கட்டுரைகள்
Trending

இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் புரிதல்களும்

அருண் கோமதி

இட ஒதுக்கீடு சம்பந்தமாக நண்பர்களிடமும், பொது நிலைப்பாட்டில் உள்ள மக்களிடமும், இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிலையில் உள்ளவர்களிடமும் விவாதிக்கும் போது அவர்கள் கேட்ட கேள்விகள்/சந்தேகங்கள்/விவாதங்கள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் ஆகியவற்றை கேள்வி-பதில் வடிவில் தொகுத்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

கேள்வி 1:

ஏன் இட ஒதுக்கீடு?

‘எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்’ என்பதற்கான ஒரு வழிவகைத் தொடக்கம் தான் இட ஒதுக்கீடு. வகுப்புவாரி பிரதிநிதித்துவமாக சுதந்திர இந்தியாவிற்கு முன் இருந்த 100% இடப்பங்கீடே சுதந்திரத்திற்கு பின் பல்வேறு சதவீத மாற்றங்களை கடந்து இன்று தமிழகத்தில் 69% ஆகவும் மத்தியில் 50% ஆகவும் உள்ளது.

கேள்வி 2:

இட ஒதுக்கீடு ஏன் சாதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது?

எதன் பெயரால் இங்கு ஒருவர் ஒடுக்கப்பட்டாரோ ! எதன் பெயரால் இங்கு ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததோ! எதன் பெயரால் ஒருவர் சராசரி மனிதனை விடக் கீழான நிலைக்கு தள்ளப்பட்டாரோ! அதன் பெயராலேயே அவருக்கான உரிமைகளை வழங்குவதற்கான ஒரு குறைந்தபட்ச சமூகநீதி திட்டமே இட ஒதுக்கீடு. இங்கு ஒருவர் ஏழையாக இருந்தார் என்று அவருக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட சாதியில் பிறந்தார் என்பதற்காகவே அவருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டது. அதனாலாயே சாதிவாரி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கேள்வி 3:

ஏன் SC(scheduled caste) க்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்குறாங்க?

தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களிடம் உள்ள தவறான எண்ணம் இது . ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக தவறான அனுமானம் படித்தவர்களிடம் கூட உள்ளது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%ம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%ம், பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%ம், பட்டியல் சாதியினருக்கு (SC) 15%ம், பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு(SCA) 3% இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி 4:

எல்லாருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் ஏன் Sc (scheduled caste) க்கு மட்டும் scholarship , application free போன்ற சலுகைகள்லாம் கொடுக்குறாங்க?

இந்த கேள்விக்கு சற்று விரிவாக பதில் அளிக்க வேண்டியது அவசியம்.

ஒடுக்கப்படும் மக்களுக்கு அவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும், தன்னிறைவு அடைவதற்கும் தேவையான உதவிகளை, நலத்திட்டங்களை செய்ய வேண்டியது அரசின் கடமை. இது இலவசமாகவோ, பரிதாபத்தின் அடிப்படையிலோ தரப்படுவது இல்லை. சக மனிதனை மனிதனாக நினைக்காமல் அவர்களை விலங்கினும் கீழாக நடத்திய இந்த சாதிய சமூகத்தால் நேரடியாக பாதிப்படைந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். அந்த மக்களை உயர்த்தத் தேவையான அனைத்து செயல்திட்டங்களையும் செய்வதே சமூக நீதி. அந்த சமூகநீதியின் அடிப்படையில் தான் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க இலவச சலுகை போன்றவை வழங்கப்படுகிறது.

கேள்வி 5:

எல்லா சாதியிலும் தானே ஏழைகள் இருக்காங்க. அப்புறம் ஏன் அவங்களுக்கு மட்டும் scholarship?

