
Tumbbad (2018)
Dir: Rahi Anil Barve | 104 minutes | Hindi | Amazon Prime
‘எல்லாருடைய தேவைக்கும் போதுமானது எல்லாமே இந்த உலகத்துல இருக்கு. ஆனா, எல்லாருக்குமான பேராசைக்கும் போதுமானது இந்த உலகத்துகிட்ட இல்ல’ அப்டிங்குற மகாத்மா காந்தியோட மேற்கோளோட ஒரு ஹாரர் திரைப்படம் தொடங்கும்னு நாம எதிர்பார்க்கவே மாட்டோம் தானே ! ஆனா, ராகி அனில் பார்வேயோட ‘தும்பட்’ திரைப்படம் அப்படித்தான் துவங்குது.
திரைப்பட ஜானர்கள்ல மிக சுருக்கமான விளையாட்டுத் திடல்னு தாராளமா ஹாரர் ஜானரை சொல்லலாம். பேய் படங்கள்னு பொதுவா இருக்குற புரிதல் ரொம்ப மேலோட்டமான புரிதல்னுதான் சொல்லணும். ஒரு தீவிர சினிமா ரசிகர்கிட்ட கேட்டிங்கன்னா அவங்க Comedy Horror, Supernatural Horror, Folk Horror, Psychological Horror, Body Horror, Gothic Horror, Found Footage Horror, Slasher Horror அப்டினு ஒரு பட்டியலே வாசிப்பாங்க. பெரும்பாலும் ஹாரர் படங்களுக்கு அப்டினு ஒரு டெம்ப்ளெட் இருக்கும். அதுக்குள்ள அடங்குறது மாதிரிதான் பத்துக்கு ஒன்பது படங்கள் வருஷா வருஷம் வருது. இந்த விசயத்துல மொழி பேதமே இல்ல. எல்லா மொழிப் படங்களும் வழக்கம் போல ஹாலிவுட் பாணியை பின்பற்றி தான் இருக்கு. அவ்வப்போது கொஞ்சம் ஐரோப்பிய படங்கள் புதுசா வரும். ஜப்பானிய ஹாரர் படங்கள் ஒரு தனி தினுசு. அவ்வளவு தான். இந்திய அளவுல ஹாரர் படங்கள் புதுமையா வருவது மிக மிக அரிதாக நடக்குற விசயம் தான். அமானுஷ்யங்களும், மத நம்பிக்கையும், நல்ல சக்திக்கும் – துஷ்ட சக்திக்கும் இடையில நடக்குற போராட்டம், தனக்கு நேர்ந்த அநியாயத்தை செத்து ஆவியா வந்து பழிவாங்குற ஆத்மா மாதிரியான விசயங்கள் தான் இந்திய ஹாரர் படங்களோட அடிப்படையா இருக்கு.
தும்பட் படத்துல கூட மேலே சொன்ன விசயங்கள் இருக்கிற படமா இருந்தாலும் அதில் சொல்லப்படுற கதைய வளர்க்குற பாணியும், அதை விஷுவலா கையாண்டிருக்க விதமும் அதை தனித்துவமான படமா மாத்தி இருக்கு. கதையை வகைப்படுத்தணும்னா Period Folk Horror Fantasy அப்டினு சொல்லலாம். முதல் காட்சியிலயே கதையோட நாயகன் வினாயக் ராவ் தன்னோட மகன் பாண்டுரங்கனுக்கு சொல்லுற விசயங்கள் வழியா நமக்கு முன் கதை மிகத் தெளிவா சொல்லப்படுது. விநாயக்கிட்ட இருந்து நாம தெரிஞ்சுக்குற கதை இது தான். செழிப்புக்கான கடவுளோட (Goddess of Prosperity) முதல் பிள்ளையோட பேரு ஹஸ்தர். அந்த தேவி (அப்படித்தான் விநாயக் அந்த கடவுளை அழைக்கிறாரு) தன்னோட வயித்துக்குள்ள பூமியை வச்சிருக்கா. உலக மக்களுக்குன்னு தங்கக்காசுகளையும், உணவுக்காக தானியங்களையும் கணக்கில்லாம வச்சிருக்கா. ஹஸ்தருக்கு பின்னால தேவி பதினாறு கோடி தேவர்களையும் பெற்றெடுக்குறாங்க. பேராசை பிடிச்ச ஹஸ்தர் தங்கங்களை எல்லாம் தனக்காக எடுத்துக்குறான். இருந்தும் ஆசை தீராம தானியங்களையும் தனக்கே எடுத்துக்க முயற்சி செய்யும் போது மத்த தேவர்கள் எல்லாம் கோபமாகி அடிச்சுத் துரத்த, பரிதாபப்படும் தேவி, மகன் ஹஸ்தரை தன்னோட கர்பப்பைக்குள்ள தூங்க வச்சு காப்பாத்துறாங்க. ஆனா, அதுக்கு ஒரு விலை இருக்கு. ஹஸ்தரை கடவுளா யாருமே வணங்காம, மொத்தமா மக்கள் நினைவுல இருந்தே அவன் காணாம போயிடுறதுதான் அதுக்கான விலை. ஆனா, அதையும் மீறி தும்பட் ஊருல வாழ்ந்த முன்னோர்கள் முதல் முதலா ஹஸ்தரை வழிபடுறாங்க. அதனால மத்த கடவுள்களோட கோபத்துக்கு ஆளாகுற தும்பட் ஊர் மேல அவங்களோட கோபம் தீராத மழையா பெய்யுது.
கதை மூன்று அத்தியாயங்களா பிரிக்கப்பட்டிருக்கு. முதல்ல நாம் விநாயக் ராவோட குழந்தைப் பருவத்தைப் பார்க்குறோம். அதுல ஏன்னே தெரியாம ஒரு பேய் மாதிரியான கிழவியை சாப்பாடு கொடுத்து பராமரிக்கிற அம்மா கிட்ட கேள்விகள் கேட்டு கேட்டு நச்சரிப்பதையும், பதிலா எதையுமே அவங்க அம்மா சொல்லாததையும், அவன் தன் சகோதரனை இழக்குறதையும் நாம பாக்குறோம். அவனுக்குள்ள அவனை விட அவனோட பேராசை வேகமா வளர்றதயும் நாம கண்கூடா பாக்குறோம். அவனோட ரொம்ப வயசான அப்பா தேடிகிட்டிருக்கற, அந்த ஊருல புதைஞ்சு கிடக்க ஏதோ ரகசிய புதையல் பத்தின தகவலை கிழவிகிட்டயாவது கேளு கேளுனு அம்மாவ நச்சரிக்கிறான். எளிமையான வாழ்க்கையை வாழுற அவள், வயசாளி கணவனையும், சின்ன மகனையும் அடுத்தடுத்து இழந்த சோகத்துல தும்பட் ஊரை விட்டே – இந்த ஊருக்கு திரும்பி வரவே கூடாதுன்னு மகன்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டு – அவனையும் கூட்டிகிட்டு பூனாவுக்கு கிளம்புறா.
படத்தோட ஒவ்வொரு காட்சியிலையும் எங்கோ ஒரு மூலையிலயாவது மழை பேஞ்சுகிட்டே இருக்கு. குறைந்தபட்சம் மழையோட ஈரமாவது ஒட்டிகிட்டு இருக்கு. மழையே ஒரு கதாபாத்திரத்தைப் போல படம் நெடுக உடன் வருது. பழமையான, பாழடைஞ்ச மாளிகை வீடும் ஈரம் சொட்டிகிட்டே படத்தோட பெரும் பகுதி வருது. ஊரை நனைக்கிற ஓயாத பெருமழை நம்மையும் நனைக்குது. அதனோட ஈர வாசனை நமக்கும் அடிக்குது.
