தொடர்கள்

“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை -7

'வலசைப்பாதை' ஒருங்கிணைப்பாளர் பறவை பாலா

7.உட்கட்டமைப்பு

 

உட்கட்டமைப்பில் முதலில் செய்ய வேண்டியது வரைபடத்தில் குறிப்பிட்டதைப்போல நிலங்களை அளந்து பிரித்து சமஉயர வரப்புகளை ஏற்படுத்தவேண்டும்.

வரைபடத்தில் குறிப்பிட்டதிலிருந்து விலகாமலும், வேலைக்காக நிலத்தின் அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து மனித உழைப்பைப்பெற்றுக்கொள்வது உங்களுடைய மன உளைச்சலைக்குறைக்கும்.

குடிசை:

தென்னை ஓலையில் மேற்கூரையமைத்து தரையில் மண்போட்டு நிரப்பி, சாணம் கொண்டு அமைக்கும் முறை நான்கு வருடம் வரை தாக்குப்பிடிக்கும். பிறகு மீண்டும் நான்கு வருடத்திற்கொருமுறை மேற்கூரையை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.

பனை ஓலையில் அமைத்தால் பத்து வருடமும், நமது கோரைப்பாய்களின் மூலப்பொருளான சம்புவில் அமைத்தால் பதினைந்து வருடமும் தாக்குபிடிக்கும். இவையே நாம் இயற்கையை சிதைக்காத நமது மிகப்பழைய மரபு முறை.

நிரந்தரமாக ஐம்பது வருடம், நூறு வருடங்களுக்கு தாக்குப்பிடித்து நிற்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் மண்குழைத்து பக்கவாட்டுச்சுவர் எழுப்பி, ‘ஓடு’ வீடு அமைக்கலாம்.

நீங்கள் வசிக்கப்போகும் வீட்டை உங்கள் கைகளினாலே கட்டி எழுப்ப வேண்டுமென்று நினைத்தால் பதநீர், நுங்கு, கடுக்காய், சுண்ணாம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களை தேடித்தேடியெடுத்து அமைக்கலாம். அல்லது மரபுவீடு கட்டித்தருவோரை அனுகலாம். திண்ணை, ரேழி, வெளிமுற்றம், உள்முற்றம், வைப்பறை, சமையலறை, குழியலறை, கழிவறையுடன் கூடிய நல்ல மரபு வீட்டைக்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை இப்போதே தேடத்துவங்கலாம்.

ஆனால் அவற்றிக்கெல்லாம் காலம் பிடிக்குமே! என்று உங்கள் மன ஓட்டத்திற்கோ, பட்ஜெட்டிற்கோ ஒத்துவராத பட்சத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் ‘கான்கிரீட்’ காடுகள் அமைப்பிற்குச்செல்லலாம்.

மாட்டுக்கொட்டகை:

பின்னாட்களில் நீங்கள் மேற்கொள்ளப்போகும் இயற்கை வழி வேளாண்மைக்கு உரத்தொழிற்சாலையாக இயங்கப்போவது மாட்டுக்கொட்டகைதான். அதனால் மாட்டுக்கொட்டகையை மிக நேர்த்தியாக அமைக்க வேண்டும்.

மாட்டுக்கொட்டகையின் மேற்கூரையமைத்து மொத்தமுள்ள நான்கு பக்கங்களில் ஒரு பக்க வாசல் மட்டும் வைத்து விட்டு மற்ற மூன்று பக்கங்களையும் தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் சுவர் எழுப்ப வேண்டும்.

இன்றைக்கு இருக்கிற ‘கான்கிரீட்’ வீடுகளின் மொட்டை மாடியில் தற்காலிக பந்தல் அமைக்கும் பொருட்டு இரும்பாலான ஒரு வளையம் பொருத்தியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அதேபோன்றதொரு கம்பிகளை ஐந்தடிக்கு ஒன்று வீதம் மாட்டைக்கட்டுவதற்காக பொருத்த வேண்டும்.

