கட்டுரைகள்

புனிதப்போர்வை விலகலின் ஒரு கணம்

வேதநாயக்

“கனவானைப் பார்த்த அளவிலே தெரிந்து கொள்ளுவதைப்போல, கவிதையையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கவிதையை வர்ணனைக்குள் கட்டுப்படுத்தி எல்லை கட்ட முடியாது’– மாஜினி

கவிதை மரபினை கவனிப்பதற்கு முன் காளிதாசனின் இத்தொடரினை அவதானிக்கலாம்.

(புராண மித்யேவ நசாத் ஸர்வம்,

நசாபி காவியம் நவமித்யவத்யம்)

‘பழையது என்பதால் எல்லாம் குற்ற மற்றவையல்ல. புதிது என்பதால் மட்டும் எல்லாம் பேசத்தகாதவை அல்ல என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.’ –காளிதாசன்.

சொல்லிலிருந்து மற்றொரு வார்த்தைக்கும் அவற்றுக்கு இடையேயான உள்ளுறை அர்த்த த்வனிக்கும் இடையறாத ஓட்டம் மொழியின் சுழல் நீரோட்ட நீதியில் கோலோச்சுகிறது. ஒரு மொழி அது வெளிப்படுத்தும் பார்வைத் தளத்திலிருந்து நம்மோடு உரையாட மிகச்சரியான ஊடகமாக கவிதை வெளி நிற்கிறது. இத்துடன் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கும் கலாச்சார அடையாளங்களான கழனி, வரப்பு, கேணி, கிணறு, சுடலைமாடன், கருப்பண்ணன், காவல் தெய்வங்கள் அத்துடன் மரபு சார்ந்த தொன்மங்கள், நகர்புற அடையாளங்களான இடம், அதன் மேல் ஏற்றிச் செய்யும் இருப்பு குறித்தான பார்வைகள்,வாழ்வு, சாவு, குற்றம், நன்மை, தீமை, கடவுள், பண்பாட்டுக் கூறுகள், மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு, சமுதாய இணைப்பில்  பெறும் அனுபவம், இயற்கை தரும் அனுபவம், தம் கற்பனையால் படைக்கும் உலகு, பார்த்தது, கேட்டது, உணர்ந்தது என எண்திசையோடு மேல், கீழ் எனச் சேர்த்தும் வழி வந்து கூடியதை எழுத்தாய் ஒழுங்குபடுத்தி உணர்வின் நிலைக்கு கடத்த முயற்சிப்பதை  கவிதையின் உயிர்ப்பொருளாய் மிகச் சாதாரணமாகவே ஏற்கலாம். இவ்வளவு விஷயங்களும் கலந்து வெளிப்படும் மொழிக்கு மட்டும்தான் கலை வெளிப்பாட்டின் தன்மையை அளிக்க முழு உரிமை இருக்கிறது எனவும் கூட கொள்ளலாம்.

சில நேரங்களில் நிலமற்ற வெளிகளை கவிதைகள் தேர்ந்தெடுக்கையில் அகவுலக மனநெருக்கடிகள், தோல்வி, பயம், இல்லாததை இருப்பதாக எதிர்மறை, நேர்மறை மனோபாவங்கள் அந்தரங்கத் தொனியோடு உரையாட இவ்வடிவம் கைகொடுப்பதாகவும் ஏற்கலாம்.

கவிதை எனும் வாள் வீச்சு  முன்னுரையில் ஆனந்த் குறிப்பிடுகிறார்: கவிதை உணர்வு நிலைகளை மையமாகக் கொண்டது. விவரித்தலோ விளக்குதலோ உணர்வு நிலையை அடையச் செய்துவிட முடியாது. உணர்வு நிலையின் இடத்தில் வாசிப்பவரை இருத்துவது தான் கவிதையின்  செயல்பாடு;  கவிதையை வாசிப்பவர் கவிஞனின் இடத்திற்கு நிலைபெயர்ந்தால்தான் கவிதையின் உணர்வு நிலையைப் பெறமுடியும். அப்படி மாறும் வல்லமை கொண்டவர்க்கு கவிதை புரிதல் பற்றிய புகார்கள் இருப்பதில்லை. மொழிச் செறிவு அல்லது சிடுக்கு காரணமாகப் புரிதலில் சிக்கல் ஏற்படும் எனினும் கவிதையின் உணர்வுத் தளத்தோடு இணைந்து கொள்ளுதல் சாத்தியம்தான் என.