அடுத்த அத்தியாயம் அதே மழைக்கு இடையில பதினஞ்சு வருஷம் கழிச்சு வண்டியில இருந்து இளைஞனா வந்து இறங்குற விநாயக்கோட துவங்குது. அநேகமா அவன் தாய் இறந்து போயிருக்கணும். அவளை, அவளுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தோட சேர்த்தே அவன் எரிச்சிருக்கணும். தன்னைத் துரத்துற வறுமையை தன் வாழ்க்கையை விட்டே துரத்துற முடிவோட அவன் அங்க வந்திருக்கான். தன் பழைய வீட்டை தேடிக் கண்டுபிடிக்கிற அவன் அந்த கிழவியத் தேடி வந்திருக்கான்னு நாம விளங்கிக்கிறோம். குருட்டு தைரியம் தான். ஆனா, அவன் அதிர்ஷ்டம் அவள் இன்னும் உயிரோட இருக்கா! உயிர் மட்டுமே மிச்சமிருப்பதப் போல கிடக்குற அவள் மேல இருந்து ஒரு மரம் முளைச்சு செழிச்சுக் கிடக்கு. பேராசை தீ கண்களுகுள்ள ஒளிர அவன் கிழவிகிட்ட பொக்கிஷம் பத்தின ரகசியத்தை துருவி துருவிக் கேட்குறான். அவளுக்கும் பாதி தர்றதா ஆசை காட்டுறான். அவளோ சாகாவரம் அப்டிங்குற சாபத்தை பெற்று துன்பப்படுறா! அதனாலயே என்னை எரிச்சு முக்தி கொடு அது மட்டும் போதும்கிறா. அவள் சொன்ன அந்த ரகசியத்தோட பலனா அவனுக்கு தங்கப் புதையலோட கதவுகள் அகலத் திறக்குது. உயிரைப் பணயம் வச்சு கொஞ்சம் கொஞ்சமா தங்கக் காசுகளை அவன் எடுத்து பணக்காரனா ஆகுறான். அந்த பாழடைஞ்ச மாளிகை அவனுக்கு கற்பக விருட்சமா மாறுது. பூனாவுல அவனக்குக் கடன் கொடுக்குற ஓபியம் வியாபாரி ராகவ் கிட்ட இப்போ, பணம் வேணும்னா கேளுங்கன்னு சொல்லுற அளவுக்கு அபாரமான வளர்ச்சி.
தும்பட்ல இருந்து இவனுக்கு தங்கம் கிடைக்கிற ரகசியத்தை தெரிஞ்சுக்க தானே போற ராகவ், விநாயக்கோட கவனத்தை திசைதிருப்ப ஒரு பொண்ணை ஏற்பாடு பண்ணி அவன் வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கிறாரு. ஆனா, சுதாரிச்சுக்கிட்ட அவன், அவரை அங்க பொறி வச்சு சிக்க வைக்கிறான். கதையோட அந்தப் பகுதியிலதான் பார்வையாளர்களான நமக்கு உண்மையில எப்படித்தான் விநாயக் தங்கத்தை எடுக்குறான் அப்டிங்குற ரகசியம் வெளிப்படுது. அந்த மாளிகைக்குள்ள அவன் தேவியோட வயிற்றுக்குள்ள எப்படி போகுறதுங்குற ரகசிய வழிய கிழவி மூலமா தெரிஞ்சுக்கிறான். அங்க தேவி ஒளிச்சு வச்ச ஹஸ்தர் கணக்கில்லாத தங்கதோடவும், பல ஆயிரம் வருஷப் பசியோடவும் இருக்கிறான். அவனுக்கு தானியம் மீதான தீராப் பசியும் அதே நேரத்துல பயமும் சேர்ந்தே இருக்கு. விநாயக் தன்னைச் சுத்தி மாவாலயே போடும் ஒரு லெட்சுமண ரேகை பாதுகாப்பு வளையமா காக்க, மாவுல செஞ்ச பொம்மைகளை ஹஸ்தருக்கு விட்டெறிய அவன் அதை சாப்பிடும் இடைவெளியில அவன் இடுப்பு கச்சையை இழுக்க அதிலிருந்து தங்கக் காசுகள் சிதறுது. அதுல ஹஸ்தர் தின்று முடிக்கிறதுக்குள்ள எவ்வளவு முடியுமோ அதைப் பொறுக்கி எடுத்துகிட்டு அவன் மீண்டும் தன்னை தாக்க வருவதுக்குள்ள மேலே ஏறி ரகசிய வழியை அடைச்சு தப்பிச்சுறான். அது தான் அவனோட தங்க அறுவடையோட ரகசியம்.
