கட்டுரைகள்
Trending

புலம் பெயர் தமிழ் எழுத்துக்கள்

காளிப்ரஸாத்

சிங்கப்பூர் மலேசிய மலையக இலக்கியம் குறித்து வாசகசாலை நிகழ்வில் பேசியதன் வரி வடிவம்.

வழக்கம் போல பிரமிப்பூட்டும் மற்றொரு நிகழ்வை வாசகசாலை நடத்துகிறது. இதற்கான ஊக்கம் கொண்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை. கார்த்தி மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். தமிழர்களின் நிலப்பகுதியாக விளங்கும் இன்றைய தமிழகமும் ஈழமும் விட்டு, மக்கள் கடந்த  நூறு ஆண்டுகளாக புலம் பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வசதிக்காக சிலர், வாழ்க்கைக்காக சிலர்,  உயிரைக் காத்துக்கொள்ள சிலர் என்று சென்று கொண்டிருப்பவர்களைப் பார்த்து நாமும் அனுப்பிவைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். புலம் பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள் என்று நாம் இன்று உரையாடும் ஒன்று அவர்கள் வாழ்ந்து அனுபவித்த ஒன்று.

ப.சிங்காரம்
ப.சிங்காரம்

ஒரு சமூகம் எப்பொழுது எழுத்தைக் கைகொள்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் ஏரியில் படகில் அமர்ந்து நிலவைக்கண்டவாறு மெல்லிய விளக்கொளியில் அமர்கையில் கவிதை எழுத அவருக்கு மனநிலை வாய்ப்பதாக படித்திருக்கிறேன். அங்கனம்,  எப்பொழுது மனிதன் சிக்கலின்றி அமைதியான வாழ்க்கையை வாழ்கிறானோ அப்பொழுதுதான் அழகியல் இலக்கியம் பிறக்கிறது என்று கம்பராமாயண காலத்தை உதாரணமாக வைத்தும் சொல்லப்படுகிறது. அதேபோல எப்பொழுது ஒரு மனிதன் உயிரைக் கையில் பிடித்தபடி அலைகிறானோ  அப்பொழுதும் அவனுள்  இலக்கியம் ஊற்றெடுக்கிறது என்றும் சொல்லலாம். பிற்காலத்துக்கு பிறகான ஈழத்து நவீன எழுத்துக்கள் அவ்வண்ணம் வந்தவைதான்.

இவை இரண்டிற்கும் நடுவே ஒரு காலம் உண்டு. அது பிழைப்புத் தேடி தமிழர்கள் அயல்நாடு சென்ற காலம். பஞ்சம் என்பது அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு வன்மையான ஒன்றாக இருந்திருக்கிறது என்று மிகப்பிற்காலத்தில்தான் அறிந்தேன். அத்தகைய பஞ்சங்கள் இந்தியாவில் மாபெரும் அழிவை உண்டாக்கின. மக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பஞ்சம் பிழைக்க துரத்தியடித்தன. என் முன்னோர்கள் தாது வருடப் பஞ்சத்தில் கிளம்பி நான் பிறந்த ஊருக்கு வந்ததாக சொல்வார்கள்.  அத்தகைய பஞ்சங்கள் மிகவும் செயற்கையாக உருவாக்கப்ப்பட்டவை என்று இப்பொழுது ஒரு வாதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பஞ்சங்கள்  நிகழ்ந்த காலங்களில்தான் மலையகங்களுக்குத் தமிழர்கள்  புலம் பெயர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தோட்டத்தொழிலாளர்களாக, ஆயிரத்து தொள்ளாயிரம் தொட்டு அவ்வண்ணம் தமிழர்கள் இலங்கைக்குச் சென்றிருக்கின்றனர். மலேஷியா சிங்கப்பூர் பர்மா, வியட்நாம்உள்ளிட்டதென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். தென்னமெரிக்கா, உகாண்டா, தான்சானியா தவிர எந்த கண்டத்திற்குள் அடைப்பது எனக்குழப்பும் நியூஸிலாந்து, பிஜி தீவு வரை சென்றிருக்கிறார்கள்.

