சிறுகதைகள்
Trending

சேஷம் – ராம்பிரசாத்

சிறுகதை | வாசகசாலை

இந்த உலகத்தைப் பொறுத்த வரையில் என்னுடையது ஒரு ‘தகாத’ உறவு. அரசாங்கங்கள் நான் தற்போது மேற்கொண்டிருக்கும் உறவுமுறையை ஏற்பதில்லை என்று முடிவுசெய்து மாமாங்கம் ஆகிறது. ஆனால், இப்படித்தானே ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை உறவுகளையும் ஏற்காமல் எதிர்த்தார்கள்.

ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? Its all about time. காலத்தின் போக்கில், ஏற்றுக் கொள்ளப்படாதவைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படும். அதுபோல் நான் மேற்கொண்டிருக்கும் இந்த உறவுமுறையும், அதுதற்காலத்தில் தகாததென வகைப்படுத்தப்பட்டாலும் பின்னாளில் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருந்தது.

அதற்குக் காத்திருக்கத்தான் வேண்டுமா? ஒடுக்கப்படுபவனுக்குத்தானே ஒடுக்கப்படுவதன் வலிதெரியும்? முதலில் ஒடுக்க இவர்கள்யார் என்பது என் கேள்வி. அவர்கள் பார்வையில் நான் மேற்கொண்டிருப்பது தகாததெனில், என் பார்வையில் அவர்களிடம் கூட தகாதவைகள் இருக்கலாம் அல்லவா? எது நடுவுநிலை என்பது? அப்படி நடுநிலை என்ற ஒன்றே இருப்பினும், அதைத் தீர்மானிப்பது யார்? அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுப்பது யார்? இதுவெல்லாம் என் உப கேள்விகள்.

மரபணு மாசடைவது அரசாங்கங்களுக்குக் கவலையளிப்பதாகத் தெரிகிறது. அதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. ஆனால், இது என்னை நான் மேற்கொண்டிருக்கும் தகாத உறவிலிருந்து என்னைத் தள்ளிவைக்கப் போதுமான சத்துள்ளதாக இல்லை.

காப்பீட்டு நிறுவனங்கள் எங்கள் உறவு முறையை அங்கீகரிப்பதில்லை என்பதே அரசுகள் எங்களைத் தகாத உறவை மேற்கொள்பவர்கள் என்று வகைப்படுத்த பிரதான காரணம். காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அங்கீகரிப்பதில்லை? காடுகளில், நாங்கள் மேற்கொள்ளும் தகாத உறவுகளால் நேரும் விளைவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதில்லை என்பது காப்பீட்டு நிறுவனங்களின் வாதமாக இருக்கிறது. ஆனால்,  நாங்கள் மேற்கொள்ளும் ‘தகாத’ உறவில் வெளிப்படும் இந்திரியங்களின் வேதியியல் உச்சம் காடுகளில் நிகழத்தானே உச்சபட்ச சாத்தியங்கள் இருக்கின்றன.

எது துவக்கத்தில் ஒரு நாடகீயமான பொழுது போக்கிற்குப் பயன்படும் என்று கணிக்கப்பட்டதோ அது ஒரு கட்டத்தில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியையே புரட்டிப் போட்டது எனலாம்.

துவக்கத்தில் ஒரு சிலரே அதை முன்னெடுத்தனர். அவர்கள் சருமத்தில் டாட்டூ (tattoo) எனப்படும் ஓவியங்களை வரைந்து கொண்டார்கள். ஒருசிலர், உடல் முழுவதும் வண்ண வண்ண நிறங்களில் பூச்சுகள் கொண்டு ஓவியங்கள் தீட்டிக்கொண்டார்கள். ஆனால், இந்த ஓவியங்கள் தற்காலிகமானவை.

