சிறுகதைகள்
Trending

புது வெளிச்சம் – ஜனநேசன்

சிறுகதை | வாசகசாலை

                       “அப்பா பிள்ளையாரப்பா, சோலையாண்டவா, ஆத்தா வீரமாகாளி, வீரசேகரா, உங்களை நம்பித்தான் உங்கபிள்ளைக மாநிலம் விட்டு  மாநிலம் போறோம். போனதடைவை  மாதிரி இந்த தடவையும் காரியம் ஜெயமா முடியனும். உங்க மனம் குளிர பொங்கவச்சு  நூத்தியெட்டு தேங்கா உடைக்கிறோம்” என்று வணங்கியபடி மெய்யர், காரில் முன்னிருக்கையில் உட்கார்ந்தார். சோலையப்பன் பின்புறம் உட்கார்ந்து கொண்டான்.

ஓட்டுநர் பழனி, வண்டியின் நான்கு சக்கரங்களிலும் நசுக்கப் படுவதற்கு தோதாக எலுமிச்சம்பழங்களை வைத்துக்கொண்டுடிருந்தான்.

மெய்யர்,தனது கைபையில் வைத்திருந்த மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான ஈ-பாஸ், வங்கி பண அட்டைகள், இருவரது ஆதார் அட்டைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டார்.

ஓட்டுநர் பழனி, காரில் வந்து உட்கார்ந்ததும், “அண்ணே புறப்படலாமா” வேண்டிய ரிகார்டுக எல்லாம் எடுதாச்சுங்களாண்ணே?

எல்லாம் ரெடிப்பா. “நீ, உன் குலசாமியை கும்பிட்டு வண்டியை கிளப்பு”.  பழனி,ஸ்டியரிங்கைத் தொட்டுக் கும்பிட்டு வண்டியைக்  கிளப்பினான்.

ஊருக்கான உறவுச்சாலைகளை விலக்கி, ஒதுங்கி ஓடும் புறவழிச் சாலைகள் வழியாகவே கார் பறந்தது. மாவட்ட எல்லைகளில் இருந்த கொரோனா தடுப்பு சோதனைச்சாவடிகளில் காட்ட வேண்டிய ஆவணங்களைக் காட்டி, சுணங்கும் இடத்தில் நீட்ட வேண்டியதை நீட்டி  வண்டி பறந்தது. பழனி, சோர்வாகும் போது சோலையப்பன், ஓட்டினான். மெய்யருக்கு போனமுறை பிகாருக்கு பயணித்தது நினைவில் விரிந்தது.

*******************************************

நெல்லுக்கோட்டை சிறுநகரை ஒட்டி தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை முதலான நெல்விளையும் பகுதிகள் இருக்கின்றன. இவ்வூரில்   ஒரு நவீன நெல் அரவை மில்லில் கண்காணியாக மெய்யர் வேலை பார்க்கிறார். இதற்கு முன் அவரது  அப்பா நடத்தி வந்த சிறு நெல் அரவை மில்லை  மெய்யரே நடத்தி வந்தார். இவரைப்போல அந்த நெல்லுக்கோட்டை  சிறுநகரத்தில் நூத்தி அறுவேத்தேழு சிறு நெல் அரவை மில்கள் இருந்தன. நவீன நெல் அரவைமில்கள் வரவும், போட்டியில்  தாக்குப்பிடிக்க  இயலாமல் நூற்றுக்கு மேற்பட்ட மில்கள் மூடப்பட்டன. இவரும் தனது மில்லை மூடிவிட்டு அந்தப் பகுதியில் ஒரு பெரும்பணக்காரர் நடத்தி வரும் நவீன நெல் அரவைமில்லில் கண்கானிப்பாளராக  வேலை செய்கிறார்.

இருந்த சொத்துகளை விற்று இரண்டு பெண், இரண்டு ஆண்பிள்ளைகளுக்கு  வாழ வழிசெய்து கொடுத்தாச்சு. கடவுள்  புண்ணியத்தில்  பிரச்சினை இல்லாமல் பிழைப்பு ஓடுதுன்னு  நிம்மதியாக  இருக்கும்போது தான் அந்த விபத்து நடந்தது.

அந்த நவீன அரவை மில்லில் முப்பது பேர் பிஹார்காரர்கள், வேலை பார்க்கிறார்கள். இருபது ஆண்கள்  அரவை எந்திரத்தருகே அருகிருந்து, நெல் உமி பிரித்து, அரிசியாக்கி, புடைக்கப்பட்டு சுத்தமாக்கி சாக்கில் நிரப்புவது, எடை சரிபார்த்து, சாக்கை  மூட்டுவது, மூடைகளை கிட்டங்கியில்  அரிசியின் ரகம் வாரியாக  அடுக்குவது  இப்படியான பல வேலைகளில்  ஈடுபடுவர். தரம் பார்த்து அரிசியை ரகப்படுத்தும் பணிக்கும்  மில்லை சுத்தப்படுத்தும் பணிக்கும்  பத்து பிஹாரிப் பெண்கள், உள்ளூர் தொழிலாளர்களுக்கு  உதவியாக இருப்பர்.

பெரும்பாலும் நெல் அரவைப்பணி மாலை ஆறுமணிக்குத் தொடங்கி, காலை ஆறுமணி வரை இருக்கும். அப்போதுதான் மின்தடை இருக்காது.