சித்துராஜ் பொன்ராஜ்
சித்துராஜ் பொன்ராஜ்

இன்றைய என்னுடையை உரை இவ்வாறு தனக்கு அங்கு ஒரு புதுவாழ்வு கிடைக்காதா என ஏங்கிச் சென்ற மக்களின் படைப்புகள் குறித்துதான். இந்த உரையை வாசகசாலையில் நிகழ்த்துவதில் ஒரு பொருத்தம் இருக்கிறது. என் சொந்தஊர் மன்னார்குடி. இருபதாண்டுகளாக சென்னை. நான் இந்தப்பக்கம் திருநெல்வேலி அந்தப்பக்கம் மும்பை என ஓரிருநாட்கள் பயனித்திருக்கிறேனே தவிர வேறு எங்கும் பெரிதாக பயணித்தவன் இல்லை. இன்றைய இந்த உரையில் வரும் மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்றவன் இல்லை. என்னுடைய இந்த மொத்த உரையுமே நான் வாசித்த புத்தங்களின் வழியாக நான் பெற்ற நிகர் வாழ்வு அனுபவங்களின் வழியான புரிதல்கள் தான். வாசக அனுபவத்தை மட்டும் கொண்டு வாசகசாலையில் பேசுவதில் ஒரு பொருத்தம் இருக்கிறதுதானே

அங்கிருந்து எழுதும் எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்தும், இங்கிருந்து அங்கு பயணம் மேற்கொண்ட சுந்தரராமசாமி, திலீப்குமார், ஜெயமோகன், கு.அழகிரிசாமி,  சுப்ரமணியன் ரமேஷ் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகளைக் கொண்டும் நான் இப்புரிதல்களை அடைந்திருக்கிறேன். குறிப்பாக தமிழவன், சுப்ரமணியம் ரமேஷ், ரெ.கார்த்திகேசு ஆகியோரிடையே 2010 களில் திண்ணை இணைய இதழில் நிகழ்ந்த கருத்துப்பரிமாற்றங்களும் அதைத் தொடர்ந்த உரையாடல்களும் பல முக்கியமான புரிதல்களை அளித்தன.  அம்மக்களையும், அந்த படைப்புகளைப் படைத்த புலம் பெயர்ந்த எழுத்தாளர்களையும், இங்கிருந்து அங்கு சென்று இலக்கியக் கூட்டங்களை  நடத்தி திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிற தமிழக எழுத்தாளர்களையும் இக்கணம் வணங்குகிறேன்.

மா.நவீன்
மா.நவீன்

தமிழகத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு தோட்ட வேலைக்காக சென்றவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் அடிட்தட்டு மக்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு கனவினூடே இங்கிருந்து சென்றவர்கள். அங்கு போனால் தானும் பிழைத்து இங்கிருக்கும் தன் குடும்பமும் பிழைக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நடந்ததோ வேறாக இருக்கிறது. அந்த முரண்பாட்டை உணர்ந்து சுதாரித்து முன்னெழுவதற்குள் இரண்டாம் உலக்ப்போர் என்னும் அரசியல் அவர்களை இன்னும் ஆட்டுவிக்கிறது. பிரிட்டன், ஜப்பான் என்று உலக நாடுகள் அவர்களை வைத்து விளையாடுகின்றன. இங்கிருந்து அந்நாட்டிற்குச் சென்றும், தனக்குள் இயல்பாக எழும் உணர்ச்சியோடும் தன் பிறந்த நாட்டின் மீது கொண்ட பாசத்திடனும் பலர் அதில் பங்கேற்று இறக்கின்றனர். அதன் பின்னர் மீண்டும் சிலர் அடுத்த கட்டமாக இங்கிருந்து தோட்ட வேலைக்குச் செல்கின்றனர்.  அவ்வாறு செல்லும் காட்சி ஒன்று சீ.முத்துச்சாமியின் நாவலில் உண்டு. தர்மபுரியிலிருந்து நாகப்பட்டிணம் சென்று அங்கிருந்து கப்பலில் பிணாங்கு செல்லும் மாரியிடமிருந்து துவங்குகிறது நாவல். காஞ்ச பூமியில இருந்து என்ன சுகத்தைக் கண்ட? என்னோட மலேசியா வந்துரு.. அது பசுமையான பூமி.. சொர்க்கம்பாங்களே அது அந்த ஊருதான் என்று சொல்லும் கங்காணியின் வார்த்தையில் மயங்கி கொத்தடிமையாகப் போகப்போகிறோம் என்று அறியாமல் பயணிக்கிறார்கள். கப்பலிலேயே சூழ்நிலை பிடிபட்டுவிடுகிறது. காலரா நோயில் இறந்தவர்களை அப்படியே கடலில் தூக்கி வீசுகிறார்கள். விரைவில் இறக்கப்போகிறவர்களையும் தான். உயிருடனே இருப்பவர்களை கடலில் வீசுவதைக் கண்டு அதிர்கிறார்கள். மலேயா மண்ணைத் தொட்டதும் கங்காணியின் ரூபமே மாறிவிடுகிறது. ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காட்டை பார்த்து பிரமிப்பும் மறுபுறம் தன் விதியை எண்ணி நொந்தபடியும் வாழத் துவங்குகிறார்கள். அவ்வாறு மனமுடைந்து செல்லும் அவர்களுக்கு அங்கு தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொண்டாலே போதும் என்று ஆகிவிடுகிறது.

