இணைய இதழ்இணைய இதழ் 60தொடர்கள்

ரசிகனின் டைரி 2.0; 15 – வருணன்

தொடர் | வாசகசாலை

All Quiet on the Western Front (2022)

Dir: Edward Berger | 147 min | German | Netflix

போர் என்பது ஒரு சாகசம். போர் என்பது துணிவைப் பறைசாற்றிட ஒரு வீரனுக்கு கிடைத்திடும் அரிய வாய்ப்பு. போரில் களம் காணல் என்பது தேசப்பற்று. காலங்காலமாக அதிகார மையங்களும், அரியணையை அலங்கரிப்போரும் கொக்கரித்து, இளரத்தங்களை கொதிக்க வைத்திருக்கின்றன, இப்படியெல்லாம் அறைகூவி. போர் தவிர்க்க இயலாததெனும் பிம்பத்தை பெரும்பான்மையான நாடுகள், இனக்குழுக்களின் தலைவர்கள், அதிகாரமட்டத்தினர் கட்டமைத்துள்ளனர். தொடர்ந்து அதனை வலுவூட்டிடவும் செய்கின்றனர். போரின் எல்லா கோர முகங்களையும், அதன் பெரும்பசிகொண்ட கடைவாயோரம் வழியும் குருதியையும் இலாவகமாக வீரதீரமெனும் சாயங்கள் பூசி ஒப்பனை செய்திட அவர்கள் தவறுவதேயில்லை.

கடந்த நூற்றாண்டில் நடந்த இரண்டு உலகமகா யுத்தங்களைப் பற்றி எண்ணற்ற படைப்புகள் இலக்கியங்களாகவும், திரைப்படங்களாகவும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இனியும் வரும். திரைப்படங்கள் என்று வருகையில் போர் சார்ந்த படங்கள் பெரும்பான்மையாய் போரில் இருப்பதாய்ச் நம்பவைக்கப்படுகிற சாகசத்தன்மையை முன்னிலைப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. அவை வணிக நோக்கத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டவை. அப்படியான படைப்புகளில் கூட அரிதாக அவ்வப்போது கலைத்தன்மை எட்டிப் பார்ப்பதுண்டு. முதல் உலக யுத்தம் போர்கண்ட நிலங்களைச் சேர்ந்த மனிதர்களுடைய உளவியலை மிக ஆழமாக பாதித்தது. மிகக் குறிப்பாக போரில் பங்கேற்ற வீரர்களை. 

போர்க்காலத்தில் தேவை கருதி செயற்கையாக வலுவூட்டப்படுகிற கொல்லும் வெறியின் உந்துதலால் தம் இயல்பையும் மீறி மிருகத்தனமாக வெறியாட்டம் ஆடிய ராணுவ வீரர்கள், போர் முடிந்த சூழலில் தம் இயல்பு வாழ்க்கையில் தங்களைப் பொருத்திக் கொண்டபின் மனித நிலைக்கு மீண்டு வருகிற அவர்களை, போரின் தருண தாண்டவங்கள் தருகிற மன உளைச்சல் மற்றும் குற்றவுணர்வின் வீரியம் தாங்க இயலாமல் தடுமாறி பித்துப் பிடிக்கச் செய்வது மிகப் பரவலாக இருக்கிற அம்சம்தான். போர் தின்று துப்பிய வீரர்களின் நிலை இதுவெனில், போர் எனும் சுழல் உள்ளிழுக்கையில் அதில் முதன் முறையாக இழுபடுகிற இளைஞனின் மனவோட்டங்கள் எப்படி இருக்கும்? அவர்களுக்கு சாகசமென கற்பிக்கப்பட்ட போர் நிலம் எத்தனை குரூரமானது? மனிதமற்று வெறும் மனித உருவில் மட்டும் இருக்கச் செய்துவிடுகிற, எதிரியைக் கொல்வது அல்லது வெல்வது ஒன்றே கடைமையென கொள்ளச் செய்கின்ற, அதன் அசலான முகத்தை எதிர்கொள்ளும் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்? இதனை உணர ‘All Quiet on the Western Front’ திரைப்படம் உதவும்.

முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படையில் பதினெட்டு வயதுதேயான இளம் ராணுவ வீரனாய் பணிக்குச் சேர்ந்த எரிச் மரிய ரீமார்க் , அந்த யுத்தத்தில் பிரான்ஸ், ஜெர்மனி தேசங்களுக்கிடையேயான நெடிய பதுங்குகுழி யுத்தம் நிகழும் நிலமாக மாறிய Western Front பகுதியில் பணி செய்தவர். பின்னாட்களில் அவர் எழுதிய ‘All Quiet on the Western Front’ புதினம் 1928 இல் வெளியாகி பரவலாக போருக்கு எதிரான புதினமாக கவனம் பெற்றது. இருபதுகளின் மேற்குலகைப் பொருத்தவரை இப்படைப்பின் உள்ளடக்கம் காலத்தின் தேவையாக இருந்ததால், அமெரிக்க இயக்குநர் லூயிஸ் மைல்ஸ்டோனால் இதே பெயரில் 1930 இல் திரைவடிவம் பெற்றது. இப்போது மீண்டும் தொன்னூற்றியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் மொழியிலேயே திரைவடிவம் பெற்றிருக்கிறது. 

ஒரு போர் வீரன் ஆயுதங்கள் ஏந்துகிற வரையிலும் மனிதனாகவே இருக்கிறான். முதன் முதலில் அவன் ஆயுதம் தாங்கி எதிரி என்று அடையாளப்படுத்தப்படுகிற சக மனிதனின் உயிரினை எடுக்கிற நிர்பந்தத்திற்கு தன்னை ஒப்புவிக்க நேர்கையில் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்பதும், அவனது எண்ணவோட்டம் எவ்வாறு இருக்கும் என்பதுமே புதினத்தின் சாரமாக இருக்கிறது. இதிலிருந்து கொஞ்சமும் வழுவாமல் திரையாக்கம் செய்துள்ளார் இயக்குநர். 

போர் ஒரு சாகசமெனும் கற்பிதம் கரைந்து தீராபசித்திருக்கும் அதன் நாவுகளில் சிக்கும் ஒரு இளம்வீரனின் மரணத்தோடு படம் துவங்குகிறது. யுத்த நிலத்தில் மடிந்து போனவர்களின் உடல்களில் இருந்து சீருடைகள் அவசர கதியில் உருவப்பட்டு, அதில் படிந்திருக்கும் குருதியின் இளஞ்சூடு ஆறுவதற்கு முன்னரே துவைக்கப்பட்டு வேறு வீரனுக்கான புத்துடையாக அது மாற்றம் பெறுகிறது. அது செயலாக்கம் பெறுகிற அவசரத்தை காட்சிப்படுத்துகிற விதம், பலி கேட்டபடியே இருக்கிற போரின் தீவிரத்தை உணர்த்துகிற ஒரு குறியீடாகிறது. 

யுத்தகளத்தில் ஆயுதங்களின் தேவை எவ்வளவு இருக்கிறதோ அதேயளவிற்கு மடியும் வீரர்களின் எண்ணிக்கையை சமநிலையில் வைத்திட புதியவர்களைச் சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கையாள மனிதர்களின்றி ஆயுதங்களின் பயன் தான் என்ன?! பிறிதொரு இடத்தில் போர் வீரத்தின் விளைநிலம் என்றும், தந்தை நாட்டிற்குச் சேவையாற்ற அரிதான வாய்ப்பு என்று வனையப்பட்ட கருத்தியல் கொடுத்த களிப்போடு பதின்மம் தாண்டாத பால் பாமர் மற்றும் அவனது தோழர்களும் களம் காணும் துடிப்புடன் இருக்கிறார்கள். அவர்களது, பதின் வயதின் விட்டேந்தித்தனங்களையும் மீறி அசைத்துப் பார்க்கிறது, பள்ளி அதிகாரியின் உணர்வெழுச்சியான தேசப்பற்று உரை. சாகசக்காரர்களாய் தங்களை கற்பனை செய்து கொண்டு அவர்கள் முன்களத்தில் கால் பதிக்கிற முதற்கணம் முதலே போர் என்பதும் போர் நிலமென்பதும் வேறெனும் நிஜம் முகத்தில் அறைகிறது. ஏதுமறியாத பிஞ்சுகள் துவள்கிறார்கள். 