இப்படி  ராத்திரி அரவை ஓடிகிட்டிருக்கும் போது விடியற்காலை மூணுமணி வாக்கில், ஒரு முப்பதுவயது பிஹாரி,  உறக்க கலக்கத்தில் அரவை எந்திரத்திற்குள் விழுந்து விட்டான்.  தூக்கத்தை விரட்ட வெளியே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த மெய்யர், கூக்குரல் கேட்டு ஓடிப்போய் எந்திரத்தை நிறுத்திப் பார்த்தார். அவனது  கழுத்து துண்டாகி உடல் நைந்து விட்டது. எந்திரம் ரத்தம் குடித்த மிருகம் போல் கோரமாகப் படுத்திருந்தது.

சக பணியாளர்கள் ஓலமிட்டார்கள். அவர்களை அமர்த்திவிட்டு  பதற்றத்தோடு மெய்யர், முதலாளிக்கு தகவல் கொடுத்தார். முதலாளியும் பதறியடித்து ஓடி வந்தார். முதலாளியைப் பார்த்ததும்  தொழிலாளர்கள்  கதறி அழுதனர்.

முதலாளி, “அவன் தலையெழுத்து  இங்கவந்து முடியணுமுன்னு இருந்திருக்கு, முடிஞ்சிருச்சு. உயிரு  பகவான் கையிலிருக்கு, இந்த சோகம் நடந்திருச்சு. இந்த விஷயத்தை  யாருக்கும் சொல்லவேண்டாம். செத்தவன்  குடும்பத்துக்கு  ரெண்டு லட்சம் உதவி செய்வோம். இவனோட வேலை பார்த்த உங்களுக்கு எல்லாருக்கும் பத்தாயிரம் பரிவுத்தொகையாக  உடனே  தர்றேன். இவனது உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்துருவோம். உங்கள்ல யாரவது ரெண்டுபேர்  இவன் குடும்பத்துக்கு நெருக்கமானவங்க ஆம்புலன்சில் போகணும். அவன் உடலோடக் கூடப்போறவங்களுக்கு ஆளுக்கு ரெண்டாயிரம் தனியா தந்திர்றேன்“ என்றார்.

மெய்யரைத் தனியே அழைத்து………….

“நீங்க கவனமா இருந்திருந்தா, இந்த கொலைப்பழி விழுந்திருக்காது. போலிசுக்கு தெரிஞ்சா மில்லை சீல் வச்சுருவாங்க. மீட்கப் பெரும்பாடாயிரும். போலிசுக்கு தெரியறதுக்குள்ள பிணத்தை அப்புறப் படுத்தியாகணும். எந்தத் தடயமும், தடங்கலும் இல்லாமல் அரவை ஓடியாகணும். வெளியே பத்து லாரிலோடு நெல்லு காத்துக் கிடக்கு. அரவையானதை  அந்தந்த  ஏரியாவுக்கு அனுப்பியாகணும்.

அதனால ஆம்புலன்சோட நீங்களும் போய் செத்தவன் ஊரில் குடும்பத்துகிட்ட பிணத்தை ஒப்படைக்கணும். அந்த ஊரு கிராம அதிகாரி, முக்கிய ஆளுகளைக் கைக்குள் போட்டுக்கிட்டு பிணத்தை தாமசமில்லாமல் எரிக்கணும். பிணம் எரிஞ்சதக்கப்புறம் தான் ,திரும்பணும்“. என்று நாலு லட்ச ரூபாயை நாலு பைகளில் போட்டு தனித்தனி  இடங்களில் ஆம்புலன்சில் ஒளித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். கையில் சில்லரையாக ஐம்பதாயிரம் கொடுத்தார்.

முதலாளி, பிணத்தைப் பாதுகாப்பாக சேர்க்கத்தான் பணம் கொடுக்கிறார். மனுஷத்  தேவைக்கு வாங்க தலைகீழ நிக்கணும்.                                                               முதலாளி ரெவன்யு, போலிஸ்ன்னு பலதுறைகளுக்கும், பல கட்சிகளுக்கும் படியளக்கிற வள்ளல்.

அங்கங்கே போன் பண்ணினார். அரைமணியில் ஆம்புலன்ஸ்  ஓசைபடாமல் மில்லுக்குள் நுழைந்தது. ஆம்புலன்சில் நூறு எலுமிச்சம்பழங்களை வாங்கிப் போட்டுக்கொண்டனர். வண்டி கிளம்பியதிலிருந்து எங்கெங்கு பயம் தோணுதோ அங்கெல்லாம்  எலுமிச்சையை இரண்டாகப் பிளந்தெறிந்து விரைந்தனர்.

மெய்யருக்கு பிணத்தை வைத்துக் கொண்டு  சாப்பிட  ஒவ்வலை. ஓட்டுநர்கள் இருவரும் ,உடன் வந்தவர்கள்  இருவருமே  சாப்பிட்டார்கள். மெய்யர், பழங்கள், குளிர்பானம், டீ என்று தேவைப்படும் போது  தின்றார்.

