சிறுகதைகள்
Trending

சரஸ்வதி

கணேசகுமாரன்

பிச்சைமுத்து கவிஞர் பிச்சை ஆன கதை

பிச்சை இந்த பூமியில் ஜனித்தபோது அனைத்து ஜீவராசிகளைப் போலவே கைகால் மற்ற அவயங்களுடன் தோன்றினான். எல்லோருக்குமான அடையாளம் தனக்கு எதற்கு என்ற சலிப்பில்தான் தனக்கான அடையாளமாய் தன் எழுத்து இருக்கும் என்று நம்பி எழுத்தாளனானான், அது மட்டுமன்றி அவனின் பால்யம் தொட்டே தொடர் கனவு ஒன்று அவனைத் துரத்தி வந்தது. பட்டு பார்டர் கொண்ட வெள்ளை நிறப் புடவை அணிந்த பெண் ஒருவர் தாமரைப்பூவில் அமர்ந்தபடி வீணை வாசித்துக்கொண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து வீணையைக் கீழே வைத்துவிட்டு இறங்கி வந்து அவன் நாக்கில் ஏதோ எழுதிவிட்டுப் போகிறார். தினம் காலையில் விழித்ததும் பல் துலக்கும் முன்பே கண்ணாடியில் தன் நாக்கைப் பார்த்துக்கொண்டான் பிச்சை. எதுவும் தெரியவில்லை என்றாலும் எழுதுவதும் நிற்கவில்லை. காலையில் கண்ணாடி பார்ப்பதும் நிற்கவில்லை. விபரம் தெரிந்தபின்பு அது கல்விக் கடவுள் சரஸ்வதி எனவும், செல்வத்தின் அதிபதி லட்சுமிக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது எனவும், பிறரால் அவனுக்குச் சொல்லப்பட்டது. ஆனாலும் அவன் ஜாதகத்தைப் பார்த்த முட்டம் ஜோசியர், பிச்சைக்கு ஆயுள்ரேகை கெட்டி எனவும் நீண்டகாலம் உயிர் வாழ்வான், அதே சமயம் வாழும் நீண்ட காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டேதான் இருப்பான் எனவும், கூடுதல் தகவலாக பிச்சைக்கு நெற்றியில் பண்டித ரேகை நெளிவதால் ஊர் போற்றும் கலைஞனாக வருவான் என ஆசிபோல் சபித்தார். வளர்ந்து வரும் காலகட்டத்திலே சும்மா இருக்காமல் பாடப் புத்தகத்தோடு காமிக்ஸ், கதை, நாவல், வார இதழ்கள் என்று சகலத்தையும் விரும்பிப் படித்தான். தான் மற்றவர்களைப் போல் மது, மாது, புகை என்று போதையில் சிக்கி சீரழியவில்லை என்ற கர்வம் அவனுக்கு இருந்தது. உலகத்திலேயே ஆகப்பெரிய போதையான புகழ் என்ற மூன்றெழுத்து உச்ச திரவம் அவன் மூளை நரம்புகளில் மிதந்து கொண்டிருப்பதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அன்றாட சம்பவங்களை டைரியில் எழுதி வைக்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது. ரகசியம் என்று தான் நினைப்பதை, தனக்கு மட்டுமே தெரிந்த தன் வாழ்வை, தான் மட்டுமே படிக்கும் ஒரு புத்தகமாக எழுதிக்கொண்டிருந்தான் பிச்சை. அதனால்தான் அவன் எழுத்து பட்டை தீட்டப்பட்டது என்பது வேறு நிஜம். ஒருமுறை பிரபல எழுத்தாளர் ஒருவரால் வளர ஆரம்பித்திருந்த ஒரு கவிஞர், சிறந்த கவிஞரென்று அடையாளப்படுத்தப்பட்டார். அப்பேர்பட்ட எழுத்தாளரே சுட்டிக்காட்டிவிட்டார் என்று கவிதை புரிந்தவர்கள், புரியாதவர்கள் என அனைவரும் அந்த அறிமுகக் கவிதையை, முளைத்து மூணு இலை கூட விடாத கவிதையை தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஒரே ஒரு பெயர்ப்பலகை கூட சரியாய் இல்லாத அந்த கிராமத்தின் சுமைதாங்கிக் கல்லைவிட்டுப் புறப்பட்டான் புதிய கவிஞன். ஒரே இரவில் ஒரே பகலில் ஒரே வாரத்தின் இறுதியில் தமிழ்நாடெங்கும் அந்தப் புதிய கவிஞன் பெயர் உச்சரிக்கப்பட்டது. எதைக் கவிதை என்று இலக்கிய உலகம் உச்சி முகர்ந்து பாராட்டியதோ, அதே அனுபவத்தை ஒரு எழுத்து மாறாமல் தன் டைரியில் குறித்து வைத்திருந்தான் பிச்சை. சாதாரணம் என்பதும் அதிசயமே. அதிசயம் எல்லாம் சாதாரணத்திலிருந்து வருவதுதான் என்று பிச்சைக்குப் புரிந்துபோனது. தன் சாதாரணத்தை சரித்திரப் பதிவாக்கத் தீர்மானித்தான். கவிஞர் பிச்சை உருவானான். மழையைப் பற்றி அவன் எழுதிய கவிதை பிரசுரமான அன்று அவன் ஊரில் நல்ல மழை பெய்தது. தான் எப்பேர்பட்ட பரிசுத்தமானவன் என்பதை எண்ணி ஆச்சரியப்பட்டான் பிச்சை.