அவர்களுக்கு  அங்கேயே குடும்பமும் அமைகிறது. நாளாக நாளாக பலர் இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை விட்டுவிட்டு அங்கேயே வாழ்பவர்களாக ஆகிறார்கள். சுருக்கமாக சொன்னால் புலம் பெயர்ந்து தோட்ட வேலைக்குச் சென்ற முதல் தலைமுறைக்கு கிடைத்தது கடுமையான வேலைப்பளு மட்டுந்தான். அவர்கள் ஒரு அடிமை வாழ்விற்கே தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கை மலேசிய மண்ணுடனும் தங்களின் உணர்வு வாழ்க்கை இந்திய மண்ணுடனுமாக என்று செல்கிறது அவர்களின் வாழ்வு.  இறுதியில் மலேசியாவிலேயே அமைகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வை அப்படியே தன் தலைமுறைக்குக் கடத்தியபடி உயிர் துறக்கிறார்கள்.

இரண்டாம் தலைமுறை மக்கள் அவ்வேலையை அவ்வண்ணமே தொடர்ந்தாலும் இன்னும் அரசியல் சிக்கல்கள் முடிவிற்கு வந்தபாடில்லை. அவர்களின் நாடு விடுதலை பெறுகிறது. அவர்கள் முன் இரு கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. ஒன்று தாயகம் திரும்பலாம் அல்லது தங்களின் பூமியிலேயே குடியுரிமை பெற்று வாழலாம். இவ்விரண்டில், ஒன்றைத் தேர்ந்து  அதைப் பின்பற்றி சென்றவர்கள் உண்டு. அதேபோல, தான் இந்தியா செல்ல விரும்புவதாகக் கூறி, ஆனால் செல்லாமல் அங்கேயே தங்கியவர்களும் உண்டு. அதற்கு பற்பல காரணங்கள் இருக்கும். அவ்வாறு தங்கியவர்களால் ஒருபோதும் அம்மண்ணின் மைந்தர்களாகவும் இருக்க முடியாது.. தோட்டத்தை விட்டு வெளியே செல்லவும் இயலாது. அங்கீகாரம் பெற்றவர்களே அங்கு இரண்டாம் நிலையில் தான் இருப்பார்கள் அத்தகைய நிலையில் அங்கீகாரம் இல்லாத இம்மக்களும் வேறு இடங்களுக்கு நகர முடியாது. இதைத்தொடர்ந்து 70 களில் உருவெடுத்த பூமிபுத்ரா அதாவது மன்ணின் மைந்தர் என்னும் பிரச்சனையும் சீனர்கள் தமிழர்கள் மலேய மக்களிடையே ஒரு குழப்பத்தை உருவாக்குகிறது


அதற்கும் அடுத்த மூன்றாம் தலைமுறை அவர்களிடமிருந்து இன்னும் அந்நியப்படுகிறார்கள். கிட்டத்தட்ட  இலங்கையில் தமிழர்களுக்கு கிடைத்தது போல, இரண்டாம் இடம் தான் இங்கும் கிடைக்கிறது. அவர்கள் கல்லூரிப் படிப்பிற்கே இந்தியாவை நம்பத் துவங்குகிறார்கள். படித்தாலும் அதற்கான வேலை இல்லை என்பது ஒரு பிரச்சனை. 2016ல் வந்த கபாலி திரைப்படத்தில்  இந்தப் பிரச்சனை ஓரளவு நமக்கு அறிமுகமானது.

