சிறுகதைகள்

புதிய உலகம் – ராம்பிரசாத்

சிறுகதை | வாசகசாலை

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரது அலுவலக வாசலில் அமர்ந்திருக்கிறேன். தலைவர் என்னைப் பார்க்க வேண்டுமாம்? என்னை ஏன் பார்க்க வேண்டும்?

முதலில் நான் யார்? நான் ஒரு அப்பாவி. பாதிக்கப்பட்டவன். அதை நீங்கள் முதலில் நினைவில் நிறுத்தவேண்டும்.

திறமைகளும், அப்பாவித்தனமும் ஒருங்கே இணையக்கூடாது. இணைந்தால் என் போல் ஒருவன் உருவாவான். திறமைக்கேற்ற இடம் கிடைக்க வேண்டுமானால், கொஞ்சம் சூழ்ச்சியும், தந்திரமும், அரசியலும் செய்யத் தெரிந்திருக்க வேண்டுமாய் இருப்பது ஒரு விதமான கீழ்மை என்பது என் அவதானம். அப்பாவித்தனம் இந்த மூன்றுக்கும் எதிரானது. ஆகையால், அப்பாவித்தனம் திறமையோடு இணையும் போது, திறமையின் வீரியத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது.

அப்படித்தான் ஆகிவிட்டேன் நான். என் அப்பாவித்தனம், அதீத திறமைகள் என்னை மற்றவர்கள் தங்களுக்குச்சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே பயன்பட்டது.  விளைவு….. அதைப் பின்னால் சொல்கிறேன்.

இப்போது தலைவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அரை மணி நேரம் எஞ்சியிருந்தது. அந்த அரைமணிக்குள் ஒன்றைக் கண்டுபிடித்தாகவேண்டும்.

அது, ‘எங்களைப் பற்றி, எங்கள் இருப்பிடம் பற்றி அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?’ என்பதுதான். இந்தக் கேள்வியைத்தான் தலைவர் கேட்க இருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு நான் சரியாக  பதில் சொல்லவில்லை எனில் அரசாங்கக் கூட்டமைப்பின் விரோதத்தை சந்திக்க நேரிடும். என் வாழ்வாதாரமே பிடுங்கி எறியப்படலாம். என் கால்களைத்தான் சொன்னேன்.

கால்கள்!

அவை மிக மிக முக்கியம். அவற்றை இழப்பதாய் இல்லை. அவற்றை இழப்பதைக் கற்பனையும் செய்து பார்க்க முடியவில்லை. அவை இல்லையெனில் நான் நிச்சயமாக இந்த உலகில் இருக்கப்போவதில்லை. என் கால்களைக் காப்பாற்ற வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எப்படி? எப்படி?

நான் பலவாறாக யோசித்துக்கொண்டிருந்தேன். எப்படி யோசித்தாலும் என்னால் ஒரு உருப்படியான சரடைக் கூடப் பிடிக்க முடியவில்லை.  எல்லாமே காரணம் என்றும், எதுவுமே காரணம் இல்லை என்றும் மாறி மாறித் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இது என் பீதியை அதிகரிக்கவே செய்தது. இவ்விதம் நான் ஐக்கிய  நாடுகள் கூட்டமைப்பின் தலைவரிடம் திணறினால் சர்வ நிச்சயமாக என்னைப் பிடுங்கி எறிந்துவிடுவார்கள். இந்த ஒட்டுமொத்த பிரதேசம் உருவாக நானும் ஒரு காரணம். இன்னும் சொல்லப்போனால் நான்தான் பிரதான காரணம்.

நான்தான் இங்கே நாகரிகம் உருவாக்க யோசனை தந்தேன். என் யோசனையின் பேரில்தான் இங்கே நாகரிகமும்,  அதைத் தொடர்ந்து, அந்த நாகரிகத்தை மேலாண்மை செய்ய நிலப்பரப்புகளை பிரித்து நாடாக்கியதும், நாடுகளுக்கான அரசாங்கங்கள் உருவாக்கியதும், அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பை உருவாக்கியதும் என்று எல்லாமும் நடந்தன. இது எல்லாமுமே, ‘ நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரிய வர வாய்ப்பில்லை’ என்று நான் மிக மிக ஸ்திரமாக உறுதியளித்திருந்ததன் அடிப்படையில்தான் நடந்தது.