யுத்தம் எப்படி ஒரு வீரனின் நிம்மதியை, அவனது மனிதத்தன்மையை களவாடுகிறது என்பதை எரிக் பாமரை பின் தொடர்கிற நாம் கொஞ்சம் கொஞ்சமாய் சாட்சி மாத்திரமாய் பார்க்கத் துவங்குகிறோம். ஒரு மனிதனாய் தனது ஆன்மத்திற்குள் கவியும் இருளை உணர்ந்தபடியே தானல்லாத வேறொரு மிருகமாய் அவன் மாறிவருவதைக் காண்கிறோம். சராசரி மனிதனின் தேவைகள் வயிற்றுப்பசியும், உடற்பசியும் என மிக எளியவை. போரின் முன் களத்தில் முன்னதற்கு தட்டுப்பாடும், பின்னதற்கு வாய்ப்பின்மையும் நிரந்தரமானது என்பதே நிதர்சனம். இது கதையினூடே ஆங்காங்கே சின்னஞ்சிறு காட்சித் துண்டுகளாய் படம் நெடுகிலும் விரவிக் கிடக்கிறது. பசியின் கொடுமையும், அவர்களது காம வறட்சியும் கலைநயத்தோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொழியும் குண்டுமழைக்கு நடுவினில் இரத்தச் சகதியில் மிதக்கும் இறந்த உடல்களுக்கு மத்தியில் ரொட்டித் துண்டுகள் தேடுகிற அவர்களது கண்களில் உயிரின் துடிப்பு பரிதாபமாய்த் தெரிகிறது. போர் பின்னணி கொண்ட ஒரு திரைப்படத்தில் யுத்த காட்சிகள் தவிர்க்க இயலாதவை. பொதுவாக அதனோடு பிரம்மாண்டத் தன்மை ஒட்டிக் கொள்ளும். பல நேரங்களில் அது யுத்தத்தின் குரூரத்தை விஞ்சி வெறும் சாகசமாகவே பார்வையாளரின் மனதில் தங்கிவிடும். ஆனால், இப்படத்தின் யுத்தக் காட்சிகள் எதிலுமே சாகசத்தின் சாயல் படியாதபடியே படமாக்கி இருப்பது, இதன் யுத்தங்களுக்கு எதிரான மையக் கருத்தியலுக்கு நியாயம் செய்வதாக இருக்கிறது. 

கிழட்டு மேலதிகாரிகளின், தளபதிகள் மற்றும் தலைவர்களின் மமதைகளுக்கிடையே அரூபமாய் நிகழ்கிற சமர் தான் அடிப்படையில் போர் என்பதையும், அவர்களது அகங்காரங்களுக்கு பலியாவது மட்டுமே அசலான போரில் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கிற வீரர்கள் என்பதையும் தீர்க்கமாய் எடுத்துக்காட்டுகிறது திரைக்கதை. பால் பாமர் தனது நண்பர்களுடன் பதுங்கு குழிகளுக்கு வந்திறங்கிய முதல் நாளிலேயே சக தோழன் லுத்விக்கை இழக்கிறான். போரினுடைய சாகசப் பரிமாணம் அவனுக்குள் வடிந்து அப்போதே ஒன்றுமில்லாமலாகிறது. தங்களது பதுங்கு குழிகளின் மேலே குண்டு மழை பொழிவதைக் கண்டு நடுநடுங்கிக் கதறுகிற அவர்களின் ஓலமும், கண்களின் ஒளிரும் அந்த மரணபயமும் நமக்கும் தொற்றுகிறது. 