பிச்சை கடைசியாய் பார்த்த அயல் சினிமா

திடீரென்று ஒருநாள் பிச்சைக்குக் கடிதம் வந்தது. முதல் வாசகர் கடிதம். கன்னியாகுமரியிலிருந்து வந்த 50 பைசா கார்டில் அவன் எழுதிய ஒற்றைக் கவிதையைப் பல கோணங்களில் ஆராய்ந்திருந்தார் அருள் ஜோஷ்வா என்ற 50 வயது வாசகர். அதில் இருந்த போன் நம்பருக்கு பிச்சையே கால் செய்து பேசினான். போனில் தென்பட்ட குரலுக்கு இலக்கியப் பரிட்சயம் என்பது தொலைதூர நிழலாய் இருந்தது தெரிந்தது. சில நாட்கள் கழித்து ஒரு சிற்றிதழ் ஆசிரியரிடமிருந்து நீளமான கடிதம் ஒன்று வந்தது, பிச்சையின் சமீபத்திய கவிதைகள் குறித்து விரிவான பார்வையுடன். அவரின் சிற்றிதழுக்கும் கவிதைகள் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். கவிதை எழுதுவதற்கெல்லாம் பிச்சை சிரமப்படவே இல்லை. அவன் எழுதுவதெல்லாம் கவிதையானது. அது அவனுக்கு மிக எளிதான காரியமாக இருந்தது. அல்லது எளிதான செயல்களையே அவன் கவிதையாக்கினான். அது குறித்து கிஞ்சித்தும் அச்சம் கொள்ளவில்லை.

அதொரு அழகு
இதொரு அழகு
அவ்வளவுதான் வேறொன்றுமில்லை

என்ற பிச்சையின், மிக எளிமையான கவிதை பல வாசகர்களால் சிலாகிக்கப்பட்டது. ஆனாலும் பிச்சைக்கு அது போதவில்லை. சிறுகதை எழுதிட எண்ணம் கொண்டான். அந்தக் காலகட்டத்தில் மிகத் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த கதையாளர்கள் எல்லோருடைய கதைகளையும் தேடித்தேடிப் படித்தான். தான் எழுதும் கதைகளில் ஒருபோதும் இவர்களின் எழுத்துச் சாயல் வந்துவிடக் கூடாதெனத் தீவிரமாக வாசித்தான். யாரும் எழுதத் தயங்கும் அவ்வளவாக யாரும் எழுதாத கதைக் கருவாகத் தேர்ந்தெடுத்து எழுதத் தொடங்கினான். பிச்சைக்கு உலக சினிமாக்கள் பார்க்கும் பழக்கம் இருந்தது. ஒரு எழுத்தாளரின் சிறுகதை, பிச்சை பார்த்த கொரியன் சினிமாவைப் பார்த்து அப்படியே எழுதப்பட்டிருந்ததைக் கண்டு பயந்து போனான். இனி ஒருபோதும் அயல் சினிமாக்களைப் பார்க்கக் கூடாதெனத் தெளிவு கொண்டான். அவன் பார்த்த கடைசி கொரியன் சினிமா ‘கிம் கி டுக் கின் திரீ அயர்ன்’. ஆச்சரியமாய் அவனின் முதல் சிறுகதையே யாரிந்த புது எழுத்தாளர் பிச்சை? என்று பலரையும் கேட்கவைத்தது. கடிதங்கள் முடிந்து அவன் அலைபேசி எண்ணை பத்திரிகை அலுவலகத்தில் கேட்டு வாங்கி அவனுக்கு போன் செய்து பேசினார்கள். வாசகர்களை விட சக படைப்பாளிகளின் பேச்சு அதிகமிருந்தது. கவிதை எழுதத் தொடங்கி 5 வருடங்களுக்குப் பிறகுதான் அவன் கதை எழுதினான். அந்த ஒரு கதையே அவனைப் பல இடங்களுக்கும் அலைய வைத்தது. ஏகப்பட்ட இலக்கியக் கூட்டங்களுக்கு அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. ஒருகதை புகழ் பிச்சையானான். பயணப்படி தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பல இடங்களுக்கும் போய் வந்தான். ஏற்காட்டில் நடந்த கதை ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு கூட்டம் நடத்தியவர்கள் வெறும் பையைக் காட்டி, வெறுங்கையைக் குலுக்கி, அவனுக்கு டாட்டா சொன்னார்கள். வெட்டியாய் ஊர்ப்பயணம் செய்து மது மயக்கத்தில் பாதிபேரும், எல்லா மயக்கத்தில் மீதிபேரும் விமர்சனம் என்ற பெயரில் உளறிய அபத்தங்கள், பிச்சைக்கு மூச்சுத் திணற வைத்தன. எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தபடி கதைகள் எழுத முடிவெடுத்தான்.