டாட்டுக்கள் சில மாதங்களில் மங்கலாகிவிடக் கூடியவை. சருமத்துக்குப் பக்க விளைவுகளை உருவாக்கவல்லவை. வண்ணப் பூச்சுகளும் சருமத்திற்குக் கேடு விளைவிப்பதாக இருந்தன. ஒவ்வொருமுறை, இந்த ஓவியங்கள் அழிகையில் மீண்டும் வரைந்து கொள்ள நேர்ந்தது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக, அவர்கள் ஒரு மனிதக் கரு உருவாகையிலேயே, ஒரு பச்சோந்தியின் நிறம் மாறுதலுக்கான மரபணுவையோ, அல்லது ஒரு மயிலின் தோகையின் மரபணுவையோ கருவுக்குள் செலுத்திக்கொள்ள முடியும். கரு மனிதக் கருவாகவே வளர்ந்து மனிதனாகவே பிறக்கும். வளரும். இந்த மயில் மற்றும் பச்சோந்தி மரபணுக்கள் உடலிலேயே உறக்க நிலையில் இருக்கும். பின், முறையான உடல்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இந்தமரபணுக்களை உசுப்பிவிட்டால் அவைகள் இயங்கத் துவங்கும். உடல் தானாகவே ஒவியங்கள் தீட்டத் துவங்கும். இதில் சருமப் பக்கவிளைவுகள் ஏற்படாது. தேவையில்லை என்று தோன்றிவிட்டால், முறையான பயிற்சிகள் மூலம் மீண்டும் உறக்க நிலைக்கு ஆழ்த்திவிடலாம். இப்படி, வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத் தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என்று அழைக்கப்பட்டார்கள். இதுவசீகரமாக இருந்ததால், பலரும் இந்த முறையை முன்னெடுக்கத் துவங்கி, விலங்கினங்களில் வசீகர மரபணுக்களுக்கென வங்கிகளும், இப்படியாக உருவாகும் உடல்களில், அந்த விலங்கினப் பண்புகளை உறக்க நிலையிலிருந்து எழுப்பவும் மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்தவும் உடற்பயிற்சியகங்கள் பிசிக்கல்தெரபி (physical therapy) மையங்களாகப் பூற்றீசல்கள்போல் உலகெங்கும் முளைத்தன. இது ஒரு பெருங்கலாச்சாரமாக உருவெடுத்தது. இப்படித் துவக்கத்தில் எல்லாமும் வண்ண மயமானதாக, விருப்பத்தகுந்ததாகவே இருந்தது. கலப்பினங்களில் பலருக்குத் தாங்கள் எந்த உயிரினத்தின் மரபணுவைக் கொண்டிருக்கிறார்களோ அந்த விலங்கினமாகவே நிரந்தரமாக மாறிவிட விரும்பியதன் விளைவாக, வினோதமான நிகழ்வுகள் நடக்கத் துவங்கின. இவ்விதமான கலப்பினங்கள் திடீரெனக் காணாமல் போகத் துவங்கினார்கள். கலப்பினங்கள் சிறுபான்மையினராக இருக்கப்போய், அவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவது நடந்தது. அதை அவர்கள் எதிர்க்கத் துவங்கி குற்றங்கள் நிகழத் துவங்கின. குற்றங்கள் இழைத்த கலப்பினங்கள் தங்கள் கலப்பினத் தகுதிகளைக் கொண்டு தப்பிக்கக் கற்றுக் கொண்டார்கள். இவ்வாறான குற்றங்களைத் தடுக்க பல கருவிகளும், உத்திகளும் உருவாக்கப்பட்டன.

என் காதலனான ஸ்டூவர்ட் சர்ப்பத்தின் மரபணுவைக் கொண்ட கலப்பினம். அவன் தனது இமைகளை, ஒரு சர்ப்பம் போல் பக்கவாட்டில் திறந்து மூடிக் காட்டியதில்தான் நான் முதலில் ஈர்க்கப்பட்டுத் தோழியானேன். அப்போதெல்லாம் அரசுகள் அவனுடனான என் உறவைத்தகாததென வகைப்படுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

பிரச்சனை ஒரு மாலை நேரத்தில், ஒரு பாரில் அமர்ந்து நாங்கள் ஒயின் அருந்திக் கொண்டிருந்தபோது துவங்கியது. அரசு தரப்பு காவலர்கள் திடீரென அங்கு வந்தார்கள். தங்களிடம் இருந்த ஒரு சிறிய கருவியால் ஒவ்வொருவரின் கருவிழிகளையும் சோதித்தார்கள். ஸ்டூவர்ட் முறைவந்தபோது சோதித்துவிட்டு, அவனைத் தனிமைப்படுத்தி அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். ஸ்டூவர்ட்டை மீட்கும் பொருட்டு, நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதுதான் பிரச்சனையின் தீவிரம்தெரிந்தது.

“உனக்குக் காதலிக்க வேறு ஆடவனே கிடைக்கவில்லையா?” என்றுதான் துவங்கினார் அந்த நீதிபதி. அந்த நீதிபதியை நான் அறிவேன். அவர், நான் செவிலியராக வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்.

“ஏன்? ஸ்டூவர்டுக்கு என்ன?” என்றேன் நான்.

