சிறுகதைகள்
Trending

பூஜ்ஜியம் செய்தவன்

சித்துராஜ் பொன்ராஜ்

மால்வண்ணன் பூஜ்ஜியம் என்ற எண்ணைக் குறிப்பிடும் எழுத்து வடிவத்தை முன்முதலாகக் கண்டுபிடித்த போது அவனோடு ராகுலனும், பரிதியும் இருந்தார்கள். பின் காலை நேரம். மூவரும் சைலேந்திரரின் பாடசாலைக்கு அருகிலிருந்த சிறு வனப் பகுதியில் மணல் மூடிக் கிடந்த திட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். சுற்றியும் வாசனை மிகுந்த காட்டு டுரியான் மரங்கள். கோடை காலம். டுரியான் மரங்களின் அடர்ந்த இலை பின்னல்களை மீறியும் மணல் திட்டு மீது தங்க நிறமாக வெயில். மணல் திட்டு ஒருக்களித்துப் படுத்திருக்கும் உயிருள்ள உடலைப் போன்று உஷ்ணமாக இருந்தது.

மால்வண்ணன் கீழே கிடந்த குச்சிகளில் ஒன்றைக் கையிலெடுத்துக் குனிந்தபடியே மணல் மீது எழுதினான். கறும் பழுப்பு நிறமான உடம்பு. இடுப்பிலிருந்து முழங்கால் வரை கட்டியிருந்த சாந்து நிற சாரோங் என்ற சிறு வேட்டியை தொடைகளுக்கு இடையே திணித்திருந்தான். மணல்மீது எழுதக் குனிந்ததில் முதுகுத் தண்டுக்கு இரு புறமும் உள்ள தசைகள் மினுமினுக்கும் பாளங்களாய் புடைத்து நின்றன.

குச்சியின் முனையில் மணல் மீது வெறுமே ஒரு சதுரம் வரையப்பட்டிருந்தது.

“இது என்ன?” என்று பரிதி கேட்டான்.

“இதுதான் பூஜ்ஜியம்” என்று மால்வண்ணன் சொன்னான்.

“பூஜ்ஜியம் என்றால்?”

“முன்னால் பேசியிருக்கிறோமே. எதுவும் இல்லாதது. எண்களுக்கு முன்னால் இருப்பது. அல்லது எண்கள் முடிந்து போகும் எல்லைக்கும் அப்பாற்பட்டது.”

மால்வண்ணன் பரிதியை உற்றுப் பார்த்தபடி நின்றான். முஷ்டிகளை அவனையும் அறியாமல் இறுக மூடி இருந்தான். டுரியான் மரக் கிளைகளைத் தாண்டி வந்த வெயிலின் கிரணங்களில் மால்வண்ணனின் கண்கள் சூரியன் கொப்பளித்தன.

ராகுலன் இடது கையை மால்வண்ணனின் தோள்மீது வைத்தபடியே பின்னாலிருந்து மணல் மீது வரையப்பட்டிருந்த சதுரத்தை விசித்திரமான பிராணியைப் பார்ப்பதைப் போன்று எட்டிப் பார்த்தான்.

“எண்ண முடியாததை எப்படி உருவமாக்கிக் காட்ட முடியும்? ஆமாம் மாலு, நீ பூஜ்ஜியம் என்று சொல்வது தரையில் வரைந்த நான்கு கோடுகளையா, அல்லது அவற்றின் உள்ளே இருக்கும் இடைவெளியையா?”

மால்வண்ணன் இம்முறை ராகுலனை மிகுந்த கனிவோடு பார்த்தான். அவன் முகம் கடும்பாறையாய்க் கறுத்திருந்தது. எங்கிருந்தோ தப்பி ஓடிவந்த வெயில் பிரகாசம் அவனது நெற்றியின் இடப்பகுதியின் மேல் புறமாக பிறைச்சந்திரனைப் போன்று சுடர்விட்டது.

“இரண்டும் இல்லை ராகுலா. அல்லது இரண்டும் கலந்தது தான் பூஜ்ஜியம். அரு உருவம். அல்லது உருவ அருவம்.”