படத்தோட மூணாவது மற்றும் இறுதி அத்தியாயத்துக்குள்ள நாம் நுழையுறோம். பணம் கொழுக்க விநாயக்கோட குணமும் மாறுது. மனைவி இருக்கும் போதே வேலைக்கு ராகவ் அனுப்பிய பொண்ணை வைப்பாட்டியா வச்சுக்கிறான். தன் மனைவி மூலமா பெத்துக்கிட்ட மகன் பாண்டுரங்கன் கொஞ்சம் ஊனம். எதுக்கான பயிற்சின்னே தெரியாத பாண்டு தினம் தினம் ஹஸ்தரை ஏமாத்தி காசு எடுக்குற அதே படலத்த அப்படியே செஞ்சு பழகிகிட்டு இருக்கான். வயதாகிற விநாயக் தனக்கு பின்னால தன் மகனை அங்கே அனுப்பத்தான் அந்த பயிற்சியை கொடுப்பது நமக்கு புரியுது. பாண்டு அப்பாவுக்கு தப்பாம பிறந்த பிள்ளையா இருக்கான். சுருங்கச் சொன்னா அவன் தாயைப் போல பிள்ளையா இல்லாம தந்தையைப் போலவே இருக்கான். வயசுக்கு மீறின சேட்டையும் இருக்குது. தான் முதன் முதலா ஹஸ்தரை நேருக்கு நேரா அவனோட அப்பாவோட கூடப் போயி சந்திக்கிறப்போ – முட்டாள்தனம் செஞ்சு அடியெல்லாம் வாங்கினாலும் – அவனா சம்பாதிச்ச (அதாவது ஹஸ்தர்கிட்டைருந்து தட்டிப் பறிச்ச) முதன் தங்க காச தன் அப்பாவோட வைப்பாட்டிகிட்டையே குடுக்கும் அளவுக்கு பெரிய மனுஷ சேட்டை முத்திடுது. அது தெரிய வருகிற விநாயக் முதல்ல தன் மகனை புரட்டி எடுத்தாலும், அதன் பிறகு அரங்கேறும் விசயங்கள் நேர் மாறா இருக்கு. இறுதியில மகன் சொல்லும் ஒரு குருட்டு யோசனை அவனுக்குள்ள எப்போதும் கொதிச்சுக்கிட்டு இருக்குற பேராசைப் பெருந்தீ இன்னும் கொழுந்து விட்டு எரிய தோதா எண்ணைய் விட்டது போல இருக்கு. இடையில இந்தியாவுக்கு கிடைச்ச சுதந்திரம் விநாயக் மாதிரி புது பணக்காரர்களுக்கு ஒரே தலைவலியா வேறு இருக்க, அதுனால மனக்குழப்பத்துல இருக்குற அவன் தன் மகன் சொல்லும் அந்த யோசனைய ஏத்துக்கிட்டு களம் இறங்குறான்.
பாண்டுவோட யோசனை ரொம்ப எளிமையானது. நாம ஏன் உயிரப் பணயம் வச்சு ஒவ்வொரு தடவையும் தேவியோட வயித்துக்குள்ள போயி ஹஸ்தரோட இடைக்கச்சையில (அல்லது கோவணத்துணி) இருந்து சிதறுற காசுகளை பொறுக்கி எடுக்கணும். அதுக்கு பதிலா இன்னும் கொஞ்சம் உணவு பொம்மைகளை கொண்டு போயி அவன் மும்முரமா சாப்பிடுகிட்டு இருக்கப்போ ஒரேடியா அந்த இடைக்கச்சையையே உருவிகிட்டு வந்துட்டா! வெறுமனே குட்டி பதினாறடி பாயப் பாக்கல. மாறா பறக்கப் பாக்குது. உள்ள போனதும் அப்பா, மகன் ரெண்டு பேருக்குமே ஒரு பெரிய அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு. என்னதான் பேராசைக்காரனா இருந்தாலும் விநாயக் ஒரு பாசமுள்ள தகப்பன். வசமா ஹஸ்தர்கள்கிட்ட (!) மாட்டிக்கிட்ட பிறகு மகனையாவது காப்பாத்தணும் அப்டிங்குற ஆதங்கத்துல தன் உயிரை கொடுக்கத் துணியுறான். இறுதிக் காட்சியில ஹஸ்தரால கடிபட்டு, அந்த கிழவி போல சாப வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுற விநாயக், மகன் ஆசைப்பட்ட மாதிரி தான் எடுத்து வந்திருக்கிற ஹஸ்தரோட இடைக்கச்சையை பாண்டுகிட்ட கொடுக்க, அவன் அதை வாங்க மறுக்குறான். தங்கள் குடும்பத்து ஆண்களை வழிவழியா தொடருற பேராசைங்கிற பெரும்சாபத்தை தன்னோட முடிச்சுகிட்டு முற்றுப் புள்ளி வைக்கிறான். அந்த பாழடைஞ்ச மாளிகையோட கோட்டைக் கதவுகள நிரந்தரமா மூடுறதோட படமும் முடியுது.