நாட்கள் உருண்டோடி வருடங்களாகின்றன. பாமரின் பதின் முகம் தன் சிரிப்பைத் தொலைத்திருக்கிறது. அம்முகத்தில் நிம்மதியின் சாயல் துளியும் இல்லை. மரணத்தின் நிழல் எப்போதும் கவிந்திருக்கிற ஒரு முகமாய் அது உருமாறிக் கிடக்கிறது. உணர்ச்சிகள் இருப்பதையே சந்தேகிக்கிற அளவிற்கு அவன் ஜடம் போல மாறிக் கிடக்கிறான். கதையின் நகர்வு என்பதை விடவும் இது போன்ற திரைக்கதையினை, சம்பவங்களின் தொகுதி என்றழைப்பது பொருத்தமாயிருக்கும். பால் பாமர் மற்றும் அவனது சகாக்களுக்கு பதுங்கு குழியில் கிடைக்கிற ஒரே ஆறுதலான உறவு மூத்த ராணுவ வீரன் ஸ்தனிஸ்லாஸ் மட்டுமே. அவன்தான் அந்த ரத்த பூமியின் இயல்புகளுக்கு அவர்களை மனதளவில் தயார்படுத்துகிறான், அதிகாரத் தொனியிலல்லாமல் நட்பு பாராட்டும் தொனியில். 

இதோ முடிந்துவிடும் என்று நம்பி நம்பியே ஒவ்வொரு விடியலையும் எதிர்கொள்கின்றனர் வீரர்கள். பிரான்ஸ், ஜெர்மனி என இருபுறமும் சாவின் கணக்கு தான் கூடுகிறதே தவிர போர் நிறுத்தத்திற்கான அறிகுறியே இல்லை. அயலில் இருக்கிற குடியானவர்களின் வீடு புகுந்து பறவைகளைக் கவர்ந்து அவர்கள் பசியாறிக் கொள்கின்றனர். கடந்து செல்லும் பிரெஞ்சுப் பெண்களின் பின்னால் தைரியமாய் செல்லும் ஒருவன் ஒரு பெண்ணை எப்படியோ கவர்ந்து கலவி கொள்ளப் போய் விடுகிறான். அதற்கான தவிப்பிருந்தும் தயங்குகிறவர்கள் போகிறவனை பார்வையால் வெறிக்கின்றனர். திரும்பி வருகிறவனிடம் கலவியின் ஞாபகப் பரிசாய் அவள் அளித்த கழுத்துக் கச்சையை (scarf ) வெற்றிக் கொடி போல பெருமிதத்துடன் காட்டுகிறான். அதனைப் பறித்து பெண்வாசம் பிடிக்கிற அவர்களைப் பார்க்கையில் நமக்கு சோகமே மேலிடுகிறது. 

தன் மனைவியிடமிருந்து வருகின்ற கடிதமொன்றை வாசிக்குமாறு வீரனொருவன் பாமரிடம் கொடுத்து அவனதை வாசிக்கிற காட்சி கவனத்திற்குரியது. அவள் அதில் தான் கணவனுக்கு அனுப்பி இருக்கிற உணவுப் பொருட்களின் பட்டியலைத்தான் முதலில் தருகிறாள். பின்னரே பிற விடயங்களுக்குத் தாவுகிறாள். அது அவளது பேரன்பு. இறுதியாக நைச்சியமாக இயன்றால் பணம் அனுப்புமாறும், குடும்பத் தேவைகளுக்கு உதவுமென்றும் அவள் சொல்லும் வரிகள், தேசப்பற்று, சாகசம் எனும் கற்பிதங்களை எல்லாம் கடந்து ஒருவன் இராணுவத்தில் சேர்வதற்கான காரணம் வயிற்றுப்பாட்டிற்காகவும் தான் என நேரடியாக உணர்த்துகிறது.

