சிறுகதைகள்

செம்பருத்தி

மணிமாலா மதியழகன்

முகநூல் தோழியான கயல்விழியை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. என்னை ஒரு நிமிடமாவது இழுத்து நிறுத்திவிட்டுப் பின் கடக்கச் செய்யும் அவளது பதிவுகளுக்கு விருப்பமோ கருத்துகளோ இட்டதுமில்லை. அவளது கவிதைகளின் வீரியம் மிகுந்த வரிகள் என்னை ஈர்த்தனவா? எனது மகளைப்போலவே செடிகளின்மீது விருப்பமுடையவளாய் இருப்பதால் அவளின் மீது நன்மதிப்பு பிறந்ததோ? இல்லை முப்பது ஆண்டுகளுக்கு முன்னே என் அம்மாவிடம் நான் சமைக்கக் கற்றுக்கொண்ட புதிதில் ஆர்வமாய் ஏதேதோ சமைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேனே அதைப்போலவே இவளும் செய்வதால் பிடிமானம் உண்டானதோ? ஏதோ ஒன்று என்னை மானசீகமாகக் கயல்விழியுடன் இணைத்தது.

அவளது கவிதையைப்போலவே அவளுடைய முகநூல் பக்கத்தில் இளஞ்சிவப்பு வண்ண நித்தியக் கல்யாணி மலர்கள் தினமும் பூத்துக் குலுங்கும். அது மிகச் சாதரணமானதொரு பூவாக இருந்தும் அவளது புகைப்படத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்துவிடும். அது மட்டுமின்றித் தொட்டிகளில் சின்னக் கூடையைக் கவிழ்த்து வைத்ததைப் போலப் பசுமையாய்ப் பம்மியிருக்கும் செடிகளில் அடிக்கடி மஞ்சளும் சிவப்புமாகச் செம்பருத்தி பூக்கள் இதழைப் பிரித்துச் சிரிக்கும்.

எங்களது வீட்டிலும் தான் செம்பருத்திச் செடி இருக்கிறது. மண்ணை மாற்றி உரத்தை வைக்கும் போது மட்டும் துடிப்புடன் இருக்கும். அந்தச் சமயத்தில் தான், ஏதோ போனால் போகிறதென ஓரிரு பூக்களையும் கண்ணில் காட்டும். நாள் செல்லச் செல்ல இளம் பிள்ளைவாத நோய்க்கண்ட பிள்ளையின் கைகால்களைப்போல கிளைகள் சூம்பிப் போயிருக்கும். என்னதான் அரிசி களைந்தத் தண்ணியை ஊற்றி, உரத்தை வாங்கி வைத்தாலும் மற்ற சமயங்களில் அது உதாசீனம்தான் செய்கிறது. அதிசயமாக, கயல்விழியுடைய செம்பருத்தியிடம் என்றுமே நான் வாட்டத்தைக் கண்டதில்லை. அதைப்போலக்கப்பும் கிளையுமாக நெடிந்து செல்லும் வளர்ச்சியும் ஒருபோதும் இருந்ததில்லை. ‘ஒருவேளை ‘போன்சாய்’ வளர்ப்பு முறையைக் கையாளுகிறாளோ? இல்லை அவை பிளாஸ்டிக் செடிகளோ?’ என்பன போன்ற சந்தேகங்களும் எனக்கு அவ்வப்போது முளைக்கும். எது எப்படியிருந்தாலும், அவளது கவிதையை உள்வாங்கிய மாதிரி நாளடைவில் அவளது முகத்தைக் கூட என்னையறியாமல் செம்பருத்திப் பூவைப் போலவே நினைக்குமளவிற்கு வந்திருந்தேன்.

