் நிலையில் இருக்கிறாள் இப்போது. குழந்தையெனும் பாறாங்கல் மனதில் அமர்ந்துகொண்டு எல்லாவற்றையும் மனதிலிருந்து அழுத்தி வெளியேற்றியிருந்தது. இதேநிலை நீடித்தால் கண்டிப்பாக மனப்பிறழ்வு வந்து மூலையில் சேர்வாள் என்பது நிச்சயம்.

ஒரு கணவனால் மனைவிக்கு எந்தளவுக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்லமுடியுமோ, அந்தளவுக்குச் சொல்லியும் அவளால் பழைய மாதிரியான காதலும் காமமும் கலந்த உடலுறவுக்குத் தனது மனதைக் கொண்டுவர முடியவேயில்லை. தொடர்ந்து வந்த நாள்களில் அதே இயந்திரத்தனமான இயக்கம். அன்பில்லாமல் ஆடையில்லாமல் ரத்தம் ஓடும் இரண்டு இயந்திரங்கள் கலவிகொண்டு குழந்தை பிறக்குமென்று எதிர்பார்ப்பது என்னவொரு நியாயம்? இருந்தாலும் அது நடந்துகொண்டுதான் இருந்தது. அதில் ஒரு தேடலுக்கான முடிவும், பலரது கேள்விக்கான பதிலும், தனது சாதனையின் சின்னமும், தன்னால் முடியுமென்பதை உலகத்துக்குக் காட்டவேண்டிய இலக்கை நோக்கி இருந்ததே தவிர, இருவரின் அன்பினில் கருவாகி அழகான ஒரு குழந்தை இதுதான் அம்மா, அப்பா என்ற உணர்வை ரத்தத்தில் கலந்து பிறக்கவேண்டுமென்ற எண்ணம் சிறிதளவும் இல்லை. எனக்குச் சம்மதம் இல்லையென்றாலும், இதுவரை அவளின் செயல்களுக்கு ஒத்துப்போகியிருந்த நான் இந்த விஷயத்தில் விருப்பமில்லையென்றாலும் விலகுவது சரியில்லை. மேலும், இது என்னிடம் மட்டுமே அவளால் கிடைக்கப்பெறும் விஷயம். அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நானும், அவ்வப்போது பேசும் சில ஆறுதல் வார்த்தைகளும்தான்.

மருத்துவரின் அறிவுரையின்படி வந்த நாள்களில் கடினமான வேலைகளைத் தவிர்த்திருந்தாள். சில வேலைகளை நானும் அம்மாவும் பகிர்ந்திருந்தோம். இந்தமுறை அவளிடமிருந்த நம்பிக்கை என்னிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருந்தாலும், எந்தளவுக்கு நம்பிக்கை அதிகமாக வைத்து எதிர்பார்த்திருக்கிறாளோ, அந்தளவுக்கு ஏமாற்றமும் விரக்தியும் கிடைக்காமல் போனால் தாக்கும். ஏற்கனவே உடைந்துபோயிருக்கும் அவளுக்குப் பெரிய எதிர்பார்ப்பின் ஏமாற்றம் நிச்சயம் பெரியதொரு தாக்கமாகவே இருக்கும். இருந்தாலும் நம்பிக்கையோடு இருத்தலும், ஒருவிதத்தில் உதவியாக இருக்குமென்பது என்னுடைய எண்ணமாக இருந்ததால், நானேதும் இந்த விஷயத்தில் சொல்லவில்லை.

வழக்கமான மாதவிலக்கு நாள்களைக் கடந்து இரண்டு நாள்கள் ஆகியிருந்தது. இன்னும் கவனமாக இருந்தாள். வெறுமனே சாப்பிடவும் ஓய்வும் மட்டுமே அவளின் வேலையாக இருந்தது. இரவுகளில் இப்போதெல்லாம் முதுகு தெரிவதில்லை. பேசவேண்டுமென்று ஆர்வத்தில் என் முகம் பார்த்து ஏதாவது பேச ஆரம்பித்திருந்தாள். குழந்தை சம்பந்தமாக ஆறுதலாக நான் ஏதும் சொல்லுவேனா என எதிர்பார்த்திருந்தாளோ என்னவோ. சில இரவுகளில் அவளாகவே பேச்சினைத் தொடர்ந்திருக்கிறாள். இப்படியெல்லாம் ஆசையாகப் பேசி பல மாதங்கள் ஆகியிருந்தன. அவளின் மனநிலை மீண்டுவருவது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், அது நிலையானதாக இருக்க வேண்டுமென்ற வேண்டுதல் மனதுக்குள் இருந்துகொண்டேயிருந்தது. நீண்ட நேர உறக்கமில்லா அந்த இரவில் மெல்லப் பேசினாள்.