கடந்த இருபது வருட காலத்துல இந்தியாவுல வந்த ரொம்ப ஒரிஜினலான ஹாரர் படமா, நான் பார்த்த வரையிலும் இந்த படத்தைத் தான் சொல்வேன். வேற எந்த ஜானர் படங்கள விடவும், மேற்கத்திய படங்களோட பாதிப்பு அப்பட்டமா தெரியுறது ஹாரர் வகை படங்கள்ல தான். நம்ம நேட்டிவ் கதைகள்னு எடுக்கப்படுற கதைகள்ல கூட ‘கடவுள் – பேய்’ சண்டை தான் பிரதானமா இருக்கும். அதையும் விட்டா முதல்ல சொன்னதைப் போல தன்னோட வாழ்க்கைய சீரழிச்ச கெட்டவர்களை ஒரு நல்ல ஆத்மா பழிவாங்குற படலமா தான் ஹாரர் படங்கள் இருக்கு. இதுக்கு முன்பு என் பார்வை அனுபவத்துல பார்த்த நல்ல இந்திய ஹாரர் படம்னா விக்ரம்.கே.குமார் இயக்கத்துல வந்த 13 B ( தமிழ்ல யாவரும் நலம்) படம் மட்டும் தான் நினைவுக்கு வருது.
தும்பட் படம் இன்னொரு காரணத்துக்காகவும் தனித்துவமான படம்னு நான் சொல்வேன். அது இந்தப் படத்துல இருக்க லேயரிங். பொதுவா ஹாரர் படங்கள்ல பார்வையாளர்களை பயமுறுத்துறது மட்டுமே பிரதான நோக்கமா இருக்குறத அது எடுக்கப்பட்ட விதத்தை கவனிச்சாலே புரிஞ்சுக்க முடியும். ஆனா, அதைத் தாண்டி இந்த படத்துல அது நடக்குற காலகட்டத்தோட சமூக-கலாச்சார யதார்த்தம், புராணத்தை மனித வாழ்க்கையோட முடிச்சுப் போடுற விதம், கதாபாத்திரத் திறனாய்வு (character analysis) அப்டினு அடுக்கடுக்கா சில லேயர்கள் ரொம்ப அழகா அமைஞ்சிருக்கு. இதுல எதுவுமே திணிக்கப்பட்டது போல இல்லாம இயல்பா பொருந்தி வர்றதுக்கு ஒரே காரணம் ரொம்ப நேர்த்தியா எழுதப்பட்ட திரைக்கதை தான். ஒரு பெரிய டீம் ஒர்க்கோட பலனாதான் இந்த அளவுக்கு இறுக்கமா அமைஞ்ச திரைக்கதை சாத்தியமாகியிருக்கு.