அந்தக்கொட்டகையினுள் மாடு தண்ணீர் குடிக்கும் தொட்டி, இரை எடுக்கும் பகுதி, கோமியம் சேகரமாகும் தொட்டி இருக்குமாறு பார்த்துக்கொள்வது மேலும் சிறப்பு.

20*15அளவுள்ள ஒரு மாட்டுக்கொட்டையினுள் நான்கு மாடுகள் கட்டலாம். நீங்கள் வளர்க்கப்போகும் மாடுகளின் எண்ணிக்கை மற்றும் பட்ஜெட்டைப்பொறுத்து இந்த அமைப்பை கூட்டவோ, குறைக்கவோ செய்து கொள்ளலாம்.

ஆட்டுக்கொட்டகை:

மேற்கூரையமைத்து சுற்றிலும் சுவர் எழுப்பாமல் கறுக்கு மட்டைத்தட்டி, கம்பி வலை, அல்லது பலகையினால் ஆன தட்டி போன்றவற்றால் அடைத்து ஆடுகளைப் பராமரிக்கலாம்.

இது தவிர தரையிலிருந்து ஐந்து அடி உயரத்தில் ‘கொட்டில்’ முறை ஆடு வளர்ப்பு தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த அமைப்பானது ஆட்டுப்புழுக்கைகளை சேகரிப்பதற்கு எளிமையாகவும், ஆடுகள் உற்சாகமாக உலாவருவதற்கும் ஏற்ற அமைப்பாக கருதப்படுகிறது.

உங்களுடைய பட்ஜெட்டுக்கு இது ஒத்துவருகிற பட்சத்தில் இதனையும் அமைத்துக்கொள்ளலாம்.

கோழிக்கொட்டகை:

மேற்கூரையமைத்து இரண்டடி வாசல் வைத்து மற்ற பகுதிகளை தரையிலிருந்து இரண்டடி உயரத்திற்கு சுற்றிலும் சுவர் எழுப்ப வேண்டும்.

சுவற்றிலிருந்து மேற்கூரை வரை கம்பி வலைகளால் பாம்புகள் உட்புகாவண்ணம் அடைக்க வேண்டும்.

நான்கு பக்க சுவற்றினுள்  உள்புறமாக 2*2 என்ற அளவீடுகளில் தனித்தனியாக அறைகள் அமைக்கவேண்டும். இப்படி அமைக்கும்போது கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடாமல், முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறிக்க வழிவகை செய்து கொடுக்கும்.

ஆடு, மாடு, கோழி கொட்டகைகளை அமைக்கும்போது கிழக்கு மேற்காக அமைப்பது நலம்.

இந்த அமைப்பானது வெப்பம், காற்று ஆகிய இரண்டு பூதங்களும் சரிவிகிதமாக கிடைக்கப்பெற்று ஆநிரைகள் ஆரோக்கியமாக உங்கள் பண்ணையில் வலம் வர உதவும்.

இவை தவிர மின்மோட்டார் மற்றும் மின்சாரத்தை அளவீடு செய்யும் ‘மீட்டர் பாக்ஸ்’ வைக்க தனியாக ஒரு அறையும், பண்ணை மேலாண்மைக்காக தனியாக ஒரு வைப்பறையும் கட்டாயம் கட்ட வேண்டி வரும்.

நீங்கள் அமைக்கப்போகும் பண்ணையில் ஆரம்பத்தில் இந்த உட்கட்டமைப்பே போதுமானது. வாத்து, தேன், மீன், புறா என்று பின்னாட்களில் நீங்கள் விரியும் போது காலம் கற்பிக்கும் சூழலுக்கேற்றார் போல அவற்றிக்கான உட்கட்டமைப்பையும் அமைத்துக்கொள்ளலாம்.

பாதை விரியும்…


முந்தைய  பகுதிகள்

6. எரிசக்தி

5.நீர் மேலாண்மை

4.வேலி

3.வரைப்படம்

2.நிலம்

1. வலசைப்போதல்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close