“நம்மைப் போன்ற உள்ளூர்க்காரர்கள் சொல்வதையெல்லாம் அதிகாரத்தில் உள்ளவர்களும்,  காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்து பாடசாலை நடத்தும் பண்டிதர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறாயா?” பரிதி பேசினான்.

சூரியன் வானத்தின் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. சுனை நீரைச் சேகரித்து வைத்திருந்த மண் பானைகளையும் சுனையில் துவைத்த துணிகளையும் கைகளில் எடுத்தவாறே மூவரும் பாடசாலையை நோக்கி நடந்தார்கள்.

கையில் வைத்திருக்கும் மண்குடங்களாலும், முன் கையில் கனமாக மடித்துப் போட்டிருக்கும் ஈரத் துணிகளாலும் ஒற்றையடிப் பாதையின் இரண்டு பக்கத்திலும் வளர்ந்திருக்கும் செடிகளையும் கொடிகளையும் தள்ளிவிட்டுக் கொண்டு பரிதி முதலில் நடந்தான்.  அவன் முகத்தில் கடும் கோபம் இருந்தது. பாதையின் மீது குழைந்திருக்கும் சேற்றைக் கவனமாகப் பார்த்தபடியே தலை குனிந்தபடியே அடுத்ததாக மால்வண்ணன். அவனுக்குப் பின்னால் அரையடி தள்ளி மால்வண்ணனைக் கவலை நிரம்பிய முகத்தோடு பார்த்துக் கொண்டு ராகுலன்.

பாதையின் சேறு மூவரின் பாதங்களிலும் கனமாய் ஒட்டிக் கொண்டிருந்தது.

உபாத்தியாயர் மாதுபாகர் பாடசாலை திண்ணையில் நின்றபடி பாலகர்களுக்கு இலக்கணப் பாடம் நடத்தியபடியே மூவரின் வருகையையும் எதிர்ப்பார்த்து, பாடசாலைக்கு வரும் பாதையை அவ்வப்போது எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். உச்சிநேர வெயிலின் அடையாளமாய் அவருடைய பாதங்களின் அடியில் அசைந்து கொண்டிருந்த அரைவட்ட கறுப்பு நிழலிலிருந்து உற்பத்தியாகி எழுந்தது போன்ற கட்டையான கன்னங் கரேலென்ற உருவம். மஞ்சலேறிய கண்கள். எண்ணெய் அதிகம் பூசி தலைக்கு ஒரு புறமாய் ஒதுக்கப்பட்டிருந்த பளபளக்கும் தலைமயிர்.  உடம்பைச் சுற்றி போர்த்தப்பட்டிருந்த மலிவான வெண்பட்டு உத்தரீயமும், வேட்டியும் திடீரென்று எழுந்த உஷ்ணக் காற்றில் பாய்மரங்களாய் உப்பியிருந்தன.

பாடசாலை மரப்பலகைகளால் கட்டப்பட்டிருந்தது. வெள்ளத்தாலும், விஷப் பிராணிகளாலும் பாதிப்பு வராத அளவுக்குக் கட்டடத்தைப் பூமியிலிருந்து மார்பளவு உயரத்துக்கு கட்டைகளின் மீது ஊன்றியிருந்தார்கள். மரப்பலகைகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல பாடசாலை நடக்கும் திறந்த திண்ணையும் வாசலைத் தாண்டி முன் கூடமும் இருந்தன. இடப்பக்கமாக மாணவர்கள் முடைந்த பாய்களில் உறங்குவதற்காக காற்றோட்டமுள்ள பெரிய அறை. முன் கூடத்தின் வலப்பக்கமாக உபாத்தியாயர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். பாடசாலைக் கட்டடத்தின் அடியில் குண்டான பழுப்பு நிறக் கோழிகள் மண்ணைக் கிளறியபடி அலைந்தன.

