இணைய இதழ்இணைய இதழ் 50தொடர்கள்

ரசிகனின் டைரி; 5 – வருணன்

தொடர் | வாசகசாலை

Photo Prem (2021)

Dir: Gayatri Patil & Aditya Rathi | 93 min | Marathi | Amazon Prime

தாநாயகன் அல்லது கதாநாயகி அப்படிங்கிற பெயரைக் கேட்டவுடனே, கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு உங்க மனசுக்குள்ள தோணுற பிம்பத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்கன்னு சொன்னா ஏறக்குறைய எல்லோருமே சொல்ற பதில் வேறு வேறா இருந்தாலும் அதுல ஒரே ஒரு அம்சம் மட்டும் பொதுவானதா இருக்கும். அவங்க எல்லோர் மனசிலும் தோணுற ஆட்கள் வேற வேறயா இருந்தாலும், இளமையா மட்டுமே இருக்காங்க இல்லையா? கதாநாயகன் அப்படீன்னா உண்மையிலயே ‘கதையின்’ நாயகன் அப்டீனுதானே அர்த்தம். அது போலவேதான் கதாநாயகியும். ஆனா, மேலே சொன்ன மாதிரி நமக்குத் தோணக் காரணம் நாம இல்ல. மாறா நாம பாத்த , பாத்துக்கிட்டு இருக்கிற சினிமாக்கள்தான். மனுச வாழ்க்கையில இளமைக்காலம் என்பது ஒரு பருவம். அவ்வளவுதான். அதுக்குள்ள மட்டுமே நம்ம வாழ்க்கை முடிஞ்சு போறது இல்ல. 

“வாசிக்காத ஒருவர் ஒரே ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார். ஆனால், ஒரு வாசகர் ஓராயிரம் வாழ்க்கையை வாழ்கிறார்.” இது வாசிப்போட சிறப்பை நமக்கு எடுத்துச் சொல்ற பொன்மொழி. அது போலத்தான் சினிமாவும் என்பது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம். சமீப காலமாக நாம Emotional Intelligence அப்படிங்கிற விசயத்தைப் பத்தி அவ்வப்போது கேள்விப்பட்டு இருக்கலாம். பொதுவெளியில அது பத்தி இப்போதான் அதிகமா பேசத் துவங்கி இருக்காங்க. பொதுவா சக மனிதர்களை புரிஞ்சுக்கிறது நம்மளை நாமே புரிஞ்சுக்கிறதுல இருந்துதான் ஆரம்பிக்கிது. நம்மையே நாம புரிஞ்சுக்கிறதுக்கும், அதன் வழியா சக மனிதர்களையும் ஆழமாப் புரிஞ்சுக்கிறதுக்கும் ஒரு எளிமையான நல்ல வழி நல்ல சினிமாக்களை தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்பது என்னோட அனுபவம் சார்ந்த கருத்து. 

நீங்க பார்த்த சினிமாக்கள்ள வயசானவங்களை முக்கிய கதாபாத்திரமா வச்சு எடுக்கப்பட்ட படங்கள நினைவுபடுத்தி சொல்லுங்களேன்னு கேட்டா, நம்ம பதில் என்னென்னவா இருக்கும்? தமிழ் சினிமாவுல ‘முதல் மரியாதை’, ‘கேளடி கண்மனி’ நினைவுக்கு வருகிற அதே நேரத்துல சமீபமா வந்த படங்கள்னு யோசிச்சுப் பார்த்தா – ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ப.பாண்டி’, ‘மதில்’, ‘டிராஃபிக் ராமசாமி’, ‘கே.டி என்கிற கருப்புதுரை’, ‘ஓ பேபி’ (தெலுங்குப் படமான இது Miss Granny என்ற கொரிய படத்தோட ரீமேக்), போன்ற படங்கள் சட்டுன்னு எனக்கு ஞாபகத்துக்கு வருது. நீங்க இன்னும் கூட சில படங்கள சொல்லலாம். ஆனா, இது எண்ணிக்கையில மிக மிக குறைச்சல்னு சொல்லத் தேவையில்ல தானே? 