கவிஞரும் எழுத்தாளரும் வெவ்வேறு இனமா? பிச்சையின் கேள்வி

இரண்டு வருடங்கள் கழித்து பிச்சையின் முதல் கதை வெளியான இதழின் ஆசிரியர் போன் செய்து பேசினார். அவர் பதிப்பகம் வைத்திருப்பதாகவும் பல புதிய கவிஞர்களுக்கும் கதையாளர்களுக்கும் முதல் புத்தகம் வெளியிட்டு வாழ்வளித்து வருவதாக உறுதி கூறி, பிச்சைக்கும் அவ்வாறே செய்ய விருப்பம் இருப்பதாகவும் கூறினார். பிச்சையும் இதுவரை எழுதிய கவிதைகளையும் கதைகளையும் அவருக்கு மெயிலில் அனுப்பிவைத்தான். பிச்சையின் முதல் கவிதை மற்றும் கதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வை, வாழ்வளித்த பதிப்பகத்தாரே ஏற்பாடு செய்திருந்தார். கவிஞரும் எழுத்தாளருமான பிச்சை என்று மேடையில் அறிவித்ததைக் கேட்டுக் குழம்பிப் போனான் பிச்சை. ‘கவிஞர் வேறு எழுத்தாளர் வேறா?’ என்று கேட்டான் அவன் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு அறிமுக எழுத்தாளரிடம். முதல் புத்தகம் வெளிவரும் ஆர்கசத்தில் அமர்ந்திருந்த, இருக்கையில் அமர முடியாமல் நெளிந்துகொண்டிருந்த புதிய எழுத்தாளரோ, மைக்கில் பேசியவரை அசிங்கமான வார்த்தை சொல்லித் திட்டி அவனுங்க அப்படித்தான் என்றார். பிச்சைக்கு திக்கென்றானது. எந்நிலைமையானாலும் பிச்சை மற்றவர்களுக்கு மரியாதை தந்தே பழகியிருந்தான். இலக்கியக் கூட்டங்கள் அவனுக்கு அலர்ஜியானதுக்கு முக்கியக் காரணம், இந்த இரட்டை வேடதாரிகள்தான். மேடையில் ஒரு பேச்சும், தனிமையில் இவனிடம் ஒரு பேச்சும் பேசும் இலக்கிய நக்கீரர்களுக்கு உடம்பெல்லாம் நெற்றிக்கண்ணிருந்தது கண்டு அருவருத்தான் பிச்சை. அவனின் முதல் கவிதைத் தொகுப்புக்கும் கதைத் தொகுப்புக்கும் அந்த வருடத்து சிறந்த தொகுப்புக்கான விருதுகள் பல மேடைகளில் வழங்கப்பட்டன.

பிச்சைக்கு உதாரணமான எழுத்தாளர்கள்

வீட்டுக்கு ஒரே பிள்ளை என்று செல்லம் தந்து வளர்த்தார்கள் அவனைப் பெற்றவர்கள். தங்களுக்கு அதிகம் பிடிபடாத எழுத்து என்னும் இடத்தில் தன்னை நிரூபிக்கிறான் தங்களின் தங்க மகன் என்பதே பிச்சை அவர்களுக்கு எல்லாமுமாகக் காரணமானது. கல்லூரி முடித்து கண் துடைப்புக்காக சில இண்டர்வியூ அட்டெண்ட் செய்தான். வேலை கிடைக்கவில்லை. எழுதுவதை விடவில்லை. வயது ஏறிக்கொண்டிருப்பதைக் காரணம் காட்டி, கல்யாணம் என்று வீட்டில் பேச்சு எழுந்தபோதெல்லாம் தனக்கு நிரந்தர வருமானம் வந்ததும் திருமணம் செய்துகொள்கிறேன் என்றான். எழுத்து தன் மகனுக்கு நிரந்தர வருமானம் தரும் என்று நம்பினார்கள் அந்த அப்பாவி பெற்றோர்கள். எப்படியாவது இலக்கியக் கூட்டங்கள் என்று வெளியூர்களுக்குச் சென்றுவரும் பிள்ளை என்றாவது ஒருநாள் காதல் திருமணம் செய்துகொண்டு வந்து நிற்பான் என்றும் நம்பினார்கள். விருது கிடைத்து அந்தச் சான்றிதழையும் கேடயத்தையும் வரவேற்பறையில் வைத்தபின்பு பெற்றவர்கள் கண்ணுக்கு பிச்சை ஒரு மனிதனாகவே தெரியவில்லை.

எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் சிறு வயதிலேயே இருந்ததால் எழுதும் நேரம் தவிர்த்து பிச்சை கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களில் ஒரு விஷயம் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. புனைவு என்பதை எழுத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கையிலும் பலர் செயல்படுத்திக்கொண்டிருந்தனர். நேருக்கு நேராக உண்மையைப் பேசுபவர்களின் எண்ணிக்கை உண்மையான வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததைக் கண்டு நொந்துபோனான். அப்படி அபூர்வமாக நிஜத்தைப் பேசிவிடும் இலக்கியவாதிகள் எங்கும் அதிகம் பட்டும்படாமல் இருந்தனர். புதிதாக எழுத வந்தவர்கள் பலரும் ஒரு கவிதை வெளியானவுடனே கவிதை என்பது என்னவென்று பெரிய பெரிய பேட்டி தந்தார்கள். ஒரு படைப்பு நன்றாக இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல இங்கே பல சாகசங்கள் தேவைப்பட்டன. நன்றாக இல்லை என்பதை நன்றாக இல்லை என்றுதானே சொல்ல முடியும்? எனப் பிச்சை கேட்டதற்கு, அதைச் சொல்ல நீயென்ன பெரிய புடுங்கியா? என்று மிரட்டினார்கள். பயத்தில் அழுதான் பிச்சை. குடித்துவிட்டு அழுகிறான் என்று அவனைத் தனியே விட்டுப் போனார்கள். நிறைய கேள்வி கேட்டு பதில் தேடிப் பயணப்பட்டதாலோ என்னவோ, நிறைய அனுபவங்கள் சேர்ந்தன பிச்சைக்கு. பெரும்பாலான சமயங்களில் தன்னை தனியாய் உணர்ந்தான். அது பெரும் இலக்கியக் கூட்டமானாலும் சரி, தனியாய்தான் இருந்தான். தன் தனிமையை எழுதி எழுதியே விரட்டினான். அடுத்த 5 வருடங்களில் கவிதை, கதை, நாவல் என்று எழுதித் தீர்த்தான். அவன் எழுத்தின் மீதிருந்த நம்பிக்கையில் பல பதிப்பகங்கள் அவன் புத்தகத்தை வெளியிட்டன. சிலர் மட்டுமே ராயல்டி என்ற பெயரில் சொற்பத் தொகையைத் தந்தனர். அவனுடைய புத்தகங்கள் நிறைய விற்றாலும் இரண்டாம் பதிப்புக்குத் தாமதப்படுத்தினர். பணம் எதுவும் தராத பதிப்பகங்கள் சொற்ப எண்ணிக்கையில் புத்தகங்கள் தந்து நிறுத்திக்கொண்டன. வியாபாரம் தெரியாமல் அதையும் தன் அறையின் மூலையில் அடுக்கி வைத்தான். ஒரே பிள்ளை என்றாலும் சொந்தக்காலில் நின்றால் நன்றாக இருக்குமே, என்று பிச்சையின் அம்மா ஆசைப்பட்டார். எந்த வேலைக்கும் போகாமல் எழுத்தை மட்டுமே நம்பி தன் குடும்பத்தைக் காப்பாறி வரும் எழுத்தாளர் சகாதேவனைச் சுட்டிக்காட்டி ஒதுங்கிக்கொண்டான். கல்யாணம் காட்சி என்று பிச்சையின் அப்பா வாய் திறந்ததற்கு, கல்யாணம் செய்துகொள்ளாமலே தமிழ்நாடெங்கும் பிரபலமாய் திரியும் எழுத்தாளர் காட்டுவாசியைத் தொட்டுக்காட்டி தப்பித்துக்கொண்டான். எதைக் கேட்டாலும் ஏதாவது எழுத்தாளரை உதாரணமாக்கும் தன் மகனிடம் எப்படிப் பேசிப் புரியவைப்பது என்று தெரியாமல் விழித்தனர் பெற்றவர்கள்.