இதை சுருக்கமாக கூறினால்,

முதல் தலைமுறை மக்களுக்கு அன்றாடமே பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்தது

இரண்டாம் தலைமுறைக்கு அடையாளமே பிரச்சனையாக இருந்தது

மூன்றாம் தலைமுறைக்குத் தான் அந்நியப்படுகிறோம் என்பது பிரச்சனையாக இருக்கிறது

இந்த இடத்திலிருந்து தான் மலேசிய இலக்கியத்தை அணுக வேண்டியிருக்கிறது. நமக்கு புதுமைப்பித்தன் சாபவிமோசனம் எழுதி ராஜாஜியை கோபப்பட வைத்திருந்த காலத்தில் இங்கு வாழ்க்கையைத் தேடி மக்கள் சென்று இறங்கியிருக்கிறார்கள். அவர்களின் அடுத்த தலைமுறை தான் அவர்களுக்கான எழுத்துக்களை எழுதத் துவங்குகிறது

அவர்களில்,  அ.ரெங்கசாமி, ஆர்.ஷண்முகம்,  சீ.முத்துசாமி,  கோ.புண்ணியவான், ரெ. கார்த்திகேசு, கோ. முனியாண்டி, மஹாத்மன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்துக்களை எழுதியவர்கள். புயலிலே ஒரு தோணி எழுதியபோது ப. சிங்காரம் பினாங்கில் இருந்திருக்கிறார். அவர் இங்கிருந்து அங்கு சென்றவர் என்றாலும், அதன்பின் அவர் இங்கே வந்திருந்தாலும், அவரையும் புலம்பெயர் இலக்கியத்தில் வைக்க இடம் உண்டு. இவர்களில் ரெ.கார்த்திகேசு அவர்கள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். இன்றைக்கு கைபேசிகளில் நாம் பயன்படுத்தும் செல்லினம் மென்பொருளுக்கு பல ஆலோசனைகள் வழங்கியவர்.

மேலும் இவர்களில் சீ. முத்துசாமி அவர்கள் 2017ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதினைப் பெற்றவர். மலேசிய இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளராக கருதப்படுகிறார்.  அவரது துவக்க நாவலான மண்புழுக்கள் துவங்கி, இருளில் அலையும் குரல்கள், இரைகள், எனத் தொடர்ந்து அம்மக்களின் வாழ்க்கை குறித்த நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது சமீபத்திய நாவல் ‘மலைக்காடு’ கிழக்கு பதிப்பத்தின் வெளியீடாக இவ்வாண்டு வெளிவந்துள்ளது. அவர் தன் மக்களின் கதையை சமரசமின்றி அப்பட்டமாக எழுதுகிறார். பெரும்பாலும் உள்ளதைச் சொல்கிறார். அவருக்கு, தோட்ட வாழ்க்கை வாழும் கதை மாந்தர்கள் அனைவருமே அவரின் குடும்பத்தினர் போலத் தான். ஒரு கதையை அக்குடும்பத்தில் வாழ்ந்து முடித்து சலித்த பாட்டனார் போல சொல்வார். அதில் நீ செய்வது சரியா என்ற ஆதங்கம் இருக்கும். ஒரு  சீற்றம் இருக்கும். சில இடங்களில் கையறு நிலையில் இருக்கும் தலைவனாக, தலைவியாக அல்லது ஒன்றும் அறியாத பாலகர்களாக சொல்வார். அவற்றில் சில பூடகங்களே ஏஞ்சியிருக்கும்.  இது தவிர வெகு சில கதைகளில் மட்டும்  கூரிய அங்கதமும் புரட்சிப் போராட்டங்களும் வெளிப்படுகின்றன. இதில் கையறு நிலை என்ற இடத்திலிருந்தே பல கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக அவர் கதைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அவை பிடிபட்டுவிடும்.  இரைகள், இருளில் அலையும் குரல்கள், மண்புழுக்கள், விளிம்பு, அகதிகள், பாலைவனத்தில் விதைகள் முளைப்பதில்லை –  என தலைப்புகளே அந்த உள்ளடக்கத்தின் துயரம் அல்லது ஆங்காரத்தை சொல்லிவிடுகின்றன.