கயல்விழி தன்னுடைய அதீத ரசனைகளை கவிதை, செடிகளைக் கடந்து உணவின் மீதும் காட்டுவாள். அவளது முகநூலின் பதிவுகளில் அவள் சமைத்த உணவுகள் நாளும் முத்தாய்ப்பாய் இடம் பிடித்திருக்கும். தட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான காய்கறிகள், சமைத்துவிட்டால் மட்டும் எங்களின் சத்துகளை இழந்து விடுவோமா என்று சொல்வதைப் போலவே இருக்கும். கோழி பிரியாணியின் புகைப்படத்தைக் காண, அதன் வாசம் மெல்ல நெருங்கி வந்து நாசியை நிரடுவதைப் போலத் தோன்றும். அதுவரை சும்மாயிருந்த வயிறு உடனே சாப்பிட வேண்டுமென அடம் பிடிக்கும். என்றாவது மிகவும் சாதாரணமாக ரசம், தவ்வு சம்பால், அப்பளம் என்று அவள் பதிவிட்டிருந்தால்கூட, நாளைக்கு இந்த மாதிரி தான் சமைக்கணும் என்று எனக்குத் தோன்றும்.

சிங்கப்பூரில் வாரயிறுதிகளில் மட்டுமல்லாது வார நாட்களிலும் திரும்பியப் பக்கமெல்லாம் தமிழ் வெள்ளமாகப் பிரவாகமெடுத்து ஓடும் ஏப்ரல் மாதம். சிறுவர் முதல் பெரியவர் வரை நம் தாய்மொழியை அரியணையேற்றி அழகு பார்க்கும் பிரதான மாதம். பிரபலங்களை, அறிமுகமான முகங்களை என அடிக்கடிப் பார்க்க நேரிடும் அதிசய மாதமும் அதுதான். இம்மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதவிதமான அழகுடனே மக்களைக் கடந்து செல்லும்.

ஒருநாள் உமறுப்புலவர் நிலையத்தில் தமிழ் மொழி விழா நிகழ்ச்சியொன்றைப் பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் செம்பருத்தியை நேரில் சந்திக்கும் படியானது. விழாவிற்காக வெளிநாட்டிலிருந்து அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினரது தமிழைப் பற்றிய உயர்வானப் பேச்சு, மழலைச் செல்வங்களின் கொஞ்சு தமிழென மனம் தமிழ் மணத்தோடு நிறைந்து இருந்த சமயம். தன் தோழிகளோடு விகசித்த முகத்துடன் அவள் அரங்கத்தைவிட்டு வெளியேறினாள். ஆகாய நீல வண்ணச்சேலையில் அதற்குத் தகுந்தாற் போல அழகிய நீல வண்ணக் காதணிகள் ததிங்கினத்தோம் ஆடின. ‘இவள் செம்பருத்தி அல்லவா? ஆமாம்…! இவளது பெயர்…?’ சற்றே நினைவுக் கிடங்கில் துழாவ கயல்விழி என்பது பிடிபட்டது.

முகநூலில் இவ்வளவு நாட்களாகக் கண்டுகொள்ளாமல் விட்டதைப்போல நேரில் செல்ல முடியுமா? மலர்க் கொத்தைப் போல தோழியர் சூழ வந்து கொண்டிருந்தவளிடம் நானாகவே அறிமுகப்படுத்திக் கொண்டேன். உங்களைத்தான் எனக்கு நல்லாத் தெரியுமே என்றவளது முகத்தில் புன்னகைப் பூ தாராளமாய் விரிந்தது. அவளுடைய சினேகப்பூர்வமான சிரிப்பால் என்னால் இலகுவாக பேச முடிந்தது. இவ்வளவு நாட்களாக என் மனத்தில் இருந்தவற்றில் விதையளவில் எடுத்துக் காட்டினேன். பூரிப்பில் கயல்விழியின் முகத்தில் பல பூக்கள் முகிழ்த்தன. குழந்தையைப் போன்ற குதூகலத்தை அவளிடம் காண என்னிடமும் அவளது மகிழ்வு ஒட்டிக்கொண்டது.