“ஸ்டூவர்ட் ஒரு கலப்பினம்”

“எதை வைத்துச் சொல்கிறீர்கள்?”

“அவன் கண் இமைகள் பக்கவாட்டில் திறந்து மூடுகின்றன. மரபணுவைச் சோதித்தபோது சர்ப்பங்களில் காணப்படும் மரபணுக் கூறுகளும், சில வகைப் புழுக்களில் காணப்படும் மரபணுக் கூறுகளும் அவனுடைய மரபணுவில் ஒட்ட வைக்கப்பட்டிருந்தன”

“வேடிக்கையாக இருக்கிறது”

“ஏன்?”

“நீங்கள் நான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்திருக்கிறீர்கள். ”

“அதனாலென்ன?”

“நீங்கள் அடாவிசம் (Atavism) பாதிக்கப்பட்டவர். உங்கள் இதயத்தில் மூன்று அறைகள் (chambers) தான் இருக்கின்றன. சர்ப்பங்களுக்குத்தான் மூன்று அறைகள் இருக்கும்.  மனிதர்களின் இதயம் நான்கு அறைகளைக் கொண்டிருக்கும். அப்படியானால் நீங்கள் கலப்பினமா? இல்லையே. மனிதனாகத்தான் அடையாளப்படுகிறீர்கள்” என்றேன் நான்.

நீதிபதி என்னையே பார்த்தார்.

“நாம் எல்லோருமே சர்ப்பங்களிலிருந்து வந்தவர்கள்தான் என்பதற்கு உங்கள் இதயம் ஒரு முக்கியமான ஆதாரம். அப்படியிருக்க, ஸ்டூவர்ட் மட்டும் கலப்பினமாவதுதான் வேடிக்கையாக இருக்கிறது” என்றேன் நான்.

“தவிரவும், ஸ்டூவர்ட் கருவாக இருந்தபோது தனக்கென்று ஒருசுய சிந்தனை சார்ந்த அறிவும் பிரஞையும் உருவாக்கியிருக்காத கட்டத்தில் அவனுக்குள் அவனது பெற்றோர்களின் விருப்பத்தின் பெயரில் செலுத்தப்பட்ட மரபணுக்களுக்கு அவனைக் குற்றவாளியாக நடத்துவதன் நியாயம் எனக்குப் புரியவில்லை” என்றேன் தொடர்ந்து.

“இயற்கையே ஒரு குறிப்பிட்ட பண்பை, ஒரு குறிப்பிட்ட விலங்கினத்திடமிருந்து பிரித்துவிட்டபோது, அந்தப் பண்பு அந்த விலங்கினத்திற்குத் தேவையற்றது என்று முடிவு செய்துவிட்ட பிறகு, அப்படியான நிராகரிக்கப்பட்ட பண்பானது, மரபணுக்களின் பல்லாயிரம்கோடி வரிசை மாற்ற சேர்க்கையின் விளைவாக, பல்லாயிரம் தலைமுறைகள் தாண்டி ஒரு தலைமுறையில் தலையெடுப்பது என்பது வேறு. இயற்கையாகப் பார்த்து விலக்கி வைத்த ஒரு பண்பை வலிந்து ஒரு உடலுக்குள் திணித்துக் கொள்வது என்பது வேறு. இரண்டையும் சமமாக ஒப்பிட முடியாது என்பது இந்த நீதிமன்றத்தின் பார்வை” என்றார் நீதிபதி.

அதைக் கேட்டுவிட்டுக் கட்டுப்படுத்தமாட்டாமல் வெடித்துச் சிரித்தேன் நான். அது அவரைக் கோப மூட்டியிருக்கவேண்டும்.

“இது நீதிமன்றம். நீதிமன்றத்தை அவமதிப்பது போல் நடப்பது சட்டப்படி குற்றம் எனக் கருதப்படும்” என்றார் அவர் சற்றே கறார் தோரணையில்.

