கட்டுரைகள்
Trending

சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்– அம்மு ராகவ்

சரவணன் சந்திரனின் எழுத்தை இணையத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நாவலாக அவர் எழுத்தை முதன் முதலில் வாசித்தது ரோலக்ஸ் வாட்ச் மூலம்தான்

அடித்தட்டு வர்க்கத்தை சார்ந்த ஒருவனுக்கு, கல்லூரிக் காலத்தில் கிடைக்கும் அரசியல் பின்புலமும், அதிகார பலமும் கொண்ட நண்பர்களை அவன் எவ்வாறு பயன்படுத்தி தன் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கிறான் என்பதையும் வாழ்வில் அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் மூலம் அவன் கற்றுக்கொள்ளும் பாடங்கள் என்ன என்பதையும் இயல்பாக சொல்லிச் செல்கிறது கதை.

 “என் வாழ்க்கையை கட்டங்களால் தீர்மானிக்க முடியாது. என் வாழ்க்கை என் கையில். நான் தற்செயலானவன்.” என ஜோதிடர் சுந்தர் கேரக்டருக்கு பதிலளிக்கும் நாயகனின் தன்னம்பிக்கை வார்த்தைகள் அருமை. இந்நாவலில் எனக்குப் பிடித்த வரிகளும் கூட. நண்பனின் கதையாக வரும் இலை விற்று வளர்த்த தாய்க்கு தங்கத்தட்டு வாங்கி பரிசளித்ததும், வெளிநாட்டில் ஆப்பிள் மரத்தடியில் குழந்தைகள் விளையாடும் காட்சியையும், சிறுவயதில் நண்பனும் அவனின் உடன்பிறந்தோரும் அம்மா கொண்டு வரும் அழுகிய ஆப்பிளுக்காக காத்திருந்ததையும் ஒப்பிட்டு எழுதியிருப்பது வாசிக்கும் நம்மையும் பரவசம் கொள்ளச் செய்கிறது.

சந்திரனின் தாய்மாமா, பட்டுதயாரிப்பு நிறுவன உரிமையாளர், வாத்தி, பாண்டி  என நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள். மனிதர்களில் இத்தனை வகையா, இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என வியக்க வைக்கிறார் சரவணன் சந்திரன். கதையில் வரும் நாயகனுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நிறைய பாடங்களை சொல்லிச் செல்கிறார்கள் இக்கதை மாந்தர்கள்.

புதிதாக வாசிப்புப் பழக்கத்தை தொடர்பவர்கள் கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் சுலபமான எழுத்துநடை. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் கதையை கதாநாயகன் வாயிலாக குழப்பமில்லாமல் சொல்லியிருக்கும் விதம் அருமை.

பொதுவாக அரசியல்வாதிகளையோ, அரசு அதிகாரிகளையோ பொதுமக்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாது. அவர்களுக்கிடையே தூதுவர்களாக  செயல்படும் அரசியல் புரோக்கர்கள் மூலமாகத்தான் தொடர்பு கொள்ளவும், நம் வேலையை முடிக்கவும் முடியும். அப்படி ஒரு அரசியல் புரோக்கராக வலம் வருபவர்தான் இந்நாவலின் ஹீரோ.

இப்படி ஒரு நிழல் உலகம் இருப்பது மேலோட்டமாக நமக்கு தெரிந்திருந்தாலும், அந்த நிழல் உலக மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக நமக்குக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

நாயகனுக்கு நண்பனின் மனைவியான திவ்யாவின் மேல் வரும் காதல்,காமம்….பற்றிக் கூறும் போதும், அவனுக்கு இதுவரை காணாத அளவு பணம் கையில் கிடைக்கும் பொழுது, அதை வைத்து மது,விலைமாது எனத் திரியும் பொழுதும்…. மிக விரசமாகத் தெரியாத வண்ணம் இந்த இடங்களை ஆசிரியர் கவனமாகவே கையாண்டிருக்கிறார். இருவரின் பிரிவு கூட அழுகை ஆர்ப்பாட்டம்னு இல்லாமல் நாகரிகமாக நிகழ்கிறது.

நண்பர்களாக வரும் சந்திரன்-மாதங்கி ஜோடி, இப்படிப்பட்ட நட்புகள் கிடைக்காதா என வாசிப்பவர்களையும் ஏங்க வைக்கிறார்கள். எல்லா நல்ல பண்புகளும் உள்ள சந்திரன் ஒரு துணைகதாபாத்திரமாக வருகிறார்.

அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டவனாக கதையின் நாயகன் வருகிறார். அந்த நாயகனின் பார்வையிலேயே நாவலின் கதையை சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். ஆனால் நல்லவன், கெட்டவன் என்கிற மதிப்பீடு காலத்திற்கும், சூழ்நிலைக்கும், மனிதர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது என்பதை இந்நாவலை வாசிக்கும்போதே உணர முடிகிறது. ரோலக்ஸ் வாட்ச்சில் ஒரிஜினல் எது, போலி எது என கண்டுபிடிக்க முடியாதது போலவே கதாநாயகனைப் பற்றியும் அனுமானிக்க முடியவில்லை.

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சந்திரனுக்கு நட்பு வட்டத்தில் கிடைக்கும் மரியாதை நமக்கு கிடைக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலும் நாயகன் கதாபாத்திரம், பணம் மட்டுமே நமக்கான மதிப்பை மரியாதையை பெற்றுத்தராது என்பதை நமக்கும் உணர்த்திச் செல்கிறது.

கதையில் எத்தனையோ மனிதர்கள் வந்தாலும்…..

வாழ்க்கையில் ரெண்டு வகை இருக்கு, ஒன்னு கிடைக்கறத வச்சு வாழ்றது, இன்னொன்னு கிடைக்கப்போறதுக்காக வாழ்றது; போராடறது, உழைக்கிறது. நான் இதுல ரெண்டாம் வகைனு சொல்ற கணபதி சாரை நம்மால் மறக்க முடியாது. அவர் நாயகனுக்கு மட்டுமல்ல, நம்மையுமே,ரொம்ப ஆடாதடா” என பொட்டில் அடித்துச் சொல்லிச் செல்கிறார்.

ரோலக்ஸ் வாட்ச்சில் டூப்ளிகேட் தயாரிக்க மாட்டார்கள். ஆனால் டூப்ளிகேட் இல்லாமலும் இல்லை.

இந்தரோலக்ஸ் வாட்ச்’ டூப்ளிகேட்டா? ஒரிஜினலா?…

ஒருவேளை இருக்கலாம்.

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. நாவல் வாசிப்பை, விறுவிறுப்பாக தந்துள்ளார் அம்மு ராகவ். இந்த முன்னோட்டம், ரோலக்ஸ் வாட்ச் நாவலை வாசிக்கத் துாண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close