இதுவும் ஒரு தவறான கற்பிதமே! உதவித்தொகை முற்பட்ட வகுப்பினர் தவிர அனைவருக்கும் வழங்கப்படுகிறது. வழங்கப்படும் தொகையில் மாறுபாடு இருக்கும். ஆனால், அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

பொருளாதார அடிப்படையில் இங்கு நிறைய குடும்பங்கள் ஏழ்மையில் வசிக்கிறார்கள். ஆனால் சமூக அங்கீகரிப்பு என்பது எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா? நம் கிராமங்களில் ஒரு செட்டியாரோ நாடாரோ மளிகைக்கடை வைத்தால் அவரிடம் பொருட்கள் வாங்குபவர்கள், அங்கே ஒரு ஒடுக்கப்பட்டவர் கடை வைத்தால் அவரிடம் பொருட்கள் வாங்குவார்களா? வாங்க மாட்டார்கள் அல்லவா! அங்கு நிகழ்வது ஒரு சமூகப் புறக்கணிப்பு. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால் தான் அவர் புறக்கணிக்கப்படுகிறார். பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு கைகொடுக்க சமூகத்தின் அனைத்து கைகளும் நீளும். ஆனால், ஒரு தலித் பணக்காரராக இருந்தாலும் பொது சமூகத்தில் புறக்கணிப்பே நிகழும். இதனால் தான் தலித் மக்களுக்கு மற்றவர்களை விட சற்று கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கேள்வி 6:

100 வருசம் முன்ன அப்டி இருந்திருக்கலாம். இப்பயும் அப்டி கிடையாதே! அவங்களும் படிச்சிருக்காங்க. அப்புறம் ஏன் இன்னும் அவங்களுக்கு மட்டும் சலுகை?

இரண்டாயிரம் வருடமாக கல்வி கற்கக் கூடாது. தொட்டால் தீட்டு , பார்த்தால் தீட்டு, நிலம் வைத்திருக்க கூடாது. அடிமையாக வேலை செய்ய வேண்டும். என சாதியின் அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் இப்போது தான் இரு தலைமுறையாக படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்‌. அதைப் பார்த்து உங்களுக்கு கோவம் ஏற்படுகிறது. அவர்களுக்கு அளிக்கும் சலுகைகளை பற்றி நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். ஆனால், அவர்களுக்கு நூறு வருடம் முன்பு வரை தங்கள் எஜமானரை நிமிர்ந்து பார்க்க கூட அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களது முன்னேற்றம் இந்த சாதிய சமூகத்தில் அவ்வளவு விரைவில் சாத்தியமாகி விடாது.

கேள்வி 7:

நான் 1100 வாங்குறேன் எனக்கு சீட் கிடைக்கல. ஆனா 700 வாங்குறவங்களுக்கு சீட் கொடுத்துடுறாங்க. இது தப்பில்லையா?

இது பெரும்பாலும் இடஒதுக்கீட்டினைப் பற்றி முழுவதும் அறியாமலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற தவறான எண்ணத்தில் உள்ளவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இவர்கள் சொல்வது போல் இந்தளவிற்கு வேறுபாடு இருக்குமா?

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

கடந்த வருடத்தின் பொறியியல் சேர்க்கைக்கான cutoff மதிப்பெண்ணை ஆராய்வோம்.

Electrical and electronic engg. (Anna Univ)

OC- 198.25%

BC- 197.75%

BCM- 196.25

MBC- 197

SC- 193.75

SCA- 192.25

ST- 189.5

Computer science and engg. (Anna Univ)

OC- 199.25%

BC- 198.75%

BCM- 198.5%

MBC- 197.75%

SC- 195.5%

SCA- 191%

ST- 183%

வெறும் 700 மார்க் எடுத்தவர்களுக்கோ அல்லது குறைந்த பட்சத் தகுதி மட்டும் போதும் என்ற இரக்கத்தின் அடிப்படையிலோ இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தகுதியான மதிப்பெண் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவதூறு பரப்புபவர்களின் நோக்கம் இடவொதுக்கீட்டின் மூலம் திறமை, தகுதியில்லாத மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை நிறுவுவதை தவிர வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை.

கேள்வி 8:

இப்பலாம் அவங்கதான் நம்மள விட பணக்காரங்களா இருக்காங்க? என் வீட்டருகில் கூட அவர்கள் தான் பணக்காரர்கள். பிறகு ஏன் இட ஒதுக்கீடு?

இது பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டு.

இதில் இரண்டு விசயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

1.உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒருவரை மட்டும் வைத்து அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைமையையும் கருதக் கூடாது.