மால்வண்ணன் டுரியான் மரங்களுக்கிடையில் இருக்கும் மணல் திட்டில் எழுதிக்காட்டிய வடிவத்தைப் பற்றித் தங்களில் யாரேனும் ஒருவன் உபாத்தியாயரிடம் சொல்லிவிடுவாவான் என்று தான் மூவரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் மால்வண்ணன் உபாத்தியாயரிடம் இதைப் பற்றி முதலில் பேசியது மற்ற இருவருக்கும் வியப்பைத் தரவே செய்தது.

மாலை உணவாக சூரியன் சாயும் நேரத்தில் தேங்காய்ப்பால் கலந்த சோறும் இரண்டு கருவாட்டுத் துண்டுகளும் தந்திருந்தார்கள். தன் அறைக்குச் சென்று சாப்பிட்டு வந்த உபாத்தியாயர் தூரத்தில் கரு நீல நிறத்தில் தெரியும் மலைத்தொடர்களைப் பார்த்தபடி திண்ணையில் கால் நீட்டி அமர்ந்ந்தார். அவர் பக்கத்தில் வெற்றிலைகள் வைக்கப்பட்டிருந்த சிறிய மரப்பெட்டியும் பாக்கு இடிப்பதற்கான உபகரணங்களும் இருந்தன. அவற்றுக்கு அருகில் மெல்லிய கரும்புகையை சுழல விட்டபடி எண்ணெய் விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது.

மலைத்தொடரின் மத்தியிலிருந்த மலையொன்றின் உச்சியிலிருந்து சிவந்த வானத்தில் சாம்பல் நிறப் பூக்களாய் புகை எழுந்து கொண்டிருந்தது.

“கிழக்கு மலை ராஜன் கோபமாக இருக்கிறான்.”

மாதுபாகருக்கு காலை நேரங்களில் பாடசாலையைச் சுற்றியிருக்கும் பழ மரங்களில் கதறும் கிளிகளைப் போன்ற கீச்சுக் குரல், சாவா மொழியைப் பல்லவ தேசத்தின் உச்சரிப்போடும் மிதமான த்வனியோடும் பேசினார். சாவா மக்கள் பேச்சில் தென்படும் சங்கீதத்தனமான ஏற்ற இறக்கங்கள் அவர் பேச்சில் இல்லாமல் இருந்தது. அவர் பேச்சில் அதிகமான வடமொழி கலந்திருந்தது.

ராகுலன் உபாத்தியாயருக்குப் பக்கதிலிருந்த வெற்றிலைப் பெட்டியை இழுத்து அவருக்காக வெற்றிலை மடித்துத் தர முயன்றான். வெற்றிலை, தடவிவிட்டுச் சுண்ணாம்பு, கிராம்பு, மிளகு, தூவலாய்ப் பாக்கு என்று வெற்றிலையில் சேர்த்து வெற்றிலையை கூம்பு போன்ற முக்கோண வடிவமாய் மடிக்க ஆயத்தமானான். ராகுலன் செய்வதைக் கவனித்த மாதுபாகர் அவசரமாய் வெற்றிலைப் பெட்டியை அவனிடமிருந்து பிடுங்கினார்.

“சீ. எத்தனை தடவை உன்னிடம் சொல்வது. கட்டிய மனைவிதான் ஓர் ஆண்பிள்ளைக்கு வெற்றிலை மடித்துத் தர வேண்டும். நீ என்ன நான் கட்டிய பெண்டாட்டியா?”

பதினேழு வயதுள்ள பையன்கள் மூவரும் உடலை நெளித்துக் கொண்டே வெட்கப்பட்டுச் சிரித்தார்கள்.  அவர்கள் மூவரின் பார்வையும் முன் வாசலையும் கூடத்தையும் தாண்டி உபாத்தியாயர் வசிக்கும் இடத்திற்குள் ஊடுருவியது. அங்கு மாதுபாகரின் மனைவி செண்பகா தேவி குனிந்தபடி ஏதோ ஒரு ஜாடிக்குள் நீரை ஊற்றிக் கொண்டிருந்தாள். சாவா தீவின் நாட்டுப்புறக் கிராமங்களில் வாழும் பெண்களின் வழக்கப்படி உடம்பைச் சுற்றிப் பெரிய செம்பருத்திப் பூக்கள் வரைந்திருந்த ஒற்றை ஆடை மட்டுமே கட்டியிருந்தாள்.