மனிதர்கள எமோஷனலா (உணர்வுப்பூர்வமாக) புரிஞ்சுக்கிறது என்பது அவங்களோட சின்னச் சின்ன உணர்வுகள, விருப்பங்கள, விருப்பமில்லாத விசயங்கள, அபிப்ராயங்கள, குணாதிசியங்கள இப்படி கலவையான விசயங்களை எல்லாமே சேர்த்தே புரிஞ்சுக்கிறதுதான். எப்படி நம்ம கூட வாழ்ந்தாலும் குழந்தைகள் அவங்களுக்குன்னு ஒரு தனிச்ச உலகத்துல வாழுறங்களோ அதே போல வயசானவங்களும் அவர்களுக்கான ஒரு தனி உலகத்துலதான் வாழுறாங்க. தன் கையை விட்டு நழுவிப் போயிட்ட இளமை திரும்ப வராதான்ற ஏக்கம், இருந்த பெரிய பொறுப்புகள் எல்லாம் முடிஞ்சு போன பிறகு வாழ்க்கையில பிடிப்பு எதுலதான் இருக்குன்னு தங்களத் தாங்களே மனசுக்குள்ள கேட்டுகுற தவிப்பு, கூடவே மனசோட – எதோ ஒரு மூலையில ஒட்டிகிட்டு இன்னும் மிச்சமிருக்கிற குழந்தைத்தனம் இப்படி பல விசயங்களோட கலவையாதான் அவங்க இருக்காங்க. அவங்க இருந்த உலகம் வேறயாகவும், இப்போ இருக்க உலகம் வேறயாகவும் இருப்பது மாதிரி தோணுறது வயசு ஆக ஆக எல்லாருக்குமே வருவது வாடிக்கைதான். சமீபமாக ஒரு மராட்டி படம் பார்த்தேன். (அதைத்தான் இந்த அத்தியாயத்துக்கான படமா நாம எடுத்துக்கப் போறோம்.) ஆர்பாட்டமில்லாத எளிமைக்கு ஒரு தனி அழகு இருக்குனு நம்புற ஆள் நானு. அதனாலயே இந்தப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சோ என்னவோ! 

பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை நீனா குமாரி

கத ரொம்ப எளிமையானது. முதல் காட்சி ஒரு பெண்ணோட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில (Marriage Reception) துவங்குது. அவங்களும் வளச்சு வளச்சு சலிக்காம விதவிதமா போஸ் குடுக்குறாங்க. ஆனா, அவங்களோட அம்மா அப்படி இல்ல. ஒண்ணா சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கக் கூப்பிட்டாலும் சும்மா பேருக்கு ரெண்டு புகைப்படத்துக்கு ‘தேமே’ ன்னு நின்னுட்டு நழுவி ஓடீறாங்க. அவங்கதான் படத்தோட ‘கதையின் நாயகி’. அவங்களுக்கு புகைப்படங்களுக்காக நிக்கிறதுன்னாலே ஒரே பயம் (இப்படியான மனிதர்களை photophobic அப்படீன்னு சொல்வாங்க). தன்னோட வரன் தேடுற படலத்துக்காக புகைப்படம் எடுக்கவே முரண்டு பிடிக்கிற அளவுக்கு பயம் அல்லது புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது என்றாலே அலர்ஜியாகுற ஆளா அவங்க இருக்காங்க. அவங்களுக்கு என தனியான உலகமே கிடையாது. கணவரைச் சுற்றியும், திருமணமாகிப் போயிருக்காளே அந்த மகளைச் சுத்தியும்தான் அவங்க உலகம் இயங்குது. தனிச்ச ஆசைகள் இல்லாத, அல்லது அப்படி ஏதும் இருப்பதை வெளிப்படுத்தவே படுத்தாத ஒரு சராசரி இந்திய குடும்பத் தலைவியா அவங்க இருக்காங்க. 