  1. இட ஒதுக்கீடு என்பது வெறும் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. பொருளாதார அடிப்படையிலானது அல்ல. இட ஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலானது.

நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர் உங்களை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவராகவே இருக்கலாம். ஆனால் அவர் உங்களையும் உங்கள் சுற்றத்தாரையும் பொருத்தவரை கீழ் சாதி தான். நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை விட உயர்ந்த சாதியாக மதிக்கப்படுகிறீர்கள். உங்களுக்கு ஊர் பொது காரியங்களில் சமூக புறக்கணிப்பு நிகழ்வதில்லை. ஆனால் அவருக்கு நிகழ்கிறது. உங்களுக்கு நீங்கள் பிறந்த சாதியால் கிடைக்கும் சமூக முன்னுரிமை அவருக்கு கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததற்காகவே ஒதுக்கி வைத்த இந்த சமூகக் கட்டமைப்பு. இந்த சமூகக் கட்டமைப்பினால் அவர் இழந்த உரிமைகள், அவமானங்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச நீதியே அவருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள்.

கேள்வி 9:

ஒரே மாதிரிதான் படிக்குறோம். ஆனா அவனுக்கு மட்டும் என்ன ஸ்பெசல் சலுகை? கவர்மென்ட் எக்சாமும் எல்லாரும் ஒண்ணா எழுதுறோம். ஆனா வேலைலயும் அவங்களுக்கு சலுகை ஏன்?

இதற்கு கொஞ்சம் விரிவாக பதிலளிக்க வேண்டும்.

1.நீங்கள் வளரும் சூழலும் அவர்கள் வளரும் சூழலும் ஒன்றாக இருக்கிறதா?

  1. உங்களுக்கு என்ன படிப்பைப் படிக்க வேண்டும். எவ்வாறு படிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை வழங்க உங்கள் தாயோ தந்தையோ உங்கள் உடன்பிறப்புக்களோ யாரோ ஒருவர் இருப்பார். ஏனெனில் அவர் ஏற்கனவே படித்து பட்டம் வாங்கி இருப்பார்.

இதே நிலை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் ஒருவருக்கு இருக்கிறதா? முந்தைய தலைமுறை படிப்பு வாசனையே அறிந்திராமல் இருக்கையில் முதல் தலைமுறை பட்டதாரி கனவோடு வருபவர்களுக்கு பயிற்றுவிக்கவும் ஆலோசனை வழங்கவும் கூட யாரும் கிடையாது.

இவ்வளவு ஏன்? உங்கள் பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவம் புரிந்திருக்கும். ஆனால் கல்வி தான் ஒருவனை உயர்த்தும் என்பதைக்கூட அறிந்திராத பெற்றோர்களை கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகப் பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

வறுமையில் இருந்தாலும் கல்வி தான் முக்கியம். இடைநிறுத்தம் செய்யக் கூடாது என்று உங்கள் பெற்றோருக்கு இருக்கும் புரிதல் கூட அவர்களின் பெற்றோர்களுக்கு இல்லை. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் அதிக அளவில் இடைநிற்றல் இதனால் அதிகம் ஏற்படுகிறது.

இவற்றையெல்லாம் தாண்டி பள்ளிக்கு வந்தாலும் அங்கு சாதிய ரீதியான தாக்குதல்களையும் அந்த குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மாணவர்களை வாத்தியாரே சாதியை மையப்படுத்தி இழிவாக பேசுவதும், குடிநீர் சேமிப்பு கலன்களை சுத்தம் செய்யவும், பள்ளியறைகளை சுத்தம் செய்யவும், கழிப்பறைகளை சுத்தம் செய்யவும் வற்புறுத்துவதாக வாரத்திற்கு ஒரு செய்தி வந்து கொண்டு இருக்கிறது.

இந்த ஒடுக்குமுறைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர்கொண்டு இருக்கிறீர்களா? இல்லையல்லவா!