சிவா.கிருஷ்ணமூர்த்தி
சிவா.கிருஷ்ணமூர்த்தி

இத்தகைய எழுத்தாளர்களே முதலில் இலக்கிய சிந்தனை என்னும் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழிலக்கியத்தையும் கொண்டு சேர்த்தவர்கள். தமிழ் எழுத்தாளர்கள் மீது பெரும் பற்று கொண்டவர்கள். சீ.முத்துசாமி அவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சிவகாந்தன், ஜீவகாந்தன், ராகநிலவன் என ஜெயகாந்தன், வண்ணநிலவன் ஆகிய தமிழ் எழுத்தாளர்கள் சாயல் கொண்டு பெயர் சூட்டியிருப்பது தமிழக எழுத்தாளர்கள் மீது அம்மக்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் மரியாதைக்குமான ஒரு சோற்றுப் பதம்.

தற்காலத்தில் , சு.யுவராஜன், பாலமுருகன் ஆகியோரும் மலேசிய இலக்கியத்தில் முக்கியமான ஆளுமைகளாக இருக்கிறார்கள். வல்லினம் இதழை நடத்தும் எழுத்தாளர் நவீன் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் இலக்கிய செயல்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார்.அவரது போயாக் சிறுகதைத் தொகுதி மிகவும் முக்கியமான ஒன்று . மூத்த மலேசிய எழுத்துகள் பெரும்பாலும்  கையறு நிலை என்ற இடத்திலிருந்தே பல கதைகளை எழுதியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அடுத்த தலைமுறையினர் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

இங்கிருந்து பிரிந்து நாம் சிங்கப்பூருக்கு வருவோம்

முதல் தலைமுறை எழுத்தாளர்களாக பரணன், முல்லைவானன், அ.நா.மொய்தீன், ஆகியோரைப் பற்றி அங்கு சென்று வந்த எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தொண்ணூறுகளில் வந்த நா. கோவிந்தசாமி என்னும் எழுத்தாளரையே அவர் இலக்கியத்தை சிங்கப்பூருக்கு கொண்டு வந்த ஆரம்ப படைப்பாளியாக சொல்கிறார். சுந்தரராமசாமியும் அதையே சொல்லியிருக்கிறார். அதற்கிடையே நிகழ்ந்ததைப் பார்ப்போம்

1965ல் மலேசியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடான பிறகு, அதன் வளர்ச்சி வேறுவிதமாக இருக்கிறது. அதை இன்று நான்கு ஆசியப்புலிகளில் ஒன்று என்று சொல்வார்கள். சிங்கப்பூரை வளமாக்கிய மக்கள் தலைவரான லீக்வான்யூ அவர்களுக்கு சிங்கப்பூரை முன்னேற்றியதற்கு உறுதுணையாக இருந்த் தமிழர்கள் மீது கரிசனமும் உண்டு. அதுவரை கிலிங்கியான் என்றூ அழைக்கப்பட்ட தமிழர்களுக்கு அங்கீகாரமும் அங்கு கிடைத்தது. தமிழ் அங்கு ஆட்சி மொழியாக ஆனதும் அதற்கான பல அங்கீகாரமும் அரசிடமிருந்தே கிடைத்தன.

ஆனால், அதுவே இலக்கியத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டது என்று சொல்லவியலுமா என்று தெரியவில்லை. சிங்கை இலக்கிய முன்னோடியாக சொல்லப்படுகிற  நா. கோவிந்தசாமி இலக்கிய அமைப்புகளை முன்னெடுத்திருக்கிறார் ஆனாலும் அவரது படைப்புகள் நேர்மையானவை என்றாலும்  நம் ஜெயகாந்தனின் படைப்புகளின் பாதிப்பால் விளைந்தவையாகக் கருதப்படுகின்றன. அதற்கான காரணங்களாக நகரத்தின் அசுரத்தனமான வளர்ச்சியையும் அவர்களின் தவிர்க்கவே இயலாத வேலைப்பளுவையும் காரணமாக சொன்னாலும், மற்றொரு காரணமும் உண்டு என்று சொல்வார்கள். அது மொழி வளர்ச்சிக்காக அரசாங்கம் புத்தகங்களை அச்சிட ஊக்குவிக்க, அதற்காக வணிகப் புத்தகங்களின் தரத்திலேயே அங்கு புத்தகங்கள் நிறைந்து விட்டதாகவும் சொல்வர். மேலும் சில கதைகள் அங்கிருந்து இங்கிருக்கும் மக்களுக்காக எழுதப்படுபவை. நமக்கிருக்கும் பெண்ணியம் சார்ந்த பிரச்னைகளை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத அந்தச் சமூகத்தில் அதை எழுதுவதால் பெரிய பயன் இல்லை என்றும் தோன்றுகிறது.