கணவரோட ஒரு தடவை அவங்க நாத்தனார் வீட்டுக்குப் போற வழியில அவரோட வேலை செய்கிற ஒரு நண்பரோட மனைவி இறந்து போயிட்ட செய்தி கேட்டு பாதி வழியிலயே அவசரமா துக்க வீட்டுக்குப் போயிடறாங்க. இறந்து போனவங்க சரியா இவங்க வயசுக்காரங்க அப்டினு அங்க போனதும் தெரிஞ்சுக்கிற அவங்க, ஒரு ஓட்டை வாய் பெண்மணி மூலமாக அவங்க மாரடைப்பாலதான் இறந்தாங்கங்குற செய்தியையும் தெரிஞ்சுக்குறாங்க. சடலத்தை நடுவீட்டுல போட்டுட்டு அங்கயும் இங்கயுமா வீட்டில் இருக்குறவங்க அல்லாடுறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கேட்க அதே பெண்மணி மூலமா இறந்த அந்த அம்மாவோட ஒரு நல்ல புகைப்படம் கூட கிடைக்காம அவங்க தேடிகிட்டு இருக்காங்க அப்டிங்குறது தெரிய வருது. அந்த சம்பவம் இவங்க மனசை ரொம்ப ஆழமா பாதிக்கிது. 

இந்த இடத்துல ஒரு விசயம். படத்துல கதையின் மையப் பாத்திரமே இவங்கதான் அப்டின்னாலும் இந்த கதாபாத்திரத்துக்குப் பெயரே இல்லை. ‘மாயி’ (மராட்டிய மொழியில அம்மான்னு அர்த்தம். அவ்வளவுதான்.) என்பதுதான் அந்த பாத்திரத்தோட பெயரே. ஒரு சராசரி இந்தியக் குடும்பத்துல முக்கியத்துவமே இல்லாத ஒரு ஆத்மாவா நடமாடுறது அம்மாக்களாக இருக்குற அந்தந்த குடும்பத்தோட தலைவிகள்தான். அவங்களைப் பத்தி தனிப்பட்ட அக்கறையோ, கவனமோ வீட்டின் சக மனிதர்களுக்கு – அது கணவனோ, பிள்ளைகளோ அல்லது உறவுகளோ- எவருக்கும் பெரும்பாலும் இருப்பதே இல்ல. தங்களோட தேவைகள் சரியான நேரத்துல நிறைவேறணும்னா மட்டும் அதுக்கு அம்மா தேவை. அதை மீறிய அக்கறை ஒரு வேளை இருந்தாலும், அத அந்த அம்மாக்கள் மீது பரிவோட காட்டுவதில்லை என்பதுதான் யதார்த்தம். இதோட நெருங்கிய தொடர்புடையதுதான் அடுத்து சொல்லப் போகிற விசயமும். 

துக்க வீட்டில் இறந்த அந்த அம்மாவோட புகைப்படம் கிடைக்காம அந்த வீட்டில உள்ளவங்க அலஞ்சு திரிஞ்சது இவங்கள ஒரு கெட்ட கனவு போல தொந்தரவு செய்யுது. மறுநாள் வேலை மெனக்கெட்டு அங்க போயி பார்த்தா, அந்த அம்மாவோட புகைப்படமே கிடைக்காம அவங்க டீன் ஏஜ் பொண்ணா இருந்தப்ப எடுத்த ஒரு புகைப்படத்தை வச்சிருக்கிறத பார்த்து கலங்கிப் போறாங்க. அந்த நினைப்பு அவங்கள துரத்த ஆரம்பிக்குது. 