அவள் ஜாடியில் ஊற்றிக் கொண்டிருந்த தண்ணீரில் விழுந்து அவள் மீது தெறித்த மாலை வேளையின் கடைசி வெளிச்சத்தில் அவளது லட்சணமான முகமும் மார்புத் திரட்சியும் பொன்னிறமாக ஜ்வலித்தன.

மாதுபாகரின் கால்களைத் தன் மடிமீது வைத்து கால்விரல்களைச் சொடுக்கு எடுத்துக் கொண்டிருந்த மால்வண்ணன் வெடுக்கென்று அவர் கால்களைத் தன் மடியிலிருந்து அகற்றி அவற்றைத் தரைமீது வைத்தான். பின்பு தரையைப் பார்த்தபடியே கைகளால் தன் முழங்கால் மூட்டுகளை நீவி விட்டபடியே பேசினான்.

“ஆசான், நான் முன்னால் பேசிய விஷயத்தைப் பற்றி.”

ஆழமாகிக் கொண்டிருந்த ஊதா நிற இருட்டில் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்துக்கு அருகிலிருந்த மால்வண்ணனின் முழங்கால் மூட்டுக்கள் இதழ் விரித்திருக்கும் வெள்ளி நிற மலர்களாய் மின்னினன.

வெற்றிலைச் சாற்றின் காரத்தில் கண்கள் கிறங்கியிருந்த மாதுபாகர் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

“ம். என்ன?”

“அதுதான், பூஜ்ஜியம்.”

“என்ன?”

மாதுபாகரின் குரல் மேலும் உயர்ந்து அவர்களின் தலைமீது தொங்கவிடப்பட்டிருக்கும் கனமான ஜமுக்காளமாய் லேசாய் ஆடியது.

“இல்லை ஆசான். அதுதான் முன்னால் சொன்னேனே. எண்ணிக்கையில் அடங்காத எண். பூஜ்ஜியம்.”

“அதற்கு ஒரு எழுத்து வடிவத்தையும் மால்வண்ணன் தந்திருக்கிறான்.”

பரிதி குதூகலத்துடன் பேசினான். ஆனால் அவன் கண்கள் மட்டும் சாலையோரச் சிறு கற்களாய் உயிரற்றுக் கிடந்தன.

பரிதி தரைப் புழுதியில் விரலால் எழுதிக் காட்டிய சதுரத்தை உன்னிப்பாகக் கவனித்த மாதுபாகர் தளர்ந்திருந்த தன் வெண்ணிற வேட்டியைச் சரி செய்தபடி திண்ணைச் சுவரை விட்டுத் தள்ளி மேலும் நிமிர்ந்து அமர்ந்தார். பின்னர் மார்பைச் சரக் சரக் என்று சொறிந்தபடி தணிந்த குரலில் பேசினார்.

“இந்த கண்டுபிடிப்பால் உனக்கு என்ன லாபம் மால்வண்ணா?”

“இல்லை ஆசான். எண்களை மீறியும் என்ன உண்டு என்று அறிந்து கொள்ளலாம் அல்லவா? ஒன்று இருக்கிறது என்று காட்டுவதற்கு எழுத்து வடிவம் இருப்பதைப்போல் ஒன்று இல்லை என்று காட்டுவதற்கும் எழுத்து வடிவம் தேவையென்று தான்…”

மூச்சுத் திணற, உபாத்தியாயரின் இடது தோள் பட்டை மீது புரளும் உத்தரீயத்தின் மீது கண் குத்தி நிற்க, கைகள் பரபரக்க மால்வண்ணன் பேசினான். பரிதி இருவரையும் மெல்லிய புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான். ராகுலனின் முகத்தில் குழப்பம் இருந்தது.