நீங்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிள்ளையும் ஒரே மாதிரியாக வளர்கிறீர்கள் என்றால், ஏன் உங்களுடன் படித்த அந்த நண்பன் மட்டும் பள்ளிப்படிப்பை இடையில் விட்டுவிட்டு துப்புறவு வேலையில் சேர்கிறார்? எவ்வளவு துன்பம் வந்தாலும் நீங்களோ உங்கள் உறவினர்களோ யாரும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலமான வேலையை செய்வதில்லையே! ஆனால் உங்களுடன் படித்த ஒரு தலித் மாணவர் ஏன் அந்த வேலையை செய்துகொண்டு இருக்கிறார் என்று நீங்கள் யோசித்தது உண்டா?

ஒரு ஓட்டப்பந்தயத்தின் தொடக்கப் புள்ளிகள் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் தான் அது நேர்மையான போட்டி. மாறாக நீங்கள் பத்து அடி முன் நின்று கொண்டும் , பத்தாததற்கு அவர் ஓடிவரும் பாதையில் முட்களை தூவிக்கொண்டும் ஓடிக் கொண்டு இருக்கிறீர்கள். பின் எவ்வாறு அவர் பொதுவான இறுதி எல்லையை உங்களுடன் போட்டி போட்டு அடைய முடியும்?

கேள்வி 10:

இட ஒதுக்கீடு இருக்கிறதால தான் சாதி இருக்கு! இடவொதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்து விடும்.

இடஒதுக்கீடு 100 வருடமாக இருக்கிறது. ஆனால், சாதி 2000 வருடத்திற்கு மேல் பழமையானது. இட ஒதுக்கீடு இல்லாத காலங்களில் இந்தியாவில் சாதி அமைப்பே இல்லையா? இருந்தது அல்லவா! இடவொதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் என்று கூறுவது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று கூறுவதைப் போன்றது.

கேள்வி 11:

எல்லா சாதியிலயும் இருக்க வசதி இல்லாதவங்களுக்கு இடஒதுக்கீடு தரலாம்.

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புக்கான திட்டமல்ல. மட்டுமல்லாமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அனைவருக்கும் பொதுவான குறைந்த பட்ச வருமானம் என்பதை பதிவுசெய்வதிலேயே ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து சேரும். ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையை இன்னொரு சமூகத்தின் பொருளாதார நிலையோடு ஒப்பிட முடியாது.

ஒரு கோவில் அர்ச்சகருக்கு சொந்தமாக வீடு தொழில் இல்லையெனினும் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுத்து அவரையே கடவுளாக நினைக்க இங்கு மக்கள் கூட்டம் உண்டு.

ஆனால் ஒரு ஒடுக்கப்பட்டவனுக்கு வீடு தொழில் இல்லையென்றால் அவன் ஒரு கடைநிலை கூலி வேலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே பொருளாதாரத்தை வைத்து இந்த சமூகத்தை மதிப்பிட முடியாது.

கேள்வி 12:

ஸ்கூல்லயே சாதி பார்த்து சலுகை தந்தா குழந்தைகள் மனசுலயும் சாதி தான் பதியும்.

இடவொதுக்கீட்டை பற்றியும் சாதியைப் பற்றியும் எந்த ஒரு குழந்தைக்கும் பிறந்த உடனே புரிதல் ஏற்படுவதில்லை. பள்ளிகளிலும் பெற்றோர்களிடமும் வளரும் சூழ்நிலையின் மூலமாகவும் பல விசயங்களை குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்கின்றன..

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமை இன்னொரு மாணவருக்கு தவறாகத் தெரிகிறது என்றால், இட ஒதுக்கீடு பற்றிய முழுப் புரிதலை நாம் தான் அந்த மாணவருக்கு ஏற்படுத்த வேண்டுமே தவிர இடவொதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று சொல்லக் கூடாது. அது சரியான விவாதமும் அல்ல.

கேள்வி 13:

இவ்ளோ வருசமா இட ஒதுக்கீடு கொடுக்குறீங்களே ! சாதி ஒழிஞ்சிடுச்சா?

இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பு திட்டமுமல்ல அது ஒரு இடப்பங்கீடு மட்டுமே. இட ஒதுக்கீட்டின் மூலம் சாதியை ஒழிக்க முடியாது. சமூக நீதியின் அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழி செய்யும் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டமே இடஒதுக்கீடு.