சமீபமாக எழுப்பப்படும் கேள்வி (முந்தைய காலத்திலிருந்தே கூட) கவிதை ஏன் வாசகனுக்கு திணறலையும், புரியாத் தன்மையையும் தொடர்ந்து செய்து வருகிறது என்பதுதான். இஃதொன்றும் புறமொதுக்க வேண்டிய கேள்வியல்ல. ஒரு நல்ல கவிதை என்பது தனக்கான வாசகனை அது வசமாக்கிக்கொள்ளும் என்பது மேலோட்டமான பதில் மட்டும்தான்.

எந்த ஒரு நல்ல கவிதையும் வாசகனை பயமுறுத்த எழுதப்படுவதில்லை. அதனுள் ஏதேனும் ஒன்றைப் பொதித்து வைத்திருக்கும் தன்மையை கொண்டிருக்கும். அது நுண்மையாக அமைந்து உள்ளுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் மீமொழி எனப்படுகிற குறியீட்டு மொழியாக கவிதையின் வார்த்தைகளூடே பயணிக்கின்ற இரகசிய மொழியாக அறியப்படுகிறது. அதன் குரல் முணுமுணுத்தபடியாக இருக்கின்றபடியால் தேர்ந்த வாசகனல்லாத வாசகனின் செவிகளை அது அடைவதில்லை.

ஒவ்வொரு கவிதையும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அது அதற்கான மரியாதையைக் கேட்கிறது. சங்கப்பாடல்களின் காலத்திய முதல், உரி, கருப்பொருட்களிலிருந்து வழிவழியாகப் பெறப்பட்ட பொருள் இலக்கண மரபு தற்காலத்திலும் சிறந்ததாக விமர்ச்சகர்களால், கவிஞர்களால், அறிஞர்களால் சுட்டப்பெறும் பல கவிதைகள் வாசகனது நுண்வாசிப்பை வேண்டி நிற்பவையே.

கவிதைகள் மக்களை நோக்கிச் சென்றடைந்ததா இல்லையா என்ற கேள்வியற்று எழுதப்படும் படைப்புகள் எனச் சுட்டிக்காட்டப் பெறுபவை மிகுந்த உழைப்புக்குப் பின்பே படைக்கப்பட்டிருக்கும் என்பதை சாதாரண வாசகன் உணர்வதில்லை. எந்த வாசகனையும் ஏமாற்ற எக்கவிதையும் எழுதப்படுவதில்லை.தன் மேதாவித்தனத்தை விண்டுரைக்க ஒரு வாய்ப்பு இது என எக்கவிஞனும் எழுதுவதில்லை.

ஒரு சிறிய நினைவூட்டலாய் : மார்க்கண்டேய முனிவரிடம் வஜ்ர என்னும் அரசன் இறைவனை வழிபடுவதற்காக சிற்பமொன்றை உருவாக்குவதற்கான விதிகளைக் கூறுமாறு கேட்கிறார். அதற்கு அவர் சிற்பம் கற்க ஓவியக்கலை பற்றிய அறிவு இன்றியமையாதது என்றும், ஓவியத்தைக் கற்க நடனக்கலை பற்றிய அறிவு இன்றியமையாதது என்றும், நடனத்தைக் கற்க இசைக்கலை பற்றிய அறிவு இன்றியமையாதது என்றும், இசைக் கலையை கற்க வாய்ப்பாட்டிசை பற்றிய அறிவு இன்றியமையாதது என்றும், வாய்ப்பாட்டிசைக் கலையே யாவற்றுக்கும் அடிப்படையானது என்றும் எடுத்துரைக்கிறார். இதிலிருந்து தெரிய வருவது கலைகள் ஒன்றோடொன்றுப் பின்னிப்பிணைந்தவை. கவிதையும் அதில் ஒரு சின்னஞ்சிறிய கூறே.