தான் ‘வெஸ்ட்’ பகுதிக்குச் செல்வதாகவும் யாராவது உடன் வருகிறீர்களா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டாள். சொந்த வாகனத்தில் வந்திருப்பாள் என்று நான் நினைத்தேன். தான் உடனே வீட்டுக்குப் போக வேண்டுமென்பதால் டெக்சி எடுக்கப் போவதாகச் சொன்னாள். அவளுடனான உரையாடலை நீட்டிக்க விரும்பிய மனம், நான் அந்தப் பகுதியில் இல்லையே எனச் சற்றே ஆதங்கப்பட்டது. சில நிமிடங்களில் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லவிருந்த சிநேகிதக் கூட்டமும் கரைந்தது.

நான்கே ‘எம்ஆர்டி’ நிறுத்தங்களில் செராங்கூனில் இருக்கும் எங்களது வீட்டுக்குப் போய்விடலாம். கணவர் மற்றொரு நிகழ்ச்சிக்குச் சென்றிருக்க, மகளும் தன் கல்லூரியின் தமிழ்மொழி விழாவின் ஏற்பாட்டிற்காகச் சென்றிருந்தாள். அதனால் அவசரமாக வீட்டுக்குப் போய் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்று தோன்றவும், கயல்விழியுடன் கொஞ்ச நேரத்தைச் செலவழிக்க விரும்பினேன். அது போக்குவரத்து நெரிசலற்ற மதிய வேளைதான். இருந்தபோதும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் பெரும்பாலான டெக்சிகள், நெற்றிக்குச் செந்தூரத்தை இட்டுக் கொண்டதைப் போலக் காட்டிக்கொண்டு எங்களைக் கடந்து சென்றன. அவள் ‘கிரேப் டெக்சியை’ அழைக்க, அதுவும் காலதாமதமாகும் என்று காட்டியது.

“நமக்கு உடற்பயிற்சியைப் போல செடிக்கு, மண்ணைக் கொத்தி விடுறதுதான் நல்ல பயிற்சியா இருக்கும். அதுமட்டுமில்லாம வெள்ளை பொடி போல இருக்கும் பஞ்சுப்பூச்சுங்க செம்பருத்திச் செடியோட வளர்ச்சியை அப்படியே நாசமாக்கிடும். அதைப் பார்த்தவுடனே மருந்தடிச்சிடணும். முக்கியமா செடிங்களுக்குத் தண்ணியை பூவாளியால ஊத்தினால்தான் இலைகளிலுள்ள அழுக்குப் போய் செடி எப்பவுமே பசுமை மாறாம இருக்கும்”  என்று தன்னுடைய செடிகளின் வனப்பின் ரகசியத்தைப் பகிர்ந்தாள். செடிகளைப் பராமரிக்கணும்னா குழந்தைகளைக் கவனிப்பது போலச் சின்னச் சின்ன விஷயத்தைக்கூட ஊன்றிப் பார்க்கணும்னு ஆர்வத்தோடு சொன்னாள். கயல்விழியுடன் நீண்ட நாளையத் தோழியைப் போன்ற அன்னியோன்னியமான உரையாடலில் காத்திருத்தலின் எரிச்சல் அங்கே காணாமல் போயிருந்தது.

அலுவலகத்தில் தினமும் சவால் மிக்க வேலைகளைச் சந்திப்பதாகவும் அந்தச் சூட்டைத் தணிக்கவே வீட்டுக்கு வந்த பிறகு தன்னுடையக் கவனத்தை கவிதைகள், செடிகள், உணவுகளென திசை திருப்புவதாகவும் சொன்னாள். ஊடகவழி அறிந்திருந்த தகவல்தான் இருந்தும் நேரிடையாகக் கேட்கும்போது என் விழிகள் விரியவே செய்தன. அலுவலகத்துப் பிரச்சினையை வீட்டுக்கும் இழுத்துக்கிட்டு வந்து அல்லல்படுவதுக்குப் பதிலா முற்றிலும் மாறுபட்ட ஒன்றில் தன்னை இணைத்துக்கொள்வதால் இலகுவாக இருக்க முடிவதாகச் சொன்னாள். “துன்பத்தைத் தூர வச்சிடணும்” என்று சொல்லிச் சிரிப்பவளது வார்த்தைகளை மனதார ரசித்தேன்.

