கட்டுரைகள்

கால நீரோட்டத்தில் ஓய்வில்லாமல் மிதந்து செல்லும் ‘சரீரம்’ – நூல் விமர்சனம்

ம.கண்ணம்மாள்

ஒவ்வொரு காலமும், தன் காலச் சூழலில் வாழும் மக்களுக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தாலும் சில நேரங்களில் சில விசேடங்களைக் கையில் அள்ளித் தருகிறது. அதில் மனித மனம் தம்மை இருத்திக் கொள்ள வழி தேடுகிறது. அந்த வழி படைப்பின் சாயலில் படிந்து கிடக்கின்றது. மனித வாழ்வின் கனவு, அர்த்தப் பொதிகள், அறச் சீற்றம், வேறான சாத்தியக் கூறுகள், புரிதல்கள் இவையெல்லாமே படைப்பிற்குள் அடங்கும். இதை அறிமுகம் செய்பவன் படைப்பாளன். படைப்பாளன் சமூகத்திற்குள் இயங்குகின்றான். படைப்பாளனின் பொறுப்பு ஒரு படைப்பை படைப்பதோடு சரி. அந்தப் படைப்பைக் காலத்திற்கேற்றவாறு உந்தித் தள்ளி முன்னெடுத்துச் சென்று நிற்க வைத்தோ, அமர வைத்தோ செய்யும் தேவை வாசிப்பவருக்கானது. அது, மாறிக் கொண்டேயிருக்கும். படைப்பு மாறாது. வாசிப்பாளர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள். தன் காலத்திற்கான கனவுகளைக் கண்டடைந்து படைத்து நிமிரும் ஒவ்வொரு படைப்பாளனும் மனித இருப்புகளால் இவ்வாறுதான் அடையாளம் காணப்படுகின்றனர். இது ஓர் படைப்பு சார்ந்த அடிப்படை. மனச்சலனம், ஞாபக அடுக்குகளின் நினைவுத் திமிறல்கள் எனவும் சொல்லலாம். இது நம்மை நமக்கு நாமே அறிமுகப்படுத்த அடையாளப்படுத்த, தூண்டச் செய்ய வேண்டும். இங்கு படைப்புகளைப் பற்றி ஃப்ரான்ஸ் காஃப்காவின் ஒரு செய்தி நினைக்கத்தக்கது. ‘நமக்குள் படிந்திருக்கும் உறைபனியைப் பனிக்கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும்’. இதை படைப்பாளர்களின் குரலென ஒட்டுமொத்தமாகக் கொள்ளலாம். நமக்கானவற்றை செய்து தர வேண்டிய தார்மீகப் பொறுப்பும், அக்கறையும் படைப்பாளருக்கு இருக்கிறது. அதை படைப்புகள் வழி அவர்கள் நமக்குக் கடத்துகின்றனர்.

அப்படிப்பட்ட நிலைப்பாட்டைக் கையிலெடுக்கத்தான் படைப்புகள் வழி வகுக்க வேண்டும்.

படைப்பாளனின் பொறுப்புகள் பொதுவானதல்ல. சமூக சந்தர்ப்பவாதங்கள் சிரமமாகி விழுவதும், எழுவதும், நிறைவதும், குறைவதுமாய் வாழ்விற்கான அர்த்தத்தைத் தந்து கொண்டுதான் உள்ளன. வாழ்க்கை அனுபவத்தை, தேடல்களை மிகச் செழுமையாக, விசாலப் பார்வையில் சில புனைவுகளை உள் நிறுத்தி பலதரப்பட்டவற்றை நம்முள் விரிக்கும் போது நாம் சகஜமாக அந்தப் படைப்பில் சேர்ந்து கொள்ளவே நினைப்போம். இத்தகைய நிலைதான் படைப்பிற்கும், வாசிப்பவருக்குமிடையே இணைப்புப் பாலமாகி நடை பயில வைக்கின்றது. அவ்வகையில் எழுத்தாளர் நரனின் ‘சரீரம்’ சில புதிய அனுபவங்களை நடை பயில முன்னெடுக்கின்றது.

நரனின் ‘சரீரம்’ சிக்கலான, கொஞ்சம் பூடகமான விஷயங்களைக் கொண்டு புனையப்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக இருக்கிறது.