ஒப்பீட்டளவில் மலேசிய இலக்கிய உலகம் முன்னிலை வகிப்பதற்கும் பொருளாதாரத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ன? உண்மையில் அப்படியேதும் கிடையாது. இலக்கியம் படைக்க வேண்டுமெனில் ஒருவன் தற்கொலை முயற்சி செய்திருக்கத்தான் வேண்டுமா என்று எழுத்தாளர் சாம்ராஜ் ஒருமுறை பகடியாகக் கேட்டார். அதுதான் நினைவிற்கு வருகிறது.

மூன்றாவதாக, மற்றொரு மலையகம் பற்றி, தெளிவத்தை ஜோசப் எழுதியிருகிறார்.  இங்கிருந்து மற்ற தேசங்களுக்குச் சென்றது போலவே இலங்கைக்கும் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். அங்கு ஏற்கனவே தமிழர்கள் இருக்கிறார்கள் என்றாலும் தோட்ட வேலைக்கு இங்கிருந்தே செல்கின்றனர். தனி வீடுடன் கூடய ஆசிரியர் வேலை என்று வேலைக்கு விண்ணப்பித்துச் சென்ற அவரது தந்தையார் தோட்டத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். வீடென்று அவர்கள் அளித்தது ஒரு லாயம்.  வாத்தியார் வீட்டுப் பிள்ளைக்காக வளர்ந்த இவர்,  மலையக எழுத்தாளராக விளங்கியவர். 2012 ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெற்றிருக்கிறார். மலேய எழுத்துக்களில் சீ.முத்துசாமி போன்றே கையறு நிலைகளை எழுதியவர். அவரது மீன்கள் சிறுகதை தொகுப்பில் ஒரு சிறுகதையைக் குறிப்பிட வேண்டும் ( மீன்கள் )

” தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான்.

மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப் போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்துகொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.

வெலவெலத்துப் போய் குனிந்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்து விட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத் தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை விழுங்கியபடி விருட்டென்று எழுந்தான்.

எழுந்த பிறகு மறுபடியும் குனிந்து தனது போர்வையை எடுப்பதன் மூலம் இக்கட்டான அந்த இடத்தில் இன்னொரு வினாடி இருக்க நேரிடுமே என்ற உழைவில்,கம்பளியை எடுத்துக் கொண்டே எழுந்தவன், அதை இழுத்துத் தோளில் எறிந்தவாறு வெளியே நடந்து இஸ்தோப்பின் இருட்டில் அமர்ந்துகொண்டான்.

சீ.முத்துசாமி
சீ.முத்துசாமி

தூண்தூணாய் நிற்கும் மரங்களிடையே தூரத்தில் தெரியும் மலைச்சரிவுகள் கருப்புவண்ணத்தால் தீட்டி மாட்டிய ஓவியங்கள் போல் தெரிகிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கும்மென்று கிடந்த கறுப்பையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தவன் இருட்டிய உலகின் அத்தனை அந்தகாரத்தையும் விட தன் மனதின் அந்தகாரம் அதிகமானதாக தனக்கே தெரிவதை உணர்ந்து அதன் கனம் தாளாது தனிமையாக அமர்ந்திருக்கும் அந்த நேரத்திலும் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.

ஆனால் மனதின் இருட்கனத்தால் தானாகவே கவிழ்ந்துவிடும் தலையை எந்த அணையைக் கொண்டு நிமிர்த்தி வைப்பது?”

என்று துவங்கும் இந்தக் கதை அது அவன் மனைவி என எண்ணி மகளைத் தொட்டுவிட்டான் என்று வர்ணிக்கும் இடத்தில் சில்லிட வைக்கிறது.   இவரின் நடை துள்ளல்  நிறைந்தது. நாமிருக்கும் நாடு, மீன்கள்  தொகுப்புத் தவிர பல ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஈழப்போரில் மலையகத்தை தமிழ் தேசியத்துடன் இணைத்ததில் எழுத்தாளர்களின் பங்கும் மிகுதியாக இருக்கிறது.