ஆனால் இப்போது அவர்களுக்கு எங்களைப் பற்றி, எங்கள் இருப்பிடம் பற்றித் தெரிந்துவிட்டது. என் உறுதிப்பத்திரம் பொய்த்துவிட்டது. அது எப்படி நடந்தது என்றுதான் எனக்கு இன்னமும் புரியவில்லை. அது புரிந்தால்தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க முடியும். குறைந்தபட்சம் தலைவரிடம் சமாளிக்கவாவது முடியும்.

எல்லாவற்றையும் முறையாக, அவை எந்தப் புள்ளியில் துவங்கியிருந்ததோ அந்தப் புள்ளியிலிருந்து யோசித்துப் பார்க்க வேண்டும். அது ஒன்றுதான் வழி என்று தோன்றியது.

சரி. இதுவெல்லாம் எங்கே துவங்கியது? ஆம். அங்குதான். அதை இப்படி விளக்கலாம்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னான கதை இது. கெப்ளர் எங்களின் கண்களாக அண்ட வெளியில், பூமியையொத்த கிரகங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கும் பேரண்டத்தின் ஒரே ஒரு புள்ளியின் கோடியில் ஒரு பங்குப் பகுதியை பூதாகாரமாக்கி எங்களுக்காக இரவு பகலாக வேவு பார்த்துக்கொண்டிருந்தது. எங்களது கண்களாய் பூமியையொத்த கிரகங்களைக் கண்டுபிடிப்பது அதன் பிரதான வேலை. அது தன் பணியைச் செவ்வனே செய்தது.

சுமார் ஐந்தாயிரம் கிரகங்கள்.

இந்த ஐந்தாயிரம் கிரகங்களை கெப்ளர் ஒன்றும் மேலெழுந்தவாரியாகக் கண்டுபிடித்திடவில்லை. அது அத்தனை சாதாரண காரியமல்ல. அதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  முதலாவது, தூரத்தில் பிரகாசமாகப் புள்ளியாகத் தெரியும் நட்சத்திரத்தை எத்தனை கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். கிரகங்கள் சுற்றி வருகிறது எனில், அந்த  நட்சத்திரத்தின் ஒளியின் அளவில் ஒரு சிறிய குறைபாடு தோன்றும். அந்தக் குறைபாட்டை அளவிடுவதன் மூலம், அது எத்தனை சீக்கிரம் நடைபெறுகிறது என்பதை அவதானிப்பதன் மூலம் அந்த கிரகம் அதன் சூரியனிலிருந்து எத்தனை தொலைவில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இப்படி எத்தனையோ தந்திரங்களின் வழி கெப்ளர் சுமார் ஐந்தாயிரம் கிரகங்களைக் கண்டுபிடித்தது. ஆங்கிலத்தில் கோல்டிலாக் ஸோன் என்பார்கள். அந்தப்படி இந்த கிரகங்களிலெல்லாம் மனித இனம் ஜீவித்திருக்கக்கூடிய  புறச்சூழல் நிலவுகிறது என்று அர்த்தம்.

கிரகங்களைக் கண்டுபிடித்த பிறகுதான் பிரச்சனை துவங்கியது எனலாம்.

இந்த ஐந்தாயிரம் கிரகங்களில் எதில் மனித இனம் பிழைக்க அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டியதாகிவிட்டது. பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருந்துகொண்டு வெறும் தொலை  நோக்கிகளால் தெரிந்துகொள்ளக்கூடிய தகவல்களின் அதிகபட்சத்தை நாங்கள் கடந்திருந்தோம். ஆனால் அந்தத் தகவல்களைக் கொண்டு மனித இனத்தால் அந்த கிரகத்தில் பிழைக்க முடியுமா என்பதை கணிக்க முடிந்திருக்கவில்லை. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டன. இனியும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த கிரகத்துக்கு நேரிலேயே சென்றுதான் பார்க்க வேண்டும். ஐந்தாயிரம் கிரகங்களுக்கும் நேரில் செல்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. மிக அதிக செலவு பிடிக்கும். செலவுகளை எப்படிக் குறைப்பது என்பதில் துவங்கிதான் அந்தத் தீர்வு முன்வைக்கப்பட்டது.

