கவிதைகள்

கவிதைகள் – சாமி கிரிஷ்

கவிதைகள் | வாசகசாலை

காரம் தூக்கலான நாட்குறிப்பு

மிளகாய் நெடி பறக்கும்
அந்தச் சந்தினை
தும்மல் இல்லாமல்
கடப்பதென்பது ஆபூர்வம்.
மிளகாய் அரைக்க வருபவர்கள்
நாசி துளைக்கும்
கலப்படமற்ற காரத்தை
சமைக்கும் குழம்பின் சுவையெண்ணி
ஊறும் நாவெச்சிலால்
தணித்துக்கொள்கிறார்கள்
‘காரமே கண் கண்ட தெய்வமென்கிறார்’
கல்லாப்பெட்டியில்
கம்பீரமாய் வீற்றிருக்கும் மில் முதலாளி
இயந்திரத்தை இயக்குபவரின்
உள்ளிருக்கும் எரிச்சல் மறைந்த சிரிப்பில்
வழிந்தோடுகிறது
பழகிய கார்ப்பு ஏறிய கடுப்பு
கடைசியாய்
எல்லோரும் கை கழுவியே சிவந்திருக்கும்
நெருப்பேறிய தண்ணீரில்
கைகளின் காரத்தை
குளிக்க வைத்தல் நிகழ்கிறது
அரைத்த மிளகாய்த்தூளை பையிலும்
முடிந்த மட்டும் எரிச்சலை உடம்பிலுமாய்
ஏந்தி வீடடைவதானது
கொஞ்சம் காரம் தூக்கலான பணிதான்.

*****

ஆதர்சமாகிப்போனது அசைவம்

அசைவமே ஆதர்சமென
பயணித்த வாழ்வு
காலச்சுழலில்
சைவமே சர்வமயமாய்
சலிக்கத் தொடங்கியிருக்கிறது.
வைபவங்களில்
நெரிசலான கறிவிருந்துப் பந்திகளினூடே
ஏதோ ஓரமாய் பரிமாறப்படும்
சைவ வரிசையின் தனிமை
படுத்தியெடுக்கிறது.
சுத்த அசைவ உணவகங்களில்
நண்பர்கள் குழாம் தரும்
சிறப்பு விருந்துகளில்
வெறும் ரசம்..மோரோடு
எழுந்து வரவேண்டியிருக்கிறது.
அசைவத்தை ஏற்காத இவ்வுடலை
நான் கடுமையாய்க் கடிந்துகொள்வதும்
பதிலுக்கு அது
தன் வாழ்வுக்காய்
தலையில் அடித்து
நொந்துகொள்வதும்
அடிக்கடி நடக்கிறது.
குறிப்பிட்ட சில விழாக்களுக்கு
சைவமே என்றிருந்த
எழுதப்படாத சட்டத்தை
அனைவரின் அசைவ ஆசைகள்
வளைத்தே விட்டிருக்கின்றன.
அசைவங்களுக்கு
இசைந்துவிட்ட
இவ்வாழ்வில்
‘நான் சைவம்’ என்பதெல்லாம்
வெறும் தனிப்படுதலேயன்றி
வேறொன்றுமில்லைபோல…

*****

பூலோகத்தின் சொர்க்கங்கள்…

குழந்தைகளின் கொலுசோசையில்
தொலைந்து போகின்றன
மனிதர்களின் மனத்திருகுகள்

குழந்தைகள் தூங்கும் அழகைக்காண
விழித்திருக்கின்றன
அறைகளின் இரவுகள்

குழந்தைகள் உண்டாக்கும் குப்பைகளால்
கூட்டித் தள்ளப்படுகின்றன
வீட்டின் அக அழுக்குகள்

குழந்தைகள் சாப்பிடும்
தினுசுகள் பார்த்து
குடும்பமே
பசியாறிக்கொள்கிறது

குழந்தைகள் புழங்கும் வீடுகள்
கிட்டத்தட்ட
பூலோகத்தின் சொர்க்கங்களே.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close