இந்தப்பிணத்தைப் பார்த்ததும் ஊர்க்காரர்கள், என்ன சொல்லப் போகிறார்களோ?, தர்மடி விழுகுமோ? பஞ்சாயத்தில உட்கார வைத்து பாசை தெரியாத ஊரிலே புரியாமப் பேசியே  வதைக்கப் போறாங்களோ? ஒரு தம்மடிக்க வெளியே போன நேரத்தில் நடந்த துயரத்துக்கு முதலாளி, என்னை பலி கிடாவாக்கி விட்டாரே.  பன்னெண்டு மணிநேரம் வம்பாடு படுற  அப்பாவி சப்பாவிகளுக்கு எந்த இடை ஆகாரமும் கொடுக்காம வேலை வாங்கினவர், நல்லவராயிட்டாரு. மேற்பார்வை பார்த்த நான், கொலைகாரனா ஆகிட்டேனே…  என்று  வாயையும் மூக்கையும் பொத்திக் கொண்டு மெய்யர், மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தார்.

நாற்பது மணிநேர பயணத்திற்குப் பின் கயா நகருக்கு பத்து கிலோமீட்டருக்கு முன்னால் வலப்புறம் நுழைந்து ராம்பூர் குக்கிராமத்துக்குள் நுழைந்து வண்டி  நின்றது. இவர்களுடன் சென்ற  ராம்சிங்கும், நாரயன்சிங்கும்  முன்னரே கைப்பேசியில் தகவல்  சொல்லியதால், ஆம்புலன்சைப்  பார்த்ததும்  மக்கள் கூடிவிட்டனர். கூக்குரலும் , அழுகையும் எழுந்தது. மெய்யருக்கு  வண்டியைவிட்டு இறங்க பயமாக இருந்தது. வேட்டியை சரி செய்வது போல்,    வெளியே பார்க்காமல் காதுகளைக் கூர்மையாக்கி கவனித்தார்.  ராம்சிங்  இறங்கி வெளியே வந்து ஊர்த்தலைவரைக் கும்பிட்டான். ஊர்த்தலைவர்,  அழுபவர்களை  அதட்டி  அமைதிப் படுத்தினார்.

மெய்யர்  கீழே இறங்கி  ஊர்த்தலைவரை வணங்கினார். அவர் பதிலுக்கு ராம், ராம் என்றபடி வணங்கினார்.

“விபத்தில் இறந்த ராம்பிரசாத்தின் உடலை அவனது மனைவி மக்கள் பார்க்கணுமுன்னு முதலாளி,  பெரியமனசோடு  ஆம்புலன்சில்  அனுப்பி வைத்தார். அவனது குடும்பத்துக்கும்  நிதி உதவி பண்ணச் சொல்லி  என்னை அனுப்பி வைத்தார்.“ இதை ராம்சிங்க், அவர்களது  பாசையில் சொல்லச் செய்தார். ராம்சிங்  சொன்னதைக் கேட்டு ஊர்த்தலைவர், உங்க முதலாளியின் பெருந்தன்மைக்கு  நன்றி என்று சொல்லி, இறந்த ராம்பிரசாத்தின் குடும்பத்தாரை அறிமுகப்படுத்தினார். அவர்களைப் பார்க்கவே அப்பாவியாக இருந்தார்கள். சம்பாதிக்கிறவனை இழந்த  சோகத்தில்  வானத்தைக் காட்டி காட்டி அவர்கள் அழுததைப் பார்த்த மெய்யருக்கும் கண்ணீர் கசிந்தது.

ஊர்த்தலைவரை தனியே  அழைத்துப்போய், “அவன் விபத்தில்  இறந்து இரண்டு நாளுக்குமேல் ஆனதால் உடல் கெட்டு நாற்றம் எடுக்கத் தொடங்கி  விட்டது. சீக்கிரம் அடக்கம் பண்ணியாகணும். இந்தக் குடும்பத்துக்கு எங்கள் முதலாளி, இரண்டு லட்சம்  கொடுக்கச் சொல்லி இருக்கிறார். இதை வாங்கி நீங்களே அவர்களிடம் கொடுத்து  ஆறுதல் சொல்லி ஆக வேண்டியதைப் பார்க்கணும்“ என்றார்.

ஊர்த்தலைவர், “அவர்களுக்கு ஊரில்  நிறைய கடன் இருக்கிறது. அந்தப் பணத்தை பிறகு  நான் ரகசியமாக கொடுத்து விடுகிறேன்” என்றார்.  மெய்யருக்கு  தயக்கமிருந்தாலும்  உடனே காரியம் ஆகணும். அவுங்க ஊர்ப்பிரசினை நமக்கெதுக்கு என்று, உடன்வந்த  ராம்சிங்கை சாட்சியாக வைத்து ரெண்டு லட்சத்தைக்  கொடுத்தார் . இறந்துபோன ராம்பிரசாத்தின் குடும்பத்தார், இவர்கள் பேசுவதையே  பார்த்துக் கொண்டு நின்றனர். ஊர்த்தலைவர்  இறந்தவனின்  அப்பா ,அம்மாவையும், மனைவியையும் அழைத்து அவர்களிடம்  இறுதிச்சடங்கு  செலவுகளுக்காக ஐந்தாயிரத்தைக் கொடுத்து உடனே அடக்கம் செய்ய  ஏற்பாடு பண்ணச் சொன்னார்.