அது, மனிதர்களின் பொதுவான உயரம் சுமார் ஐந்தரை அடி.  இந்த உயரம் தான் விண்வெளிப்பயணங்களுக்கென தேவைப்படும் விண்வெளிக்கலன்கள், எரிபொருள் தேவைகள், ஆக்சிஜன் தேவைகள், செயற்கை ஈர்ப்பு விசைக்கான கட்டுமானம் என எல்லாவற்றையும் தீர்மானிக்கும். இதனடிப்படையில்தான் செலவினங்களும்.

இந்த உயரத்தை ஆறு இன்ச்சுகளாகக் குறைத்துவிட்டால், காலணிகள் வைக்கப் பயன்படுத்தும் ஒரு சிறிய பெட்டி போதும். இந்த சித்திரக் குள்ள மனிதர்களை வேறொரு தொலைதூர கிரகம் நோக்கிச் செலுத்தத் தேவைப்படும் கலனின் அளவும் மிக மிகச் சிறியதாகிவிடும். ஐந்தரை அடி மனிதர்கள் நான்கு பேரைத் தொலை தூர கிரகத்துக்கு அனுப்பத் தேவைப்படும் கலனை உருவாக்கச் செலவிடும் பணத்தில் ஐந்தாயிரம் கலன்களில் இருபதாயிரம் ஆராய்ச்சியாளர்களை கலனுக்கு நான்கு ஆராய்ச்சியாளர் வீதம் அனுப்பிவிடலாம்.

இது, வானியல் ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு புதிய தீர்வாகப் பார்க்கப்பட்டது. விளைவு, மனித கருக்களுக்கு துவக்கத்திலிருந்தே வளர்ச்சிக்கான ஹார்மோன்களைத் தடுத்து ஐந்தாயிரம் சித்திரக் குள்ள மனிதக் குழந்தைகள் உருவாக்கப்பட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக்கப்பட்டனர். அந்த ஐந்தாயிரத்தில் முதல் பத்து சித்திரக் குள்ள ஆராய்ச்சியாளர்களுள் நானும் ஒருவன். தொடர்ந்து நாங்கள் பயணிக்க மிக மிகச் சிறிய கலன்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் கலன்கள் அதிகம் செலவு வைக்கவில்லை.

சுமார் பதினெட்டு ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ள ஒரு சூரியக்குடும்பத்தில் ஒரு கிரகம் நோக்கி அனுப்பப்பட்ட முதல் நான்கு ஆராய்ச்சியாளர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அப்படித்தான் நாங்கள் இப்போதிருக்கும் புதிய கிரகம் வந்தோம். என்னுடன் வந்தவர்கள் க்ரிஸ்டினா, புவனா மற்றும் அஃப்சல். புதிய உலகம் உயிர்களுக்கு ஆதரவு தரும்  பட்சத்தில் வார்த்தெடுக்க நிறைய மனித மரபணுக்களை பதப்படுத்தி எடுத்துச்சென்றிருந்தோம்.

நாங்கள் வெற்றிகரமாக புதிய கிரகம் சென்று சேர்ந்துவிட்டதை பூமிக்குத் தெரிவிக்க அஃப்சல் முயன்றபோது நான்தான் அவனைத் தடுத்தேன். முதலில் ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு பிறகு தெரிவிக்கலாம் என்றேன். அதற்குக் காரணமிருந்தது. அதைப் பிற்பாடு சொல்கிறேன். ஆக, புதிய கிரகம் வெற்றிகரமாக வந்து சேர்ந்துவிட்டதை நாங்கள் பூமிக்குத் தெரிவிக்கவில்லை.

நாங்கள் புதிய கிரகத்தை ஆராய்ந்தோம்.

கிரகத்தின் அளவு சற்று சிறியது தான். பூமியுடன் ஒப்பிடுகையில் பூமியின் அளவில் பத்தில் ஒரு பங்குதான் இருந்தது. ஈர்ப்பு விசை குறைவாக இருந்தது. கிரகத்திற்கென ஒரு வளி மண்டலம் இருந்தது. அதில் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடுடன் இன்னும் பல வாயுக்கள் இருந்தன.  நீரின் அளவு குறைவாக இருந்தது.  நீரின் அளவு குறைவாக இருந்ததால் தாவரங்கள் அதிகம் பரவி அடர்த்தியாக வளர்ந்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன.

ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருந்ததால்தான் கிரகத்தில் இருந்த நீரின் அளவும் குறைவாகவே இருக்கிறது என்று கணித்தோம் .  நீரின் அளவு அதிகரிப்பின் தாவரங்கள் செழித்து வளரலாம் என்றும் அதன் மூலம் மனித இனம் தொடர்ந்து இந்தக் கிரகத்தில் பல்லாண்டுகள் வாழலாம் என்றும் நான் கணித்தேன். அதை ஏனையவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது எங்கள் முன் இருந்த இரண்டு சவால்கள்: நீரின் அளவை அதிகரிப்பது, ஈர்ப்பு விசை குறைவாக இருந்ததால் கிரகத்தில் அவ்வப்போது நிகழும் எரிமலைச் சீற்றங்களால் வளிமண்டலத்தை விட்டு நாங்கள் தூக்கி எறியப்படலாம் என்கிற பிரச்சனையை சமாளித்து தொடர்ந்து அந்த கிரகத்தில் நிலைத்திருப்பது.

தீவிரமாக யோசித்து நான்தான் இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வை முன்வைத்தேன்.

அது, எங்கள் மானுட உடலைத் தாவரங்களோடு பிறழ்வது.

ஈர்ப்பு விசை குறைவாக இருந்ததால், தாவரங்களோடு பிறழ்வதால், எங்கள் கால்களிலிருந்து வேர்கள் முளைக்கும். அந்த வேர்கள் மண்ணைக் கவ்விக்கொண்டுவிடும். இந்த வேர்களால் நாங்கள் வளிமண்டலத்தை விட்டு வெளியே எறியப்படுவது தவிர்க்கப்படும். இரண்டாவதாக, தாவரங்களால் கார்பன் டை ஆக்ஸைடு வாயு, ஆக்ஸிஜனாக மாற்றப்படுகிறது.  நாங்கள் எண்ணிக்கையில் பல்லாயிரக்கணக்கானவர்களாக மாறிவிட்டால் போதும். எங்கள் அனைவரின் கூட்டுத் தாவர இயல்புகளால் கிரகத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கும். இது கிரகத்தில் நீரின் அளவை உயர்த்தும் என்று நான் நம்பினேன். நீரின் அளவு உயர்வதால் தாவரங்கள் வளர்ந்து எங்களுக்குத் தேவையான உணவும் கிட்டும். அதன் மூலமாக தாவரங்களுடன் பிறழத் தேவைகளற்ற மனித இனங்களை இந்த கிரகத்தில் உருவாக்க முடியும் என்று  நான் நம்பினேன். என்னைத் தொடர்ந்து என் குழுவே நம்பியது.

நாங்கள் எங்களின் இந்திரியங்களைக் கொண்டு செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தைகளைப் பிரசவித்தோம். அவைகளும் சித்திரக்குள்ளக் குழந்தைகளாகவே இருந்தன. அவற்றின் மரபணுக்களை தாவர மரபணுக்களோடு பிறழ்ந்தோம். தாவரங்கள் வளர்ந்தன. இது கிரகத்தில் நீரின் அளவை அதிகரித்தது.  நாங்கள் ஆராய்ச்சியின் பொருட்டு எடுத்துச் சென்றிருந்த சில விதைகளை மண்ணில் விளைவித்தோம். அவை வளர்ந்தன. கனிகளோ, பழங்களோ, பூக்களோ இல்லாத செடிகள் வளர்வதில் எவ்விதப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால், கனிகளோ, பழங்களோ, பூக்களோ உருவாகும் செடிகளும், மரங்களும் விதைகளற்று வளர்ந்தன. அதாவது அவை ஒருமுறை வளர்ந்தால் மீண்டும் வளர வாய்ப்பில்லை என்கிற ஸ்திதியில் வளர்ந்தன.

ஆங்கிலத்தில் ஜீன் மியூட்டேஷன் என்பார்கள். அதில் எங்கோ ஏதோ வித்தியாசமாக இந்த கிரகத்தில் இருந்தது. அது செடிகளிலும் , மரங்களிலும் மீண்டும் விதை உருவாவதைத் தடுத்தது.