மனுஷங்க உயிரோட இருக்குற வரை அவங்கள மத்தவங்க ஞாபகம் வச்சிக்குறதுக்கு பல வழிகள் இருக்கு. ஆனா, அதுவே அவங்க இறந்த பின்னாடி ஞாபகப்படுத்துறதுக்கு இருக்க ஒரே வாய்ப்பு நல்லதொரு புகைப்படம்தான்னு அவங்க மனசுல படுது. செய்தித்தாள்ல அந்த இறந்து போன அம்மாவோட கண்ணீர் அஞ்சலி விளம்பரம் வருமான்னு தேடிப் பார்த்து, ஒரு நல்ல புகைப்படம் இல்லாம போனதாலேயே அது வர முடியாம போச்சு அப்டினு தெரிஞ்சவுடனே அவங்க மனசுல ஒரு பெரிய மாற்றம் வருது. புகைப்படம் அப்டினாலே தெறிச்சு ஓடுனவங்க மனச, ஒரு வேளை நம்ம இறந்துட்டா ஞாபகத்துக்கு அப்டினு ஒரு நல்ல புகைப்படம் கூட இல்லாம போச்சுன்னா அப்டிங்குற நெனப்பே மாத்திடுது. 

கணவர் வேலைக்குப் போன பிறகு தனியா வீட்டில் இருக்கிற சமயங்கள்ல, வீடு முழுக்க சலிச்சு எங்கயாவது தன்னோட ஒரு நல்ல புகைப்படம் கிடைக்காதான்னு தேடுறாங்க. மருந்துக்குக் கூட ஒரு படமும் கிடைக்கல. நாம ஏன்தான் இப்படி புகைப்படம் எடுக்காம இருந்திருக்கோம் அப்டினு மனசுக்குள்ள சலிச்சுக்குறாங்க. இந்த இடத்துல நம்ம நிஜ வாழ்க்கையை கொஞ்சம் பொருத்திப் பார்த்தோம்னா ஒரு கசப்பான உண்மை மண்டையில் உறைக்கும். குறிப்பா 80s அல்லது 90s கிட்ஸ் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! நம்ம எத்தனை பேர்கிட்ட நம்ம அம்மாவோட ஒரு நல்ல புகைப்படம் இருக்கு. அதாவது விழாக்கள், கல்யாணம் காட்சி போன்ற நிகழ்வுகள்ல எடுக்கப்படுற சம்பிரதாய புகைப்படங்களைத் தாண்டி, தனியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள். என் அம்மா இப்போ என்னோடு இல்ல. அவங்க இல்லாதபோதுதான் அவங்களை ஒரு நல்ல புகைப்படமா கூட எடுத்து வச்சுக்கல அப்டிங்குற நிஜமே புரியுது. ‘அம்மாவே இப்போ இல்ல, இதுல புகைப்படம் இல்லேன்னா என்னா’ அப்டினு மனசுக்குள்ள சமாதானம் சொல்லிக்கிட்டாலும் புகைப்படத்திலாவது இப்போ அவங்க கூட இருந்திருப்பாங்கல்ல அப்டினு மனசு கிடந்து அடிச்சுக்கறதையும் தவிர்க்க முடியல. 

படத்தின் இயக்குனர்கள் காயத்ரி பட்டீல் மற்றும் ஆதித்ய ரதி உடன் நடிகை நீனா குமாரி

அதுக்கப்பறம் அவங்களுக்கு தினசரி நாளிதழ்களில் இரங்கல் செய்திகளை படிக்கிறதும், அது கூடவே வெளியாகியிருக்குற இறந்தவங்களோட புகைப்படங்கள பார்க்குறதும் வாடிக்கையாகுது. சட்டுன்னு ‘அட! மகளோட திருமண ஆல்பம் வருமே! அதுல நிச்சயமா நம்மோட புகைப்படம் இருக்குமே’ அப்டினு நினைப்பு தட்ட, உடனே அது பத்தி விசாரிக்கிறாங்க. இதுகெல்லாம் அலட்டிக்கவே மாட்டாளே நம்ம பொண்டாட்டினு அவங்க கணவர் ஆச்சரியமா பார்க்க, எதையோ சொல்லி சமாளிக்கிறாங்க’மாயி’. கடைசியா ஆல்பம் கைக்கு வந்தப்புறம்தான் தெரியுது அதுனாலையும் ஒரு பலனும் இல்லன்னு. போஸ் குடுக்கவே சங்கடப்பட்டு ஓடி ஒளிஞ்ச ‘மாயி’ எப்படி ஆல்பத்தில் இருப்பாங்க? அவங்களே அறியாத ஒரு நொடியில எடுக்கப்பட்ட ஒரே ஒரு புகைப்படத்தை, மணப்பொண்ணோட அம்மாவாச்சேனு பாவம் பாத்த புகைப்படக்காரர், வெட்டி ஒட்டி பல படங்களில் கோர்த்து வச்சிருக்காருனு சொல்லி கணவரும், நாத்தனாரும் அவங்க மகனும் குரூப்பா இவங்களை கேலி செய்ய, ஒரே வெட்கமும் துக்கமுமா அல்லாடுறாங்க.