“என் கேள்வி அதுவல்ல. இப்படி ஓர் எழுத்து வடிவம் உனக்கு எந்த வகையில் பயன் தரும் என்று கேட்டேன். எண்களைக் குறிக்கும் இலக்கங்கள் இருக்கும் பட்சத்தில் நம்மிடம் இருக்கும் செப்புக்காசுகளையோ, கால் நடைகளையோ, கோழிகளையோ அல்லது வேறு பொருள்களையோ துல்லியமாக கணக்கெடுத்து மறக்காமல் இருக்க ஓலைகளில் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படி எழுதி வைத்திருக்கும் எண் இலக்கங்களைச் சுலபமாகக் கூட்டுவதற்கும், கழிப்பதற்கும், பெருக்குவதற்கும், வகுப்பதற்கும் காஞ்சிபுரத்தில் உள்ள சீனப் பிக்குகள் சொல்லித் தர ஆரம்பித்திருப்பதாகவும் சொல்கிறார்கள் மாமல்லபுர வணிகர்கள் சில பேர் சென்ற மழைக்காலத்தின் போது ஊர் திரும்ப காற்று வசதியாவது வரைக்கும் இங்கு தங்கியிருந்த போது சொன்ன கதைகளைத் தான் நீ கேட்டாயே.”

மால்வண்ணன் பலமாகத் தலையாட்டினான். அப்படி தங்கியிருந்த வணிகர்களில் சுபகீர்த்தி என்ற பெயருடைய மத்திய வயதுக்காரர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மால்வண்ணனிடம் புத்தரின் மகிமைகளை எல்லாம் சொல்லி அவனையும் பௌத்தனாக்கி இருந்தார்.  மாதுபாகர் தீவிர சைவர். தன்னைப் பௌத்தனாக்கிய சுபகீர்த்தி பௌத்த தத்துவத்தைப் பற்றி வேறெதுவும் சொல்லித் தருவதற்கு முன்னாலேயே ஊருக்கு வணிகக் கப்பலில் கிளம்பி விட்டதால் மால்வண்ணன் உதட்டளவில் சைவனாகவும், உள்ளுக்குள் முரட்டு பௌத்தனாகவும் மாறியிருந்தான்.

பௌத்த பிக்குகளின் அறிவாற்றலைப் பற்றி மாதுபாகர் பேசியது மால்வண்ணனுக்கு மகிழ்ச்சியையும் இறுமாப்பையும் தந்தது. ஆனால் மாதுபாகர் அந்தத் தகவலை முக்கியமானதாகக் கருதாமல் கடந்து போனார்.

“எண்ண முடியாத வெறுமைக்கு எழுத்து வடிவம் கண்டு பிடித்து என்ன லாபத்தைக் காணப் போகிறாய்?”

பளபளக்கும் கொக்கிகளைப் போல அவனுக்கு முன்னால் தரை முழுவதும் கேள்விகள், பல்லிளித்து நீந்தும் சுறா மீன்களைப் போல். மால்வண்ணன் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான்.

“எண்களுக்கு முன்னாலும், அவற்றைக் கடந்தும் இருக்கும் வெறுமை என்பதெல்லாம் சோம்பேறி தத்துவவாதிகளின் எதற்கும் உதவாத வெறும் கற்பனை மால்வண்ணா. வாழ்க்கைக்குத் தத்துவக் குப்பைகள் எவ்வகையிலும் உதவாது. எண்களை வளைக்கக் கற்றுக் கொண்டவனுக்குத்தான் இந்த உலகம் வசமாகும். எண்ணையும் எழுத்தையும் முழுமையாகக் கற்றுக் கொண்டதால்தான் காஞ்சிபுரத்துப் பெரும் பண்டிதனான நான் சமணர்களின் சதி வேலையால் என் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டாலும் சாவா வரை வந்தும் கூட மிகுந்த மரியாதையோடு நடத்தப்படுகிறேன். கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் புகழ்.”