படத்தோட இயக்குனர் அனில் பார்வே படத்தோட கதையை 1997 வாக்குலயே, தன்னோட பதினெட்டாவது வயசுலயே எழுதிட்டார் என்பதே நம்மை ஆச்சரியப்படுத்துற தகவல் தான். அதுக்குப் பிறகு இந்தப் படம் வளர்ந்த விதத்துல இருந்து இது கடைசியா முழுமையடைஞ்ச ஒரு திரைப்படமா மாறுற வரைக்கும் நடந்த விசயங்களை வாசிக்கிறப்போ அதுவே ஒரு சுவாரசியமான கதையை வாசிச்ச உணர்வைத் தருது. படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் அதனோட ஒளிப்பதிவு. ஒளியை விடவும் அதிகம் மழையை காமிராவில் அடைச்சுகிச்சோ என நாம் ஆச்சரியப்படுற அளவுக்கு படமும், அந்த கதையும், அது நடக்குற இடமும் கேட்கிற காட்சிகளை உயிர்ப்போட ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமார் கொடுத்திருக்காரு. இது ஹாரர் படமா இருக்கும் போதிலும், பயம்புடுத்துவக்காக எந்த காட்சியோ, அது எடுக்கப்பட்ட காமிரா கோணமோ அல்லது பின்னணி இசையோ சேர்க்கப்படவே இல்லை. அதுவே படத்தை ரொம்ப ஒரிஜினலான படைப்பா தனிச்சு தெரியவைக்குது. படத்துல லேயர்கள் இருப்பதா சொல்லிருந்தேன் இல்லையா, அது இன்னும் சுவாரசியமானது. ஒரு ஹாரர் படத்துல இவ்வளவு சமூக யதார்த்தத்தை பிரதிபலிக்கிற விதத்துல, பிரச்சார வாசனையே இல்லாம, கதையோடவே இழைச்சு அதனை எடுத்துக் காட்டி இருக்குற விதம் ரொம்பவே ரசிக்கும்படியா இருக்கு.
படத்துல முக்கியமா நாலு பெண்கள் வர்றாங்க. பேய் பிடித்தது போல இருக்கும் அந்தப் பாட்டி, அவங்களை சலிப்போட பாத்துக்குற விநாயக்கோட அம்மா, பிறகு அவன் வளர்ந்த பிறகு அவனுக்கு அப்பாவியான மனைவியா வாய்க்கிற வைதேகி, அப்புறம் பாதியில வந்து அவனோடவே ஒட்டிக்கிற அவனது ஆசை நாயகி. இதுல நாயகனோட அம்மா மற்றும் மனைவியோட பாத்திரங்கள் முக்கியமானவை. நேரடியா சொல்லப்படல அப்டினாலும் விநாயக்கோட அம்மா அந்த வயசாளியோட, சந்தர்ப்ப சூழ்நிலையால, மனைவியா இல்லாம வெறும் ஆசைநாயகியா மட்டும் காலம் தள்ளுறாங்க. அநேகமாக அந்த பேய் பிடிச்சது போல இருக்கும் பாட்டி தான் அவரோட உண்மையான மனைவியா இருக்க வாய்ப்புண்டு. ஒரு வேளை அவங்களை ஒழுங்கா பாத்துகிட்டா – அவங்களுக்கு இருக்க சாபம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாம – நமக்கு கிழவர் நிறைய செய்வார் என்ற நம்பிக்கையில கூட இருந்திருக்கலாம். விநாயக்கோட மனைவியோ தான் எதுக்காக வருடக்கணக்கா மாவு திரிச்சு கணவனுக்கு குடுத்து அனுப்புறோம். அதை வச்சு அவன் என்ன செய்யுறான் அப்டினு எந்த அடிப்படை அறிவும் இல்லாத அப்பிராணியா தான் இருக்கா. கணவன் தான் அவளை மதிக்கிறதில்ல அப்படீன்னா , மகன் அவனுக்குத் தப்பாம பிறந்தவனா இருக்கான். நேரடியா கேட்டும், அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாதுனு பேசுகிற திமிர்த்தனம் அவனுக்கு அந்த சின்ன வயசுலயே இருக்கு. தன் கணவன் தன் கண் முன்னாலயே ஒரே வீட்டிலயே வெறுமனே வேலைக்காரியா சேர்ந்தவளை ஆசை நாயகியா வச்சிருக்கான்னு தெரிஞ்சும், அதை நேரடியா தட்டிக் கேட்ட வலு இல்லாத அப்பாவியா இருக்கா. ஒரு காலகட்டத்தோட பெரும்பான்மையான பெண்களோட சாம்பிள் மாதிரி தான் வைதேகியோட பாத்திரம் இருக்கு.