“இந்தமுறையும் ஏமாற்றம்தான் மிஞ்சுமா?”

“அப்படியொன்றுமில்லை. எல்லாம் சரியாகும்.”

“எப்போது சோதனை செய்து பார்க்கலாம்?” கேட்டாள்.

“உனக்கு உடலில் ஏற்படும் மாற்றம் தெரிகிறதா? எப்போதுமே சொல்லுவாயே மாதவிலக்கு வந்துவிடுமென்று. அந்த மாதிரியான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா?”

“இல்லை! எந்தவொரு அறிகுறியும் இல்லை. எனக்கென்னவோ உறுதியாகிவிடும் போலத்தான் தெரிகிறது.”

“ம்ம்…. அப்படியிருந்தால் சந்தோசம்”

“இது கடைசி வரைக்கும் நீண்டு ஒரு குழந்தையாக வருகிற வரைக்கும் எனது கவலை இருந்துகொண்டேதான் இருக்கும்” என்றாள் வயிற்றைத் தடவியபடி.

“அடுத்த வாரம் ஆஸ்பத்திரி போய்டலாம்” என்றேன்.

சரியென்று தலை கோதினாள். அந்தப் பார்வையில் ஓர் ஏக்கமும் அன்பும் கலந்திருந்தது. என்னைப் பாவமென்று நினைத்திருந்திருக்கலாம். எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கிறோம், என்ன நடந்தாலும் நம்மைவிட்டுப் பிரியாத ஒரே ஜீவன் இவன் மட்டுமே. இவனில்லாவிட்டால் இது சாத்தியமா? இவன் என் கணவன். எனக்கானவன். நான் காதலிக்க மறந்து, காமத்தில் பங்கெடுக்க மறந்தாலும், இன்னும் என் அன்புக்கு ஏங்குபவன். இவனை அந்த மாதிரியான துன்பங்களுக்கெல்லாம் ஆளாக்கியிருக்கக்கூடாது என்ற எண்ணங்கள் மனதில் ஓடுவதை அந்தப் பார்வை எனக்கு உணர்த்தியது. நெஞ்சின் மீது கை போட்டபடியே தூங்கியிருந்தாள்.

இந்தமுறை மனைவியோடு மருத்துவரும் வெற்றிப் பெற்றிருந்தார். முதல் மாதத்துக்கான மாத்திரைகளைக் கொடுத்தவர், மிகக் கவனமாக இருக்கச் சொன்னார். பேருந்தில் வரும்போது காரணமில்லாமல் சன்னமாகச் சிரித்துக்கொண்டே வந்தாள். அவளிடம் கேள்வி கேட்ட ஒவ்வொருவரையும் மனதுக்குள் நினைத்துப் பார்த்து அதற்கான விடை என்னிடம் இப்போது இருக்கிறது என்பதைச் சொன்ன பிறகு ஏற்படும் வெற்றிச் சிரிப்பாக அது இருந்திருக்க வேண்டும்.

அம்மாவிடம் சொன்னோம். சுத்திப் போட்டார்கள். எங்கிருந்து அன்பும் பாசமும் வந்ததோ தெரியாது. அம்மாவும் காட்டினாள். இவளும் எதுவுமே நடக்காததுபோல ஏற்றுக்கொண்டு பங்கெடுத்தாள். போட்டியில் என் அம்மாவையும் ஜெயித்து இருந்திருக்கலாம். எதற்காக ஒதுங்கினாளோ அது இருக்கிறபோது தைரியமாக எதையும் எதிர்கொண்டாள். பழைய மாதிரியான பேச்சும் சிரிப்பும் வந்திருந்தாலும், என் அம்மாவை நடத்துவதில் மட்டும் ஓர் அதிகாரத் தோணி இருந்தது. இதோ எதைச் சொல்லி என்னை வசைபாடினாயோ அது என்னிடம் வந்திருக்கிறது. இப்போது நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்றொரு கேள்வி அவளின் மனதில் இருக்கத்தான் செய்தது.