“மன்னிக்கவும். என்னால் நகைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ஒன்று சொல்கிறேன். அதைச் சற்றுக் கற்பனை செய்துபாருங்கள். பல்லாயிரம் கோடி பேரில் ஒருநூறு பேர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கொள்வோம். இவர்கள் வெளி உலகின் தொடர்பின்றி வாழ முயற்சிக்கிறார்கள். தங்களுக்குள் கூடி பிள்ளைகள் பெறுகிறார்கள். அந்தப் பிள்ளைகளும் தங்களுக்குள் கூடி அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்குகின்றன. இதற்கு என்ன அர்த்தம்? உங்கள் கோடான கோடி மரபணு சாத்தியங்களில், ஒரு குறிப்பிட்டனவற்றுக்கு மட்டுமே நீங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தாவ, தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது.  அப்படியானால், என்கேள்வி இதுதான். வாய்ப்பளிக்கப்படாத மரபணு சாத்தியங்கள் உங்கள் மரபணுவில் எங்கோ உறக்கநிலையில் தானே இருக்கக்கூடும். ஆயிரம் ஆண்டுகளுக்கப்பால், உங்களில் ஒருவர், நீங்கள் இப்படியாக உருவாக்கிய இனக்குழுவை விட்டு வெளியேறி, ஒருதுணை தேடப் போக, உறக்கத்திலிருந்த மரபணு கண் விழிக்கிறது. வெளிப்படுகிறது. இப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்த மரபணு சாத்தியம் வெளிப்படாதது, இயற்கையின் தேர்வா? உங்களால் உருவாக்கப்பட்ட இனக்குழுவின் கூட்டு முயற்சியின் தேர்வா?” என்றேன் நான்.

“நீங்கள் எதை எதையோ சொல்லிக் குழப்புவதாகத் தோன்றுகிறது.” என்றார் நீதிபதி.

“இது ஒரு நாடக ஒத்திகையை ஒத்திருப்பதாக அவதானிக்கிறேன். இந்த ஆயிரம் ஆண்டுகளில் பிறக்க நேர்ந்து, வாழ நேர்ந்து, இறக்க நேர்ந்த எல்லோருக்கும் இந்தப் பூமி எதைக் காட்சிப்பொருளாக்குகிறது என்று யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. இந்த உலகம், இதில் ஜீவிக்க நேர்கிற உயிர்களுக்கான அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு நீங்களாக ஒத்திவைத்துவிட்டதைப் போலிருக்கிறது. நீங்கள் யார் எந்தத் தலைமுறை, எந்த உண்மையை ஸ்பரிசிக்க வேண்டும், வேண்டாம் என்பதைத் தீர்மானிக்க?” என்றேன் நான் தொடர்ந்து.

“இந்த நீதிமன்றம் சமூக நலனுக்கானது. இதற்கு விதிகள் இருக்கின்றன. அவற்றின்படி, ஸ்டூவர்ட் ஒரு கலப்பினமாக அடையாளப்படுகிறார். அவரை, தனிமைப்படுத்துவதும், நாடுகடத்துவதுமே சரியான அணுகுமுறை என்பது நீதிமன்றத்தின் வாதம். ஸ்டூவர்டை, பதினைந்து நாள் காவலில் வைத்துவிட்டு, இந்தப் பதினைந்து நாளில் அவர் தன் செயலுக்கு மன்னிப்புக் கோரும் பட்சத்தில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த நீதிமன்றம் ஒருமுடிவெடுக்கும்” என்றுசொல்லித் தீர்ப்பை எழுதினார் நீதிபதி.

ஸ்டூவர்டை விலங்கிட்டுச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கையில் அவன் என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தான். அந்தப் புன்னகையின் அர்த்தம் எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.

அதன் பிறகு அவனை நான் பார்க்கவில்லை. அவன் நிச்சயம் மன்னிப்பைக் கோரமாட்டான் என்பதை நான் அறிந்தே இருந்தேன். மேற்கொண்டு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இரண்டு நாட்கள் நான் பசி, உறக்கமின்றித் தவித்தேன்.  பல வக்கீல்களிடம் பேசிப் பார்த்தேன். சட்டத்தின் இந்தப் பகுதி ஓட்டைகளே இல்லாமல் மிகவும் உறுதியாக இருக்கக்கண்டு, இந்தத் தேசத்தின்மீதும், அதன் இயங்கு முறையின்மீதும், அதனில் சிக்குண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கடிவாளமிட்ட குதிரை மனிதர்கள் மீதும் எனக்கு பச்சாதாபம் வந்தது. ஆனால், அது ஸ்டூவர்டைப் புறக்கணித்து, அவனுடனான என் காதலைக் கைவிடச் செய்ய போதுமானதாக இல்லை.