சரீரம் முதலில் ‘உடல்’ பற்றி தன் கதையைச் சொல்கிறது. உடலைப் பற்றிய விஸ்தாரம் அது. நிர்வாண ஓவியத்தை வரைந்து பார்க்கவிருக்கும் ஓவியம் பயிலும் மாணவர்களின் மன வெளிப்பாடுதான் கதை. ஒரு கதையை நகர்த்த ஒரு சில உணர்வு வெளிப்பாட்டாளர்கள் தேவைப்படுவர். இந்தக் கதையில் சங்கரன் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்கிறான். மனிதர்களால் நிரப்பப்பட்ட இந்தப் பரவெளியில் உடலின் தனித்தன்மை எப்படிப் பார்க்கப்படுகிறது? என்ற கேள்விக்கான பதிலைக் கதை தருகிறது. ‘உடல் என்பது வெறுமனே சதைக் குவியல்தான்’. உண்மை. இந்தச் சதைக் குவியலின் விருப்பக் குறியாக, வெறித்தப் பார்வைகளின் இருண்மையாக மாணவர்களின் காகிதக் கசங்கல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு நிர்வாணம் மரியம்மை என்ற அடையாளத்தோடு தன் வலியைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தது. பெண் பிள்ளைகளுக்கு அந்த நிர்வாணத்தைப் பற்றிப் பெரிதாக ஒன்றுமில்லை. சங்கரன் மனதில் முதன் முதலில் பார்த்த ‘ராதாக்கா’வின் பின்பகுதிதான் கதையின் உள்ளீடு. ஒரு உடல் ஏன் இயங்கு தளமாகவே பார்க்கப்பட வேண்டும்? அழித்து அழித்து வரைவதல்ல பெண்ணுடல். சில மனப்பிசிறுகள் அழிக்கப்பட்டால் சங்கரனால் மரியம்மையை வரைந்திருக்க முடியும். அங்கு, இறந்து போன ‘ராதாக்கா’வின் உடல்தான் தீட்டப்பட்டிருந்தது. இங்கு, பார்க்கப்படும் மனிதர்களின் மனதில் பலநூறு உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் மனதிலும் கதை உணர்த்தும் கரையான்கள் ஊறிக் கொண்டேயிருக்கும். எந்தவிதமான பிசிறற்ற, படு நேர்த்தியான உத்தி நடப்பியலைச் சொல்லிச் செல்கிறது. ஒரு உடலை உடலாகப் பார்த்தால் கரையான் ஊறாது. பார்ப்பதும், உணர்வதும், ரசிப்பதும் எதார்த்தம். இங்கு, எந்த அழகியலும் தேவையில்லை. தீர்க்கமான கதை சொல்லிச் செல்லும் பாணியில் உடலைப் பற்றிய புரிதல் நமக்குள் சம்மணமிடுகின்றது. அது, பார்க்கப்படும் பார்வையில் தனக்கான நிலைப்பாட்டை உறுதி செய்தாலும், இதனிலிருந்து தப்பிப் பிழைப்பது கடினம். அதற்கான மனித வாழ்வின் அசலையும், நகலையும் தேடல் கொண்ட சொற்களால் வாசிப்பில் உள்ளிழுக்கும் நரனிடம், ஏன் பெண் உடல் மட்டும் இங்கு பார்க்கப்படுகிறது? என்ற கேள்வியையும் எழுப்பலாம். எப்போதும் எங்கோ ஓர் இடத்தில் ‘உடல்’ தன்னை இழந்து கொண்டேயிருக்கிறது. அது ஒன்று உயிர்ப்பாக; மற்றொன்று இறப்பாக. இதுதான் வாசிப்பில் கதைசொல்லியின் பங்களிப்பாய் நம்முன் நிற்கின்றது.

ஒரு கதைசொல்லி சமூகத்தின் சிந்தனைப் புலமாகத் தம்மை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், காதலின் வழி மனிதர்களைக் காண்பதும், சித்தரிப்பதும், உருவாக்குவதும் கதையில் செப்பனிட முடியும். அது உண்மையாகவே கூட மாறலாம். நம்பிக்கைதானே எல்லாம்?

இந்த மனித வாழ்வில் காதல், காமம், இரக்கம் மூன்றும் முக்கியம். வாழ்வின் ஆதாரம் நிலம் உணர்த்துவதும் அதையே!