ஆச்சர்யம் என்னவென்றால் உறவும் ஊரும் அப்படியே தலைகீழாக மாறியிருந்ததுதான். யாரெல்லாம் மறைவில் பேசினார்களோ நேரில் வந்து நலம் விசாரிக்கிறார்கள். ஆறுதலும் அறிவுரைகளும் அள்ளித் தந்துவிட்டுப் போகிறார்கள். குறை சொன்ன அதே வாய்தான் புன்சிரிப்போடு வாழ்த்திவிட்டுச் செல்கிறது. இதில் எதுதான் உண்மை? இவர்களுக்காகவா இவள் தன்னைக் காயப்படுத்திக்கொண்டாள்? இது பெண்களின் உலகத்துக்குள் நடக்கின்ற விநோதமான ஒரு போட்டியாகவே இருந்தது. என் மனைவி வெற்றிபெற்றவள். குறை சொன்னவர்களும், மறைவாகப் பேசியவர்களும் தொற்றுப் போனவர்கள். அவர்கள் வந்து வெற்றி பெற்றவளை வாழ்த்திவிட்டுப் போகிறார்கள். இதிலென்ன நியாயம் இருக்கிறது? என் மனைவி அடைந்த கொடுமைகள் இன்னும் கண் முன்னால் இருக்க, மனைவியோடு சேர்ந்து ஊரே மாறியிருக்கிறது. எல்லோருடைய எதிர்பார்ப்பும் குழந்தையா? மனைவியை மலடி பட்டம் கட்டுவதா? எங்களின் குடும்பத்தின் மீதானவொரு அக்கறையா? இந்த மூன்றில் கண்டிப்பாக ஏதாவதொன்றாகவே இருந்திருக்க வேண்டும்.

மனதிலுள்ள குழந்தை வயிற்றுக்கு வந்தபிறகு மாறித்தான் போயிருந்தாள். நான் வீட்டிலிருந்தால் ஒரு நிமிடம்கூடப் பிரியாமல் அருகிலேயே இருப்பாள். இரவில் அவளின் பேச்சை நிறுத்தித் தூங்கவைப்பதற்குள் போதுமென்றாகிவிடுகிறது. செல்லக் கோபம்கொண்டு திரும்பிப் படுப்பபவள், மீண்டும் மன்னிப்போடு என்னிடம் வருவதெல்லாம் புதிதாக இருந்தது. சில இரவுகளில் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி பேச்சு இருந்தாலும், பெரும்பாலும் அவள் அனுபவித்த இக்கட்டான நாட்களைப் பற்றித்தான் பேசுவாள். அடுத்த மாதம் அம்மாவீட்டுக்குச் சென்ற பிறகு, என் நிலையைப் பற்றிய கவலை அவளுக்கு. வாரமிருமுறை வந்துவிடவேண்டும் என்ற அன்புக் கட்டளை வேறு. திருமணமான புதிதில்கூட இவளிடம் இவ்வளவு அன்பில்லையே? இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது? இதையெல்லாம் உள்ளே வைத்துக்கொண்ட இயந்திரத்தனமான உறவை என்னிடம் பெற்றாள். அப்படியெல்லாம் நடந்துகொண்டோமே என்ற சுவடுகூட அவளிடத்தில் இல்லாமல் இருக்கிறாளே. இதைப் பற்றிக் கேட்கலாம் என்ற எண்ணம் இருந்தபோதிலும், மீண்டும் அவளை இக்கட்டான நிலைக்குத் தள்ள விரும்பவில்லை.

அவளின் அம்மா வீட்டுக்குச் செல்லவேண்டாமென்ற எனது கருத்தை மறுத்தவள், இது முதல் பிரசவம் கண்டிப்பாகப் போய்தான் ஆகணும். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்ற ஆறுதலோடு சென்றிருந்தாள். ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அவளில்லாத வீடு நரகமாத்தான் தெரிந்தது. அட்டைபோல ஒட்டிக்கொண்டிருக்கும் அவளின் அரவணைப்பு இல்லாதது மனதை என்னவோ செய்தது. அங்குபோய் என்ன செய்கிறாளோ என்ற எண்ணம். அங்கும் சிலருக்கு அவளின் வெற்றியைக் காட்டவேண்டியதிருந்தால் இந்நேரம் அதையும் செய்திருப்பாள்.