இந்தப் புதிய கிரகத்தில் அந்தப் பிறழ்வு, தாவரங்களில் விதைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதாக இல்லை. ஆதலால் தாவர மரபணு பிறழ்வுகளை மனித மரபணுக்களைக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த வேண்டிய நிர்பந்தம் உருவானது. மனித மரபணுக்களாகவே அவை நீடித்தால், ஆக்சிஜனையே உட்கொள்ள வேண்டி இருக்கும். ஆக்ஸிஜனை முற்றிலும் சுவாசித்து தீர்த்துவிட்டால், பிழைப்புக்கு ஆதாரமான ஆக்ஸிஜன் இல்லாமல் மனித இனம் அழியத்தான் வேண்டி இருக்கும். ஆக, முழுமையாக மனித இனமாகவும் நீடிக்க முடியாத, முழுமையாக தாவரமாகவும் நீடிக்க முடியாத இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டில் அகப்பட்டுக்கொண்டோம். அந்த கிரகத்தில் இருக்கும் மியூட்டேஷன் பிரச்சனையை சரி செய்யும் தீர்வுகளை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க  நாங்கள் வந்த விண்வெளிக் கப்பலில் போதுமான உபகரணங்கள் இல்லை.

“நாம் பூமியைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சனையை விளக்கிச் சொல்லலாம். அவர்கள் ஏதேனும் தீர்வுகள் சொல்வார்கள்.” என்று அஃப்சல்தான் முதலில் ஆலோசனை சொன்னான்.

“பூமியா? அவர்கள் சொந்த கிரகத்திலேயே தாவரங்கள்தான் வாழ்வாதாரம் என்று தெரிந்த பின்னுமே தங்கள் சுய நலத்தின் பொருட்டு காட்டை அழித்தவர்கள்தானே அவர்கள்…? இந்த கிரகத்தில் தாவரங்கள் மட்டும்தான் வாழ்க்கை என்றால் கேட்கவா போகிறார்கள்?  ஒரு மனிதன் வாழ ஆயிரம் மனித-தாவர கலப்பினங்கள் உருவாக்கி அடிமைகளாக்கி இங்கும் ஆண்டான்-அடிமை என்று பிரிவினை உருவாக்குவார்கள். அடிமைகளைக் கொண்டு எவ்விதப் பிறழ்வும் இல்லாமல் ஒரு மனிதன் மனித உருவிலேயே எப்படி இந்தப் புதிய கிரகத்தில் வாழலாம் என்று யோசிக்க முனைவார்கள். பூமியின் நோய்மைகளான அத்தனை ஏற்றத்தாழ்வுகளும், பிரிவினைவாதங்களும், ஃபாசிசமும் இங்கும் பரவும்.  நாம்தான் அவர்களது முதல் அடிமைகளாக ஆவோம்.  அடிமைகளாகவா இங்கு வந்தோம்?.” என்றேன் நான்.

“நீ சொல்வதும் சரிதான். அவர்கள் அப்படி யோசிக்கத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் என்ன செய்வது?” என்றாள்  க்ரிஸ்டினா.

“தொழில் நுட்பக்கோளாறு என்று தகவல் அனுப்பிவிட்டு, அமைதியாகிவிடுவோம். இது வாழத் தகுதியற்ற கிரகம் என்று விட்டுவிடுவார்கள். நம்மை மீட்பது செலவு வைக்கும் வேலை. ஆதலால் அவர்கள் நம்மைத் தொடர்ந்து வர மாட்டார்கள்.  ஏற்றத்தாழ்வுகளும், பிரிவினைவாதங்களும், ஃபாசிசமும் நிறைந்த பூமிக்குத் திரும்ப எனக்கும் ஆர்வமில்லை. இந்த கிரகத்திலேயே தங்கிவிடுவதுதான் உசிதம். ” என்றேன் நான்.

“அவர்கள் நம்மைக் கண்டுபிடித்து இங்கு வந்துவிட்டால், நாம் பொய் சொன்னது தெரிந்து மாட்டிக்கொள்வோமே?” என்றான் அஃப்சல்.