நன்றாக இருட்டியிருந்தது. திண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் மாதுபாகரின் கண்கள் தாமிரமாய்ப் பளபளத்தன. அவர் திண்ணென்று இருந்த தன் அகலமான வயிற்றைச் சொறிந்துவிட்டுக் கொண்டபடியே விக்கலால் அவதிபடுபவரைப் போல திக்கித் திக்கிப் பலமாகச் சிரித்தார்.

“மேலும் காட்டுப்பயல்களான உங்களுக்குத் தத்துவ விசாரணையெல்லாம் ஒரு கேடா? மிஞ்சி மிஞ்சிப் போனால் உங்கள் பெண்டாட்டிகள் பெற்றுப் போடும் குழந்தைகளைக் கணக்கு வைத்துக் கொள்ள ஒன்றிலிருந்து இருபது வரை எண்ணத் தெரிந்தால் போதாதா? அதற்குத் தான் இறைவன் கை விரல்களையும் கால் விரல்களையும் கொடுத்திருக்கிறானே.”

மீண்டும் மூச்சுத் திணறத் திணறச் சிரித்தார். அசம்பாவிதங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. மாதுபாகர் தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த மூன்று கரும் பழுப்பு நிற இளைஞர்களையும் பார்த்துச் சிரித்த அதே நேரத்தில் தன் கைக்குழந்தையைத் தூக்கியபடி ஒற்றையாடை உடுத்தியிருந்த செண்பகா தேவி கூடத்தைக் கடந்து போனாள். தன் கணவன் மிகவும் பலமாகச் சிரிப்பதைக் கண்டவள் மால்வண்ணனைப் பார்த்து உதடு விரியச் சிரித்தாள். அதே நேரத்தில் மால்வண்ணன் அவளைப் பார்த்தான்.

பரிதியும் ராகுலனும் தொடை தட்டித் திண்ணை அதிரச் சிரிக்கும் உபாத்தியாயரை முகங்களில் கடுமை சுவாலை விட்டு எரியப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பதினேழு வயது சிறு பிள்ளைகள் பதினேழு வயது சிறு பிள்ளைகளைப் போலத் தான் நடந்து கொள்வார்கள் என்பது உலக நியதி. மாதுபாகர் உறங்கச் சென்றதற்குப் பிறகு தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த மூவரும் மெல்ல எழுந்து மாணவர் அறைக்குப் பக்கத்து அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜாடிகளின் மண் மூடிகளைச் சிறிய ஆணியால் துளையிட்டு அவற்றுக்குள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த புளித்த அரிசி மதுவை மடமடவென்று பருகினார்கள். கோடைக் காலத்தில் பாடசாலையை ஆய்வு செய்ய வரும் கிராமத்து அதிகாரிகளுக்குத் தருவதற்காக மாதுபாகர் உழவன் ஒருவனிடமிருந்து மது ஜாடிகளை, சென்ற அறுவடைக் காலத்தின் போது வாங்கி வைத்திருந்தார்.

மூவரும் மதுவைக் குடித்தபடியே தாழ்ந்த குரல்களில் ஏதேதோ பேசினார்கள். அவர்களின் குரல்களில் மதுவின் புளிப்பைப் போலவும் லேசான காரத்தைப் போலவும் ஒரு கடுமை ஏறியிருந்தது. பின்பு ஏதோ லட்சியத்தோடு உந்தப்பட்டவர்களாய் மூவரும் பூனைகள் போல் தவழ்ந்து மாதுபாகரும் செண்பகா தேவியும் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார்கள்.

மற்ற இருவரும் மாதுபாகரின் வாயை வலுவாகப் பொத்தி அவருடைய கைகளைப் பலமாகப் பிடித்திருக்க, மால்வண்ணன் செண்பகா தேவியின் வாயில்தன் கோவணத் துணியைத் திணித்தான். அவளுடைய ஆடையை ஒரே இழுப்பில் களைந்துவிட்டு அவளை மிகுந்த வெறியோடு புணர்ந்தான். பிறகு எழுந்து போய் மாதுபாகரைப் பிடித்துக் கொண்டான்.