ஊர்ச்சனங்கள், “எங்கோ இறந்தவனை தாய், பிள்ளைகள்  பார்க்கணுமின்னு, பிரேதத்தையும் கொண்டுவந்து காட்டி , செலவுக்குப் பணத்தையும் கொடுத்த உங்க முதலாளி ரொம்பப் புண்ணியவான். அவருக்கு கடவுள் நல்லதையே செய்வார்“ என்று மேலே நோக்கி கும்பிட்டனர்.

இவ்வளவு  அப்பிராணியா மனுசங்க  இருக்காங்களே ..!‘ நினைக்க  மெய்யருக்கு  சிலிர்த்தது. இறந்தவனின் முகத்தை மட்டும்  திறந்து பார்த்து  அழுது, இறுதிச் சடங்கு  நடந்தது.

“தான் ஒருவேளை வெளியே போகாமல் அரவைமிசினருகே  இருந்திருந்தால் இப்படி ஒரு துர்மரணம் நேர்ந்திருக்காதோ”  என்ற குற்றவுணர்வில் மெய்யருக்கு கண்ணீர் பொங்கியது. இவர் கண்ணீர் வடித்தது பார்த்து ஊர்மக்கள் அவருக்கு ராம் ராம்  சொன்னார்கள்.

ஊர்த்தலைவர், மெய்யரை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று  வெந்நீரில் குளிக்கச் செய்து அவருக்கு புல்கா சப்பாத்தி, பருப்பு கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

சரியாக சாப்பிட்டு ரெண்டு நாளானாலும் இவருக்கு தின்ன ஒப்பலை. இருந்தாலும் ஊருக்காரர் தயவு நாளைப்பின்னே தேவைப்படலாம்  என்று நினைத்து பசி ருசியறியாதென்று மென்று விழுங்கினார்.  ஊர்த்தலைவர், கையில் ஐந்தாயிரம் ரூபாயைத் திணித்தார். அவர்,  மறுப்பின்றி ஏற்றுக் கொண்டார்.

இவர் பயந்தது  போல் ஊர்மக்கள் கொந்தளிக்கவில்லை. ஒரு சுடுசொல் கூட உதிர்க்கவில்லை. அவன் விதி முடிந்து விட்டது  என்று புலம்பினர் . இவருக்கு  தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்று தனது  இஷ்ட தெய்வங்களை எல்லாம் மனசுக்குள் சொல்லி  நெக்குருகினார். ஊரார் ஆம்புலன்சைக் கழுவ தண்ணீர் கொடுத்து உதவினர். இவர்களோடு வந்த தொழிலாளர்கள், தங்கள் வீட்டுச்செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு  வண்டியில்  ஏறினார்கள்.  ஊர்த் தலைவரும், ஊராரும் இவர்களும் பரஸ்பரம்  நன்றி உணர்வை பரிமாறிக் கொண்டார்கள். வண்டி ஊர் திரும்பியது. .

**************************************

இப்போது காரை சோலையப்பன், ஓட்டிவந்தான். இரவு ஒன்பது மணியாகியது. ஏறக்குறைய ஆயிரத்து இரநூறு கிலோமீட்டர் கடந்து விட்டோம். இன்னும்  பாதிதூரம் போகணும். கொரோனா பொது அடைப்பு தளர்த்தப்பட்டாலும் சாலையில் முழுப் போக்குவரத்து  தொடங்கவில்லை. பக்கவாதம் பாதித்தவன் உடலைக் கிடத்தியது  போல்வழிமுழுக்க சாலை நீண்டு கிடந்தது. இதனால  இவ்வளவு  சீக்கிரமா விசாகப்பட்டினத்தை நெருங்கிவிட்டோம்.

“இங்கே  கிடைக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு தூங்கி எழுந்திருச்சுப்  போனால் தான் நமக்கும் வண்டிக்கும் நல்லது . சோலை, ஊருக்குள்ளே  ஒரு பெரிய ஹோட்டலாப் பார்த்து நிறுத்து. பசியாத்திட்டு கொஞ்சம் கட்டையைக் கிடத்தினா தான் நாளைக்கு இலகுவா இருக்கும்“ ஓய்வெடுத்தார்கள்.

அதிகாலை புறப்பட்டார்கள். முகக்கவசம், கையுறைகளோடுதான்  வெளியே வந்தார்கள்.  பார்க்கும் முகங்கள் எல்லாம் கவசங்களோடு தான் திரிகிறார்கள். ஆந்திராவும், நம்ம தமிழ்நாடும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் ஐந்து லட்சத்தைத் தாண்டிவிட்டன. மூச்சுக்காற்றுப் பரவலுக்கு அடுத்தக் கட்டமாக கொரோனா வெளிக்காற்று  பரவலுக்கு நகர்ந்திருக்கு என்கிறாங்க. மக்கள் தொற்று அச்சமில்லாமல்  வெளியே உலவிய காலத்தில் பொதுஅடைப்புன்னு மூடுனாங்க. மக்கள், உயிருக்கு அஞ்சி வெளியே வர தயங்கிற காலத்தில்  அடைப்பு எல்லாம் தளர்த்திட்டாங்க. இரண்டு தரப்பும் குழம்பிப்போய் இருக்கிற காலம். நாம ஒவ்வொருத்தரும்  எச்சரிக்கையாக இருக்கிறதே நல்லது.