கேள்வி 14:

இன்னும் எவ்ளோ நாளைக்கு இடஒதுக்கீட வச்சு திறமைக்கு மதிப்பில்லாம செய்வீங்க?

இடஒதுக்கீட்டின் மூலம் திறமை இல்லாதவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்ற பொய் பிம்பம் பொதுவாகக் கட்டமைக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு.

(மேலும் விரிவான தகவல்களுக்கு கேள்வி எண் 7 ற்கான பதிலை வாசிக்கவும்)

கேள்வி 15:

சாதி வேணாம் ஆனா சாதி சொல்லி சலுகை மட்டும் வேணுமா?

இட ஒதுக்கீடு இல்லாத போன நூற்றாண்டில் இந்த சமூகம் சமத்துவம் பேணிக் கொண்டா இருந்தது? சாதியக் கொடுமைகளால் சீரழிந்து தானே இருந்தது.

இந்த சாதிய சமூகத்தின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டதால் தான் ஒருவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இட ஒதுக்கீடு சலுகை அல்ல. அது அவர்களுக்கான உரிமை.

கேள்வி 16:

இட ஒதுக்கீடு சதவீதம் சரியான ஒன்று தானா?

இட ஒதுக்கீடு என்பது ஒரு இடப்பங்கீடே! சரியாகச் சொன்னால் கடைசியாக எடுக்கப்பட்ட 1931 சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு இன்றும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போதைய சூழலில் மீண்டும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு விகிதாச்சாரங்களில் மாற்றம் ஏற்படலாம். ஏற்படாமலும் போகலாம். அது மக்கள்தொகையைப் பொறுத்து தான் முடிவாகும். இடவொதுக்கீட்டின் நீட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் முடிவதே சரியான ஒன்றாக இருக்கும்.

கேள்வி 17:

நானும் என் சக மாணவனும் முதல் தலைமுறையாக கல்வி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்ல இருக்கிறோம். என் மதிப்பெண் 190 .அவர் மதிப்பெண் 180 .

எனக்கு சீட் கிடைக்கவில்லை. அவருக்கு சீட் கிடைக்கிறது. இது அநீதி இல்லையா? அரசு வேலைகளிலும் நான் ஒரு தலித் சமூகப் போட்டியாளரை விட 10 மதிப்பெண் அதிகம் எடுத்தாலும் என்னால் தேர்வாக முடியவில்லை. ஆனால் அவருக்கு வேலை கிடைக்கிறது.

“தன்னுடைய இடத்தை ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவன் தட்டிப் பறிக்கிறார்” என்ற தவறான புரிதலாலேயே இது போன்ற சந்தேகங்கள் வருகின்றன..

நீங்கள் இடஒதுக்கீட்டின் செயல்பாட்டை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் 190 மதிப்பெண் எடுத்தாலும் உங்கள் பிரிவைச் சேர்ந்த மற்ற மாணவர்கள் உங்களை விட அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் அதனால் உங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் 180 எடுத்த உங்கள் நண்பரது பிரிவில் அவர் எடுத்தது அதிகமான மதிப்பெண் .அதனால் அவருக்கு இடம் கிடைத்தது. இது வேலைவாய்ப்பிலும் பொருந்தும்.

கேள்வி18:

தொடர்ந்து மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் இட ஒதுக்கீடு மூலம் அரசு வேலையைப் பெறுகிறது. இது நியாயமா? அவ்வாறு வேலைகளைப் பெற்றும் அவர்கள் முன்னேறவில்லையே! வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லையே!

