கட்டுரைகள்

மாற்றத்திற்கான விதையை பதிய வைக்கும் “ செம்புலம்” – நாவல் விமர்சனம்

ஹரிஷ்

பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள காமாட்சிபுரத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொல்லப்பட்ட பாஸ்கர் ஒரு தலித் இளைஞன். போலீசார் வழக்கம்போல வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்குகின்றனர். ஒரு துப்பறியும் நாவலுக்குரிய அத்தனை கூறுகளும் இந்நாவலுக்கு இருந்தாலும், நாவலின் ஊடே இச்சமூகக் கட்டமைப்பை நேர்த்தியாக விவரித்துச் செல்கிறார் இரா. முருகவேள்.

நடந்தது ஒரு சாதி ஆணவக்கொலை என்ற கோணத்தை முன்வைக்கிறது காவல்துறை. இறந்தவன் ஒரு தலித் என்பதால், ஒரு பெண் கதாபாத்திரத்தை (அமுதா) அவனோடு இணைத்து இந்தக் கோணம் பின்னப்படுகிறது. காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கும் முறையும், பின்னர் உண்மை அறியும் குழு சேகரிக்கும் விஷயங்களும் முரண்பட்டவைகளாக இருக்கின்றன. இந்த முரண்பாடுகளை விளக்க, சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதிய ஏற்றத் தாழ்வுகளை, வர்க்க வேறுபாடுகளை பல்வேறு கதாபாத்திரங்களின் ஊடேயும், அவர்களுக்கு நிகழும் சம்பவங்கள் மூலமாகவும் ஆசிரியர் விளக்கிச் செல்கிறார்.

விவசாயம் நலிந்து போனதால், வயிற்றுப்பாட்டிற்கு ஆலைகளில் வேலைக்குச் செல்லும் எளிய மக்கள், பணியிடத்தில் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள்; அதிலும் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது உள்ளிட்ட விஷயங்களை நாவல் பேசுகிறது. முதலாளித்துவத்தின் கோர முகத்தை ஆலைகளில் நிகழும் ஒடுக்குமுறைகள் வாயிலாக காண்பிப்பதுடன், அதற்குத் துணைநிற்கும் அரசாங்கம் மற்றும் ஆதிக்க சாதியினரின் போக்குகளும் விவரிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட தலித் இளைஞன் பாஸ்கர் குறித்து மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் இச்சமூகம் எப்படி தவறாகப் பார்க்கிறது என்பதை இந்நாவல் சுட்டுகிறது. உண்மையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எப்படி பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கே எதிராக திரும்புகிறது என்பதை அறியும்போது மனம் கனக்கிறது.

உண்மையில், பாஸ்கர் ஒரு என். ஜி. ஓ-வின் உதவியுடன் ஆலைகளில் அவதிப்படும் பெண்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுகிறான். பாஸ்கரின் அரசியல் புரிதல் தெளிவாக முன்வைக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தன்னளவில் துண்டுதுண்டான உதவிகள் செய்து வருகிறான். ஒரு அமைப்பாக அவனால் அச்சமூகத்தினரை ஒன்றிணைக்க முடியவில்லை. பாஸ்கர் ஆதிக்க சாதியினருக்கும், ஆலை முதலாளிகளுக்கும் ஒரு தொந்தரவாகவே இருக்கிறான்.

பாஸ்கர் இந்த நாவலில் ஒரு நேரடியான கதாபாத்திரம் இல்லையென்றாலும், அவனைச் சுற்றியே அனைத்து கதாபாத்திரங்களும் பின்னப்பட்டிருக்கிறது. குறிப்பாக பூரணி என்ற பெண் கதாபாத்திரம். பாஸ்கருடன் பூரணிக்கு சிறுவயது முதலிலேயே பழக்கம் உண்டு. ஆதிக்க சாதியில் பிறந்திருந்தாலும், பூரணிக்கு குலப்பெருமை பேசுவது போன்ற விஷயங்களில் மனதளவில் உடன்பாடு இல்லை. பெண்களுக்கு சட்டப்படி சொத்துரிமை உண்டு என்றாலும், நடைமுறையில், அதை சாத்தியமில்லாமல் ஆக்கும் போக்கு பூரணிக்கு ஒவ்வாததாக இருக்கிறது. பூரணியின் கணவனாக வரும் மனோகரன் அமைதியான குணமுடையவன். எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்லும் போக்கு அவனுடையது. எப்பொழுதும் கோபத்துடன் உலவும் வெள்ளியங்கிரியும், சிறுவயதிலிருந்தே சுயமாக சிந்தித்து உருவான மனோகரனும் ஒரு புள்ளியில் இணைவது இந்த விசாரணையின் முக்கிய அம்சம்.

உண்மை அறியும் குழுவில் இருக்கும் ஒரு என். ஜி. ஓ- வைச் சேர்ந்த ஷீலா கதாபாத்திரம் முக்கியமானது. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்கள் பெற்று, அறிக்கை தயாரித்து வெளியிடும் நேரத்தில், ஷீலா ஆலைகளில் தொழிலாளர்கள் படும் பாடுகளைக் குறித்து மேலும் அறிய விழைகிறாள். இது சம்பந்தமாக ஒரு மின்னஞ்சலை தனது உயரதிகாரிக்கு அனுப்புகிறாள். தங்களின் எல்லைக்கு மீறிய விஷயம் அது என்று பதில் வருகிறது. உண்மை நிலவரத்தை வெளிக்கொணராமல் எப்படிப் பூசி மொழுகி ஒரு பிரச்னையை என். ஜி. ஓ-க்கள் கையாளுகின்றன என்பதற்கு சாட்சியாக அமைகிறது இந்த பதில்.

கதாபாத்திரங்களின் விவரிப்புகளில் இருக்கும் நேர்த்தியைப்போலவே, கோவையின் நிலப்பரப்பை விவரிப்பதிலும் நேர்த்தியான எழுத்தைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். கொங்குநாட்டின் வட்டாரமொழியையும், ஆங்காங்கே கதைக்குப் பொருந்தி வரக்கூடிய நாட்டுப்புறக் கதைகளின் மேற்கோள்களும் படு பாந்தம்.

ஒரு கொலைக்கான விசாரணையில் தொடங்கும் நாவல், முடியும் தருவாயில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, நமது இதயம் கனமாகிப் போகிறது. நமது மனதில் மாற்றத்திற்கான விதையை ஆழமாகப் பதிய வைக்கிறது இந்நாவல்.

நூல்: செம்புலம் (நாவல்)

எழுத்தாளர்: இரா.முருகவேள்

பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம்

விலை: ரூ. 250/-

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button