இந்த உரையில் நான் குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் ப. சிங்காரம், தெளிவத்தை ஜோசப் மற்றும் சீ.முத்துசாமி ஆகியவர்கள், தாங்கள் எந்த வாழ்க்கையை எண்ணிச் சென்றோம் அங்கு என்ன பெற்றோம் என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மூவரையும் வாசித்து விட்டுத் தான் நாம் மலையகத் தமிழர்களின் ஒட்டுமொத்த இலக்கிய உலகை அறிய முற்படவேண்டும் என்றே நான் கருதுகிறேன். இதுவே அடிப்பதைப் புரிதலைக் கொடுக்கும்.

ஆகவே ஒட்டு மொத்தமாக, இந்த புலம்பெயர் இலக்கியத்தைக் அணுகும்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை சில உள்ளன. இவை இது சார்ந்த விவாதங்களின் வழியே நான் அடைந்த புரிதல்கள்.

1) நமது இலக்கிய உலகம் வேறு; அவர்களின் இலக்கிய உலகம் வேறு. இன்னும் சொன்னால் நமது பிரச்சனைகள் வேறு அவர்களின் பிரச்சனைகள் வேறு..

2)  நமக்கிருக்கும் பெண்ணியம்,  சாதிப் பிரச்ச்னைகளை வைத்து அணுகுகையில் நாம் கவனம் சிதற வாய்ப்பு இருக்கிறது

3) நமக்கு 2000 ஆண்டு கால பழமையான இலக்கியம் உண்டு ஆனால், அவர்களுக்கு 40 ஆண்டு கால இலக்கியம் தான் இருக்கிறது. ஆகவே கோட்பாடு அழகியல் ரீதியிலான நமது உச்சங்களை எதிர் பார்த்தால் அம்மக்களையோ மண்ணையோ புரிந்து கொள்ளத் தவறிப்போவோம்

அ.ரெங்கசாமி
அ.ரெங்கசாமி

இவர்கள் தவிர குறிப்பிடத்தக்க கதைகளாக இங்கிருந்து தகவல் தொழில்நுட்ப வேலைக்காகவும் மேற்படிப்பிற்காகவும் சென்றவர்கள் படைப்புகளும் உள்ளன. இரண்டாயிரத்திற்குப் பிறகு அங்கு சென்று வாழத்துவங்குபவர்கள். புலம் பெயர்ந்தாலும் மனம் இங்கேயே இருக்கும் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் எங்கும் விதிவிலக்கு இல்லை தானே.. அவர்களில்,  குறிப்பாக  சிவாகிருஷ்ணமூர்த்தியின் ‘வெளிச்சமும் வெயிலும்’ சிறுகதை தொகுப்பு நமக்கு லண்டன் மக்களின் வாழ்வை அறிமுகப்படுத்துகிறது, இதனாலேயே மற்ற நாஸ்டால்ஜியா படைப்புகளை விடவும் தனித்து நிற்கிறது. இந்தத் தொகுப்பின் நட்சத்திரக் கதையான ‘மறவோம்’ சிறுகதை, உலகயுத்தங்கள் நிகழ்கையில் போர்க்களத்தில் நிகழ்ந்த கவிதைகளை சொல்லும் கதையாக தோன்றி, பின் அதில் இளமைந்தர்கள் பலியானதும், அதில் உள்ள இயலாமைகளும் கவிதையினூடாகவே விரிந்து மறவோம் என்று கவித்துவமாகவே முடிகின்ற ஒரு சிறுகதை. போர் என்பது எவ்வண்ணம் மகத்தான ஒன்றாக மக்கள் முன் நம்ப வைக்கப்படுகிறது மற்றும் அதை நினைவுச் சின்னங்கள் மூலம் மக்கள் இன்னும் மகத்தானதாக எப்படியெல்லாம் மாற்றுகிறார்கள்  என்றும் அது உரைக்கிறது. அனைத்திற்கும் மேலாக போரின் அபத்தத்தையும் சுட்டுகிறது. அவரது கதைகளை ஸ்குரில் துவங்கி யாவரும் கேளீர் வழியாக, வெளிச்சமும் வெயிலும், what a wonderful world மறவோம் என்று முடிக்கையில் அவரது அகப்பயணம் அதில் துலங்கி வருகிறது. அதில் ஒரு மாற்றம் கண்முன் உள்ளது. உதாரணமாக யாவரும் கேளீரில் அவர் இந்தியர்களின் உள்ளத்தில் உள்ள சாதீய பாவத்தை கடக்கையில், வெளிச்சமும் வெயிலும் கதையில் வெள்ளையர்களுக்குள்ளான ஒரு நுட்பமான இதே சாதியத்திற்கிணையான மனநிலையைக் காண்கிறார். what a wonderful world கதையை ஒரு பகடிக் கதையாக வைத்தாலும் அது புலம் பெயர்ந்த மக்களுக்கும் அங்கே பிறந்து வளர்ந்த சிறார்களுக்குமான மனநிலையையும் காட்டுகிறது. அவ்வகையில் அதை மறவோம் க்கு இணையாகவே வைக்கலாம். ஆனால் இன்றைக்கு தகவல் தொழில்நுட்பமும் போக்குவரத்தும் மிகுதியாகி விட்டிருக்கிற இந்தக் காலத்தின் எழுத்துக்களை நாம் இதுவரை உரையாடிய  மலேய சிங்கை மலையக புலம் பெயர் எழுத்துக்கள் என்ற வரிசையில் வைக்க மனம் ஒப்புவதில்லை. ஒரு இரட்டைநிலை இதில் இருக்கிறது.