சிந்தித்துச் சிந்தித்துச் சோர்வுற்றிருந்த நான் உறக்கத்தில் ஆழ்ந்த நொடிகளில் என்னை யாரோ பலவந்தமாய் ஒரு போர்வைபோலொன்றால் மூடிதூக்கிச் செல்வதைப் போல் உணர்ந்து, திடுக்கிட்டு எழுந்தேன். உண்மையிலேயே நான் எதனுள்ளோ மூழ்கியிருந்தேன். என்னைச் சுற்றிலும் மூடியிருந்த அது ஒரு அடர்த்தியான துணிபோல் இருந்தது. மேலும் கீழுமாக அது தாவித்தாவிச் சென்றதில் எனக்கு வயிற்றைப் பிசைந்து இரண்டுமுறை வாந்தி எடுத்தேன். மயக்கத்தில்ஆழ்ந்தேன். நான் மீண்டும் கண் விழித்தபோது அடர்ந்த வனத்தில் இருந்தேன். இரவு வானம் பொத்தலிட்ட கருப்பு நிறக்குடை போல் காட்சியளித்தது. சற்றுக் கூர்ந்து பார்த்தபோது நான் ஒரு மரத்தின் உச்சியில் இருப்பதைப் புரிந்துகொண்டேன். கீழேபார்த்தபோது, குறுக்கும் நெடுக்குமாய் எண்ணற்ற சர்ப்பங்கள். அப்போதுதான் கவனித்தேன் என்னை மூடிக்கிடந்த அடர்த்தியான துணி, ஸ்டூவர்டின் சர்ப்ப உடல்தான் என்பதை. அவன் முழுவதும் சர்ப்ப உருவம் பூண்டிருந்தான்.

அவன் சர்ப்பமாகிச் சிறையிலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்றும், என்னையும் வனத்துக்குள் கடத்தி வந்திருக்க வேண்டும் என்றும் ஊகித்துக் கொண்டேன். தொலைவில், என்னையும், ஸ்டூவர்டையும் தேடி காவல்துறையும், மிலிட்டரியும் ஒன்று கூடி வந்திருப்பதைக் கண்ணுற்றுச் சற்றே கலக்கமுற்றேன். ஆனால், அவர்கள் ஏதும் செய்யாமல் காட்டையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்து சற்றே சமாதானமானேன். எண்ணற்ற சர்ப்பங்களுக்கு மத்தியில் ஸ்டூவர்டை அடையாளம் காணஇயலாதென்பதும், ஸ்டூவர்டின் நிமித்தம் எல்லாச் சர்ப்பங்களையும் கொன்றுகுவிப்பதோ, கைது செய்வதோ இலக்கற்றது என்பதும் அவர்களைக் குழப்பியிருக்க வேண்டும் என்று ஊகிக்க அதுபோதுமானதாக இருந்தது.

நாடடைவது குறித்துச் சற்றே சிந்தித்துப் பார்த்தேன்.

நாடடைவதன் நிமித்தம், நான் வசிக்க நேரும் சமூகத்தின் நிமித்தம், என் மரபணு சாத்தியங்களில் எவ்வெவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தாவச் செய்வதில் இருந்து மட்டுப்படுத்தவும், எவ்வெவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தாவச் செய்ய அனுமதிக்கவும் இருக்கிறேன் என்பதே விடையளிக்க முடியாத பிரதான கேள்வியாக இருந்தது. நாடடைவதென்பது பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கில் எந்தெந்த உண்மைகளை, எத்தனை கால இடைவெளிக்கு ஒத்திப்போடுவதாக அமையும் என்பது ஊகிக்க முடியாததாக இருந்தது.

எப்படியாகினும், இந்த உலகை, அதன் விசித்திரங்களையும், அதன் ஆச்சர்யங்களையும், அதன் அதிர்ச்சிகளையும், அதன்போக்குகளையும், எவ்வித பாசாங்குமில்லாததான அதன் அசலான அமைப்பைத் தரிசிக்கவே நான் இந்த உலகில் ஜீவித்தேன் என்னும்போது எதன்பொருட்டும் அவற்றை ஒத்திப் போட விரும்பவில்லை.

இவ்விதம் நான் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சமயம், ஸ்டூவர்ட் தன் உடலைத் தானே நறுக்கி ஐந்து உடல்களாகப் பிரிந்தான். ஏதோவொரு வகைப் புழுவின் மரபணு அவனின் மரபணுவில் இருப்பதாக அந்த நீதிபதி சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது.

நான் யோசனையுடன் ஸ்டூவர்ட்டின்மீதே கால் நீட்டிப் படுத்துக்கொண்டேன். இப்போது, அவன், தன் உடல் என்னும் மடியைப் படுக்கையாக்கி என்னை அதில் கிடத்தி, தன் ஐந்து தலைகளால் என் உடலைத் தாங்கி நின்றான். பிரபஞ்சமே அவனை நோக்கிக் கைகூப்புவது போல் எனக்குத் தோன்றியது.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close