“வரமாட்டார்கள். பதினெட்டு ஒளி ஆண்டுகள் தூரம் என்பது சற்று அதிக தூரம்தான். இத்தனை தூரம் வர செலவு செய்ய மனம் வராமல்தான் நம்மை சித்திரக்குள்ளர்களாக்கினார்கள். அவர்கள்  நிச்சயம் வரமாட்டார்கள்” என்றேன் நான்.

இப்படித்தான் நாங்கள் பூமிக்கு ஒரு பழுதுபட்ட ”மே டே.. மே டே… டெக்னிக்கல் ப்ராப்ளம். ப்ளானட் நாட் சப்போர்டிவ் ஆஃப் லைஃப்” என்று ஒரு சிக்னல் அனுப்பிவிட்டு தகவல் கருவிகளின் வயர் இணைப்புகளைப் பிய்த்துப் போட்டிருந்தோம்.

அதன் பிறகு இந்தப் புதிய கிரகத்தில் பல்லாயிரக்கணக்கில் சித்திரக்குள்ள மனித-தாவர கலப்பினங்களை பெருக்கினோம். ஆயிரக்கணக்கு கோடிக்கணக்கான பிறகு நிலப்பரப்புகளை பிரித்து  நாடாக்கினோம்.  நாடுகளுக்கான அரசாங்கங்கள் தோன்றின. அரசாங்கங்களுக்கான ஐக்கிய  நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கினோம். அப்பாவித்தனம் திறமையோடு இணையும் போது, திறமையின் வீரியத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்று சொன்னேன் அல்லவா? நான் இவ்விதம் இந்தப் புதிய கிரகத்தில் நாகரிகம் தோன்றிட, நிலப்பரப்பு, அரசாங்கங்கள் தோன்றிட உழைத்துக்கொண்டிருந்தபோது, மற்றவர்கள் என் முதுகின் பின்னால், கவனிக்கவும் …என்னுடைய முதுகின் பின்னால் சதி செய்து இந்த கிரகத்தின் மிக மிக மோசமான, எவ்வித பயனும் அற்ற, ஆரோக்கியம் குன்றிய நிலப்பரப்பு என் ஆளுகையின் கீழ் வருமாறு செய்துவிட்டார்கள். அதில் என் தவறு என்பது, அவர்களை முழுமையாக நம்பியதுதான். புதிய கிரகத்தில், புதிய உலகத்தில் அவர்களிடம் அந்தக் கீழ்மை ஒண்டாது என்று நான் எண்ணியிருந்தது எத்தனை தவறென்று பிற்பாடு உணர்ந்து கொண்டபோது தாமதமாகிவிட்டிருந்தது.

நாகரிகங்கள் உருவாகி பூமி எங்கும்  நாங்கள் ஆயிரக்கணக்கிலிருந்து கோடிக்கணக்காகிக் கொண்டிருந்தபோதுதான்  நான் ஆளுநராக இருக்கும் நிலப்பகுதியின் மனித-தாவர கலப்பினங்களின் எண்ணிக்கை வளர்ச்சியடையாததைக் கண்டுகொண்டு அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது இந்த ஏமாற்று வேலை என் புலன்களுக்குப் பரிச்சயமானது. சொல்லப்போனால், என் ஆளுமைக்குட்பட்ட நிலம் எத்தரப்பினரும் வாழ விரும்பாத ஓரிடமாகவே இருந்தது. கலப்பினத்தொகை அதிகம் இல்லை.

உண்மை புரியவந்தபோது நான் ஏதும் பெரியதாக சண்டை போடவில்லை. எவரின் கீழ்மையையும் சரி செய்யும் வார்த்தைகள் உலகின் எந்த மொழியிலும் இல்லை எனும்போது இந்தப் புதிய உலகில் மட்டும் இருந்துவிடவா போகிறது?

இது குறித்து எனக்கு ஒரு அவதானம் உண்டு. கீழ்மை செய்பவனின் மூளை அந்த கீழ்மைக்கே பழகிவிடுகிறது. அந்த விதமான மூளைகள் எல்லாவற்றிலும் கீழ்மையையே பார்க்கின்றன. கீழ்மையையே தேடுகின்றன. நாளடைவில் அம்மூளைகளுக்கு மேன்மையோ, அதன் வாசமோ, அதன் போக்கோ பிடிபடுவதே இல்லை. கீழ்மையின் போக்கும் வாசமும், அது எத்தனை தொலைவிலிருந்தாலும் பிடிபட்டுவிடுகிறது.  ஆதலால், நான் அதைக் கடந்து போக முனைந்தேன். எனக்கு கிடைத்த நிலத்தை பண்படுத்த முனைந்தேன். ஆனாலும் என் முயற்சிகள் தோல்வியே கண்டன. ஆயினும், நான் சளைக்கவில்லை. முயன்றுகொண்டே இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது கிட்டத்தட்ட மாட்டின் கொம்பில் பால் கறப்பது போல. முயற்சிப்பதே மேன்மை ஆகிவிடுகிறது.