பிச்சை ஒரு இளிச்சவாயன்

ஜாம்பவான்கள் என்று பலராலும் போற்றப்பட்ட மூத்த எழுத்தாளர்களின் எழுத்துகளையும் பேட்டியையும் வாசித்தபோது பிச்சை பெரும் அதிர்ச்சிக்குள்ளானான். அவன் பிறப்பதற்கு முன்பான அந்த எழுத்தாளர்கள் அப்போது கேட்டிருந்த ‘கலை கலைக்காகவா? மக்களுக்காகவா?’ என்ற கேள்வியையும் அதற்கான ஏதோ ஒரு பதிலையும், போன வாரத்தில் குற்றாலத்தில் நடந்த மீட்டிங்கில், பிச்சையைப் பார்த்து பலரும் கேட்டிருந்தனர். பிச்சை சொன்ன பதிலில் திருப்தியுறாமல் சுற்றியிருந்த பத்துப் பேரும் பத்து விதமாகப் பதில் கூறி பல்லை உடைத்துக்கொண்டனர். அந்தச் சமயத்தில்தான் டெல்லியிலிருந்து வழங்கப்படும் மிக உயரிய விருது ஒன்றுக்கு பிச்சையின் பெயர் அடிபட்டது. அந்த விருதும் கிடைத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் கல்யாணம், வேலைக்கெல்லாம் தலையாட்ட மாட்டான் என்று பயந்துபோன பிச்சையின் பெற்றோர்கள், வாடகை வீட்டில் இருந்துகொண்டு ஒழுங்காக வாடகை கூட தர முடியாமல் தான் வளர்க்கும் பூனைக்குப் பால் கூட வாங்கக் காசின்றி தவிக்கும் ஒரு எழுத்தாளரைச் சுட்டிக்காட்டி அவரைப்போன்ற மேதாவிக்கே அந்நிலை; :நீயாவது குடும்பம் தொழில் என்று நிரந்தரமாகு’ எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். அந்த எழுத்தாளர் பொய் சொல்கிறார் என்று ஒரே பதிலில் முடித்துக்கொண்டான் பிச்சை. அந்த டெல்லி விருது பிச்சைக்குக் கிடைக்கவில்லை. அது குறித்து அவனும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அதன் பின்னான எழுத்தரசியல் பிச்சையின் காதுக்கு வந்தபோது உச்சபட்ச எரிச்சலுக்கு ஆளானான். அந்த விருதுக் கமிட்டியில் இருந்தவர்களிடம் வெளி ஆட்கள் சிலர் தன்னைப் பற்றி புறம் பேசியதைப் பிச்சை அறிந்துகொண்டான். மனிதர்கள் இப்படித்தான் என்று சமாதானமானாலும் பிச்சை எல்லா எழுத்தாளர்களுக்கும் ஜால்ரா அடித்துப் பிழைப்பவன் என்பது போன்ற மலினமான வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு மன உளைச்சல் அடைந்தான். இங்கே எல்லோரையும் அனுசரித்துப் போவதற்கு இன்னொரு பெயர் இளிச்சவாயன். பிச்சை தான் ஒரு சிறந்த இளிச்சவாயன் என்று நம்பினான்.

அச்சு இதழுக்கு, பிச்சை தந்த பேட்டி

பிறகு ஒரு வருடம் எதுவும் எழுதாமல் வாசிக்காமல் எந்தக் கூட்டங்களுக்கும் கலந்துகொள்ளாமல், அவனின் சொந்த கிராமமான வரிச்சிகுடியில் இருக்கும் நிலத்துக்குச் சென்று வயல் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தான். பிரபல இலக்கிய மாத இதழான ‘அச்சு’, பிச்சையிடம் பேட்டி எடுத்துப் பிரசுரித்தது. அந்த நேர்காணலிலிருந்து கொஞ்சம்…