அதே வேளையில, படத்துல வர்ற முக்கியமான ஆண்களும் நாலு பேர்தான். (ஹஸ்தரையும் சேர்த்தா அஞ்சுன்னு கணக்கு சொல்லலாம்.) விநாயக்கோட அப்பாவா வர்ற அந்த கிழவர், விநாயக், ஓபியம் வியாபாரி ராகவ், அப்புறம் சிறுவன் பாண்டுரங்கன். ஹஸ்தர் தொடங்கி எல்லா ஆண்களுக்கும் இருக்கிற பொதுவான ஒரே அம்சம் அவங்களோட தணியாத பேராசை தான். பேராசையோட மனித வடிவங்களா அவங்க நடமாடுறாங்க. ஒரு வகையில அவங்களோட பேராசை தான் இந்த பெண்களை எல்லாம் இப்படி அலைக்கழிக்குது. வினாயக் ராவுக்கு, ‘ஒரே ஒரு தங்கக் காசை வச்சுகிட்டு வாழ்ந்துடலாம்னு நினைச்ச முட்டாள் என் அம்மா’ என்பதாகத் தான் தன் அம்மாவைப் பத்தின அபிப்ராயம் இருக்கு. அவனை விடவும் இன்னும் மோசமான பார்வை அவன் மகன் பாண்டுவுக்கு அவனோட அம்மா வைதேகி பத்தி இருக்குது. ஒரு இடத்துல வியாபாரி ராகவ், ‘இந்த வெள்ளக்காரங்க நம்மளப் படுத்துற பாடு இருக்கே! ஏதோ பெண் சமத்துவம் அது இதுன்னு இப்படி நம்ம பொழப்புல மண்ணை அள்ளியில போடுறாங்க’னு சலிச்சுக்கிறாரு. பாண்டுவை வயசுக்கு மீறின தைரியத்தோட, “என் அப்பா என்ன உன்ன சும்மா வச்சிருக்காரு. அவ்வளவு தானே! அதை யாரு வேணாலும் செய்யலாம்.நான் வளர்ந்தப்புறம் உன்ன கல்யாணம் கட்டிகுவேன். நீ என் கூட இருந்துடு!” அப்டீன்னு துடுக்கா கேக்க வைக்குது அவனோட ஆம்பளைத் திமிர்.
புராணத்துல வர்ற ஹஸ்தர், தனக்கு மட்டுமே தேவியோட தங்கமும், அது பத்தாதுன்னு தானியமும் வேணும்னு துவக்கி வைக்கிற தீராத அந்த பேராசைங்கிற தீ வழிவழியா இந்த ஆண்களையும் பிடிச்சு ஆட்டுது. கூடவே அவங்களை அண்டி இருக்கிற பெண்களோட வாழ்க்கையையும் வெறுமையானதாக்குது. ஒவ்வொரு காலகட்டத்துலையும் பேராசை என்ற விஷம் ஒவ்வொரு மனிதர்களோட மனசுலயும் செடியா முளச்சு அவங்க வாழ்க்கையைத் தின்னு செரிச்சு பெரிய மரமா வளர்ந்து நிக்குது. நான் ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா, இதெல்லாமே பொதுவா ஒரு சராசரி ஹாரர் படத்துல பார்க்கக் கிடைக்காத பரிமாணங்கள் (அதாவது டைமென்ஸ்ஷன்ஸ்), கதையோட மையம் மனிதப் பேராசை தான் என்றாலும், அதை சுத்தி வளர்த்திருக்கிற கதாபாத்திரங்களை, அவங்களோட உறவுக்குள்ள இருக்குற சிக்கல்களை, முரண்பாட்டை சொல்றதன் வழியா, ஒரு வரலாற்று காலகட்டத்தோட ஒட்டு மொத்த பெண்ணடிமைத்தனத்தையும் மறைமுகமா சொல்ற படைப்பா தும்பட் இருக்கு.
ரொம்ப பயமுறுத்திருச்சுப்பா..! உறைஞ்சே போயிட்டேன் அப்டிங்குறதோட மட்டும் முடிஞ்சு போயிடாம, அதைத் தாண்டியும் மனசுல எடுத்துகிறதுக்கும், படம் முடிஞ்ச பிறகும் அசை போடுறதுக்கும் சில விசயங்கள நேர்த்தியா சொல்ற ஒரு ஹாரர் படம் பார்த்த அனுபவம் நிச்சயம் நமக்கு புதுசாதான் இருக்கும்!
தொடரும்…
Such an excellent movie like paati sollum kathaigal Pola. I am eagerly waiting to remake this movie in Tamil.