கவிதை எழுதப்படுவதற்கு முன்பு அதை எழுதிய கவிஞன் வேறு ஏதாவது (கவிஞனாக அல்லாமல்) நுண்கலை தொடர்பான விஷயங்களை ஆழ்ந்து படிக்க முனைந்திருக்கலாம். அதன் சார்பாக பல நூல்களை தேடித்தேடி வாசித்திருக்கலாம். சில வார்த்தைகளை கவிதைத்தருணம் என நினைத்து பயன்படுத்தியிருக்கலாம். சாதாரண வாசகனுக்கு அது பற்றிய தெளிவின்மையாலும், புரியாததினாலும் அக்கவிதையை புறந்தள்ளுவதை எவ்விதம் ஏற்பது?

காலத்தின் தேவை ஒன்றே ஒன்றுதான். அதில் கரைந்து போகாத அளவிற்கு ஒரு கவிதையை நிற்கச் செய்வது மட்டும் தான். இன்றைக்கும் சங்கப்பாடல்களிலிருந்து ஆயிரம் பாடல்களில் பல முதலிரு வரிகளை மேற்கோள் காட்ட எல்லோராலும் முடியும். காரணம் அது அதற்கான அழகியலை, அது பொதித்து வைத்திருக்கும் பொருளை நேரடியாக எங்குமே கூறாமல் உள் முகமாய் இயங்கும் தனித்த மொழி அமைப்பில் தான் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறது என்பதற்கு கைப்புண்ணும் உருப்பெருக்கியும் சொற்றொடர் அவசியமில்லை தானே?

பெரும்பான்மையான வாசக மனம் சொல்வது என்னவென்றால் நான் அமரமாட்டேன்.,அந்தக் கவிதையை என் மனதில் நீயாகவே வந்து அமரச் செய். அதனைவிட நான் என்ன தகுதி குறைந்தவனா என்பதே அது. பல நல்ல நுண்கவிதைகளுக்கு இப்படிப்பட்ட அவமானமே மிக அதிகம்.

ஆம் உனக்கு வாசிப்பு பயிற்சி இல்லை, மேலடுக்கிலேயே தங்கி விடுகிறாய், அதன் சாரத்தை உள்வாங்க மறுக்கிறாய் என்றெல்லாம் அவனை கேட்டுவிடவே கூடாது என்பதில் மிகுந்த ஜாக்கிரதையாய் இருக்கிறான். அப்படிக் கேட்டால் அவனது தன்மானத்தை, அவனது வாசிப்பு நிலையை கீழிறக்குவதாக அவனாகவே எண்ணிக் கொள்கிறான். எழுதுபவனது நிலம், அதன் பின்புலம், உளவியல் காரணிகள் எல்லாமும் சேர்ந்து வெளிப்படுத்தப்படும் கவிதை ஒன்று வாசகனது நிலத்திற்கு அந்நியமான மனோநிலையையே அளிக்கும். அனுபூதியை எப்படி அளிக்க இயலும் என்ற சாதாரண கேள்வியைக் கூட உள்வாங்க மறுப்பது எவ்விதத்தில் வாசகனை உயர்த்திவிட இயலும்?

கவிதையிலிருந்து வாசகன் ஏதோ ஓர் அனுபவத்தைப் பெற முயல்கிறான். சில வார்த்தைகள் அவனைப் புரட்டிப்போட, உறங்கவிடாமலிருக்க, மனனஞ் செய்ய, ஏக்கமுற, கண்ணீர் வரவழைக்க என ஏதாவதொன்றை வைத்திருப்பதைக் கூர்ந்து  நுண்வாசிப்பிலேயே கண்டடைகிறான். கவிதை என்பது தன்னைத் தானே நிறுவிக் கொள்வது.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு :

/என் கண்களில்

இன்று இல்லை

வாள் /

இது புதுக்கவிதை அல்ல.

குறுந்தொகையில் வெள்ளிவீதியாரின் வரிகள் இது.

‘கண்ணே நோக்கி நோக்கி வாள்

இழந்தனவே’

இங்கே வாள் என்பது கூர்மை, ஒளி என்பதற்கான அடையாளம். கண்கள் பார்த்து பார்த்து வாளை (கூர்மையை ) இழந்து என்பதே இதன் அமைவு… இது நவீன கவிதை என்பதை மீறி வேறொன்றை எப்படிச் சொல்லி சுட்டிவிட முடியும்.?