செய்திகளைக் கேட்பது பயமாக இருந்தாலும்  எதையும் அறிந்து தான் நகரவேண்டியிருக்கு. நாம கடற்கரையோரம் போகிறோம். காற்றழுத்த தாழ்வு மழை  இருக்கும்ன்னு அறிவிப்பு வருகிறது. நாம மழை வெயில்ன்னு பார்க்காம ஆளுகளை கூட்டியாந்து ராப்பகலா அரவை ஓட்டினாத் தான் நவம்பர் மழைக்காலத்தில் தட்டுப்பாடில்லாமல் அரிசி, தமிழ்நாட்டில் கிடைக்கும். இப்போ ஆளில்லாமல்  அரவையில் சுணங்கினால் ஐப்பசி, கார்த்திகை மாசத் தேவைகளுக்கு ஆந்திரா, கர்நாடகாக்காரர்கள்  அரிசியை தமிழ்நாட்டில் இறக்கி அவுனுக சம்பாரிச்சிட்டுப் போயிருவானுக. இதை தடுக்கத்தான்  முதலாளி ஆள்கூட்டிட்டுவர  நம்மளை பிஹாருக்கு அனுப்புறாரு.

இந்த தடவை வேலையாள்  கூட்டிட்டுப் போறது நல்லபடியா அமைஞ்சா  நம்மலே வேலையாலு அமர்த்திவிடற  ஏஜெண்ட் ஆயிறலாம். தலைக்கு  நூறுரூபாய் கிடைச்சாலும் லாபம் தானே.

பிஹாரிங்க பான்பராக்கை மென்னுக்கிட்டே  பேயாய் உழைக்கிறாங்க. நம்ம தமிழ்நாட்டுக்காரங்களை விட பாதி சம்பளம் தான். நம்மாளுக மூணு நாளைக்கு வேலை பாக்கிறாங்க .கைநிறைய காசை வாங்கி மூணு நாளுல குடிச்சு தின்னு தீர்த்திட்டு நாலாம் நாளைக்கு மில்லுப் பக்கம் எட்டிப் பாக்குதுக. இந்த குடி ஒழிஞ்சாத் தான் விமோசனம்.                                                              அலுப்பை மறக்கணுமுன்னு  பிஹாரிக  பான்பராக்கை மென்னுகிட்டே  வேலை பார்க்கிறாங்க. பான்பராக்கை அவனுக மெல்லுறானுகளா? இல்லை பான்பராக்  அவங்களை  மெல்லுகிறதா? தெரியலை. அவுனுக திங்கிற தீனிக்கு பார்க்கிற வேலைக்கேத்த  உடம்பு இல்லை. வண்டி போய்கிட்டே இருக்கு சிந்தனையும் நீண்டுகிட்டே இருக்கு.

புறவழிச்சாலை அகன்று நீண்டு கொண்டே போகிறது. ஓரஞ்சாரத்தில்  மரங்களைக் காணலை. டோல்கேட்டுக்காரங்கதான் மரம் வச்சு பராமரிக்கிறதுக்கு பதிலா நடுத்திட்டில் அரளிச்செடியை வச்சிருக்கிறாங்க . வெக்கையான கடல்காற்றைத் தவிர குளிர்ந்த மரக்காற்றைக் காணோம். அடே அப்பா, ஏசிகாற்று வாங்கிகிட்டு இவ்வளவு சொகுசா காரில் போகுற  நமக்கே உடம்புவலியும் , எரிச்சலும் ஏலாமையுமா  இருக்கே, இவ்வளவு தூரமும் கஞ்சி ,தண்ணியில்லாம மொட்டை வெயிலில் நடந்தே போயிருக்கிறார்களே எவ்வளவு கொடுமை.! இந்தக் கோடைவெயிலில் நடந்ததில் எத்தனை பேர் செத்தார்களோ?, எத்தனைபேர் பிழைத்தார்களோ? அடக்குருட்டுக் கடவுளே!

பல்லாயிரக்கணக்கானோர் நடந்து அரை உசிரு, கொறை உசிரானதுக்கப்புறம்  அரசாங்கம், ரயிலு விட்டுச்சு. அதிலும் அரசியல், கட்டணக் கொள்ளை.  ஊர்ப்புறச்சாலை மாதிரி  மக்கள் புழங்குற இடத்தை விட்டு அரசுகள் மக்களுக்கு  தூரமா புறவழிச்சாலையில் போய்கிட்டே  இருக்கு. இதுக்கெல்லாம் எப்ப விடிவோ?.

நம்ம முதலாளிக்கு இருக்கிற வசதி வாய்ப்புக்கு அவர்  நினைச் சிருந்தா இந்த பிஹாரி தொழிலாளிகள்,  நடந்து சாவதைத் தவிர்த் திருக்கலாம். நிலைமை சீராகுறவரை  குருணை அரிசியைக் காச்சிக் குடிச்சிட்டு  மில்லு வீடுகளுக்குள்ளே இருங்கன்னு தங்கவச்சிருக்கலாம்.

ம்ம்ம்……பணம் பெருகப்பெருக மனம் சுருங்கிப்போகுது.                                                                  எண்ண வேகமும் காரின் வேகமும் இணைந்தது போல்  கார் அந்த “ராம்பூர்” குக்கிராமத்தை  நெருங்கியது.

