கவிதைகள்
Trending

இரா.பூபாலன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

  1

அப்போதுதான் முதன் முதலில்
பார்த்த அவளை அப்போதே
பின் தொடர ஆரம்பித்துவிட்டேன்

அவளை அழகு என்று சொல்வதற்கான
சொற்களை அந்தக் கணத்திலேயே
தொலைத்துவிட்டிருந்தேன்

ஊரின் மிக நீண்ட வளைவுகளில்
அவள் நடந்து கொண்டிருந்தாள்
நான் பின்தொடர்ந்து
ஓடிக் கொண்டிருந்தேன்

வெளி ஒரு கருந் திரையைப் போல
திக்கற்று நிறைந்திருந்த இரவிலும்
அவளின் ஒளிர்தலில்
எனது பாதையில் எந்த இடரலும்
இருக்கவில்லை

ஊர் எல்லைக் கண்மாயில்
நீள் கூந்தலைப் பரப்பி
அவள் குளித்தெழுந்த போது
நான் மறைந்திருந்து பார்த்தேன்
எனது சிறுவயது தேவதைக் கதைகளில்
ஒன்றுக்குள் தான்
நுழைந்து விட்டேனோ என்ற
சந்தேகம் வந்தது
அவள் குளித்தெழுந்த மறுகணம்
கண்மாய் மீண்டும்
குப்பை மேடாகி மூடிக் கொண்டது

பூந்தோட்டங்களுக்குள் புகுந்தவள்
பரந்திருந்த மலர்க் கூட்டங்களில்
வண்ணங்களைத் தேர்ந்து
சூடிக் கொண்டனள்
வழக்கம் போல அவள்
சூடி முடித்துக் கிளம்பியதும்
கருவேலமுட்களின் பீக்காடாக
மீளுருவானது பூந்தோட்டம்

கிணற்று நீரில் மிதக்கும்
நிலவை கைகளால் அசைத்து
ஒரு மிடறு நீர் குடித்தாள்
அவள் தாகம் அணைந்ததும்
கிணறு உள்வாங்கி
கட்டிடம் வெளியில் தெரியத் துவங்கியது

செங்காட்டில் வள்ளிக் கிழங்குகளை
அகழ்ந்து கூடையில் நிரப்பிக் கொண்டனள்
ஆம்
செங்காடு இப்போது
கிரீன் வேலி ரெஸிடென்சியாக
வெண்ணிற நடுகற்களோடு மீண்டது

நடந்து நடந்து
இரவின் விளிம்புக்கு வந்தவள்
ஊர் எல்லை
பேச்சி அம்மன் சிறுகோவிலுக்குள்
ஒளிக் கீற்றென நுழைந்து
சிலையாகி மீண்டும் விரல் விரித்து
நின்று கொண்டாள்

வெளிமாடத்தில்
அணைந்து கிடந்த
அகல் விளக்கில்
என்னை சுடரேற்றி விட்டு
ஓடி வந்து விட்டேன்
நான் என் புதிய நகரத்துக்கு.

 

                2

நெடுங்கவிதையொன்றிலிருந்து
வெட்டி நீக்கப்பட்ட ஒரு சொல் என் தனிமை
எதனோடும் ஒட்டாமல்
துண்டித்துக் கிடக்கிறது

சறுக்குமரம் விளையாட நீண்ட வரிசையில்
காத்திருந்து இடையிலேயே
இழுத்து விலக்கப்பட்ட
சவலைப் பிள்ளை என் தனிமை
கேவி அழுதபடி கிடக்கிறது

மின் தொடர் வண்டியினின்று
இடறி விழுந்து
கால்கள் அரைபட்டு
அரையுடலாகத்
தண்டவாளத்தருகில்
துடிக்கும் பிண்டம் என் தனிமை
உயிர் வலியில் கதறியபடி கிடக்கிறது

கம்பிகள் தொய்ந்து
பரண் மேலில் கிடத்தப்பட்டிருக்கும்
ஓயாது இசைத்த வயலின் கருவி
என் தனிமை
ஏக்கத்தின் மெளனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது

நாளெங்கும் வடிந்தபடியிருக்கும்
என் தனிமையின் குருதியின்
நிண வாடை தான்
என் சொற்களாகின்றன

பாருங்களேன்
இந்தக் கவிதையில்
அது
எவ்வளவு சிங்காரித்துக்கொண்டு
வீச்சம் பரப்புகிறது.

 

                           3

 

எப்போதும்
நிறைந்தும் இரைந்தும் கிடக்கும்
எனது அறையை
மிகக் கவனமாக
ஒழுங்கு செய்கிறேன்

எப்போதும் ஒழுங்காகவே
இருப்பவர்களின் வாயில்
அரைபட்டுக் கொண்டேயிருக்கிறது
என் அறை

பழையன கழிக்கவும்
புதியன நிறைக்காமல் இருக்கவுமான
முன் முடிவுகளுடன்
ஒரு விடுமுறை நாளில்
என் அறையுடன் துவங்கியது
சமர்

வகைகளாக
வண்ணங்களாக
பயன்பாடுகளாகப்
பகுத்து தொகுத்து
அறையை அரைவாசியாக்கி விட்டேன்

வெளியில் வீசியெறிந்துவிட்ட
பாதி அறை மீதான
என் காருண்யம்
என்னைச் சமன் குலைக்கிறதுதான்

இருப்பினும்
இந்த அறையின்
உபயோகமற்ற அத்துணையையும்
கழித்திடத் துணிந்தவன்
கக்கடைசியில்
கடையினும் கடை உபயோகியான
என்னை
இழுத்து வெளியே எறிந்து விட்டேன்

எனது அறையில்
இப்போது அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு ஒளி
அவ்வளவு தெய்வீகம்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close