புலம் பெயர் மலையக மக்களின் வாழ்வு பற்றிக் குறிப்பிடும் பொழுது, இதில் ஒரு புனைவைப் பற்றிக் கூற வேண்டியுள்ளது.  எழுத்தாளர் இரா.முருகன் இது போன்று ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு கரும்புத் தோட்ட வேலைக்கு இட்டுச் செல்லப்பட்ட கதாபாத்திரத்தினைப் பற்றித் தன் விஸ்வரூபம் நாவலில் எழுதியிருப்பார். அது அதன் தொடர்ச்சியான அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே வரை தொடரும். அது ஒரு புனைவு என்றாலும்,  அம்மக்கள் அந்தப் பகுதி தொல் குடியினருடன் கலந்து தனக்கான அடையாளத்தையும் துறந்திருப்பார்கள்.  அதுதானே யதார்த்தம். இன்று மலேயா சிங்கை இலங்கை மலையகம் என்று சென்றவர்கள் தவிர மற்ற நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் புலம் பெயர்ந்தவர்கள் என்னவானார்கள் என்ற கேள்வி எழுகிறது. எழுத்தைக் கைகொண்ட சமூகம் இன்றும் இம்மூன்று நாடுகளில் தனித்து நிற்கிறது. இது இன்று பல நாடுகளுக்குச் செல்லும் நம் தலைமுறைகளுக்கான ஒரு எச்சரிக்கை. எழுத்தை மொழியை கைவிடாதீர்கள் என்று உரக்கச் சொல்லி சாட்சியாக நிற்கிறது இது.

அன்று நம் முன்னோர்கள் கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட போது, துன்புறுத்தப்பட்ட போது நம் தமிழ்க் கவிஞன் அவர்களுக்காய்ப் பாடினான்.

கரும்புத் தோட்டத்திலே அவர் கைகளும் கால்களும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றார். செக்கு மாடுகள் போல் உழைத் தேங்குகின்றார். கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமஒயிலே அந்தப் பஞ்சை மகளீரெலாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து ஒரு தஞ்சமும் இல்லாதே..சாகும் வழக்கத்தை இங்கு மிஞ்சவும் விடலாமா

தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப்

என்று பாடுகிறான் பாரதி…

அவன் பாடிய அம்மக்கள் என்னவானாரோ!! ஆனால், அவ்வாறு மலேசியா சென்ற மக்கள்  எதோ ஒரு வகையில் தன் மொழி மீதான பற்றினை விடாமல் தொடர்ந்து கொண்டு இன்றும் அதில் தன் வாழ்வைப் பதிவு செய்து தன் தலைமுறைக்கும் அதைக் கடத்த முயன்று கொண்டிருக்கிறார்கள். தமிழிலக்கியம் இனி அங்கும் கிளை பரப்பிப் படர்ந்து செழிக்கும்.. அந்தப் பாணர்களைப் போற்றுவோம்..வணங்குவோம்!!!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button