படத்தில் ‘கதையின் காலம்’ 1917 இல் துவங்கினாலும், படத்தின் பெரும்பகுதி 1918 நவம்பரில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த நாளையொட்டிய மற்றும் அதற்கு முந்தைய சில நாட்களிலேயே கவனத்தை குவிக்கிறது. 1918, நவம்பர் ஒன்பதாம் தேதி ஜெர்மனி சார்பில் ஒரு உயர்மட்டக் குழு பிரெஞ்சு அதிகாரிகள் குழுவினை சந்திக்கிறது, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு. அதே வேளையில் பால் பாமரும் அவனது சில தோழர்களும் புதியதாய் சேர்ந்த படையணியினர் அறுபது பேரின் தகவல் தொடர்பு விட்டுப் போனதால் தேடும் படலத்தைத் துவங்குகின்றனர். இறுதியாக அவர்கள் கொத்தாக ஒரே இடத்தில் மடிந்து கிடப்பதையும் கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் விஷவாயுத் தாக்குதல் நடக்கிற போது அவசரப்பட்டு தங்களது முகக்கவசவங்களை முன்கூட்டியே கழற்றியதால் தான் மாண்டு போனார்கள் என்பதையும் அறிகின்றனர். களத்தில் மனித உயிர்கள் எவ்வளவு அற்பமாக வீணாகின்றன எனும் கசப்பு நம்மை நிலைகுலையச் செய்யும். பிரெஞ்சு அதிகாரிகள் முன்வைக்கிற நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமெனவும், மாற்றங்களுக்கு சாத்தியமே இல்லையெனவும் கறாராக அவர்கள் தங்கள் தரப்பை தெளிவுபடுத்தி விடுகின்றனர். களத்திலோ போர் நிறுத்த அறிவிப்பு வந்துவிடாதா என்ற ஏக்கம் ஒரு புறமும் அதுவரையிலும் களத்தில் நிலைத்து முன்னேற வேண்டிய கடமை மறு புறமுமாய் அலைக்கழிகின்றனர் வீரர்கள். முன்னேறிச் செல்லும் பாமர் ஓரிடத்தில் தனித்து ஒரு பிரெஞ்சு வீரனை எதிர்கொண்டு சண்டையிடவேண்டிய நிர்பந்தத்தில், தன்னைக் காத்துக் கொள்கிற பரபரப்பில் அவனைச் சரமாரியாக குத்தும் காட்சி படத்தின் ஆன்மா போன்றது. ஒரு ராணுவ வீரனது மூர்க்கமென்பது பயிற்சியெனும் பெயரில் விதைக்கப்பட்டு செறிவூட்டப்பட்டதே என்றும், நிலையில்லா மிருக நிலையில் அவனது நடவடிக்கைகள் அவன் தன்னிலை மீண்டு வந்ததும் அவனை சுயவெறுப்புக்கு இட்டுச் செல்வதையும் மெல்லக் கொல்லும் மனச்சான்று அது முதல் நிரந்தரமாக விழித்துக் கொள்வதையும் மிக நுணுக்கமாக விவரிக்கிறது. தன்னருகில் தன்னால் குத்தப்பட்டு இறந்து கொண்டிருக்கும் எதிரியின் இறுதி விநாடிகளை சாட்சி மாத்திரமாய் அருகிருந்து எதிர்கொள்ளும் துணிவு துளியுமில்லை அவனிடம். குத்தப்பட்டவனின் அடங்கும் உயிரின் கேவலும், உயிர்வாழ்தல் மீதான பேராவலும் ஒன்றையொன்று விஞ்சிடத் துடிக்கிற துடிப்பின் ஓலத்தை தாங்க இயலாதவனாய், காதுகளைப் பொத்தியபடி கதறுகிறான். தான் குத்திக் கிழித்த அவனது மார்புக் கூட்டில் பொங்கும் குருதியை அவனிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரியபடி தடுத்து நிறுத்த முயலுகிற அவனது தீவிரம் பார்க்கிற நம்மை நிலைகுலையச் செய்கிறது. களம் கண்ட முதல் நாளில் தன் சக தோழனின் இழப்பிற்கு அழுததை விடவும் இப்போதைய அவனது பேரழுகை பரிசுத்தமான மனிதத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. 