அவனுக்குப் பிறகு ராகுலன். பின்பு மிக நிதானமாய் முகத்தில் மாறாத புன்னகையுடன் பரிதி. இருட்டில் அகலமாக விரிந்திருந்த மாதுபாகரின் கண்களில் திரண்டு வழிந்த கண்ணீர் அவர்களின் காமத்தையும் உக்கிரத்தையும் கூட்டியது.

இறுதியாக ஒரு முறை கண்கள் சுழலக் கிடந்த செண்பகா தேவியைப் புணர்ந்த பிறகு மால்வண்ணன் எழுந்து தன் ஆடையைச் சரி செய்தபடியே செண்பகா தேவியின் அருகில் கிடந்த வட்டமான கல் ஒன்றை எடுத்து வந்து மாதுபாகரின் தலைமீது போட்டான். அது காய்ந்த மூலிகைகளை இடிப்பதற்க்காக மாதுபாகர் பயன்படுத்தும் கனமான ஆட்டுக்கல். கல் மாதுபாகரின் மண்டையைச் சிதைத்து அவர் மார்பின் மீது தாவியது. தாவியகல்லைத் தன் கல்வித் திறமைக்கு எதிர்பாராமல் கிடைத்த பரிசைப்போல் இரு கைகளிலும் ஏந்தி அணைத்து பெரிதாய் விரிந்திருக்கும் கண்களில் வியப்பு மேலிட மாதுபாகர் செத்துப் போனார்.

தன் கணவன் கொலை செய்யப்பட்டதைக் கண்ட செண்பகா தேவி அலறியிருக்கக் கூடும். பரிதியின் கைகள் அவள் வாயைப் பொத்தி இருந்தாலும் அவள் கண்கள் அழகிய தாமரை மலர்களைப் போல் மிக அகலமாக விரிந்திருந்தன. மால்வண்ணன் மூலிகை அரிவதற்காக சுவர் பிறையில் வைக்கப்பட்டிருந்த சிறு கத்தியை எடுத்து அவள் கழுத்தை அறுத்தான். ரத்தம் கொப்பளித்துப் பெருக அறுபட்ட மூச்சுக் குழாயின் வழியாக எழுந்த செண்பகா தேவியின் மரண இரைப்பு அறையெங்கும் கேட்க ஆரம்பித்தது.

கத்தியில் ஒட்டியிருந்த ரத்தத்தை உதறிவிட்டு நிமிர்ந்த போதுதான் பரிதியும் ராகுலனும் இருட்டுக்குள் ஓடி மறைந்திருந்ததை மால்வண்ணன் உணர்ந்தான்.

அவனைச் சூழ்ந்திருந்த இரவு செண்பகா தேவியின் உடலைப் போல் கதகதப்பாக இருந்தது. திடீரென அச்சத்தால் உடல் வியர்த்தவனாய் மால்வண்ணன் செண்பகா தேவியின் அறுந்த மூச்சுக் குழாயிலிருந்து எழும் சிறு சிறு உறுமல்கள் பின் தொடர டுரியான் மரங்களுக்கு நடுவில் இருந்த மணல் திட்டுக்கு ஓடினான். முற்பகலில் அவன் அதன் மீது எழுதிய பூஜ்ஜியம் இன்னமும் கலையாமல் லேசாய்ச் சுடர் விட்டபடி இருந்தது.

மணல் திட்டின் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தபடி பெருங் குரலெடுத்து அழுதான். பின்னர் என்ன நினைத்தானோ பூஜ்ஜியம் என்று எழுதியிருந்த மணலைக் கவனமாகக் கைகளில் அள்ளியவனாய் திக்குத் தெரியாமல் பெரிதாய் ஓலமிட்டபடியே தலை தெறிக்க ஓடினான்.

அவன் ஓட ஓட கையிலிருந்து மண், விரல் இடுக்குகளின் வழியாகக் கொட்டி ஒன்றுமில்லாமல் போனது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close