அச்சு: சமீபத்தில் விருது வழங்கும் மேடை ஒன்றில் நீங்கள் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. அது குறித்து…
பிச்சை: விருது என்பது என்ன என்பதே இங்கே பலருக்கும் தெரிவதில்லை. விருதினைப் பெற்றுக்கொள்ளும் நபர் திறமைசாலியாக இருக்கலாம். அதை வழங்குபவர்கள் அதற்கான தகுதியில் இருக்கின்றனரா? எனக்கு டெல்லியிலிருந்து ஓர் உயர் இலக்கிய விருது கிடைக்க இருந்தது. கிட்டத்தட்ட எனக்குதான் அந்த விருது என்பதில் என்னை விட என் நலம் விரும்பிகள் பலரும் நம்பிக்கையுடன் இருந்தனர். இன்னொரு நபருக்குச் சென்று சேர்ந்தது. எனக்கு அது குறித்து எந்தவித சங்கடமும் இல்லை என்றாலும் அவ்விருதுக்குப் பின்னிருந்த அரசியலை என் நண்பர்களும், எதிரிகளும் எனக்குத் தெரிவித்தார்கள். இதில் என் நண்பர்களை விட எதிரிகள்தான், மிகச் சிறப்பாகப் பணியாற்றி தகுந்த ஆதாரங்களுடன் என்னிடம் நிரூபித்தார்கள். விருதுக் குழுவில் இருந்தவர்களுக்கு என் எழுத்து மட்டுமே பரிச்சயமானது. அதற்குத்தான் அவர்களும் விருது தருகிறார்கள். அப்படியிருக்க தனிப்பட்ட எனது கருத்துகள், விருப்பு வெறுப்புகளை விருதுக் குழுவிடம் சொல்லி என்னைப் பற்றிய தவறான படிமத்தை அங்கே உருவாக்கியிருக்கின்றனர். மேலும் பல சிபாரிசுகளும் அங்கே தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிபாரிசின் பேரில் வாங்க இதென்ன எல்கேஜி சீட்டா, காலேஜ் சீட்டா? அங்கும் கூட திறமைக்குத்தானே முதல் இடம். அப்புறம் இன்னொரு விருதுக் குழுவில் நானே இருந்தேன். அக்குழுவில் இருந்த பிரபலமான கவிஞர் ஒருவர், ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்ட ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்காக விருதை முன்மொழிந்து கொண்டிருந்தார். எத்தனை நூல்கள் பரிசீலனைக்கு வந்தாலும் அதை இரண்டாம் இடத்தில் தள்ளிவைத்து தான் விரும்பிய மொழிபெயர்ப்பு நூலையே முதல் இடத்துக்கு வைத்துக்கொண்டார். பிறகுதான் தெரிந்தது அந்த மொழிபெயர்ப்பு நூல் எழுதியவர், சம்பந்தப்பட்ட பிரபல கவிஞருக்கு இலக்கிய ரீதியான முன்னுரை எழுதித் தருதல், விமர்சனம் எழுதுதல், மேலும் அந்தக் கவிஞரை எல்லா மேடைகளிலும் போற்றிப் புகழக்கூடிய ஒருவராக இருந்திருக்கிறார் என்று. விருது பெற்ற அந்த நூலை விட மிகப் பிரமாதமான புத்தகங்களை பல மோசமான உதாரணங்களுடன் நிராகரித்தார் அக்கவிஞர். ஏதோ அரசியல் எம்பி சீட்டுக்கான உள்ளடி வேலைகள் அங்கு நடந்தன. அதைத்தான் அந்த மேடையில் வெளிப்படுத்தினேன்.

அச்சு: உங்கள் பர்சனலை மட்டும் நீங்கள் எழுத்தாக்குகிறீர்கள் என்றொரு குற்றச்சாட்டு உங்கள் மீது உள்ளதே?
பிச்சை: என் வாழ்க்கையை, என் அனுபவங்களைத்தானே நான் எழுத்தாக்க முடியும். உங்கள் வாழ்க்கையை என்னால் வாழ முடியாதே. அப்படியே அதை எழுத நினைத்தாலும் எவ்வளவு செயற்கையாக இருக்குமென்று நினைத்துப் பார்த்தீர்களா… ஒரு எழுத்தாளன் என்பவன் சுயமாய் சிந்தித்துதான் கதையோ, நாவலோ எழுதுகிறான். அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறீர்கள் என்பதாலே அவனை எப்படியெல்லாம் நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். என் எழுத்து உங்களுக்கு என்ன தருகிறது என்பதை வெளிப்படுத்துங்கள். விமர்சனமாக்கி கேள்வி கேளுங்கள். அதை விடுத்து நான் காலையில் காபிக்குப் பதிலாக டீ குடிப்பதை ஏன் விவாதத்துக்கு உள்ளாக்குகிறீர்கள்? எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாளர் மது அருந்துபவர். இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பவர். இரவு நேரங்களில் தன் வீட்டில் மது அருந்திவிட்டு சந்தோஷமாக இருப்பவரின் படுக்கையறையை எட்டிப்பார்த்து ‘ஊருக்கு உபதேசம் செய்பவன் உள்ளுக்குள் எப்படி இருக்கிறான் பார்! என்று பேசுகிறீர்கள். அவன் சொல்லும் உபதேசம் உங்களுக்கு உவப்பானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் அது குப்பையென ஒதுக்கித் தள்ளுங்கள். ஒரு தமிழ் சினிமா நடிகருக்கு இருக்கும் பாதுகாப்பு வளையம், தமிழ் எழுத்தாளனுக்கு இல்லாத காரணத்தாலேயே அவனை நெஞ்சுக்கு அருகில் நெருங்கிப் பார்க்க நினைப்பது என்ன நியாயம்?
அச்சு: அப்படியானால் உங்களைப் பற்றிய எந்த விமர்சனமும் கூடாது என்கிறீர்களா?
பிச்சை: நான் வேறு எனது படைப்பு வேறு. என் எழுத்து குறித்து எந்த விமர்சனம் வேண்டுமானாலும் முன் வையுங்கள். அபத்தமான கருத்து என்று சொல்லுங்கள். தட்டையான புரிதல் என்று கூட கூறுங்கள். எனக்கு ஒரு அரசியல் கட்சி பிடிக்கிறதென்றால் அது என் தனிப்பட்ட விருப்பம் இல்லையா… என்னைப் பேட்டி எடுக்க வருகின்றவர் கறுப்பு சட்டை, கறுப்பு பேண்ட் போட்டிருக்க வேண்டும் அல்லது ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தமோ அத்தனை அபத்தம் நான் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு தமிழ்க் கலாச்சாரம் பேசுவதைப் பற்றி விமர்சிப்பதும். செளகரியம் வேறு வாழ்வு வேறு.