புகைப்பட ஆசை அவுங்கள பக்கத்துல இருக்க ஸ்டுடியோ வரைக்கும் கூட்டிக்கிட்டு போனாலும், அங்க புகைப்பட கலைஞர் எல்லாத்தையும் செட் பண்ணி தயார் நிலையில இருக்கும் போது, மீண்டும் இவங்களுக்கு வெட்கம் கலந்த பயம் வெளிப்பட, கடைசியில அதுவே ஜெயிக்குது. இப்படியே நாட்கள் நகர தற்செயலா அவங்க வீட்டில் இருக்க ஒரு பழைய காமிரா கையில் கிடைக்கவும் ரொம்ப சந்தோசப்படுறாங்க. அப்பாடா! இனி புகைப்படம் எடுக்க வெளியில போகத் தேவையில்லைனு நிம்மதியாறாங்க. லட்டுகளை லஞ்சம் குடுத்து பக்கத்து வீட்டு சுட்டிப் குழந்தைய தாஜா பண்ணி, தன்னை ஒரு புகைப்படம் எடுக்க கேட்டுகுறாங்க. அந்த பாப்பாவும் குஷியாகிடறா. ஆனா, கொஞ்ச நிமிடங்களிலேயே அந்த காமிரா வேலை செய்ய முடியாத அளவுக்கு பழசுன்னு தெரிய வர, ஆர்வம் எல்லாம் வடிஞ்சு மீண்டும் மாயி மனசுல சலிப்பு மண்டுது. வயசுல மூத்த தன்னோட தோழி கவலைப்படுறதப் பார்க்க மனசில்லாத அந்த பாப்பா, இன்னொரு யோசனையை செயல்படுத்துறா. அதாவது தன்னோட வீட்டில இருக்க ஒரு வெப்கேமிராவை கொண்டு வந்து ‘மாயி’ வீட்டில் இருக்கும் ஒரு கம்யூட்டரில் இணைச்சு அத வச்சு புகைப்படங்கள் எடுக்குறா. ஒரு ஜாலியான பாடல் பின்னணியில் ஒலிக்க பலவிதமா புகைப்படங்கள எடுத்துத் தள்ளுனாலும், பாப்பாவுக்கும், ‘மாயி’யோட இன்னொரு தோழியான அவங்க வீட்டு வேலைக்காரிக்கும் திருப்தியே இல்ல. அப்புறம் வேலைக்கார பெண்மணியோட யோசனை அப்புறம் அவுங்க குடுத்த தைரியத்தோட, ஒரு ஸ்டுடியோவுக்கு போறாங்க. இதுல காமெடி என்னன்னா அது சாதாரண இடமே கிடையாது. அங்க இருப்பவர் சாதாரண போட்டோகிராபரும் கிடையாது. அவர் மாடலிங் செய்றவங்கள ஃபோட்டோ ஷூட் செய்கிற பெரிய மாடலிங் போட்டோகிராபர். அங்க எப்படி அவங்க வேலை செய்றாங்க என்பதே போன இந்த ரெண்டு பேருக்கும் புரியல. அதை அங்க இருக்கும் வரவேற்பாளர் (ரிசப்ஷனிச்ட்) விளக்கிச் சொன்ன பிறகும் அவங்களுக்கு புரிஞ்ச மாதிரி தெரியல. சொன்னதிலேயே ஒரு விசயம் மட்டும் தான் மாயிக்கு நல்லா மனசுல பதியுது. அது ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்த ஆகுற செலவு இருபத்தஞ்சாயிரம் அப்டிங்குறதுதான். அதக் கேட்டதும் வாயடச்சுப் போயி திரும்பி வந்துடறாங்க. 