‘நீல நிறம்’ என்றொரு கதை. இது தம்முள் பல விவரணைகளைப் பொருத்திக் கொண்டுள்ளது. சிஸ்டின் சேப்பல் ஆலய விதானத்தில் மைக்கலேஞ்சலோ கன்னிமேரியின் இளம் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தான். அவன் பல நாள் கழற்றப்படாத ஆடையணிந்து படுத்தபடியே வரைந்தான். அவன் எளிதில் காதல் கொள்வான். பதின்ம வயதுப் பையன்களை மனம் நாடுவான். எப்போதாவது பெண்களிடம் இருப்பான். தான் விரும்புபவன் மற்றொருவனை நேசிக்கிறானென்பதறிந்து விலகி மூன்றாண்டுகளாய்த் தனியே ஓவியத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டான். புதைத்தல் துளிர்த்தலின் கூறு எனலாம். தேவாலயத்தில் தரையில் வடிந்து கிடக்கும் மெழுகுக் கரைசலைச் சுத்தம் செய்ய வரும் விதவைப் பெண் லூஸியின் மேல் அவனின் நீல நிறம் சிதறி வழிய காமம் கொண்டு பாவமன்னிப்புக் கூண்டின் பின் புறம் அவளோடு இணைந்து வெளியேறி வரையத் தொடங்குகிறான்.

மனித மனங்கள் எல்லாமே அதனதன் கட்டளைக்கு உட்பட்டது. கட்டளையின் சாவி மனதில்தான் இருக்கிறது. மைக்கேலாஞ்சலோ சாவி அந்த நேரம் லூஸியிடம் இருந்திருக்கிறது. பின், மனித இயந்திரமாக மாறித் தன் வேலையைத் தொடர்கிறான். இங்கு எதுவும் காரணமில்லை.

எல்லாருமே, சமூக வெளியில் இயங்கிக் கொண்டே வாழ்தலை நகர்த்துபவர்கள். கர்ப்பமடைந்த லூஸியைப் பார்த்தலைத் தவிர்க்கிறான். நிறத்தின் பின்னால் போகக் கூடாதென்றும் உறுதி கொள்கிறான். ஒரு காலை வேளையில் குழந்தை அழும் திசை நோக்கிச் செல்கிறான். குழந்தையின் உடலிலும் நிறங்கள் சிதறிக் கிடந்தன. லூஸியைத் தேடுகிறான். இங்கு வராதே! எனச் சொல்லி விட்டு சாரத்தில் ஏறி வரையத் தொடங்கும் ஏசுவின் ஓவியத்தில் குழந்தை முகமும், ஜோசப் ஏஞ்சலேவோவும், மரியாளின் முகம் லூஸியாகவும் ஒத்துப் போனது.

அவனுக்கே தெரியவில்லை. அவன் அறியவுமில்லை. ஓவியம் இப்படியாகுமென்று. ஆலய விதானம் அவர்கள் இணைந்திருந்த போது ஓவியக் காட்சியினைத் தான் காண்பித்தது. விவிலியப் பாத்திரங்கள், ஏசு, கன்னி மரியாள் வரையப்பட்டிருந்தனர். ஒரு படைப்பாளனின் பார்வை இங்கு பதியப்படுகின்றது. ஏஞ்சலோ லூஸியைப் புணர்ந்து முடித்ததும், ‘நீ தேவகுமாரனை ஈன்றெடுப்பாய்’ என்ற வாசகம் சொல்லும் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தான். கதையின் உட்பொருளும் அதுதான். ஒரு அழுக்கடைந்த மனிதன், விதவைப் பெண் எப்படி பாவ மன்னிப்பு வழங்கி அருளும் இறைநிலைக்கு ஒத்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஏஞ்சலோவின் மனதில் லூஸியும், குழந்தையும் மறையவில்லை. மறைக்கப்பட்டதாகத் தன்னை மாற்றிக் கொள்கிறான். ஆழ் மனத்தின் சம்பவக் குறியீடுதான் இதெல்லாம். இக்கதை மிகப்பெரிய போதனை ஒன்றைப் பகர்கிறது. மனிதனும் கடவுளுக்கு ஒப்பாவான். இது வெறும் கதைகட்டுவது அல்ல. ஒரு விதமான சமூகச் செயல்பாடு. காதல், காமம் இயற்கை. அதற்கு ஒரு மறுக்காத பெண். நீல நிறம். நிறத்தின் ஒழுகல். இதுவே, இக்கதையின் அடையாளம். நிறம் சிதறுகின்றது மனச் சிதறல்களைப் போல. கதையின் முடிவு கதைக்குத் தனி அழகைத் தருகின்றது. சமூகத்தின் சாபக்கேடு தகர்த்தப்படுகின்றது. ஒட்டு மொத்த உணர்வின் தத்ரூபம் இது. நுட்பமாகப் பார்க்க வேண்டியதொன்று. இக்கதையில் எழுத்து, தானறியாமலே பாதுகாப்பாக அதே நேரத்தில் மிகச் சிறந்த பண்பு கொண்டு வியக்கும் மனநிலையாகப் பார்க்கப்படுகின்றது. ஒரு சாமான்யனின் வாழ்வும், ஒரு விதவைப் பெண்ணும், ஒரு குழந்தையும் உயிர்ப்பாத்திரமாகக் காணப்படுகின்றனர். அங்கு, மனிதர்களின் அழுக்கு, இழிவு மறைந்து போகிறது. மனித மனத்தின் உள்ளேயும், வெளியேயுமான ஆக்ரமிப்பு தகர்க்கப்படுகின்றது. எதார்த்த எழுத்தின் வழி மிக உன்னிப்பாக சில பக்கக் கதை நகர்வில் ‘நீல நிறம்’ நமக்குள் பொதுந்து விடுகிறது.