ஆனால், இப்போது பூமி மனிதர்களுக்கு எங்கள் இருப்பிடம் எப்படியோ தெரிந்துவிட்டது. அவர்கள் இங்கே வரக்கூடாது. வந்துவிட்டால் நாங்கள் முதற்கண் அடிமைகளாக்கப்படுவோம். நாங்கள் இத்தனை காலமும் பாடுபட்டு வளர்த்த இந்தப் புதிய உலகின் இயற்கையை தங்களின் பொருட்டு அடிமைப்படுத்துவார்கள். அதை நடக்க விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

முதலில் அவர்களுக்கு எப்படி இந்தப் புதிய கிரகத்தில் நாங்கள் உயிர்த்திருப்பது தெரிந்தது என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்தால்தான் அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க முடியும்.

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரை சந்திக்க நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. எப்படி எப்படியோ யோசித்ததில், சட்டென என் மூளைக்குள் எங்கோ ஓர் மூலையில் ஒரு பழக்கப்படாத பாதையின் கதவுகள் புதியதாய்த் திறந்தன. அவ்வழியே சிந்தையைச் செலுத்த, அந்த மர்ம முடிச்சு பட்டென்று அவிழ்ந்தது.

சற்றைக்கெல்லாம் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. நான் உள்ளே சென்றேன். அவரை சந்தித்தேன்.

“காரணம் தெரிந்ததா?” என்றார் அவர் எடுத்த எடுப்பிலேயே.  அதிலிருந்தே அந்த விஷயம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக புதிய உலகம் முழுமைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்பது புரிந்தது.

“ஆக்ஸிஜன். அதுதான் காரணம்.” என்றேன் நான்.

“ஆக்ஸிஜனா?”

“ஆம். இந்த கிரகத்திற்கு நாம் வருவதற்கு முன்னால், கிரகத்தில் ஆக்ஸிஜன் குறைவாகத்தான் இருந்தது.  ஆனால் இப்போது நம் எண்ணிக்கை கூடிவிட்டது. நாம் இந்த கிரகம் வந்துவிட்ட பிறகு நம்மில் இரண்டரக் கலந்த தாவரப் பிறழ்வாகவும், விதையற்ற தாவரங்களாகவும் கோடானுகோடி தாவரங்கள் இந்த கிரகத்தில் புதியதாகத் தோன்றியிருக்கின்றன. இந்தத் தாவரங்கள் வெளிவிடும் ஆக்ஸிஜனால் நீர் சேர்ந்திருக்கிறது. இந்த அதிகப்படியான ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது சூரிய ஒளியிலிருந்து 6.4 மைக்ரோமீட்டர் அளவுள்ள இன்ஃப்ரா கதிர்களை உள்வாங்குகிறது. இந்த உள்வாங்கலை தொலைதூர தொலை நோக்கிகளால் கண்டுபிடிக்க முடியும்.  நாம் இங்கே தொலைந்து போய் விட்டபிறகு இந்த கிரகத்தின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது என்கிற ஒற்றைப் புள்ளியை வைத்தும், நம்முடன் அவர்கள் அனுப்பி வைத்த செடிகளின் விதைகளின் எண்ணிக்கையை வைத்தும் நாம் பொய் சொல்லியிருக்கிறோம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. நானாக இருந்தாலும் அப்படித்தான் யோசிப்பேன். அப்படித்தான் அவர்கள் நம்மைக் குறித்து அறிந்துகொண்டிருக்க வேண்டும்” என்றேன் நான்.

“இதைப்பற்றி  நீ ஏன் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை?” என்றார் தலைவர் அதட்டலாக.

நான் புன்னகைத்தேன்.