அச்சு: தமிழ்நாட்டிலே பிறந்ததாலே தன்னை எவரும் கொண்டாடுவதில்லை எனவும் பிற மாநிலத்திலோ வெளிநாட்டிலோ பிறந்திருந்தால் இந்நேரம் சிலை வைத்திருப்பார்கள் என்று ஒரு எழுத்தாளர் கூறி வருகிறாரே…
பிச்சை: அவரை யார் தமிழ்நாட்டில் பிறக்கச் சொன்னது. முதலில் பிறந்த இடத்தில் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்கச் சொல்லுங்கள். நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் நான் தமிழ்நாட்டில் பிறந்ததாலே ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்துள்ளேன். இதே அமெரிக்காவில் பிறந்திருந்தால் அங்கே தெருவுக்குத்தெரு கமல்ஹாசனும் பிரபுதேவாவும் என ஏகப்பட்ட பேர் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். தனித்த அடையாளம் எதுவுமற்றுப் போயிருப்போம் என்று சொன்னார். சொந்த விரலைச் சூப்ப முடியாதவன்தான் அடுத்தவன் விரலைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக் கொண்டிருப்பான்.

பிச்சைக்கு ஆறுதல் சொன்ன சரஸ்வதி

அடுத்த வருடம் பிச்சை ஒரு நாவல் எழுதினான். பிச்சை எதுவும் எழுதாத அந்தச் சின்ன இடைவெளியில், புதிதாய் சிலர் எழுதப் புறப்பட்டிருந்தாலும், பிச்சையின் இடம் நிரப்பப்படாமல்தான் இருந்தது. நிலம் என்ற தலைப்பில் பிச்சை எழுதிய 1500 பக்க நாவல் தற்காலத்திய விவசாயிகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டியது. கண்ணில் பசியும் இரத்தமும் வறுமையும் கலந்து கடந்த பக்கங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வழங்கப்படும் இலக்கிய விருது கிடைத்தது. அதற்கான பாராட்டு விழா ஒன்று கன்னியாகுமரியில் ஏற்பாடாகியிருந்தது. விழா முடிந்து தனித்திருந்த பிச்சையைச் சந்தித்த ஒரு வாசகர் பிச்சை எழுதியிருந்த விளிம்பு என்ற சிறுகதை குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். தான் கொண்டு வந்திருந்த வெள்ளியிலான சிறிய சரஸ்வதி சிலையை பிச்சைக்குப் பரிசளித்தவர் உணர்ச்சி வசப்பட்டு பிச்சையின் காலில் விழுந்து கதறி அழுதார். தான் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், அந்தக் கதைதான் தன் வாழ்வையே புரட்டிப் போட்டதாகவும், இப்போது தான் தன் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியவர், தான் ஒரு ஆட்டோ டிரைவர் என்றும்,ⁿ ஆட்டோவில் கூட கடவுள் படங்களுக்குப் பதிலாக பிச்சையின் போட்டோவையே வைத்திருப்பதாகவும் கூறி அழுதார். ஊருக்குத் திரும்பிய பிச்சை அந்த சரஸ்வதி சிலையை தன் அம்மாவிடம் தந்துவிட்டு அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதான். மனிதர்களில் எவரையும் நம்பக் கூடாதென்கிற நிலைமைக்குத் தன்னை இந்த இலக்கிய உலகம் தள்ளிவிட்டது என்று கூறி விம்மினான். அம்மா அப்பாவின் ஆசைப்படி திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு பேரன் பேத்தி பெற்றுக்கொடுத்துவிட்டு ஒரு குடும்பத் தலைவனாய் வேலைக்குச் சென்று மன நிம்மதியான வாழ்வை வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லிப் புலம்பினான். எழுத்தாளனாய் தான் அடைந்திருக்கும் புகழுக்கு மிகப்பெரிய விலையைத் தந்துவிட்டதாய் சொல்லிக் கதறினான். தான் அணிந்திருக்கும் பிரபலம் என்ற முள் கிரீடம் முள்ளாய் உறுத்துவதாய் சொல்லித் தேம்பினான். பிச்சையின் தலைமுடியைக் கோதியபடி அவன் அம்மா, பிச்சை தனக்கு மட்டும் மகன் இல்லையெனவும், இந்தத் தமிழ்நாட்டில் பலரும் பிச்சையின் எழுத்தை வாசித்து, தங்கள் வாழ்க்கையைச் சரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அது அவன் எழுத்துக்குக் கிடைத்திருக்கும் மரியாதையோடு, அவனைத் தங்கள் குடும்பத்து ஆட்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சமாதானம் செய்தார். ஒரே ஒரு ஆட்டோ டிரைவர்தான் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறாரே தவிர இன்னும் பிச்சைக்கு வழங்கப்படாத சரஸ்வதி சிலைகள் இந்நாடெங்கும் இருக்கின்றன என்று சொல்லி அவரும் அழுதார். சராசரியான மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில் தன் மகன் சராசரியல்ல என்பதே தனக்குப் பெருமைதான் என்றவர், ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நிம்மதியாய்ப் போய்த் தூங்கு’ என்று நெற்றியில் முத்தமிட்டு அனுப்பினார். படுக்கையில் படுத்தவாறு ஷெல்ஃபின் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையைப் பார்த்துக்கொண்டிருந்தான் பிச்சை. ஆட்டோக்காரர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் செவித்துளைக்குள் ஒலிக்க கண்களை மூடினான். கண் ஓரத்திலிருந்து கண்ணீர் பிதுங்கி வழிந்து கன்னம் தாண்டி இறங்கி தலையணையைத் தொட்டது. அலமாரியிலிருந்த சரஸ்வதி தன் வீணையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு பிச்சையின் அருகில் வந்து படுத்துக்கொண்டு அவனை அணைத்தபடி பிச்சையைத் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள்.