இதுபோல், இத்தொகுப்பு முழுவதும் அன்பு, இரக்கம், காதல், முதுமையில் தனிமை, இறை, பொருந்தாக் காதல், ஏமாற்றுத் தனம் போன்ற பல உள்நிலைகள் இருக்கின்றன. எதார்த்த எழுத்தென்றாலும் ஒவ்வ்வொரு கதையும் அதனுள் அமிழ்ந்து போனாலும், சில கதைகள் தனித்து நிற்கின்றன. படைப்பாளனின் பார்வை பல இடங்களில் நுண்ணியதாகவே இருக்கின்றது. வாழ்வின் பெரும் பாரத்தை மிக எளிமையாக உள்வாங்கிக் கதைக்குள் முழுமையாகத் திணிக்க எழுத்து கைவசப்பட வேண்டும். சில இடங்களில் அது தன்னை விலக்கிக் கொண்டாலும், அடையாளத்தை இழக்காமல் சாதகமாகவே தன்னைப் பதிய வைக்கிறது. ஆழ் மன உரையாடல்களின் ஒட்டு மொத்தக் குரல் சில சிறுமைகளைத் தள்ளி வைத்துப் பார்க்க வழி காட்டுகிறது. மனித வாழ்வோடு இயேசு வாழ்வைப் பொருத்திப் பார்க்கும் ‘யேசு’ கதையும், பொருளாதாரச் சூழலே ஆண், பெண் உறவைத் தேடிக் கொள்கின்றன; கணவன் மனைவி என்பதல்ல என்ற நிலைப்பாடு, முடிவில் தொலைந்து போன போலித் தனத்தைத் தேடிக் காட்டும் ‘தேடல்’ என்ற கதையும், மாதவிடாய்த் தீட்டு இறைக்கு முன்னால் தவறில்லை. இறையும் அங்கிருந்துதான் தோன்றியது என உணர்த்தும் ‘வாரணாசி’யும், பொய்மைகளை முழுமையாக நீக்கி மனித வாழ்வின் கையிருப்பை நாம் உணரச் செய்கின்றன. சிறுகதை பன்முகமாக மாறியிருந்தாலும் சில கட்டமைப்பிற்குள் வருதல் தவிர்க்கப்பட வேண்டியதொன்று. ‘1921’ என்ற கதையில் இளம்பெண் மார்கிரெட் அப்படி காதல் வயப்பட்டு வாழ்வை இழத்தலும், ஆணாதிக்கச் சூழல்படி தோமோ இறுதிவரை நாடோடியாய்ச் சுற்றி மகிழ்வதும் முரணையும், சஞ்சலத்தையும் தருகிறது. 

மற்றபடி, சரீரம் முழுவதும் வாழ்வின் நிகழ்வுகளை மாறுபட்ட கோணத்தோடு சாத்தியங்கள் வழி கண்டறிந்திட விழைய முடிகின்றது. ஒரு படைப்பு தன் வகைமையில் சொல்லும் பாங்கில் காலத்திற்கும் பேசப்படும். காலம் நதி போன்றது. கால நதியின் முன்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்தி நிலை கொள்ள வைப்பதும், மனித இருப்புகளைச் சிந்திக்க வைப்பதும் படைப்பாளனின் கையில்தான் உள்ளது. அதனடிப்படையில் கால நீரோட்டத்தில் இது ஓய்வில்லாமல் மிதந்து செல்லும்.

நூல் : சரீரம் ( சிறுகதைத் தொகுப்பு)

ஆசிரியர்: நரன்

பதிப்பகம் : சால்ட் பதிப்பகம்

விலை : ரூ 200

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close