ஆனா அதே இரவு இடி போல ஒரு அதிர்ச்சி செய்தி வந்து இறங்குது. அது தன் மகன் போல மாயி அன்பு செய்யுற அவங்க நாத்தனாரோட மகன் ரோஹனுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடறது தான். அடிச்சு பெறண்டு ஓடியும் எந்த பிரயோசனமும் இல்ல. இவங்க போயி சேர்றதுக்குள்ள அங்க எல்லாமே முடிஞ்சு போயிடுது. (அந்த காட்சியில தான் மாயிகிட்ட அந்த நாத்தனார் “சுனந்தா, இங்க பாரேன்” அப்டினு அழுது புலம்புவாங்க. ‘மாயி’யோட பேர அப்போதான் நாம முதன் முதலா கேட்கிறோம்.) சிரிச்ச முகமா ரோஹனை நாம் புகைப்படமா தான் பார்க்கிறோம். 

ஏற்கனவே குழம்பிக் கிடக்கிற அவங்க மனசுல இந்த துயர சம்பவத்தால இன்னும் பெரிய அலையடிக்க ஆரம்பிக்குது. தனது புகைப்படத்தை எடுத்தே தீரணும்ங்கிற ஆசை வைராக்கியமா மாறுது. பெரிய தொகை செலவானாலும் கவலை இல்லன்னு அந்த புகைப்படக்காரர் சொன்ன பணத்தை கட்டி ஒரு ஃபோட்டோ ஷூட்டே நடத்தீடறாங்க. அடுத்த காட்சியில சில காலத்துக்கு அப்புறம் அவங்க இறந்து போயி படமா சுவரில் தொங்குற காட்சியை நாம புகைப்படத்துக்குள்ள இருந்து அவங்களே பார்க்கிற மாதிரியான கோணத்துல பாக்குறோம். அவங்க கணவரும் மகளும் இது அவங்க மாதிரியே இல்லைன்னு பேசிக்கிறதோட படம் முடியுது. 

எளிமை படத்தோட மிக முக்கிய அம்சம்ன்னா இன்னோரு முக்கியமான அம்சமா இருப்பது படத்துல சிறப்பா பல இடங்கள்ல அமைஞ்சிருக்க டார்க் ஹூயூமர். படம் நெடுக ஒரு சோகம் கலந்த நகைச்சுவை இழையோடுறத நாம உணர முடியும். முக்கிய பாத்திரம் ஏற்று நடிச்சிருக்க நடிகை நீனா குல்கர்னி ‘மாயி’ கதாபாத்திரதோட வெகுளித்தனத்தையும், எளிமையையும் ரொம்ப ரொம்ப யதார்த்தமா வெளிப்படுத்திருக்காங்க. பொதுவா இது மாதிரியான படங்களைப் பார்த்து பழக்கமில்லாத நண்பர்களுக்கு இது கொஞ்சம் மெதுவா நகர்கிற படமா கூட தோணலாம் அப்டிங்குறதையும் இங்கயே இப்பவே சொல்லிக்கிறேன். 

நல்ல திரைப்படங்கள் கதவு போல. இதுவரை திறக்காத திசைகளில் ஒரு நல்ல படம் நம்மோட ‘புரிதல்’ அப்டிங்குற கதவை அகலமாகத் திறந்து வைக்கும். பொதுவா கலைகள்- அதோட வடிவம் எதுவானாலும் – பொழுது போக்கி நம்ம மகிழ்விக்கிறதத் தாண்டி, மனுஷ வாழ்க்கையோட ஏதோ ஒரு பரிமாணத்தை (dimension) எடுத்துக் காட்டி அதை நமக்கு வெளிப்படுத்தி விளங்க வைக்கும். இந்த மென்மையான படம் அப்படியான ஒரு சின்ன ஜன்னலை திறந்து வைக்குது.

தொடரும்…

writervarunan@gmail.com – 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close