தென்மேற்கு பருவக் காற்றின் மழையும், இமையமலைச்சாரல் காற்றும்    ஊரை  குளிர்ச்சியாக்கி   இருந்தது. ஊர்த்தலைவருக்கு மெய்யர்,  கைப்பேசியில்  தொடர்பு கொண்டார். வயலில் வேலையாக இருப்பதாகவும் வேலை முடிந்து  வர சாயந்திரமாகும். எல்லாரையும்  இருட்டின பிறகு தான் பார்க்க இயலும் என்றார். இன்னும்  ஐந்துமணி நேரம் இங்கே  காத்திருப் பதற்கு கயாநகரில்  குளித்து சாப்பிட்டு  சற்று ஓய்வெடுத்து வரலாம் என்று திரும்பினர் .

கயா நகரில் ஆறு ஓடியது. பார்க்க  அழகாக இருந்தது. படித்துறை அருகே வண்டியை  நிறுத்தி முதலில் மெய்யரும், சோலையப்பனும் குளிக்கச் சென்றனர். பனி உருகியது போல் சில்லிட்ட நீரில் முங்கி முங்கி அலுப்பெல்லாம்  கழுவி நிறம் மாறி, மனது பஞ்சு  போலான  உணர்வு. உடல்குளிர  பசித்தீ பற்றியது, மனமில்லாமல் எழுந்தனர்.

பின் ஓட்டுநர் பழனி, குளித்து கண்சிவக்க வந்தான். பக்கத்தில் சுற்றுலா உணவகத்தில் தென்னிந்திய உணவு கேட்டு உண்டனர். வீட்டுச் சாப்பாட்டின்  ஏக்கம் பெருகியது. பசியை அணைக்க விழுங்கி எழுந்தனர்.

ஆற்றின் பாலக்கரையிலிருந்து பார்த்தார்கள். திசையெல்லாம்  உயர்ந்த புத்தவிகார்களும், நெடிய புத்தர் சிலைகளுமாகத்  தெரிந்தன. என்ன மாயமோ தெரியவில்லை புத்தர் முகத்தைப் பார்த்த நொடியில்  மனதுக்குள் அமைதி பூத்து விடுகிறது. வந்த காரியம் நல்லவிதமா முடிந்தால் கயாவைச்சுற்றிப் பார்த்துச்செல்லலாம்.  இப்போது கொரோனா பரவலில்  விடுதியில் தங்கி ஓய்வெடுப்பது  நல்லதல்ல. நடமாட்டமில்லா பகுதியில்  ஓர் ஆலமர நிழலைக் கண்டார்கள். புத்தம் சரணம் கச்சாமி என்று  ஆலமரநிழலில்  கால்நீட்டிப் படுத்தார்கள். வெக்கையை மீறிய  ஆற்றங்கரைக் காற்று தாலாட்டலில்  உறங்கிப் போனார்கள்.

ஆறுமணிக்கு எழுந்து புறப்பட்டார்கள். ஊருக்குள் விளக்குகள் மங்கி வழிந்தது. மேகம் மூட மூட நிலா, வெளியேறி வெளிச்சத்தை பொழிந்தது.  குளிர்ந்த காற்றும் இதமாக இருந்தது.  ஊர்த்தலைவர்  வீட்டுக்குப் போனார்கள். மூவருக்கும் காபி கொடுத்தார்.  எருமைப்பால் காபி. பாலின் ருசியே நாக்கில் நின்றது. ஊர்த்தலைவர்   சமுதாயக் கூடத்துக்கு அழைத்துச்  சென்றார்.

சமுதாயக்கூடத்தின்  முன்புறத் தோற்றம் ஒரு சிறிய விகாரைப் போல் இருந்தது. நுழைவு வாயிலில் புத்தர் சிலை இருந்தது. உள்ளே கூடத்தில்  ஒரு சிறிய மேடை மீது  நான்கு நீலநிற  பிளாஸ்டிக் சேர்கள்,  போடப்பட்டிருந்தன. கீழே ஊர்மக்களில் ஆண்கள், அதிகமாகவும் பெண்கள், சிலரும் உட்கார்ந்திருந்தனர்.

இவர்கள் உள்ளே நுழையும்போது  விபத்தில் இறந்துபோன ராம்பிரசாத்தின் அப்பாவும், அம்மாவும் மெய்யரைப் பார்த்துக் கும்பிட்டனர். மெய்யர், அவரது சேமநலன்களை  விசாரித்தார். இவரைப் பார்த்ததும்  அவர்கள் இருவரும் அழுதனர். “வாழவேண்டிய பிள்ளை செத்துட்டான். சாகவேண்டிய நாங்கள், செத்து செத்து ஜீவிக்கிறோம்.  நீங்கள்  கொடுத்ததில்  ஐம்பதாயிரத்தை  வாங்கிக் கொண்டு மருமகள் இரண்டு பிள்ளைகளோடு  அவளது அப்பா ஊருக்குப் போய்விட்டாள். அவள் மறுகல்யாணம் பண்ணினாளோ?, பேரப்பிள்ளைகள், எப்படி வளருதோ?  தெரியவில்லை. எங்களிடம்  குடியிருக்கும் வீட்டைத் தவிர  வேறு நிலமில்லை. இருந்த அரை ஏக்கர்நிலத்தை விற்றுத் தான்  மகளைக் கட்டிக் கொடுத்தோம். வாழ வேறு வழியில்லாமத் தான்  மகன்  உங்கவூருக்கு  பிழைக்க வந்து மாண்டு போனான்“ என்று  அழுகை ஊடே சொன்னார். மெய்யர், நெகிழ்ந்து என்ன செய்வது?, இந்த துயரத்தில் இருந்து எப்படி தப்புவது  என்று திணறினார்.