ஒரு வழியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட, ஊர் திரும்பும் ஆசுவாசம் மேலிட்டாலும், பாமரின் முகத்தில் இப்போர் முனையின் பாழ்வெளியில் இருந்து வெளியேறவிருக்கிற நிம்மதி தான் மேலோங்கி இருப்பதாகப் படுகிறது. இறுதியில் வசந்தம் வந்துவிட்டதாய் பாமர் நம்பிக் களித்திருக்கிற வேளையில், அவன் தோழனொருவன் தற்கொலை செய்து கொள்வதும், இன்னொருவன் தன் கண் முன்னே மிக அற்பமான ஒரு காரணத்திற்காய் அவன் தோளிலேயே உயிர்துறப்பதும் துன்பியலின் உச்சம். எழுபத்தியிரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காலை பதினோரு மணிக்குப் போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாய் அறிவிக்கப்பட்டுவிட எல்லோரும் கொண்டாட்ட மனநிலைக்கு வருகின்றனர். ஆனால், சமரச உடன்படிக்கையில் முற்றிலும் உடன்பாடில்லாத ஜெர்மன் தளபதி போர் நிறுத்த நாளின் காலையில், இறுதித் தாக்குதலை நடத்திட உத்தரவு பிறப்பிக்கிறார். உத்தரவை ஏற்க மறுக்கும் வீரர்கள் சக வீரர்கள் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறனர். தனிமனிதர்களின் அதிகாரப் பசியில், நிலம் பிடிக்கிற வெறியில் பிறந்த போரின் இன்னொரு ஆட்டம் துவங்குகிறது. அதற்குத் தம்மைப் பலிகொடுக்க தாங்களே மீண்டும் பதுங்குகுழிகளை நோக்கி முன்னெறும் வீரர்களின் முகத்திலும் நடையிலும் சவக்களையே வியாபித்திருக்கிறது. 

களத்தில் மிகப் புதிதாய் வந்து சேர்ந்துள்ள ஒரு சக இளம் வீரனைக் காப்பாற்றப் போக, இறுதியில் அது பாமரின் உயிரை விலையாய் கேட்க, தன்னையவன் கொடுப்பதோடு படம் நிறைவடைகிறது. இறுதிக் காட்சியில் பாமர் என்ன மாதிரியான சூழலில் களம் கண்டானோ அதே சூழலில் அதே திருப்பத்தில் இப்போது அவனால் காப்பாற்றப்பட்ட அப்பதின்ம வீரன் நிற்கிறான். போர் எனும் பிரம்மாண்டச் சக்கரம் ஒரு சுழற்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சுழல்வதாக நமக்குத் தோன்றினால் அது மிகையல்ல. 

திரை இருண்டபின் வருடங்களாய் நிலத்தின் மீதான அதிகார நிலைநாட்டல் எனும் ஒற்றை நோக்குடன் வளர்ந்து நீண்ட போர், மூன்று மில்லியன் உயிர்களைக் குடித்து, பிடிக்க முடிந்தது என்னவோ சில நூறு மீட்டர் நிலத்தினை மட்டுமே என்பதை வாசித்தபின் போரின் துயரம் ததும்பும் இருண்மையை திரை சுவீகரித்துக் கொண்டதைப் போல கருமையில் கரைகிறது. படத்தின் கதையோட்டம் குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் எழுதுவது வழக்கமெனினும், இப்படத்தைப் பொருத்தவரை மையக் கதாபாத்திரத்தின் பெயரைத் தவிர (அதுவும் கூட அவர் தான் கதைசொல்லியாக வருவதால் மட்டுமே) வேறு எவரின் பெயர்களையும், பாத்திரங்களுக்கு இடையேயான பிரத்தியேக உணர்வுப்பூர்வமான பந்தங்களையும், ஏன் ஒட்டு மொத்த திரைக்கதையோட்டத்தினைக் கூட கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். அதன் நோக்கம் பாத்திரங்களைப் பின்புலமாகவும் போரின் கோரத்தை முன்னிறுத்தவுமே எனக் கொள்க. பாத்திரங்களை அவர்தம் உறவுகளை அலசத் துவங்கினால் இது வெறும் போர் பின்னணியில் நடக்கிற ஒரு உணர்ச்சிமயமான டிராமாவாக உள்வாங்கப்பட்டுவிடுகிற சாத்தியங்களை தவிர்க்க விரும்புகிறேன். 

படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மூலப் பதிப்பான ஜெர்மன் மொழியிலும், ஆங்கில மொழிமாற்றப் பதிப்பிலும் காணக் கிடைக்கிறது. 

குறிப்பு: 
படம் குறித்த பார்வையை செழுமைப்படுத்த உதவியது தமிழினி கோகுல் பிரசாத் அவர்கள் படத்தை முன்வைத்து எழுதியிருந்த முகநூல் பதிவொன்று. அவருக்கு தனிப்பட்ட நன்றியும், பேரன்பும்.

(தொடரும்…)

writervarunan@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close