பிச்சை கண்ட கனவு

கதை முடிந்துவிட்டாலும் பிச்சையின் வேண்டுகோளுக்கிணங்க இன்னும் கொஞ்சம் நீட்டிக்கப்படுகிறது. கனவு போலவும் நிஜம் போலவும் இல்லாத ஓர் இடத்தில் பிச்சை நின்றுகொண்டிருந்தான். தூரத்தில் ஒலி பெருக்கியில் யாரோ இருவரின் குரல்கள் மட்டும் அவன் காதுக்குள் கேட்டது. எல்லோர் கையிலும் தராசு இருக்கிறது என்பதற்காக அனைவரும் நீதிமான்கள் அல்ல என்றதற்கு எதிர்வினையாக, ‘விமர்சனம் தாங்கப் பழகு உன் இலட்சியத்தில் முன்னேறுவாய்’ என்றொரு குரல் கேட்டது. அது சேலமா, திண்டுக்கல்லா, குற்றாலமா, வால்பாறையா, சென்னையா, நாகர்கோவிலா, மதுரையா, பாண்டிச்சேரியா என்று கணிக்க முடியாத புரிபடாத இடமாய் தோன்றியது. பிச்சையை மட்டும் தனியாய் விட்டுவிட்டு எல்லோரும் எங்கோ போய்விட்டது போல் தோன்றியது. கண்ணுக்கு மிக அருகில் வானம் தன் சாம்பல் நிறத்தை மீட்டெடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான் பிச்சை. தன் பாக்கெட்டுகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். இங்கிருந்து விலகக்கூட காசில்லாத தன் நிலையை எண்ணி கலங்கினான். வலிக்கு ஆறுதலாய், நம்பிக்கை தந்து பேச யாரும் இல்லாதது போல் உணர்ந்தான். நான் ஏன் கல்யாணம் செய்துகொள்ளாமல் போனேன்? எனக்கு எழுத்து போதும் எனத் தீர்மானிக்க வைத்தது எது? அப்படி என்ன எழுத்தின் போதை என்னை ஆட்டுவித்தது? எல்லா முகமூடி மனிதர்களையும் சந்திக்கத்தான் நான் எழுத்தாளன் ஆனேனா? நம்பிக்கையற்ற முகங்களின் தரிசனம் மட்டும்தான் என் வாழ்வில் நடந்ததா? பிச்சை கண்களைச் சுருக்கி கவனித்தான். ஒற்றையடிப் பாதையின் தூரத்தில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. வெள்ளைத் தாமரை மீது வெள்ளை உடை அணிந்த உருவம். சின்ன வயதில் கனவில் கண்ட உருவம். கோபத்தில் கண்கள் சிவக்க_ அமர்ந்திருந்த உருவத்தை நோக்கி ஓட எத்தனித்தான். செருப்பு அறுந்து அவனை நிலை தடுமாற வைத்தது. நிதானித்து நிமிர்ந்தவன் கீழே குனிந்து செருப்புக்கு அருகில் கிடந்த பெரிய கல்லினை எடுத்தான். பலம் கொண்ட மட்டும் ஓங்கி அந்த உருவத்தை நோக்கி எறிந்தான். இவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வானிலிருந்து ஒரு பூ மெளனமாய் உதிர்ந்தது. கல் உருவத்தை நெருங்கும் முன், உருவத்துக்கும், கல்லுக்கும் இடையில் பூ நிற்பதைப் பார்த்தான் பிச்சை.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close