ஊர்த்தலைவர்  தலையிட்டு , இந்தக்  கூட்டம்  முடிஞ்சதும் விரிவாகப்  பேசலாம்  என்ற பிறகுதான் பெரியவர் பற்றியிருந்த மெய்யரின் கைகளை விடுவித்தார். .

இவர்கள்  மேடைக்கருகே போனதும் எல்லோரும் எழுந்து, ராம் ராம் என்று சொல்லி வணங்கினர். இவர்களும்  வணங்கினர்.

ஊர்த்தலைவர்,  எல்லாரையும்  அமரச் சொல்லி இவர்கள்  வந்திருக்கிற  நோக்கத்தைக் கூறி, தமிழ்நாட்டுக்கு வேலைக்குப்போக விரும்பிறவங்க பேரைக் கொடுங்க. அவர் முன்பணம் கொடுத்து  உங்களைக் கூட்டிக்கொண்டு போக வந்திருக்கிறார் என்று தெரிவித்தார்.  ஊர்த்தலைவரின்  முன்னெடுப்பு, மெய்யருக்கு மகிழ்ச்சியைத்தந்தது. நெல்லுத்தாளு அரிசியா காய்க்கும் போலிருக்கு.! நிமிர்ந்து உட்கார்ந்தார்.

ஊர்க்காரர்கள், அவர்களுக்குள்ளே உணர்ச்சி பொங்கப் பேசிக்கொண்டனர்.

மெய்யர்,  ஊர்த்தலைவர் முகத்தைப் பார்த்தார்.

“இப்படி  நீங்களாப் பேசினா எப்படி. நம்மளைத் தேடிவந்தவருக்கு  முறையா  சொல்லணுமில்ல.“

ராம்சிங் எழுந்து வணங்கினான். நாங்க முப்பதுபேர் இந்த முதலாளி மில்லில்  வேலைபார்த்தப்ப, வேலையும் ,சம்பளமும்  கொடுத்தாங்க. எங்கள்ள ஒருத்தர் செத்துப் போனதுக்கு ஊருக்கே பிணத்தைக் கொண்டுவந்து  தாய், பிள்ளைகள் முகம் பார்க்க வச்சாங்க. இழப்பீடும்  கொடுத்தாங்க.  முதலாளிமாருக்கு  தன்னியவானா  இருக்கோம்.

ஆனா கொரோனா வந்து  வேலை நிறுத்தச் சொன்னப்பகூட  வெளியாளுக்கு தெரியாம கையிருப்பு நெல்லை அரைச்சுக் கொடுத்தோம். போலிஸ் கெடுபிடி செய்யவுமே வேலையை நிறுத்தினோம். வேலை நிற்கவும் ஆளுக்கு ஐந்துகிலோ  அரிசிக்குருணை கொடுத்ததோடு  நிறுத்திட்டாங்க. பாசை தெரியாத  கண்ணுக்கு தெரியாத தேசத்தில் பட்டினியா சாகிறதுக்கு பிறந்த மண்ணில  சொந்த பந்தங்கள் மத்தியில  சாவோமுன்னு தான் நாங்க ரெண்டாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் நடக்க ஆரம்பித்தோம்.

ஒவ்வொரு ரயில்வே ஜங்சன் கடக்கும் போதும் ரயில் விடுவாங்களான்னு  கேட்டு கேட்டு ஏமாந்து போனோம். தின்ன ரொட்டியோ,  குடிக்கத்  தண்ணியோ கிடைக்காமா கடுங்கோடை வெயிலில் கால் புண்ணாக நடந்து வந்தோம். சென்னையைத்  தாண்டின கொஞ்ச தூரத்தில் ஐம்பத்தைந்து வயசான ஜானகிதேவி ரோட்டில் சுருண்டு விழுந்து  உசுரை விட்டுடாங்க. அப்படியே  ரோட்டோரம் விட்டுட்டு அழவும் , நடக்கவும்  தெம்பில்லாம நடந்தோம். நெல்லூரைத் தாண்டி வரும்போது  பத்துவயசுப் பிள்ளை  சீத்தாதேவி கால் சீழ்பிடிச்சு அழுகி ஆத்துபாலத்திலிருந்து குதித்து விட்டாள். அப்பன்காரன்  தரம்சிங் கீழே இறங்கி பார்த்தபோது அந்த தேவதை தலைசிதறி  செத்துப்போனதாக வந்து அழுதான்.  ஈமக்கடன் கூட தீர்க்க வழியில்லை. அங்கேயிருந்து கையெடுத்துக் கும்பிட்டு, நீதான் சீத்தாதேவி தெய்வமா துணைவந்து காப்பத்தணுமுன்னு  வேண்டிகிட்டே நகர்ந்தோம். அங்கங்கே சில புண்ணியவான்கள்  தண்ணியும், சாப்பாட்டுப் பொட்டலங்களும்  கொடுத்தாங்க. அரசாங்கம் செய்யவேண்டிய  காரியத்தை  ஒரு சிறு உதவியால  தீர்ந்துடுமா.