மிகவும் ஆர்வத்துடன் அவளது வீட்டிற்கு என்னை அழைத்தாள். வார நாட்கள்னா ஆறு மணிக்கு மேலவும் வாரயிறுதின்னா எப்போது வேண்டுமானாலும் வரச் சொன்னாள். கயல்விழியின் அன்பு தோய்ந்த வார்த்தைகள் சும்மா சம்பிரதாயத்துக்காகச் சொல்லப்பட்டவை அல்ல என்பதை உணர்ந்து நெகிழ்ந்தேன்.

பொதுவாகச் சிலரது பேச்சு முதலில் நாகரிக முலாம் பூசிய தோரணையில் பாதரசத்தைப்போல வழுவழுவென இருக்கும். அதுவே நேரம் செல்லச்செல்ல பிறரைப்பற்றி அவதூராகப் பேசி, குத்திக் கிழிக்கும் சரளைக் கல்லைப்போலத் தன் உண்மையானத் தோற்றத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அவ்வளவு நேரமாகியும் கயல்விழியின் சொற்கள் என் மனத்திற்கு இதமாகவே இருந்தன. பேச்சின் பிரவாகத்தில், பச்சைநிற திலகத்துடன் கடந்துபோன டேக்சியைக்கூட கைகாட்ட மறந்திருந்தாள். சற்றுத் தாமதமாக அது உறைக்க, அசட்டுச் சிரிப்பு அவள்உதடுகளில் அரங்கேறியது.

எங்க வீட்டுக்கு எப்போ வர்றீங்க என்று உரிமையோடு அவள் விடுத்த அழைப்பில் என் மனம் கரைந்தது. நிச்சயமாக வருவதாகச் சொன்னேன். “எந்த மாதிரியான சாப்பாடு உங்களுக்குப் பிடிக்கும்னு மட்டும் சொல்லிடுங்க. வீட்டுக்கு வர்றவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சமைச்சுக் கொடுக்கிறது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்” என்று ஆர்வத்தைக் குழைத்துக்கொண்டு அவளது வார்த்தைகள் வெளிப்பட்டன. மனத்தில் பட்டதை ஓரிரு வார்த்தைகளோடு பகிர்ந்துகொள்ள நினைத்த என்னை அவளது பேச்சுக் கட்டிப்போட வைத்தது. முதல் அறிமுகத்திலேயே ஒருவரின் மீது திணறுமளவுக்கு இவ்வளவு அன்பை அள்ளியிறைக்க முடியுமா? நான் அதிர்ந்துபோய் நின்றேன்.

என் பார்வை அவளது கைகளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி டேட்டூவில் சிறகடித்து நின்றது. எந்தக் கணமும் பறப்பதற்குத் தயார் என்பதைப்போல அது நுணுக்கமாய் வரையப்பட்டிருந்தது. அவளது கலைநயத்தைப் பாராட்டாது இருக்க முடியவில்லை. மகிழ்ச்சியில் அவளது இமைகள் வண்ணத்துப்பூச்சியைப் போலப் படபடத்தன. “இங்கே பாருங்க” என்று நீல வண்ண நகப்பூச்சுகொண்ட விரல்களால் அவள் புடவையைச் சற்றே உயர்த்த, கால்களில் அழகிய செம்பருத்தி மலர்ந்திருந்தது. பூவிலும் இலைகளிலும் தண்ணீர் தெளித்ததைப் போல மிகவும் தத்ரூபமான ஓவியம். அது நிச்சயமாகப் பச்சைக்குத்தியதாக இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தும் ஏதோ ஒரு சந்தேகத்தில்“இது ஸ்டிக்கர்தானே?” என்றேன்.

“பச்சைதான்!”