பழைய இலக்கியங்களில் குறியீட்டு மொழிகள் அதிகமாய் இருப்பதால் தான் மறுபடி மறுபடி மீள் வாசிப்புக்கு ஆளாகிறது. எடுத்துக்காட்டு குறள்.

பரிமேலழகர், தருமசேனர், மணக்குடவர், தாமத்தர், பரிதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், நச்சினார்ககினியர், மு.வரதராசனார், கலியாண சுந்தரனார், தண்டபாணி, உ.வே.சா, வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார், பாலூர் கண்ணப்ப முதலியார், சி.இலக்குவனார், வீ.முனிசாமி, நா.சுப்புரெட்டியார், புலவர்.மயிலைசிவமுத்து, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.உ.சி.சாமி சிதம்பரனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கி.வா.ஜெகந்நாதன், செகவீர பாண்டியன், பாரதிதாசனார், புலவர் குழந்தை, கா.சுப்பிரமணியப் பிள்ளை என எல்லோரும் தனித்தனியே உரை எழுதியது எதனால் என்றால் அக விரிப்பு…..ஒவ்வொரு முறையும் ஒன்றைப் படிக்கையில்  புதிது புதிதாய் மனம் ஒரு பரவச நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு திறப்பை  நோக்கி ஓடியதால்…ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தை மீட்டெடுத்தபடியே இருந்திருக்குமல்லவா?

எடுத்துக்காட்டு:

ஊழிற் பெருவளி யாவுள – 

ஊழ் பற்றிய எல்லா விதமான எண்ணங்களையும் எல்லா மதத்தவர்க்கும்  ஒவ்வொருவருக்கும்  தனித்தனியாய் ஒரு சித்திரம்  அளிக்கும்… இதை மிஞ்சி எதுவுமில்லை  என ஒரு கோணம், அதை மாற்ற முனைகையில் அதுவும்  ஊழில் தான் முடியும் என்பதும் எவ்வளவு பெரிய கலங்கடிக்கும் சித்திரம்??

 நவீனக்கவிதைகளில் முன்வைக்கப்படும் புரியாத்தன்மை, இருண்மை குணம், படிமம், உள்ளுறை என்பதெல்லாம் வாசகனை மேல்படிக்கு இட்டுச்செல்லும் சாதனம் எனக்கொண்டாலே பாதி தொந்தரவு கழிந்தது எனலாம். அறிதலின் விழைவு எங்கே சோம்பல்தனப்படுகிறதோ அங்கு கவிதையும் களைப்படைந்துவிடும். எதையும் திறந்துகாட்ட முற்படாது. இறுதிவரை எட்டாக்கனிதான் அது. அதன்பிறகு அதன்மேல் குற்றம் சுமத்த எத்தகுதியும் இன்றி வெறுங்கையோடு திரும்புதல் யார் தவறெனக் கொள்வது?

நாமே தானே பொறுப்பு…?

நிலத்தைப் பற்றி நிற்கும் வேர்கால்களின் தேவையை உணராது கவிதையின் உள்இயங்கு தன்மையில் மேற்கத்திய வடிவ மாதிரிகளின் அந்நியத்தன்மையோடு சமீபத்திய பல நவீனக்கவிதைகள் தொழிற்சாலையின் உற்பத்திப் பொருட்கள் போலச் செயப்படுகின்றன. மிக நீண்ட வரைகோடு தமிழ் உலகத்திற்கு உண்டு. நால்வகை நிலம், உச்ச காலம், தனிவழிபாடு, தொழிலென பல்வேறு கூறுகளை அடக்கியது தமிழ் நிலம். அயலகம் நகர்ந்த தமிழர்களுக்கும் பூர்வநிலத்தின் மேல் ஈரம் கசிந்த கண்களின் வழியே நினைவலைகள் பெருகியபடியேதான் இருக்கும். உறவுமுறைகளிலிருந்து, வாழ்வின் ஆதாரத்திற்கான கூறுகளை அவரவர் நிலங்களே தீர்மானிக்க வேண்டுமே அன்றி அந்நிய நிலமல்ல என்பதை மனதில் ஏற்றிவிட்டால் போதும் என்றிருக்கும் சூழல்தான் தற்போதைக்கு. தமிழ் கவிதைப் பாரம்பர்யம் மிகத் தொன்மையானதும், காலத்திற்கு காலம் வடிவாலும், அதன் உள்ளடக்கப் பொருளாலும் மாற்றம் பெற்றுக் கொண்டே வந்து தன்னை நிறுவிக் கொண்டதும் ஆகும்.

“பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடு ஓடாம் நீராகும் நீயிர் எவனென்ப – தோருங்கால் என்என்னை என்றாலும் யாமுதற்பேர் முதலாம் அன்ன பொழுது போதும்.” –நேமிநாதம் -36

‘பெயர்’ என்னும் சொல் ‘பேர்’ என்றும், ‘பெயர்த்து’ என்னும் சொல் ‘பார்த்து’என்றும், ‘ஓடு’ என்னும் சொல் “ஓடு” என்றும், ‘நீவிர்’ என்னும் சொல் ‘நீரின்’ என்றும், ‘எவன்’ என்னும் சொல் ‘என்’ என்றும், ‘என்னை ‘ என்றும், ‘பொழுது’ என்னும் சொல் ‘போது’ என்றும் திரியும்; ‘யா’ என்று தொடங்கும் சொல் ‘ஆ’ முதலாகவும் வரும் என்று நேமிநாதம் சொல்லின் பல்வடிவங்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.

அதன் உறுதித்தன்மையில் பல்வேறு மாற்றங்களின் நெகிழ்தன்மையில் தமிழ் நிலம் இருந்ததை எண்ணற்ற பாடல்களால் சுட்டலாம். ஆனால் அந்நியத் தன்மையினால் ஒரு மொழி மேலும் கூர்மையாகுமென்று எவ்வாறு உறுதியாக சொல்லி விடமுடியும்?

காலத்திற்கு எல்லாவற்றையும் செரிக்கும் அமிலத்தன்மை உண்டு. ஆனால் காவியத் தன்மையை ஏற்படுத்திக்கொள்ளும் கவிதைகள் நீர், நெருப்பு, சூழியல் காரணிகளால் அழிக்கப்பெற்றாலும் வாய்மொழியாகவே ஊர்ந்து மறுபடி வரிவடிவங்களை ஏற்றுக் கொள்ளும் தாமாகவே.

கவிதையின் பாடுபொருள் நுட்பத்தின் தீவிரத்தன்மையை கொண்டுவந்த நவீனக்கவிதைகள், கவிதைகள் வெகு சீக்கிரமாகவே உன்னிப்பாக கவனிக்கப்படும். அதற்கான முன்னெடுப்புகள் மிக அரிதாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கவிதையில் இயங்குநிலையின் மந்தத்தன்மை குறித்த பார்வையில் முக்கால்வாசி சதவீதம் வெறும் உயிரற்ற கூடாய் காட்சியளிப்பவைகள்தான்.

முன்னத்தி ஏர்கள் இவைகளைப்பற்றி பொதுவெளியிலும் அவர்களது நெருக்கமான நண்பர்களுக்கும் கூட அதைப் பகிர்ந்தளிக்கத் தயாராக இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்று. மாற்றம் மட்டுமே நிலையானதாகையால் புதிய வாசகர்கள் தம் பகுப்பின் திறனறிந்து அக்கதவுகளை பெருஞ்சப்தத்துடன் மோதித் திறக்க முன்வருவார்கள் என்பது எல்லோரையும் போல் எனது ஆசையும் கூட.

சொற்கள் தரும் அனுபவவெளி மிகப் பரந்தது. கவிஞனுக்கும், வாசகனுக்குமான உறவு பொருள்கொள்ளும் அனுபவத்தில் விரிந்ததாக இருப்பின் புரிந்துகொள்ளும் சிக்கல்கள் தாமாக விலகிவிடும். புரிதலும் அதனோடு கூடி இயைந்த எல்லாவற்றினுக்குமான முழுமையான தரிசனம் என்பது அகண்ட கவிதை முகத்தின்  கூட்டுச்சொற்களால் கூடி வந்த சிலை தியானமாகிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமையாக வாசகனின் நிலை எப்படி இயங்க வேண்டுமென உணர்த்தியுள்ளீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close