விசாகப்பட்டினம்  தாண்டி வரும்போது பிரதாப்சிங் மயங்கி  விழுந்து விட்டார். அவரை மயக்கம் தெளிவித்து  நடக்கச் செய்தோம். “இனிமேல் என்னால் ஓரங்குலம் கூட நடக்கமுடியாது. நீங்க மெல்ல நடந்துபோங்க. உயிர் பிழைச்சிருந்தா  ஊர் வந்து சேர்கிறேன்“ என்று கையெடுத்து கும்பிட்டார். மனசில்லாமல் அவரை அங்கேயே விட்டுட்டு நகர்ந்தோம். இன்னைக்கு மூணுமாசம் ஓடியிருச்சு. அவரைபத்தி எந்த விவரமும் தெரியாம அவுங்க வீட்டாளுக தவிச்சுகிட்டிருக்காங்க.                                          நாங்க  “புவனேஸ்வரம்” வந்தப்பதான் அரசாங்கம்  ரயிலு விடத் தொடங்கினது. அங்க ரெண்டுநாள்  வரிசையில் காத்துக்கிடந்து ரயிலேறினோம் .அந்த வண்டி இடையில் எங்கேயும்  நிக்காம பாட்னாவில் இறக்கிவிட்டது. அங்கே இருந்து ஒருநாள் பயணமா நடந்து ஊர் வந்து சேர்ந்தோம். இருபத்தொன்பதுபேர்  புறப்பட்டு இருபத்து மூணுபேர் மட்டுமே  வந்து சேர்ந்தோம். அதிலும் ஊர்மண்ணை மிதிச்ச அரைமணியில் ரெண்டுபேர் ஆத்மா பிரிஞ்சிருச்சு

ராம்சிங் சொல்லச் சொல்ல  கூட்டத்தில்  விம்மலும், விசும்பலும், பெருமூச்சுமாக ஒலித்தது. ஊர்த்தலைவரும், மெய்யரும் கண்கள் கசிய வாயைப் பொத்தி உறைந்திருந்தனர்.

மெய்யர், மெல்ல ஊர்த்தலைவரை நோக்கினார். ஊர்த்தலைவர்,  சுதாரித்துக்கொண்டு எழுந்து , “கால வினை, நடக்கக் கூடாதது நடந்து விட்டது. இதைத் தடுக்கும் சக்தி நமக்கில்லை. அடுத்து  நாம என்ன செய்யணுமுன்னு சொல்லுங்க. நல்ல முடிவெடுப்போம். “

பீம்சிங் என்பவர்  எழுந்தார் .  “நான்  மகாராஷ்ட்ராவில் இருந்து நடந்து வந்தவங்கள்ல ஒருத்தன். எங்களோட வந்தவங்கள்ல மூணுபேர்  செத்துப் போனாங்க. எங்களுக்கு  முன்னால நடந்தவங்க  பதினேழுபேர் மேல கூட்ஸ் எஞ்சின்  ஏறிச் சிதைந்த கொடுமையை பார்த்துட்டு தான் நடந்தோம். கண்ணுக்குத்  தெரியாத தேசத்தில் பட்டி.னியா கிடந்து  சாகுறதுக்கு பிறந்த ஊரிலே தாய், பிள்ளைகளோட சாவோம்முன்னு நடந்தோம். இப்ப இந்த துயரத்தை மட்டும் பேச வரலை.

இந்த மண்ணுல  பிறந்தோம் , வரிகொடுக்கிறோம். ஓட்டும் போடறோம். யார் யாரையோ ராஜா மாதிரி  ஆளவிடறோம். இங்க   வேலைவாய்ப்பு கொடுக்கத் துப்பில்லாதவங்களை எதிர்த்து கேட்காம ஒட்டைபோட்டுட்டு போய் வெளியூர்காரனுக்கு இரண்டாம்தர பிரஜையா கொறஞ்ச கூலிக்கு உழைச்சு சாகிறோம். இப்போ  இன்னும் இரண்டு மாசத்தில் இங்க தேர்தல் வரப்போகுது. நமக்கு உள்ளூரிலே வேலைவாய்ப்பும் வாழ வழியும் செஞ்சு தருவதற்கு எழுத்துபூர்வமா உறுதி கொடுக்கிறவங்களுக்கு மட்டும் ஓட்டுப் போடுவோம். அப்படி யாரும் உறுதி தராதபட்சத்தில் இந்த மாகாணத்தில் உள்ள உழைப்பாளிகள், ஒவ்வொரு தொகுதியிலும் ஒருத்தர் போட்டிபோட்டு களத்தில் இறங்குவது என்று இந்த மாகாணம் முழுவதும் பேச்சுவார்த்தை  நடந்துகிட்டு இருக்கு. அதனால  இந்த ஊரில் இருந்து மட்டுமில்ல  இந்த மாகாணத்தில் எந்த பகுதியில் இருந்தும் யாரும் வெளி மாநிலங்களுக்கு  வேலைக்கு போகமாட்டாங்க. இந்த வெளிச்சம்  எல்லா மாகாணங்களுக்கும்  பரவும் ! “

நொந்து சுருண்டு உட்கார்ந்திருந்த ஜனங்கள் ஜெய்பீம் என்று முழங்கி எழுந்தனர்.!

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close