கருணையற்றுக் காயும் கத்திரி வெயிலை வாளியில் வழித்து என்மீது ஊற்றியதைப் போலச் சுருங்கினேன். சிங்கப்பூரில் நிறைய இளையர்கள் இன பாகுபாடின்றி பச்சைக்குத்தியிருப்பதை தினமும் பார்க்கிறேன்தான். இருந்தும் ஏதோ ஒருவிதத்தில் மனத்துக்குப் பிடித்துப் போனவளிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. “பச்சையா…? இப்படி வரையும்போது எவ்வளவு வலிச்சிருக்கும்…?” என்னால் முன்புபோலப் பேச முடியவில்லை. சித்திரை மாதத்துப் பொன்னிற வெயில் பூமியைப் பொசுக்கிவிட எண்ணம் கொண்டிருக்கிறதோ?

இதெல்லாம் ஒரு வலியே கிடையாது என்பதைப்போன்ற பாவனையோடு “கையில இருக்கும் இந்தப் பச்சை, ஒரு விபத்துல மாண்ட என்னோட உயிர்த்தோழியோட மறைவுக்கானது. இந்தச் செம்பருத்தி, நெஞ்சுவலியால் என்னைத் தவிக்கவிட்டுப் போன என் அப்பாவோட நினைவுக்கானது” ஆதங்கத்தோடு அவளது சொற்கள் உதிர்ந்தன. கயல்விழியின் முகத்திலிருந்த வருத்தத்தை வறண்ட புன்னகை மறைக்க முயன்று தோற்றது.

நடைபாதையில் நின்றிருந்த என்னை யாரோ பின்னாலிருந்து சட்டெனச் சாலையில் தள்ளி விட்டதைப்போலானேன். நோவை விழுங்கிய அவளது பதில் என்னை ஆட்டங்காணச் செய்தது. வலி மட்டுமே தன்னோடு எஞ்சியிருக்கிறது என்பது மாதிரி அவள் இலைகளற்ற மரமாய் நின்றிருந்தாள். சற்றுமுன், துன்பத்தைத் தள்ளி வைக்கணும்கிற அவளது வார்த்தைகள் என்னுள் அவசரமாய் எட்டிப் பார்த்தன.

உமறுப்புலவர் நிலையத்திலிருந்து என்னுடன் ஒட்டிக்கொண்டு வந்திருந்த சில்லிப்பு என்னை விட்டு முழுமையாய் விலகியிருக்க, மேனியில் வியர்வை தாராளமாய்க் கோலமிட ஆரம்பித்தது. அவ்வளவு நேரமாக வெயிலை விளாசிக்கொண்டிருந்த வானம் முக்காடிட்டுக் கொண்டதோ? அச்சமயத்தில் மரத்தின் இலைகள்கூட அசைய மறந்ததைப் போலவே எனக்குத் தோன்றியது. அதுவரை நேர்க்கோட்டில் சென்றுகொண்டிருந்த உரையாடல் மேற்கொண்டு எப்படிப் போகணும்கிற வழி தெரியாததைப்போல கண நேரம் விக்கித்து நின்றது. அவளது விழிகளை எதிர்கொள்ளத் தயங்கிய என் பார்வை சாலையில் புரண்டது.

அசெளகரியமான அந்தச் சூழலை நீக்குவதைப்போல அவளுக்கு அப்போது கைத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. அவள் மலர்ச்சியுடன் அதற்குப் பதிலளித்துக் கொண்டிருக்க, கசங்கியிருந்த என் மனம் அவளுக்கான டேக்சியின் வரவை உடனடியாக எதிர்பார்த்தது.

ழக்கம் போல இப்போதும் கயல்விழியின் முகநூல் பக்கங்கள் கவிதைகள், பூக்கள், உணவுகள் என வகைவகையாய் தான் காட்சியளிக்கின்றன. இருந்தும் பாரந்தாங்காது கனக்கும் மனத்தோடு நான்தான் அவற்றை வேகமாய் நகர்த்திவிடுகிறேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close