பெண் குழந்தை. அம்மா போனதும் தூக்கி மடியில் வைத்திருந்தார்கள். அதே மெல்லிய சிரிப்போடு கட்டிலில் படுத்திருந்தாள். அவளின் முக்கியமான சாதனையொன்றை வெற்றிகரமாகச் செய்துமுடித்த நிம்மதி அவளிடத்தில் இருந்தது. அருகில் வந்த அம்மா குழந்தையை என்னிடத்தில் கொடுத்தார்கள். ஒரு புதிய உயிர். கடந்த இரண்டு வருடங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதையோ, இவளைப்பெற அவள் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டாள் என்ற எந்தவித உணர்வுமின்றி கண்களை மூடிய நிலையில் கைகளை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவளருகில் சென்று படுக்கவைத்தேன். எதுவும் பேசவில்லை. சொந்தங்கள் வரிசையாகப் பார்க்க வந்து போய்க்கொண்டிருந்தார்கள். கிடைத்த தனிமையில் அருகிலிருந்த என்னுடைய கையைப் பிடித்தபடி, “குழந்தை யார் மாதிரி இருக்கிறாள்?”. “இப்போது எப்படிச் சொல்லமுடியும். கொஞ்ச நாள் ஆகணும்” என்றேன். “எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது. இனி சந்தோசமாக வாழலாம். நமக்கென்று ஒரு குழந்தை, குடும்பம்” என்றாள். சரியென்பதுபோல அவளது தலையைக் கோதிவிட்டேன்.

அவளது அம்மா வீட்டில் இருந்துவிட்டுத் திரும்பி வந்திருந்தாள். அவளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்திருந்தேன். குழந்தை என்னைப் போலத்தான் இருந்தாள். வந்த இரண்டு நாள்களில் அம்மா அவளை யாரிடமும் கொடுக்கவே இல்லை. எப்போதும் தூக்கிவைத்துக் கொஞ்சிக்கொண்டேயிருந்தார்கள். மனைவிதான் பெரிதும் மாறியிருந்தாள். உடலளவிலும், மனதளவிலும். நம்பிக்கை கலந்த திமிர் அவளது பேச்சிலும் நடத்தையிலும் காணமுடிந்தது. நானொரு குறையற்றவள், முழுமையானவள் என்னைக் குறையாகப் பார்த்தவர்களின் முன்னால் ஜெயித்துவிட்டேன் என்ற திருப்தி அவளது மனம் முழுவதும் நிரம்பியிருந்தது. அதுவே அவளை வெகுவாக மாற்றியிருந்தது. ஆஸ்பத்திரிக்கு வந்து பார்க்க முடியாதவர்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் இவள் பழகும் விதமே எனக்கு எல்லாவற்றையும் புரியவைத்திருந்தது.

என்ன சாதித்திருக்கிறாள் இவள்? இயந்திரத்தனமான உறவில் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அதுவும் சமூகத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும், தான் மலடியில்லை என்பதை நிரூபிப்பதற்கும் பெற்ற பிள்ளையிது என்பதை அவளால் மறுக்கமுடியுமா? பெண்கள் பிள்ளை பெரும் இயந்திரங்களென்று சொல்வதில் தவறேதும் இருக்கிறதா இவளது விஷயத்தில்? சமூகமும் உறவுகளும் தரும் அழுத்தத்தில் இப்படி மாறிப்போனாளா எனக்குத் தெரியாது. அந்த வெற்றிக் களிப்பில் திளைத்து மீண்டுவரக் கொஞ்ச நாட்கள் ஆகலாம். ஒரு நாளில் எல்லாவற்றையும் அவளுக்குப் புரியவைக்க வேண்டும். இதுமட்டுமே சாதனையில்லை இன்னும் வாழ்க்கை முன்னே விரிந்திருக்கிறது பெரிய சவால்களோடும் ஆச்சர்யங்களோடும் என்பதை அவளின் மனதுக்கு உணர்த்தவேண்டும்.

கற்றுக்கொண்ட பாடத்தில் உறுதியாக எனது மகளை மனைவியின் மனநிலையில் வளர்க்கமாட்டேன். இந்தச் சமூகமும் அது உன் மீது ஏற்படுத்தும் பிம்பமும் மாயை. எல்லாமே கானல் நீராய் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நீ, உன் மனதின் எண்ணங்களுக்கு விரோதமில்லாமல் வாழ்ந்தாலே சந்தோசமான வழக்கை அமையும் என்பதைப் புரிய வைப்பேன். மனைவி வருகின்ற காலங்களில் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கையிருக்கிறது. பிறந்த குழந்தை அன்பில்லாமல், அவளின் வெற்றிக்கும், சமூகம் தன்மீது கொடுத்த அழுத்தத்திற்கும், தன்னை மலடியில்லை என்பதை நிரூபிக்கத்தான் பிறந்திருக்கிறாள் என்று தனது மகள் உணராமலிருக்கவாது அவள் திருந்துவாள்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close