  1. ஏற்கனவே அரசுவேலையில் ஒரு குடிமகனின் பெற்றோர் இருப்பதால் மட்டும் அந்த குடிமகனின் அடிப்படை உரிமை நிராகரிக்கப்பட்டு விடாது. அவ்வாறு செய்வதும் அவருக்கு இழைக்கும் அநியாயம் தான். இடவொதுக்கீட்டிலும் பயனடையாதவர்களை மேல்தூக்கி விடுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்காமல் வாய்ப்பு பெற்றவனிடம் இருந்து பிடுங்கலாம் என்பது தவறான பார்வை.
  2. ஆனால் ஏற்கனவே அரசு வேலையில் உள்ள பெற்றோர் , ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்த பெற்றோர்களைக் கொண்ட ஒரு மாணவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் ,சூழலும் முதல் தலைமுறையாகக் கல்வி கற்று போட்டிக்கு வரும் மாணவருக்கு கிடைக்காது. எவ்வாறு உயர்சாதி பிரிவில் உள்ளவரும் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவில் உள்ள ஒருவரும் ஒரே மாதிரியான வாழ்வியல் சூழலைக் கொண்டிருக்கவில்லையோ, அதே போலத் தான் ஒரே சாதிப்பிரிவில் உள்ள வர்க்க வேறுபாடு கொண்ட இரு மாணவர்களும் ஒரே வாழ்வியல் சூழலைப் பெற்றிருக்கவில்லை. இது கண்டிப்பாக சரி செய்ய வேண்டிய ஒன்று.

முதலில் அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டும். அது தான் அடிப்படைத் தேவை. அதன் பின் அதன் சுவையையும் அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்வோம்.

3. முன்னேற்றம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? தனிப்பட்ட ஒரு குடும்பத்தையோ/ தனிமனிதரையோ வைத்து ஒரு ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியை கணக்கிட முடியாது. 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை அல்லவா! அப்படி என்றால் அது வளர்ச்சியின் அறிகுறி தானே!

கேள்வி 19:

மற்ற விளையாட்டுகளில் இட ஒதுக்கீடு மூலமா போறவங்க சரியா சோபிக்கிறதில்லையே! கிரிக்கெட்டில் இட ஒதுக்கீடு இல்லை. Bcci ஒரு தனியார் அமைப்பு. அதனால் தான் கோப்பைகளை வெல்ல முடிகிறது.

ஒரு நிறுவனத்தில் நான் HR ஆக இருக்கிறேன். அந்த நிறுவனத்தில் வேலை செய்ய 10 பேரை நான் தேர்வு செய்ய வேண்டும். நான் எனக்கு தெரிந்தவர்கள், என் சாதியை சேர்ந்தவர்கள் என 10 பேரைத் தேர்வு செய்து விட்டேன். ஆனால், அந்த 10 பேரும் திறமையானவர்கள் தான். ஆனால் அவர்களை விட திறமையான 50 ஆட்களை நான் நிராகரித்து விட்டேன். நான் தேர்ந்தெடுத்த 10 பேரும் நன்றாக வேலை செய்து லாபம் ஈட்டி தருகிறார்கள். நான் செய்தது சரியா? தவறா?

இது தான் இந்திய விளையாட்டுத் துறையின் தலைமையில் நடக்கிறது. இடஒதுக்கீட்டின் மூலம் உள்ளே செல்லும் திறமையானவர்களும் தகுதிச்சுற்றுகளிலேயே நிராகரிக்கப்பட்டு தலைமைக்கு வேண்டியவர்கள் மட்டும் இறுதிச்சேர்க்கையில்  சேர்க்கப்படுகிறார்கள். தவிர, இந்திய ஒன்றியம் விளையாட்டிற்கென தனியாக அதிகமாக நிதி ஒதுக்குவதில்லை. இது போன்று நிறைய சிக்கல்கள் மற்ற விளையாட்டுகளில் இருக்கிறது.       ஆனால் கிரிக்கெட்டிற்கு நிதிப்பிரச்சனை இல்லை. மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இவ்வளவு சிந்திக்கும் நீங்கள்

தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பார்ப்பனரல்லாதவர்கள் இந்திய அணிக்கு இதுவரை தேர்வாகி உள்ளார்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். அப்போது புரியும் உங்களுக்கு இந்த காவி அரசியல்.

கேள்வி 20:

இப்படி ரிஸர்வேஷன் இருக்குறதால தான் இந்தியால இருக்குற திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆயிடுறாங்க.

அவங்களுக்கு தான் திறமை இருக்கே! எந்த சலுகையும் வேண்டாமே! அப்புறம் ஏன் இடவொதுக்கீட்டை எதிர்பார்க்கிறார்கள்?

திறமையிருப்பவர்கள் எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வார்களே! இவர்கள் ஏன் அமெரிக்கா செல்கிறார்கள்???

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமையாக உள்ளது கட்டுரையாளரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close