“இந்தக் கேள்வியே அனாவசியமானது என்று கருதுகிறேன். நிலப்பரப்பைப் பிரித்துவிட்ட பிறகு, ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஆளுநர் என்றொருவர் நியமித்துவிட்ட பிறகு, அவரவர் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை மேலாண்மை செய்யும் பொறுப்பு அவரவர்க்குடையது என்பதுதானே ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் விதி? அடுத்த  நாட்டவரின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த நாட்டு ஆளுநருக்கும் உரிமை இல்லை என்பதுவும் விதிதானே? அதைத்தானே  நான் பின்பற்றுகிறேன். என் நிலப்பரப்பில் கலப்பின எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. ஆக்ஸிஜன் அதிகரிப்பில் ஒவ்வொரு நாட்டின் பங்கும் என்ன என்பதை நீங்கள் எடுத்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியலாம். பூமியில் வாழும் மனிதர்களுக்கு நாம் இங்கு என்ன செய்கிறோம் என்பது தெரிந்துவிட்டது. ஆனால் அது என்னால் அல்ல என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது நான் போகலாமா?” என்றேன் பணிவுடன்.

அவரால் என்னைத் தடுக்க முடியாதென்று எனக்குத் தெரியும். அவர் தனக்குத்தானே ஓர் எல்லையை வரைந்துவிட்டிருந்தார். அவருக்குத் தேவையாக இருந்ததெல்லாம் ஒரு காரணம் மட்டும்தான். அவரை சமாதானம் செய்யும் ஒரு காரணம் கிடைத்ததுமே அவரால் என்னைத் தடுத்து  நிறுத்த முடியவில்லை. எனது அந்த பதிலுடன் அவரது புழங்கு உலகம் முடிந்துவிட்டது ஆச்சர்யமாக இருந்தது. மிகவும் செழுமையான ஒரு நிலப்பரப்பு என் ஆளுகைக்குக் கீழிருந்திருப்பின், வளிமண்டலத்தில் கூடும் அதிகப்படி ஆக்ஸிஜனின் அளவை நான் முன்பே கவனித்திருக்கக்கூடும். அப்போதே கலப்பினங்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கக்கூடும். அது பூமி மனிதர்களின் தொலை நோக்கிக் கண்களிடமிருந்து தொடர்ந்து எங்களை மறைத்திருக்கும்.

தலைவரின் அறையை விட்டு வெளியே நடந்துகொண்டிருக்கையில் கலவையான எண்ணங்கள் என்னை ஆட்கொண்டன.  நாங்கள் வசிக்கும் புதிய கிரகம், இயல்பில் எந்த உயிரையும் அதன் அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்ல விரும்பாததாகத்தான் துவக்கத்தில் இருந்திருக்கிறது. பிரபஞ்சம் அந்த கிரகத்தின் தலையெழுத்தில் மனிதர்களின் பெயர்களை எழுதவில்லை என்பதை அதன் மெலிந்த ஈர்ப்பு விசையைக்கொண்டு புரிந்துகொள்ள முடிந்தது.  சித்திரக் குள்ளர்களாக இந்தப் புதிய கிரகத்துக்கு வந்த நாங்கள் எங்களது இந்திரியங்களைக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகளை கிரகத்தில் உருவாக்கினோம். அதை நாங்கள் ஒரு புரட்சிகரமான யோசனையாகவே பார்த்தோம். பாரிய பிரபஞ்சத்தின் பார்வையில் அது முறையாக, அடுத்தடுத்து, கோர்வையாகச் சேர்ந்த பிழைகளாகத்தான் இருக்க வேண்டும்.

பிழையான இசையும் செவிகளுக்கு உணவாகத்தானே செய்கிறது?

எல்லாவற்றையும் சீர்தூக்கி யோசிக்குங்கால், கீழ்மைக்கு ஒளி ஆண்டுகள் தாண்டிய ஒரு தொடர்பு இருப்பதாகவே நான் கணிக்கிறேன். கீழ்மையை தொடர்ந்து செய்யும் மூளைக்கு  கீழ்மையின் போக்கும் வாசமும், பிடிபட்டுவிடுகிறது. கீழ்மை, கீழ்மையையே நாடி வருகிறது. அது எத்தனை தொலைவிலிருந்தாலும்….

 

 

 

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close